Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 1)

முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்

வேதார்த்தமறுதியிடுவது ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களாலே.

ப்ரமாதாவானவன் ப்ரமாணத்தைக் கொண்டிறே ப்ரமேயத்தை நிச்சயிப்பது. அந்த ப்ரமாணந்தான், ப்ரத்யக்ஷாதி ரூபேண அஷ்ட விதமாகச் சொல்லுவர்கள். அதில் “ப்ரத்யக்ஷமேகஞ்சார்வாகா:” இத்யாதியில் சொல்லுகிற பாஹ்யகுத்ருஷ்டிகளைப் போலன்றியே, ப்ரத்யக்ஷாநுமாநாகமங்கள் மூன்றையும் ப்ரமாணதயா அங்கீகரித்து, உபமாநாதி பஞ்சகத்தையும் அவற்றிலே யதாயோகமந்தர்பவிப்பித்து, அவற்றில் ப்ரத்யக்ஷம் இந்த்ரியக்ரஹ்ணயோக்யங்களிலும், அநுமாநம் ப்ரத்யக்ஷ ஸித்த வ்யாப்தி க்ரஹ்ணாநுரூபமான கதிபயபரோக்ஷார்த்தங்களிலும் ப்ரமாணமாகவும், அதீந்த்ரியார் தத்த்தில் சாஸ்த்ரமே ப்ரமாணமாகவும் நிஷ்கர்ஷித்து, அது தன்னிலும் “வேதே கர்த்ராத்யபாவாத் பலவதி ஹி நயைஸ் த்வந்முகே நீயமாநே தந்மூலத்வேந மாநம் ததிதரதகிலம் ஜாயதே” என்கிறபடியே ஸ்வப்ராமாண்யத்துக்கு மூலஸாபேக்ஷமான பௌருஷேய சாஸ்த்ரத்தைப் பற்ற, ஸ்வத: ப்ராமாண்யமுடைய வேதமே ப்ரபல ப்ரமாணமாகவும் அறுதியிட்டிருக்கும் பரமவைதிகராகையாலே, இப்ப்ரபந்தத்தில் தாமருளிச் செய்கிற அர்த்தங்களெல்லாம் வேதப்ரதிபாத்யமென்னுமிடம் தோற்றமுதலிலே வேதத்தை ப்ரமாணமாகவங்கீகரித்துக் கொண்டு ததர்த்தநிர்ணயம் பண்ணும் க்ரமத்தை இவ்வாக்யத்தாலேயருளிச் செய்கிறார்.

உண்மையான ஞானத்தைத் தேடும் ஒருவன், தகுந்த ப்ரமாணம் கொண்டு அல்லவோ ப்ரமேயத்தை அறிவான் (ப்ரமாணம் = உண்மையை அறிந்து கொள்வதற்கான சாதனங்கள், ப்ரமேயம் = ப்ரமாணத்தால் அறியப்படும் பொருள்)? இத்தகைய ப்ரமாணம் என்பதை ப்ரத்யக்ஷம் தொடக்கமாக எட்டுவிதமாகப் பிரித்துக் கூறுவார்கள் (இவை ப்ரத்யக்ஷம், அனுமானம், ஆகமம், உபமாநம், அருத்தாபத்தி, அபாவம், சம்பவம் மற்றும் ஜதிஹ்யம்). இதில் வேதங்களின் கொள்கைகளுக்குப் புறம்பாக உள்ளவர்களும் (பாஹ்யர்), வேதவரிகளுக்குத் தவறான பொருள் உரைப்பவர்களும் (குத்ருஷ்டி), ப்ரத்யக்ஷமேகஞ்சார்வாகா: – ப்ரத்யக்ஷத்தை மட்டுமே உலோகாயதர்கள் ஏற்கின்றனர் என்பதற்கு ஏற்ப உள்ளனர். ஆனால் இந்த நூல் ஆசிரியரான ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் அப்படி அல்ல (ஸ்வாமி எப்படி ஆராய்கிறார் என்பதை அடுத்துள்ள பல வரிகளில் கூறுகிறார்). ப்ரத்யக்ஷம், அநுமானம் மற்றும் ஆகமம் ஆகிய மூன்றையும் ப்ரமாணங்களாக ஏற்றார். மற்ற ஐந்து ப்ரமாணங்களையும் இந்த முன்றிலேயே அடக்கினார் (அநுமானத்தில் உபமானம், அருத்தாபத்தி, சம்பவம்; ப்ரத்யக்ஷத்தில் அபாவம்; ஆகமத்தில் ஐதிஹ்யம் என அடக்கினார்). இவற்றில் ப்ரத்யக்ஷம் என்பதை இந்த்ரியங்களால் அறிந்து உணரக்கூடிய பொருள்களுடன் தொடர்புபடுத்தியும்; அனுமானம் என்பதை இந்த்ரியங்களால் பெறப்படும் ஞானம் மூலமாக, ஆனால் அந்த