Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 234)
நான்காம் ப்ரகரணம்
அவித்யா நிவர்த்தக ஜ்ஞாந பூர்த்தி ப்ரத பகவத் ப்ரஸாதாத் மோக்ஷ லாபமென்கை மயர்வற வீடுபெற்றவென்ற ப்ரபந்தைகார்த்த்யம்.
‘‘நூறே சொன்ன பத்துநூறு ஓராயிரமென்றதும் ஸாபிப்ராயம்’’ என்றதில் நூறே சொன்ன பத்து நூறென்றதில் கருத்தை பத்து நிகமநத்திலே விஸ்தரேண ப்ரதிபாதித்து ப்ராஸங்கிகமாக அருளிச்செய்யவேண்டுமவையு மருளிச்செய்தாராய் நின்றார் கீழ். இனி ‘‘ஓராயிர’’ மென்றதின் கருத்தை விசதமாக்கா நின்று கொண்டு ப்ரபந்தத்தை நிகமித்தருளுகிறார் ‘‘அவித்யா நிவர்த்தக’’ என்று தொடங்கி.
சூர்ணை (215) - நூறே சொன்ன பத்துநூறு ஓராயிரமென்றதும் ஸாபிப்ராயம் - என்பதில் கூறப்பட்டதான ‘‘நுறே சொன்ன பத்து நூறு’’ என்பதன் கருத்தை, சூர்ணைகள் 218 முதல் 228 முடிய உள்ளவற்றில் ‘‘பத்து’’ என்று விரிவாக அருளிச்செய்தார். அதன் பின்னர் நடுவில் கூறப்பட வேண்டிய விவரங்களாக உள்ளவற்றையும், சூர்ணைகள் 229 முதல் 233 முடிய அருளிச்செய்தார். அடுத்து சூர்ணை 215ல் கூறப்பட்ட ‘‘ஓராயிரம்’’ என்பதன் கருத்தை விளக்கமாக உரைத்து இந்த க்ரந்தத்தை முடிக்கிறார்.
அதாவது, ஸம்ஸார காரணமான அஜ்ஞாநத்துக்கு நிவர்த்தகமான ஜ்ஞாநபூர்த்தியை உபகரித்த ஜ்ஞாநாதி குணபூர்ணனான பகவானுடைய நிர்ஹேதுகமான ப்ரஸாதத்தாலே ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வக பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷத்தினுடைய லாபமென்று ப்ரதிபாதிக்கை, ‘‘மயர்வற மதி நலமருளினன்’’ என்று தொடங்கி, ‘‘அவாவற்று வீடுபெற்ற’’ என்று தலைக்கட்டின இப்ப்ரபந்தத்துக் கொன்றான தாத்பர்யார்த்தமென்கை. இத்தால் ஜ்ஞாந ப்ரதமான பகவத் ப்ரஸாதமே மோக்ஷ ப்ரதமுமென்னுமிது இப்ப்ரபந்தத்துக்காக தாத்பர்யமா யிருப்பதோரர்த்த மென்றதாய்த்து. ஆக இப்ப்ரபந்தத்தால் ஸர்வேச்வரன் தன் க்ருபையாலே அஜ்ஞரான சேதநர் தத்வஜ்ஞராய் ஸாராஸாரவிவேகம் பண்ணுகைக்கு சாஸ்த்ரப்ரதாநம் பண்ணினபடியையும், அந்த சாஸ்த்ரமுகேந தத்வஜ்ஞாநம் பிறக்குமளவிலுண்டான அருமையை நினைத்து தாத்பர்யமான திருமந்த்ரத்தைத் தன் பரமக்ருபையாலே வெளியிட்டபடியையும், அந்த சாஸ்த்ர தாத்பர்யங்களின் விஷய பேதாதிகளையும், ததுபயநிஷ்டரான அதிகாரிகளுடைய ப்ரகாரங்களையும், அந்த வ்யாஜத்தாலே ப்ரஸ்துதமான திருவாய்மொழியினுடைய வைபவத்தையும், அதுக்கு வக்தாக்களான ஆழ்வர்களுடைய ப்ரபாவத்தையும் அந்த ப்ரபாவத்துக்கு மூலமான பகவந் நிர்ஹேதுக கடாக்ஷத்தையும், அதடியாக