Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 229)
நான்காம் ப்ரகரணம்
உறாமையோடே உற்றேனாக்காதொழிந்தது நாடு திருந்த நச்சுப் பொய்கையாகாமைக்கு ப்ரபந்தம் தலைக்கட்ட வேர்சூடுவார் மண்பற்றுப்போலே யென்னுமிவற்றிலு மினியினியென்று இருபதின்கால் கூப்பிடும் ஆர்த்த்யதிகார பூர்த்திக்கென்னுமது முக்யம்.
இனிமேல், இவர் ப்ரதமத்திலே ‘‘இந்நின்ற நீர்மை யினியாமுறாமை’’ என்று ஆர்த்தராய் சரணம் புக்கபோதே விரோதி நிவ்ருத்தி பூர்விகையான ஸ்வப்ராப்தியைப் பண்ணுவியாமல் இவ்வளவாக இவரை வைக்கைக்கடி யேதென்னுமாகாங்க்ஷையிலே, வைக்கைக்கு ஹேது பலவுமுண்டென்னுமத்தையும் அவையெல்லாவற்றிலும் முக்ய ஹேது இன்னதென்னுமத்தையு மருளிச்செய்கிறார் (உறாமையோடே) என்று தொடங்கி.
அடுத்து நம்மாழ்வார் முதலில் திருவிருத்தம்(1) - இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை - என்று துன்பம் அடைந்தவராக நின்று சரணம் புகுந்த அந்த நேரத்திலேயே, ஸர்வேச்வரனை அடைவதற்குத் தடையாக உள்ள அனைத்து விரோதிகளையும் விலக்கி, ஸர்வேச்வரனாகிய தன்னை அவர் அடையும்படியாகச் செய்யாமல், இந்த நாள் முடிய இவரை இந்த ஸம்ஸார உலகத்தில் வைத்தபடி உள்ளதற்குக் காரணம் என்ன என்ற சந்தேகம் எழுகிறது. இதற்குச் சமாதானம் கூறும்விதமாக, இவ்விதம் வைத்துள்ளதற்குத் தகுந்த காரணங்கள் உள்ளன என்றும், அவை அனைத்திலும் முக்கியமான காரணம் இன்னது என்றும் அருளிச்செய்கிறார்.
அதாவது, ‘‘பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமிந்நின்ற நீர்மையினியாமுறாமை’’ என்று அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களாகிற ப்ராப்தி ப்ரதிபந்தகங்களை விடுவிக்கவேணுமென்று ஆர்த்தராய்த் திருவடிகளிலே விழுந்தபேக்ஷித்தபோதே அவற்றைப் போக்கி, ‘‘உற்றேனுகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன்’’ என்று திருவடிகளைக் கிட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப்பெற்றேனென்னும்படி யாக்காமல் இவரை வைத்தது, தன்னுடைய ஸ்ருஷ்ட்யவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து இவருடைய உபதேசத்தாலே ‘‘ஊரும் நாடுமுலகமும் தன்னைப்போல்’’ என்னும்படி திருந்துகைக்காகவும், ப்ரபதநாநந்தரம் முக்தராம்படி பண்ணில் ப்ரபத்தியை நச்சுப்பொய்கையோபாதியாக நினைத்து பீதராயிழிவாரில்லையென்று அது அப்படியாகாமைக்காகவும், தானும் தன் விபூதியும் வாழும்படி இவரைக்கொண்டு கவிபாடுவிக்கத் தொடங்கின ப்ரபந்தம் பரிஸமாப்தமாகைக்காகவும், வேர்சூடுமவர்கள் பரிமளத்தில் லோபத்தாலே மண்பற்றுக் கழற்றாதாப்போலே, ஜ்ஞானிகளை சரம சரீரத்தோடே வைத்து அநுபவிக்குமவனாகையாலே, இவருடைய ஜ்ஞாந ப்ரேம பரிமளமெல்லாம் தோற்றும்படியிருக்கிற விக்ரஹத்தில் தனக்குண்டான விருப்பத்தாலேயுமென்று