Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 233)
நான்காம் ப்ரகரணம்
இவை ஜ்ஞாநதர்சந ப்ராப்த்யவஸ்த்தைகள்.
இந்த பரபக்தியாதிகளின் வேஷத்தை பகவத்வசநத்தாலே தர்சிப்பிக்கிறார் ‘‘இவை’’ என்று தொடங்கி.
அதாவது, இந்த பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகள், ‘‘பக்த்யா த்வநந்யயா சக்ய: அஹமேவம்விதோர்ஜுந, ஜ்ஞாதும் த்ரஷ்டுஞ்ச தத்வேந ப்ரேவேஷ்டுஞ்ச பரந்தப’’ என்று அர்ஜுனனைக் குறித்துத் திருத்தேர்த்தட்டிலும், ‘‘பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம் மாம் குருஷ்வ’’ என்று ப்ரார்த்தித்த பாஷ்யகாரரைக் குறித்து ‘‘மத்ஜ்ஞாந தர்சந ப்ராப்திஷு நிஸ்ஸம்சயஸ்ஸ் ஸுகமாஸ்வ’’ என்று சேரபாண்டியனிலு மவனருளிச்செய்த ஜ்ஞாந தர்சந ப்ராப்த்யவஸ்த்தைகளென்கை. இத்தால் பகவத் ஸம்ச்லேஷ விச்லேஷைக ஸுக துக்கராம்படியான பரபக்தி ஜ்ஞாநாவஸ்தையாகவும், பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை விசததமமாக ஸாக்ஷாத்கரிக்கிற பரஜ்ஞாநம் தர்சநாவஸ்த்தையாகவும் அப்படி ஸாக்ஷாத்கரித்த வஸ்துவை அப்போதே கிட்டியநுபவிக்கப் பெறாவிடில் முடியும்படியான பரமபக்தி ப்ராப்த்யவஸ்தையாகவும் சொல்லப்படுமென்றபடி.
இப்படிபட்ட பரபக்தி, பரஜ்ஞானம் மற்றும் பரமபக்தி ஆகியவை குறித்து கீதையில் (11-54) - பக்த்யா த்வநந்யயா சக்ய: அஹமேவம்விதோர்ஜுந, ஜ்ஞாதும் த்ரஷ்டுஞ்ச தத்வேந ப்ரேவேஷ்டுஞ்ச பரந்தப - அர்ஜுனா! இந்த ஜகத் ரூபமாகவே உள்ள நான் என்னிடம் வைக்கப்பட்ட பக்தியால் உண்மையாகவே அறிவதற்கும், காண்பதற்கும், அடைவதற்கும் ஏற்றவனாக உள்ளேன் - என்று அர்ஜுனனை நோக்கித் திருத்தேர்த்தட்டில் கூறப்பட்டது. மேலும் கத்யத்ரயத்தில் - பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம் மாம் குருஷ்வ - பரமபக்தி பரஜ்ஞானம் மற்றும் பரமபக்தி ஆகியவற்றையே நான் எப்போதும் கைக்கொள்ளுப்படியாகச் செய்யவேண்டும் - என்று விண்ணப்பம் செய்த பாஷ்யகாரரை நோக்கி ஸ்ரீரங்கநாதன், ‘‘சேரபாண்டியன்’’ எனப்படும் ஸிம்ஹாஸநத்தில் வீற்றிருந்து, சரணாகதி கத்யத்தில் - மத்ஜ்ஞாந தர்சந ப்ராப்திஷு நிஸ்ஸம்சயஸ்ஸ் ஸுகமாஸ்வ - என்னைக் குறித்த ஞானம், என்னைக் காணுதல், என்னை அடைதல் போன்றவை குறித்து எந்தவிதமான சந்தேகமும் இன்றி ஸுகமாக வாழ்வாயாநு - என்று அருளிச்செய்தான். ஆகவே ஸர்வேச்வரனுடன் சேர்ந்தபடி இருத்தல் மற்றும் அவனைப் பிரிதல் என்பதால் ‘‘இன்பதுன்பங்கள் ஏற்படும்’’ என்ற நிலையை உண்டாக்கும் பரபக்தியானது ஞான நிலை ஆகிறது. ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபம், ரூபம், குணங்கள் மற்றும் விபூதிகள் ஆகியவை குறித்து மிகவும் தெளிவாக உணரச்செய்கின்ற பரஜ்ஞானம் என்பது நேரடியாகக் காணும் நிலையாகிறது. இவ்விதம் நேரடியாகவே அறிந்த அவனை அடைந்து அனுபவிக்க இயலவில்லை என்றால், அப்போதே முடிந்து போகும்படியாக உள்ள பரமபக்தியானது, அவனை அடைந்த நிலை என்றாகிறது.