இவர்க்குண்டான ஜ்ஞாந பக்திகளையும், அந்த ஜ்ஞாநபக்தி தசைகளில் இவர் பேசும் பேச்சுகளையும், அந்த பக்திதசையில் பகவத் ப்ரேம யுக்தரெல்லாரோடு மிவர்க்குண்டான ஸாம்யத்தையும், அந்த பக்தி தசையில் பேசும் அந்யாபதேசங்களுக்கு ஸ்வாபதேசங்களையும், அந்த பக்தி விஷயமான திவ்யதேசங்களில் நிற்கிற ஈச்வரனுடைய குண விசேஷங்களையும், அந்த குண விசிஷ்ட வஸ்துவிலுண்டான அநுபவ ஜநித ப்ரீதி ப்ரேரிதமாய்க் கொண்டு இப்ப்ரபந்தங்கள் அவதரித்தபடியையும், ப்ரதிபாத்யார்த்த ஸாம்யத்தாலே ஸ்ரீகீதையோடு திருவாய்மொழிக்குண்டான ஸாம்யத்தையும், தத் வ்யாவ்ருத்தியையும், இதில் இவருபதேசிக்கிற விஷய பேதத்தையும், அவ்வோ விஷயங்கள் தோறும் உபதேசிக்கிற அர்த்த விசேஷங்களையும், அந்த வ்யாஜத்தாலே உபதேச விஷயமான சிஷ்யலக்ஷத்தையும், அந்த லக்ஷணமில்லாதார்க்கும் இவருபதேசிக்கைக்கு ஹேதுக்களையும், க்யாதி லாபாதி நிரபேக்ஷராய் பகவத் கைங்கர்ய புத்த்யா உபதேசிக்கையாலே உபதேசம் ஸபலமானபடியையும் உபதேசிக்கிற இப்ப்ரபந்தங்கள் தான் ரஹஸ்யத்ரயார்த்த மென்னுமத்தையும், அந்தரஹஸ்யத்ரயத்திலும் ப்ரதிபாதிக்கப் படுகிற அர்த்த பஞ்சகமும் இப்ப்ரபந்தங்களிலே ஸங்க்ரஹ விவரண ரூபேண சொல்லப்படுகிற ப்ரகாரத்தையும், ப்ரபந்தாரம்பங்களில் அபேக்ஷிதமான மங்களாசரணங்கள் இப்ப்ரபந்தாதியிலுண்டானபடியையும், ஸாது பரித்ராணாதிகளிலே ஜகத் ரக்ஷணார்த்தமான ஸர்வேச்வராவதாரம்போலே இப்ப்ரபந்தாவதார மென்னு மத்தையும், இதில் பத்துப்பத்தாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட வீச்வரனுடைய பரத்வாதி குணங்களையும், அக்குண விசிஷ்டனானவன் இப்பத்துப் பத்தாலு மிவ்வாழ்வாருக்கு, தத்வஜ்ஞாநம் முதலாக ப்ராப்தி பர்யந்தமாகப் பிறப்பித்த தசா விசேஷங்களையும், பத்துத்தோறு மிவர்தாம் பிறர்க்குபதேசித்த ப்ரகாரங்களையும், இவர்க்கு ப்ரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச்செய்தே ஈச்வரனிவரை வைக்கைக்கு ப்ரதாநாப்ரதாந ஹேதுக்களையும், இவர்க்குப் பிறப்பித்த பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாகிற தசாவிசேஷ ஸ்தலங்களையும் அஜ்ஞாந நிவர்த்தக ஜ்ஞாந பூர்த்திப்ரத பகவத் ப்ரஸாதமே அநிஷ்டமான ஸம்ஸாரத்தை யறுத்து அபீஷ்டமான மோக்ஷலாபத்தையுண்டாக்குமென்கை இப்ப்ரபந்ததுக்கொன்றான தாத்பர்ய மென்னுமத்தையும், ஆஸ்திகராய் ஆழ்வாரபிமானத்திலே யொதுங்கி அவருடைய திவ்ய ஸூக்திகளில் ப்ரவணராய் அநந்யபரராயிருப்பார் எல்லாருமநுஸந்தித்து வாழும்படி அதிஸ்புடமாக வருளிச்செய்து தலைக்கட்டினார்.
