Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 232)
நான்காம் ப்ரகரணம்
முடிந்த அவாவென்றது பரமபக்தி.
அநந்தரம் பரமபக்தத்யவஸ்தையானது இன்னதென்கிறார் (முடிந்த) இத்யாதியாலே.
அடுத்த பரமபக்தியின் நிலை இப்படிப்பட்டது என்று உணர்த்தும் திருவாய்மொழியை அருளிச்செய்கிறார்.
அதாவது அப்படி தர்சித்தவதுதான் மாநஸாநுபவமாய் பாஹ்யாநுபவ யோக்யமல்லாமையாலே பெருவிடாய் பிறந்து கூப்பிட்டுத் தரிக்க மாட்டாமல் திருவாணையிட்டுத் தடுத்து பெறாவாணையல்லாமை ஸாதித்துப் பேற்றோடே தலைக்கட்டின ‘‘முடிந்தவவாவிலந்தாதி யிப்பத்து’’ என்கிற ‘‘முனியே நான்முகன்’’, பக்தியினுடைய சரமாவதியான பரமபக்தியென்கை.
அதாவது நித்யஸூரிகளுடன் சேர்ந்து நின்று பகவானை தரிசனம் செய்து பெற்ற அனுபவம் என்பது, மனதால் மட்டுமே அடைந்த அனுபவம் என்பதாகவும், அது புற இந்த்ரியங்களால் அனுபவிப்பதற்கு இயலாத ஒன்று என்பதாலும் மிகுந்த தவிப்பு ஏற்பட்டது. ஆகவே அவனை அழைத்து, தரித்து நிற்க இயலாமல், திரு ஆணை இட்டு அவனைத் தடுத்து நிறுத்தினார். இடக்கூடாத ஆணை அல்ல என்பதால், அதன் மூலம் தான் எண்ணியதை அடைந்தார். அப்படிப்பட்ட பேற்றுடன் நிறைவு செய்யப்பட்டதான திருவாய்மொழி (10-10-11) - முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து - என்பதான திருவாய்மொழி (10-10-1) - முனியே நான்முகனே - என்னும் திருவாய்மொழி, பக்தியின் எல்லைநிலமான பரம பக்தியாகிறது.