இந்த்ரியங்களால் நேரடியாக அறிய இயலாத பொருள்களுடன் தொடர்புபடுத்தியும்; இந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்கு சாஸ்த்ரமே ப்ரமாணம் என்றும் உறுதிபட உரைத்தார். இப்படிப்பட்ட சாஸ்த்ரங்கள் கூட, தாங்கள் ப்ரமாணமாக நிலை நிற்பதற்கு வேறு ஒரு மூலப்ரமாணத்தை நாடுகின்றன என்பதை ஸ்ரீரங்கராஜஸ்தவம் உத்தரசதகம் (14) - வேதே கர்த்ராத்யபாவாத் பலவதி ஹி நயைஸ் த்வந்முகே நீயமாநே தந்மூலத்வேந மாநம் ததிதரதகிலம் ஜாயதே - திருவரங்கத்தில் கண்வளர்பவனே! யாராலும் இயற்றப்படாதது என்பதால் எந்தவிதமான தோஷங்களும் அற்றதான வேதங்கள், பலவிதமான ந்யாயங்களால் உன்னையே பரமாகக் கொண்டுள்ளன - என்பதன் மூலம் அறியலாம். மனிதர்களால் இயற்றப்பட்ட மற்ற சாஸ்த்ரங்களான இதிஹாஸம் போன்றவை போல் அல்லாமல், வேதங்கள் தங்களுக்கு வேறு எதுவும் ப்ரமாணமாக இருக்கவேண்டிய அவசியம் அல்லாமல், தாங்களே தங்களுக்கு ப்ரமாணமாக உள்ள தன்மை கொண்டுள்ளதால், அத்தகைய வேதங்களே அனைத்து விதமான ப்ரமாணம் என்று உறுதிபடக் கூறினார். இப்படிப்பட்ட வைதிகர் என்பதால், இந்த நூலில் தாம் கூறுபவை அனைத்தும் வேதங்களால் முழங்கப்பட்டவையே என்று கூற எண்ணினார். ஆக முதலில் வேதங்களை ப்ரமாணமாக உரைத்து, அப்படிப்பட்ட வேதங்களின் ஆழ்பொருளை உறுதிபட உரைக்கும் முறையை இந்தச் சூர்ணையில் அருளிச் செய்கிறார்.

அகிலஹேய ப்ரத்யதீகத்வ கல்யாணைகதாநத்வங்களாலே ஈச்வரன் அகில ப்ரமேய விலக்ஷணனாயிருக்குமாபோலேயிறே அபௌருஷேயத்வ நித்யத்வங்களாலே வேதம் அகில ப்ரமாணவிலக்ஷணமாயிருக்கும்படி; வேதத்தினுடைய அபௌருஷேயத்வம் “வாசா விரூப நித்யாயா” இத்யாதி ச்ருதியாலும், “அநாதி நிதநாஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா, ஆதௌ வேதமயீ திவ்யா யதஸ் ஸர்வா ப்ரஸூதய:” இத்யாதி ஸ்ம்ருதியாலும் ப்ரதிபாதிக்கப்படா நின்றதிறே. இந்த ச்ருதிஸ்ம்ருதிகள் வேதநித்யத்வத்தைச் சொல்லுகையாலே, தத்பௌருஷேயத்வமும் ஸித்தமிறே. அதஏவ ப்ரமவிப்ரலம்ப ப்ரமாதாசக்திரூபதோஷ சதுஷ்டய ஸம்பாவநாகந்த ரஹிதமாயிருக்கும் பௌருஷேயத்வமிறே அவை வருகைக்கு மூலம். இப்படியிருக்கையாலே இதுக்கு மேற்பட்டதொரு சாஸ்த்ரமில்லை. ஆகையாலேயிறே ”ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யமுத் த்ருத்ய புஜமுச்யதே, வேதாத்சாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்” என்று ஐதிஹாஸிகராலும் பௌராணிகராலும் ஏககண்டமாகச் சொல்லப்பட்டது. இதினேற்ற மெல்லாம் திருவுள்ளம் பற்றியிறே “சுடர்மிகு சுருதி” யென்று நம்மாழ்வாரருளிச் செய்தது. அவரைப் பின் செல்லுமவராய் அபியுக்தாக்ரேஸரரான பட்டரும் “ஆதௌ வேதா: ப்ரமாணம்” என்றாரிறே. இத்தை வேதமென்கிறது, ”வேதயதீதி வேத:” என்கிற வ்யுத்பக்தியாலே புபுத்ஸுக்களாய் ஆஸ்திகராயிருப்பார்க்கு ஸ்வார்த்த ப்ரகாசமாயிருக்கையாலே. இப்படியிருந்துள்ள வேதந்தான், ப்ரதிபாத்யார்த்த விசேஷத்தாலே