Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 227)
நான்காம் ப்ரகரணம்
[1] எண்டிசையும் அகல்ஞாலம் எங்குமளிக்கின்ற ஆலின்மேலென்னும்படி நித்யபோகபாத லீலோபகரணத்தின் லயாதிகளைப் போக்கும் ஆபத்ஸகன் [2] ஆருயிரென்னப்படுத்தின ஆத்ம தர்சந பலாநுபவ பரம்பரையைக் கூவுதல் வருதலென்று முடுகவிட்டு [3] ஏகமெண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறு முருகியலற்றிக் கவையில் மனமின்றிப் பதினாலாண்டு பத்து மாஸமொரு பகல் பொறுத்தவர்கள் ஒரு மாஸ தின ஸந்த்யையில் படுமது க்ஷணத்திலேயாகவிரங்குகிற த்வரைக்கீடாக [4] இனிப்பத்திலொன்று தசம தசையிலே பேறென்று நாட்கடலாகத் தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவைபோலே நாளிடப் பெற்றவர், [5] இம்மடவுலகர் கண்டதோடு பட்ட அபாந்தவாரக்ஷகாபோக்யாஸுகாநுபாய ப்ரதிஸம்பந்தியைக் காட்டி [6] மற்றொன்று கண்ணனல்லாலென்கிற வைகல் வாழ்தலான ஸித்தோபாயம், [7] அதில் துர்ப்பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலைமாலை விண்டு தேனை வாடா மலரிட்டு அன்பராம் ஸாங்கபக்தி, அதில் அசக்தர்க்குத் தாளடையும் ப்ரபத்தி, [8]அதில் அசக்தர்க்கு உச்சாரண மாத்ரம், ஸர்வோபாய சூந்யர்க்கு இப்பத்தும் பாடியிடும் தெண்டனென்று கீதாசார்யனைப் போலே அதிகாராநுகுணம் நெறியெல்லா முரைக்கிறார் ஒன்பதாம்பத்தில்.
ஒன்பதாம் பத்தால், இப்படி அவாப்த ஸமஸ்த காமனாகையாலே இத்தலையில் ஒன்றையும் அபேக்ஷியாமல் ப்ரளயாத்யாபத்துக்களிலே உதவி ரக்ஷிக்கும் ஆபத்ஸகனான ஸர்வேச்வரன், கீழ் ப்ரகாசிப்பித்த ஆத்ம தர்சநத்துக்குப் பலம், ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யத்தை யனுபவிக்கையாகையாலே, அவ்வனுபவத்தி லுண்டான த்வரையாலே க்ஷணகாலம் விலம்பம் பொறுக்கமாட்டாமல் ஆர்த்தரான தமக்கு, ஆரப்த சரீராவஸாநத்திலே பேறாகக்கடவது என்று நாளவதியிட்டுக் கொடுக்கப் பெற்றவர், கீழ் தம்முபதேசத்தால் திருந்தினவர்களையொழிய அல்லாதாரையும் விடமாட்டாத பரமக்ருபையாலே யதாதிகாரம் ஸர்வோபாயங்களையும் அருளிச் செய்கிறாரென்கிறார்.
