Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 5)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
இதிஹாஸ ச்ரேஷ்ட்டமான ஸ்ரீராமாயணத்தால் சிறையிருத்தவளேற்றஞ் சொல்லுகிறது. மஹாபாரதத்தால் தூது போனவனேற்றஞ் சொல்லுகிறது.
முதலிலே வேதார்த்தம் இத்யாதியாலே வேதததர்த்த ததுபப்ர்ம்ஹணங்களை ஸாகல்யேந உபாதாநம் பண்ணி, அந்த வேதத்தினுடைய பாக விபாக ததுபப்ர்ம்ஹண விபாகங்களையும் பண்ணினாரேயாகிலும், தேதநருடைய உஜ்ஜீவநத்துக்கபே க்ஷிதார்த்தங்களையருளிச் செய்ய இழிந்தவராகையாலும், அதுதான் பூர்வபாக வேத்யமன்றிக்கே உத்தரபாக வேத்யமாகையாலும், பூர்வபாகத்தில் முமுக்ஷுவுக்கு ஜ்ஞாதவ்யாம்சமுள்ளதும், உத்தரபாகார்த்தங்களான ஸ்வரூபோபாய புருஷார்த்த ப்ரதிபாதந ஸ்தலங்களிலே தத் ததநுகுண த்யாஜ்யோபாதேய கதந முகேந ஜ்ஞாபிக்கலா யிருக்கையாலும், உத்தரபாகார்த்த நிர்ணயத்திலே ப்ரவர்த்தராய், அது தன்னிலும் பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் பகவதுபாஸநாதிகளையும், பரக்க நின்று ப்ரதிபாதிக்கிறவிடங்களில், ஸாராஸார விவேகபூர்வமாக தாத்பர்யார்த்தங்களை ஸங்க்ரஹித்து, ஸம்சய விபர்யயமற சேதநர்க்கு ப்ரதிபத்தி விஷயமாம்படியருளிச் செய்து செல்லுகிறார் மேல். அதில் ப்ரதமத்திலே, உத்தரபாகோபப்ர்ம்ஹண த்வயத்தில் ப்ரபலமாகச் சொன்ன இதிஹாஸங்களில் வைத்துக் கொண்டு ஸ்ரீராமாயணத்தினுடைய ப்ராபல்யத்தை ப்ரகசிப்பியா நின்று கொண்டு, தத் ப்ரதிபாத்ய விசேஷத்தையருளிச் செய்கிறார்.
– முதல் சூர்ணை தொடங்கி வேதங்களையும் அவற்றின் ஆழ்பொருளை விவரிக்கும் நூல்களையும் பொதுவாக விளக்கினார். அப்படிப்பட்ட வேதங்களின் பாகங்கள், அந்தப் பாகங்களை விவரித்துக் கூறும் நூல்களின் பாகங்கள் ஆகியவற்றைப் பிரித்து அருளிச் செய்தார். மேலும் இந்த உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் பிழைப்பதற்குத் தேவையான பொருள்களை அருளிச்செய்ய திருவுள்ளம் பற்றினார். இப்படிப்பட்ட பொருளானது, வேதங்களின் முதல் பாகமாக உள்ள கர்மகாண்டம் மூலம் அறியக்கூடியதல்ல; உத்தரபாகமாக உள்ள ஞானகாண்டம் மூலமே அறியக்கூடியதாகும். மேலும் பூர்வபாகத்தில் மோக்ஷத்தை விரும்புகிறவர்களால் அறியத்தக்கவையாக உள்ளவைகள்; பின்பாகமாகிற ஞானகாண்டத்தில் கூறப்படும் பொருள்களான ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் மற்றும் இவற்றைப் பற்றிக் கூறும் இடங்களில், இவற்றைப் பெறுவதற்குச் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவை கூறப்பட்டன. இதனால் ஞானகாண்டத்தின் ஆழ்பொருளை