Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 228)

நான்காம் ப்ரகரணம்

[1] சுரிகுழல் அஞ்சனப் புனல் மைந்‍நின்ற பொல்லாப் புனக் காயாவென்னும் ஆபத்திற் கொள்‍ளும் காமரூப கந்தரூபத்தாலே ப்ரபந்‍நார்த்தி ஹரனானவன், [2] அருள்பெறும் போதணுகவிட்டதுக்குப் பலமான வானேறுங் கதிக்கு அண்ட மூவுலகும் முன்னோடிக் கால் விழுந்திடத்தே நிழல் தடங்களாக்கி அமுதமளித்த தயரதன் பெற்‍ற கோவலனாகையாலே வேடன் வேடுவிச்சி பக்ஷி குரங்கு சராசரம் இடைச்சி தயிர்த்தாழி கூனி மாலாகாரர் பிணவிருந்து வேண்டடிசிலிட்டவர் அவன் மகனவன் தம்பி ஆனை அரவம் மறையாளன் பெற்‍ற மைந்தனாகிற பதினெட்டு நாடன் பெருங்கூட்டம் நடத்துமாத்தனை வழித்துணையாக்கி, [3] அறியச் சொன்ன ஸுப்ரபாதத்தே துணைபிரியாமல் போக்கொழித்து மீள்கின்றதில்லையென்று நிச்சித்திருந்தவர், ஸஞ்சிதங் காட்டும் தசையானவாறே [4] முந்துற்‍ற நெஞ்சுக்குப் பணி மறவாது மருளொழி நகு கைவிடேலென்று க்ருத்யாக்ருத்யங்களை விதித்து நெஞ்சுபோல்வாரைத் தொண்டீரென்றழைத்து, [5] வலஞ்செய்து எண்‍ணுமின் பேசுமின் கேண்மின் காண்மின் நடமின் புகுதுமென்று கர்த்தவ்யம் ஸ்மர்த்தவ்யம் வக்தவ்யம் ச்ரோதவ்யம் த்ரஷ்டவ்யம் கந்தவ்யம் வஸ்தவ்யமெல்லாம் வெளியிட்டுப் [6] பிணக்கறச் சார்வாக நிகமித்து [7] எண்பெருக்கி லெண்‍ணும் திருநாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி மாதவனென்று த்வயமாக்கிக் கரண த்ரய ப்ரயோக வ்ருத்தி ஸம்ஸாரிகளுக்குக் கையோலை செய்து கொடுத்துச் செஞ்சொற்கவிகளுக்குக் கள்‍ள வழி காவலிட்டு [8] மனம் திருத்தி வீடு திருத்தப்போய் நாடு திருந்தினவாறே வந்து விண்‍ணுலகம் தரவிரைந்து அத்தை மறந்து குடிகொண்டு தாம் புறப்பட்ட வாக்கையிலே புக்குத் தானநகர்களை அதிலே வகுத்துக் குரவை துவரைகளில் வடிவு கொண்ட சபலனுக்கு தோஷமறிவித்து [9] மாயையை மடித்து வானே தரக் கருதிக் கருத்தின்கண் பெரியனானவனை இன்று அஹேதுகமாக வாதரித்த நீ அநாத்யநாதர ஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க, [10] “இந்த்ரிய கிங்கரராய்க் குழிதூர்த்துச் சுவைத்தகன்றீர் என்னில், அவை யாவரையும் அகற்‍ற நீவைத்தவை யென்பர்; அது தேஹயோகத்தாலே யென்னில், அந்‍நாள் நீ தந்த சுமடென்பர்; முன்செய்த முழுவினையாலேயென்னில், அது துயரமே உற்‍ற விருவினை உன் கோவமுமருளு மென்பர்; [11] ஈவிலாத மதியிலே னென்னு மும்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களென்னில், ஆங்காரமாய்ப் புக்குச் செய்கைப் பயனுண்பேனும் கருமமும் கருமபலனுமாகிய நீ கர்த்தா போக்தாவென்பர்; [12] யானே எஞ்‍ஞான்று மென்றத்தாலே யென்னில்; அயர்ப்பாய்ச் சமயமதி கொடுத்து உள்‍ளம் பேதம் செய்கை உன் தொழிலென்பர்; ஜீவப்ரக்ருதிசைதந்யம் நீங்கும் வ்ரத ஹேது: அகமேனியிலழுக்கறுக்கை அபிமாநி க்ருத்யம்; [13] தான் நல்கும் பந்தம் நிருபாதிகம். ஸௌஹார்தம் எஞ்‍ஞான்றும் நிற்கும்; பிணக்கிப் பேதியாத ஜ்ஞாநாதி வைகல்யமில்லை; ஏக மூர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ந பலித்வங்கள் நம்மது; [14] நாம் தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அறிந்தனமே யென்னும் ஸர்வஜ்ஞரிவர், [15] நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும் நிருத்தரமென்று கவிழ்ந்து நிற்க, [16] அமந்த்ரஜ்ஞோத்ஸவ கோஷம் போலே ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற மேக ஸமுத்ர பேரீ கீத காஹள சங்காசீஸ் ஸ்துதி கோலாஹலம் செவிப்பட்டவாறே ஸாக்ஷாத்கரித்த பரப்ராப்திக்குத் [17] தலைமிசையாய் வந்த தாள்களைப் பூண்டு போகாமல் தடுத்துத் திருவாணையிட்டுக் கூசம் செய்யாத செய்திப் பிழை, [18] பற்றுக்கொம்பற்‍ற கதிகேடு, போரவிட்ட பெரும்பழி, [19] புறம்போனால் வருமிழவு, [20] உண்டிட்ட மூற்‍றீம்பு, அன்பு வளர்ந்த அடியுரம், உயிருறவு [21] முதலளவு துரக்கைகளாலே பேரவா குளப்படியாம்படி கடல் போன்ற ஆதரத்தோடே சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளியிடுகிறார் பத்தாம்பத்தில்.

பத்தாம்பத்தில், இப்படி ஆபத்ஸகனாகையாலே அவ்வாபத் ரக்ஷணாநுரூபமாகப் பரிக்ரஹிக்கும் விக்ரஹங்களுக்கெல்லாம் மூலபூதமாய் நிரதிசய வைலக்ஷண்ய யுக்தமான திவ்யவிக்ரஹத்தோடே வந்து தோன்றி, தன்பக்கல் ந்யஸ்த பரரானவர்கள் ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பாலும் தன் திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கப் பொறாமையாலும் படுமார்த்தியை ஹரிக்கும் ஸ்வபாவனானவன், கீழில்பத்தில் தம்முடைய த்வராநுகுணமாக நாளிட்டுக் கொடுத்ததுக்குப் பலம் அர்ச்சிராதிகதியாலே தேச விசேஷத்திலேறப் போகையாகையாலே அதுக்கு ஆப்ததமனானவன் தன்னை வழித்துணையாகப் பற்றி, இனி ப்ராப்தியில் கண்ணழிவில்லை என்று தமக்கேற நிச்சயித்தவிவர், மறைத்து வைத்த அர்த்தமுள்ளதும் வெளியிடவேண்டும்படியான தசையானவாறே, ப்ரதமோபதேச பாத்ரமான தம் திருவுள்ளத்துக்கு க்ருத்யாக்ருத்யங்களை விதித்து, அப்படி பவ்யரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு கர்த்தவ்யாதிகளை வெளியிட்டு, முதலிலே உபக்ரமித்த பக்தி யோகத்தையும் நிகமித்து, ஸம்ஸாரிகளுக்கு ஸுகரமாக ஆச்ரயணத்தை உபதேசித்து, அநுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு சீலகுணமாகிற ஆழங்காலையுங்காட்டி, தம்பக்கல் விருப்பத்தாலே தம் திருமேனியில் அதிவ்யாமோஹம் பண்ணுகிறவீச்வரனுக்கு அதின் தோஷத்தையுணர்த்தி, இப்போது தமக்குப் பரதந்தரனாய் தம்மைப் பரமபதத்திலே கொண்டு போவதாக அத்யாதரம் பண்ணுகிறவனை, அநாதிகாலம் தம்மை ஸம்ஸரிக்க விட்டு உபேக்ஷித்திருந்ததுக்கு ஹேது வென்னென்று கேட்க, அவனும் இந்த்ரிய வச்யதை முதலான ஹேது பரம்பரையை எண்ணி, அதுவும் மதாயத்த மென்றறியும் ஸர்வஜ்ஞரான விவர்க்குப் போக்கடி சொல்லுகையரிதென்று நிருத்தரனாய், அர்ச்சிராதி மார்க்கத்தையும் அங்குள்ளாருடைய ஸத்காரத்தையும் அவ்வழியாலே போய்ப் பெறும் ஸ்வசரண கமல ப்ராப்தி பர்யந்தமாகக் காட்டிக் கொடுக்க, அத்தை ஸாக்ஷாத்கரித்து, அது மாநஸாநுபவ மாத்ரமாய் பாஹ்யகரண யோக்யமல்லாமையாலே அத்தை யதாவாக ப்ராபிக்க வேணுமென்று பதறி அவனுக்கு மறுக்கவொண்ணாத திருவாணையிட்டுத் தடுத்து, அது பெறாவாணையல்லாமைக்கு ஹேதுக்களையும் சொல்லும்படியான தம்முடைய பரமபக்தியெல்லாம் குளப்படியாம்படியான அபிநிவேசத்தோடே வந்து தம்முடைய தாபங்களைப் போக்கின ப்ரகாரத்தை வெளியிடுகிறாரென்கிறார்.

– இவ்விதம் அனைத்து ஆபத்து காலங்களில் துணையாக உள்ளவன் என்பதால், அத்தகைய ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றுவதற்கு ஏற்றவிதமாக எடுக்கின்ற திருமேனி வடிவங்கள் அனைத்திற்கும் மூலமாகவும், தனக்கு மேல் ஏதும் இலை என்ற மேன்மை கொண்டதாகவும் உள்ள திவ்யமான திருமேனியுடன் வந்து தோன்றுகிறான். தன்னிடம் தங்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஒப்படைத்தவர்கள், ஸம்ஸாரத்தின் துயரங்களாலும் தனது திருவடிகளைக் கிட்டி நின்று அனுபவிக்க இயலாமல் ஏற்படும் துன்பங்களாலும் அனுபவிக்கின்ற துக்கத்தைப் போக்கும் தன்மை கொண்டவனாக உள்ளான். இப்படிப்பட்ட அவன், நம்மாழ்வாராகிய தனது பதற்றத்துக்கு ஏற்றவிதமாக நாள் குறித்துக் கொடுத்தற்கான பலன் என்பது, அர்ச்சிராதி மார்க்கமாக பரமபதத்தில் ஏறுதல் என்பதாக உள்ளதால், அதற்கு உதவுபவனாக உள்ள அவனையே வழித்துணையாகப் பற்றி நின்று, இனி அந்தப் பேற்றில் கண்ணழிவில்லை என்று ஒன்பதாம் பத்தில் முடிவு செய்தார். இவ்விதமாகத் தீர்மானித்த நம்மாழ்வார், இதுவரை மறைத்து வைத்திருந்த விஷயங்களைக் கூட வெளியிடவேண்டும் நிலைமை ஏற்பட்டவுடன், தனது திருவுள்ளத்திற்கு, “இதனைச் செய்யவேண்டும், இதனைத் தவிர்க்கவேண்டும்”, என்று பலவற்றையும் விதித்தார்; இதுவே உபதேசத்தைப் பெறவதற்கான முதல் தகுதியாக அமைகிறது. இது போன்றே திருவுள்ளம் கொண்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் செய்யத்தக்கவை எவை என்று உணர்த்தினார். முதலில் தான் உரைக்கத் தொடங்கிய பக்தி யோகத்தை முழுவதுமாக உரைத்து முடித்தார். தொடர்ந்து இந்த ஸம்ஸாரத்தில் உள்ளவர்கள் மிகவும் சுலபமாக ஸர்வேச்வரனை அடையும் மார்க்கத்தை உபதேசித்தார். அவனுடைய அனுபவம் என்ற கைங்கர்யங்களில் நிலைநிற்பவர்களுக்கு, அவனுடைய சீல குணத்தைக் காண்பித்தான். நம்மாழ்வாராகிய தன்னிடம் உள்ள ப்ரேமை காரணமாக மிகுந்த ஈடுபாட்டுடன் நின்று ஸர்வேச்வரனுக்குத் தனது சரீரத்தில் உள்ள தோஷங்களைக் குறித்து உரைத்தார். அதன் பின்னர் ஸர்வேச்வரனாகிய தனக்கு மட்டுமே வசப்பட்டவராக நம்மாழ்வாரை மாற்றி, அவரைப் பரமபதம் கொண்டு செல்வதாக எண்ணி, அவரிடம் மிகுந்த ப்ரேமையை வெளிப்படுத்திய ஈச்வரனிடம், “எல்லையற்ற காலம் இந்த ஸம்ஸாரத்தில் என்னைத் தவிக்கும்படிச் செய்து, என்னை இத்தனை காலமாக மறந்தபடி இருந்த காரணம் என்ன?”, என்று கேட்டார். அப்போது ஸர்வேச்வரன், “இந்த்ரியங்களுக்கு வசப்பட்டிருத்தல் போன்ற பல காரணங்களால் ஸம்ஸாரத்தில் உள்ள நிலை உமக்கு ஏற்பட்டது”, என்று கூற எண்ணினான். “ஆனால் அந்த இந்த்ரியக்கள் அனைத்தும் ஸர்வேச்வரனாகிய நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளதை இவர் அறிவார். ஆகவே அதனை அவருக்கு உரைத்து சமாதானம் செய்வது கடினமே ஆகும்”, என்று எண்ணி விடை ஏதும் கூறாமல் இருந்தான். மேலும் நம்மாழ்வாருக்கு அர்ச்சிராதி மார்க்கத்தையும், அந்த வழியில் செல்லும்போது ஆங்காங்கு உள்ளவர்கள் செய்யும் உபசாரங்களையும், அந்த மார்க்கத்தில் செல்வதன் மூலம் கிட்டவில்ல பேறாகிய தனது திருவடிகளை அடைதல் போன்ற பலவற்றையும் காண்பித்துக் கொடுத்தான். அவை அனைத்தையும் நேரடியாகவே உணர்ந்த நம்மாழ்வார், அவை மனதால் மட்டுமே அனுபவிக்கக் கூடியவை என்றும், வெளி இந்த்ரியங்களால் காண இயலாதவை என்றும் உணர்த்தபடியால், அவற்றை உள்ளது உள்ளபடி அடையவேண்டும் என்று தவித்தார். ஆகவே அவனால் மறுக்க இயலாதபடியான ஒரு ஆணையை இட்டுத் தடுத்து, அந்த ஆணையை மீற இயலாமல் இருப்பதற்கான காரணங்களை உரைப்பதான, தனது பரமபக்தி அனைத்தையும் ஸமுத்திரத்திற்கு முன்பு பசுவின் கால் குளம்பில் ஏற்படும் குழியில் தங்கும் நீர் போன்று ஆக்கும்விதமாக மிகுந்த ஈடுபாட்டுடன் ஸர்வேச்வரன் வந்து நின்று, தனது துன்பங்கள் அனைத்தையும் நீக்கிய விதத்தை பத்தாம் பத்தில் அருளிச்செய்தார்.

