Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 6)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
இவையிரண்டாலும் புருஷகார வைபவமும் உபாய வைபவமும் சொல்லிற்றாய்த்து.
– உபப்ர்ம்ஹணமுகேந வேதாந்த தாத்பர்யத்தை நிஷ்கர்ஷித்து உஜ்ஜீவநத் துக்குடலானவற்றைச் சொல்லுவதாகவிறே உபக்ரமித்தது. அதிலிப்போது சொன்னவி வற்றால் வேதாந்தத்திலெவ்வர்த்தங்கள் சொல்லிற்றாய்த்தென்னுமா காங்க்ஷையிலே யருளிச் செய்கிறார் - மேல் இவை - என்று தொடங்கி.
வேதங்களின் ஆழ்பொருளை விரிவாக உரைக்கின்ற நூல்கள் மூலம், வேதாந்தங்களின் ஆழ்பொருளை நிச்சயம் செய்து கொண்டு, அதன் மூலம் உயிர்கள் கரையேறும் வழியை உரைப்பது என்பதை முடிவு செய்து இவர் தொடங்கினார். ஆகவே, இப்போது கூறப்பட்டதன் மூலம் வேதாந்தங்களின் எந்த ஆழ்பொருள்கள் உரைக்கப்பட்டன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது (சிறையிருந்தவளேற்றம், தூதுபோனவனேற்றம்) என்றவிவை யிரண்டாலும், அபராத பூயிஷ்டரான சேதநர்க்கு ஆச்ரயணீயையாமளவில் அகில ஜகந்மாதாவான ஸம்பந்தத்தாலும் க்ருபாதிகளாலும் நடுவொரு புருஷகாரம் வேண்டாதபடி வந்து ஆச்ரயிக்கலாம்படியாய், அபராதங்களைப் பார்த்துச் சீறி “க்ஷீபாமி”, ”நக்ஷமாமி” என்னுமீச்வர ஹ்ருதயத்தைத் திருத்தி அவர்களையங்கீகரிப்பிக்கும் புருஷகாரபூதையானவள் வைபவமும், அங்கீகரித்தால் பின்னையவள்தானே சிதகுரைக்கிலும் ”என்னடியாரது செய்யார்” என்று மருதலித்துத் தான் திண்ணியனாய் நின்று ரக்ஷிக்கும் உபாயபூதனானவன் வைபவமும் சொல்லிற்றாய்த்தென்கை. (புருஷகாரம்) என்றும், (உபாயம்) என்றும் இவற்றை நிரூபகமாகவருளிச்செய்தது, பிராட்டிக்கு புருஷகாரத்வமும் ஈச்வரனுக்கு உபாயத்வமும் அஸாதாரணமென்று தோற்றுகைக்காக. இது தன்னை ”மத் ப்ராப்திம் ப்ரதி ஜந்நூநாம் ஸம்ஸாரே பததாமத: லக்ஷ்மீ: புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்க்ஷிபி; மமாபிச மதம்ஹ்யேதத் நாந்யதா லக்ஷணம் பவேத்” என்றும், “அஹம் மத்ப்ராப்த்யுபாயோவை ஸாஷாத் லக்ஷ்மீபதிஸ் ஸ்வயம், லக்ஷ்மீ: புருஷகாரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ, ஏஹஸ்யாச்ச விசேஷோயம் நிகமாந்தேஷு சப்த்யதே” என்றும், “அகிஞ்சந்யைக சரணா: கேசித் பாக்யாதிகா: புந:, மத்பதாம்போருஹத்வந்த்வம் ப்ரபத்ய ப்ரீத மானஸா:, லக்ஷ்மீம் புருஷகாரேண வ்ருதவந்தோ வராநந, மத்க்ஷமாம் ப்ராப்ய ஸேநேச ப்ராப்யம் ப்ராபகமேவ மாம், லப்த்வா க்ருதர்த்தா: ப்ராப்ஸ்யந்தே மாமே வாநந்ய மாநஸா:” என்று பகவச்சாஸ்த்ரத்திலே தானே யருளிச் செய்தானிறே. மற்றைப் பிராட்டிமார்க்கும் ஸூரிகள் முதலான ததீயர்க்கும் இவள் ஸம்பந்தமடியாக வருகிற புருஷகாரத்வமிறேயுள்ளது; இவளைப் போலே ஸ்வதஸ்ஸித்தமன்றே. ஆகையிறே, “ஏதத் ஸாபேக்ஷஸம்பந்தா தந்யேஷா மமலாத்மநாம், தேவீஸூரி குரூணாஞ்ச கடகத்வம் நது ஸ்வத:” என்று தீபஸங்க்ரத்திலே ஜீயரருளிச்செய்தது. உபாயத்வமும் “க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்” என்று ஸநாதந தர்மமாகச் சொல்லப்படுகிற அவனுக்கே ஸ்வதஸ்ஸித்தமாய் ததீயர்க்கு ததாஸத்தியடியாக வருகிறதிறேயுள்ளது. ஆகையாலே பிராட்டிக்கு புருஷகாரத்வமும், ஈச்வரனுக்கு உபாயத்வமும் நிரூபகமாகத் தட்டில்லை. இவ்வர்த்தத்தை வெளியிடுகைக்காகவாய்த்து இவரிப்படியருளிச்செய்தது. இப்படி உபப்ரும்ஹணமான ப்ரபந்த த்வயத்தாலும் ப்ரதிபாதிக்கப்படுகிற புருஷாகாரத்வமுமுபாயத்வமும் உபப்ரும்ஹ்யமான வேதாந்தத்தி லுக்தமான ஸ்தலமேதென்னில், கடவல்ல்யுபநிஷத் ஸித்தமான த்வயத்தில் பூர்வவாக்யத்திலே உபயமும் சேர உக்தமிறே. இச்சேதநனுக்கு இருவரோடும் ஸம்பந்தமுண்டாயிருக்க ஈச்வர ஸமாச்ரயணத்துக்கிவள் புருஷகாரமாக வேண்டுகிற தென்னென்னில், மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்ஸல்யாதிரேகத்தாலும், அவனைப்போலே காடிந்யமார்தவங்கள் கலந்திருக்கையன்றிக்கே, கேவல மார்தவமேயாய், பிறர் கண்குழிவு காணமாட்டாத ப்ரக்ருதியாகையாலும், விமுகரையுமபிகுகராக்குகைக்கு க்ருஷி பண்ணு மவளாகையாலும், குற்றவாளர்க்குங் கூசாமல் வந்து காலிலே விழலாம்படியிருப்பாளாய், பும்ஸ்த்வ ப்ரயுக்தமான காடிந்யத்தோடே பித்ருத்வ ப்ரயுக்தமான ஹிதபரதையையு முடையனாய், குற்றங்களைப் பத்தும் பத்தாகக் கணக்கிட்டு க்ரூரதண்டங்களைப் பண்ணுகையாலே, குற்றவாளர்க்கு முன்செல்லக் குடல்கரிக்கும்படியிருக்குமீச்வரனை உசிதோபாயங்களாலே குற்றங்களையடைய மறப்பித்துக் கூட்டிவிடுமவளுமா யிருக்கையாலே அபராதமே வடிவான இச்சேதநன் அவனையாச்ரயிருகுமளவில் இவள் புருஷகாரமாக வேணும். ஆகையிறே அவனை உபாயாமாகவரிக்க இழிகிறவளவில் இவளைப் புருஷகாரமாக முன்னிடுகிறது.
“இவை இரண்டும்” என்பதன் மூலம் சிறை இருந்தவள் ஏற்றம், தூது போனவன் ஏற்றம் ஆகிய இரண்டையும் குறிக்கிறார். பாவங்கள் பலவும் செய்த சேதனர்கள் வந்து அடையத்தக்கவளாக பிராட்டி உள்ளாள். இப்படியாக அவளிடம் சென்றடைய ஏதேனும் புருஷகாரம் (சிபாரிசு) வேண்டுமோ என்றால் – அனைத்திற்கும் தாய் என்பதாலும், தயை முதலான குணங்களாலும் அது போன்ற புருஷகாரம் ஏதும் அவசியம் இல்லாமல், ஏற்றுக் கொள்பவளாகப் பிராட்டி உள்ளாள். சேதனர்கள் செய்யும் பாவமான செயல்களைக் கண்டு கோபம் கொள்ளும் எம்பெருமான், கீதை (16-19) – க்ஷீபாமி – அசுர பிறவிகளில் அவர்களைத் தள்ளுகிறேன் - என்றும், வராஹபுராணம் - ந க்ஷமாமி - என் அடியார்களை நிந்திப்பவர்களை நான் பொறுப்பதில்லை - என்றும் கூறுகிறான். அவனது இந்தக் கோபம் கொள்ளும் மனதை மாற்றி, அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யும் பிராட்டியின் பெருமைகள் புருஷகாரவைபவம் என்பதன் மூலம் கூறப்பட்டது. இவ்விதம் எம்பெருமான் ஏற்றுக் கொண்ட பின்னர், அந்தப் பிராட்டி தானே அவர்கள் மீது ஏதேனும் குற்றம் சுமத்தினாலும் அதற்கு எம்பெருமான் பெரியாழ்வார் திருமொழி (4-9-2) - என் அடியார் அது செய்யார் - என்பதற்கு ஏற்ப, அவள் கூறுவதை மறுத்து, அவர்களைக் காப்பாற்றுவதில் உறுதியாக