பாகத்வயாத் மகமாயிருக்கும். அத்தை இவ்விடத்தில் உபயபாக ஸாமாந்யவாசியான வேதசப்தத்தாலே ஸாகல்யேந சொல்லுகிறது. அர்த்தமென்று பூர்வபாக ப்ரதிபாத்யமான கர்மத்தையும் உத்தரபாக ப்ரதிபாத்யமான ப்ரஹ்மத்தையுஞ் சொல்லுகிறது. பூர்வோத்தர மீமாம்ஸைகளில் “அதாதோ தர்மஜிஜ்ஞாஸா” என்றும், “அதாதோ ப்ரஹ்மஜிஜ்ஞாஸா” என்றுமிறே உபக்ரமித்தது; அகையாலே, பாகத்வயத்துக்கும் ப்ரதிபாத்யம் ஆராதநரூபமான கர்மமும் ஆராத்யவஸ்துவான ப்ரஹ்மமுமிறே. கர்மத்தினுடைய பகவதாராதநத்வம் “ஸ ஆத்மா அங்காந்யந்யா தேவதா:” என்று அக்நீந்த்ராதி ஸகல தேவதைகளும் பகவத் சரீரபூதராக சாஸ்த்ரஞ் சொல்லுகையாலே ஸித்தமிறே. இவ்வாகார மறியாதார் அவ்வோ தேவதா மாத்ரங்களையுத்தேசித்துப் பண்ணும் கர்மமும் வஸ்துகத்யா பாகவதாராதநமாய்த் தலைக்கட்டும். “யே யஜந்தி பித்ரூந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாச்நாந் ஸர்வபூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே” என்னக்கடவதிறே. ““யேப்யந்ய தேவதா பக்தா யஜந்தே ச்ரத்தயாந்விதா:, தேபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம்” என்று தானேயருளிச் செய்தானிறே. ஆகவே எல்லாப்படியாலும் கர்மத்துக்கு பகவதாராதநத்வம் ஸித்தமிறே. இப்படி ஆராதநரூபமான கர்மமும் ஆராத்ய வஸ்துவான ப்ரஹ்மமுமாகிற அர்த்த த்வயத்தையுமறியவே, த்யாஜ்யோபாதேயரூப ஸகலார்த்தங்களையுமறியலாயிருக்கையலே, பாகத்வய ப்ரதிபாத்யம் கர்மப்ரஹ்மங்க ளென்கிறது. எங்ஙனேயென்னில், கர்மந்தான் புபுக்ஷுக்களுக்கு ஐச்வர்ய ஸாதநமாய் முமுக்ஷுக்களில் பக்தி நிஷ்ட்டர்க்கு உபாஸநாங்கமாய், ப்ரபந்நர்க்கு கைங்கர்யரூப மாயிறேயிருப்பது. இப்படியிருந்துள்ள கர்மத்தின் வேஷத்தை உள்ளபடியறியவே, அநந்த ஸ்திரபல ப்ரஹ்மப்ராப்திகாமரான ஸாதகர்க்கு இது உபாஸநாங்கத்வேந உபாதேயம், ஐச்வர்யார்த்திகளுக்குபாதேயமானவாகாரத்தால் த்யாஜ்யம் என்றறியலாம். அநந்ய ஸாதநர்க்கு இது கொண்டு ஸாதிக்கவேண்டுவதொன்றில்லாமையாலே கைங்கர்ய ரூபேணோபாதேயம், உபாஸகர்க்கு உபாதேயமான ஆகாரத்தாலே த்யாஜ்யம் என்றறியலாம். ப்ரஹ்மத்தையறியும்போது, தத்ஸ்வரூபரூப குண விபூதிகளை யெல்லாமறிய வேண்டுகையாலே விபூதிபூத சேதநாசேதநங்களின் ஸ்வரூபமறியலாம். அதில் ஜ்ஞாநாநந்த லக்ஷணமான சேதநஸ்வரூப வைலக்ஷண்யமடியாக வருகிறதா கையாலே கைவல்யத்தின் வேஷமுமறியலாம். ப்ரஹ்மத்தினுடைய சேஷித்வ ப்ராப்யத்வங்களையறியவே ததநுபாவாதிகள் புருஷார்த்தமென்றறியலாம். ததுபாஸ்யத்வ சரண்யத்வங்களையறியவே தத்ப்ராப்தி ஸாதநவிசேஷங்களையறியலாம். ப்ரஹ்மத்தினுடைய நிரதிசய போக்யக்தையையும் அநந்ய ஸாத்யத்வத்தையும் தத்ப்ரகாரதயா பரதந்த்ரமான ஸ்வஸ்வரூபத்தையும் தர்சிக்கவே ஸாத்யாந்தர ஸாதநாந்தரங்களினுடைய த்யாஜ்யத்வத்தையும் ஸுஸ்பஷ்டமாகவறியலாம். ஆக இப்படியிருக்கையாலே பாகத்வயத்துக்கும் ப்ரதிபாத்யம் ஆராதந ஸ்வரூபமான கர்மமும் ஆராத்ய வஸ்துவான ப்ரஹ்மமுனென்னக் குறையில்லை. “த்வதர்ச்சாவிதிமுபரி