இவ்விதம் தன்னால் விரும்பப்படும் அனைத்து நிறைவேறப் பெற்றவன் எனப்தால், நம்மிடமிருந்து எதனையும் எதிர்பாராமல் , ப்ரளயம் முதலான ஆபத்துக்களில் நமக்கு உதவி செய்து காப்பாற்றுகின்ற துணையாகிய ஸர்வேச்வரன், இவருக்கு ஆத்ம ஸ்வரூபத்தை மேலே கூடியபடி உணர்த்தினான். அத்தகைய உண்மையை அறிந்ததன் பலன் என்பது “ஆத்மஸ்வரூபத்திற்கு ஏற்றதான பேற்றினை அனுபவித்தல் ஆகும்” என்று காரணத்தால், அத்தகைய அனுபவித்தால் தனக்கு உண்டான பரபரப்பின் விளைவாக, ஒரு நொடியும் காலம் தாழ்த்துதல் என்பதைப் பொறுக்க இயலாமல் துடித்தபடி நின்ற ஆழ்வராகிய தனக்கு ஸர்வேச்வ்ரன், “இந்தச் சரீரத்தின் முடிவில் பேறு நிச்சயம் கிட்டும்”, என்று உறுதியுடன் குறித்துக் கொடுத்தான். அத்தகைய வாக்கைப் பெற்ற ஆழ்வார், தம்முடைய உபதேசங்கள் கேட்டுத் திருந்தியவர்கள் தவிர உள்ள மற்றவர்களையும் கைவிட இயலாத தனது உயர்ந்த க்ருபை காரணமாக, அவரவர்களுடைய தகுதிக்கு ஏற்ப அனைத்து உபாயங்களையும் ஒன்பதாம் பத்தில் அருளிச்செய்கிறார் என்று கூறுகிறார்.
[1] (எண்டிசையுமகல் ஞாலமெங்கு மளிக்கின்ற ஆலின் மேலென்னும்படி நித்யபோகபாதலீலோபகரணத்தின் லயாதிகளைப் போக்குமாபத்ஸகன்) “எண்டிசையும் கீழும் மேலும் முற்றவுமுண்டபிரான்”, “அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே அஃதுண்டுமிழ்ந்தானளந்தான்”, “அகலிடம் படைத்திடந்துண்டுமிழ்ந்தளந் தெங்கு மளிக்கின்ற வாயன்”, “ஆலின் மேலாலமர்ந்தான்” என்று ஸகல லோகங்களையும் ப்ரளயங் கொள்ளாமல் ஏற்கவே திருவயிற்றிலே வைத்து நோக்கி அழிந்தவற்றை மீண்டு முண்டாக்கியும், ஹிரண்யாக்ஷனாலே தள்ளுண்டு அண்டபித்தியிலே சேர்ந்த பூமியை ஒட்டுவிடுவித்தெடுத்தும், மஹாபலி பலாத்கரித்தாளுகிற தசையிலே எல்லை நடந்து மீட்டும், இப்படி ப்ரளயாத்யாபத்துகளிலே உதவி ரக்ஷித்தவனென்னும்படி கீழ்ச்சொன்ன ஸத்ய காமத்வத்தால் வந்த நைரபேக்ஷ்யம் தோற்ற இத்தலையில் அபேக்ஷையற ப்ரத்யுபகாரம் நினையாமல் வரையாதே தன் பேறாக நோவுபடுமளவுகளிலேயுதவி, “பாதோஸ்ய விச்வாபூதாநி, த்ரிபாதாஸ்யாம்ருதம் திவி” என்கிறபடியே, அம்ருத சப்தத்தாலே சொல்லும்படி நித்ய போகமான த்ரிபாத் விபூதியைப் பற்ற அல்பமாகையாலே பாத சப்தத்தால் சொல்லப்பட்ட லீலோபகரணமான இவ்விபூதியின் லயாதிகளைப் போக்குமாபத்ஸகனானவன். [2] (ஆருயிரென்னப்படுத்தின ஆத்மதர்சநபலாநுபவ பரம்பரையைக் கூவுதல் வருதலென்று முடுகவிட்டு) “இருத்தும் வியந்தி”ல் தம்மோடு கலந்த கலவியை ஸ்மரிப்பிக்க வித்தராய்ப் பேசுகிறவளவில் அவன் தட்டுமாறி நின்று பரிமாறின