Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (Pravesam 1)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
வ்யாக்யான ப்ரவேசம்
ஸ்ரீவசநபூஷண வ்யாக்யான அவதாரிகை
ஸகலவேத ஸங்க்ரஹமான திருமந்த்ரத்தில், பதத்ரயத்தாலும் ப்ரதிபாதிக்கப்படுகிற ஆகாரத்ரயமும் ஸர்வாத்ம ஸாதாரணமாகையாலே, யத்ரர்ஷய: ப்ரதம ஜாயே புராணா: என்கிற நித்யஸூரிகளோபாதி, சுத்த ஸத்வமான பரமபதத்திலே நித்யாஸங்குசித ஜ்ஞாநராய்க் கொண்டு, நிரந்தர பகவதநுபவஜநித நிரதிசயாநந்த த்ருப்தராயிருக்கைக்கு யோக்யதையுண்டாயிருக்க செய்தேயும், அநாதிமாயயா ஸுப்த: என்கிறபடியே திலதைலவத் தாருவஹ்நிவத் துர்விவேச த்ரிகுணதுரத்யயாநாதி பகவந் மாயாதிரோஹித ஸ்வப்ரகாசராய், அநாத்யவித்யாஸஞ்சிதாநந்த புண்யாபுண்ய கர்மாநுகுணமாக ஸுர நர திர்யக் ஸ்தாவர யோநிகள்தோறும் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து, பிறந்த பிறந்த ஜன்மங்கள் தோறும் தேஹாத்மாபிமாநமும், ஸ்வாதந்த்ர்யமும் அந்ய சேஷத்வமுமாகிற படுகுழிகளிலே விழுந்து, தத்ததநுகுண ஸாத்ய ஸாதநங்களிலே மண்டி, யாதானும்பற்றி நீங்கும் விரதத்தையேறிட்டுக்கொண்டு, ப்ராப்தசேஷியாய் பரமப்ராப்ய ப்ராபகபூதனானவன்பக்கல் அத்யந்தவிமுகராய், கர்ப்ப ஜந்ம பால்ய யௌவந வார்த்தக மரண நரகங்களாகிற அவஸ்தாஸப்தகத்திலே நிரந்தரவிதத விவித நிரவதிக துக்கங்களையநுபவித்துத் திரிகிறவிஸ்ஸம்ஸாரி சேதநரிலே, ஆரேனும் சிலர்க்கு, ஜாயமாநகால பகவத் கடாக்ஷ விசேஷத்தாலே ரஜஸ்தமஸ்ஸுக்கள் தலைமடிந்து ஸத்வம் தலையெடுத்து, மோக்ஷருசியுண்டானாலும், தத்வஹித புருஷார்த்தங்களை உள்ளபடி அறிந்தே உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும், அவை தன்னை சாஸ்த்ர முகத்தாலே அறியப் பார்க்குமளவில், சாஸ்த்ரங்களில் தலையான வேதமானது அநந்தா வை வேதா என்கிறபடியே அநந்தமாய், ஸ்வார்த்தநிர்ணயத்தில் ஸர்வசாகா ப்ரத்யய ந்யாயாதி ஸாபேக்ஷமாயிருக்கையாலே அல்பமதிகளுக்கு அவகாஹித்து அர்த்தநிச்சயம் பண்ணவரிதாகையாலும், அநந்த வேதபாரகராய் ஸ்வயோகமஹிம ஸாக்ஷாத்க்ருத பராவர தத்வ விபாகரான வ்யாஸாதி பரமர்ஷிகளாலே, ப்ரணீதங்களாய் வேதோபப்ர்ம்ஹணங்களான ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களிலும் ஸாராஸாரவிவேக சதுரர்க்கொழிய தாத்பர்யாம்சம் தெரியாமையாலும், அவை போலன்றிக்கே ஸம்ஸாரி சேதநோக்ஜீவநகாமனான ஸர்வேச்வரன், தானே ஆசார்யனாய் வெளிப்படுத்தின ஸகலவேத ஸாரமான ரஹஸ்யத்ரயமும் அதிஸங்க்ரஹதயா அதிகூடார்த்தங்களாகையாலும், பகவதாகஸ்மிக கடாக்ஷ விசேஷத்தாலே, மயர்வறமதிநலமருளப் பெற்று ஸகலவேத சாஸ்த்ர தாத்பர்யங்களையும் கரதலாமலகமாக ஸாக்ஷாத்கரித்த பராங்குச பரகாலதிகளான ஆழ்வார்களருளிச் செய்த த்ராவிடவேத ததங்கோபாங்களான திவ்யப்ரபந்தங்களும் அளவிலிகளால் அர்த்ததர்சநம் பண்ணப் போகாமையாலும், – ருசி பிறந்த சேதநரிழந்து போம்படியிருக்கையாலே ஆழ்வாருடைய நிர்ஹேதுக கடாக்ஷலப்த திவ்ய ஜ்ஞாநரான நாதமுனிகள் தொடக்கமாக ஸத்ஸம்ப்ரதாய ஸித்தராய் ஸகல சாஸ்த்ர நிபுணராய் பரமதயாளுக்களான பூர்வாசார்யர்கள் அந்த வேதாதிகளிலர்த்தங்களை ஸங்க்ரஹித்து மந்தமதிகளுக்கும் ஸுக்ரஹமாம்படி ப்ரபந்தீகரித்துமுபதேசித்தும் போந்தார்கள். அப்படியே ஸம்ஸாரி சேதனரிழவு ஸஹிக்க மாட்டாத பரம க்ருபையாலே ததுஜ்ஜீவநார்த்தமாகத் தாமும் பலப்ரபந்தங்களருளிச் செய்த பிள்ளைலோகாசார்யர், ஆசார்யபரம்பரா ப்ராப்தங்களானவர்த்தங்களில் அவர்கள் தாங்கள் கௌரவாதிசயத்தாலே ரஹஸ்யமாகவுபதேசித்துப் போந்தவையாய் அருமை பெருமைகளைப்பற்ற இதுக்கு முன்பு தாமும் ப்ரகாசிப்பியாமலடக்கிக்கொண்டு போந்தவையுமான அர்த்தவிசேஷங்களெல்லாத்தையும், பின்புள்ளாருமிழக்கவொ ண்ணாதென்கிற தம்முடைய க்ருபாதிசயத்துக்கு மேலே, பெருமாளும் ஸ்வப்நத்திலே திருவுள்ளமாயருளுகையாலே, ஸ்ரீவசநபூஷணமாகிற இப்ப்ரபந்தமுகேந வெளியிட்ட ருளுகிறார். முன்பே பேரருளாளப் பெருமாள் தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே மணற்பாக்கத்திலே இருப்பாரொரு நம்பியாரை விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி தஞ்சமாயிருப்பன சில வர்த்த விசேஷங்களைத் தாமேயவர்க்கு ஸ்வப்நமுகேநவருளிச் செய்து, நீர் போய் இரண்டாற்றுக்கு நடுவே வர்த்தியும், இன்னமுமக்கிவ்வர்த்தங்க ளெல்லாம் விசதமாக நாமங்கே செல்லுகிறோமென்று திருவுள்ளமாயருளுகையாலே, அவரிங்கே