பரிக்ஷீயதே பூர்வபாக: ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குணவிபவ பரிஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ” என்றிறே பட்டரருளிச் செய்தது. இப்படி பாகத்வய ப்ரதிபாத்யங்களான இவ்வர்த்தங்களை அறுதியிடுகையாவது, கர்மத்தினுடைய ஸ்வரூபாங்க பலாதிகளையும் ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூபரூபகுண விபூதியாதிகளையும் ஸம்சய விபர்யயமற நிர்ணயிக்கை. அதுதான் செய்யும்போது ஸகலசாகாப்ரத்யய ந்யாயத் தாலும், ஸகல வேதாந்த ப்ரத்ய்ய ந்யாயத்தாலும் செய்யவேண்டும். அதில் ஸகல சாகாப்ரத்ய்ய ந்யாயமாவது :- ஒரு வாக்யத்திலே ஓரர்த்தத்தைச் சொன்னால், அதினுடைய அங்கோபாங்காதிகள் நேராகவறிகைக்காக, சாகாந்தரங்களெல்லாத்திலும் ஸஞ்சரித்து அவற்றில் சொல்லுகிறவர்த்தங்களிலும் ஜ்ஞாநம் பிறந்து, அவ்வர்த்தங்களுக்கு அந்யோந்ய விரோதங்களையும் சமிப்பித்து, தனக்கபிமதமான அங்கியோடே சேருமவற்றைச் சேர்க்கை. ஸகல வேதாந்த ப்ரத்ய்ய ந்யாயமாவது – ஒரு வேதாந்தத்திலே ஒரு வாக்யம் ஓரர்த்தத்தைச் சொன்னால், அல்லாத வேதாந்தங்களிலும் ஸஞ்சரித்து, அவற்றில் சொல்லுகிறவர்த்தங்களுக்கு அந்யோந்ய விரோதம் பிறவாதபடி விஷயவிபாகம் பண்ணி, தனக்கபிமதமானவர்த்தங்களோடே சேறுமவற்றைச் சேர்க்கை. இதுதான் மஹாமதிகளான மஹர்ஹிகளுக்கொழிய, அல்லாதார்க்குச் செய்யப்போகாமையாலே உபப்ரும்ஹணங்கள் கொண்டே நிர்ணயிக்கவேணும். ஆகையாலே தந்நிர்ணாயகங்க ளையருளிச் செய்கிறார் “ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களாலே” என்று. ஸ்ம்ருதிகளாவன – ஆப்தரான மந்வத்ரி விஷ்ணு ஹாரீத யாஜ்ஞவல்க்யாதிகளாலே அபிஹிதங்களான தர்ம சாஸ்த்ரங்கள். இதிஹாஸங்களாவன – புராவ்ருத்த ப்ரதிபாதகங்களாக ஸ்ரீராமாயண மஹாபாரதாதிகள். புராணங்களாவன – ஸர்காதிபஞ்சலக்ஷணோபேதங்களான ப்ராஹ்ம பாத்ம வைஷ்ணவாதிகள். வேதார்த்தமறுதியிருடுவது இவற்றாலேயென்று இப்படி நியமேநவருளிச்செய்தது, இவற்றையொழிய ஸ்வபுத்த்யா நிர்ணயிருக்குமளவில், அல்ப ச்ருதனானவனுக்கு விப்ரதிபத்தி வருமாகையாலே வேதகாலுஷ்ய ஹேதுவாமென்று நினைத்து. இந்நியமந்தான் ”இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுபப்ரும்ஹயேத், பிபேத்யல்பச்ருதாத் வேதோ மாமயம் ப்ரதரிஷ்யதி” என்று பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதியிலும் மஹாபாரதத்திலும் சொல்லப்பட்டதிறே. இவ்வுபக்ரமவாக்ய ப்ரக்ரியையாலே, புருஷகார வைபவம் தொடங்கி ஆசார்யாபிமாந பர்யந்தமாக இப்ப்ரபந்தத்திலிவரருளிச் செய்கிற வேதார்த்தங்களெல்லாம் உபப்ர்ம்ஹணங்கள் கொண்டே நிச்சயித்தருளிச் செய்கிறாரென்னுமிடம் தோற்றுகிறது. அதுதான் தத்ததர்த்தங்களருளிச் செய்கிற ஸ்தலங்களிலே ஸம்ப்ரதிபந்தம். ஆக இவ்வாக்யத்தால், ஸகல ப்ரமாணங்களிலும் வேதமே ப்ரபலப்ரமாணமென்னுமிடமும், ததர்த்த நிர்ணயம் பண்ணும் க்ரமமுஞ் சொல்லிற்றாய்த்து.

