Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 2)

முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்

ஸ்ம்ருதியாலே பூர்வபாகத்திலர்த்தமறுதியிடக்கடவது; மற்றையிரண்டாலும் உத்தர பாகத்திலர்த்தமறுதியிடக்கடவது.

– இவற்றிலெத்தாலே எந்தபாகத்திலர்த்தம் அறுதியிடக்கடவதென்னவருளிச் செய்கிறார் ஸ்ம்ருதியாலேயென்று தொடங்கி.

– இவற்றுள் (ஸ்ம்ருதி, இதிகாசம், புராணம் போன்றவை) எதன் மூலம் எந்தப் பாகத்தில் (உத்தர பாகம், பூர்வ பாகம்) பொருளை நிச்சயம் செய்யவேண்டும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

உபப்ரும்ஹ்யமான வேதத்துக்கு, ப்ரதிபாத்யார்த்த விசேஷத்தாலேயிறே பாகபேதமுண்டாய்த்து; அப்படியே உபப்ர்ம்ஹணங்களுக்கும் ப்ரதிபாத்யவிசேஷத்தாலே பேதமுண்டிறே, அதில் ஸ்ம்ருதிகள் பூர்வபாகோபப்ர்ம்ஹணங்களாகவும் இதிஹாஸாதிகள் உத்தரபாகோபப்ர்ம்ஹணங்களாகவும் நிர்மிதங்களாகையாலே, தத்ததுபப்ர்ம்ஹணங் களைக் கொண்டே தத்தத்பாகார்த்த நிச்சயம் பண்ணவேண்டியிறேயிருப்பது. அத்தைப் பற்ற ஆசார வ்யவஹார ப்ராயச்சித்தாதிகளுக்கு ப்ரதிபாதகங்களான இதிஹாஸ புராணங்களாகிற மற்றையிரண்டாலும், ப்ரஹ்ம ப்ரதிபாதகமான உத்தரபாகத்திலர்த்த நிச்சயம் பண்ணக் கடவதென்கிறார். இப்படி உபயவிதமான உபப்ர்ம்ஹணங்களாலே உபயபாகார்த்தத்தையும் அறுதியிடுகையாவது - அநதீதசாகாந்தரார்த்தங்களுக்கும் ப்ரதிபாதகங்களானவிவற்றாலே, அதீதசாகார்த்தங்களை அபேக்ஷித விசேஷங்களோடே கூட நிச்சயிக்கை. ஸ்ம்ருதிகள் தன்னிலே ப்ரஹ்மப்ரதிபாதநமும், இதிஹாஸாதிகளிலே கர்மப்ரதிபாதநமுமுண்டாயிருந்ததேயாகிலும், ஸ்ம்ருதிகளில் ப்ரஹ்மப்ரதிபாதநம் கர்மங்களினுடைய ததாராதந ரூபத்வ ஜ்ஞாபநார்த்தமாகவும், இதிஹாஸ புராணங்களில் கர்மப்ரதிபாதநம் கர்மங்களினுடைய உபாஸநாங்கத்வ ஜ்ஞாபநார்த்தமாகவுமாகையாலே இப்படி வகையிட்டுச் சொல்லக் குறையில்லை. ப்ராயேண பூர்வபாகார்த்த பூரணம் தர்மசாஸ்த்ரத: இதிஹாஸ புராணாப்யாம் வேதாந்தார்த்த: ப்ரகாச்யதே என்னக் கடவதிறே.

பலவற்றாலும் கூறப்படும் வேதங்களுக்கு, அந்த வேதங்களில் கூறப்பட்ட ஆழ்பொருளின் விசேஷத்தால் அல்லவோ இரண்டு பாகமாகப் பிரியும் வேறுபாடு உண்டானது? ஆகவே, இது போன்று உபப்ரமாணங்களாகிற இதிகாசம் போன்றவற்றுக்கும் பொருள் விசேஷம் காரணமாக வேறுபாடு ஏற்படலாம் அல்லவோ? இவற்றில் ஸ்ம்ருதிகள் அனைத்தும் வேதங்களின் பூர்வபாகத்திற்கான உபப்ரமாணம் என்னும்படியும், இதிகாசம் மற்றும் புராணங்கள் அனைத்தும் வேதங்களின் உத்தரபாகத்திற்கு உபப்ரமாணங்கள் என்னும்படியும் செய்யப்பட்டன. ஆகவே வேதங்களின் அந்தந்த பாகங்களில் கூறப்பட்ட பொருளை, அந்தந்த பாகங்களுக்காக இருக்கின்ற உபப்ரமாணம் மூலமே நிச்சயம் செய்யவேண்டும். இவற்றில் – ஒழுக்கம் (ஆசாரம்), பிராயச்சித்தம் போன்றவற்றைக் கூறுகின்ற தர்மசாஸ்த்ரங்கள் மூலமாக, வேதங்களில் கர்மங்களைப் பற்றிக் கூறுகின்ற பூர்வபாகத்தின் அர்த்தத்தை நிச்சயம் செய்யவேண்டும். மேலும் பகவானின் ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி, செயல்கள் ஆகியவற்றை உரைக்கின்ற இதிகாசம் மற்றும் புராணம் ஆகிய இரண்டின் மூலம், இவற்றைப் பற்றிக் கூறுகின்ற உத்தரபாகத்தின் ஆழ்பொருளை அறிய வேண்டும். இப்படியாக இரண்டுவிதமான உபப்ரமாணங்கள் மூலமாக வேதங்களின் இரண்டு பாகங்களின் கூறப்படுகின்ற ஆழ்பொருளை உறுதி செய்தல் என்பது - அத்யயனம் செய்யப்படாத மற்ற சாகைகளில் உள்ள கருத்துகளுக்கு விளக்கம் அளிக்கவல்ல இவற்றின் மூலமாக, அத்யயனம் செய்யப்படும் சாகைகளின் ஆழ்பொருளை அவற்றின் விசேஷங்களுடன் நிச்சயம் செய்தல் என்பதாகும். என்றாலும் ஸ்ம்ருதிகளில் பரம்பொருளைப் பற்றியும், இதிகாசம் மற்றும் புராணங்களில் கர்மங்களைப் பற்றியும் கூறும் பகுதிகள் உள்ளதைக் காணலாம் (அதாவது மேலே உள்ள கருத்தான ஸ்ம்ருதிகள் கர்மங்களைப் பற்றியும், இதிகாசபுராணங்கள் பரம்பொருளைப் பற்றியும் கூறுகின்ற என்பதற்கு மாறாக). இது ஏன் என்பதைக் காண்போம். கர்மங்கள் என்பவை அவனது ஆராதனை வடிவமாகவே உள்ளன என்பதை உணர்த்துவதற்காகவே, ஸ்ம்ருதிகளில் பரம்பொருளைப் பற்றிக் கூறப்பட்டன. எனவே இப்படியாகப் பிரித்துக் கூறுவதில் எந்தவிதமான குற்றமும் இல்லை. பார்ஹஸ்த்ய ஸ்ம்ருதி - ப்ராயேண பூர்வபாகார்த்த பூரணம் தர்மசாஸ்த்ரத: இதிஹாஸ புராணாப்யாம் வேதாந்தார்த்த: ப்ரகாச்யதே - வேதங்களின் பூர்வபாகம் என்ன கூறுகிறது என்பதை ஸ்ம்ருதிகள் கொண்டு நிச்சயம் செய்தல் வேண்டும்; அவற்றின் உத்தரபாகத்தின் ஆழ்பொருளை இதிகாச புராணங்கள் கொண்டு அறிதல் வேண்டும் - என்றது காண்க.