சீலத்திலே யீடுபட்டு “ஆருயிர் பட்டதெனதுயிர் பட்டது” என்று என்னாத்மாபட்டது நித்யாநுபவம் பண்ணுகிற நித்யஸூரிகள் ஸ்வரூபந்தான் பட்டதோ வென்னும்படியாகத் தான் மேல்விழுந்தனுபவித்த ஆத்ம வைலக்ஷண்யத்தை கீழில் பத்தில் யாதாவாகக் காட்டக் கண்டதுக்குப் பலம் ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யத்தை யநுபவிக்கையாகையாலே, “சோதி வாய் திறந்துன் தாமரைக் கண்களால் நோக்காய்”, “பாத பங்கயமே தலைக்கணியாய்”, “உன் தாமரை மங்கையும் நீயுமிடங்கொள் மூவுலகுந் தொழ விருந்தருளாய்”, “கனிவாய் சிவப்ப நீ காணவாராய்”, “நின்பன்னிலா முத்தம் தவழ்கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய்” என்று திருப்பவளத்தைத் திறந்து ஒரு வார்த்தையருளிச் செய்யவேணும், திருக்கண்களாலே குளிர நோக்கியருளவேணும், திருவடிகளை என் தலையிலே வைத்தருள வேணும், தேவரீரும் பிராட்டியும் கூடவெழுந்தருளியிருக்கிற விருப்பை யெனக்குக் காட்டியருளவேணும், என் முன்னே நாலடி உலாவியருளவேணும், அநுகூல தர்சநத்தில் பிறக்கும் ஸ்மிதம் காணவேணும் என்று இப்படி அநுபவ பரம்பரையை யாசைப்பட்டு க்ரமப்ராப்தி பற்றாமையாலே, “கூவுதல் வருதல் செய்யாய்” என்று நிரதிசய போக்யமான உன் திருவடிகளிலே நானும் வந்தடிமை செய்யும்படி என்னை யங்கே யழைத்தல், நீ இங்கே வருதல் செய்தருளவேணுமென்று இப்படி முடுகவிட்டு. [3] (ஏகமெண்ணிக் காணக்கருதி யெழ நண்ணி நினைதொறு முருகியலற்றிக் கவையில் மனமின்றி) “மாக வைகுந்தம் காண்பதற்கென் மனமேகமெண்ணு மிராப் பகலின்றியே” என்று அவன் நித்யவாஸம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே ஸர்வ காலமுமேகரூபமாக மநோரதித்து, “காணக்கருது மென் கண்ணே” என்று பெரியபிராட்டியாரோடும் திவ்யாயுதங்களோடும் திவ்ய விக்ரஹத்தோடும் கூடியிருக்கிறவனைக் காணவேணுமென்றாசைப்பட்டு, “எழ நண்ணி நாமும் நம்வான நாடனோடொன்றினோம்” என்று ஸ்மாரக பதார்த்த தர்சநத்திலே நோவுபடுகையாலே முடிந்து போகையிலே யொருப்பட்டு, “திருக்காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறு நெஞ்சம் உருகுமால்” என்று அவனநுபவ தசையில் பரிமாறின சீலாதிகளை நினைக்குந்தோறும் அநுபவோபகரணமான நெஞ்சு சிதிலமாய்க் கரைந்து. “தமரோடங் குறைவார்க்குத் தக்கிலமே கேளீரே” என்று தூத ப்ரேஷண முகத்தாலே, “கிளிமொழியா ளலற்றிய சொல்” என்று ஆற்றாமையாலே அக்ரமமாகக் கூப்பிட்டு “கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்” என்று இரு தலைத்த நெஞ்சின்றிக்கே ஏகாக்ர சித்தராய், (பதினாலாண்டு