அகில ஹேய ப்ரத்யநீகத்வம் (தான் குற்றம் இல்லாமல் இருப்பதுடன் அல்லாமல், தன்னை அண்டியவர்களின் குற்றங்களையும் நீக்கும் தன்மை), கல்யாணைகதாநத்வம் (தானும் ஆனந்தமாக இருந்து, மற்றவர்களையும் ஆனந்தமாக வைத்தல்) என்னும் இரண்டு தன்மைகள் மூலம் ஸர்வேச்வரன் அனைத்துவிதமான பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டவனாக உள்ளான். இதே போன்று, மனிதர்களால் இயற்றப்படாத தன்மை, என்றும் நிலையாக உள்ள தன்மை ஆகிய இரண்டாலும் மற்ற ப்ரமாணங்களைக் காட்டிலும் வேதங்கள் வேறுபட்டதாகவே உள்ளன. வேதத்தின் இந்தத் தன்மைகள் கீழே உள்ள வரிகள் மூலம்உணர்த்தப்படுகின்றன: • வாசா விரூப நித்யயா - என்றும் உள்ள வேதங்களால் போற்றப்படும் அழகுள்ளவனே! • அநாதி நிதநாஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா, ஆதௌ வேதமயீ திவ்யா யதஸ் ஸர்வா ப்ரஸூதய: - எந்த வேதத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்தும் படைக்கப்படுகிறதோ, தோற்றமும் முடிவும் அற்றதாக உள்ளதோ, அந்த வேதங்கள் திவ்யமான வாக்குகளாக உள்ளன. இவை ஸர்வேச்வரனால் வெளிப்பட்டன. மேலே உள்ள வரிகள், வேதங்களின் நித்யமாக உள்ள தன்மையை உணர்த்துவதால், அவை மனிதர்களால் செய்யப்படாத தன்மையையும் உணர்த்துவதாகவே உள்ளன. மனிதர்களால் செய்யப்படாத காரணத்தினால் வேதங்கள் மயக்கம் ஏற்படுத்தும் தன்மை (பிரமம்), வஞ்சனையான கருத்து (விப்ரலம்பம்), குறிக்கோள் இல்லாமல் ஏதோ கூறுதல் (பிரமாதம்) மற்றும் காரணங்களின் வலிமை இல்லாத நிலை (அசக்தி) ஆகிய தோஷங்கள் சிறிதும் இல்லாதபடி உள்ளன. இவை அனைத்தும் மனிதர்களால் செய்யப்படும் பொருள்களுக்கு அல்லவோ உண்டாகும் தோஷங்கள்? இந்தக் குற்றங்கள் இல்லாத காரணத்தினால் இவற்றுக்கு மேலான சாஸ்த்ரம் ஏதும் இல்லை. இதனால்தான் இதிஹாஸம் மற்றும் புராணங்களை நன்றாக அறிந்தவர்களால் ஒரே குரலில் - ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யமுத் த்ருத்ய புஜமுச்யதே, வேதாத்சாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் – உண்மை, உண்மை, கைகளை உயர்த்திக் கூறுகிறேன், வேதங்களைக் காட்டிலும் மேலான சாஸ்த்ரம் இல்லை, கேசவனை விட உயர்ந்த தெய்வம் இல்லை - என்று கூறப்பட்டது. வேதங்களின் மேன்மையை உணர்ந்த காரணத்தால் அல்லவோ நம்மாழ்வார் – சுடர்மிகு சுருதி – என்று அருளிச்செய்தார்? வேதங்களே சிறந்த ப்ரமாணங்கள் என்று ஆராய்பவர்கள் வரிசையில் தலைவராக உள்ள ஸ்வாமி பராசரபட்டரால் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் (2-19) - ஆதௌ வேதா: ப்ரமாணம் – முதலில் வேதங்கள் ப்ரமாணம் – என்று கூறப்பட்டது காண்க. – வேதங்களை வேதம் என்று பெயரிட்டது ஏன் என்றால், வேதயதீதி வேத: என்பதற்கு ஏற்ப, தங்களை அறிந்து கொள்ள எண்ணுபவர்களுக்குத் தங்களைத் தாங்களே அவை காண்பித்துக் கொடுப்பதால் ஆகும். இப்படிப்பட்ட வேதங்கள், தங்களிடம் கூறப்பட்டுள்ள பொருள் மேன்மை காரணமாக, இரண்டு பாகங்கள் கொண்டவையாக உள்ளன. இப்படிப்பட்ட இரண்டு பாகங்களையும், இங்கு பொதுவாக வேதம் என்ற பதம் குறிப்பிடுகிறது. “அர்த்தம்” என்பது - முதல் பாகத்தில் கூறப்பட்டுள்ள கர்மங்கள், பின் பாகத்தில் கூறப்பட்டுள்ள பரப்ரஹ்மம் - என்பதைக் கூறுகிறது. பூர்வ மீமாம்ஸையானது - அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா - வேதங்களை ஓதிய பின்னர், அந்தக் காரணத்தால் தர்மத்தை