நிர்ணயம் செய்வதற்கு முதலில் தொடங்கினார். இந்த ஞானகாண்டத்தில் எம்பெருமானின் ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதிகள் ஆகியவை பற்றியும், அவனை உபாஸனை செய்யும் வழிமுறைகளையும் கூறும் இடங்களில் சாரப்பொருள்கள் மற்றும் சாரம் அல்லாத பொருள்கள் ஆகியவற்றையும் பிரித்து அறிவது குறித்து சுருக்கமாகக் கூறுகிறார். இதில் சேதனர்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இன்றி இவை விளங்கவேண்டும் என்று திருவுள்ளம் பற்றித் தொடர்கிறார். முதலில் வேதங்களின் பின்பாகம் எனப்படும் ஞானகாண்டத்தில் பொருளை விரிவாகக் கூறுகின்ற இதிகாசங்கள் இரண்டு உள்ளபோதிலும், அவற்றில் முதலில் ஸ்ரீஇராமாயணத்தின் வலிமை காரணமாக, அதில் கூறப்படும் மேன்மையான பொருள்களை அருளிச் செய்கிறார்.
ஸ்ரீராமாயணத்துக்கு இதிஹாஸ ச்ரேஷ்ட்டத்வமாவது, வால்மீகயே மஹர்ஷயே ஸந்தி தேச ஆஸநம்தத, ப்ரஹ்மணா ஸமநுஜ்ஞாதஸ் ஸோப்யுபாவிசதாஸநே என்று ஸகலலோக பிதாமஹனான ப்ரஹ்மாவாலே ஸம்பாவிதனான ஸ்ரீவால்மீகி பகவானாலே ப்ரணீதமாகையாலும், ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி என்று ப்ரஹ்மாவநுக்ரஹிக்கையாலே இதில் சொன்னவர்த்தங்களெல்லாம் மெய்யாகக் கடவதாகையாலும், தாவத் ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி என்று ஸகலலோக பரிக்ரஹமுண்டகையாலும், இதிஹாஸாந்தரங்களைப் பற்ற ப்ரபலப்ரமாணாமாயிருக்கை. இது தன்னை நடுவிற்றிருவீதிப்பிள்ளை பட்டர் தத்தவத்ரய ப்ரபந்தத்தில் ப்ரமாணாதி காரத்திலேயருளிச் செய்தாரிறே. இன்னமும் வேதவேத்யேபரே பும்ஸி இத்யாதிப்படியே ஸர்வஸ்மாத்பரனான ஸர்வேச்வரன் ஸம்ஸாரி சேதந ரக்ஷணார்த்தமாக இதர ஸஜாதீயனாய் வந்து அவதரித்தாப்போலே, ஸர்வப்ராமணோத்கர்ஷ்டமான வேதமும், ததவதார குணசேஷ்டித ப்ரதிபாதநமுகேந ததாச்ரயண ருசியை ஸம்ஸாரிகளுக்குண்டாக்கி ரக்ஷிக்கைக்காக ஸ்ரீராமாயண ரூபேண அவதரித்ததென்று சொல்லப்படுகையாலும் இதினுடையவேற்றம் ஸம்ப்ரதிபந்நம். பிராட்டியென்னாதே (சிறையிருந்தவள்) என்றருளிச் செய்தது, அவளுடைய தயாதிசயத்தை ப்ரகாசிப்பிக்கைக்காக; தேவதேவ திவ்யமஹிஷியான தன் பெருமையையும் சிறையிருப்பின் தண்மையையும் பாராதே, தேவஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காகத் தான் சிறையிருந்தருந்தது தயாபரவசையாயிறே. பிரஜை கிணற்றிலே விழுந்தால் ஒக்கக்குதித்தெடுக்கும் மாதாவைப்போலே, இச்சேதநர் விழுந்த ஸம்ஸாரத்திலே தானுமொக்க வந்து பிறந்து, இவர்கள் பட்டதைத் தானும் பட்டு