வந்து பெரியபெருமாளை சேவித்துக்கொண்டு, நமக்கு முன்பு அங்கருளிச்செய்தவர்த்தங்களையும் அசலறியாதபடி அநுஸந்தித்துக் கொண்டு, ஏகாந்தமானதொருகோயிலிலே வர்த்தியா நிற்கச்செய்தே, தம்முடைய ஸ்ரீபாதத்துக் கந்தரங்கரான முதலிகளும் தாமுமாக பிள்ளை ஒருநாள் அந்தக் கோயிலிலே யாத்ருச்சிகமாகவெழுந்தருளி அவ்விடமேகந்தமாயிருக்கையாலே ரஹஸ்யார்த்தங்களை அவர்களுக்கருளிச் செய்து கொண்டெழுந்தருளியிராநிற்க, அவை, தமக்குப் பேரருளாளப்பெருமாளருளிச் செய்த வர்த்தவிசேஷங்களாயிருக்கையாலே அவர் போரவித்தராய் உள்ளின்றும் புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீபாதத்திலே விழுந்து, அவரோ நீரென்ன, ஆவதேதென்று பிள்ளை கேட்டருள, பேரருளாளப் பெருமாள் தமக்கிவ்வர்த்தங்களை ப்ரஸாதித்தருளினபடியையும், இத்தேசத்திலே போரவிட்டருளின படியையும் விண்ணப்பஞ்செய்யக்கேட்டு மிகவும் ஹ்ருஷ்டராய் அவரையுமபிமாநித்தருள, அவருமங்குத்தைக்கு அந்தரங்கராய் வர்த்திக்கிரநாளிலே, பெருமாள் அவர்க்கு ஸ்வப்நத்திலே இவ்வர்த்தங்கள் மறந்து போகாதபடி இவற்றையொரு ப்ரபந்தஸ்தமாக்கச் சொன்னோமென்று நீர் பிள்ளைக்குச் சொல்லுமென்று திருவுள்ளமாக, அவரிப்படி பெருமாள் திருவுள்ளமாயருளினாரென்று விண்ணப்பஞ்செய்ய, ஆனால் அப்படி செய்வோமென்று திருவுள்ளம் பற்றி அநந்தரமிப்ரபந்தமிட்டருளினாரென்று ப்ரஸித்தமிறே. ரத்னப்ரசுரமான பூஷணத்துக்கு ரத்நபூஷணமென்று பேராமாப்போலே, பூர்வாசார்யர்களுடைய வசநப்ரசுரமாய் அநுஸந்தாதாக்களுக்கு ஔஜ்ஜ்வல்யகரமாயி ருக்கையாலே இதுக்கு வசநபூஷணமென்று திருநாமமாயிற்று. இப்ப்ரபந்தத்தில் வேதார்த்தமறுதியிருவது என்று தொடங்கி அத்தாலேயது முற்பட்டது என்னுமளவாக, வக்ஷ்யமாணார்த்த நிர்ணாயக ப்ரமாண நிர்தேசம் பண்ணுகிறதாகையாலே ப்ரபந்தோபோத்காதம். இதிஹாஸச்ரேஷ்ட்டம் என்று தொடங்கி ப்ரபத்த்யுபதேசம் பண்ணிற்றுமிவளுக்காக என்னுமளவு ஸாபராத சேதநருடைய ஸர்வாபராதங்களையும் ஸர்வேச்வரனை ஸஹிப்பித்து ரக்ஷிப்பிக்கையே ஸ்வரூபமான புருஷாகாரவைபவரும், அந்த புருஷகாரமும் மிகையாம்படியான உபாயவைபவமும் சொல்லுகிறது. ப்ரபத்திக்கு என்று தொடங்கி, ஏகாந்தீவ்யபதேஷ்டவ்ய: என்னுமளவு மிவ்வுபாயவரணரூப ப்ரபத்தியினுடைய தேசகாலாதி நியமாபாவம், விஷயநியமம், ஆச்ரய விசேஷம், இத்தை ஸாதநமாக்கில் வருமவத்யம், இதின் ஸ்வரூபாங்கங்கள் முதலானவற்றைச் சேரச் சொல்லி ப்ரபத்தவ்யனே உபாயமென்று ஸாதிக்கையாலே பூர்வோக்தோபாயசேஷமாகையால் உபாய ப்ரகரணம். இதில் ப்ராப்திக் குகப்பானுமவனே என்னுமளவும் ப்ரதாந ப்ரமேயம்; மேல் என்னுமளவு, இவ்வுபாயத்தைக் கொண்டு உபேயத்தைப் பெறுவானொரு சேதநனுக்கு உபாயோபேயாதிகார ப்ரதாநா பேக்ஷிதங்களையும், உபாயாந்தர த்யாக ஹேதுக்களையும், மற்றும் த்யாஜ்யோபா தேயங்களாயுள்ளவற்றையும் விஸ்தரேண சொல்லுகையாலே அதிகாரி நிஷ்டாக்ரமஞ் சொல்லுகிறது. தான் ஹிதோபதேசம் பண்ணும்போது என்று தொடங்கி, உகப்பு முபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் என்னுமளவாக, ஹிதோபதேச ஸமயத்தில் ஸ்வாசார்ய பாரதந்த்ர்யாதிகளான ஸதாசார்ய லக்ஷணம், ஸச்சிஷ்ய லக்ஷணம், ததுபயர் பரிமாற்றம், தீமனங்கெடுத்த ஸ்வாசார்ய விஷயத்தில் சிஷ்யனுபகார ஸ்ம்ருதி க்ரமம் இவற்றைச் சொல்லுகையாலே, ஸித்தோபாய நிஷ்டனான வதிகாரியினுடைய ஸ்வாசார்யாநுவர்த்தந க்ரமஞ்சொல்லுகிறது. ஸ்வதோஷாநுஸந்தாநம் பயஹேது என்று தொடங்கி நிவர்த்தகஜ்ஞாநமபய ஹேது என்னுமளவாக, இவ்வதிகாரிக்கு அத்வேஷம் தொடங்கி ப்ராப்தி பலமான கைங்கர்யபர்யந்தமாகவுண்டான பேறுகளுக்கெல்லாம் ஹேதுவாய், ஸ்வகர்மபய நிவர்த்தகமான பகவந் நிர்ஹேதுக க்ருபாப்ரபாவஞ் சொல்லுகிறது. ஸ்வதந்த்ரனை உபாயமாகத் தான் பற்றின போதிறே என்று தொடங்கி, மேலெல்லாம் மிக்கவேதியர் வேதத்தினுட்பொருளான சரம பர்வநிஷ்டையை வெள்ளிதாகச் சொல்லுகிறது. வேதார்த்தமறுதியிருவது என்று தொடங்கி இவ்வர்த்தத்திலே தலைக்கட்டுகையாலே, இப்ப்ரபந்தத்தில் சரமப்ரகரண ப்ரதிபாத்பாத்யமானவர்த்தம் வேததாத்பர்யமென்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம். ஸ்ரீகீதைக்கு சரமச்சோகம் போலேயிறே இப்ரபந்தத்துக்கு சரமப்ரகரணம். அங்கு ஸாத்யோபாயங்களை யுபதேசித்துக் கொண்டு போந்து, ஸ்வாதந்த்ர்ய பீதனானவனுக்கு அவற்றைத் தள்ளி ஸித்தோபாயம் காட்டப்பட்டது. இங்கு, ஸித்தோபாயத்தைச் சொல்லிக் கொண்டு