(அவித்யா நிவர்த்தக ஜ்ஞாந பூர்த்தி ப்ரத பகவத் ப்ரஸாதாத் மோக்ஷ லாபம் என்கை) - இந்த ஸம்ஸாரத்திற்குக் காரணமா உள்ள அஞ்ஞானத்தை விலக்கவல்ல ஞானத்தின் முழுமை என்பதை அளித்தவனும்; ஞானம் என்றது போன்ற அனைத்து குணங்களிலும் பரிபூர்ணமாக உள்ளவனும் ஆகிய பகவானுடைய எந்தக் காரணமும் இன்றி வெளிப்பட்ட க்ருபையால், ஸம்ஸார விலகுதல் என்பது தொடக்கமாக உள்ளதான பகவானை அடைதல் என்ற மோக்ஷ லாபம் கிட்டியது என்பதை வெளிப்படுத்துதல் என்பதே, (மயர்வற வீடுபெற்றவென்ற ப்ரபந்தைகார்த்த்யம்) - திருவாய்மொழி (1-1-1) - மயர்வற மதிநலம் அருளினன் - என்று தொடங்கி, திருவாய்மொழி (10-10-11) - அவாவற்று வீடு பெற்ற - என்று முடிவு செய்த இந்தத் திருவாய்மொழி ஏற்பட்டதற்கான தாத்பர்யம் ஆகும் என்று அருளிச்செய்கிறார். ஆகவே ‘‘ஆசார்ய ஹ்ருதயம்’’ என்ற இந்த க்ரந்தத்தின் மூலம் கூறப்பட்டவை இவையே ஆகும் : ஸர்வேச்வரன் தனது க்ருபயால், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் சேதநர்கள் அனைவரும் உண்மையான ஞானத்தை அடையப்பெற்று, நன்மை மற்றும் தீமை ஆகியவற்றைப் பிரித்து அறிகின்ற விவேகம் கொண்டவர்களாக இருப்பதற்கு ஏற்றபடி சாஸ்த்ரங்களை அளித்ததையும்; அப்படிப்பட்ட சாஸ்த்ரங்கள் மூலம் உண்மையான ஞானம் ஏற்படுவதில் இருக்கின்ற கடினத்தை எண்ணி, அந்த சாஸ்த்ரங்களின் தாத்பர்யமாகவே உள்ள திருமந்த்ரத்தை தனது உயர்ந்த க்ருபையால் வெளியிட்டதையும்; அத்தகைய சாஸ்த்ரங்களில் உள்ள ஆழ்பொருள் வேறுபாடுகளையும்; அப்படிப்பட்ட சாஸ்த்ரங்கள் மற்றும் திருமந்த்ரம் ஆகியவற்றில் ஈடுபட்டு நிற்கும் அதிகாரிகளின் வைபவங்களையும், அவ்விதம் அதிகாரிகளின் பெருமைகளைக் கூறுவதை ஒரு காரணமாகக் கொண்டு வெளிப்பட்ட திருவாய்மொழியின் வைபவத்தையும்; அதனை அருளிச்செய்த ஆழ்வார்களுடைய மேன்மைகளையும்; அத்தகைய மேன்மைக்குக் காரணமாக உள்ளதான எந்தவிதமான காரணமும் இன்றி வரும் பகவத் கடாக்ஷத்தையும்; அதன் விளைவாக நம்மாழ்வாருக்கு ஏற்பட்ட ஞானம் மற்றும் பக்திகளையும்; அப்படிப்பட்ட ஞானம் மற்றும் பக்தி நிலைகளில் நம்மாழ்வார் உரைக்கும் சொற்களையும்; அப்படிப்பட்ட பக்தி நிலையில் பகவானிடம் ப்ரேமை கொண்டவர்களுடன் இவருக்கு ஏற்பட்ட ஒப்புமையும்; அப்படிபட்ட பக்தி நிலையில் உள்ளபோது மற்றவர்களுக்கு உரைக்கும் உபதேசங்களில் உள்ளதான தனக்கே கூறிக்கொள்ளும் உபதேசங்களையும்; அந்தப் பக்திக்கு ஆதாரமாக திவ்யதேசங்களில் நிற்கும் பகவானின் குணசிறப்புகளையும்; அந்தக் குணங்களுடன் கூடிய எம்பெருமானிடம் ஏற்பட்ட அனுபவங்களால் உண்டான