[1] (சுரிகுழலஞ்சனப் புனல் மைந்நின்ற பொல்லாப்புனக்காயாவென்னுமாபத்தில் கொள்ளும் காமரூப கந்தரூபத்தாலே ப்ரபந்‍நார்த்தி ஹரனானவன்) “சுரிகுழற்கமலக்கட் கனிவாய்”, “அஞ்சனமேனி”, “புனல்மைந்நின்றவரை போலும் திருவுருவம்”, “பொல்லாக் கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கம்”, “புனக்காயாநிறத்த புண்டரீகக் கட்செங்கனிவாய்” என்று அந்யோந்ய விலக்ஷணமாய் அதிமநோஹரமாய் அநுபவிதாக்களைத் தனித்தனியே ஆழங்கால் படுத்தவல்ல அவயவ சோபையையும் அதுக்குப் பரபாகமாய் அத்யுஜ்ஜ்வலமாய் விடாயர் முகத்திலே நீர் வெள்ளத்தைத் திறந்து விட்டாப்போலே ஸகல ச்ரமங்களு மாறும்படி யிருக்கும் திருநிறத்தையுமுடைத்தாகச் சொல்லப்படுமதாய், “காம ரூபங் கொண்டெழுந் தளிப்பான்” என்று ஆச்ரிதருடைய ஆபத்ரக்ஷணாநுரூபமாக வேண்டினபடி பரிக்ரஹிக்கும் விக்ரஹங்களுக்கெல்லாம் கந்தமாயிருக்கும் திவ்யவிக்ரஹத்தைக் கொண்டு தன்பக்கல் நிக்ஷிப்தபரரானவர்கள் அநிஷ்டமான ஸம்ஸாரத்திலிருப்பாலும் அபீஷ்டமான தன் திருவடிகளைக் கிட்டாமையாலும் படும் ஆர்த்தியைத்தீர்க்கும் ஸ்வபாவனானவன். [2] (அருள்பெறும்போதணுகவிட்டதுக்குப் பலமான வானேறும் கதிக்கு அண்டமூவுலகும் முன்னோடிக் கால்விழுந்திடத்தே நிழற்‍றடங்களாக்கி அமுதமளித்த தயரதன் பெற்ற கோவலனாகையாலே, வேடன், வேடுவிச்சி, பக்ஷி, குரங்கு, சராசரம், இடைச்சி, இடையர், தயிர்த்தாழி, கூனி, மாலாகாரர், பிணவிருந்து, வேண்டடிசிலிட்டவர், அவன் மகன், அவன்தம்பி, ஆணை, அரவம், மறையாளன், பெற்றமைந்தன் ஆகிற பதினெட்டு நாடன் பெருங்கூட்டம் நடத்து மாத்தனை வழித்துணையாக்கி) “அவனுடையருள் பெறும் போதரிதால்”, “அவனருள்பெறுமளவாவி நில்லாது” என்று கீழில் பத்திலே க்ஷண கால விளம்பம் பொறாதபடி ஆர்த்தரான தமக்கு. “மரணமானால்” என்று ஆரப்த சரீராவஸாநத்திலே மோக்ஷம் தருகிறோமென்றணித்தாக நாளிட்டுக் கொடுத்ததுக்குப் பலம், “வானேற வழிதந்த” என்று ப்ராப்ய பூமியான பரமபதத்திலே சென்று புகுருகைக்கு வழியாக அவன் காட்டிக்கொடுத்த அர்ச்சிராதிகதியாலே போகப் பெறுகையாலே அவ்வர்ச்சிராதிகதிக்கு, ராஜகுமாரன் வழிபோம்போது வழிக்குக் கடவார் முன்னோடி நிலம் சோதித்து நிழலும் தடாகமும் பண்ணி பின்னை கொண்டுபோமாப்போலே, “அண்டமூவுலகளந்தவன்” என்று திருவுலகளக்கவென்றொரு வ்யாஜத்தாலே முன்னோடி நிலம் சோதித்து, “அவனடி நிழல்தடம்” என்று காளமேகமான தன் கால் விழுந்தவிடத்தே நிழலும் தடாகமுமாம்படி பண்ணி, அமுதமளித்த பெருமானாகையாலே, “பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தநாம்ருதம்” என்கிறபடியே பாதேயமாகத் தன் திவ்யகுணாம்ருதத்தை வர்ஷிக்குமவனாய், “தயரதன் பெற்ற மரதகமணித்தடம்” என்றும், “கூத்தன் கோவலன்” என்றும் சக்ரவர்த்தி திருமகனாயும் க்ருஷ்ணனாயும் வந்தவதரித்தவனாகையாலே, – “குஹமாஸாத்ய தர்மாத்மா நிஷாதாதிபதிம் ப்ரியம்” என்னும்படி “மாழைமான் மடநோக்கி உன் தோழியும்பியெம்பி” என்று பிராட்டியையும் இளையபெருமாளையும் முன்னிட்டு, “உகந்த தோழன் நீ” என்று விஷயீகரிக்கப் பெற்ற ஸ்ரீகுஹப்பெருமாள்; “ஸோப்யகச்சந் மஹாதேஜாச் சபரீம்” என்கிறபடியே தானே சென்று கிட்டி விருந்துண்டு, “சக்ஷுஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந” என்னும்படி தன் விசேஷ கடாக்ஷத்தாலே பூதையாக்கின சபரி; ஸ்ரீகார்யார்த்தமாக தேஹத்தையழிய மாறினவரென்னுமுகப்பாலே “யா கதிர் யஜ்ஞசீலாநாம் ஆஹிதாக்நேச்சயா கதி:, அபராவர்த்திநாம் யாச யாச பூமிப்ரதாயிநாம், மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகாந்நுத்தமாந்” என்று விஷயீகரிக்கப்பட்ட ஸ்ரீஜடாயு மஹாராஜர்; குரங்கென்றவிது ஜாத்யேக வசநமாகையாலே “ஸுக்ரீவம் நாதமிச்சதி” என்று அத்தலையித்தலையாய்ச் சென்றங்கீகரிக்கப் பெற்ற வாநராதிபதியான மஹாராஜரும், பரிகரமான வாநரவர்க்கமும்; “ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்” என்று ஒரு ஹேதுவுமின்றிக்கே யிருக்கச்செய்தே ஸ்வஸம்ச்லேஷ விச்லேஷைக ஸுகது:கராம்படியாக விஷயீகரிக்கப் பெற்ற அயோத்தியில் வாழும் சராசரம். – “சிந்தயந்தி ஜகத்ஸுதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம், நிருச்ச்வாஸதயா முக்திம் கதாந்யா கோபகந்யகா” என்று விக்ரஹ வைலக்ஷண்யமே உபாயமாக வீடு கொடுக்கப் பெற்ற சிந்தயந்தி; வெண்ணெய் களவு காணப்புக்கவிடத்தே தொடுப்புண்டு வந்து தம்மகத்தே புகப் படலைத் திருகி வைத்து “மோக்ஷம் தராவிடில் காட்டிக்கொடுப்பேனெ”ன்று மோக்ஷம் பெற்ற ததிபாண்டர்; நாமரூபங்களுள்ளவற்றுக் கெல்லாம் ஒரு சேதநாதிஷ்டாநமுண்டாகையாலே இதுக்கு மோக்ஷம் கொடுக்கவேண்டுமென்கிற அவன் நிர்ப்பந்தத்துக்காக மோக்ஷம் கொடுக்கப் பெற்ற தயிர்த்தாழி; “ஸுகந்தமேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிராந்நே, ஆவயோர் கரத்ர ஸத்ருசம் தீயதாமநுலேபநம்” என்று பூசும் சாந்தபேக்ஷிக்க அநந்ய ப்ரயோஜநமாகக் கொடுத்த ப்ரீதியாலே விசேஷ கடாக்ஷ விஷய பூதையான கூனி; “தந்யோஹமர்ச்சயிஷ்யாமி” என்று அநந்யப்ரயோஜநமாக பூவைக்கொடுத்த உகப்பாலே “தர்மே மநச்ச தே பத்ர ஸர்வகாலம் பவிஷ்யதி, யுஷ்மத் ஸந்ததி ஜாதாநாம் தீர்க்கமாயுர்ப்பவிஷ்யதி” என்று விசேஷ கடாக்ஷம் பண்‍ணப் பெற்ற ஸ்ரீமாலாகாரர்; “நவம் சவமிதம் புண்யம் வேதபாரகமச்யுத, யஜ்ஞசீல மஹாப்ராஜ்ஞ ப்ராஹ்மணம் சவமுத்தமம்” என்று “யதந்‍ந: புருஷோ பவதி”ப்படியே பிண விருந்திட்ட கண்டாகர்ணன்; “வேண்டடிசிலுண்ணும் போதீதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவிலோசனத்தில்” பக்தி புரஸ்ஸரமாக அடிசில் கொண்டு வந்திட்ட ருஷி பத்நிகள். – “மீளவவன் மகனை” என்று ஹிரண்ய புத்ரனாய் வைத்துத் தன்னருளுக்கு விஷயமாம்படி பக்தனான ஸ்ரீப்ரஹ்லாதன்; “அவன் தம்பிக்கு” என்னும்படி ராவணாநுஜனாய் “அநுஜோ ராவணஸ்யாஹம்” இத்யாதிப்படியே ஸ்வநிகர்ஷத்தை முன்னிட்டு, “ராகவம் சரணம் கத:” என்று திருவடிகளையடைந்த ஸ்ரீவிபீஷணாழ்வான்; “பரமாபதமாபந்‍நோ மநஸாசிந்தயத்தரிம், ஸது நாகவர: ஸ்ரீமாந் நாராயண பராயண:” என்று ஸ்வயத்நத்தை விட்டு ப்ரபந்‍நனாய் ஸ்வாபிலஷித கைங்கர்யம் பெற்ற ஸ்ரீகஜேந்திராழ்வான்; “நஞ்சு சோர்வதோர் வெஞ்சினவரவம் வெருவி வந்து நின் சரணென” என்கிறபடியே பெரியதிருவடிக்கஞ்சி வந்து திருவடிகளைச் சரணமாக வடைந்த ஸுமுகன்; “மாகமாநிலம் முழுதும் வந்திறைஞ்சும் மலரடிக் கண்ட மாமறையாளன்” என்று க்ருஷ்ணாவதாரத்தில் தன்னுடைய பால்ய சேஷ்டிதாதிகளை ஸாக்ஷாத்கர்த்துகாமனாய் தபஸ்ஸு பண்ணி அப்படியே காட்டியருளக் கண்டு அனுபவித்தவநந்தரம் நித்யாநுபவத்தை அபேக்ஷித்த கோவிந்தஸ்வாமி; “மாமுனி பெற்ற மைந்தன்” என்று ம்ருகண்டு புத்ரனாய் மோக்ஷார்த்தமாகத் தன்னை வந்தடைந்த மார்க்கண்டேயன்; இவர்களாகிற நாநாஜாதிதையாலும் இப்படி பதினெட்டாக வெண்ணலாம்படி யிருக்கையாலும், “பதினெட்டு நாடன் பெருங்கூட்டம் போலே”யிருந்துள்ள வித்திரளை அர்ச்சிராதி மார்க்கத்தாலே தானே துணையாய்க் கொண்டு நடத்துமவனாய், “திருமோகூராத்தன் தாமரையடியன்றி மற்றிலமரண்”, “காளமேகத்தையன்றி மற்றொன்றிலங்கதி” என்னும்படி திருமோகூரிலே நின்றருளின பரமாப்தனான காளமேகத்தை வழித்துணையாகக் கொண்டு. [3] (அறியச்சொன்ன ஸுப்ரபாதத்தே துணைபிரியாமல் போக்கொழித்து மீள்கின்றதில்லை யென்று நிச்சித்திருந்தவர்) “நாமுமக்கறியச் சொன்ன நாள்களும் நணியவான” என்றும், “நாளேலறியேன்” என்றும், “மரணமானால்” என்றும் நானுங்களுக்குச் சொன்ன நாள் ஆஸந்‍நமாய்த்தென்று பிறர்க்கும் பேசும்படியாய், “ஸுப்ரபாதாச மே நிசா” என்றும், “ஸுப்ரபாதாத்ய ரஜநீ மதுராவாஸ யோஷிதாம்” என்றும் சொல்லுகிறபடியே, பகவத் ப்ராப்தி யணித்தானவாறே நல்விடிவான நாளிலே, “துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை”, “பசுமேய்க்கப் போகேல்”, “என் கைகழியேல்”, “அவன் பசு நிரை மேய்ப்பொழிப்பானுரைத்தன” என்று தமக்குத் துணையானவவனைப் பசு மேய்க்கையாகிற அபிமதத்தைப் பற்றவும் போகாதபடி பண்ணி, “மீள்கின்றதில்லைப் பிறவித் துயர் கடிந்தோம்”, “நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேன்” என்று ஸம்ஸார துரிதம் மறுவலிடாதென்று, “ந பிபேதி குதச்சந” என்கிறபடியே ஒன்றுக்குமஞ்சாதபடி நிச்சயித்திருந்தவர், (ஸஞ்சிதம் காட்டும் தசையானவாறே) மரண தசையானவளவிலே ஸஞ்சிதமாய்ப் புதைத்துக் கிடக்கும் மஹாநிதிகளைப் புத்ராதிகளுக்குக் காட்டுவாரைப்போலே, தமக்கு பகவத் ப்ராப்தியணித்தானவாறே, ஒருவருமிழக்க வொண்ணாது, எல்லார்க்கும் ஹிதாஹிதங்களறிவிக்க வேணும் என்று பார்த்து. [4] (முந்துற்ற நெஞ்சுக்குப் பணிமறவாது மருளொழி நகு கைவிடேலென்று க்ருத்யாக்ருத்யங்களை விதித்து) “தொழுதெழென் மனனே” என்று ப்ரதமத்திலே உபதேசிக்கும்படி, “முந்துற்ற நெஞ்சே” என்கிறபடியே தம்மிலும் பகவத் விஷயத்திலே முற்பட்டு நிற்கிற தம் திருவுள்ளத்திற்கு, “பணி நெஞ்சே நாளும் பரமபரம்பரனை”, “வாழி யென்னெஞ்சே மறவாது வாழ்கண்டாய்”, “மருளொழி நீ மடநெஞ்சே”, “நரகத்தை நகு நெஞ்சே”, “வாழி மனமே கைவிடேல்” என்று நம் ப்ரதிபந்தகங்களையெல்லாம் தானே போக்கியடிமை கொள்ளும் ஸர்வஸ்மாத்பரனை அநுபவிக்கப்பார். உனக்கு இஸ்ஸம்ருத்தி மாறாதே சென்றிடுக. கைபுகுந்ததென்னா இதர விஷயங்களில் செய்யுமத்தை இவ்விஷயத்திலும் செய்யாதேகொள்; “திருவாறன்விளை யதனை மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்” என்று ப்ராப்யவஸ்து கிட்டிற்றாகில் இங்கேயடிமை செய்யவமையாதோ வென்று உகந்தருளின நிலங்களில் நசையாலே ப்ரமிப்பதொன்றுண்டுனக்கு, அத்தைத் தவிரப்பார்; உத்தேச்ய வஸ்து ஸந்நிஹிதமாய்த்தென்று இத்தையே பார்க்குமித்தனையோ; நம்மையும் பார்க்க வேண்டாவோ; நான் பரமபதத்தேறப் போகா நின்றேன், நெடுநாள் நம்மைக் குடிமக்களாக்கி யெளிவரவுபடுத்தின ஸம்ஸாரத்தைப் புரிந்து பார்த்துச் சிரித்துப் போருகிடாய்; நமக்கு இஸ்ஸம்பத்தெல்லாம் திருமலையாலே வந்ததாய்த்து. அத்திருமலையைக் கைவிடாதேகொள் என்று க்ருத்யாக்ருத்யங்களை அவச்யகரணீயமாம்படி விதித்து. (நெஞ்சுபோல்வாரைத் தொண்டீரென்றழைத்து) தம் திருவுள்ளம் போலே அந்தரங்கரான ஸ்ரீவைஷ்ணவர்களை “தொண்டீர் வம்மின்” என்று பகவத்விஷயத்தில் சபலரானார்! வாருங்கோளென்றழைத்து. [5] (வலஞ்செய் தெண்ணுமின் பேசுமின் கேண்மின் காண்மின் நடமின் புகுது மென்று கர்த்தவ்யம் ஸ்மர்த்தவ்யம் வக்தவ்யம் ச்ரோதவ்யம் த்ரஷ்டவ்யம் கந்தவ்யம் வஸ்தவ்யமெல்லாம் வெளியிட்டு) “கொண்ட கோயிலை வலஞ்செய்திங்காடுதும் கூத்தே” என்று அவனெழுந்தருளி நிற்கிற தேசத்தைக் குறித்து அநுகூலவ்ருத்தியைப் பண்ணி ஹ்ருஷ்டராவோம் வாருங்கோளென்கையாலே கர்த்தவ்யமும், “எண்ணுமினெந்தை நாமம்” என்று ஸ்வாமியுடைய திருநாமத்தை அநுஸந்தியுங்கோளென்கையாலே ஸ்மர்த்தவ்யமும், “பேசுமின் கூசமின்றி” என்று உங்களயோக்யதை பார்த்துக் கூசாதே திருவனந்தபுரத்திலே ஸ்நேஹத்தைப்பண்ணி வர்த்திக்கிறவனைப் பேசுங்கோளென்கையாலே வக்தவ்யமும், “நமர்களோ சொல்லக் கேண்மின்” என்று நம்மோடு ஸம்பந்தமுடையீர்! நாம் சொல்லுகிறத்தைக் கேளுங்கோளென்கையாலே ச்ரோதவ்யமும், “படமுடையரவில் பள்ளி பயின்றவன் பாதங்காண நடமினோ” என்று திருவனந்தபுரத்திலே கண்வளர்ந்தருளுகிற ஸர்வேச்வரனுடைய திருவடிகளைக் காணப்போருங்கோளென்கையாலே த்ரஷ்டவ்ய கந்தவ்யங்களும், “அனந்தபுரநகர் புகுதுமின்றே” என்று இச்சை பிறந்தவின்றே திருவனந்தபுரத்திலே போய்ப்புக வாருங்கோளென்கையாலே வஸ்தவ்யமுமாகிறவை யெல்லாமவர்களுக்கு வெளியிட்டு. [6] (பிணக்கறவை சார்வாக நிகமித்து) உபக்ரமித்தவர்த்தத்தை உபஸம்ஹரிக்கை சாஸ்த்ரக்ரமமாகையாலே, “பிணக்கற” என்கிற பாட்டிலே “வணக்குடைத் தவ நெறி” என்று உபக்ரமித்த பக்தியோகத்தை, “சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள்” என்ற ஸ்வஸாத்யத்தோடே பொருந்தினபடியைச் சொல்லி நிகமித்து. இதின் பட்டோலையான க்ரந்தத்திலே “வீடுமுன் முற்றவும் பத்துடையடியவரிலே உபதேசிக்கத் தொடங்கின ஸாத்யஸித்த ரூபமான ஸாதநத்வயத்தையும் தவநெறிக்குப் பரமன் பணித்த என்று நிகமித்து” என்றவர் இதிலே இப்படி அருளிச்செய்வானென்னென்னில், அது “வீடுமுன் முற்றம்” ப்ரபத்தி பரமாகவும் “பத்துடையடியவர்” பக்தி பரமாகவும் பூர்வர்கள் நிர்வஹித்த கட்டளையைப் பிடித்தருளிச் செய்தார். இது “வீடுமின் முற்ற”த்தையும் பக்திபரமாக்கி யோஜித்தருளின எம்பெருமானார் நிர்வாஹக் கட்டளையைப் பிடித்தருளிச் செய்தார். இதிறே ஸகல வ்யாக்யாந ஸித்தமுமாய் ஈட்டிலும் ப்ரதாந யோஜனையுமாயிருக்குமது; இந்த க்ரமத்திலேயிறே இவர்தாம் முதல்பத்தில் பக்தியை யுபதேசிக்கிறாரென்றருளிச் செய்ததும்; ஆகையால் அது முன்புள்ளாரருளிச் செய்தபடியைப்பற்ற வருளிச்செய்தார்; இது எம்பெருமானார் யோஜனையாய் பின்புள்ளாரெல்லாரும் அருளிச்செய்து கொண்டு போந்த மர்யாதையைப்பற்ற வருளிச்செய்தாரென்று கொள்ளுமித்தனை. “வணக்குடைத் தவநெறி” என்கிறவிது ப்ரபத்தி பரமாகவும் ஒரு யோஜனை ஈட்டிலே தோன்றியிருக்கையாலே “பிணக்கறவை” என்கிறவிதிலே பக்தி ப்ரபத்திகளிரண்டையும் கூட்டிக்கொண்டு, சார்வே தவநெறியிலே, “சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள்” என்றும், “பண்டே பரமன் பணித்த பணிவகையே