நிற்கிறான். இப்படியாக உள்ள அவன் பெருமைகளை உபாய வைபவம் என்பதன் மூலம் அருளிச்செய்தார். புருஷகாரம் என்றும், உபாயம் என்றும் இவர்களை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தி அருளிச்செய்தது ஏன் என்றால் – புருஷகாரம் என்பது பிராட்டிக்கும், உபாயம் என்பது எம்பெருமானுக்கும் இயல்பாகவே உள்ளது என்பதை உணர்த்தவே ஆகும். இந்த விஷயத்தைக் கீழே உள்ள வரிகளில் அறியலாம்: • மத் ப்ராப்திம் ப்ரதி ஜந்நூநாம் ஸம்ஸாரே பததாமத: லக்ஷ்மீ: புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்க்ஷிபி; மமாபிச மதம்ஹ்யேதத் நாந்யதா லக்ஷணம் பவேத் – ஸம்ஸாரம் என்ற படுகுழியில் விழுந்து கிடக்கும் இந்த மக்களுக்கு, என்னை அடையும் புருஷகாரமாக பிராட்டி உள்ளாள் என்பது மஹரிஷிகளால் கூறப்பட்டது. இப்படி இவள் புருஷகாரமாக உள்ளாள் என்பது என்னாலும் ஏற்கப்படும் பிராட்டி இலக்கணம் ஆகும். இதற்கு மறுகருத்து இல்லை. • அஹம் மத்ப்ராப்த்யுபாயோவை ஸாஷாத் லக்ஷ்மீபதிஸ் ஸ்வயம், லக்ஷ்மீ: புருஷகாரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ, ஏஹஸ்யாச்ச விசேஷோயம் நிகமாந்தேஷு சப்த்யதே – மஹாலக்ஷ்மியின் நாயகனான நான் நேர் உபாயமாக உள்ளேன். என்னை எப்போதும் வசீகரிக்கும் மஹாலக்ஷ்மி, புருஷகாரத் தன்மை மூலம் உயிர்களை என்னிடம் அடையச்செய்தல் என்னும் தொடர்பைக் கொண்டுள்ளாள். எங்கள் இருவருக்கும் உள்ள இந்தத் தன்மைகள் வேதாந்தங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. • அகிஞ்சந்யைக சரணா: கேசித் பாக்யாதிகா: புந:, மத்பதாம்போருஹத்வந்த்வம் ப்ரபத்ய ப்ரீத மானஸா:, லக்ஷ்மீம் புருஷகாரேண வ்ருதவந்தோ வராநந, மத்க்ஷமாம் ப்ராப்ய ஸேநேச ப்ராப்யம் ப்ராபகமேவ மாம், லப்த்வா க்ருதர்த்தா: ப்ராப்ஸ்யந்தே மாமே வாநந்ய மாநஸா: - சிறந்த விஷ்வக்ஸேனரே! மற்ற எந்த ஓர் உபாயத்தையும் பற்றாமல், என்னை மட்டுமே உபாயம் என்று ஒரு சில புண்ணிய ஆத்மாக்கள் பற்றியுள்ளனர். எனது தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பற்றிய அவர்கள் – பெறப்போகும் மோக்ஷம் என்ற பேற்றில் ஆர்வம் கொண்டு, பெரியபிராட்டியைத் தங்கள் உபாயமாகக் கைக்கொண்டு, என்னை அவர்களது தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும்படியாகச் செய்து விடுகின்றனர். அடையப்படும் பொருளாக (உபேயம்) உள்ள என்னைப் பற்றியபடி, என்னையே உபாயமாகவும் பற்றுகின்றனர். இப்படியாகத் தாங்கள் செய்யவேண்டிய செயல்களைச் செய்து முடித்தவர்களாக, வேறு எதிலும் தங்கள் மனதைத் திருப்பாதவர்களாக இருந்து, என்னையே அடைகின்றனர். மற்ற பிராட்டிகளுக்கும் நித்யசூரிகளுக்கும் இந்தப் புருஷகாரத்தன்மை உள்ளபோதிலும், அந்தத் தன்மை அவர்களுக்கு இவளுடன் அவர்கள் கொண்டுள்ள தொடர்பு காரணமாக மட்டுமே உண்டாகிறது. புருஷகாரத்வம் என்பது அவர்களுக்கு இவளைப் போன்று இயல்பாகவே அமைந்தது அல்ல. இதனைக் கருத்தில் கொண்டு வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர் தனது தத்வதீப ஸங்கரஹத்தில் – ஏதத் ஸாபேக்ஷஸம்பந்தா தந்யேஷா மமலாத்மநாம், தேவீஸூரி குரூணாஞ்ச கடகத்வம் நது ஸ்வத: - பெரியபிராட்டியின் தொடர்பு காரணமாக மட்டுமே மற்ற பிராட்டிகளுக்கும், நித்யஸூரிகளுக்கும், ஆசார்யர்களுக்கும் புருஷகாரத்தன்மை உள்ளது; அது அவர்களுக்கு இயல்பாக உள்ளது அன்று – என அருளிச்செய்தார். உபாயத்தன்மை என்பது, மகாபாரதம் ஆரண்ய பர்வம் (88-253) – க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் – க்ருஷ்ணனையே என்றும் உள்ள தர்மம் என்று கூறுகின்றனர் – என்பதற்கு ஏற்ப ஸர்வேஸ்வரனுக்கு மட்டுமே இயல்பாக அமைந்துள்ளது. மற்றவர்களுக்கு அவனது தொடர்பால் மட்டுமே உண்டாகிறது. ஆகவே, பிராட்டிக்குப் புருஷார்த்த தன்மையும், எம்பெருமானுக்கு உபாயத்தன்மையும் தனித்தன்மையாக உள்ளது என்பதைக் கூறுவதில் எந்த ஆக்ஷேபமும் இல்லை. இதனை வெளிப்படுத்தவே இவர் இவ்விதம் அருளிச் செய்தார். வேதங்களின் ஆழ்பொருளை விவரித்துக் கூறும் இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் கூறப்பட்ட உபாயவைபவமும், புருஷகாரவைபவமும் இந்த இரண்டு நூல்கள் மூலம் விவரிக்கப்படும் வேதங்களில் எங்கு கூறப்பட்டுள்ளன? கடவல்லீ உபநிஷத்தில் கூறப்படுகின்ற த்வயம் என்ற மந்திரத்தின் முன் வரியில் இந்த இரண்டும் ஒன்றாகவே கூறப்படுகின்றன. உலகில் உள்ள மக்களுக்கு இந்த இருவருடன் (எம்பெருமான், பிராட்டி) உள்ள தொடர்பு இயற்கையாகவே உள்ளபோது, எம்பெருமானை அடைவதற்குப் பிராட்டியின் புருஷகாரம் ஏன் அவசியமாகிறது என்று கேள்விக்கு அடுத்து விடை அருளிச் செய்கிறார். தாய் என்னும் தன்மையால் அவளுக்கு வாத்ஸல்யம் இயல்பாகவே உள்ளது. எம்பெருமானைப் போன்று இவளிடம் மென்மையும் கடுமையும் கலந்து இருப்பதில்லை. இவளிடம் மென்மை மட்டுமே உள்ளது. ஆகவே இவள் மற்றவர்களிடம் உள்ள தாழ்வுகளைக் காண்பதில்லை. தீய மனம் கொண்டவர்களையும் திருத்தி, நல்ல மனம் கொண்டவர்களாக ஆக்கிவிடும் தன்மை உடையவளாக பிராட்டி உள்ளாள். எம்பெருமான் ஆண்மை காரணமாகக் கடுமையாக உள்ளபோதிலும், தந்தைக்கு ஏற்ற தன்மையுடன் நன்மையையே செய்பவனாக உள்ளான். அடியார்கள் செய்கின்ற குற்றங்களைப் பத்து பத்தாகக் கூறு போட்டுக் கணக்கில் வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவனாக எம்பெருமான் உள்ளான். இதனால் தவறு செய்தவர்கள், அவனிடம் செல்வதற்கு தங்கள் குடல் கலக்கும்படி நடுங்குகின்றனர். அப்படிப்பட்ட ஸர்வேச்வரன் இவர்களது தவறுகளை மறக்கும்படியாக பிராட்டி செய்துவிடுகிறாள். மேலும், அவன் திருவடிகளில் கொண்டு சேர்த்து விடுபவளாகப் பிராட்டி உள்ளாள். ஆகவே இந்தக் காரணங்களால் பாவம் பல செய்தபடி உள்ளவர்கள் ஸர்வேச்வரனைப் பற்றுவதற்கு இவள் புருஷகாரமாக இருந்தே ஆகவேண்டும். இந்தக் காரணங்களால் அல்லவோ, அவனை உபாயமாகப் பற்றுவதற்கு, இவளைப் புருஷகாரமாகப் பற்ற வேண்டும் என்று இவளை முன் நிறுத்துகிறோம்.