சொல்லுமவற்றிற்காட்டிலும், ‘‘இனியாமுறாமை’’ என்று தொடங்கி, ‘‘இனிவளை காப்பவரார்’’, ‘‘இனியுன் திருவருளாலன்றிக் காப்பரிதால்’’, ‘‘இனியவர் கண் தங்காது’’, ‘‘இனியுனது வாயலகிலின்னடிசில் வைப்பாரை நாடாயே’’, ‘‘இனியெம்மைச் சோரேலே’’, ‘‘எந்நாள் யானுன்னை யினி வந்து கூடுவனே’’, ‘‘எங்கினித் தலைப்பெய்வேனே’’, ‘‘இனியென்னாரமுதே கூயருளாயே’’, ‘‘ஆவிகாப்பாரினியார்’’, ‘‘நெஞ்சிடர் தீர்ப்பாரினியார்’’, ‘‘இனியுன்னை விட்டொன்று மாற்றகிற்கின்றிலேன்’’, ‘‘தரியேனினி’’, ‘‘இனியாரைக் கொண்டென்னு சாகோ’’, ‘‘அத்தனையாமினி யென்னுயிரவன் கையதே’’, ‘‘நாரைக்குழாங்கள்காள் பயின்றென்னினி’’, ‘‘இனியிருந்தென்னுயிர் காக்குமாறென்’’, ‘‘இனி நான் போகலொட்டேன்’’, ‘‘உண்டிட்டாயினி யுண்டொழியாய்’’, ‘‘உன்னைப் பெற்றினிப் போக்குவனோ’’ என்று இப்படி இருபதின்கால் கூப்பிடும்படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து பரமபக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியையுண்டாக் குகைக்காக வென்னுமதுவே ப்ரதாநமென்கை. ஆர்த்த்யதிகார பூர்த்திக்கென்றது ஆர்த்தியால் வரும் அதிகாரபூர்த்திக்கென்றபடி. பரமார்த்தியாலேயிறே ப்ரபத்த்யதிகாரம் பரிபூர்ணமாவது; ஆகையாலே ஹேத்வந்தரங்களெல்லாம் அப்ரதாநங்கள். இவரை வைத்ததுக்கு ப்ரதாநஹேது இதுவென்றதாய்த்து.
(உறாமையோடே உற்றேனாக்காதொழிந்தது) - திருவிருத்தம் (1) - பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை - என்று உரைப்பதன் மூலம், ஸர்வேச்வரனாகிய அவனை அடைவதற்குத் தடையாக உள்ளவைகளான அவித்யை, கர்மவாசனை, ருசி, ஸம்ஸாரபந்தம் போன்ற பலவற்றையும் விலக்கித் தரவேண்டும் என்று மிகுந்த துன்பம் அடைந்தவராக, அவன் திருவடிகளில் விழுந்து விண்ணப்பம் செய்து நின்ற அப்போதே அவற்றை நீக்கி, திருவாய் (10-8-10) - உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் - என்று கூறுவது போன்று, ‘‘அவனுடைய திருவடிகளை அடைந்து ப்ரீதியை முன்னிறுத்தியபடி கைங்கர்யம் செய்யும் நிலையை அடைந்தேன்’’ என்று செய்யாமல், இவரை இங்கேயே வைத்தது ஏனென்றால், (நாடு திருந்த) - தனது பல்வேறு ஸ்ருஷ்டிகளாலும், அவதாரங்களாலும் இந்த ஜகத்தானது திருந்தாமல் இருந்தது; ஆகவே இவருடைய உபதேசங்கள் மூலமாக திருவாய் (6-7-2) - ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் - என்னும்படியாகத் திருந்துவதற்காகாவும். (நச்சுப் பொய்கையாகாமைக்கு) - ப்ரபத்தி செய்த உடனேயே முக்தர் என்று மாற்றினால், ப்ரபத்தியை நச்சு நிறைந்த பொய்கை என்று எண்ணி அச்சம் கொண்டு அதில் யாரும் ஈடுபடமாட்டார்கள் என்று சிந்திந்து, ப்ரபத்தியானது அவ்விதம் ஆகாமல் இருப்பதற்காகவும். (ப்ரபந்தம் தலைக்கட்ட) - தானும், தனது உடைமையாகிய இந்த