Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 230)

நான்காம் ப்ரகரணம்

கமலக்கண்ணனென்று தொடங்கிக் கண்ணுள் நின்றிறுதி கண்டேனென்ற பத்தும் உட்கண்ணாலேயாய் காண்பானவாவுதல் அதிலிரட்டியாகையாலே கண்டு களிப்பவளவும் பரஜ்ஞாந கர்ப்ப பரபக்தி.

அதில் இவ்வார்த்திக்கடியான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளின் தசைகள் எந்தத் திருவாய்மொழிகளென்னு மபேக்ஷையிலே அவற்றை யருளிச்செய்கிறார் மேல் மூன்று வாக்யத்தாலே. அதுதன்னில் பரபக்த்யவஸ்தை யின்னதென்கிறார் (கமலக்கண்ணன்) என்று தொடங்கி.

இத்தகைய துன்பம் ஏற்படுவதற்கு அடியாக உள்ளதான பரமபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி ஆகியவை எந்தெந்தத் திருவாய்மொழியிகளில் வெளிப்படுகின்றன என்ற கேள்வி எழலாம். இதற்கு அடுத்துள்ள மூன்று சூர்ணைகள் மூலம் விடை அருளிச்செய்கிறார். இந்தச் சூர்ணையில் பரபக்தி நிலை இன்னதாகும் என்று உரைக்கிறார்.

அதாவது, ‘‘கமலக்கண்ணனென் கண்ணினுள்ளான்’’ என்று புண்டரீகாக்ஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானானென்று தொடங்கி, ‘‘கண்ணுள் நின்றகலான்’’ என்று என் கண்வட்டத்தில் நின்றும் கால்வாங்குகிறிலனென்னுமதளவாக, ‘‘என் கண்ணனை நான் கண்டேனே’’, ‘‘கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக்கண்டுகொண்டு’’, ‘‘நறுந்துழாயென் கண்ணியம்மா நானுன்னைக்கண்டுகொண்டே’’, ‘‘கைதொழவிருந்தாயது நானுங் கண்டேனே’’, ‘‘ஏரார் கோலந்திகழக் கிடந்தாய் கண்டேனெம்மானே’’, ‘‘திருவிண்ணகர்க் கண்டேனே’’, ‘‘தேவர்கட்கெல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே’’, ‘‘கண்டேன் கமலமலர்ப்பாதம்’’ என்று இப்பத்துச் சந்தையாலும் சொன்ன ஸாக்ஷாத்காரம், ‘‘நெஞ்சென்னுமுட் கண்ணெ’’ன்கிற ஆந்தர சக்ஷுஸ்ஸான மநஸ்ஸாலே யுண்டானதாய், ‘‘கையபொன்னாழி வெண்சங்கொடுங் காண்பான் அவாவுவன் நான்’’, ‘‘அடியேன் காண்பானலற்றுவன்’’, ‘‘உம்மைக் காணுமாசையுள் நைகின்றாள்’’, ‘‘கூவுகின்றேன் காண்பான்’’, ‘‘மெய்கொள்ளக் காண விரும்புமென்கண்களே’’, ‘‘கூவியுங் காணப்பெறேனுன கோலமே’’, ‘‘உன்னை யெந்நாள் கண்டு கொள்வனே’’, ‘‘கோலமேனி காணவாராய்’’, ‘‘தடவுகின்றே னெங்குக் காண்பன்’’, ‘‘பாவியேன் காண்கின்றிலேன்’’, ‘‘உன்னைக் காண்பான் நானலப்பாய்’’, ‘‘உலகம் பரவக் கிடந்தாய் காணவாராயே’’, ‘‘என்று கொல் கண்கள் காண்பதுவே’’, ‘‘விளங்க ஒருநாள் காணவாராய்’’, ‘‘உன்னைக் காண்பான் வருந்தியெனை நாளும்’’, ‘‘அலைகடல் கடைந்தவப்பனே காணுமாறருளாய்’’, ‘‘ஒரு நாள் காணவாராய்’’, ‘‘தொண்டனேனுன் கழல்காண வொருநாள்வந்து தோன்றாயே’’, ‘‘உன்னையெங்கே காண்கேனே’’, ‘‘உன்னைக் காணக் கருதுமென் கண்ணே’’ என்று பாஹ்ய சக்ஷுஸ்ஸாலே அவனைக் காண வாசைப்பட்டுக் கூப்பிட்ட சந்தைகள் அதிலிரட்டி யுண்டாகையாலே, ‘‘கண்டுகளிப்பக் கண்ணுள் நின்றகலான்’’ என்கிற திருமாலிருஞ்சோலையளவாக ஆந்த்ராநுபவம் செல்லாநிற்க, பெற்றன்றித் தரியாத பாஹ்யாநுபவபேக்ஷை நடக்கையாலே பரஜ்ஞாநத்தை கர்ப்பித்துக் கொண்டிருக்கிற பரபக்தியென்கை.