ரக்ஷிக்கையாலே, நிருபாதிக மாத்ருத்வ ஸம்பந்தத்தால் வந்த நிரதிசய வாத்ஸல்யத்துக்கு ப்ரகாசகமிறேயிது. இந்த குணாதிக்யத்தை வெளியிடுகைக்காகவிறே பரமாசார்யரான நம்மாழ்வார் தனிச்சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள் என்றருளிச் செய்தது. அவருடைய திவ்யஸூக்தியிறே இவரிப்படியருளிச்செய்கைக்கு மூலம். சிறையிருப்பு தண்மையாவது கர்ம நிபந்தநமாகிலிறே. ஆச்ரிதரான தேவர்களுடைய ஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காக, தன்னநுக்ரஹத்தாலே தானே வலியச் செய்ததாகையாலே, ஏற்றத்துக் குடலாமித்தனையிறேயிது; ஸம்ஸாரிகளோடொக்க கர்ப்பவாஸம் பண்ணி பிறக்கிறவிது. பலபிறப்பாயொளிவரும் என்னும்படி ஸர்வேச்வரனுக்கு தேஜஸ்கரமாகிறது, கர்ம நிபந்தநமன்றிக்கே அநுக்ரஹ நிபந்தநமாகையிறே. ஆனபின்பு, இதுவும் அநுக்ரஹ நிபந்தநமாகையாலே இவளுக்கு தேஜஸ்கரமாமித்தனை. இத்தை ராவண பலாத்காரத்தாலே வந்ததாக நினைப்பார் இவள் சக்தி விசேஷமறியாத க்ஷுத்ரரிறே. சீதோ பவ என்றவள், நஷ்டோபவ என்னமாட்டாளன்றே. ஆகையால் இது தன்னநுக்ரஹத்தாலே பர ரக்ஷணார்த்தமாகச் செய்த செயலாகையாலே, இதுவே இவள் தயாதி குணங்களுக்கு ப்ரகாசகமென்று திருவுள்ளம் பற்றியாய்த்து இவர் (சிறையிருந்தவள்) என்று அருளிச் செய்தது. ஸ்ரீராமாயணமெல்லாமிவளுடையவேற்றஞ் சொல்லுகிறதென்னுமிடம் காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயாச் சரிதம் மஹத் என்று ஸ்ரீவால்மீகிபகவாந் தானே வாயோலையிட்டு வைத்தானிறே. ஸ்ரீமத் ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச் சரித்ரே என்றருளிச்செய்தாரிறே பட்டர். அநந்தரம் மஹாபாரத ப்ரதிபாத்யத்தையருளிச் செய்கிறார் (மஹாபாரதத்தால் என்று தொடங்கி). க்ருஷ்ணத்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் கோஹ்யந்யோ புவி மைத்ரேய மஹாபாரத க்ருத் பவேத், ஏவம் விதம் பாரதந்து ப்ரோக்தம் யேந மஹாத்மநா ஸோயம் நாராயணஸ் ஸாக்ஷாத் வ்யாஸரூபீ மஹாமுநி: என்று பகவதாவேசாவதரமாய், ஸஹோவாச வ்யாஸ: பாராசர்ய: என்று ஆப்ததமனாக ப்ரஸித்தனாயிருந்துள்ள ஸ்ரீவேதவ்யாஸ பகவானாலே வேதாந் அத்யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாத் என்கிறபடியே பஞ்சமவேதமாகப் ப்ரணீதமாய், அநேக புராண ப்ரசஸ்தமாயிருந்துள்ள மஹாபாரதமும் ஸ்ரீராமாயணத்தோபாதி ப்ரபல ப்ரமாணம். இதுவும் நடுவிற்றிருவீதிப்பிள்ளைபட்டர் தாமேயருளிச்செய்தார். பெரியபட்டரும் ஸ்ரீஸஹஸ்ரநாம பாஷ்யோபோத்காதத்திலே, ஸ்ரீராமாயணவந் மஹாபாரதம் சரணம் என்றருளிச் செய்தாரிறே. ஸர்வேச்வரனென்னாதே (தூதுபோனவன்) என்றது அவனுடைய ஆச்ரித பாரதந்த்ர்யத்தை ப்ரகாசிப்பிக்கைக்காக; தேவதேவனான தன் பெருமையையும் செய்கிற தொழிலின் தண்மையையும் பாராதே, பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டித் தூது போய்த்தது, ப்ரணத பாரதந்த்ர்ய ருசி பரவசனாயிறே. இதுதான் இவனுடைய ஆச்ரயண ஸௌகர்யாபாதகமான நீர்மைக்குடலாயிருந்துள்ள வாத்ஸல்யாதிகளுக்கெல்லாம் ப்ரகாசகமாயிருப்பதொன்றிறே. இந்த குணாதிக்யத்திலே ஈடுபட்டிறே “இன்னார் தூதனென நின்றான்” என்றும், ”குடை மன்னரிடை நடந்த தூதா” என்றும் திருமங்கையாழ்வாரருளிச்செய்தது. அந்த திவ்ய ஸூக்தியிறே இவரிப்படியருளிச் செய்கைக்கு மூலம். பேசிற்றே பேசுகையிறே இவர்களுக்கேற்றம். தூது போனது – தண்மையாவது, கர்மவச்யதையடியாகவரிலிறே. ஐச்சமாக ஆச்ரித விஷயத்திற் செய்கிற தாழ்ச்சியெல்லாம் ஏற்றத்துக்குடலாயிறே இருப்பது. ”ஸ உச்ரேயாந் பவதி ஜாயாமாந:” என்று பரார்த்தமாகப் பிறக்கையாலே நிறம்பெறுமென்று ச்ருதி சொன்னவிது பரார்த்தமாகத் தன்னிச்சையாலே செய்யுமவையெல்லாம் இவனுக்கு தேஜஸ்கரமென்னு மதுக்குபலக்ஷணமிறே. இவன் செய்த தூத்யத்தை மாந்த்யஹேதுவாக நினைப்பார், அறிவுகேடரில் தலையானவர்களித்தனை. அறிவில் தலைநின்றவர்கள் ”எத்திறம்” என்று மோஹிக்கும்படியாயிறேயிருப்பது. இப்படியிருந்துள்ள இந்நீர்மையிலேற்றத்தை வெளியி டுகைக்காகவாய்த்து இவர் (தூது போனவன்) என்றருளிச்செய்தது. மஹாபாரதமெல்லாம் இவனுடையவேற்றஞ் சொல்லுகையிலே தத்பரமாகையாலேயிறே, மஹாபாரத கதை சொல்லத் தொடங்குகின்றவன் நாராயணகதாமிமாம் என்றது. ஆக ப்ரபந்தத்வயத்துக்கும் ப்ரதாநப்ரதிபாத்யங்களின்னதென்னுமிடம் ப்ரகாசிப்பிக்கப்பட்டது.
இதிகாசங்களில் இராமாயணத்திற்கு உள்ள மேன்மை ஏன் என்றால், கீழே உள்ள பலவற்றால் ஆகும்: • இராமாயணம் பாலகாண்டம் (2-26) – வால்மீகயே மஹர்ஷயே ஸந்தி தேச ஆஸநம்தத, ப்ரஹ்மணா ஸமநுஜ்ஞாதஸ் ஸோப்யுபாவிசதாஸநே – அதன் பின்னர், வால்மீகி முனிவருக்கு ஒரு தவிசு அளிக்கப்பட்டது. நான்முகனின் கட்டளைக்கு இணங்க அந்த மஹரிஷியும் அதில் ஏறி அமர்ந்தார் – என்பதற்கு ஏற்ப அனைத்து உலகிற்கும் பாட்டனாகிய நான்முகனால் மேன்மை செய்யப்பட்டவரான வால்மீகி பகவானால் செய்யப்பட்டது. • இராமாயணம் பாலகாண்டம் (2-35) – ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி – இதில் உள்ள உன் வாக்கியம் ஒன்று கூட பொய்யாகாது; புண்ணியங்கள் நிறைந்ததும், மனதிற்கு இன்பம் அளிப்பதும், ச்லோகமாக உள்ளதும் ஆகிய இராமாயணத்தை இயற்றுவாயாக - என்று