பத்துமாஸ மொருபகல் பொறுத்தவர்கள் ஒருமாஸ திந ஸந்த்யையில் படுமது க்ஷணத்திலேயாக விரங்குகிற த்வரைக்கீடாக) பெருமாளைப் பிரிந்து பதினாலாண்டு பொறுத்திருந்த ஸ்ரீபரதாழ்வான், “பூர்ணே சதுர்த்தச வர்ஷே” என்ற அவதி கழிந்த ஒருநாளில் பட்ட க்லேசமும், பத்து மாஸம் பொறுத்திருந்த பிராட்டி, “மாஸாதூர்த்வம் ந ஜீவிஷ்யே” என்று திருவடியுடன் சொல்லிவிட்ட வநந்தரம் அவ்வொரு மாஸத்தில் பட்ட க்லேசமும், க்ருஷ்ணன் பசு மேய்க்கப் போக ஒரு பகலெல்லாம் பொறுத்திருந்த ஸ்ரீகோபிமார், அவன் பசுக்களின் பிற்குழையிலே வாராநிற்க, முற்கொழுந்தில் காணாமையாலே ஒரு ஸந்த்யையில் பட்ட க்லேசமுமெல்லாம் ஒரு க்ஷணத்திலேயாம்படி, “அவனை விட்டகல்வதற்கே யிரங்கி” என்றீடுபடுகிற த்வரைக்கீடாக. [4] (இனிப் பத்திலொன்று தசமதசையிலே பேறென்று) “நயந ப்ரீதி: ப்ரதமம் சிந்தாபோகஸ் ததோநு ஸங்கல்ப:, நித்ராச்சேதஸ் தநுதா விஷய விரக்திஸ் த்ரபாநாச:, உந்மாதோ மூர்ச்சா ம்ருதி ரித்யேதா: ஸ்மரதசா தசைவ ஸ்யு:” என்றும், “ப்ரதமஸ் த்வபிலாஷ: ஸ்யாத் த்விதீயம் சிந்தநம் பவேத், அநுஸ்ம்ருதிஸ் த்ருதீயந்து சதுர்த்தம் குணகீர்த்தனம் உத்யோக: பஞ்சம: ப்ரோக்த: ப்ரலாப: ஷஷ்ட உச்யதே உந்மாதஸ் ஸப்தமோ ஜ்ஞேய: அஷ்டமோ வ்யாதிருச்யதே நவமே ஜடாதசைவ தசமம் மரணம் ததா” என்றும் சொல்லுகிறபடியே காமுகராயிருப்பார்க்கு தசமாவஸ்தையிலே மரணமாமாப்போலே, நம்பக்கல் பரபக்தியுக்தரான உமக்கும் நம்மைப் பெறாவிடில் முடியும்படியான பரமபக்திதசை பத்தாம் பத்திலே பிறக்கத் தேடுகிறது. ஆகையால் கீழ்ச்சொன்ன விளம்பமில்லை, இனியுள்ளது பத்திலொன்று தசமதசையான மரணாவஸ்த்தையிலே பேறென்று. (நாட்கடலாகத் தம்பிக்கிட்டதாகாமல் நாளை வதுவைபோலே நாளிடப் பெற்றவர்) “நாட்கடலைக் கழிமினே” என்கிறபடியே விரஹ வ்யஸநத்தாலே ஒருநாள் ஒருகடல்போலே துஸ்தரமாம்படி, “பூர்ணே சதுர்த்தசே வர்ஷே” என்று தம்பியான பரதாழ்வானுக்கு நெடுக நாளிட்டுக் கொடுத்தாப்போலே யாகாமே, “நாளை வதுவை மணமென்று நாளிட்டு” என்று இன்றென்னில் வெள்ளக்கேடாம், சிலநாள் கழித்தென்னில் வறட்கேடாமென்று நினைத்து, நாளையென்று நாய்ச்சியார்க்கு நாளிட்டாப்போலே “மரணமானால்” என்று ஆரப்த சரீராவஸாநத்திலே பேறாக அவன்தானே நாளிட்டுக் கொடுக்கப் பெற்று ஹ்ருஷ்டரானவர், [5] (இம்மடவுலகர் கண்டதோடுபட்ட அபாந்தவாரக்ஷகா போக்யாஸுகாநுபாய ப்ரதிஸம்பந்தியைக்காட்டி) சரமோபாயோபேய பர்யந்தமாகத் தாமருளிச்செய்த ஹிதவசநம் கேட்டுத் திருந்தினவர்களை யொழிய அல்லாதாரையும் விடமாட்டாத தம்முடைய க்ருபையாலே “இம்மடவுலகர்” என்று