கண்டேன் கமலமலர்ப்பாதம்” என்றும் இரண்டையும் நிகமிக்கிறாரென்றாலோ வென்னில், அதுக்குமநுபபத்தியுண்டு, “பிணக்கற” என்கிற பாட்டிலே ப்ரபத்திபரமான யோஜனையுண்டானாலும் விகல்பமொழிய ஸமுச்சயம் கூடாமையாலே. ஆகையாலே ஸகல வ்யாக்யானங்களுக்குஞ் சேர, “பிணக்கற”வில் உபக்ரமித்த பக்தியை நிகமிக்கிறாரென்ன வமையும். ஆனால், பக்த்யுபதேசோபக்ரமம் “வீடுமின் முற்ற”த்திலேயாயிருக்க, “பிணக்கறவை” யென்பானென்னென்னில், “வீடுமின் என்று த்யாஜ்யோபாதேய தோஷகுண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பநமந்த்ரமாக உபதேசித்து” என்று அத்தையுமிதுக்கு சேஷமாக வொருங்கவிட்டுக் கொண்டு வந்து, “அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற வுணர்வு கொண்டு நலஞ்செய்வது” என்று தாம் யோஜித்த க்ரமத்தைப் பிடித்து முதல்பத்தில் தொடங்கின பக்தியோகத்தையென்றபடி. “பிணக்கற”த் தொடங்கி “வேதப்புனித விறுதிசொன்ன” என்றிறே கீழுமருளிச்செய்தது. ஆகவிப்படி முதல்பத்திலுபக்ரமித்த பக்தியை நிகமித்துக்கொண்டு. [7] (எண்பெருக்கிலெண்ணும் திருநாமத்தின் சப்தார்த்தங்களைச் சுருக்கி) “எண் பெருக்கந்நலத்தொண்பொருளீறில வண்புகழ் நாரணன்” என்று முதல் பத்திலே பஜநாலம்பநமாகச் சொல்லப்பட்டதாய், “எண்ணும் திருநாமம்” என்று பஜந தசையில் அநுஸந்திக்கப்படும் திருநாமமான திருமந்த்ரத்தினுடைய சப்தத்தையும் அர்த்தத்தையும், “நாரணம்” என்றும், “நாரணனெம்மான்” இத்யாதியாலும் ஸுக்ரஹமாம்படி சுருங்கவுபதேசித்தும். (மாதவனென்று த்வயமாக்கி) பூர்வோத்தர வாக்யங்களில் ஸ்ரீமத் பதார்த்தங்களைத் திருவுள்ளம் பற்‍றிக்கொண்டு, “மாதவனென்றென்றோதவல்லீரேல்” என்று கீழ்ச்சொன்ன நாராயண சப்தத்தோடே மாதவனென்கிற வித்தை இரண்டு பர்யாயம் சேர்த்துச் சொல்ல வல்லீர்களாகி லென்கையாலே அந்தத் திருமந்த்ரத்தை அதினுடைய விசதாநுஸந்தாநமான த்வயரூபேண வெளியிட்டு. (கரண த்ரய ப்ரயோக வ்ருத்தி ஸம்ஸாரிகளுக்குக் கையோலை செய்து கொடுத்து) ஈச்வரன் தம்மைக் கொண்டு போகையிலே த்வரிக்கிறபடியாலும் கேட்கிறவர்களுக்கு ப்ரதிபத்தி விஷயமாம்படியாகவும் சுருங்கக் கொண்டு, “தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீர்”, “பாடீரவன் நாமம்”, “சுனைநன் மலரிட்டு நினைமின் நெடியானே” என்றிப்படி கரண த்ரயத்தாலும் ப்ரயோகிக்கப்படும் பகவதாச்ரயண வ்ருத்தியை, பரந்த சடங்குகளைச் சுருங்க அநுஷ்டேயார்த்த ப்ரகாசகமான ப்ரயோக வ்ருத்தியாக்கிக் கையோலை செய்து கொடுக்குமாப்போலே ஸம்ஸாரிகளுக்கு தர்சிப்பித்து. (செஞ்சொற்கவிகளுக்குக் கள்ளவிழி காவலிட்டு) “செஞ்சொற்கவிகாளுயிர் காத்தாட் செய்மின்” என்று அவனுக்கடிமை செய்வீர்! அவனுடைய சீலாதிகளிலே அகப்பட்டழுந்திப் போகாமல் உங்களுயிரை நோக்கிக் கொண்டு அடிமை செய்யப்பாருங்கோளென்று உபதேசிக்கையாலே அநுபவ கைங்கர்யங்களோடே நடக்கிற ஸகோத்ரிகளுக்கு அரணழியாமல் கள்ளவழி காவலிடுவாரைப்போலே சீலகுணமாகிற ஆழங்காலில் இழியாதே கொள்ளுங்கோளென்று வஞ்சக்கள்வன் உள்கலந்தழிக்கும் வழிக்குக் காவலிட்டு. [8] (மனம் திருத்தி வீடு திருத்தப்போய் நாடு திருந்தினவாறே வந்து விண்ணுலகம் தரவிரைந்து அத்தை மறந்து குடிகொண்டு தாம் புறப்பட்டவாக்கையிலே புக்குத் தான நகர்களை அதிலே வகுத்து குரவை துவரைகளிலே வடிவு கொண்ட சபலனுக்கு தேஹ தோஷமறிவித்து) “தன்பால் மனம் வைக்கத் திருத்தி” என்று “வளவேழுல”கிலே அயோக்யரென்றகன்ற தம்மைத் தன் சீலவத்தையைக் காட்டி மனஸ்ஸைத் திருத்திச் சேர்த்துக் கொண்டு “இன்னமுமிவர் இங்கேயிருக்கில் அயோக்யரென்றகலுவர், அகலவொண்ணாத தேசத்தேறக் கொண்டு போகவேணும்” என்று “வீடுதிருத்துவான்” என்கிறபடியே பரமபதத்தைக் கோடிப்பதாகப்போய், அது செய்து மீளுவதற்கு முன்னே “ஊரும் நாடுமுலகமும் தன்னைப்போல்” என்கிறபடியே தம்முபதேசத்தாலே நாடெல்லாம் திருத்தி, தானிங்கே தம்மை வைத்துக் கொள்ள நினைத்த காரியமும் தலைக்கட்டினவாறே வந்து, “இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்” என்று மீள வந்து பரமபதத்தேறக் கொண்டு போகையிலே த்வரித்து, சரம சரீரமாகையாலே தம்முடைய திருமேனியில் தனக்குண்டான வ்யாமோஹத்தாலே கொண்டு போக விரைந்து, அத்தையுங்கூட மறந்து, “கோவிந்தன் குடிகொண்டான்” என்கிறபடியே ஸபரிகரனாய்க் கொண்டு, “என் மாயவாக்கையிதனுள் புக்கு” என்று த்யாஜ்யமென்று குந்தியடியிட்டுத் தாம் சரக்குக் கட்டிப் புறப்பட்டு நிற்கிற தேஹத்தினுள்ளே தான் புகுந்து, “திருமாலிருஞ்சோலைமலையே” என்கிற பாட்டின்படியே “தான நகர்கள்” என்று தனக்கு வாஸஸ்தாநமான திவ்யநகரங்களில் பண்ணும் விருப்பத்தை யெல்லாம் ஓரோரவயவங்களிலே பண்ணி எல்லாமிதுக்குள்ளேயாக வகுத்து, “அங்கநா மங்கநாமந்தரே மாதவோ மாதவம் மாதவஞ் சாந்தரேணாங்கநா” என்கிறபடியே திருக்குரவையில் பெண்களோடே அநேக விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி அநுபவித்தாப் போலவும், “ஏகஸ்மிந்‍நேவ கோவிந்த: காலே தாஸாம் மஹாமுநே, ஜக்ராஹ விதிவத் பாணீந் ப்ருதக் கேஹேஷு தர்மத:, உவாஸ விப்ர ஸர்வாஸாம் விச்வரூபதரோ ஹரி:” என்கிறபடியே ஸ்ரீமத் த்வாரகையில் தேவிமாருடனே பதினாறாயிரம் விக்ரஹம் கொண்டு அநுபவித்தாப்போலவும்; அநேக விக்ரஹம் கொண்டு தம்முடைய அவயவங்கள் தோறும் அநுபவிக்கும்படி தம் திருமேனியிலே அதிசபலனானவனுக்கு, “பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியமைம்பூதம் இங்கிவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களான உன் மாமாயை மங்கவொட்டு” என்று ஸ்வதேஹ தோஷத்தை அறிவித்து, இத்தை விடுவிக்கவேணும் என்று கால்கட்டி. [9] (மாயையை மடித்து) அவனும் இத்தை விடுவிப்பதாக அநுமதிபண்ண, ப்ரீதராய் “மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை” என்று ஸம்ஸாரத்திலே நிற்கைக்கடியான மாயையுண்டு மூலப்ரக்ருதி, அத்தை திரிய விடுவித்தேனென்று செருக்கி. (வானே தரக்கருதிக் கருத்தின்கட் பெரியனானவனை) “வானே தருவானெனக்காய்” என்று தமக்குப் பரமபதத்தைத் தருவானாக வொருப்பட்டு, “கருத்தின் கட்பெரியன்” என்று உபயவிபூதியோகத்தால் வரும் அந்யபரதையடையத் தீர்ந்து, தம்மையவ்வருகே கொடு போகையிலும் ஆதிவாஹிகரை நியமிக்கையிலும் தான் முற்பாடனாய்க் கொண்டு போகையிலும் பெருக்கப்பாரியா நிற்கிறவனை. அன்றிக்கே, “மாயையை மடித்து” என்கிறத்தை மேலோடு சேர்த்து, “மனைவாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை மடித்தேன்” என்று தாம் பேசும்படி அசித் ஸம்பந்தத்தை யறுத்து, “வானே தருவான்” என்று தமக்குப் பரமபதத்தைத் தருவானாக உத்யோகித்த, “கருத்தின் கட்பெரியன்” என்று தம்மாலெண்ணி முடிக்கவொண்ணாதபடி தங்கார்யத்தில் த்வரிக்கிறவனை யென்றுமாம். ஆகவிப்படி தாம் சொன்னபடி செய்யக்கடவனாய், தம்மைக் கொண்டு போகையிலே மிகவும் பாரிக்கிறவனை. (இன்று அஹேதுகமாகவாதரித்த நீ அநாத்யநாதர ஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க) “இன்றென்னைப் பொருளாக்கி” என்று தொடங்கி இன்றிப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்த நீ அநாதிகாலமென்னை உபேக்ஷித்திருந்ததற்கு ஹேதுவை அருளிச்செய்யவேணுமென்று மடியைப் பிடித்துக் கேட்க, இதுக்குச் சொல்லலாமுத்தரமென்னென்று தன்னிலே நிரூபித்து, இவையொன்று மிவர்க்குச் சொல்லத்தகாதன வென்று அவன் நிருத்தரனாய் நின்றமையை நெடுக உபபாதிக்கிறார் மேல். ஈச்வரன் நிரூபித்த க்ரமந் தானிருக்கும்படி:- [10] (இந்த்ரிய கிங்கரராய் குழிதூர்த்துச் சுவைத்தகன்றீரென்னில், அவையாவையுமகற்ற நீ வைத்தவை யென்பர்) “யூயமிந்த்ரிய கிங்கரா:” என்கிறபடியே அநாதிகாலம் இந்த்ரியவச்யராய், “தூராக்குழி தூர்த்தெனைநாளகன்றிருப்பன்”, “அற்ப சாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன்” என்று துஷ்பூரமான இந்த்ரியங்களுக் கிரையிட்டு எத்தனை காலமுன்னையகன்றிருக்கக் கடவேன். அல்பரஸங்களாய் அநேகவிதங்களா யிருக்கிற சப்தாதி விஷயங்களைப் பசையுண்டாக ப்ரமித்து எதிர்ப்பசை கொடுத்துப் புசித்து ஸர்வசக்தியான உனக்குமெட்டாதபடி ஸம்ஸாரத்திலே கைகழியப்போனேனென்று நீர் தானே பேசும்படியான சப்தாதி விஷயப்ராவண்யமன்றோ நீர் அநாதிகாலம் ஸம்ஸரிக்கைக்கு ஹேதுவென்னில்; “ஓரைவர் யாவரையும் மயக்க நீ வைத்த” என்றும், “அகற்ற நீ வைத்த மாயவல்லைம்புலன்கள்” என்றும் விஷயங்களும், அவற்றில் ப்ராவண்ய ஹேதுவான இந்த்ரியங்களும் எத்தனையேனுமளவுடையாரே யாகிலும் கலங்கப் பண்ணி நீ வேண்டாதாரை அகற்றுகைக்கு வைத்தவையன்றோவென்பர். (அது தேஹ யோகத்தாலே யென்னில் அந்நாள் நீதந்த சுமடென்பர்) அந்த இந்த்ரிய வச்யதைக்கடி குண த்ரயாத்மகமான சரீர ஸம்பந்தமன்றோவென்னில், “அந்நாள் நீ தந்த வாக்கை”, “அது நிற்கச் சுமடு தந்தாய்” என்று அதுவும் தந்தாய் நீயன்றோவென்பர். (முன்செய்த முழுவினையாலே யென்னில், அது துயரமேயுற்றவிருவினை யுன்கோவமுமருளு மென்பர்) அந்த தேஹ ஸம்பந்தத்துக்கடி, “முன் செய்த முழுவினை” என்று நீர் சொன்ன அநாதிகாலார்ஜித புண்யபாபரூபகர்மமன்றோ வென்று சொல்லுவோமாகில், “துயரமேதரு துன்பவின்ப வினைகளாய்”, “உற்றவிருவினையாய்” என்று அசேதநமுமாய் அசக்தமுமாய் நச்வரமுமாயிருந்துள்ள புண்ய பாபரூப கர்மங்கள் உன்னுடைய நிக்ரஹாநுக்ரஹ ரூபேண பலிக்கு மவையாகையாலே கர்மமும் நீயிட்ட வழக்கென்பர். [11] (ஈவிலாத மதியிலேனென்னு மும்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களென்னில், ஆங்காரமாய்ப்புக்குச் செய்கைப்பயனுண்பேனும் கருமமும் கருமபலனுமாகிய நீ கர்த்தா போக்தா வென்பர்) “ஈவிலாத தீவினைகளெத்தனை செய்தனன் கொல்” என்று முடிவின்றிக்கே யிருக்கிற கொடிய பாபங்களிலே எத்தனை பண்ணினேனென்றும், “மதியிலேன் வல்வினையே மாளாதோ” என்று நான் பண்ணின பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதென்றும் நீரே சொல்லுகையாலே கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் உம்மதன்றோ வென்று சொல்லுவோமாகில்; “தானாங்காரமாய்ப்புக்கு தானே தானே யானான்” என்று தானபிமானியாய்ப்புக்கு ஆத்மாத்மீயங்களில் எனக்குண்டான அபிமானத்தைத் தவிர்த்துத் தானே அபிமானியானானென்றும், “செய்கைப் பயனுண்பேனும் யானே” என்று நம்முடையபடியை யநுகரித்துச் சொல்லுகிறவிடத்திலே ஸகல கர்மங்களினுடைய பலபோக்தாவும் நானே யென்றும், “கருமமும் கருமபலனுமாகிய” என்று புண்யபாபரூபமான கர்மங்களுக்கும் கர்மபலங்களுக்கும் நியாமகனாய் என்றும் சொன்னவராகையாலே, கர்மகர்த்தாவும் தத் பலபோக்தாவும் நீயிட்ட வழக்காகையாலே கர்த்தாவும் போக்தாவும் நீயேயென்பர். “கருமமும் கருமபலனுமாகிய” என்கிறவித்தால் கர்ம கர்த்த்ரு தத் பலபோக்த்ரு தாதநீயம் விவக்ஷிதமாகையாலே யாய்த்து இவ்விடத்தில் இவர் இச்சந்தையை யெடுத்தது. [12] (யானே எஞ்ஞான்று மென்றத்தாலே யென்னில், அயர்ப்பாய்ச் சமயமதி கொடுத்து உள்ளம் பேதஞ் செய்கை உன் தொழிலென்பர்) “யானே யென்னை யறியகிலாதே யானே யென்தனதே யென்றிருந்தேன்” என்றும், “எஞ்ஞான்றும்” என்று தொடங்கி, “மெய்ஞ்ஞானமின்றி வினையியல் பிறப்பழுந்தி” என்றும் நீர் சொன்ன அஜ்ஞாநாந்யதா ஜ்ஞாநாதிகளாலே காணும் உமக்கந்த கர்த்ருத்வ போக்த்ருத்வங்களுண்டாய்த்தென்று சொன்னோமாகில்; “அயர்ப்பாய்த் தேற்றமுமாய்”, “மாட்டாத பல சமய மதி கொடுத்தாய்”, “உள்ளம் பேதஞ் செய்திட்டு உயிருண்ட வுபாயங்களும்” என்று ஜ்ஞாநாஜ்ஞாநங்களிரண்டும் நீயிட்ட வழக்காகையாலே அஜ்ஞாநாந்யதாஜ்ஞாநாதிகளை விளைக்கையும் உன் க்ருத்யமென்பர். (ஜீவப்ரக்ருதி சைதந்யம் நீங்கும் வ்ரதஹேது, அக மேனியிலழுக்கறுக்கை அபிமாநிக்ருத்யம்) “யாதானுமோராக்கையில் புக்கு” இத்யாதிப்படியே ஸூக்ஷ்ம ப்ரக்ருதி விசிஷ்டனாய்க் கொண்டு ஸ்வகர்மாநுகுணமாக நாநாவித சரீரங்களிலே ஒன்றுவிட்டு ஒன்றைப் பற்றித் தடுமாறித் திரியும் ஜீவனுக்கு தேஹேந்த்ரியத்வேந போக்யத்வேநாவஸ்திதையான ப்ரக்ருதியைப் பற்றிக் கிடக்கிற சைதந்யம், “யாதானும் பற்றி நீங்கும் விரதம்” என்கிறபடியே ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே ஏதேனுமொன்றையவலம்பித்து நம்மை விட்டகலும் வ்ரதத்துக்கு ஹேதுவாயிருப்பதொன்று, “அகமேனியொழியாமே” என்று நமக்கந்தரங்க சரீரமான இவ்வாத்மாவைப் பற்றிக் கிடக்கிற ப்ரக்ருதி ஸம்பந்தரூப மாலிந்யத்தைப் போக்குகை, இவ்வாத்மாவுக்கபிமானியான நம்முடைய க்ருத்யமாயிருந்தது. அன்றிக்கே (ஜீவப்ரக்ருதி) இத்யாதிக்கு, “இதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம், ஜீவபூதாம்” என்று சொல்லப்பட்ட ஜீவனாகிற ப்ரக்ருதியில் கிடக்கிற சைதந்யம், “யாதானும் பற்றி நீங்கும்” என்கிறபடியே ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் ஏதேனுமொன்றைப் பற்றி நம்மை விட்டகலும் வ்ரத ஹேதுவாயிருப்பதொன்று; அசித்து சரீரமாயிருக்கச்செய்தே அப்படியன்றிக்கே, “அகமேனி” என்று நமக்கு அந்தரங்க சரீரமாயிருக்கிற இவ்வாத்ம வஸ்துவில் கிடக்கிற ப்ரக்ருதி ஸம்பந்த ரூபமான மாலிந்யத்தைப் போக்குகை இதுக்கு அபிமானியான நம்முடைய க்ருத்யமாயிருந்ததென்னவுமாம். [13] (தான் நல்கும் பந்தம் நிருபாதிகம்) “நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே, நல்கத்தானாகாதோ நாரணனைக் கண்டக்கால்” என்னும்படி நாம் ஸ்நேஹ பூர்வகமாக ரக்ஷிக்கைக்கடியான நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தம் நிருபாதிகமாயிருந்தது. (ஸௌஹார்த்த மெஞ்ஞான்றும் நிற்கும்) “தனிமாப்புகழே யெஞ்ஞான்றும் நிற்கும்படியாய்த்தான் தோன்றி” என்று நாமரூபங்களையிழந்து தமோபூதமான ஸமயத்திலே இவற்றையுண்டாக்க நினைத்த அத்விதீயமான மஹாகுணமென்கிற ஸௌஹார்த்தம், காலதத்வமுள்ளதனையும் ஒருவன் பண்ணுமுபகாரமேயென்று அத்தையே அநுஸந்திப்பார் ஹ்ருதயத்திலே நிற்கும்படியாக என்கையாலே அந்த ஸம்பந்தமடியாக ஸர்வர்க்கும் நன்மையை ஆசாஸிக்கைக்கடியான ஸௌஹார்த்த குணத்திலும் கண்ணழிவு சொல்லப்போகாது. (பிணக்கிபேதியாத ஜ்ஞாநாதிவைகல்யமில்லை) “பிணக்கியாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர் கணக்கில் கீர்த்தி வெள்ளக்கதிர் ஞான மூர்த்தியினாய்” என்னும்படி ஸம்ஹ்ருதி ஸமயத்திலே ஸகல சேதநாசேதநங்களையும் நாமரூபவிபாக ரஹிதமாம்படி கலசி, ஸ்ருஷ்டி தசையிலே ஒருவர் கர்மம் ஒருவர்க்குத் தட்டாதபடி பிரித்து ஸ்ருஷ்டித்தும், தனக்கொரு பேதமின்றிக்கேயிருக்கும் ஜ்ஞாநாதிகளையுடைய நமக்கு ஜ்ஞாந சக்திகளில் குறைவு சொல்லவிடமில்லை. (ஏக மூர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ந பலித்வங்கள் நம்மது) “ஏகமூர்த்தி” என்கிற பாட்டிலே காரணங்களோடு கார்யங்களோடு வாசியற ஸகலத்தையும் ஸ்ருஷ்டித்து, அவற்றினுடைய தாரணார்த்தமாக அந்தராத்மாவாய் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களினுடைய ரக்ஷணத்துக்காக க்ஷீரார்ணவத்திலே கண்வளர்ந்தருளி, இப்படி ஸர்வகாலமும் ஒருபடிபட்ட அநுக்ரஹ சீலனாகைக்கடியான ப்ராப்தியையுடையையான நீ உன் திருமேனிக்கு வேண்டும் போகோபகரணங்களெல்லாம் “பூசும் சாந்தி”ற்படியே என்பக்கலிலே யுண்டாக்கி நிர்த்துக்கனானாயேயென்று இவர் பேசினபடியே இவரைப் பெறுகைக்கு யத்னம் பண்ணுகையும் பெற்றாலுகக்கும் பலித்வமும் நமக்கேயுள்ள தொன்றாயிருந்தது. [14] (நாம் தனிநின்ற ஸ்வதந்த்ரரென்று அவனே யறிந்தனமே என்னும் ஸர்வஜ்ஞரிவர்) “தனி நின்ற சார்விலாமூர்த்தி” என்று கார்யவர்க்கமழிந்தவன்று ஸச்சப்தவாச்யனாய் நின்று “ருத்ரம் ஸமாச்ரிதா தேவா:” இத்யாதி ப்ரக்ரியையாலே உனக்கோர் அபாச்ரயமில்லாதபடி யிருக்கிறவனே! என்கையாலே நாம் வேண்டிற்றைச் செய்யும்படி நிரங்குச ஸ்வதந்த்ரனென்று அறுதியிட்டு, “அவனே அகல் ஞாலம் படைத்திடந்தான்” என்று தொடங்கி, “அவனே மற்றெல்லாமுமறிந்தனமே” என்று ஸகல கார்யங்களிலும் ஸஹகாரி நிரபேக்ஷனாய் ஸ்வாதீந ஸகல சேதநாசேதந ஸ்வரூபஸ்திதிகனா யிருக்குமவனென்றறிந்தோம் என்று சொல்லும்படியான ஸர்வஜ்ஞராயிருப்பாரொருவரிவர். [15] (நெறிகாட்டி அருகும் சுவடும் போலே இதுவும் நிருத்தரமென்று கவிழ்ந்து நிற்க) “நெறிகாட்டி நீக்குதியோ” என்கிற பாட்டிலும், “அருகும் சுவடும் தெரிவுணரோம்” என்கிற பாட்டிலும், உபாயாந்தரத்தைக் காட்டி அகற்றப் பார்க்கிறாயோ? உன்னுடைய விலக்ஷணமான திருமேனியை நீயே காட்டியனு பவிப்பிக்கிறாயோ, பழையதாக அஜ்ஞனாய்ப் போருகிறவென்னை யென்செய்வதாக நினைத்தாய், இத்தையருளிச்செய்ய வேணுமென்றும்; உம்முடைய அருகு வருதல் உம்முடைய சுவடறிதல் செய்யாதிருக்க உம்மளவிலே ஸ்நேஹமானது அறமிக்கு வாராநின்றது, இதுக்கடி அருளச்செய்யவேணுமென்றும் முன்பு இவர் கேட்டவை நிருத்தரமானாப்போலே இப்பொழுது கேட்டவிதுவும் நிருத்தரமென்று நிலத்தைக்கீறாக் கவிழ்ந்து நிற்க. [16] (அமந்த்ரஜ்ஞோத்ஸவ கோஷம்போலே யேறப்பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற மேகஸமுத்ர பேரீகீத காஹள சங்காசீஸ் ஸ்துதி கோலாஹலம் செவிப்பட்டவாறே ஸாக்ஷாத்கரித்த பரப்ராப்திக்கு) உத்ஸவங்களில் சடங்கு காட்டும் உபாத்யாயர் மந்த்ரம் தோன்றாவிட்டால் கொட்டச் சொல்லி வாத்ய கோஷத்தாலே அத்தை மறைத்துவிடுமாபோலே, தான் நிருத்தரானமை தோற்றாதபடி மறைக்கைக்காக இவனாலே ப்ரவர்த்திதமாய், “நானேறப் பெறுகின்றேன்” என்று தாம் கீழ்ச்சொன்னபடியே பரமபதத்திலே ஏறப்பெறுகிற எழுச்சியை ஸூசிப்பியா நின்றுள்ள, “சூழ்விசும்பணிமுகில் தூரிய முழக்கின ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின” என்று ராஜகுமாரர் போம்போது தூர்யாதி மங்களகோஷம் பண்ணுவாரைப்போலே பரமபதத்துக்குப் போமவர்களைக்கண்ட ப்ரீதியாலே முழங்குவது கோஷிப்பதாகாநிற்கும் மேகஸமுத்ரங்களாகிற பேரிகளுடையவும், “கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர்கள்” என்கிற கீதங்களினுடையவும், “காளங்கள் வலம்புரி கலந்தெங்குமிசைத்தனர்” என்கிற காஹள சங்கங்களினுடையவும், “வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர்” என்கிற ஆசீஸ்ஸினுடையவும், “தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர்” என்கிற ஸ்தோத்ரத்தினுடையவும் ஸம்மிச்ரகோஷமாகிற கோலாஹலம் செவிப்பட்டவாறே, அர்ச்சிராதி கதியையும் ஆதிவாஹிக ஸத்காரத்தையும் திவ்யதேச ப்ராப்தியையும் அங்குள்ளாருடைய பஹுமானத்தையும் ஆநந்தமயமான ஆஸ்த்தாநத்திலிருப்பையும் ஸ்வசரணகமல ப்ராப்தியையும் பெற்றாராகப் பேசும்படி ஸாக்ஷாத்கரித்த பரப்ராப்திக்கு, [17] (தலைமிசையாய் வந்த தாள்களைப் பூண்டு போகாமல் தடுத்துத் திருவாணையிட்டு) அப்படி ஸாக்ஷாத்கரித்த பரப்ராப்தி மாநஸாநுபவமாத்ரமாய் பாஹ்யஸம்ச்லேஷ யோக்யையல்லாமையாலே அத்தைப் பெறுகைக்காக, “தலைமிசையாய் வந்திட்டினி நான் போகலொட்டேன்” என்று, “தலைமேல் புனைந்தேன் சரணங்கள்”, “தலைமேலதாளிணைகள்” என்கிறபடியே மாநஸாநுபவ வைசத்யத்தாலே தம்தலைமேல் ஆகும்படிவந்த திருவடிகளைக் கட்டிக்கொண்டு, போகாமல் தடுத்து, “திருவாணை நின்னாணைகண்டாய்” என்று அவனுக்கு மறுக்கவொண்ணாத வாணையிட்டு, இப்படி ஆணையிட்டவாறே சேஷபூதரான நீர் சேஷியான நாம் செய்தபடி கண்டிருக்குமத்தனையொழிய நம்மை ஆணையிட்டுத்தடுக்கை உம்முடைய ஸ்வரூபத்தோடு விருத்தமாகையால் இதுபெறாவாணை காணுமென்ன. (கூசஞ்செய்யாத செய்திப்பிழை) “கூசுஞ் செய்யாது கொண்டாய்” என்று ஸர்வஜ்ஞனான நீ என் பூர்வ வ்ருத்தத்தால் வந்த அயோக்யதை பார்த்துக்கூசி வாசி வையாதே உன்னோடு ஆத்மபேதமில்லாதபடி என்னைப்பரிக்ரஹித்தாய், ஆனபின்பு உன்னதன்றோ செய்திப்பிழையென்றும். [18] (பற்றுக் கொம்பற்ற கதிகேடு) “ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலாலறிகின்றிலேன்யான்” என்று கொடி கொள்கொம்பையொழியத் தரிக்கமாட்டாதாப்போலே என்னாத்மாவுக்கு ஜீவநஹேதுவாயிருப்பது உன்னையொழிய வேறு காண்கிறிலேன், ஆதலால் நான் அநந்யகதி என்றும். (போரவிட்டபெரும்பழி) “எம்பரஞ்சாதிக்கலுற்றென்னைப் போரவிட்டிட்டாய்” என்று என் கார்யம் நீ செய்வதாக ஏறிட்டுக்கொண்டு, உன்பக்கல்நின்றும் பிரித்து உன்குணங்கள் நடையாடாத ஸம்ஸாரத்திலே தள்ளியுபேக்ஷித்தாய், இது உனக்குப் பரிஹரிக்க வொண்ணாத பெரும்பழியன்றோவென்றும். [19] (புறம்போனால் வருமிழவு) “போரவிட்டிட்டென்னை நீ புறம்போக்கலுற்றால் பின்னையானாரைக் கொண்டெத்தையந்தோ என தென்பதென் யானென்பதென்” என்று உன்பக்கல் நின்றும் பிரித்து அநந்யகதியான வென்னை ஸ்ருஷ்டியே தொடங்கி இவ்வளவும் புகுர நிறுத்தின நீ என் கார்யம் நான் செய்வானாகப்பார்த்து என்னை உபேக்ஷித்தால் ஸர்வசக்தியான நீ அநாதரித்த பின்பு அசக்தனான நான் எந்த உபாயத்தைக்கொண்டு என்ன புருஷார்த்தத்தை ஸாதிப்பது, எனக்குப் பரிஹரமாயிருப்பதொன்று உண்டென்பதோரர்த்தமுண்டோ? ப்ருதக் ஸ்திதியோக்யமாயிருப்பதொரு நானுண்டோ! ஐயோ! என்னை என்கையிலே காட்டித் தந்தால் இழவேயன்றோ உள்ளதென்றும். [20] (உண்டிட்ட முற்றீம்பு) “எனதாவியையின்னுயிரை மனக்காராமை மன்னியுண்டிட்டாயினி யுண்டொழியாய்” என்னுடைய ஹேயமான சரீரத்தையும் ஆத்மாவையும் மநஸ்ஸுக்கு பர்யாப்தி பிறவாமல் நிரந்தரமாக புஜித்த நீ தொடங்கினத்தைக் குறை கிடக்க விடாதே விஷயீகரித்து விடாய், புக்த சேஷமாக்கின உன்னதன்றோ முதல் தீம்பென்றும், (அன்புவளர்ந்த அடியுரம்) “கோலமலர்ப்பாவைக்கன்பாகிய வென்னன்பேயோ” என்று பெரிய பிராட்டியார் பக்கல் ஸ்நேஹாதிசயத்தாலே அவள்பரிக்ரஹமான என்பக்கல் அதிப்ரவணனானவனே! நான் அந்த:புரபரிகரமன்றோ! என்பக்கல் உனக்குண்டான அன்புக்கு அடியில்லையோ! ஆகையால் அவள்பரிக்ரஹமென்கிற அடியுரமென்றும். (உயிருறவு) “பெற்றினிப் போக்குவனோ உன்னையென் தனிப்பேருயிரை” என்று அத்யந்த விஸஜாதீயனாயிருந்துவைத்து எனக்கு தாரகனான உன்னைப் பெற்றுவைத்து இனி விடுவேனோ; உயிரை விட்டு உடல் தரிக்கவற்றோவென்கிற சரீரசரீரிபாவ ஸம்பந்தமென்றும். [21] (முதலளவு துரக்கைகளாலே பெறாவாணையல்லவாக்கின பேரவா குளப்படியாம்படி) இப்படி “முதல் தனிவித்து” என்கிற பாட்டளவாக உத்தரோத்தரம் புகலற, துரக்கைகளினாலே தாமிட்டவாணை பெறாவாணையல்லாமையை ஸாதித்த “அதனில் பெரியவென்னவா” என்று தத்வத்ரயத்தையும் விளாக்குலைகொண்டு அவை குளப்படியாம்படி பெரிதான தம்முடைய பரமபக்தி குளப்படியாம்படி. (கடல் போன்ற வாதாரத்தோடே சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளியிடுகிறார் பத்தாம் பத்தில்) அதாவது, “என்னவாவறச் சூழ்ந்தாயே” என்று கீழ்ச்சொன்ன அபரிச்சேத்யமான தம்முடைய அபிநிவேசத்தையும் தன்னபிநிவேசத்தையும் பார்த்தால் இதொரு குளப்படியும் அதொரு ஸமுத்ரமுமென்னும் படியான அபிநிவேசத்தோடே வந்து ஸம்ச்லேஷித்து, “அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே” என்று மீண்டெழுந்தருளி ஸ்ரீபரதாழ்வானை மடியிலே வைத்தணைத்து உச்சிமோந்து உகந்தாப்போலே தம்முடைய விடாய் கெடும்படி யனுபவித்து அலாபநிபந்தந பரிதாபத்தாலே கூப்ப்பிட்டவாயாலே, “அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச்சடகோபன்” என்று பேசும்படி, “அவாவறச்சூழரியை” என்று ஹரி என்கிற திருநாமத்திற்கு அநுகுணமாக தம்முடைய ஸகலதாபங்களையும் ஹரித்தமையை ஸர்வருமறியும்படி ப்ரகாசிப்பிக்கிறார் பத்தாம்பத்தில் என்கை.

(சுரிகுழல்) – திருவாய்மொழி (10-1-1) - சுரிகுழற்கமலக்கட் கனிவாய் – என்றும், (அஞ்சனம்) - திருவாய்மொழி (10-3-3) – அஞ்சன மேனி – என்றும், (புனல் மைந்நின்ற) - திருவாய்மொழி (10-6-8) - புனல்மைந்நின்றவரை போலும் திருவுருவம் – என்றும், (பொல்லா) - திருவாய்மொழி (10-10-1) - பொல்லாக் கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கம் - என்றும், (புனக்காயா என்னும்) – திருவாய்மொழி (10-10-6) - புனக்காயாநிறத்த புண்டரீகக் கட்செங்கனிவாய் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஒன்றை ஒன்று விஞ்சும் மேன்மை கொண்டதாகவும், மனதைக் கவருவதாகவும், அனுபவிப்பவர்களைத் தனித்தனியே ஈடுபடுத்தவல்லதான அவயவங்களுடைய சோபையும், அதற்கு ஏற்றவிதமாக மிகுந்த ஒளி கொண்டதாகவும், மிகுந்த தாகம் எடுத்த ஒருவருக்கு அதிகமான நீரை அளித்தது போன்று அனைத்து துன்பங்களும் நீங்கும் விதத்தில் காணப்படுகின்ற திருநிறத்தையும் கொண்டதாகவும். (ஆபத்தில் கொள்ளும் காமரூப கந்தரூபத்தாலே) - திருவாய்மொழி (10-1-10) - காம ரூபம் கொண்டு எழுந்தளிப்பான் - என்று தனது அடியார்களைக் காப்பாற்றுவதற்காக அதற்குத் தகுதியான வடிவங்கள் அனைத்திற்கும் மூலகரணமாகவும் உள்ள திருமேனியைக் கொண்டு. (ப்ரபந்ந ஆர்த்தி ஹரனானவன்) - அனைத்து பாரங்களையும் தன்னிடம் வைத்த தனது அடியார்களாக உள்ள ப்ரபந்நர்கள், தங்களுக்குச் சற்றும் விருப்பம் இல்லாமல் உள்ளதான ஸம்ஸாரத்தில் இருத்தல் மற்றும் தங்களுக்கு மிகவும் விருப்பமான தனது திருவடிகளை அடைதல் கிட்டாமை போன்ற துக்கங்களை விலக்கும் தன்மை கொண்டவன். (அருள் பெறும்போது) – திருவாய்மொழி (9-7-6) – அவனுடையருள் பெறும் போதரிதால் - என்றும், திருவாய்மொழி (9-9-6) – அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது – என்றும் ஒன்பதாம் பத்தில், ஒரு நொடிப்பொழுது தாமதம் ஏற்படுவதைக்கூடப் பொறுக்க முடியாமல் துன்பம் அடைந்த நம்மாழ்வாரிடம் தனக்கு. (அணுகவிட்டதுக்குப் பலமான) – திருவாய்மொழி (9-10-5) – மரணமானால் - என்று கூறுவதற்கு ஏற்ப, “இந்தச் சரீரத்தின் இறுதியில் நாம் மோக்ஷம் அளிக்கிறோம்” என்று மிகவும் அருகாமையில் ஒரு நாள் குறித்துக் கொடுத்ததற்கான பலன் என்பது, (வானேறும் கதிக்கு) - திருவாய்மொழி (10-6-5) – வான் ஏற வழி தந்த – என்று கூறுவதற்கு ஏற்ப அடையத்தக்க இடமாக உள்ள பரமபதத்திற்குச் சென்று சேர்வதற்கு வழியாக அவன் காண்பித்துக் கொடுத்த அர்ச்சிராதி மார்க்கமாக சென்று சேர்தலே ஆகும் என்பதால், அந்த அர்ச்சிராதி மார்க்கத்திற்கு. (அண்ட மூவுலகும் முன்னேற) – அரசகுமாரன் ஒரு பாதையில் செல்லும்போது, அந்தப் பாதையைக் குறித்து நன்கு அறிந்தவர்கள் அவனுக்கு முன்பாகச் சென்று, போகும் வழியை நன்றாகச் சோதனை இட்டு, நிழல் மற்றும் தண்ணீர் கிடைக்க வழி செய்து சென்றபடி இருப்பர்; அவர்கள் பின்னே அரசகுமாரன் செல்வான்; இதே போன்று, திருவாய்மொழி (10-1-5) - அண்டமூவுலகளந்தவன் – என்பதற்கு ஏற்ப “திருவுலகத்தை அளத்தல்” என்ற ஒரு செயலை வாய்ப்பாக வைத்துக்கொண்டு, ஆழ்வார் போகும் வழியை நன்றாகச் சோதனை செய்து, (கால் விழுந்த இடத்தே நிழல் தடங்கள் ஆக்கி) - திருவாய்மொழி (10-1-2) – அவன் அடி நிழல் தடம் - என்பதற்கு ஏற்ப காளமேகமாகிய