Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 3)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
இவையிரண்டிலும் வைத்துக்கொண்டு இதிஹாஸம் ப்ரபலம்.
உத்தரபாகோபப்ர்ம்ஹண த்வயத்துக்கும் தாரதம்யமுண்டோ, தன்னி லொக்குமோவென்கிற சங்கையிலேயருளிச் செய்கிறார் மேல். அன்றிக்கே, ஏகபாக விஷயமானவிரண்டு உபப்ர்ம்ஹணங்களிலும் இன்னதுக்கு ப்ராபல்யமென்னுமத்தையும் தர்சிப்பிக்கவேணுமென்று தாமே திருவுள்ளம் பற்றியருளிச் செய்கிறாராகவுமாம்.
– ”வேதங்களின் உத்தரபாகத்தை விளக்குகின்ற இதிகாசம் மற்றும் புராணம் ஆகிய இரண்டிற்குள் ஏற்றத்தாழ்வுகள் உண்டா? அல்லது அவை இரண்டும் சமமாக ஒத்துப் போகுமோ?”, என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார். அல்லது இந்தச் சூர்ணையில் – உத்தரபாகத்தின் ஆழ்பொருளை விவரிக்கவல்ல இதிகாசம் மற்றும் புராணம் ஆகிய இரண்டிற்குள் “இதுவே சிறந்தது” என்று ஏதோ ஒன்றைக் கூறவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார் – என்றும் கூறலாம்.
இவை இரண்டிலுமென்று தொடங்கி அதாவது ச்ரேஷ்ட பாகோபப்ர்ம்ஹணதயா வந்த சேர்த்தியை உடைத்தானவிவையிரண்டிலும் வைத்துக் கொண்டு, ப்ராமாண்யத்தில் வந்தால் புராணத்திலும் இதிஹாஸத்துக்கு ப்ராபல்ய முண்டென்கை. புராணத்திற்காட்டில் இதிஹாஸத்துக்கு ப்ராபல்யம் பரிக்ரஹாதிசயம், மத்யஸ்த்த்தை, கர்த்துராப்ததமத்வம் ஆகியவிவற்றாலே. இவற்றில் பரிக்ரஹமாவது, சாஸ்த்ரபரிக்ரஹம். வேதவேத்யே பரேபும்ஸி ஜாதே தசரதாத்மஜே, வேத: ப்ராசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா; மதிமந்தாநமாவித்ய யேநாஸௌ ச்ருதிஸாகராத் ஜகத்திதாய ஜநிதோ மஹாபாரத சந்த்ரமா:; வ்யாஸ வாக்ய ஜலௌகேந குதர்மதருஹாரிணா வேதசைலாவதீர்ணே ந நீரஜஸ்கா மஹீ க்ருதா; பிபேதி கஹநாச்சாஸ்த்ராந் நரஸ் தீவ்ராதிவௌஷதாத் பாரதச் சாஸ்த்ர ஸாரோயம் அத: காவ்யாத்மநா க்ருத:; விஷ்ணௌ வேதேஷு வித்வத்ஸு குருஷு ப்ராஹ்மணேஷு ச பக்திர்பவதி கல்யாணி பாரதாதேவ தீமதாம் இத்யாதிகளலே புராண விசேஷங்களிலே இதிஹாஸம் ச்லாகிக்கப்படா நின்றதிறே. – மத்யஸ்த்த்தையாவது யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா தஸ்யதஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே என்று ஸர்வபுராணத்துக்கும் ப்ரவர்த்தகன் ப்ரஹ்மாவாய், அவனுக்கு யாதொரு கல்பத்திலே குணத்ரயத்தில் யாதொரு குணம் விஞ்சியிருந்தது, அந்த குணாநுகுண தேவதையினுடைய மாஹாத்ம்யத்தைப் புராணத்திலே