ப்ரேமையால் இந்த ப்ரபந்தங்கள் வெளிப்பட்டதையும், இவற்றில் வெளிப்பட்ட ஆழ்பொருளின் ஒப்புமை காரணமாக ஸ்ரீமத்பகவத்கீதை மற்றும் திருவாய்மொழி ஆகியவற்றுக்கு உள்ள ஒப்புமையையும்; அதன் வேறுபாடுகளையும்; இந்த திருவாய்மொழியில் நம்மாழ்வார் கூறுகின்ற விஷய வேறுபாட்டையும்; ஒவ்வொரு விஷயங்களிலும் உபதேசிக்கும் ஆழ்பொருள் சிறப்பையும்; அந்தக் காரணத்தால் உபதேசம் பெறுவதற்கு ஏற்ற சிஷ்யனுடைய இலக்கணத்தையும்; அப்படிப்பட்ட இலக்கணம் இல்லாதவர்களுக்கு இவர் உபதேசிக்கும் காரணங்களையும்; புநுழ் மற்றும் பொருள் ஆகியவற்றில் ஈடுபாடு இல்லாமல் பகவத் கைங்கர்யம் என்ற எண்ணத்தால் மட்டுமே உபதேசிப்பதால் இந்த உபதேசமானது பலன் அளித்ததையும்; உபதேசித்த இந்த ப்ரபந்தங்களானவை ரஹஸ்ய த்ரயத்தின் பொருள் என்பதையும்; அத்தகைய ரஹஸ்ய த்ரயத்தால் கூறப்படும் அர்த்தபஞ்சகமானது இந்த ப்ரபந்தங்களின் சுருக்கமாகவும் விரிவாகவும் கூறப்பட்ட விதத்தையும்; ப்ரபந்தங்களின் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படும் மங்கள ச்லோகம் போன்றவை இறுதியில் உள்ளதையும்; சாதுக்களைக் காப்பாற்றுவதற்கு ஸர்வேச்வரன் எடுக்கும் அவதாரங்கள் போன்று இந்த ப்ரபந்தங்களுடைய தோற்றம் உள்ளதையும்; இதில் உள்ள பத்துப் பத்தாலும் வெளிப்படுத்தப்பட்டதான ஈச்வரனுடைய பரத்வம் போன்ற குணங்களையும்; அப்படிப்பட்ட குணங்களுடன் கூடியுள்ள ஸர்வேச்வரன் இந்தப் பத்துப்பத்தாலும் நம்மாழ்வாருக்குத் தத்வஞானம் தொடக்கமாக மோக்ஷம் முடிய உள்ள அனைத்தும் ஏற்படும்படிச் செய்த நிலையையும்; ஒவ்வொரு பத்துக்களிலும் நம்மாழ்வார் மற்றவர்களுக்கு உபதேசித்த விதத்தையும்; இவருக்குத் தொடக்கம் முதலாகவே ஸம்ஸாரத்தில் துக்கம் இருந்தாலும், ஈச்வரன் இவரை ஸம்ஸாரத்தில் வைத்திருந்ததற்கான முதன்மையானதும் மற்றதும் ஆகிய காரணங்களையும்; இவருக்கு ஏற்படுத்திய பரபக்தி, பரஜ்ஞானம் மற்றும் பரமபக்தி நிலைகள் காணப்படும் திருவாய்மொழிகள் உள்ள இடங்களையும்; அறியாமை நீக்குவதான பரிபூர்ணமான ஞானத்தை அளித்தருளிய ஸர்வேச்வரனுடைய க்ருபை மட்டுமே, விருப்பம் இல்லாத இந்த ஸம்ஸாரத்தை அறுத்து, மிகவும் விரும்புகின்ற மோக்ஷ லாபத்தை ஏற்படுத்தும் என்பதே இந்த ப்ரபந்தத்தின் திரண்ட ஆழ்பொருள்களில் ஒன்றாகும் என்பதையும்; ஆஸ்திகர்களாக நின்று நம்மாழ்வாரின் நிழலில் ஒதுங்கி, அவருடைய ப்ரபந்தங்களில் எப்போதும் ஈடுபட்டவர்களாக, மற்ற எதனையும் எதிர்பாராதவர்களாக அனைவரும் வாழும்படியாக மிகவும் தெளிவாக அருளிச்செய்து நிறைவு செய்கிறார்.