(கமலக்கண்ணன் என்று தொடங்கி) - திருவாய்மொழி (1-9-9) - கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளான் - என்று, ‘‘தாமரை போன்ற திருக்கண்கள் கொண்டவன் எனது கண்களுக்கு இலக்காகி நின்றான்’’, என்பது தொடங்கி. (கண்ணுள் நின்று இறுதி) - திருவாய்மொழி (10-8-8) - கண்ணுள் நின்றகலான் - என்று, ‘‘எனது கண் வட்டத்திலிருந்து அவன் அகலாமல் உள்ளான்’’, என்பது முடிய உள்ளதான. (கண்டேன் என்ற பத்தும்) - திருவாய்மொழி (2-8-10) - என் கண்ணனை நான் கண்டேனே, திருவாய்மொழி (3-2-10) - கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டு கொண்டு, திருவாய்மொழி (4-7-7) - நறுந்துழாயென் கண்ணியம்மா நானுன்னைக்கண்டுகொண்டே, திருவாய்மொழி (5-7-5) - கைதொழவிருந்தாயது நானுங் கண்டேனே, திருவாய்மொழி (5-8-1) - ஏரார் கோலந்திகழக் கிடந்தாய் கண்டேனெம்மானே, திருவாய்மொழி (6-3-1) - திருவிண்ணகர்க் கண்டேனே, திருவாய்மொழி (9-4-8) - தேவர்கட்கெல்லாம் கருவாகிய கண்ணனைக்கண்டு கொண்டேனே, திருவாய்மொழி (10-4-9) - கண்டேன் கமலமலர்ப்பாதம் - என்று உரைத்த இந்தப் பத்துப் பாசுரங்களிலும் கூறப்பட்டதான காட்சி என்பது, பெரியதிருவந்தாதி (28) - நெஞ்சென்னும் உட்கண் - என்பதற்கு ஏற்ப அகக்கண் என்பதான மனதில் ஏற்பட்டதாக. (காண்பான் அவாவுதல் அதில் இரட்டி ஆகையால்) - திருவிருத்தம் (84) - கையபொன்னாழி வெண்சங்கொடுங்காண்பான் அவாவுவன் நான் - என்றும், திருவாய்மொழி (1-5-7) - அடியேன் காண்பானலற்றுவன், திருவாய்மொழி (2-4-2) - உம்மைக் காணுமாசையுள் நைகின்றாள், திருவாய்மொழி (3-2-8) - கூவுகின்றேன் காண்பான், திருவாய்மொழி (3-8-4) - மெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே, திருவாய்மொழி (3-8-7) - கூவியுங் காணப்பெறேனுன கோலமே, திருவாய்மொழி (3-8-8) - உன்னை யெந்நாள் கண்டு கொள்வனே, திருவாய்மொழி (4-7-1) - கோலமேனி காணவாராய், திருவாய்மொழி (4-7-9) - தடவுகின்றேனெங்குக் காண்பன், திருவாய்மொழி (4-7-10) - பாவியேன் காண்கின்றிலேன், திருவாய்மொழி (5-8-4) - உன்னைக் காண்பான் நானலப்பாய், திருவாய்மொழி (5-8-9) - உலகம் பரவக் கிடந்தாய் காணவாராயே, திருவாய்மொழி (5-9-5) - என்று கொல் கண்கள் காண்பதுவே, திருவாய்மொழி (6-9-4) - விளங்க ஒருநாள் காணவாராய், திருவாய்மொழி (6-9-6) - உன்னைக் காண்பான் வருந்தியெனை நாளும், திருவாய்மொழி (8-1-1) - அலைகடல் கடைந்தவப்பனே காணுமாறருளாய், திருவாய்மொழி (8-5-1) - ஒருநாள் காணவாராய், திருவாய்மொழி (8-5-6) - தொண்டனேனுன் கழல்காண வொருநாள்வந்து தோன்றாயே, திருவாய்மொழி (8-5-10) - உன்னையெங்கே காண்கேனே, திருவாய்மொழி (9-4-1) - உன்னைக் காணக் கருதுமென் கண்ணே - என்றும் கூறுவதற்கு ஏற்ப புறக்கண்கள் கொண்டு அவனைக் காணவேண்டும் என்று விரும்பி அவனை அழைத் பாசுரங்களின் எண்ணிக்கையானது, அகக்கண்களால் காணவேண்டும் என்று கூறிய பாசுரங்களைக் காட்டிலும் இருமடங்காக உள்ளதால். (கண்டு களிப்பவளவும்) - திருவாய்மொழி (10-8-7) - கண்டு களிப்பக் கண்ணுள் நின்றகலான் - என்பதாகிய திருமாலிருஞ்சோலை முடிய. (பரஜ்நாந கர்ப்ப பரபக்தி) - உன் அனுபவம் என்பதைக் காட்டிலும் அதிகமாக இருப்பதால், அவனை அடைந்தால் அல்லாமல் தரிக்க இயலாது என்று உள்ளதான வெளி அனுபவத்தில் ஆசை அதிகமாக உள்ளதால், பரஞானத்தை உள்ளடக்கிய பரபக்தி என்று கருத்து.