நான்முகன் கூறியது போன்று இந்தக் காவியத்தில் உள்ள அனைத்தும் உண்மையாகவே உள்ளது. • இராமாயணம் பாலகாண்டம் (2-37) - தாவத் ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி - இந்தப் பூமியில் உள்ள மலைகள், ஆறுகள் போன்றவை எத்தனை காலம் இருக்கப் போகின்றனவோ, அத்தனை காலம் இராமனின் இந்தச் சரிதம் இருக்கப் போகிறது - என்றது. மேலே உள்ள பல காரணங்களால், மற்ற இதிகாசங்களைக் காட்டிலும் இராமாயணம் மிகவும் வலிமையான ப்ரமாணமாகவே உள்ளது. இப்படியாக இராமாயணம் மற்ற ப்ரமாணங்களைக் காட்டிலும் வலிமையான தன்மை கொண்டது என்பதை, நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் தன்னுடைய தத்வத்ரயம் என்பதில், ப்ரமாண அதிகாரத்தில் அருளிச்செய்தார். மேலும் காந்த புராணம் – வேதவேத்யேபரே பும்ஸி – வேதங்களால் போற்றப்படும் பரமபுருஷன் இராமனாக அவதரித்தபோது, அனைத்து வேதங்களும் வால்மீகி முனிவன் மூலமாக இராமாயணமாக அவதரித்தன - என்றது காண்க. இந்த உலகில் வினைகள் காரணமாகப் பிறந்து, இங்குள்ள துன்பங்களில் உழன்றபடி உள்ள மக்களைக் கரையேற்றும் பொருட்டு, மற்றவர்களை ஒத்த மனித வடிவில், அனைவரிலும் மேம்பட்ட ஸர்வேச்வரன் அவதரித்தான். இதே போன்று, அனைத்து ப்ரமாணங்களிலும் மேம்பட்ட ப்ரமாணமான வேதங்களும் – அவனுடைய அவதார குணங்கள் மற்றும் செயல்களைக் கூறுவதற்காகவும், இந்த உலகில் உள்ளவர்கள் அவனைப் பற்றி அறிவதற்கான சுவையை ஏற்படுத்தி, அவன் மீது பற்றுதல் ஏற்படுத்தும் விதமாக இராமயணமாக உண்டாயின. இப்படியாக உள்ளதால் இதன் மேன்மை என்பது எந்த ஆக்ஷேபமும் இன்றி அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். சீதையைப் ”பிராட்டி” என்று கூறாமல், “சிறை இருந்தவள்” என்று ஏன் கூறவேண்டும்? இதன் காரணம், அவளுடைய தயை குணத்தை வெளிப்படுத்தவே ஆகும். அனைத்து தேவர்களுக்கும் தலைவனாக உள்ள இராமனின் பட்டமஹிஷியாக உள்ள போதிலும், தனது பெருமைகள் மற்றும் தான் இப்போது சிறையில் உள்ள தாழ்ச்சி ஆகியவற்றைச் சீதை ஆராயவில்லை. மாறாக, தேவலோகப் பெண்களின் சிறை வாசத்தை நீக்கி, அவர்களைச் சிறையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற காரணத்தால் சிறையில் இருந்தாள். இதன் மூலம் இவளது தயை வெளிப்படுகிறது. இப்படியாக இவள் உள்ளதற்குக் காரணம் என்ன? கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்துவிட்டது என்றால், அதனைக் காப்பாற்ற அதன் தாயும் அது போன்றே கிணற்றில் குதிப்பாள் அன்றோ? இது போல, இந்த உயிர்கள் வந்து விழுந்த