போந்து, ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்துக் கஞ்சினவனுக்கு ப்ரதம பர்வத்தைத் தள்ளி சரம பர்வம் காட்டப்பட்டது. ஆக, இப்படி ஆறு ப்ரகரணமாய், ஆறர்த்த ப்ரதிபாதகமாயிருக்கும். ஒன்பது ப்ரகரணமாய், ஒன்பதர்த்த ப்ரதிபாதகமாயிருக்குமென்னவுமாம்; அந்த பக்ஷத்திலும் ப்ரதமப்ரகரணம் பூர்வவத். மேல் ”ப்ரபத்திக்கு” என்று தொடங்கி ”பகவத் விஷய ப்ரவ்ருத்தி சேரும்” என்னுமளவும், பூர்வப்ரகரணோக்தோபாய சேஷமாகையால் உபாயப்ரகரணம், ”ப்ராபகாந்தரபரித்யாகத்துக்கு” என்று தொடங்கி ”ஆகையாலே ஸுகரூபமாயிருக்கும்” என்னுமளவும் உபாயாந்தர தோஷப்ரகரணம். இப்ரகரணத்தில் ப்ரபத்த்யுபாய வைலக்ஷண்யகதநம் ப்ராஸங்கிகம். ”இவனவனைப்பெற நினைக்கும்போது” என்று தொடங்கி ”இடைச்சியாய்ப் பெற்றுவிடுதல் செய்யும்படியாயிருக்கும்” என்னுமளவும் ஸித்தோபாய நிஷ்டருடைய வைபவ ப்ரகரணம். ”இப்படி ஸர்வப்ரகாரத்தாலும்” என்று தொடங்கி ”உபேய விரோதிகளுமாயிருக்கும்” என்னுமளவும் ப்ரபந்ந திநசர்யா ப்ரகரணம். ”தான் ஹிதோபதேசம் பண்ணும்போது” என்று தொடங்கி, ”சேதநனுடைய ருசியாலே வருகையாலே” என்னுமளவும், ஸதாசார்ய லக்ஷண ப்ரகரணம். ”சிஷ்யனென்பது” என்று தொடங்கி “உபகாரஸ்ம்ருதியும் நடக்கவேணும்” என்னுமளவும் ஸச்சிஷ்ய லக்ஷண ப்ரகரணம். ”ஸ்வதோஷாநுஸந்தானம்” என்று தொடங்கி ”நிவர்த்தகஜ்ஞாநம் அபயஹேது” என்னுமளவும் பகவந் நிர்ஹேதுக விஷயீகார ப்ரகரணம். ”ஸ்வதந்த்ரனை” என்று தொடங்கி, மேலடங்க சரமப்ராப்ய ப்ராபக ப்ரகரணம். இவ்விரண்டு கர்மத்தையும் பற்றவிறே ”பேறுதருவிக்குமாள் தன் பெருமை”, ”திருமகள் தன்” என்கிற தனியன்க ளிரண்டுமவதரித்தது. ஆகையாலே இரண்டு ப்ரகாரமுமநுஸந்திக்கக் குறையில்லை. இப்ப்ரபந்தந்தான் தீர்க்கசரணாகதியான திருவாய்மொழி போலே த்வய விவரணமாயிருக்கும். எங்ஙனேயென்னில், திருவாய்மொழியில் முதல் மூன்று பத்தாலே உத்தரகண்டார்த்தத்தையும், மேல் மூன்று பத்தாலே பூர்வகண்டார்த்தத்தையுஞ் சொல்லி, மேல் நாலு பத்தாலும் அவ்வுபாயோபயோகியான குணங்களையும், ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசையற்றபடியையும், அவனோடு தமக்குண்டான நிருபாதிகபந்தத்தையும், தாம் ப்ரார்த்தித்தபடியே பெற்றபடியையும் ப்ரதிபாதிக்கையாலே, ததநுரூபார்த்தங்களைச் சொல்லித் தலைக்கட்டினாப்போலே, இதிலும் ப்ரதமத்திலே புருஷகாரத்தையும், அநந்தரமுபாயத்தையும், அநந்தரம் ஏததுபாயாதிகாரி நிஷ்டையையும் சொல்லுகையாலே பூர்வகண்டார்த்தத்தையும்; அவ்வதிகாரி நிஷ்டை சொல்லுகிறவளவில், உபேயாதிகாரா பேக்ஷிதங்களைச் சொல்லுகிற இதுக்குள்ளே உத்தரகண்டார்த்தத்தையுஞ் சொல்லி, மேல் ப்ரபந்த சேஷத்தாலும் ததுபதேஷ்டாவான ஆசார்யனளவில் இவனுக்குண்டாக வேண்டும் ப்ரதிபத்த்யநுவர்த்தநப்ரகாரங்களையும், இவனுக்கு மஹாவிச்வாஸ ஹேதுவான பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவத்தையும், வாக்ய த்வயோக்தோபயோபேய சரமாவதியையுஞ் சொல்லித் தலைக்கட்டுகையாலே ஒன்பதர்த்த ப்ரதிபாதகமான பக்ஷத்திலும் பூர்வ வாக்யத்தில் க்ரியாபதோக்தமான ஸ்வீகார உபாயாந்தர பரித்யாக பூர்வகமாயல்ல திராமையாலும், திநசர்யையும் அப்பதத்தில் சொல்லப்படுகிறவதிகாரிக்கே யுள்ளதாகையாலும், ஸதாசார்ய லக்ஷணம் த்வயோபதேஷ்டாவானவாசார்யன்படி சொல்லுகிறதாகையாலும் த்வய விவரணமாக நிர்வஹிக்கக் குறையில்லை. இப்படி த்வயவிவரணமானவிதிலே த்வயந்தன்னிற்போலே மற்றை ரஹஸ்ய த்வயார்த்தங்களும் ஸங்க்ரஹேணோத்தங்களாயிருக்கும் ; எங்ஙனேயென்னில்: அஹமர்த்தத்துக்கு என்று தொடங்கி அடியானென்றிறே என்னுமளவாகவும், ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே ப்ரதாநம் என்றும், ப்ரணவார்த்தஞ் சொல்லப்பட்டது. ஸ்வயத்ந நிவ்ருத்தி இத்யாதியாலும், தன்னைத்தானே முடிக்கையாவது என்று தொடங்கி, இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் என்கிறதற்குக் கீழிலுள்ளத்தாலும் நமச்சப்தார்த்தஞ் சொல்லப்பட்டது. பரப்ரயோஜநப்ரவ்ருத்தி இத்யாதியாலும், உபேயத்துக்கிளைய பெருமாளையும் இத்யாதியாலும், கைங்கர்யந்தான் பக்தி மூலமல்லாதபோது, இத்யாதியாலும் த்ருதீயபதார்த்தஞ் சொல்லப்பட்டது. அஜ்ஞாநத்தாலே இத்யாதியாலும், ப்ராபகந்தர பரித்யாத்யாகத்துக்கு இத்யாதியாலும் உபாயாந்தர த்யாகத்தை ஸஹேதுகமாகச் சொல்லுகையாலே தத்த்யாஜ்யதையையும் த்யாகப்ரகாரத்தையும் சொல்லுகிற பதத்வயார்த்தமுஞ் சொல்லப்பட்டது. இதுதனக்குஸ்வரூபம் இத்யாதியாலும், ப்ராப்திக்குபாயமவன் நினைவு இத்யாதியாலும் மாமேகம் சரணம் என்கிற பதங்களி லர்த்தஞ் சொல்லப்பட்டது. ப்ரபத்தயுபாயத்துக்கு இத்யாதியாலே வ்ரஜ என்கிற ஸ்வீகார வைலக்ஷண்யஞ் சொல்லப்பட்டது. அவனிவனை என்று தொடங்கி, ஸ்வாதந்த்ர்யத்தாலே வரும் பாராதந்தர்யம் ப்ரபலம் என்னுமளவும், ஸர்வ பாபங்களையுந் தள்ளி அங்கீகரிக்கும் மீச்வர ஸ்வாதந்த்ர்யத்தையும், க்ருபாபலமுமநுபவித்தேயறவேணும் என்று, பலஸித்தியில் கண்ணழிவில்லாமையுஞ் சொல்லுகையாலே உத்தரார்த்தத்திலர்த்தஞ் சொல்லப்பட்டது.
அனைத்து வேதங்களுக்கும் சுருக்கமாக உள்ளது திருமந்த்ரம் ஆகும். அதில் உள்ள மூன்று பதங்கள் மூலம் (மூன்று பதங்கள் = ஓம், நமோ, நாராயணாய) கூறப்படும் தன்மைகள் மூன்றாகும் (இவை அநந்யார்த்த சேஷத்வம் = எம்பெருமானுக்கு மட்டுமே அடிமை, அநந்ய சரணத்வம் = எம்பெருமானை மட்டுமே உபாயம் என்று கொள்ளுதல், அநந்ய போக்யத்வம் = அவனை மட்டுமே அனுபவிக்கத் தகுந்த பொருளாக எண்ணுதல்). இந்தத் தன்மைகள் அனைத்தும் உயிர்களுக்கு இருத்தல் வேண்டும் என்று பொதுவாகவே கூறப்பட்டுள்ளது. யஜுர் வேதம் – யத்ரர்ஷய: ப்ரதமஜாயே புராணா: - எங்கு புதியவர்களாகவும், பார்க்கிறவர்களாகவும், எப்போதும் உள்ளவர்களாகவும் – என்று கூறுவதுபோல் உள்ள நித்யஸூரிகள் போன்று, சுத்தமான ஸத்வமயமாகிய பரமபதத்தில், எப்போதும் குறையாத ஞானம் நிரம்பியவர்களாக; எப்போதும் ஸர்வேச்வரனை, எந்தக் குறையும் தடையும் இன்றி அனுபவிக்கும் காரணத்தினால் ஏற்படுகின்ற பேரானந்தம் காரணமாக மனநிறைவுடன் இருப்பதற்கான தகுதி கொண்டவர்களாக இந்த உலகில் உள்ள உயிர்கள் இருக்கின்றன (இப்படி இருந்தாலும், உயிர்கள் இவ்விதம் இருப்பதில்லை என்று அருளிச்செய்கிறார்). ஆயினும், உயிர்கள் இவ்விதம் இல்லாமல், பின்வருமாறு உள்ளன: அநாதிமாயாயாஸுப்த: - எல்லையற்ற காலமாக உள்ள மாயையால் பீடிக்கப்பட்டு உறங்குபவன் என்னும்படியாக, திலதைலவத் தாருவஹ்நிவத் துர்விசேஷ த்ரிகுண துரத்யயாநாதி பகவந் மாயாதிரோஹித ஸ்வப்ரகாச: - எள்ளில் உள்ள எண்ணெய் போன்றும் கட்டையில் உள்ள நெருப்பு போன்றும் பிரித்து அறிய இயலாத தன்மை கொண்டும், மூன்று குணங்களுடன் கூடியவர்களாகவும், ஈஸ்வரனைத் தவிர மற்ற யாராலும் நீக்க இயலாதபடி எல்லையற்ற காலமாக உள்ள ஸர்வேச்வரனின் மாயை மூலமாக மறைக்கப்பட்ட தர்மங்களை உடையவர்களாகவும் உள்ளனர்; எல்லையற்ற காலமாகத் தொடர்ந்து வரும் அறியாமை காரணமாக ஈட்டப்பட்ட புண்ணிய பாவ கர்மங்களின் பலனாக தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் எனப் பல பிறவிகளில் மாறிமாறி பிறக்கின்றனர்; திருவாய்மொழி (2-6-9) – மாறி மாறிப் பல பிறப்பு பிறந்து – என்றது காண்க; இதனால், சரீரத்தையே ஆத்மா என்றும் (இது தேஹாத்மாபி மானம்), தான் தனக்கு மட்டுமே உரியவன் என்றும் (ஸ்வாதந்த்ர்யம்), எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்கு அடிமைப்பட்டிருத்தல் (அந்யசேஷத்வம்) என்றும் உள்ள படுகுழிகளில் விழுகின்றனர்; அந்தந்த குணங்களுக்கு ஏற்ற சாதனங்களில் ஈடுபட்டு, அவற்றின் மூலம் பெறும் நன்மைகளில் மயங்கி நிற்கின்றனர்; திருவிருத்தம் (95) - யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை – என்று உள்ளனர்; நமக்கு இயல்பான எஜமானனாகவும், தன்னை விட உயர்ந்த நன்மை இல்லாதவனும் (ப்ராப்யன்), தன்னை விட உயர்ந்த சாதனம் இல்லாதவனும் (ப்ராபகன்) ஆகிய ஸர்வேச்வரனிடம் சிறிதும் ஆசை இல்லாமல் உள்ளனர்; கர்ப்பம், ஜன்மம், பால்யம், யௌவநம், முதுமை, இறப்பு, நரகம் என்று உள்ள ஏழு விதமான நிலைகளில் சற்றும் இடைவெளி இல்லாமல் பரந்து காணப்படும் பலவிதமான எல்லையற்ற துன்பங்களையே இன்பம் என்று எண்ணி அனுபவித்துத் திரிகின்றனர். இவர்களில் ஒரு சிலருக்கு, அவர்கள் பிறக்கும்போதே (ஜாயமாநகால பகவத் கடாக்ஷம்) ஸர்வேச்வரனின் திருவருள் கிட்டி விடுகிறது. இதனால் இவர்களின் ராஜஸ, தாமஸ குணங்கள் மடிந்து, ஸத்வ குணமானது ஓங்கி நிற்கும் காலத்தில், மோக்ஷத்தின் மீது ஆசை ஏற்படுகிறது. இப்படியாக மோக்ஷ ஆசை ஏற்பட்டபோதிலும் தத்துவம் (எம்பெருமானின் அடிமையான ஆத்மாவின் ஸ்வரூபம்), ஹிதம் (உபாயம்), புருஷார்த்தம் ஆகியவற்றை உள்ளது உள்ளபடி அறிந்த பின்னரே அடைய இயலும். இவற்றை சாஸ்திரங்கள் மூலமாகவே