சொல்லுகையாலே, பக்ஷபாதிகளாயிருக்கும் புராணங்கள் போலன்றிக்கே, லௌகிக வைதிக ஸகலார்த்த நிர்ணயத்திலே அதிக்ருதங்களாகையாலே ஒரு விஷயத்திலும் பக்ஷபாதமின்றின்கேயிருக்கை. – கர்த்துராப்ததமத்வமாவது ப்ரபந்தகர்த்தாவானவன் யாதா தர்சந ஸாமர்த்யத்தையும், யதாத்ருஷ்டார்த்தவாதித்வத்தையும் மிகவுமுடையவனாயிருக்கை. அதேதிஹாஸ புராணயோரிதிஹாஸா பலீயாம்ஸ: குத: தேஷாம் பரிக்ரஹாதிரேகாத், ஸர்வத்ர மாத்யஸ்த்யேந பூதார்த்த ப்ரதீதே: வசநஸௌஷ்டவேந கர்த்துராப்த தமத்வாவகதேச்ச என்று தொடங்கி பரிக்ரஹாதிசயாதிகளாலே புராணாதிதிஹாஸ ப்ராபல்யம் ஸாமாந்யேந தத்வநிர்ணயத்திலே உய்யக்கொண்டாராலும்; மஹாபாரதம் ஹி பரிக்ரஹ விசேஷாவஸிதம் என்று தொடங்கி, தர்மேசார்த்தேச காமேச மோக்ஷேச பரதர்ஷப யதிஹாஸ்தி ததந்யத்ர யந் நேஹாஸ்தி ந தத் க்வசித்; இதி லௌகிக வைதிக ஸகலார்த்த நிர்ணயாதி க்ருதத்வேந க்வசிதபி அபக்ஷபாதித்வாச்ச புராணேப்யோ பலவத்தரம் என்னுமதளவாக, பரிக்ரஹாதிசயத்தாலும் மத்யஸ்த்த்தையாலும் புராணங்களிற் காட்டிலிதிஹாஸ விசேஷமான மஹாபாரதத்துக்குண்டான ப்ராபல்யம் ஸ்ரீஸஹஸ்ரநாம பாஷ்யத்திலே பட்டராலும் ப்ரதிபாதிக்கப்பட்டதிறே.
சிறந்த பாகம் என்று கூறப்பட்ட வேதங்களின் உத்தரபாகத்தைக் கூறுவதால் வந்த சேர்த்தியைக் கொண்ட இதிகாசம் மற்றும் புராணங்களில் – ப்ரமாணம் என்னும் தன்மையில் இதிகாசம் வந்தால், அதற்குப் புராணத்தைக் காட்டிலும் மேன்மை உண்டு. புராணத்தைக் காட்டிலும் இதிகாசத்திற்கு உள்ள மேன்மை என்னவென்றால் – மற்ற நூல்களில் எடுத்து கூறப்படுதல், நடுநிலைமை தவறாமல் உரைத்தல், நூலை இயற்றியவர்களின் நம்பகத்தன்மை போன்றவை ஆகும் (இவை பரிக்ரஹம், மத்யஸ்த்த்தை, கர்த்துராப்ததமத்வம் எனப்பட்டன). முதலில் மற்ற நூல்களில் காட்டப்படுவது என்பதைக் காண்போம். கீழே உள்ள பல வரிகளின் மூலம், புராண விசேஷங்களிலே இதிகாசம் சிறப்பித்துக் கூறப்பட்டதைக் காணலாம்: • காந்தபுராணம் - வேதவேத்யே பரேபும்ஸி ஜாதே தசரதாத்மஜே, வேத: ப்ராசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா – வேதங்களால் அறியப்படும் ஸ்ரீமந்நாராயணன் தசரதனுக்குப் புத்திரனாக அவதரித்தபோது, அந்த வேதங்கள் செய்தது என்னவென்றால், ப்ரசேதஸ் என்பவரின் புத்திரரான வால்மீகி முனிவர் மூலம் இராமாயணமாக உதித்தன. • சைவபுராணம் – மதிமந்தாநமாவித்ய யேநாஸௌ ச்ருதிஸாகராத் ஜகத்திதாய ஜநிதோ மஹாபாரத சந்த்ரமா: – வேதவ்யாஸர் தனது அறிவு என்னும் மத்து