அறிய ஆவல் கொள்ளவேண்டும் – என்று தொடங்கியது. உத்தரமீமாம்ஸையானது – அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா – தர்மங்களை அறிந்த பின்னர், அந்தக் காரணத்தால் ப்ரஹ்மத்தை அறிய ஆவல் கொள்ளவேண்டும் – என்றது. ஆக இந்த இரண்டு பாகங்கள் மூலமாக - ஆராதனை செய்யும் வழி முறைகளான கர்மமும், அந்தக் கர்மங்களால் ஆராதிக்கப்படும் பரம்பொருளும் – கூறப்பட்டன. ஸ ஆத்மா அங்காந்யந்யா தேவதா - பரம்பொருளே உயிராக உள்ளது; மற்ற தேவதைகள் சரீரங்களாக உள்ளன - என்று கூறுவதன் மூலம் அக்னி, இந்த்ரன் உள்ளிட்ட அனைத்து தேவதைகளும் பகவானின் சரீரம் என்பதை உணரலாம். இதன் மூலம் கர்மங்கள் பகவானின் ஆராதனை வடிவமாக உள்ளதையும் அறியலாம். இதனை உணர்ந்தவர்களிடம் – அக்னி, இந்த்ரன் உள்ளிட்ட தேவர்களுக்குச் செய்யும் ஆராதனம் அவர்களது அந்தர்யாமியாக உள்ள பகவானுக்குச் செய்வதாகவே அமைகிறது - என்ற ஞானம் உண்டாகிறது. இதனால், கர்மங்கள் அனைத்தும் பகவத் ஆராதனம் என்ற சிந்தனை தெளிவாகவே அமைந்துவிடும். இப்படிப்பட்ட ஞானம் இல்லாதவர்கள், அந்தத் தேவதைகளைக் கருத்தில் கொண்டு செய்யும் ஆராதனைகள் அனைத்தும், அவற்றின் இயல்பு காரணமாக எம்பெருமானின் ஆராதனைகளாகவே சென்று முடிந்து விடும். தக்ஷஸ்ம்ருதி - யே யஜந்தி பித்ரூந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாச்நாந் ஸர்வபூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே - யார் ஒருவன் பித்ருக்கள், தேவர்கள், அக்னியுடன் கூடிய அந்தணர்கள் ஆகியவர்களை வணங்குகின்றானோ, அவன் அனைத்து உயிர்களின் அந்தர்யாமியாக உள்ள விஷ்ணுவையே ஆராதிப்பதாக ஆகிறது - என்றது. இதனைக் கீதையில் (9-23) - யேப்யந்ய தேவதா பக்தா யஜந்தே ச்ரத்தயாந்விதா:, தேபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம் – அர்ஜுனா! யார் ஒருவன் மற்ற தேவதைகளிடம் பக்தி கொண்டவனாக, அந்தத் தேவதைகளை ஆராதிக்கிறானோ, அவன் அதனை என்னுடைய ஆராதனம் என்று உணராதவனாக, என்னையே ஆராதிக்கிறான் - என்று தானே அருளிச்செய்தான் அல்லவோ? ஆக அனைத்துக் கர்மங்களும் பகவானின் ஆராதனை என்பது தெளிவு அல்லவோ? இப்படியாக ஆராதனை உபாயமாக உள்ள கர்மம், ஆராதிக்கப்படும் பரம்பொருள் ஆகியவை குறித்து அறிவதற்காகவும், கைவிடத்தக்கதும் ஏற்கத்தக்கதும் எவை என்று அறிவதற்காகவும், வேதங்களில் பூர்வபாகம் மற்றும் உத்தரபாகத்தால் கூறப்படுவது கர்மம் மற்றும் பரம்பொருள் என்பதை அறியவேண்டும். எப்படி? கர்மம் என்பது இன்பத்தை விரும்புவர்களுக்கு ஐச்வர்யத்தை அளிப்பதாகவும், முமுக்ஷுக்களில் பக்தியில் நின்றவர்களுக்கு பக்தியின் அங்கமாகவும், முமுக்ஷுக்களில் ப்ரபந்நர்களுக்கு பகவத் கைங்கர்யத்தை அளிப்பதாகவும் உள்ளது. இப்படியாக உள்ள கர்மத்தின் தனித்தன்மையை அறிவதற்கு - அளவற்றதாகவும், அழிவற்றதாகவும், பலமாக உள்ளதாகவும் இருக்கும் பரம்பொருளை அடைய விரும்பும் பக்தி நிஷ்டர்களுக்குக் கர்மம் என்பது பக்திக்கு அங்கமாக இயற்ற வேண்டியதாக இருப்பதாகும்; செல்வத்தை விரும்புகிறவர்கள் செல்வத்தை நோக்கினால் என்ன செய்கிறார்கள் என்பதைக் காண நேர்ந்தால், அந்தக் கர்மங்கள் கைவிடத்தக்கவை எவை என்று உணர்த்துவதாக இருக்கும் (அதாவது எப்படிப்பட்ட கர்மம் ஏற்கத்தக்கது, எது விடத்தக்கது என்றார்). ஸித்தோபாயமான எம்பெருமானிடம் மட்டுமே நிலை நிற்பவர்களுக்கு, இப்படிபட்ட கர்மங்கள் மூலம் அடையவேண்டியது