அறிய இயலும் என்பதால், அப்படியே முயற்சிக்கின்றனர். அப்படி அறிய முயலும்போது, சாஸ்திரங்களில் முக்கியமான வேதங்கள் - அநந்தா வை வேதா - வேதங்கள் எல்லை இல்லாதவை – என்பதற்கு ஏற்ப, எல்லை இல்லாமல் உள்ளன. இப்படிப்பட்ட வேதங்களின் பொருளை அறிந்து கொள்ளவேண்டும் என்றால், ஸர்வ சாகா ப்ரத்யய ந்யாயம் போன்ற பல அரிய கருத்துக்களை உணர்ந்த பின்னரே அறிய இயலாம்படி உள்ளன. ஆகவே குறைவான அறிவு உள்ளவர்கள் இதில் புகுந்து, இவற்றில் கூறப்பட்டதன் பொருளை உணர்ந்து கொள்ள அரிதாகவே வேதங்கள் உள்ளன. அந்த வேதங்களில் உள்ளவற்றை அறிந்து உணர்ந்தவர்களும், தங்களது யோக வலிமை மூலமாகத் தாங்கள் கண்ட பரம்பொருள் மற்றும் தாழ்ந்த மற்ற பொருள்கள் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர்களும் ஆகிய வ்யாசர் முதலான மஹரிஷிகளால், வேதங்களின் ஆழ்பொருளை விரிவாக உரைக்கும் பொருட்டு, ஸ்ம்ருதி, இதிஹாஸம் மற்றும் புராணங்கள் ஆகியவை செய்யப்பட்டன. ஆனால், சாரம் எது, சாரம் அல்லாதது எது என்று பிரித்து அறிகின்ற ஆற்றல் இல்லாதவர்களுக்கு, இந்த இதிஹாஸம் போன்றவற்றின் ஆழ்பொருள்கள் கூட, அறிய இயலாதவையாகவே இருந்தன. இதனைக் கண்ட ஸர்வேச்வரன், இந்த உலக மக்களைக் கரை ஏற்றுவதையே தனது குறிக்கோளாகக் கொண்டு, தானே ஆசார்யனாக நின்றான். இவ்விதம் நின்று, மூன்று ரகசியங்களை (திருமந்த்ரம், த்வயம், சரமச்லோகம் : திருமந்த்ரம் = நரனுக்கு, த்வயம் = பிராட்டிக்கு, சரமச்லோகம் = அர்ஜுனனுக்கு) வேதங்களின் சாரமாக வெளியிட்டான். இவை மிகவும் சுருக்கமாக இருந்ததால், இவற்றின் ஆழ்பொருளை அறிதல் என்பதும் அரிதாகவே இருந்தது. ஸர்வேச்வரனின், காரணம் இல்லாத கடாக்ஷத்தைப் பெற்று, மயக்கம் இல்லாத அறிவு பெற்று, வேதங்கள் அனைத்தின் ஆழ்பொருளையும் மிகவும் தெளிவாக உணர்ந்த நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் முதலானவர்கள், செந்தமிழ் வேதங்கள் எனப்படும் நான்கு பிரபந்தங்களையும் (நம்மாழ்வார் அருளியது), இவற்றின் அங்கமான ஆறு பிரபந்தங்களையும் (திருமங்கையாழ்வார் அருளியது) வேதங்களின் ஆழ்பொருளை, உள்ளங்கை நெல்லிக்கனி போன்று அருளிச்செய்தனர். ஆனால் இவையும், அறிவு குறைந்தவர்களால் பொருள் உணர்வதற்குக் கடினமாகவே நின்றன. இப்படியாக இருந்த காரணத்தினால், ஸர்வேச்வரன் மீது ஆசை கொண்ட மக்களின் ஆசையானது, இழந்து போகும்படி இருந்தது. அதனை இழக்க வேண்டாதபடி பூர்வாசார்யர்கள் நமக்கு உபகாரம் செய்தனர். எப்படி? நம் மீது ஆழ்வார்கள் பொழிகின்ற காரணம் இல்லாத கடாக்ஷத்தை, நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்கள் அடைந்தனர். ஸத்ஸம்ப்ரதாய ஞானம், அன்பு, ஒழுக்கம் போன்றவற்றில் வல்லவர்களாகவும், கருணையே வடிவாக உள்ளவர்களாகவும் பூர்வர்கள் இருந்தனர். அவர்கள் செய்தது என்ன? வேதங்கள் போன்ற சாஸ்த்ரங்களின் ஆழ்பொருளைச் சுருக்கமாகச் செய்து, தாழ்ந்த அறிவு கொண்டவர்களும் ஆழ்வார்களின் பிரபந்தங்களை அறியலாம்படிச் செய்து, அவற்றின் மூலமூம் தங்கள் உபதேசம் மூலமும் இதனை வெளியிட்டார்கள். இப்படியாகப் பல உபாயங்கள் இருந்தபோதிலும் அதில் ஈடுபடாமல் தவிக்கின்ற மக்களின் துன்பம் கண்டு பொறுத்துக்கொள்ள இயலாமல், தனது கருணை காரணமாக, அவர்கள் உயர்ந்த நன்மை பெறும் விதமாக, ஸ்வாமி பிள்லைலோகாசார்யர் பல பிரபந்தங்களை அருளிச்செய்தார். ஆசார்ய பரம்பரையில் இதுவரை கூறப்பட்டு வந்த ஆழ்பொருள்களில், அந்த ஆழ்பொருளின் மேன்மை காரணமாக, பலவற்றை அவர்கள் மறைமுகமாகவே உபதேசித்தனர்; அவற்றினை முழுவதுமாக வெளியிடாமலேயே இவரும் இருந்தார். ஆனால் தனக்குப் பின்பு பிறப்பவர்கள், இந்த அரிய தத்துவங்களை இழந்து விடுவார்களே என்று தனது கருணை காரணமாகச் சிந்தித்தார். இவற்றை வெளியிடும்படி ஸ்ரீரங்கநாதனும் கனவில் தோன்றிப் பணித்தான். ஆகவே அந்த ஆழ்பொருள்கள் பலவற்றையும், அவற்றின் மேன்மைகளையும் ஸ்ரீவசநபூஷணம் என்ற இந்தப் பிரபந்தம் மூலமாகவே வெளியிட்டார். முன்பு ஒரு காலகட்டத்தில் மணற்பாக்கத்தில் இருந்து வந்த நம்பியார் ஒருவரை காஞ்சி பேரருளான், தனது கருணை காரணமாகக் கடாக்ஷித்தான். உபாயங்களாக இருக்கக்கூடிய அர்த்த விசேஷங்கள் சிலவற்றைத் தானாகவே அவரது கனவில் நின்று உபதேசம் செய்தான். அதன் பின்னர் அவரிடம், ”நீவிர் சென்று இரண்டு ஆற்றுக்கு நடுவில் உள்ள