கொண்டு, வேதங்கள் என்னும் ஸமுத்திரத்தைக் கடைந்தார். அப்போது இந்த உலகில் உள்ளவர்களின் நன்மைக்காக, அந்தக் கடலில் இருந்து மஹாபாரதம் என்ற சந்திரன் வெளிப்பட்டது. • மார்க்கண்டேய புராணம் – வ்யாஸ வாக்ய ஜலௌகேந குதர்மதருஹாரிணா வேதசைலாவதீர்ணே ந நீரஜஸ்கா மஹீ க்ருதா - மஹாபாரதம் என்னும் நதியானது, வேதங்கள் என்னும் மலையில் பிறந்து, அதர்மம் என்னும் மரங்களைச் சாய்த்தபடி வந்தது; வ்யாஸரின் சொற்கள் என்னும் வெள்ளம் நிறைந்தது; மக்களின் இதயங்களில் உள்ள இருள் என்னும் அழுக்கை நீக்கவல்லது. • பவிஷ்ய புராணம் - பிபேதி கஹநாச்சாஸ்த்ராந் நரஸ் தீவ்ராதிவௌஷதாத் பாரதச் சாஸ்த்ர ஸாரோயம் அத: காவ்யாத்மநா க்ருத: - மிகவும் கசப்பான மருந்தைப் பருகுவதற்குத் தயக்கம் கொள்ளும் மனிதன் போன்று, மனிதர்கள் வேதங்களில் உட்புகுந்து ஆழ்பொருளை அறியத் தயங்குகின்றனர்; இதனால் அவற்றின் சாரமாகவே காப்பிய வடிவில் மஹாபாரதம் செய்யப்பட்டது. • பவிஷ்ய புராணம் - விஷ்ணௌ வேதேஷு வித்வத்ஸு குருஷு ப்ராஹ்மணேஷு ச பக்திர்பவதி கல்யாணி பாரதாதேவ தீமதாம் – மஹாபாரதம் செய்வது என்னவென்றால் ஸ்ரீமந்நாராயணன், அவனைப் பற்றிக் கூறுகின்ற வேதங்கள், அவற்றின் பொருளை அறிந்தவர்கள், அவற்றை உபதேசிக்கும் ஆசார்யர்கள், ப்ரஹ்மநிஷ்டர்கள் ஆகியோரிடம் நன்மையை ஏற்படுத்தும் பக்தியை நமக்கு உண்டாக்குகிறது. – அடுத்து நடுநிலைமை என்பதைக் காண்போம். மச்ச புராணம் – யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா தஸ்யதஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே – எந்த ஒரு சுபநாளில், எந்த நான்முகனால், எந்த குணம் தலை தூக்கியபோது, எந்தப் புராணம் கூறப்பட்டதோ, அந்தந்த தேவதைகளின் பெருமை என்பது, அந்தந்த குணங்களுக்கு ஏற்றபடியே கூறப்பட்டது - என்றது. அதாவது அனைத்துப் புராணங்களையும் கூறியவன் நான்முகன்; அவனுக்கு எந்த ஒரு நாளில், மூன்று குணங்களில் எந்தக் குணம் அதிகமாக இருந்ததோ, அந்த நாளில், அந்தக் குணத்தின் அதிபதி தேவதையின் பெருமையை, அந்த நாளில் கூறப்பட்ட புராணம் உரைக்கிறது. ஆகவே இப்படியாக உள்ள புராணங்கள், ஏற்றத்தாழ்வுகளுடன் கூடியவையே ஆகும். இது போன்று அல்லாமல் – லௌகிக விஷயம், வைதீக விஷயம் ஆகியவற்றை நிச்சயம் செய்வதில் குறிக்கோள் கொண்டவையாக, பாரபட்சம் இல்லாமல் இதிகாசம் உள்ளதால், அவை நடுநிலைமை தவறாதவை ஆகும். கர்த்துராப்ததமத்வம் என்பது நூலை இயற்றியவரின் ஆப்ததமத்வம் ஆகும். அதாவது, அந்த