ஏதும் இல்லாமையால் கர்மங்கள் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கைங்கர்ய வடிவமாக இருக்கும்; ஆனால் பக்தியில் நிற்பவர்கள் செய்கின்ற கர்மங்கள், இவர்களுக்குக் (ப்ரபந்தர்களுக்கு) கைவிடத்தக்கதாக இருக்கும். பரம்பொருளைப் பற்றி அறிந்து கொள்ளும்போது, அவனது ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதிகள் (அவனால் நியமிக்கப்படும் அனைத்தும்) ஆகியவற்றை அறியவேண்டும். ஆகவே அப்போது அவனது விபூதிகளாக உள்ள சேதனம் மற்றும் அசேதனம் ஆகியவற்றை அறியலாம். ஞானம் மற்றும் ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாகவே உள்ள சேதனங்களின் ஸ்வரூப ஞானம் அப்போது உண்டாவதால், ஆத்ம அனுபவம் உள்ளிட்ட கைங்கர்யங்களின் தன்மைகளை அப்போது அறியலாம். பரம்பொருளின் சேஷித்வத்தை (எஜமானத்தன்மை) அறிவது என்பதே அவனுக்குச் செய்யும் கைங்கர்யம் மூலம் கிட்டும் புருஷார்த்தம் என்றும், அவனது ப்ராப்யத்தை அறிவது என்பதே அவனை அனுபவிக்கின்ற அனுபவம் மூலம் கிட்டும் புருஷார்த்தம் என்றும் அறியவேண்டும் (ப்ராப்யம் என்றால் அனுபவிக்கத் தக்கவனாக இருத்தல்). பரம்பொருளின் பக்திக்கு விஷயமாக உள்ள தன்மையை அறியவே (உபாஸ்யத்வம்) அவனை அடைவதற்கான சாதனமான பக்தியின் விசேஷம் என்பதை அறியவேண்டும் என்றும், பக்தி மார்க்கத்தில் இல்லாதவர்களுக்கு அவன் வேறு விதத்தில் உபாயமாக இருத்தல் என்பதை அறியவே, அவனை அடைய உதவும் ப்ரபத்தி விசேஷம் என்பதை அறியவேண்டும் என்றும் அறியலாம். பரம்பொருளின் எல்லையற்ற இனிமையை அறியும் பொருட்டு, வேறு பலன்களைக் கைவிடுவது என்பதை அறியலாம். மற்ற எதனது உதவியும் இன்றி, தான் மட்டுமே உதவும் பரம்பொருளின் தன்மை மற்றும் அவனுக்குச் சரீரமாக இருந்தபடி அவனுக்கு வசப்பட்டுள்ள ஆத்மாவின் தன்மை ஆகியற்றை அறிந்து கொள்வதற்காக, மற்ற சாதனங்களைக் கைவிடுதல் என்பதை அறிய வேண்டும். ஆக மேலே உள்ள பலவற்றாலும் நாம் அறிவது - வேதங்களின் பூர்வபாகத்தில் ஆராதனை வடிவமான கர்மம், உத்தர பாகத்தில் ஆராதிக்கப்படும் பரம்பொருள் – என்பதாகும். ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் ஸ்வாமி பராசரபட்டர் (2-19) - த்வதர்ச்சாவிதிமுபரி பரிக்ஷீயதே பூர்வபாக: ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குணவிபவ பரிஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ – ஸ்ரீரங்கநாதா! வேதங்களின் பூர்வபாகம் என்பது உன்னுடைய ஆராதனையில் முடிகிறது - என்றது காண்க. இப்படியாக இந்த இரண்டு பாகங்களிலும் கூறப்படுவது இவை இரண்டு மட்டுமே என்பதை நிச்சயம் செய்வது என்பது - கர்மத்தின் தன்மை, அங்கங்கள், பலன் போன்றவைகளையும், பரம்பொருளின் ஸ்வரூப ரூப விபூதி குணங்களையும் மிகவும் தெளிவாக சந்தேகம் இன்றி அறிதல் என்பதே ஆகும். இவ்விதம் செய்யும்போது சகலசாகா ப்ரத்யய ந்யாயம் மூலமும், சகல வேதாந்த ப்ரத்யய நியாயம் மூலமும் செய்தல் வேண்டும் (ஸகல சாகா ப்ரத்யய ந்யாயம் என்பது பூர்வபாகத்தை அறிய உதவும், ஸகல வேதாந்த ப்ரத்யய ந்யாயம் என்பது உத்தர பாகத்தை அறிய உதவும்). ஸகல சாகாப்ரத்யய ந்யாயம் என்றால் – ஒரு வேத வரியில் கூறப்பட்டுள்ள பொருளை, அதன் அங்கம் உள்ளிட்ட தன்மைகளுடன் சரியாக அறிந்து கொள்வதற்காக, அந்த வரி உள்ள சாகையை விட்டு, மற்ற சாகைகளுக்குச் சென்று, அவற்றில் அந்தப் பொருளைப் பற்றி என்ன கூறப்பட்டதோ அவற்றை