திருவரங்கத்தில் வசிப்பீராக. இந்த ஆழ்பொருளின் மேலும் பல தத்துவங்களை நான் உமக்கு அங்கு வந்து சொல்கிறேன்”, என்று அருளிச்செய்தான். அவரும் அங்கிருந்து புறப்பட்டு, திருவரங்கம் வந்து, ஸ்ரீரங்கநாதனை வணங்கினார். தனக்குப் பேரருளாளன் அருளிச்செய்த மறைபொருள்கள் பலவற்றையும், மற்றவர்கள் அறியாதவண்ணம் சிந்தித்தபடி, திருவரங்கத்தின் வெளியே உள்ள காட்டழகிய சிங்கர் கோயில் என்ற நரஸிம்ஹன் ஸன்னிதியில் வசித்து வந்தார். இப்படி இருக்கையில் ஒரு நாள் ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர் தனது முதன்மையான சீடர்களுடன் காட்டழகிய சிங்கர் ஸன்னிதிக்கு தற்செயலாக எழுந்தருளி, அங்கு இருந்த தனிமையான சூழ்நிலை கண்டு மகிழ்ந்தவராக, தனது சீடர்களுக்கு மறைபொருளின் கருத்துக்களை உபதேசித்தபடி எழுந்தருளியிருந்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நம்பி, “இவை நமக்கு பேரருளாளன் அருளிச்செய்தவை ஆயிற்றே,” என்று வியந்து, அங்கிருந்து வெளியே வந்து, ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர் திருவடிகளில் விழுந்தார். அவரிடம், “நீர் பேரருளாளனோ?”, என்று வினவ, ஸ்வாமியும், ”என்னவேண்டும்?”, என்றார். உடனே நம்பி அவரிடம், தன்னிடம் பேரருளாளன் இந்த அர்த்தங்களை அருளிச்செய்தது, தன்னைத் திருவரங்கம் வரச்சொன்னது, திருவரங்கத்தில் மேலும் விளக்குவதாகக் கூறியது முதலியவற்றை உரைத்தார். இதனைக் கேட்ட ஸ்வாமி மிகவும் மகிழ்ந்து, அவரை ஏற்றுக்கொண்டார். அவரும் அங்கு ஸ்வாமிக்கு மிகவும் வேண்டியவராக வசித்து வந்தார். அப்போது ஒருநாள் நம்பியின் கனவில் தோன்றிய ஸ்ரீரங்கநாதன், ”இந்த அர்த்தங்கள் மறந்து விடாதபடி இவற்றை ஒரு ப்ரபந்தத்தில் நாம் ஆக்கும்படிச் சொன்னோம் என்று பிள்ளை லோகாசார்யரிடம் நீவிர் கூறுவீர்”, என்று கட்டளை இட்டான். அவரும் ஸ்வாமியின் திருவடியில் பணிந்து, அழகியமணவாளன் கூறியதை உரைத்தார். உடனே ஸ்வாமியும், ”அப்படியே செய்வோம்”, என்று முடிவு செய்து, இந்தப் பிரபந்தத்தை அருளிச்செய்தார் என்பது ப்ரஸித்தம். இரத்தினக்கற்கள் நிறைந்த ஆபரணம் இரத்தின ஆபரணம் என்று அழைக்கப்படுவது போன்று, பூர்வாச்சார்யர்களின் வசனங்கள் பல உள்ளதாலும், இதனைக் கற்பவர்களுக்கு உயர்ந்த ஒளியை (தேஜஸ்) இது அளிப்பதாலும், இந்தப் பிரபந்தம் ”ஸ்ரீ வசன பூஷணம்” என்று பெயர் கொண்டது. இந்த நூலில் “வேதார்த்தம் அறுதியிடுவது” என்னும் முதல் சூர்ணை தொடங்கி, “அத்தாலே அது முற்பட்டது” என்ற நான்காம் சூர்ணை வரை, இந்த நூலில் கூறப்படும் விஷயங்களுக்கான ப்ரமாணங்கள் பலவும் காட்டப்படுவதால், இவை (இந்த நான்கு சூர்ணைகள்) உபோத்காதம் (முன்னுரை) எனப்படுவதாக உள்ளன. அடுத்து ”இதிஹாஸச்ரேஷ்டம்” என்று தொடங்கி, “ப்ரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக” என்பது வரை உள்ள சூர்ணைகள், தோஷங்களுடன் கூடிய மக்களின் குற்றங்கள் அனைத்தையும் ஸர்வேச்வரன் பொறுத்துக் கொள்ளும்படியாகச் செய்து, அவனை ரக்ஷிக்கும்படி மாற்றுவதையே தனது தன்மையாகக் கொண்டுள்ள பிராட்டியின் புருஷகார வைபவமும், அந்தப் புருஷகார வைபவத்தையும் வெல்லும்படி உள்ள உபாயமான ஸர்வேச்வரனின் வைபவத்தையும் கூறுகின்றன. – “ப்ரபத்திக்கு” என்று தொடங்கி, ”ஏகாந்தீவ்யபதேஷ்டவ்ய:” என்பது வரை உள்ள சூர்ணைகள் - இப்படிப்பட்ட உபாயமான ஸர்வேச்வரனைப் பற்றுவதற்கு ஏதுவாக உள்ள ப்ரபத்திக்கு இன்ன இடத்தில் இருக்கவேண்டும், இன்ன காலம், இன்ன முறை, இன்ன அதிகாரி, இன்ன பலம் போன்ற கட்டுப்பாடுகள் இல்லை என்பதும்; விஷய நியமம், அதிகாரிகளில் உள்ள வேறுபாடு, ப்ரபத்தியை ஒரு சாதனமாகக் கொண்டால் உண்டாகும் தோஷம், ப்ரபத்தியின் ஸ்வரூபம் மற்றும் அங்கங்கள் ஆகியவை கூறப்படுகின்றன. இதன் பின்னர் இப்படிப்பட்ட ப்ரபத்திக்கு எம்பெருமானே உபாயம் என்கிறார். இதனால் இவை அனைத்தும் மேலே கூறிய உபாயத்தைச் சார்ந்தவை என்றாகிறது. ஆக இவை அனைத்தும் உபாயத்தைப் பற்றிக் கூறும் பகுதிகள் ஆகும். இவற்றில் – ப்ராப்திக்கு என்னும் சூர்ணை வரை உள்ள அனைத்தும் கூற வந்த முக்கியமான கருத்துக்கள் ஆகும். அடுத்து உள்ள சூர்ணைகள் ப்ராஸங்கிகம் ஆகும் (ப்ராஸங்கிகம் = அங்கு கூறவேண்டியவற்றைப் பின்னர் தொடர்ந்து கூறுதல்). “உபாயத்திற்கு” என்று தொடங்கி, ”உபேய விரோதி “ என்பது வரை உள்ள