தனது திருவடி சென்ற இடத்தில் நீரும் தண்ணீரையும் ஏற்படுத்தி. (அமுதம் அளித்த பெருமாள் ஆகையாலே) - திருமோகூரில் எழுந்தருளியுள்ள காளமேகப்பெருமாள் அமுதம் அளித்தவன் என்பதால், கருடபுராணம் - பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தந அம்ருதம் – தாமரை போன்ற திருக்கண்கள் கொண்ட ஸர்வேச்வரனுடைய திருநாம ஸங்கீர்த்தனம் என்பதான அமிர்தமே வழியில் உண்ணும் உணவு - என்பதற்கு ஏற்ப வழியில் உண்ணும் உணவாகத் தனது திவ்ய குண அமிர்தத்தை மழை போன்று பொழிபவனாக. (தயரதன் பெற்றவன் ஆகையாலே) - திருவாய்மொழி (10-1-8) - தயரதன் பெற்ற மரதகமணித்தடம் – என்பதற்கு ஏற்ப சக்ரவர்த்தித்திருமகனாக அவதரித்தவன் என்பதால். (கோவலன் ஆகையாலே) - திருவாய்மொழி (10-1-6) – கூத்தன் கோவலன் - என்பதற்கு ஏற்ப க்ருஷ்ணனாக வந்து அவதரித்தவன் என்பதால், – (வேடன்) - பாலகாண்டம் (1-29) – குஹமாஸாத்ய தர்மாத்மா நிஷாதாதிபதிம் ப்ரியம் - தர்மாத்மாவாகிய இராமன் தனது அன்பிற்குப் பாத்திரமானவனும் வேடர்களின் தலைவனும் ஆகிய குகனை அடைந்து - என்பதற்கு ஏற்ப, பெரியதிருமொழி (5-8-1) - மாழைமான் மடநோக்கி உன் தோழியும்பியெம்பி - என்னும்படியாக சீதையையும் லக்ஷ்மணனையும் முன்னிட்டுக்கொண்டு, பெரியதிருமொழி (5-8-1) - உகந்த தோழன் நீ - என்று ஏற்கப்பட்ட ஸ்ரீகுஹப்பெருமாள். (வேடுவிச்சி) - பாலகாண்டம்(1-58) – ஸோப்யகச்சந் மஹாதேஜாச் சபரீம் - மிகுந்த தேஜஸ் நிறைந்த இராமன் சபரியை அடைந்தான் - என்பதற்கு ஏற்ப தானே அங்கு சென்று விருந்தை உட்கொண்டு, ஆரண்யகாண்டம் (74-14) – சக்ஷுஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந - ரகுகுலத்தில் வந்தவனே! உனது திருக்கண்களால் நான் தூய்மை அடைந்தேன் - என்று இராமனுடைய விசேஷமான கடாக்ஷத்தால் தூய்மை அடைந்த சபரி. (பக்ஷி) - கைங்கர்யத்திற்காகத் தனது சரீரத்தையே அழியும்படியாக மாற்றிக் கொண்டவர் என்னும் உகப்பு காரணமாக, ஆரண்யகாண்டம் (68-29, 30) - யா கதிர் யஜ்ஞசீலாநாம் ஆஹிதாக்நேச்சயா கதி:, அபராவர்த்திநாம் யாச யாச பூமிப்ரதாயிநாம், மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகாந்நுத்தமாந் - யஞ்ஜம் இயற்றுதல் என்பதையே செய்பவர்களால் அடையப்படும் உலகம் ஏதுவோ, பஞ்சாக்னியின் நடுவில் நின்று தவம் செய்பவர்களால் அடையப்படும் உலகம் எதுவோ, என்னால் நியமிக்கப்பட்டவனாக நீ அந்த உலகத்தை அடைவாய் - என்று ஏற்கப்பட்ட ஸ்ரீஜடாயு மஹாராஜர். (குரங்கு) - இந்தச் சொல்லானது ஒரு கூட்டத்தைக் குறிக்கின்ற ஒருமைச் சொல்லாக வந்துள்ளது. கிஷ்கிந்தாகாண்டம் - (4-18) - ஸுக்ரீவம் நாதம் இச்சதி – உலகத்தின் நாதனாக உள்ள இராமன் சுக்ரீவனை விரும்புகிறான் - என்பதற்கு ஏற்ப அங்கீகாரம் பெற்ற சுக்ரீவனும் அவனுடைய சேனையான வானரங்களும். (சராசரம்) – திருவாய்மொழி (7-5-1) - ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன் – என்பதற்கு ஏற்ப எந்தவிதமான காரணமும் இன்றி, தனது சேர்க்கையானது இனிமையாகவும், தனது பிரிவானது துக்கமாகவும் உள்ளபடியாக ஏற்கப்பட்ட அயோத்தியில் உள்ள அசையும் மற்றும் அசையாப்பொருட்கள். – (இடைச்சி) - ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-10-23) - சிந்தயந்தி ஜகத்ஸுதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம், நிருச்ச்வாஸதயா முக்திம் கதாந்யா கோபகந்யகா - பரமாத்மாவும் ஜகத்காரணமும் ஆகிய க்ருஷ்ணனை த்யானம் செய்தபடி மூச்சு இன்றி ஒரு கோபிகை மோக்ஷம் அடைந்தாள் - என்பதற்கு ஏற்ப திருமேனியின் அழகு என்பதே உபாயமாக இருந்து மோக்ஷம் தரப்பட்ட சிந்தயந்தி என்ற கோபிகை. (இடையர்) - வெண்ணெயைக் களவு செய்யப் போகும்போது அகப்பட்டு கொண்டதால், தனது வீட்டில் உள்ள கதவை அடைத்து, “எனக்கு மோக்ஷம் அளிக்காவிட்டால் நான் உன்னைக் காட்டிக் கொடுப்பேன்”, என்று உரைத்து மோக்ஷம் பெற்ற ததிபாண்டன். (தயிர்த்தாழி) - “பெயர் மற்றும் உருவம் கொண்ட அனைத்திற்கும் ஒரு சேதநனுடைய ஆதாரம் தேவைப்படுவதால், இதற்கும் மோக்ஷம் தரவேண்டும்”, என்று ததிபாண்டன் வற்புறுத்தியதால் மோக்ஷம் பெற்ற அவனுடைய தயிர்ப்பானை. (கூனி) – ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-20-6) - ஸுகந்தமேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிராந்நே, ஆவயோர் கரத்ர ஸத்ருசம் தீயதாமநுலேபநம் – அழகான முகம் கொண்டவளே! மிகுந்த நறுமணம் கொண்டதும், அரசனுக்காக எடுத்துச் செல்லப்படுவதும், மனோகரமாக உள்ளதும், எங்கள் இருவருடைய சரீரத்திற்கு ஏற்றதாக உள்ளதும் ஆகிய இந்தச் சந்தனத்தை அளிப்பாயாக - என்று கூறுவதற்கு ஏற்ப பூசும் சந்தனத்தைக் கேட்க, வேறு எந்த ஒரு பயனையும் எதிர்பாராமல் தானாகவே அளித்த மகிழ்வால் சிறப்பான கடாக்ஷத்தைப் பெற்ற கூனி. (மாலாகாரர்) – ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-19-21) - தந்யோஹமர்ச்சயிஷ்யாமி – நான் பேறு பெற்றவன் ஆனேன், அவனைப் பூஜிக்கப் போகிறேன் - என்று எதனையும் எதிர்பாராமல் மலரைக் கொடுத்த மகிழ்வு காரணமாக, ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-9-26) – தர்மே மநச்ச தே பத்ர ஸர்வகாலம் பவிஷ்யதி, யுஷ்மத் ஸந்ததி ஜாதாநாம் தீர்க்கமாயுர்ப்பவிஷ்யதி – மங்களம் நிறைந்தவளே! உனது மனமானது எப்போதும் தர்மத்திலேயே நிலை நிற்கக்கடவது. உனது குலத்தில் உள்ளவர்கள் நீண்ட ஆயுள் பெறுவர் - என்று சிறப்பான கடாக்ஷத்தைப் பெற்ற ஸ்ரீமாலாகாரர். (பிணவிருந்து) - ஸ்ரீஹரிவம்சம் – நவம் சவமிதம் புண்யம் வேதபாரகமச்யுத, யஜ்ஞசீல மஹாப்ராஜ்ஞ ப்ராஹ்மணம் சவமுத்தமம் – இந்தப் பிணம் புதியதாகும், வேதத்தை அறிந்ததாகும், வேள்வி செய்தலைத் தனது இயல்பாகவே கொண்ட அந்தணன் ஒருவனுடைய உத்தமமான பிணம் – என்று கூறி, அயோத்யாகாண்டம் (102-30) – யதந்த: புருஷோ பவதி - எதனை ஒருவன் உண்கிறானோ அதனையே தேவதைகளும் ஏற்கும் - என்பதற்கு ஏற்ப பிணத்தை விருந்தாக அளித்த கண்டாகர்ணன். (வேண்டடிசில் இட்டவர்) – நாச்சியார் திருமொழி (12-6) – வேண்டடிசிலுண்ணும் போதீதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவிலோசனத்தில் – என்பதற்கு ஏற்ப பக்தியை முன்னிறுத்தி அடிசில் கொண்டு வந்து அளித்த ரிஷிபத்தினிகள். (அவன் மகன்) – பெரியாழ்வார் திருமொழி (1-5-2) - மீள அவன் மகனை - என்பதற்கு ஏற்ற ஹிரண்யகசிபுவின் புத்திரனாக உள்ளபோதிலும் தனது க்ருபைக்கு விஷயமாக நின்ற பக்தனாகிய ஸ்ரீப்ரஹ்லாதன். (அவன் தம்பி) – பெருமாள்திருமொழி (10-7) - அவன் தம்பிக்கு – என்பதற்கு எற்ப இராவணனின் தம்பியாக உள்ளபோதிலும், யுத்தகாண்டம் (19-4) - அநுஜோ ராவணஸ்யாஹம் - நான் இராவணனுடைய தம்பி - என்று கூறிக் கொண்டு தனது தாழ்வினை முன்னிறுத்தியபடி, யுத்தகாண்டம் (17-14) – ராகவம் சரணம் கத: - இராமனைச் சரணம் புகுந்தேன் - என்று உரைத்து இராமனுடைய திருவடிகளை அடைந்த ஸ்ரீவிபீஷணாழ்வான். (ஆனை) – ஸ்ரீவிஷ்ணுதர்மம் - பரமாபதமாபந்‍நோ மநஸாசிந்தயத்தரிம், ஸது நாகவர: ஸ்ரீமாந் நாராயண பராயண: – மிகுந்த ஆபத்தில் நின்றவனாக, ஸ்ரீமந் நாராயணனை த்யானித்தபடி நின்ற அந்த கஜேந்த்ரன், தனது மனதால் அவனையே எண்ணியபடி இருந்தான் - என்பதற்கு ஏற்ப தனது முயற்சியைக் கைவிட்ட ப்ரபந்நனாக, தன்னால் விரும்பப்பட்ட கைங்கர்யத்தையே அடைந்த ஸ்ரீகஜேந்த்ராழ்வான். (அரவம்) – பெரியதிருமொழி (5-8-4) - நஞ்சு சோர்வதோர் வெஞ்சினவரவம் வெருவி வந்து நின் சரணென - என்பதற்கு ஏற்ப கருடனுடைய தாக்குதலுக்கு அஞ்சி திருவடிகளில் சரணம் புகுந்த ஸுமுகன். (மறையாளன்) – பெரியதிருமொழி (5-8-5) – மாகமாநிலம் முழுதும் வந்திறைஞ்சும் மலரடிக் கண்ட மாமறையாளன் – என்பதற்கு ஏற்ப க்ருஷ்ணாவதாரத்தில் செய்த தன்னுடைய இளமைப்பருவ லீலைகள் அனைத்தையும் நேரே காணவேண்டும் என்று எண்ணி தவம் மேற்கொண்டு, அதற்கு ஏற்றபடியே அவற்றைக் காண்பித்தருளப் பெற்ற பின்னர், நித்யமான அந்த அனுபவத்தை எப்போதும் விரும்பிய கோவிந்தஸ்வாமி. (பெற்ற மைந்தன்) - பெரியதிருமொழி (5-8-6) – மாமுனி பெற்ற மைந்தன் - என்பதற்கு ஏற்ப ம்ருகண்டுவின் புத்திரனாக, மோக்ஷம் அடைவதற்காகத் தன்னிடம் வந்த மார்க்கண்டேயன். (ஆகிய பதினெட்டு நாடன் பெருங்கூட்டம் நடத்தும் ஆர்த்தனை வழித்துணையாக்கி) - இப்படியாக “பதினெட்டு நாடன் பெருங்கூட்டம்” என்பது போன்று காணப்படும் இந்தப் பெரிய கூட்டத்தை அர்ச்சிராதி மார்க்கத்தில் தானே துணையாக வந்து வழிநடத்துபவனாக, திருவாய்மொழி (10-1-9) - திருமோகூராத்தன் தாமரை அடியன்றி மற்றிலமரண் – என்றும், திருவாய்மொழி (10-1-1) - காளமேகத்தையன்றி மற்றொன்றிலங்கதி - என்றும் கூறுவதற்கு ஏற்ப திருமோகூரில் நின்று கடாக்ஷிப்பவனாக, மிகுந்த நன்மைகள் செய்யவல்லவனாகிய காளமேகத்தைத் தனது வழித்துணையாகக் கொண்டு. (அறியச் சொன்ன) – திருவாய்மொழி (10-2-9) – நாம் உமக்கறியச் சொன்ன நாள்களும் நணியவான – என்றும், திருவாய்மொழி (9-8-4) – நாளேல் அறியேன் - என்றும், திருவாய்மொழி (9-10-5) – மரணமானால் - என்றும் நான் உங்களுக்கு உரைத்த நாள் மிகவும் அருகாமையில் வந்தது என்று மற்றவர்களுக்கு உரைக்கும்படியாக, (ஸுப்ரபாதத்தே) - ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-17-3) – ஸுப்ரபாதாச மே நிசா - இரவுப்பொழுதும் எனக்கு நற்காலை போன்றே விடியப் போகிறது - என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (6-18-24) - ஸுப்ரபாதாத்ய ரஜநீ மதுராவாஸ யோஷிதாம் - மதுராவில் உள்ள பெண்களுக்கு இந்த இரவுப்பொழுது நன்றாகவே விடியப் போகிறது - என்றும் கூறுவதற்கு ஏற்ப, மோக்ஷம் மிகவும் அருகில் வரும்போது நன்கு விடிந்த நாளில், (துணை பிரியாமல் போக்கு ஒழித்து) – திருவாய்மொழி (10-3-4) - துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை - என்றும், திருவாய்மொழி (10-3-9) - பசுமேய்க்கப் போகேல் – என்றும், திருவாய்மொழி (10-3-8) – என் கை கழியேல் – என்றும், திருவாய்மொழி (10-3-11) - அவன் பசு நிரை மேய்ப்பொழிப்பான் உரைத்தன – என்றும் தனக்குத் துணையாக உள்ள அவனைப் பசு மேய்த்தல் என்பதான அவன் விருப்பத்திற்கு ஏற்ப செல்லவிடாமல் செய்து. (மீள்கின்றதில்லை என்று நிச்சித்திருந்தவர்) - திருவாய்மொழி (10-4-3) – மீள்கின்றதில்லைப் பிறவித் துயர் கடிந்தோம் - என்றும், திருவாய்மொழி (10-4-4) - நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேன் - என்றும் இந்த ஸம்ஸார துக்கம் மீண்டும் வந்திடாமல், தைத்திரீயம் - ந பிபேதி குதச்சந – ப்ரஹ்மத்தை அறிந்தவன் அச்சம் கொள்வதில்லை - என்று கூறுவதற்கு ஏற்ப எதற்கும் அச்சம் கொள்ளாமல் நிச்சயித்து இருந்தவர். (ஸஞ்சிதம் காட்டும் தசையானவாறே) - மரண காலம் வந்தபோது, தன்னால் சேமிக்கப்பட்டதாகவும் புதைக்கப்பட்டதாகவும் உள்ள புதையல்கள் அனைத்தையும் தனது புத்திரர்கள் முதலானவர்களுக்கு உரைப்பது போன்று, தனக்கு மோக்ஷ காலம் மிகவும் அருகில் வந்த போது, யாரும் இதனை இழந்துவிடக்கூடாது என்றும், அனைவருக்கும் நன்மை மற்றும் தீமைகளை உணர்த்தவேண்டும் என்றும் தீர்மானித்து. – (முந்துற்ற நெஞ்சுக்கு) - திருவாய்மொழி (1-1-1) – தொழுது எழு என் மனனே - என்று தொடக்கத்தில் உபதேசிக்கும்படி, பெரியதிருவந்தாது (1) - முந்துற்ற நெஞ்சே - என்பதற்கு ஏற்ப தன்னைக் காட்டிலும் அதிகமாக பகவத் விஷயத்தில் முற்பட்டு நிற்கின்ற தனது திருவுள்ளத்திற்கு. (பணி மறவாது மருள் ஒழி நடு கைவிடேல் என்று) – திருவாய்மொழி (10-4-7) – பணி நெஞ்சே நாளும் பரமபரம்பரனை - என்றும், திருவாய்மொழி (10-4-8) - பணி நெஞ்சே நாளும் பரமபரம்பரனை – எண்றும், திருவாய்மொழி (10-6-1) – மருள் ஒழி நீ மடநெஞ்சே – என்றும், திருவாய்மொழி (10-6-5) - நரகத்தை நகு நெஞ்சே - என்றும், திருவாய்மொழி (10-7-9) - வாழி மனமே கைவிடேல் – என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், நம்முடைய தடைகள் அத்தனையும் தானே விலக்கிக் கொண்டு நம்மைத் தன்னுடைய அடிமையாக ஏற்றுக் கொள்பவனாகிய அனைத்திலும் உயர்ந்த ஸர்வேச்வரனை அனுபவிக்க முயல்வாயாக; உனக்கு இத்தகைய உயர்ந்து நிலை என்பது மாறாமல் செல்வாயாக; மற்ற அனைத்து விஷயங்களிலும் கை புகுந்ததைச் செய்வது போன்று இந்த விஷயத்தில் செய்யாமல் இருப்பாயாக; திருவாய்மொழி (7-10-9) – திருவாறன்விளை யதனை மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் – என்று அடையத் தகுந்த வஸ்து கிட்டியது என்னும்போது, இங்கேயே கைங்கர்யங்கள் செய்தபடி உள்ளது போதாதோ என்று அவன் விருப்பத்துடன் உள்ள திவ்யதேசங்களில் மயங்கி நிற்கும் நிலை உனக்கு ஏற்படுவதைக் காண்பாயாக; அதனை நீ தவிர்க்கவேண்டும்; நாம் எண்ணிய பொருள் நமக்கு மிகவும் அருகமையில் நிற்கிறது என்று அதனையே அனுபவித்தபடி உள்ள நாம், நம்மையும் பார்த்துக் கொள்ளவேண்டாமோ? நான் பரமபதத்திற்குச் செல்லத் தயாராக உள்ளேன்; நீண்டகாலமாக நம்மைக் குடிமக்களாக்கி மிகவும் வருத்தியபடி இருந்த ஸம்ஸாரத்தினைப் புரிந்து கொண்டு நோக்கி நீ சிரித்து நிற்பாயாக; நமக்கு இந்தச் செல்வம் முழுவதும் திருமலையால் வந்தது; அந்தத் திருமலையை நீ கைவிடாமல் பிடித்துக் கொள்வாயாக என்று. (க்ருத்ய அக்ருத்யங்களை விதித்து) - செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவற்றைச் செய்யவேண்டும் என்றும், தவிர்க்கவேண்டும் என்றும் விதித்து. (நெஞ்சுபோல்வாரைத் தொண்டீரென்றழைத்து) – தன்னுடைய திருவுள்ளம் போன்று தமக்கு மிகவும் நெருக்கமாக உள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை, திருவாய்மொழி – தொண்டீர் வம்மின் – என்று, “பகவத் விஷயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களே வாருங்கள்” என்று அழைத்து. – (வலம் செய்து என்று கர்த்தவ்யம்) – திருவாய்மொழி (10-1-5) – கொண்ட கோயிலை வலஞ்செய்திங்காடுதும் கூத்தே – என்று, “அவன் எழுந்தருளியுள்ள திவ்யதேசத்தைக் குறித்து எப்போதும் அவனுக்கு ஏற்ற செயல்களைச் செய்து நாம் மகிழ்ச்சி கொண்டவர்களாக இருப்போம் வருவீர்களாக” என்பதன் மூலம், செய்யத்தக்க செயலையும். (எண்ணுமின் என்று ஸ்மர்த்தவ்யம்) - திருவாய்மொழி (10-2-5) எண்ணுமின் எந்தை நாமம் – என்று “எனது ஸ்வாமியுடைய திருநாமத்தை எப்போதும் எண்ணியபடி இருப்பீர்களாக” என்பதன் மூலம், எண்ணத்தக்க விஷயத்தையும். (பேசுமின் என்று வக்தவ்யம்) - திருவாய்மொழி (10-2-4) – பேசுமின் கூசமின்றி – என்று “உங்களுடைய தாழ்வுகளை எண்ணி வெட்கம் கொண்டு விலகாமல் திருவனந்தபுரத்தில் எழுதருளியுள்ளவனைக் குறித்துப் பேசுவீர்களாக” என்று கூறுவதன் மூலம், பேசத்தக்க விஷயத்தையும். (கேள்மின் என்று ச்ரோதவ்யம்) - திருவாய்மொழி (10-2-8) - நமர்களோ சொல்லக் கேண்மின் – என்று “நம்முடன் ஸம்பந்தம் கொண்டவர்களே! நாம் உரைப்பதை நீங்கள் கேட்பீர்களாக” என்று கூறுவதன் மூலம், கேட்கத்தக்க விஷயத்தையும். (காண்மின் நடமின் என்று த்ரஷ்டவ்யம் கந்தவ்யம்) – திருவாய்மொழி (10-2-1) - படமுடையரவில் பள்ளி பயின்றவன் பாதங்காண நடமினோ – என்று “திருவனந்தபுரத்தில் கண்வளர்கின்ற ஸர்வேச்வரனுடைய திருவடிகளைக் காண்பதற்குச் செல்வீர்களாக” என்பதன் மூலம் காணத்தக்கதும் சென்று அடையத்தக்கதும் ஆகிய விஷயத்தையும். (புகுதும் என்று வஸ்தவ்யம்) - திருவாய்மொழி (10-2-1) – அனந்தபுரநகர் புகுதும் இன்றே - என்று “ஆசை ஏற்பட்ட இன்றே திருவனந்தபுரத்திற்குச் சென்று புகுவதற்கு வருவீர்களாக” என்பதன் மூலம் வசிப்பதற்கு ஏற்ற விஷயமாகவும் உள்ளதை. (எல்லாம் வெளியிட்டு) – எல்லாம் அவர்களுக்கு வெளிப்படுத்தி. (பிணக்கறவை சார்வாக நிகமித்து) - முதலில் தொடங்கப்பட்ட கருத்தை இறுதியாக முடித்தல் என்பதே சாஸ்த்ர விதிமுறை என்று காரணத்தால், திருவாய்மொழி (1-3-5) – பிணக்கற – என்ற பாசுரத்தில் “வணக்குடைத் தவநெறி” என்று தொடங்கி கூறப்பட்ட பக்தியோகத்தை, திருவாய்மொழி (10-4-1) - சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள் – என்று தன்னுடைய பேற்றுடன் சரியாகப் பொருந்தியவிதத்தை உரைத்து முடித்து. ஆனால் இந்த நூலின் பட்டோலையாக உள்ள நூலில், “திருவாய்மொழி (1-2-1) - வீடுமின் முற்றவும் – என்பதிலும், திருவாய்மொழி (1-3-1) – பத்துடை அடியவர் – என்பதிலும் உபதேசிக்கத் தொடங்கியதான ஸாத்யோபாயம் மற்றும் ஸித்தோபாயம் ஆகிய இரண்டு ஸாதனங்களையும் [அதாவது பக்தி மற்றும் ப்ரபத்தி என்ற இரண்டையும்], திருவாய்மொழி (10-4-9) – பரமன் பணித்த - என்று முடித்து” என்பதாக அருளிச்செய்தார்; இங்கு வேறுவிதமாக ஏன் அருளிச்செய்தார்? இதற்கு விடை அளிப்போம். திருவாய்மொழி (1-2-1) - வீடுமின் முற்றவும் – என்பதை ப்ரபத்தி வடிவமாகவும், திருவாய்மொழி (1-3) – பத்துடை அடியவர் - என்பதை பக்தி வடிவமாகவும் நம்முடைய பூர்வாசார்யர்கள் கொண்ட காரணத்தால், அந்த நூலில் இவ்விதமாக அருளிச்செய்தார். ஆனால் இங்கு, திருவாய்மொழி (1-2) - வீடுமின் முற்றவும் – என்பதை பக்தி வடிவமாக எம்பெருமானார் அருளிச்செய்தபடியே அருளிச்செய்தார். இவ்விதமாகவே அனைத்து வ்யாக்யானங்களில் கூறப்படுவதாகவும், ஈட்டின் தொடக்கத்தில் அருளிச்செய்யப்படுவதாகவும் உள்ளது. இதே முறையில் இவர் “முதல் பத்தில் பக்தியை அருளிச்செய்கிறார்” என்று கூறினார். ஆகவே அந்தப் பட்டோலையில், முன்பு உள்ள ஆசார்யர்கள் அருளிச்செய்தவிதமாக உரைத்தார்; இங்கு எம்பெருமானார் அருளிச்செய்ததாகப் பின்பு உள்ளவர்கள் அனைவரும் அருளிச்செய்து வந்த விதமாக உரைத்தார். ஆனால், “திருவாய்மொழி (1-3-5) - வணக்குடைத் தவநெறி - என்பது ப்ரபத்தி வடிவமாகவே உள்ளது”, என்று ஈட்டு வ்யாக்யானத்தில் கூறப்பட்டுள்ளது; எனவே திருவாய்மொழி (1-3-5) – பிணக்கற - என்பதில் பக்தி மற்றும் ப்ரபத்தி ஆகிய இரண்டையும் சேர்த்துக்கொண்டு, திருவாய்மொழி (10-4-1) – சார்வே தவநெறி - என்பதில் உள்ளதான “சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள்” என்பதன் மூலம் பக்தி நெறியையும், “திருவாய்மொழி (10-4-9) – பண்டே பரமன் பணித்த பணிவகையே கண்டேன் கமலமலர்ப்பாதம்” என்பதன் மூலம் ப்ரபத்தி நெறியையும் அருளிசெய்கிறார் என்று கொள்ளலாம் அல்லவோ? இதற்கு விடை அளிப்போம். இவ்விதம் கொள்வதில் பொருந்தாமை ஏற்படும். எப்படி? திருவாய்மொழி (1-2-5) – பிணக்கற - என்ற பாசுரத்தில் ப்ரபத்தியானது உள்ளது என்றாலும், இத்தகைய கருத்தானது தனியாகவே கூறப்பட்டது அல்லாமல் சேர்த்துக் கூறப்படவில்லை. எனவே அனைத்து வ்யாக்யானங்களுக்கும் பொருந்தும்விதமாக திருவாய்மொழி (1-3-5) – பிணக்கற - என்பதில் தொடங்கப்பட்ட பக்தியையே, திருவாய்மொழி (10-4-1) – சார்வே – என்பதில் முடிக்கிறார் என்று கொள்ளலாம். ஆனால் பக்தி குறித்த உபதேசமானது திருவாய்மொழி (1-2-1) – வீடுமின் முற்றவும் - என்பதில் தொடங்கப்படுவதாக உள்ளபோது, திருவாய்மொழி (1-3-5) – பிணக்கற - என்பதில் தொடங்கப்படுவதாக ஏன் கூறவேண்டும்? ஆசார்யஹ்ருதயம் ( 219) - வீடுமின் என்று த்யாஜ்யோபாதேய தோஷகுண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பநமந்த்ரமாக உபதேசித்து – என்பதில் கூறப்பட்டபடி அந்தத் திருவாய்மொழியையும் இதற்கு உறுப்பாக ஒன்றாகச் சேர்த்து உரைத்துக் கொண்டு வந்து, ஆசார்யஹ்ருதயம் (219) – அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற வுணர்வு கொண்டு நலஞ்செய்வது – என்று தான் முன்பு அருளிச்செய்த அதே முறையைப் பின்பற்றி, “முதல் பத்தில் தொடக்கப் பெற்ற பக்தியோகத்தை” என்று அருளிச்செய்தார். ஆசார்யஹ்ருதயம் (224) என்பதில் “பிணக்கற” என்று தொடங்கி “வேதப்புனித விறுதிசொன்ன” என்று அல்லவோ அருளிச்செய்தார்? எனவே இப்படியாக முதல் பத்தில் தொடங்கப்பட்ட பக்தியை முடித்துக் கொண்டு. (எண் பெருக்கில்) – திருவாய்மொழி (1-2-10) – எண் பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறு இல வண்புகழ் நாரணன் – என்று முதல் பத்தில் பஜனம் செய்வதற்கு ஏற்றபடியாகக் கூறப்பட்டதும், திருவாய்மொழி (10-5-1) - எண்ணும் திருநாமம் - என்று பஜனம் செய்யப்படுகின்ற இடத்தில் கூறப்படுவதும் ஆகிய திருநாமமான திருமந்த்ரத்தின் சொல் மற்றும் பொருள் ஆகியவற்றை, திருவாய்மொழி (10-5-2) – நாரணம் – என்றும், திருவாய்மொழி (10-5-2) - நாரணன் எம்மான் – என்றும் உள்ள இடங்களில் மிகவும் எளிதாக அறியும்விதத்தில் சுருக்கமாக உபதேசம் செய்தும். (மாதவன் என்று த்வயமாக்கி) - த்வயத்தின் முதல் வாக்கியம் மற்றும் இரண்டாம் வாக்கியம் ஆகியவற்றில் காணப்படும் “ஸ்ரீமதே” என்ற சொல்லுடைய அர்த்தத்தைத் தனது கடந்த பாசுரங்களில் கூறப்பட்டதான “நாராயணன்” என்ற சொல்லுடன் “மாதவன்” என்ற சொல்லை, இரண்டும் ஒரு பொருளை அளிப்பவையாகக் கொண்டு சேர்த்து உரைப்பீர்களாக என்பதை மனதில் நிறுத்தியவராக, அந்தத் திருமந்த்ரத்தை மிகவும் விரிவாகப் பொருள் தரவல்லதாக உள்ள த்வயரூபமாக வெளியிட்டும். (கரண த்ரய ப்ரயோக வ்ருத்தி ஸம்ஸாரிகளுக்குக் கையோலை செய்து கொடுத்து) - ஸர்வேச்வரன் நம்மாழ்வாராகிய தன்னை அழைத்துக் கொண்டு செல்வதற்கு விரைந்தபடி உள்ளதால், கேட்பவர்களுக்கு மிகவும் எளிதாக விளங்கும்படியாக சுருக்கமாகவே, திருவாய்மொழி (10-5-4) – தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீர் – என்றும், திருவாய்மொழி (10-5-5) – பாடீர் அவன் நாமம் – என்றும், திருவாய்மொழி (10-5-10) – சுனைநன் மலரிட்டு நினைமின் நெடியானே – என்றும் இவ்விதமாகத் தனது மனம், சொல் மற்றும் சரீரம் ஆகிய மூன்று கரணங்களாலும் செய்யப்படுவதான “ஸர்வேச்வரனை அடைதல்” என்னும் செயலை, மிகவும் விரிவாக உள்ளதான செயல்முறைகளைச் சுருக்கமாக இயற்றலாம் என்பதை உணர்த்தும்விதமான “இவ்விதம் இதனைச் செய்தல் வேண்டும்” என்று மிகவும் எளிதாகச் செய்து காண்பிப்பது போன்று, இந்த ஸம்ஸாரத்தில் உள்ளவர்களுக்குக் காண்பித்து (செஞ்சொற்கவிகளுக்குக் கள்ளவிழி காவலிட்டு) - திருவாய்மொழி (10-7-1) - செஞ்சொற்கவிகாளுயிர் காத்தாட் செய்மின் - என்று “அவனுக்கு மட்டுமே அடிமைத்தனம் செய்வீர்களாக. அவனுடைய சீலம் போன்ற குணங்களில் சிக்குண்டு ஏதும் செய்யாமல் நிற்காமல், உங்களுடைய ஆத்மாவை நோக்கியபடி அவனுக்குக் கைங்கர்யம் செய்ய முயலுங்கள்” என உபதேசம் செய்வதால், அனுபவ கைங்கர்யங்களுடன் வாழ்ந்தபடி உள்ளவர்களான ஒரு குலம் என்று பிறந்தவர்களுக்கு, அரண் அழிந்து போகாமல், மறைவான பாதைகளை நன்றாகப் பாதுகாப்பது போன்று, சீலம் முதலான குணங்களில் ஈடுபட்டு அசைவற்று நின்று விடாதீர்கள் என்று, வஞ்சக் கள்வனாகிய அவன் நம்முள் புகுந்து நம்மை அழிக்கின்ற வழிக்குக் காவல் செய்து வைத்து. (மனம் திருத்தி) - திருவாய்மொழி (1-5) - வளவேழ் உலகு – என்ற திருவாய்மொழியில், திருவாய்மொழி (1-5-10) - தன்பால் மனம் வைக்கத் திருத்தி – என்பதற்கு ஏற்ப, “நான் தாழ்ந்தவன்” என்று அகன்று சென்ற நம்மாழ்வாராகிய தன்னை, ஸர்வேச்வரனாகிய அவன் தன்னுடைய சீல குணத்தைக் காண்பித்து மனதைத் திருத்தித் தன்னிடம் சேர்ந்துக் கொண்டு. (வீடு திருத்தப்போய்) - தனது திருவுள்ளத்தில் ஸர்வேச்வரன், “இவர் மேலும் இந்த ஸம்ஸாரத்திலேயே இருந்தால், தன்னைத் தாழ்ந்தவராகவே எண்ணியபடி மீண்டும் நம்மை விட்டு அகன்றுவிடுவார். ஆகவே இவரை நாம் பரமபதம் கொண்டு செல்லவேண்டும்”, என்று எண்ணினான்; ஆகவே திருவாய்மொழி (1-5-10) – வீடுதிருத்துவான் - என்று பரமபதத்தை இவருக்காக வைத்து, அதனைச் செய்து மீண்டும் இங்கு வருவதற்கு முன்பாக, (நாடு திருத்தினவாறே) - திருவாய்மொழி (6-7-2) – ஊரும் நாடுமுலகமும் தன்னைப்போல் – என்பதற்கு ஏற்ப தனது உபதேசம் காரணமாக அனைத்து உலகங்களையும் திருத்தி, அவன் இங்கு இவரை வைத்துக்கொள்ள எண்ணிய என்ணமும் நிறைவேறிய பின்னர் , (வந்து விண்ணுலகம் தர விரைந்து) - திருவாய்மொழி (10-6-3) - இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் - என்பதற்கு ஏற்ப மீண்டும் இங்கு வந்து இவரைப் பரமபதத்திற்கு அழைத்துச் செல்வதற்காக விரைந்து வந்து, (அத்தை மறந்து) - இந்தச் சரீரம் இறுதியான சரீரம் என்பதால், நம்மாழ்வாருடைய திருமேனியில் அவனுக்கு ஏற்பட்ட மயக்கம் காரணமாகத் தன்னையும் மறந்து. (குடி கொண்டு தாம் புறப்பட்ட ஆக்கையில் புகுந்து) - திருவாய்மொழி (10-6-7) - கோவிந்தன் குடிகொண்டான் - என்பதற்கு ஏற்பத் தனது பரிவாரங்களுடன் சேர்ந்தவனாக, திருவாய்மொழி (10-7-3) - என் மாய ஆக்கை இதனுள் புக்கு - என்பதற்கு ஏற்ப உள்ளதான கைவிடத்தக்கது என்று அனைத்தையும் முன்னேற்பாடாகச் செய்து புறப்பட்டு நிற்கும் இந்தச் சரீரத்தில் தான் புகுந்து. (தான நகர்களை அதிலே வகுத்து) - திருவாய்மொழி (10-7-8) - திருமாலிருஞ்சோலைமலையே - என்ற பாசுரத்திற்கு ஏற்ப திருவாய்மொழி (8-6-8) – தான நகர்கள் - என்பதாகத் தான் வாசம் செய்யும் இடங்களாகிய திவ்யதேசங்களில் செய்கின்ற விருப்பங்கள் அனைத்தையும் இவருடைய சரீரத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களிலும் வைத்து, அனைத்தும் இவைகளுக்குள் என்று செய்து. (குரவை துவரைகளில் வடிவு கொண்ட சபலனுக்கு) - அங்கநா மங்கநாமந்தரே மாதவோ மாதவம் மாதவஞ் சாந்தரேணாங்கநா - ஒவ்வொரு கோபிகைக்கும் நடுவே ஒரு க்ருஷ்ணன், ஒவ்வொரு க்ருஷ்ணனுக்கு நடுவே ஒரு கோபிகை – என்பதற்கு எற்ப ஆய்ப்பாடியில் உள்ள கோபிகைகளுடன் பல திருமேனிகள் எடுத்து அனுபவித்தது போன்றும், ஸ்ரீவிபு (5-3-17) – ஏகஸ்மிந்‍நேவ கோவிந்த: காலே தாஸாம் மஹாமுநே, ஜக்ராஹ விதிவத் பாணீந் ப்ருதக் கேஹேஷு தர்மத: - க்ருஷ்ணன் ஒரே நேரத்தில் அனைத்து வீடுகளிலும் இருந்தபடி சாஸ்த்ரம் விதித்த முறைகளுக்கு ஏற்ப அவர்களைத் திருமணம் செய்துகொண்டான் - என்றும், ஸ்ரீவிபு (3-31-20) - உவாஸ விப்ர ஸர்வாஸாம் விச்வரூபதரோ ஹரி: - இரவுபொழுதில் பல திருமேனிகள் எடுத்த க்ருஷ்ணன் அவரவர்கள் வீடுகளில் வசித்தான் – என்றும் கூறுவதற்கு ஏற்ப ஸ்ரீத்வாரகையில் தேவிமார்களுடன் பதினாராயிரம் திருமேனி கண்டு அனுபவித்தது போன்றும், பல திருமேனிகள் எடுத்து தனது அவயவங்கள் அனைத்தையும் அனுபவிக்கும்படியாகத் தனது திருமேனியில் மிகுந்த ப்ரேமை கொண்ட ஸர்வேச்வரனுக்கு, (தேஹ தோஷம் அறிவித்து) - திருவாய்மொழி (10-8-10) – பொங்கை ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் இங்கிவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களான உன் மாமாயை மங்கவொட்டு - என்று தனது சரீரத்தின் தோஷத்தை உணர்த்தி, இதிலிருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என்று அவன் நகராத விதத்தில் அவனுடைய திருவடிகளைப் பற்றி நின்று. (மாயையை மடித்து) - அவனும் இதிலிருந்து அவரை விடுவிப்பதாக ஏற்றுக்கொள்ள, இவர் மிகவும் மகிழ்ந்து, திருவாய்மொழி (10-8-3) - மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை - என்பதற்கு ஏற்ப, “இந்த ஸம்ஸாரத்தில் நிற்பதற்குக் காரணமான மாயையாக மூலப்ரக்ருதி உள்ளது. அதனை முற்றிலுமாக விடுவித்தேன்”, என்று செருக்கு அடைந்து. (வானே தரக்கருதி) - திருவாய்மொழி (10-8-5) - வானே தருவான் எனக்காய் – என்பதற்கு எற்ப தனக்குப் பரமபதத்தை அளிப்பவனாகத் தீர்மானித்து. (கருத்தின்கண் பெரியனானவனை) - திருவாய்மொழி (10-8-8) - கருத்தின் கட்பெரியன் - என்று நித்யவிபூதி மற்றும் லீலாவிபூதி ஆகிய இரண்டையும் கொண்டவன் என்ற காரணத்தால் ஏற்படுவதான, மற்ற அனைத்து ஈடுபாடுகளையும் விலக்கி, தம்மை அங்கு அழைத்துக் செல்வதிலும், ஆதிவாஹிகரை நியமிப்பதிலும் முனைந்து, அழைத்துச் செல்வதில் ஆழ்ந்து எண்ணுபவனை. அல்லது இங்கு வேறுவிதமாகவும் பொருள் கூறலாம்; “மாயையை மடித்து” என்பதை பின்னர் வருவதான “கருதி கருத்தின்கண் பெரியவன் ஆனவனை” என்பதுடன் சேர்த்துக் கொண்டு, திருவாய்மொழி (10-8-3) - மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை மடித்தேன் – என்று தான் கூறும் விதத்தில் சரீரத் தொடர்பை அறுத்து, திருவாய்மொழி (10-8-5) - வானே தருவான் - என்பதற்கு ஏற்ப தனக்குப் பரமபதத்தை அளிப்பதாக முயல்கின்ற, திருவாய்மொழி (10-8-8) - கருத்தின் கட்பெரியன் - என்று தன்னால் எண்ணி முடிப்பதற்கு நேரம் இல்லாதபடி விரைவாகச் செயலாற்றுபவனை என்றும் கூறலாம். இப்படியாகத்ததான் உரைத்தப்படிச் செய்யக்கடவனாக, தன்னைப் பரமபதத்திற்குக் கொண்ட செல்வதில் மிகவும் எதிர்பார்ப்பு கொண்டவனாக. (இன்று அஹேதுகமாகவாதரித்த நீ அநாத்யநாதர ஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க) - திருவாய்மொழி (10-8-9) – இன்றென்னைப் பொருளாக்கி - என்று தொடங்கி, “இன்று இவ்விதமாக இந்த ஒரு காரணமும் இன்றி அடியேனை ஏற்றுக் கொண்ட நீ, எல்லையற்ற காலங்களாக என்னை ஏற்காமல் இருந்ததன் காரணம் என்ன என்று கூறவேண்டும்” என மடியைப் பிடித்துக் கேட்டார். “இதற்கான விடை என்ன உரைப்பது?” ஸர்வேச்வரன் தனக்குள் ஆராய்ந்து நோக்கி, அதற்கான விடையைக் கூற இயலாதவாக அவன் நின்ற நிலையை அடுத்து வெளிப்படுத்துகிறார். ஸர்வேச்வரன் தனக்குள் சிந்தித்த விதம் இதுவாக இருக்கலாம் என்று அடுத்து உரைக்கிறார். – (இந்த்ரிய கிங்கரராய் குழிதூர்த்துச் சுவைத்தகன்றீரென்னில்) – யூயம் இந்த்ரிய கிங்கரா: – நீங்கள் இந்திரியங்களுக்காக செயலாற்றுபவர்கள் – என்று கூறுவதற்கு ஏற்ப எல்லையற்ற காலமாக இந்த்ரியங்களுக்கு வசப்பட்டவராக, திருவாய்மொழி (5-8-6) – தூராக்குழி தூர்த்தெனைநாளகன்றிருப்பன் - என்றும், திருவாய்மொழி (3-2-6) - அற்ப சாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, விட்டு அகல இயலாதபடி உள்ள இந்த்ரியங்களுக்கு எனது சரீரத்தை இரையாக அளித்து எத்தனை காலம் உன்னை அகன்று நான் நிற்கப் போகிறேன்? மிகவும் தாழ்ந்தவையாக, பலவிதமாக உள்ள புலன் விஷயங்களுக்கு ஈர்ப்பு உள்ளது போன்று மயக்கி, அதற்கு எதிர் ஈர்ப்பு அளித்து நிற்கின்ற அனைத்து சக்திகளையும் கொண்டவனாகிய உனக்கும்கூட எட்டாதவிதமாக ஸம்ஸாரத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளேன் என்று நம்மாழ்வாராகிய நீவிர் உரைக்கும்படியாக, புலன்களில் உள்ள இன்பங்களின் மீது கொள்ளும் ஆசை என்பதே நீவிர் எல்லையற்ற காலமாக இந்த ஸம்ஸாரத்தில் நீடிப்பதற்குக் காரணமாக உள்ளது என்று ஸர்வேச்வரன் தனது திருவுள்ளத்தின் மூலமாக அருளிச்செய்தான். இதனைக் கேட்ட நம்மாழ்வார், “(அவை யாவையும் அகற்ற நீ வைத்தவை என்பர்) – திருவாய்மொழி (7-1-8) - ஓரைவர் யாவரையும் மயக்க நீ வைத்த – என்றும், திருவாய்மொழி (5-2-8) – அகற்ற நீ வைத்த மாயவல்லைம்புலன்கள் - என்றும் கூறுவதற்கு ஏற்ப புலன் விஷயங்களும், அவற்றில் ஈடுபடுவதற்குக் காரணமாக உள்ள இந்த்ரியங்களும், எத்தனை உறுதியுள்ளவர்களையும் கலங்கும்படிச் செய்து, உனக்கு வேண்டாதவர்களை அகற்றுவதற்காக நீ ஏற்படுத்தி வைத்தவை அல்லவோ?”, என்றார். இதனைக் கேட்ட ஸர்வேச்வரன், “(அது தேஹ யோகத்தாலே என்னில்) - இவ்விதம் இந்த்ரியங்களுக்கு வசப்பட்டு நிற்கும் நிலையானது, மூன்று குணங்களுக்கு இடமாக உள்ள சரீர ஸம்பந்தம் காரணமாக ஏற்பட்டது அல்லவோ?” என்றான். இதற்கு நம்மாழ்வார், “(அந்நாள் நீ தந்த சுமடு என்பர்) - திருவாய்மொழி (3-2-1) - அந்நாள் நீ தந்த வாக்கை - என்றும், திருவாய்மொழி (7-1-10) - அது நிற்கச் சுமடு தந்தாய் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அத்தகைய சரீர ஸம்பந்தமும் நீ அளித்தது அல்லவோ?”, என்கிறார். இதனைக் கேட்ட ஸர்வேச்வரன், “(முன் செய்த முழுவினையாலே என்னில்) - அத்தகைய சரீர ஸம்பந்தம் என்பதும் நீவிர் கூறியதான திருவாய்மொழி (1-4-2) - முன் செய்த முழுவினை - என்பதற்கு ஏற்ப எல்லையற்ற காலமாக ஈட்டப்பட்ட புண்ணியம் மற்றும் பாப ரூபமான கர்மங்கள் காரணமாக அல்லவோ ஏற்பட்டது?”, என்று உரைத்தான். இதற்கு நம்மாழ்வார், “(அது துயரமே உற்ற இருவினை உன் கோவமும் அருளும் என்பர்) - திருவாய்மொழி (3-6-8) - துயரமேதரு துன்பவின்ப வினைகளாய் - என்றும், திருவாய்மொழி (10-10-8) - உற்றவிருவினையாய் - என்றும் கூறுவதற்கு ஏற்ப அசேதநமாகவும், சக்தி அற்றதாகவும், அழியக்கூடியதாகவும் உள்ள புண்ணிய பாப ரூபமான கர்மங்கள் அனைத்தும் உனது கோபம் மற்றும் க்ருபை மூலமாகவே ஏற்பட்டது என்பதால் கர்மங்களும் உன்னால் ஏற்படுத்தப்பட்டவையே அல்லவோ?”, என்கிறார். – இதனைக் கேட்ட ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “(ஈவிலாத மதியிலேன் என்னும் உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் என்னில்) – திருவாய்மொழி (4-7-3) - ஈவிலாத தீவினைகளெத்தனை செய்தனன் கொல் - என்பதற்கு ஏற்ப முடிவற்ற பாபங்கள் எத்தனை செய்தேன் என்றும், திருவாய்மொழி (1-4-3) - மதியிலேன் வல்வினையே மாளாதோ – என்பதற்கு ஏற்ப நான் செய்த பாபங்கள் அனைத்தும் அனுபவிக்காமல் கழியாது என்றும் நீவிர் உரைக்கிறீர். ஆகவே கர்மங்களைச் செய்பவனாக உள்ள தன்மை, அதன் பலன்களை அனுபவிப்பவனாக உள்ள தன்மை ஆகிய இரண்டும் உம்முடையதே அல்லவோ?”, என்றான். இதற்கு நம்மாழ்வார், “(ஆங்காரமாய்ப் புக்குச் செய்கைப்பயன் உண்பேனும் கருமமும் கருமபலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்) - திருவாய்மொழி (10-7-11) – தானாங்காரமாய்ப்புக்கு தானே தானே யானான் – என்று தன்னுடையது எனக் கருதியபடி, ஆத்மா மற்றும் ஆத்மாவுடன் ஸம்பந்தம் கொண்ட பொருள்கள் ஆகியவற்றில் ஸர்வேச்வரனாகிய எனக்கு உள்ள உடைமை என்பதைத் தவிர்த்து, மனிதர்கள் அவற்றைத் தங்களுடையது என்று எண்ணுகிறார்கள்; ஸர்வேச்வரனாகிய எனது நிலையைக் கூறும்விதத்தில் திருவாய்மொழியில் (5-6-4) – செய்கைப் பயனுண்பேனும் யானே - என்று அனைத்து கர்மங்களுடைய பலன்களை அனுபவிப்பவன் நானே என்றும், திருவாய்மொழி (3-5-10) – கருமமும் கருமபலனுமாகிய - என்று புண்ணியபாப ரூபமாக உள்ள கர்மங்களுக்கும் அவற்றுடைய பலன்களுக்கும் நானே நியமிப்பானாக உள்ளேன் என்றும் நீ கூறுகிறாய். ஆகவே கர்மங்களை இயற்றுபவனும், அவற்றின் பலன்களை அனுபவிப்பவனும் நீயே ஆகிறாய்”, என்கிறார். “கருமமும் கருமபலனுமாகிய” என்பதன் மூலம், கர்மங்களை இயற்றுதல் அவனுக்கு வசப்பட்டது என்பதால், இவர் இந்தத் திருப்பாசுரத்தின் பகுதியை அருளிச்செய்தார் என்று கருத்து. – “(யானே எஞ்ஞான்றும் என்றத்தாலே என்னில்) – திருவாய்மொழி (2-9-9) - யானே என்னை அறியகிலாதே யானே என்தனதே என்றிருந்தேன் – என்றும், திருவாய்மொழி (3-2-7) – எஞ்ஞான்றும் - என்று தொடங்கி திருவாய்மொழி (3-2-7) – மெய்ஞ்ஞானமின்றி வினையியல் பிறப்பழுந்தி - என்றும் நீவிர் உரைத்த அஜ்ஞானம் மற்றும் அந்யதா ஞானம் ஆகியவற்றால் அல்லவோ நீவிர் கூறிய அந்த இரண்டு தன்மைகளும் உமக்கு ஏற்பட்டன?”, என்று ஸர்வேச்வரன் கேட்டான். இதற்கு நம்மாழ்வார், “(அயர்ப்பாய்ச் சமயமதி கொடுத்து உள்ளம் பேதஞ் செய்கை உன் தொழிலென்பர்) - திருவாய்மொழி (7-8-6) - அயர்ப்பாய்த் தேற்றமுமாய் - என்றும், திருவாய்மொழி (3-4-4) – மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் – என்றும், திருவாய்மொழி (5-10-4) - உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஞானம் அற்றும் அஜ்ஞானம் ஆகிய இரண்டும் நீ உண்டாக்கும் நிலைகளே என்பதால், அஜ்ஞானம் மற்றும் அந்யதா ஞானம் ஆகியவற்றை ஏற்படுத்துவதும் உனது செயல்களே ஆகும்” என்றார். (ஜீவப்ரக்ருதி சைதந்யம்) – [குறிப்பு: இந்தப் பத்தி தொடங்கி, பதினான்காம் எண்ணுள்ள பத்தி முடிய உள்ள பலவும், ஸர்வேச்வரன் தனது திருவுள்ளத்தில் நம்மாழ்வாரைக் குறித்து எண்ணும் விஷயங்களைச் கூறுவதாக உள்ளது] திருவிருத்தம் (95) – யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு - என்பதற்கு ஏற்ப ஸூக்ஷ்மமான சரீரத்தைக் கொண்டதாக உள்ள ஆத்மாவானது தனது கர்மங்களுக்கு ஏற்ப, பலவிதமான ஸ்தூல சரீரங்களில் ஒன்று விட்டு ஒன்று மாறியபடி தடுமாறித் திரிந்து நிற்கிறது. இப்படிப்பட்ட ஆத்மாவிற்கு சரீர வடிவமாகவும், இந்திரியங்களுடைய வடிவமாகவும், அனுபவிக்கப்படும் வடிவமாகவும் உள்ளதான சரீரத்தைப் பற்றி நிற்கின்ற அறிவானது, (நீங்கும் வ்ரதஹேது என்னும் ஸர்வஜ்ஞர் இவர்) - திருவிருத்தம் (95) - யாதானும் பற்றி நீங்கும் விரதம் - என்பதற்கு ஏற்ப, இந்த உலகில் உள்ள ஏதேனும் ஒன்றைப் பற்றியபடி நின்று, நம்மைவிட்டு அகலும் விரதத்திற்குக் காரணமாக உள்ளது என்று இவர் நன்கு அறிந்தவர் ஆவார். (அகமேனியில் அழுக்கறுக்கை அபிமாநி க்ருத்யம் என்னும் ஸர்வஜ்ஞர் இவர்) – திருவாய்மொழி (9-7-10) – அகமேனி ஒழியாமே – என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனாகிய நமக்கு மிகவும் அந்தரங்கமாக உள்ள சரீரமான இந்த ஜீவாத்மாவை அண்டி நிற்கின்ற சரீர ஸம்பந்தம் காரணமாக உண்டாகும் தோஷங்களை நீக்குதல் என்னும் செயலானது, இந்த ஜீவாத்மா மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஸர்வேவரனாகிய நம்முடையதே ஆகும் என்பதை இவர் நன்கு அறிந்தவர் ஆவார். அல்லது “ஜீவப்ரக்ருதி சைதந்யம் நீங்கும் வ்ரதஹேது, அக மேனியிலழுக்கறுக்கை அபிமாநிக்ருத்யம்” என்பதற்கு வேறுவிதமாகவும் பொருள் கூறலாம். கீதை (7-3) – இதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம், ஜீவபூதாம் - ஜீவாத்மா என்ற சரீரமானது மகிவும் உயர்ந்தது - என்று கூறுவதற்கு ஏற்ப, ஜீவாத்மா என்ற சரீரத்தில் உள்ள ஞானமானது, திருவிருத்தம் (95) - யாதானும் பற்றி நீங்கும் - என்பதற்கு ஏற்ப, இந்த உலகில் உள்ள வஸ்துக்களில் ஏதேனும் ஒன்றை அண்டி நின்று, நம்மை விட்டு அகலும் விரதத்திற்குக் காரணமாக உள்ளது. ஸர்வேச்வரனாகிய நமக்கு அசித் வஸ்துக்களும் சரீரமாக உள்ளபோலும், திருவாய்மொழி (9-7-10) - அகமேனி - என்பதற்கு ஏற்ப, நமக்கு மிகவும் அந்தரங்கமான சரீரமாக உள்ள ஜீவாத்வாவின் மீது உண்டாகக் கூடியதான சரீரத் தொடர்பில் ஏற்பட்ட தோஷத்தை நீக்குதல் என்பது, இந்த ஆத்மாவை மிகவும் விரும்புகின்ற நம்முடைய செயலே ஆகும் என்பதை இவர் நன்றாக அறிந்தவர் ஆவார். (தான் நல்கும் பந்தம் நிருபாதிகம் என்னும் ஸர்வஜ்ஞர் இவர்) - திருவாய்மொழி (1- 4-5) - நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே, நல்கத்தானாகாதோ நாரணனைக் கண்டக்கால் - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனாகிய நாம், நம்முடைய ஸ்நேஹத்தை முன்னிறுத்திக் காப்பாற்றுவதற்கு அடிப்படையாக உள்ளதான, நாராயணன் என்பதாக உள்ள தன்மையால், ஒரு ஸம்பந்தம் ஏற்படுகிறது. இத்தைய ஸம்பந்தமானது, நமக்கு எந்தவிதமான காரணத்தாலும் ஏற்படுவதில்லை; நமக்கு இயல்பாகவே உள்ளதாகும் என்பதை இவர் நன்றாக அறிந்தவர் ஆவார். (ஸௌஹார்த்தம் எஞ்ஞான்றும் நிற்கும் என்னும் ஸர்வஜ்ஞர் இவர்) - திருவாய்மொழி ( 8-10-7) - தனிமாப்புகழே யெஞ்ஞான்றும் நிற்கும்படியாய்த்தான் தோன்றி - என்பதற்கு ஏற்ப, ப்ரளயத்தின்போது பெயர் மற்றும் உருவம் ஆகியவற்றை இழந்து, அனைத்தும் தமஸ் என்ற இருள் நிலையை அடைந்து நிற்கும்போது, “இவற்றை மீண்டும் முன்பு இருந்தது போன்றே உண்டாக்கவேண்டும்” என்று ஸ்நேஹம் ஏற்படுகிறது; காலம் என்ற தத்வம் உள்ளது முடிய, “இத்தகைய ஸ்நேஹம் என்பது, ஒருவன் நமக்கு செய்யும் பெரிய உபகாரம் ஆகும்” என்று அதனையே எண்ணியபடி இருப்பர்; “இவ்விதமாக உள்ளவர்கள் இதயத்தில் நிற்கும்படியாக நாம் உள்ளோம்” என்று உள்ளதால், அத்தகைய ஸம்பந்தத்தின் விளைவாக அனைவருக்கும் நமையை மட்டுமே விரும்புதல் என்பதற்கு அடிப்படையாக உள்ள ஸ்நேஹம் என்ற