நூலை இயற்றியவர் உண்மையான பொருளை உள்ளது உள்ளபடி அறியவல்ல வலிமையையும், அப்படியாகத் தான் உணர்ந்தவற்றை உள்ளது உள்ளபடி மற்றவர்களுக்குப் புரியவைக்கும் ஆற்றலையும் கொண்டவராக உள்ள தன்மையே கர்த்துராப்ததமத்வம் எனப்படுகிறது. இந்த விஷயம் உய்யகொண்டாராலும், பராசரபட்டராலும் கூறப்பட்டதைக் காண்போம்: • தத்வநிர்ணயம் என்பதில் உய்யக்கொண்டார் - அதேதிஹாஸ புராணயோரிதிஹாஸா பலீயாம்ஸ: குத: தேஷாம் பரிக்ரஹாதிரேகாத், ஸர்வத்ர மாத்யஸ்த்யேந பூதார்த்த ப்ரதீதே: வசநஸௌஷ்டவேந கர்த்துராப்த தமத்வாவகதேச்ச - அதன் பின்னர் இதிகாசம் மற்றும் புராணம் ஆகிய இரண்டினுள் இதிகாசமே சிறந்து விளங்குகிறது, ஏன்? அவை மற்ற நூல்களில் ப்ரமாணங்களாக எடுத்தாளப்படுவதாலும், லௌகிகம் மற்றும் வைதிக விஷயங்களில் முன்னர் நடந்த சம்பவங்களை நடுநிலைமையுடன் கூறுவதாலும், முன்னுக்குப் பின் முரணான வரிகள் இல்லாமல் உள்ளதாலும், அவற்றை இயற்றியவர்கள் நம்பத்தகுந்தவர்கள் என்பதாலும் – என்று தொடங்கியுள்ளார். இதனால் மற்ற நூல்களில் எடுத்துக் கூறப்படுதல் போன்ற தன்மைகளால் இதிகாசங்களுக்கு புராணங்களைக் காட்டிலும் உள்ள சிறப்பை விளக்கினார். • ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் பட்டர் - மஹாபாரதம் ஹி பரிக்ரஹ விசேஷாவஸிதம் – புராணங்களைக் காட்டிலும் மஹாபாரதம் அதிகமாகப் பேசப்படுகிறது - என்று தொடங்கினார். பின்னர் - தர்மேசார்த்தேச காமேச மோக்ஷேச பரதர்ஷப யதிஹாஸ்தி ததந்யத்ர யந் நேஹாஸ்தி ந தத் க்வசித்; இதி லௌகிக வைதிக ஸகலார்த்த நிர்ணயாதி க்ருதத்வேந க்வசிதபி அபக்ஷபாதித்வாச்ச புராணேப்யோ பலவத்தரம் - பரதவம்சத்தில் சிறந்தவனே! இந்த மஹாபாரதத்தில் காணப்படும் அறம், பொருள், வீடு, இன்பம் (தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்) என்பதான பலவும் மற்ற எதிலும் காணப்படவில்லை; இதில் இல்லாதவை என்பது ஏதும் இல்லை; இதில் இல்லாத ஒன்று உள்ளது என்றால் அது மற்ற நூல்களிலும் இருப்பதில்லை எனலாம்; வேதங்களின் ஆழ்பொருள், மற்ற நூல்களின் ஆழ்பொருள் என்று பலவற்றையும் உணர்வதற்காகவே மஹாபாரதம் செய்யப்பட்டது; ஆகவே இது எந்த ஓர் இடத்திலும் பாரபட்சமாகக் கூறுவதில்லை; எனவே இது புராணங்களைக் காட்டிலும் உயர்ந்த ப்ரமாணம் ஆகும் - என்றார். ஆக நூல்களில் பரவலாக எடுத்துக் கூறப்படுவதாலும், நடுநிலைமை தவறாத காரணத்தாலும் இதிஹாசங்களைக் காட்டிலும் புராணங்களுக்கு உள்ள மேன்மையைக் கூறினார்.