சூர்ணைகள் – உபாயம் மூலமாக உபேயம் (பலன்) அடைவதற்கு உரிய ஒருவனுக்கு, உபாய உபேய அதிகாரத்தின் பொருட்டு வேண்டப்படுவன பற்றியும், மற்ற உபாயங்களைக் கைவிட வேண்டியதற்கான காரணங்கள் பற்றியும், செய்யத்தக்கன மற்றும் செய்யத்தகாதன ஆகியவை பற்றியும் விரிவாகக் கூறுகின்றன. “தான் ஹிதோபதேசம் பண்ணும் போது” என்று தொடங்கி, ”உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்கவேணும்” என்பது வரை உள்ள சூர்ணைகள் – ஆசார்யன் தனக்கு நன்மையை உபதேசிக்கின்ற நேரத்தில், தான் அவரை மட்டுமே சார்ந்து இருப்பது தொடங்கி ஆசார்யனின் இலக்கணம், சிஷ்யனின் இலக்கணம், இருவரது நெறிமுறைகள், தனது தீய மனதை அழித்த ஆசார்யனின் விஷயத்தில் நன்றி, ஸித்தோபாயமான (எப்போதும் தயாராக உள்ள உபாயம் = ஸர்வேச்வரன்) எம்பெருமானிடத்தில் நிலைநின்ற அதிகாரி ஒருவன் தனது ஆசார்யனிடம் நடந்து கொள்ளவேண்டிய முறை இங்கு கூறப்படுகிறது. – ”ஸ்வதோஷ அநுஸந்தானம் பய ஹேது” என்று தொடங்கி, “நிவர்த்தக ஞானம் அபயஹேது” என்று முடியும் சூர்ணைகள் - இப்படிப்பட்ட அதிகாரிக்கு வெறுப்பு இல்லாத தன்மை தோன்றுவது முதலான எம்பெருமானை அடைவதில் பலனாகிய கைங்கர்யம் கிட்டுதல் முடிவாக ஏற்பட்ட பலவிதமான பேறுகளுக்குக் காரணமாகவும், தனது வினை காரணமாக ஏற்படுகின்ற அச்சங்கள் பலவற்றையும் நீக்கும் எம்பெருமானின் எந்த விதமான காரணமும் இன்றிச் சுரக்கும் கருணை (நிர்ஹேதுக க்ருபை) பற்றிக் கூறுகின்றன. ”ஸ்வதந்த்ரனை உபாயமாகப் பற்றின போதிறே” என்று தொடங்கி, அதற்கு மேலே உள்ள சூர்ணைகள் – வேதத்தின் உட்பொருளான ”ஆசார்யனையே உபாயமாகப் பற்றியிருப்பது” குறித்துக் கூறுகின்றன. எனவே “வேதார்த்தம் அறுதியிடுவது” என்று தொடங்கி, சரமபருவ நிலை பற்றிக் கூறி முடிக்கையால், இந்த நூலில் இறுதியான ப்ரகரணத்தில் கூறப்பட்டவை அனைத்தும் வேதங்களின் உட்கருத்துக்கள் என்பது எந்தவிதமான வாதமும் இன்றி ஏற்கப்படும் ஒன்றாகும். ஸ்ரீமத் பகவத் கீதைக்குச் சரம ச்லோகம் உள்ளது போன்று இந்த நூலுக்கு, இறுதியாக உள்ள ப்ரகரணமே இதன் சரம ப்ரகரணம் ஆனது. ஸ்ரீமத் கீதையில் ஒருவன் செய்யக்கூடிய உபாயங்கள் பற்றிக் கூறப்பட்டு, தனது ஸ்வாதந்த்ர்யம் (தன்னால் முடியும் என்ற எண்ணம்) குறித்து அச்சம் கொண்ட ஒருவனுக்கு, இந்த அச்சம் நீக்கப்பட்டு ஸித்தோபாயமான எம்பெருமான் காட்டப்பட்டான். இங்கு ஸித்தோபாயம் பற்றிக் கூறி, எம்பெருமானின் ஸ்வாதந்த்ர்யம் குறித்து அச்சம் கொண்டவனுக்கு, அவன் உபாயமாகப் பற்றி நிற்கும் நிலை (ப்ரதம பர்வம்) தள்ளப்பட்டு, ஆசார்யனே உபாயம் (சரமபர்வம்) என்ற நிலை காட்டப்பட்டது. இப்படியாக ஆறு ப்ரகரணங்கள் ஆறு பொருள்கள் பற்றி கூறுகின்றன. – அடுத்து, ஒன்பது ப்ரகரணங்களாய்ப் பிரிந்து, ஒன்பது பொருள்களைக் கூறுகின்றன என்றும் கூறுவர். இவ்விதம் பிரித்தால், முதல் ப்ரகரணம் மேலே உள்ளது போன்று ஆகும். ”ப்ரபத்திக்கு” என்று தொடங்கி, “பகவத் விஷய ப்ரவ்ருத்தி சேரும்” என்னும் சூர்ணை முடிய உள்ளவை – கடந்த ப்ரகரணத்தில் கூறப்பட்ட உபாய ப்ரகரணம் ஆகும். “ப்ராபகாந்தரபரித்யாகத்துக்கு” என்று தொடங்கி, ”ஆகையாலே ஸுகரூபமாயிருக்கும்” என்பது வரை உள்ள சூர்ணைகள் – பக்தி போன்ற மற்ற உபாயங்கள் பற்றிக் கூறுவதால் இவை உபாயாந்தர தோஷ ப்ரகரணம் ஆகும். இங்கு ப்ரபத்தி என்னும் உபாயத்தைக் கூறுதல் காண்க. “இவன் அவனைப் பெற நினைக்கும்போது” என்று தொடங்கி, ” இடைச்சியாய்ப் பெற்றுவிடுதல் செய்யும்படியாயிருக்கும்” என்ற சூர்ணை முடிய உள்ளவை - எம்பெருமானைப் பற்றி நிற்கின்ற நிஷ்டனைக் கூறுவதால் இவை ஸித்தோபாய நிஷ்டருடைய வைபவ ப்ரகரணம் ஆகும். ”இப்படி ஸர்வப்ரகாரத்தாலும்” என்று தொடங்கி, ” உபேய விரோதிகளுமாயிருக்கும்” என்பது முடிய உள்ள சூர்ணைகள் – ப்ரபத்தி மார்க்கத்தில் நிலை நிற்கும் அதிகாரி ஒவ்வொரு நாளும் தவறாமல் நடந்து கொள்ள வேண்டிய நெறிகளைக் கூறுகின்ற ப்ரபந்ந தினசர்யா ப்ரகரணம் ஆகும். “தான் ஹிதோபதேசம் பண்ணும்போது” என்பது தொடங்கி, ”சேதநனுடைய ருசியாலே வருகையாலே” என்பது முடிய உள்ள சூர்ணைகள் – ஆசார்யனின் இலக்கணம் பற்றிக் கூறுகின்ற ஸதாசார்ய லக்ஷண ப்ரகரணம் ஆகும். “சிஷ்யனென்பது” என்று தொடங்கி, “உபகாரஸ்ம்ருதியும் நடக்கவேணும்” என்பது முடிய உள்ள சூர்ணைகள் – சிஷ்யனின் இலக்கணம் பற்றிக் கூறுகின்ற ஸத்சிஷ்ய லக்ஷண