ஸம்ஸாரத்தி லறிவு கேடரானவர்களுக்கு, “கொண்ட பெண்டிர்” என்று தொடங்கி ஸந்நிதியிலே ஸ்நேஹிக்குமதொழியக் காணாதபோது ஸ்நேஹமொன்றுமின்றிக்கே யிருக்கிற பார்யாபுத்ராதிகள் பந்துக்களன்று, ப்ரளயாபத்ஸகனானவனே பரமபந்துவென்றும், “துணையும் சார்வும்”, “பொருள் கையுண்டாய்”, “அரணமாவர்” என்ற பாட்டுக்களாலே அவனை யொழிந்தார் தாங்களுபகாரரைப் போலே ப்ரயோஜநமுள்ளபோது பந்துக்களாய்க் கொண்டாடி ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேக்ஷிப்பர்கள்; ஆகையால் அவர்கள் ரக்ஷகரல்லர்; தன்னுடைய ரக்ஷணத்திலே அதிசங்கை பண்ணினாரையும் விச்வஸிப்பித்து ரக்ஷிக்குமவனாய் அவதார முகத்தாலே ஸுலபனாய் ரக்ஷணாநுரூபமான குணங்களையுமுடையனானவவனை யொழிய வேறு ரக்ஷகரில்லையென்றும், “சதிரமென்று தம்மைத்தாமே சம்மதித்து” என்று தொடங்கி தங்களுக்கு போக்யைகளாக ஸம்பாதித்த ஸ்த்ரீகள் ஆபத்து வந்தவாறே உபேக்ஷிப்பர்கள், ஏக ப்ரகாரமாக ஸ்நிக்தனாயிருப்பானவனே, ஆனபின்பு அவர்கள் போக்யரல்லர், அவனே நிரதிசய போக்யனென்றும், “இல்லை கண்டீரின்பம்” என்று தொடங்கி, துக்கங்களிலே சிலவற்றை ஸுகமென்று ப்ரமிக்கிற வித்தனை போக்கி அவனை யொழிய ஸுகரூபமாயிருப்பதொன்றில்லை யென்றும், “யாதுமில்லை மிக்கதனில்” என்று தொடங்கி அவனையொழிய வேறொன்றை ரக்ஷகமென்று பற்றினவர்கள் பண்டைநிலையுங்கெட்டு அநர்த்தப்பட்டுப் போவர்கள். ஆன பின்பு அவனை யொழிய உபாயமில்லையென்றும் இப்படி அவனை யொழிந்தாருடைய அபந்துத்வத்தையும் அரக்ஷகத்வத்தையும் அபோக்யதையையும் அஸுகத்வத்தையும் அநுபாயத்வத்தையும், அதுக்கு ப்ரதிகோடியானவவனுடைய பரமபந்துத்வத்தையும் நிருபாதிகரக்ஷகத்வத்தையும் நிரதிசய போக்யதையையும் ஸுகரூபத்வத்தையும் நிரபேக்ஷோபாயத்வத்தையும் தர்சிப்பித்து இம்மடவுலகருடைய அபாந்தவாதிகள் ப்ரதிஸம்பந்தியை அவர்களுக்குக் காட்டி என்று வாக்ய யோஜநாக்ரமம். [6] (மற்றொன்று கண்ணனல்லாலென்கிற வைகல் வாழ்தலான ஸித்தோபாயம்) “மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்தெவ்வுயிர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பேயமையும் கண்டீர்கள்” என்று இதுக்குமேல் சொல்லலாவ தொன்றில்லை. இது தன்னை ஸுக்ரஹமாகச் சொன்னோம், மஹாப்ருதிவியில் ஸகலாத்மாக்களுக்கும் இது தனக்குப் பரக்க ஆயாஸிக்கவேண்டா, சிந்தாமாத்ரமேயமையும் கேளிகோள் என்கையாலே, தனக்கு மேலொன்றின்றியே யிருப்பதாய், ஸங்க்ரஹேண உபதேசிக்கலாய், ஸர்வாதிகாரமாய் வரண ஸுகரமுமாயிருக்குமதாகவும்; “கண்ணனல்லாலில்லை கண்டீர் சரண்” என்று “மாமேகம் சரணம் வ்ரஜ” என்று