பிறவிக் கடலில் தானும் வந்து பிறந்து, இவர்கள் படும்பாட்டில் தானும் நின்று காப்பாற்றுகிறாள். இத்தகைய இவளது தாய்மை என்பது எந்தவிதமான காரணமும் இன்றி தானாகவே வெளிவருவதாகும். இந்த உயிர்களின் தாய் என்பதால் அல்லவோ இந்தத் தயை உண்டாகிறது? இத்தகைய உயர்ந்த தயை குணத்தை வெளியிடும் பொருட்டே நம்மாழ்வார் திருவாய்மொழியில் (4-8-5) – தனிச்சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள் – என்று அருளிச்செய்தார். ஆகவே, ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர் “சிறையிருந்தவள்” என்று பிராட்டியைக் கூறுவதற்கு திருவாய்மொழி அல்லவோ மூலமாக உள்ளது? ”சிறையிருந்தவள் ஏற்றம்” என்று கூறினாலும், “சிறை இருப்பது” தாழ்வு அல்லவோ என்ற கேள்வி உண்டாகலாம். இதற்கான விடையை அருளிச்செய்கிறார். “சிறை இருப்பது தாழ்ச்சி” என்று நிலை, அந்தச் சிறைவாசம் என்பது கர்மம் காரணமாக வந்தால் மட்டுமே பொருந்தும். தன்னுடைய அடியார்களாகிய தேவலோகப் பெண்களுக்காகவும், அவர்களைச் சிறை விடுவிக்கவும், தன்னுடைய தயை காரணமாகத் தானாகவே வலியச் சென்று அல்லவோ இவள் அகப்பட்டாள்? ஆகவே இது ஏற்றமே ஆகும். மேலும் இந்த உலக மக்களைப் போன்று கருவிலே சிறிது காலம் தங்கிப் பிறக்கின்ற இது, திருவாய்மொழி (1-3-2) – பலபிறப்பாயொளிவரும் – என்று கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுக்கும் பேரொளியை அளிப்பதாகவே உள்ளது. இந்த நிலை கர்மம் காரணமாக அல்லாமல் அனுக்ரஹம் செய்வதற்காக அல்லவோ இவளுக்கு பேரொளியைத் தருவதாக உள்ளது? இவள் சிறைப்பட்டது என்பது இராவணனின் வலிமையால் என்றே ஏதும் அறியாதவர்கள் எண்ணுவர். இவர்கள், இவளது சக்தியின் மேன்மையை அறியாதவர்கள் ஆவர். சுந்தரகாண்டத்தில் (53-29) – சீதோ பவ – அக்னியே! நீ அனுமனுக்கு குளிர்வாக இருப்பாய் - என்று கூறியவள், நஷ்டோ பவ – இராவணனே! நீ அழிவாய் - என்று கூறும்போது, ஆற்றல் இல்லாதவள் அல்ல என்பதை அறியலாம் அல்லவோ? எனவே இவள் சிறையில் இருந்தது என்பது, மற்றவர்களைக் காப்பாற்றும் விதமாகச் செய்த செயல் என்பதால், அந்தச் செயலே இவளது தயை முதலான குணங்களுக்கு விளக்கிட்டுக் காட்டுவது என்பதை உணர்த்தவே ”சிறையிருந்தவள்” என்று அருளிச்செய்தார். இராமாயணம் முழுமையும் இவளது சரிதமே என்றும், இவளது மேன்மையை மட்டுமே கூறுகிறது என்றும் சொல்வது, பாலகாண்டம் (4-7) – காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயாச் சரிதம் மஹத் – இராமயணம் முழுவதும் சீதையின் பெருமை உள்ளடக்கிய