ப்ரகரணம் ஆகும். “ஸ்வதோஷாநுஸந்தானம்” என்று தொடங்கி, ” நிவர்த்தகஜ்ஞாநம் அபயஹேது” என்பது முடிய உள்ள சூர்ணைகள் – ஸர்வேச்வரன் எந்தவிதமான காரணமும் இன்றி கருணை கொள்வதை விளக்கும் பகவத் நிர்ஹேதுக விஷயீகார ப்ரகரணம் ஆகும். ”ஸ்வதந்த்ரனை” என்று தொடங்கி அதன் பிறகு உள்ள அனைத்தும், ஆசார்யனே பேறு என்பதையும், அவரே பேற்றை அடையும் வழி என்பதையும் விளக்கும் சரம ப்ராப்ய ப்ராபக ப்ரகரணம் ஆகும். இப்படியாக ஆறு மற்றும் ஒன்பது வகையாகப் பிரிகின்ற காரணத்தினாலேயே “பேறுதருவிக்குமாள் தன் பெருமை” மற்றும் “திருமகள் தன்” என்ற இரண்டு தனியன்களும் ஏற்பட்டன. எனவே இரண்டு வகையில் பிரித்தாலும் எந்தத் தோஷமும் இல்லை. தீர்க்க சரணாகதியான திருவாய்மொழி போன்று இந்த நூலும் த்வய மந்த்ரத்தின் விளக்கமாகவே உள்ளது. எப்படி? திருவாய்மொழியின் முதல் மூன்று பத்துக்களால் த்வய மந்திரத்தின் இரண்டாம் வாக்கிய பொருள்; அடுத்து மூன்று பத்துக்களால் த்வய மந்த்ரத்தின் முதல் வரியின் பொருள்; அடுத்து உள்ள நான்கு பத்துக்களால் அப்படிப்பட்ட உபாயத்திற்கு வேண்டிய குணங்கள், ஆத்மா மற்றும் ஆத்மாவுடன் தொடர்புடைய பெண்கள் ஆகியவற்றில் தனக்கு நசையற்ற நிலை, ஸர்வேச்வரனுடன் தனக்கு இயற்கையாகவே அமைந்துள்ள உறவுமுறை, இவற்றைத் தான் வேண்டியபடியே அவனிடம் பெற்ற நிலை ஆகிய பலவற்றையும் கூறி, இப்படியாக த்வயத்தின் ஆழ்பொருளை அருளிச்செய்கிறார். இதே போன்று இங்கும், முதலில் புருஷகாரம், தொடர்ந்து உபாயம், தொடர்ந்து உபாய அதிகாரியின் நிலை ஆகியவை கூறப்பட்டதால் த்வயத்தின் முதல் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது; அதிகாரியின் நிலையைக் கூறும்போது, உபேயத்தைப் பெற என்ன தகுதி இருக்கவேண்டும் என்பதைக் கூறும்போது, இரண்டாவது வரியின் பொருள் உரைக்கப்படுகிறது. அடுத்து உள்ள மூன்று ப்ரகரணங்கள் மூலம் த்வயத்தை உபதேசம் செய்த ஆசார்யன் குறித்து இந்த அதிகாரிக்கு உண்டாக வேண்டிய எண்ணங்கள், ஒழுகுமுறைகள், மஹாவிச்வாசம் உண்டாவதற்கு எம்பெருமான் இவனிடம் காண்பித்த காரணம் இல்லாத கடாக்ஷம் என்பதன் பெருமை, இரண்டு வரிகள் மூலம் கூறப்பட்ட உபாய உபேயங்களின் எல்லை நிலம் பற்றிய கருத்து ஆகியவற்றைக் கூறி முடிக்கிறார். இதனால் இவை த்வய மந்த்ரத்தின் விளக்கம் என்று கூறுவதில் எந்தவிதமான குறையும் இல்லை. – இவ்விதம் த்வயத்தின் விளக்கமாகவே உள்ள இந்த நூல், திருமந்த்ரம் மற்றும் சரமச்லோகம் ஆகிய இரண்டின் ஆழ்பொருள்களையும் தன்னில் கொண்டதாகவே உள்ளது. எப்படி? “அஹமர்த்தத்துக்கு” என்று தொடங்கி, “அடியானென்றிறே” என்பது முடிய உள்ள சூர்ணைகள், ”ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே ப்ரதாநம்” என்னும் சூர்ணை ஆகியவற்றின் மூலம் ப்ரணவத்தின் பொருள் கூறப்பட்டது. “ஸ்வயத்ந நிவ்ருத்தி” என்பதாலும், ”தன்னைத்தானே முடிக்கையாவது” என்று தொடங்கி, “இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும்” என்று முடியும் சூர்ணைகளாலும் நம: என்பது விளக்கப்பட்டது. ”பரப்ரயோஜநப்ரவ்ருத்தி” என்பதாலும், ”உபேயத்துக்கிளைய பெருமாளையும்” என்று உள்ள சூர்ணையாலும், ”கைங்கர்யந்தான் பக்தி மூலமல்லாதபோது” என்பதாலும் நாராயணாய என்பது விளக்கப்பட்டது. “அஞ்ஞானத்தாலே” என்னும் சூர்ணை, “ப்ராபகந்தர பரித்யாத்யாகத்துக்கு” என்னும் சூர்ணை ஆகியவை மூலம் மற்ற உபாயங்களைக் கைவிடுதல் என்பதைக் காரணங்களுடன் கூறுவதால், அந்த உபாயங்களை எப்படிக் கைவிடவேண்டும் என்று கூறுவதால் – இவை மூலம் ஸர்வதர்மாந் பரித்யஜ்ய என்பது விளக்கப்பட்டது. ” இது தனக்கு ஸ்வரூபம்” என்பதன் மூலமும், ” ப்ராப்திக்குபாயமவன் நினைவு” என்பதன் மூலமும், மாமேகம் சரணம் என்பது விளக்கப்பட்டது. “ப்ரபத்தயுபாயத்துக்கு” என்பதன் மூலம் வ்ரஜ என்ற பதம் விளக்கப்பட்டது. அதாவது பற்றுவதன் மேன்மை உரைக்கப்பட்டு, “அவன் இவனை” என்று தொடங்கி, ”ஸ்வாதந்த்ர்யத்தாலே வரும் பாராதந்தர்யம் ப்ரபலம்” என்பது முடிய உள்ள சூர்ணைகளில், அனைத்துப் பாவங்களையும் நீக்கி ஸர்வேச்வரன் ஏற்றுக் கொள்கின்ற அவனது ஸ்வதந்த்ரத்தைக் கூறுகிறார். ”க்ருபாபலமுமநுபவித் தேயறவேணும்” என்பதன் மூலம், பலத்தைப் பெறுகின்ற குறிக்கோளில் மாற்றம் இல்லாமையும் கூறுவதால் இவை – அஹம் த்வா என்று தொடங்கும் இரண்டாவது வரியின் விளக்கம் ஆகின்றன.