அறிந்து, அவைகளுக்குள் முரண்பட்ட பொருளை விலக்கி, தனக்கு வேண்டிய பொருள் அறிதல் ஆகும். ஸகல வேதாந்த ப்ரத்யய ந்யாயம் என்றால் – ஓர் உபநிஷத்தில் கூறப்பட்டதை அறிவதற்காக மற்ற உபநிஷத்துக்களுக்குச் சென்று, அங்கு கூறப்பட்டவற்றை அறிந்து, அவற்றுக்குள் முரண்பாடு உண்டாகாமல், தனக்கு விருப்பமானவற்றை அறிதல் ஆகும். மேலே கூறிய ந்யாயங்கள் மூலமாக ஒரு பொருளைப் பற்றி நிச்சயம் செய்தல் என்பது, மிகவும் அறிந்தவர்களான மஹரிஷிகளுக்கு மட்டுமே கைகூடும். இவை மற்றவர்களால் இயலாது. அகவே மற்றவர்கள் இது போன்று செய்ய முடியாமல், வேதங்களின் பொருளை விவரிக்கும் மற்ற நூல்கள் எவை என்று – ஸ்ம்ருதி - என்பதில் அருளிச்செய்கிறார். ஸ்ம்ருதிகள் என்பவை உண்மையான பொருளை உள்ளது உள்ளபடி அறிந்தவர்களான மனு, அத்திரி, விஷ்ணு, ஹாரீதர், யாஜ்ஞவல்க்யர் போன்றவர்களால் கூறப்பட்ட தர்மசாஸ்த்ரங்கள் ஆகும் (18 ஸ்ம்ருதிகள் = மனுஸ்ம்ருதி, ப்ரகஸ்பதிஸ்ம்ருதி, தக்ஷஸ்ம்ருதி, இயமஸ்ம்ருதி, கௌதமஸ்ம்ருதி, அங்கிரஸ்ம்ருதி, யாஜ்ஞவல்க்யஸ்ம்ருதி, ப்ரதேசஸ்ம்ருதி, சாதாதபஸ்ம்ருதி, பராசரஸ்ம்ருதி, ஸம்வர்த்தஸ்ம்ருதி, உசனஸ்ம்ருதி, சங்கஸ்ம்ருதி, லிகிசஸ்ம்ருதி, அத்திரிஸ்ம்ருதி, விஷ்ணுஸ்ம்ருதி, ஆபஸ்தம்பஸ்ம்ருதி, ஹாரீதஸ்ம்ருதி). இதிஹாஸம் என்பவை முன்னர் நடந்த நிகழ்வுகளைக் கூறும் ஸ்ரீஇராமாயணம், மஹாபாரதம் போன்றவை ஆகும். புராணங்கள் என்பவை ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம், வம்சம், வம்ச சரிதம் மற்றும் மந்வந்த்ரம் ஆகியவற்றைக் கூறுவதாகும். இவை ப்ராஹ்மபுராணம், பாத்ம புராணம், விஷ்ணு புராணம் போன்றவை ஆகும் (18 புராணங்கள் – ப்ரஹ்ம, பத்ம, விஷ்ணு, பாகவத, சைவ, பவிஷ்ய, நாரதீய, மார்க்கண்டேய, ஆக்நேய, ப்ரமகைவர்த்த, லைங்க, வராக, சாந்த, வாமன, கூர்ம, மச்ச, காருட, ப்ரம்மாண்ட புராணங்கள்). இவற்றைக் கொண்டே வேதங்களின் ஆழ்பொருளை நிச்சயம் செய்யவேண்டும் என்று ஏன் அருளிச்செய்தார்? இவை இல்லை என்றால் அறிவு குறைந்தவர்கள், தங்களது குறைந்த அறிவு கொண்டு, தாங்களாகவே பொருளை நிச்சயம் செய்ய முனைந்தால், முரணான அர்த்தத்தை ஏறிட்டுகொண்டு, தவறான ஞானம் உண்டாகிவிடும். இத்தகைய விபரீதஞானம் என்பது வேதங்களின் உண்மையான பொருளை அறிந்து கொள்ளத் தடையாக மாறிவிடும் என்று கலங்கியதன் காரணமாகவே, இவற்றின் (இதிஹாசம் போன்றவை) மூலம் அறிய வேண்டும் என்று அருளிச்செய்கிறார். இந்தக் காரணத்தினால்தான் பாருஹஸ்பத்ய ஸ்ம்ருதியில் – இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுபப்ரும்ஹயேத், பிபேத்யல்பச்ருதாத் வேதோ மாமயம் ப்ரதரிஷ்யதி - குறைந்த அறிவு கொண்டவனைப் பார்த்து வேதங்கள், ”இவன் என்னை வஞ்சித்து விடுவான்”, என்று அச்சம் கொள்கின்றன; ஆகவே இதிஹாஸம் மற்றும் புராணம் மூலமே வேதங்களை அறியவேண்டும் – எனப்பட்டது. இப்படியாக இவர் தொடங்கியுள்ள காரணத்தினால், புருஷகாரவைபவம் தொடக்கமாக ஆசார்ய அபிமானம் இறுதியாக, இந்த ப்ரபந்தத்தில் ஸ்வாமி அருளிச்செய்யும் வேதக் கருத்துக்கள் அனைத்தும், உப ப்ரமாணங்கள் மூலமாகவே அருளிச் செய்யப்பட்டவை என்பது தெளிவாகிறது. இவற்றை அந்தந்த இடங்களில் தெளிவாக உணரலாம். ஆகவே இந்தச் சூர்ணை மூலம் – அனைத்து ப்ரமாணங்களிலும் வேதங்களே மிகவும் வலிமையான ப்ரமாணம் என்பதும், அப்படிப்பட்ட வேதங்களின் பொருளை நிச்சயம் செய்யும் முறையும் (புராணம் மூலம்) கூறப்பட்டது.