Sri Vachana Bhushanam - தனியன்கள் (Thaniyan 5)

தனியன்கள்

ப்ரத்யேக தனியன்கள்

திருமாமகள் தன் சீர் அருள் ஏற்றமும் திருமால் திருவடி சேர்வழி நன்மையும் அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் மெய்வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும் ஆரணம் வல்லவர் அமரும் நன்னெறியையும் நாரணன் தாள் தரு நற்குரு நீதியும் சோதி வானருள் தூயமா குருவின் பாதமாமலர் பணிபவர் தன்மையும் தீதில் வானவர் தேவன் உயிர்களை ஏதுமின்றி எடுக்கும் படியையும் மன்னிய இன்பமும் மாகதியும் குரு என்னும் நிலைபெறும் இன்பொருள் தன்னையும் அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசனபூடண வழியால் அருளிய மறையவர் சிகாமணி வண்புகழ் முடும்பை இறையவன் எங்கோன் ஏர் உலகாரியன் தேன் மலர்ச்சேவடி சிந்தை செய்பவர் மாநிலத்து இன்பமது எய்தி வாழ்பவர்.

புருஷகார உபாயத்தின் உயர்வு; ஸித்தோபாயமான எம்பெருமானின் திருவடி அடைதல் மூலம் கிட்டும் நன்மை; அந்த ஸித்தோபாயமான எம்பெருமான் அல்லாது உள்ள மற்ற உபாயங்களின் தாழ்ச்சி; உண்மையான ஸித்தோபாயத்தில் நிற்கும் உயர்ந்தவர்களின் பெருமை; வேதங்களில் சிறந்த ப்ரபன்னர்களின் ஒழுக்கம்; எம்பெருமானின் திருவடி மூலமாகக் கிட்டிய ஆசார்யனின் திருவடிகளைப் பணிபவர்கள் பெறுகின்ற நன்மை; தோஷம் அற்ற நித்யஸூரிகளுக்கும் தலைவனாக உள்ள எம்பெருமான், எந்தவிதமான காரணமும் இன்றி உலகிற்குச் செய்யும் கடாக்ஷத்தின் மேன்மை; நிலையான மோக்ஷம் மற்றும் அதனைப் பெறுவதற்கான உபாயம் ஆசார்யன் மட்டுமே என்னும் நிலையை அடைவதன் மேன்மை; மாறாத வேதங்களின் கூறப்பட்ட அனைத்து கருத்துக்கள் – இவை அனைத்தையும் ஸ்ரீவசனபூஷணம் என்ற இதன் மூலமாக உரைத்து உதவி செய்தவர், அந்தணர்கள் அனைவருக்கும் சிகாமணி போன்றவர், சிறந்த மேன்மையை உடைய ஸர்வேச்வரனின் திருவடிகளை அண்டி நிற்கும் பிள்ளை லோகாசார்யரின் தேன் சிந்தும் தாமரை மலர் போன்ற திருவடிகளை த்யானம் செய்பவர்கள், இந்த உலகத்தில் இன்பத்துடன் வாழ்வார்கள்.