குணத்திலும் குறை ஏற்படாது என்பதை இவர் நன்கு அறிந்தவர் ஆவார். (பிணக்கி பேதியாத ஜ்ஞாநாதி கைவல்யம் இல்லை என்னும் ஸர்வஜ்ஞர் இவர்) - திருவாய்மொழி (6-2-8) - பிணக்கியாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர் கணக்கில் கீர்த்தி வெள்ளக்கதிர் ஞான மூர்த்தியினாய் – என்பதற்கு ஏற்ப “அனைத்தும் அழியும் நேரத்தில் சேதந அசேதநங்களை, பெயர் மற்றும் ரூபங்கள் என்பதான வேறுபாடுகள் அற்றதாக ஒன்றாகத் திரட்டி, ஸ்ருஷ்டி காலத்தில் ஒருவருடைய கர்மபலன்கள் வேறு ஒருவருக்குச் சென்று விடாதபடி பிரித்துப் படைத்து நிற்கும்போதிலும், தனக்கு எந்தவிதமான பேதமும் இன்றி உள்ளதான ஞானம், சக்தி ஆகியவற்றைப் பரிபூர்ணமாகக் கொண்டவன்”, என்று இவர் உரைத்தார்; ஆகவே ஸர்வேச்வரனாகிய நம்முடைய ஞானம் மற்றும் சக்தி போன்றவற்றுக்குக் குறைவு இல்லை என்று இவர் நன்றாக அறிந்தவர் ஆவார். (ஏக மூர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ந பலித்வங்கள் நம்மது என்னும் ஸர்வஜ்ஞர் இவர்) – திருவாய்மொழி (4-3-3) – ஏகமூர்த்தி என்னும் பாசுரத்தில், “காரணங்கள் மற்றும் கார்யங்கள் என்பதான வேறுபாடுகள் இன்றி அனைத்தையும் படைத்து, அவற்றைத் தாங்கவேண்டும் என்பதற்காக அவற்றின் அந்தராத்மாவாக, ஸ்ருஷ்டிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் காக்கவேண்டும் என்பதற்காகத் திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளி, இவ்விதம் அனைத்து காலத்திலும் ஒரே போன்ற க்ருபை உள்ளவனாக இருத்தலுக்கு அடிப்படையான ஸம்பந்தம் கொண்டுள்ள நீ, உனது திருமேனிக்குத் தேவையாக உள்ள இனிமையான அனைத்தையும், திருவாய்மொழி (4-3-2) – பூசும் சாந்து - என்பதில் உரைத்தபடி என்னிடம் உண்டாக்கி, நீ துக்கம் அற்றவனாக உள்ளாயே”, என்று உரைத்தார்; ஆகவே இவரை நாம் பெறுவதற்குச் செய்யும் முயற்சியும், அத்தகைய முயற்சியால் ஏற்படும் பயனும் நமக்கே உள்ளது என்பதை இவர் நன்றாக அறிந்தவர் ஆவார். (நாம் தனிநின்ற ஸ்வதந்த்ரர் என்று அவனே அறிந்தனமே என்னும் ஸர்வஜ்ஞர் இவர்) – “பெரிய திருவந்தாதி (71) – தனி நின்ற சார்விலா மூர்த்தி – என்பதற்கு ஏற்ப, படைக்கப்பட்ட கார்யம் அனைத்தும் அழிந்த நாளில் “ஸத்” என்று கூறப்படும் வஸ்துவாக நின்று, மஹாபாரதம் - ருத்ரம் ஸமாச்ரிதா தேவா: - தேவர்கள் ருத்ரனை அடைகிறார்கள் – என்று கூறுவதற்கு ஏற்ப, எந்த ஒரு பற்றுக்கொம்பும் அவசியம் இல்லாதபடி உள்ளவனே”, என்று இவர் உரைக்கிறார். இதன் மூலம், ஸர்வேச்வரனாகிய நாம், வேண்டியதைச் செய்யவல்ல சுருக்கம் அற்ற சுதந்திரம் கொண்டவன் என்பதை அறுதியிடுகிறார்; மேலும், திருவாய்மொழி (9-3-2) – அவனே அகல் ஞாலம் படைத்திடந்தான் - என்று தொடங்கி , திருவாய்மொழி (9-3-2) - அவனே மற்றெல்லாமும் அறிந்தனமே – என்று கூறுவதால், அனைத்து கார்யங்களிலும் எந்தவிதமான துணையையும் எதிர்பாராமல் உள்ளவனாக, தனக்கு வசப்பட்டதான அனைத்து சேதந அசேதநங்களுடைய ஸ்வரூபம் நிலைப்பதற்குக் காரணமாக உள்ளவன்” என்பதையும் கூறுகிறார். இவ்விதம் இவர் பலவற்றையும் நன்கு அறிந்தவர் ஆகிறார். – (நெறிகாட்டி அருகில் சுவடும் போலே) - பெரியதிருவந்தாதி(6) - நெறிகாட்டி நீக்குதியோ - என்ற பாசுரத்தில், “மற்ற உபாயங்களை எனக்குக் காண்பித்து என்னை உன்னிடமிருந்து அகற்ற முயல்கிறாயோ? உனது சிறந்த திருமேனியை நீயே காண்பித்து நான் அதனை அனுபவிக்கப்படிச் செய்கிறாயோ? எல்லையற்ற காலமாக அறிவற்றவனாக இருந்து வரும் என்னை, என்ன செய்ய எண்ணுகிறாய்? இதனை நீ அருளிச்செய்யவேண்டும்”, என்றும்; பெரியதிருவந்தாதி (8) - அருகும் சுவடும் தெரிவுணரோம் - என்ற பாசுரத்தில், “நான் உன்னை அருகில் வராமல் உள்ளபோதிலும், உன்னைக் குறித்து ஸ்நேஹம் எனக்கு அளவுக்கு அதிகமாகவே வளர்கிறது. இதற்கான காரணத்தை நீயே அருளிச்செய்ய வேண்டும்”, என்றும், இவர் கேட்ட கேள்விக்கு அவன் விடை அருளிச்செய்யாமல் முன்பு நின்றதைப் போன்றே, (இதுவும் நிர் உத்தரம் என்று கவிழ்ந்து நிற்க) - இந்தக் கேள்விக்கும் விடை கூற இயலாது என்று தனது திருவடிகளின் விரல்கள் கொண்டு நிலத்தைச் கீறியபடி அவன் கவிழ்ந்து நிற்க. (அமந்த்ரஜ்ஞோத்ஸவ கோஷம்போலே) - சில விசேஷங்களின்போது அங்கு சடங்குகள் செய்யும் உபாத்யாயர், தனக்கு மந்திரம் மறந்துவிட்டால், வாத்யத்தை வாசிக்கச் சொல்லி தனது தவறை மறைப்பது போன்று, (ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற) - ஸர்வேச்வரனாகிய தான் விடை கூட இயலாமல் நிற்பதை வெளிக்காண்பிக்காமல் மறைப்பதற்காக, தன்னால் செய்யப்பட்டதாக உள்ளதான திருவாய்மொழி (10-6-5) - நானேறப் பெறுகின்றேன் – என்று தான் கீழே உரைத்தபடியே பரமபதத்திற்குச் செல்வதான எழுச்சியைக் குறித்து மறைமுகமாக வெளிப்படுத்துகின்ற. (மேக ஸமுத்ர பேரீ) – திருவாய்மொழி (10-9-1) – சூழ்விசும்பணிமுகில் தூரிய முழக்கின ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின - என்பதற்கு ஏற்ப, அரசபுத்திரர்கள் செல்லும்போது மங்கள இசையை உண்டாக்குபவர் போன்று, பரமபதத்திற்குச் செல்பவர்களைக் கண்டால் அந்தக் காட்சியில் மகிழ்ந்து முழுங்குவதும் ஒலிப்பதாகவும் உள்ளதான மேகம் மற்றும் ஸமுத்ரம் என்பதான பேரி வாத்யங்களுடையதும். (கீத) – திருவாய்மொழி (10-9-5) - கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர்கள் - என்பதான கீதங்களுடையதும், (காஹள சங்க) - திருவாய்மொழி (10-9-6) - - காளங்கள் வலம்புரி கலந்தெங்குமிசைத்தனர் – என்பதான காஹள சங்குகளுடையதும். (ஆசீ) - திருவாய்மொழி (10-9-6) – வாள் ஒண்கண் மடந்தையர் வாழ்த்தினர் - என்பதற்கு ஏற்ப ஆசிர்வாதங்களுடையதும். (ஸ்துதி) - திருவாய்மொழி (10-9-7) - தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் – என்பதற்கு ஏற்ப ஸ்துதிகளுடையதும். (கோலாஹலம் செவிப்பட்டவாறே) - ஆகிய கலவையாக உள்ளதான பெருத்த கோஷம் என்பதான கோலாஹலத்தைக் கேட்டவுடனே. (ஸாக்ஷாத்கரித்த பரமப்ராப்திக்கு) – அர்சிராதிமார்க்கத்தையும், ஆதிவாஹிகர்களுடைய உபாசாரங்களையும், பரமபதத்தை அடைதலையும், அங்குள்ளவர்களுடைய பரந்த எண்ணிக்கையையும், ஆனந்தமயமாக உள்ள திருமாமணி மண்டபத்தில் அவன் வீற்றிருப்பதையும், அவனுடைய திருவடித் தாமரைகளை அடைந்ததையும் தான் பெற்றுவிட்டதாக, தனது மானசீகமான ஞானத்தால் தரிசித்த உயர்ந்த அடைதல் என்பதற்கு. (தலை மிசையாய் வந்த தாள்களைப் பூண்டு) இவ்விதம் தரிசித்ததான உயர்ந்த பேற்றுக்கு மனதில் கண்ட அனுபவம் மட்டுமேயாக, புறத்தில் கொண்டு அனுபவிப்பதற்கான யோக்யதை இல்லாமையால் அதனைப் பெறுவதற்காக, திருவாய்மொழி (10-10-1) – தலைமிசையாய் வந்திட்டினி நான் போகலொட்டேன் - என்றும், திருவாய்மொழி (10-4-4) - தலைமேல் புனைந்தேன் சரணங்கள் – என்றும், திருவாய்மொழி (10-6-6) - தலைமேலதாளிணைகள் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, மனதால் ஏற்பட்ட அனுபவத்தின் தெளிவு காரணமாகத் தனது தலை மீது சேர்வதாக வந்த அவனுடைய திருவடிகளைக் கட்டிக்கொண்டு, (திரு ஆணை இட்டு) - திருவாய்மொழி (10-10-2) - திருவாணை நின்னாணைகண்டாய் – என்று அவனால் மறுக்க இயலாத ஆணையைப் பிறப்பித்தார். இவ்விதம் அவர் ஆணை பிறப்பித்தவுடன் ஸர்வேச்வரன் அவரிடம், “நம்முடைய அடியவராகிய நீவிர் நாம் செய்தபடி அடங்கவேண்டும் அல்லாமல், நீவிர் நம்மை ஆணையைப் பிறப்பித்துத் தடுத்தல் என்பது உம்முடைய ஸ்வரூபத்திற்கு முரண்பட்டது ஆகும். ஆகவே உம்முடைய இந்த ஆணை செல்லாது”, என்றான். – இதனை கேட்ட நம்மாழ்வார் பதில் உரைக்கிறார். (கூசஞ்செய்யாத செய்திப்பிழை) - திருவாய்மொழி (10-10-2) - கூசுஞ் செய்யாது கொண்டாய் – என்று, “அனைத்தும் அறிந்தவனாகிய நீ, என்னுடைய முந்தைய செயல்களால் உண்டான தாழ்வை நோக்கிக் கூசி, என்னை வேறுபடுத்தி நோக்காமல், உன்னுடைய ஆத்ம பேதம் ஏதும் இல்லாதபடி என்னை ஏற்றுக்கொண்டாய். ஆகவே கார்யத்தின் தோஷம் என்பது உன்னுடையது அல்லவோ?”, என்கிறார். (பற்றுக் கொம்பற்ற கதிகேடு) - திருவாய்மொழி (10-10-3) - ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலாலறிகின்றிலேன்யான் - என்று, “ஒரு கொடியானது அதற்கு ஏற்றபடி உள்ள பற்றுக்கொம்பு இல்லையென்றால் பிழைக்காது என்பது போன்று எனது ஆத்மா கரையேறுவதற்கு உன்னை அல்லாமல் வேறு எதனையும் நான் காணவில்லை. ஆகவே நான் வேறு கதி அற்றவன் ஆவேன்”, என்கிறார். (போரவிட்டபெரும்பழி) - திருவாய்மொழி (10-10-4) - எம்பரஞ்சாதிக்கலுற்றென்னைப் போரவிட்டிட்டாய் – என்று, “எனது செயல்களை நீ செய்வதாக எடுத்துக் கொண்டாய். ஆனால் உன்னிடமிருந்து பிரிந்து, உனது உயர்ந்த குணங்களை உணராதபடி உள்ளதான ஸம்ஸாரத்தில் என்னைத் தள்ளிவிட்டு என்னை மறந்தாய். இது உன்னால் விலக்க இயலாத பெரிய பழி அல்லவோ?”, என்கிறார். (புறம் போனால் வரும் இழிவு) – திருவாய்மொழி (10-10-5) - போரவிட்டிட்டென்னை நீ புறம்போக்கலுற்றால் பின்னையானாரைக் கொண்டெத்தையந்தோ என தென்பதென் யானென்பதென் – என்று, “வேறு கதி ஏதும் இல்லாத என்னை உன்னிடமிருந்து பிரித்து, ஸ்ருஷ்டி காலம் தொடங்கி இதுவரை ஸம்ஸாரத்தில் என்னை புகும்படியாக நிறுத்திய நீ, எனது கார்யங்களை நானே செய்து கொள்வேன் என்று எண்ணி என்னை நோக்காமல் அலட்சியம் செய்தால், அனைத்து சக்தியும் கொண்டவனாகிய நீ என்னை ஒதுக்கிய பின்னர், சக்தி ஏதும் அற்றவனாகிய நான் எந்த உபாயத்தைக் கைக்கொண்டு, எத்தகைய புருஷார்த்தத்தை அடைய முடியும்? எனக்கு உதவி செய்யலாம்படியாக உள்ள ஒரு பொருள் ஏதும் உள்ளதோ? உன்னைக் காட்டிலும் வேறுபட்டு நிற்கும் தகுதி எனக்கு உள்ளதோ? என்னை நீ என் வசப்படுத்தினால் எனக்கு கேடு மட்டுமே ஏற்படும்”, என்கிறார். (உண்டிட்ட முன் தீம்பு) - திருவாய்மொழி (10-10-6) - எனதாவியையின்னுயிரை மனக்காராமை மன்னியுண்டிட்டாயினி யுண்டொழியாய் – என்று, “எனது தாழ்ந்த சரீரத்தையும், ஆத்மாவையும் மனதிற்கு எத்தகைய நிறைவும் ஏற்படாதவிதமாக எப்போதும் பருகியபடி உள்ள நீ, தொடங்கிய செயலை முழுமையாகச் செய்யாமல் விடமாட்டாய். ஆனால் என் விஷயத்தில், உண்ட உணவை மீதம் வைத்த முதல் குற்றம் உன்னுடையது அல்லவோ”?, என்கிறார். (அன்பு வளர்ந்த அடி உரம்) - திருவாய்மொழி (10-10-7) - கோலமலர்ப்பாவைக்கன்பாகிய வென்னன்பேயோ - என்று, “பெரியபிராட்டியாரிடம் காண்பிக்கும் எல்லையற்ற ப்ரேமையால் அவளுடைய சிபாரிசு பெற்றவனாகிய என்னிடம் அளவற்ற அன்பு கொண்டவனே! நான் உனக்கு அந்தரங்கமான கைங்கர்யங்கள் செய்பவன் அல்லவோ? என்னிடம் உனக்கு ஏற்பட்டுள்ள அன்பிற்குக் காரணம் இல்லையோ? ஆகவே அவள் பரிகரம் என்பதான காரணமே உரமாக உள்ளது”, என்கிறார். (உயிர் உறவு) - திருவாய்மொழி (10-10-8) – பெற்றினிப் போக்குவனோ உன்னையென் தனிப்பேருயிரை - என்று, “மிகுந்த வேறுபட்டவனாக இருந்து, எனக்கு உயிராக உள்ள உன்னை நான் பெற்ற பின்னர் இனி விடுவேனோ? உயிரை விட்டு உடல் வாழுமோ? இப்படியாகவே ‘சரீரி – சரீரம்’ என்னும் ஸம்பந்தம் உள்ளது”, என்கிறார். – (முதல் அளவு துரக்கைகளாலே பெறா ஆணை அல்ல ஆக்கின) - இவ்விதம் திருவாய்மொழி (10-10-9) - முதல் தனிவித்து – என்ற பாசுரம் முடிய ஸர்வேச்வரனால் மறுமொழி கூற இயலாதபடியாக, தம்முடைய பக்கம் உள்ள வாதங்கள் மூலம் தாம் இட்ட ஆணை என்பது “பெறா ஆணை” அல்ல என்பதை நிருபித்தார். (பேரவா குளப்படியாம்படி) – திருவாய்மொழி (10-10-10) – அதனில் பெரியவென்னவா - என்பதற்கு ஏற்ப தத்வ த்ரயத்தை உட்கொண்டு, அவையும் ஒரு குளப்படி நீரே என்றாகும்படியாக உள்ள பெரியதான தனது பரமபக்தியும் குளப்படி நீர் என்று ஆகும்படியாக, (கடல் போன்ற வாதாரத்தோடே சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளியிடுகிறார் பத்தாம் பத்தில்) - அதாவது, திருவாய்மொழி (10-10-10) – என் அவா அறச் சூழ்ந்தாயே – என்று உரைத்த அளவிட இயலாத தனது காதலையும், அவனுடைய காதலையும் ஆராய்ந்தால், தனது காதல் என்பது குளம்பு அளவு கொண்ட நீர் மட்டுமே என்றும், அவனுடைய காதல் என்பது ஸமுத்ரம் போண்ற அளவு கொண்டது என்றும் கூறலாம்படியாக பெருங்காதலுடன் அவன் வந்து தன்னுள் கலந்து, இராமாயணம் யுத்தகாண்டம் (134-39) - அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே – மிகுந்த மகிழ்வு கொண்ட இராமன் பரதனைத் தனது மடியில் அம்ர்த்திக் கொண்டான் - என்பதற்கு ஏற்ப, மீண்டும் அயோத்திக்கு வந்தவுடன் பரதாழ்வானைத் தனது மடியில் அமரவைத்து, அணைத்து, உச்சிமுகர்ந்து மகிழ்ந்தான் என்பது போன்று இவனும் நின்றான். இப்படியாகத் தம்முடைய தாகம் என்பது தீரும் விதமாகத் தன்னை அனுபவிக்கும்படிச் செய்து, அவனைப் பெறாத காரணத்தால் ஏற்பட்ட துன்பத்துடன் அழைத்த திருவாய் கொண்டு, திருவாய்மொழி (10-10-10) – அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச்சடகோபன் – என்று தன்னை உரைக்கும்படியாகச் செய்தான். இப்படியாக, திருவாய்மொழி (10-10-10) – அவாவறச் சூழ் அரியை – “ஹரி” என்ற திருநாமத்திற்கு ஏற்றபடி தன்னுடைய அனைத்துவிதமான துன்பங்களையும் அவன் அழித்தான் என்ற விஷயம் அனைவரும் அறியலாம்படியாகப் பத்தாம்பத்தில் வெளியிட்டார்.