காவியம் – என்று வால்மீகி முனிவர் தன் வாக்கு மூலமே உணர்த்துவதால் தெளிவாகிறது. இதனையே ஸ்வாமி பராசரபட்டர் ஸ்ரீகுணரத்நகோசத்தில் (14) - ஸ்ரீமத் ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச் சரித்ரே - தாயே! ஸ்ரீரங்கநாயகி! இராமாயணமும் உனது சரிதத்தைக் கூறியபடியே வாழ்கிறது – என்று அருளிச்செய்தார். அடுத்து மகாபாரதத்தில் உணர்த்தப்பட்ட பொருளை அருளிச் செய்கிறார் (முதலில் வ்யாஸரைப் பற்றிக் கூறுகிறார்). ஸ்ரீவிஷ்ணுபுராணம் (3-4-5) – க்ருஷ்ணத்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் கோஹ்யந்யோ புவி மைத்ரேய மஹாபாரத க்ருத் பவேத் – மைத்ரேயரே! க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் பெயர் கொண்ட வ்யாஸ மஹரிஷியை அனைத்திற்கும் நாதனான ஸ்ரீமந்நாராயணன் என்றே அறிய வேண்டும். இந்த உலகில் மகாபாரதத்தை அருளிச்செய்தார் அவரன்றி வேறு யார் ஆவார் - என்றது. மேலும் - ஏவம் விதம் பாரதந்து ப்ரோக்தம் யேந மஹாத்மநா ஸோயம் நாராயணஸ் ஸாக்ஷாத் வ்யாஸரூபீ மஹாமுநி: - இப்படிப்பட்ட உயர்ந்த மகாபாரதம் எந்த ஒருவரால் அருளிச்செய்யப்பட்டதோ, அந்த மஹாத்மாவான வ்யாஸ மஹரிஷி நாராயணனே ஆவார் - என்றும் கூறப்பட்டது. ஆக எம்பெருமான் அவதாரமாகவே வ்யாஸர் உள்ளார். மேலும் - ஸஹோவாச வ்யாஸ: பாராசர்ய: – பராசர மஹரிஷியின் புத்திரரான வ்யாஸர் உரைத்தார் - என்று கூறும்படி அனைவரிலும் உயர்ந்தவராகவும், அனைவராலும் அறியப்பட்டவராகவும் திகழும் வ்யாஸ பகவானால், வேதாந் அத்யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாத் - மஹாபாரதத்துடன் கூடிய ஐந்தாகிய வேதங்கள் ஏற்படுத்தினார் - என்னும்படி ஐந்தாம் வேதமாகச் செய்யப்பட்டது மகாபாரதம் ஆகும். இதனையும் நடுவில்திருவீதிப்பிள்ளை அருளிச்செய்தார். பெரியபட்டரான ஸ்வாமி பராசரபட்டரும் தனது ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாம அறிமுக உரையில் – ஸ்ரீராமாயணவந் மஹாபாரதம் சரணம் - ஸ்ரீராமாயணம் போன்று மகாபாரதமும் உயர்ந்த ப்ராமாணம் – என்றது காண்க. எம்பெருமானை ஸர்வேச்வரன் என்று கூறாமல், “தூது போனவன்“ என்று ஏன் கூறினார்? அடியார்களுக்கு அடிமையாக நிற்கின்ற அவனது குணத்தை வெளிப்படுத்தவே ஆகும் தேவர்களுக்கும் தலைவனாகிய அவன் தனது மேன்மையை ஆராயாமல், தான் செய்கின்ற செயலின் தாழ்வையும் பாராமல், பாண்டவர்களுக்காகத் தாழ்ந்த பொருள் போன்று ஓலையைக் கட்டிக் கொண்டு தூதுவனாகச் சென்றான். இது ஏன்? அடியார்களுக்கு அடிமையாக நின்று தொண்டு புரிவதில் உள்ள