ஜகத்தும் வாழும்படியாக இவர் மூலமாகக் கவிபாடுதல் என்பதைத் தொடங்கிய ப்ரபந்தங்கள் நிறைவு பெறுவதற்காகவும். (வேர் சூடுவார் மண் பற்றுப்போலே) - வேரைச் சூட்டிக் கொள்பவர்கள் அதன் வாசனை மீது கொள்ளும் விருப்பம் காரணமாக, அதில் உள்ள மண்பற்றை அகற்றாமல் உள்ளது போன்று, ஞானிகளை அவர்களுடைய இறுதியான சரீரத்துடன் சேர்த்து அனுபவிப்பவனாக ஸர்வேச்வரன் உள்ளான். ஆகவே இவருடைய ஞானம், ப்ரேமை, பரிமளம் போன்ற பலவும் வெளிப்படும் விதமாக உள்ள இவருடைய திருமேனியில் தனக்கு உள்ள விருப்பம் காரணமாகவும். (என்னும் அவற்றிலும்) - அது போன்று உரைக்கும் பல காரணங்களைக் காட்டிலும். (இனி இனி என்று இருபதின்கால் கூப்பிடும் ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு என்னும் அது முக்யம்) - திருவிருத்தம் (1) - இனி யாம் உறாமை - என்று தொடங்கி, திருவிருத்தம் (13) - இனிவளை காப்பவரார், திருவிருத்தம்(62) - இனியுன் திருவருளாலன்றிக் காப்பரிதால், திருவாய்மொழி (1-4-4) - இனியவர் கண் தங்காது, திருவாய்மொழி (1-4-8) - இனியுனது வாயலகிலின்னடிசில் வைப்பாரை நாடாயே, திருவாய்மொழி (2-1-10) - இனியெம்மைச் சோரேலே, திருவாய்மொழி (3-2-1) - எந்நாள் யானுன்னை யினி வந்து கூடுவனே, திருவாய்மொழி (3-2-9) - எங்கினித் தலைப்பெய்வேனே, திருவாய்மொழி (4-9-6) - இனியென்னாரமுதே கூயருளாயே, திருவாய்மொழி (5-4-2) - ஆவிகாப்பாரினியார், திருவாய்மொழி (5-4-9) - நெஞ்சிடர் தீர்ப்பாரினியார், திருவாய்மொழி (5-7-1) - இனியுன்னை விட்டொன்று மாற்றகிற்கின்றிலேன், திருவாய்மொழி (5-8-7) - தரியேனினி, திருவாய்மொழி (7-3-4) - இனியாரைக் கொண்டென் னுசாகோ, திருவாய்மொழி (9-5-2) - அத்தனையாமினி யென்னுயிரவன் கையதே, திருவாய்மொழி (9-5-10) - நாரைக்குழாங்கள்காள் பயின்றென்னினி, திருவாய்மொழி (9-9-2) - இனியிருந்தென்னுயிர் காக்குமாறென், திருவாய்மொழி (10-10-1) - இனி நான் போகலொட்டேன், திருவாய்மொழி (10-10-6) - உண்டிட்டாயினி யுண்டொழியாய், திருவாய்மொழி (10-10-7) - உன்னைப் பெற்றினிப் போக்குவனோ - என்றும் உள்ள பாசுரங்களில் இருபது முறை அழைக்கும்படியாகத் தன்னைப் பின்தொடர்ந்து வரும் துன்பத்தை ஏற்படுத்தி, பரமபக்தி வரை உண்டாவதான தகுதியின் பரிபூர்ண தன்மையை ஏற்படுத்துதல் என்பதே ஆழ்வாரை இங்கு நிறுத்தி வைத்ததன் முதன்மையான காரணம் ஆகும். இங்குள்ள ‘‘ஆர்த்தி அதிகார பூர்த்தி’’ என்பது ‘‘துன்பத்தால் உண்டாகும் பரிபூர்ணமான தகுதி’’ என்பதாகும். ஸம்ஸாரத்தில் உண்டாகும் மிகுந்த துக்கம் என்பது அல்லவோ ப்ரபத்திக்கான அதிகாரத்தை பரிபூர்ணமாகச் செய்கிறது! ஆகவே மற்ற காரணங்கள் எதுவும் முக்கியமானது அல்ல. இவரை இங்கு வைத்தபடி இருப்பதற்கான முக்கியமான காரணம் இதுவே ஆகும் என்று கருத்து.