ருசியை அவன் அறிந்திருந்தாலேயே ஆகும். அவனை யாரும் எளிதாக அடையலாம் என்பதை உணர்த்தும் அவனது குணங்களான வாத்ஸல்யம் (பசு கன்றிடம் காட்டும் பாசம், குற்றங்களையும் குணமாகக் கொள்ளும் தன்மை) முதலானவற்றை விளக்கும் குணமாக இந்த “அடியார்களின் அடிமை” என்பது உள்ளது. இந்தக் குணத்தில் மயங்கிய காரணத்தால் அல்லவா திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் (2-2-3) - இன்னார் தூதன் என நின்றான் – என்றும், (6-2-9) - குடை மன்னரிடை நடந்த தூதா - என்றும் அருளிச்செய்தார்? அத்தகைய பெரியதிருமொழியே இங்கு ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர் இவ்விதம் அருளிச்செய்ததற்கு மூலமாக உள்ளது? பூர்வர்கள் கூறுவதை மீண்டும் உணர்த்துவது அல்லவோ இவர் போன்றவர்களுக்குப் பெருமை? தூது போதல் என்பது தாழ்வான செயல் அல்லவோ என்ற கேள்வி எழலாம். ஆனால் அத்தகைய செயலானது கர்மத்தின் அடிப்படையில் உண்டானால் மட்டுமே தாழ்வானது ஆகும். ஆனால் அடியார்களுக்காகத் தனது ஆசைப்படிச் செய்யும் அனைத்தும் தாழ்வான செயல்களாக இருந்தாலும், அவை ஏற்றமாகவே கொள்ளப்படுகின்றன. யஜுர் அஷ்டகம் - ஸ உச்ரேயாந் பவதி ஜாயாமாந: – பரமாத்மா இந்த உலகில் பிறக்கும்போது மிகுந்த ஒளியை அடைகிறான் - என்றது காண்க. ஆக மற்றவர்களுக்காகப் பிறந்து, அவர்களுக்காகச் செயல்கள் புரியும்போது இவன் தனது ஒளியை அடைகிறான் என்று வேதத்தால் முழங்கப்பட்ட இந்தக் கருத்தானது, மற்றவர்களுக்காகத் தனது விருப்பத்தின் அடிப்படையில் செய்கின்ற செயல்கள் அனைத்தும் இவனுக்கு ஒளியை அளிப்பவை என்பது உணர்த்தவே ஆகிறது. இவன் தூது போன செயலானது தாழ்வான ஒன்று என எண்ணுபவர்கள், அறிவிழந்த மனிதர்களில் தலை சிறந்து விளங்குபவர்கள் ஆவர். மிகுந்த அறிவுள்ளவர்கள் இந்தச் செயலைக் கண்டு, திருவாய்மொழி (1-3-1) – எத்திறம் - என்று மயங்கும்படியாக அல்லவோ இந்தச் செயல் உள்ளது? இப்படியாக உள்ள இந்தச் செயல் மூலம் இவனது எளிமையை வெளிப்படுத்தவே, அந்த எளிமையின் மேன்மையை வெளிப்படுத்தவே இவர் ”தூது போனவன் ஏற்றம்” என்று அருளிச்செய்தார். மகாபாரதம் முழுமையும் எம்பெருமானின் மேன்மையைக் கூறுவதால், இதனைத் தொடங்கும்போது வ்யாஸரின் சிஷ்யரான வைசம்பாயனர், மகாபாரதம் ஆதிபர்வத்தில் – நாராயணகதாமிமாம் - நாராயணனின் இந்தக் கதையை நான் கூறப் போகிறேன் - என்று கூறினார். எனவே இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் கூறப்பட்ட முக்கியமான பொருள் “இன்னது” என்று தெளிவாக விளக்கப்பட்டது.