க்ருஷ்ணனையொழிய வேறுபாயமில்லை யென்கையாலே ஸித்தமாய் பரம சேதநமாய் ஸர்வசக்தியாய் நிரபாயமாய் ப்ராப்தமாய் ஸஹாயாந்தர நிரபேக்ஷமாயிருக்குமதாகவும் சொல்லப்படுமதாய், “வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல்” என்கிற யாவதாத்மபாவியான குணாநுபவத்துக்குடலான ஸித்தோபாயத்தை யுபதேசித்தும். [7] (அதில் துர்பலபுத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனைவாடா மலரிட்டு அன்பராம் ஸாங்கபக்தி) “ஸக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த: க்ருதோயம் தாரயேந்நரம், நராணாம் புத்தி தௌர்பல்யாதுபாயாந்தரமிஷ்யதே” என்கிறபடியே அந்த ஸித்தோபாயத்தில் மஹாவிச்வாஸம் பிறக்கைக்கடியான பாக்யமில்லாமையாலே இதரோபாய பரித்யாக பூர்வகமாக அதிலிழிகையில் விச்வாஸமில்லாமையாகிற புத்தி தௌர்பல்யமுடையவர்களுக்கு, “மாலை நண்ணித் தொழுதெழுமினோ காலை மாலை கமலமலரிட்டு நீர்”, “விண்டுவாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்”, “தேனைவாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்”, “தனதன்பர்க்கு” என்று பக்தி யுக்தராய்க் கொண்டு ஸர்வகாலமும் புஷ்பாத்யுபகரணங்களாலே அவனை ஸமாராதநம் பண்ணி அவன்பக்கல் பக்தி நிஷ்டராகுங்கோளென்று அங்க ஸஹிதையான பக்தியை யுபதேசித்தும். (அதில் அசக்தர்க்குத் தாளடையும் ப்ரபத்தி) அதில் துஷ்கரத்வம், விளம்ப பயம் ஆகிறவிவற்றாலே யநுஷ்டிக்க சக்தரல்லாதார்க்கு, “சரணமாகும் தனதாளடைந்தார்க் கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” என்று நிவ்ருத்தி ஸாத்யமாகையாலே ஸுகரமுமாய் ஸர்வாதிகாரமுமாய் சரீராவஸாநத்திலே பலப்ரதமுமான ப்ரபத்தியை வெளியிட்டும். [8] (அதில் அசக்தர்க்கு உச்சாரணமாத்ரம்) உபாயபல்குத்வ பல கௌரவ விரோதி பூயஸ்த்வங்களாகிற சங்காத்ரயத்தாலே அதில் வ்யவஸாயத்துக்குடலான சக்தியில்லாதார்க்கு, “திருக்கண்ணபுரம் சொல்ல நாளுந்துயர் பாடு சாராவே” என்று வசநத்தைப் பற்றாசாகப் பிடித்து அவன் திருத்திக் கொள்ளும்படியான உச்சாரண மாத்ரத்தை வெளியிட்டும். (ஸர்வோபாய சூந்யர்க்கு இப்பத்தும் பாடியிடும் தெண்டனென்று) உச்சாரணந்தனக்கும் தாமாக ஒரு பாசுரமிட்டுச் சொல்ல க்ஷமரன்றிக்கே கீழ்ச்சொன்ன உபாயங்களெல்லாவற்றிலும் அயோக்யராயிருப்பார்க்கு, “இப்பத்தும் பாடியாடிப் பணிமினவன் தாள்களையே” என்று இத்திருவாய் மொழியை ப்ரீதிப்ரேரிதராய்க் கொண்டு பாடி அவன் திருவடிகளில் விழுங்கோளென்று. (கீதாசார்யனைப்போலே அதிகாராநுகுணம் நெறியெல்லா முரைக்கிறா ரொன்பதாம்பத்தில்) அதாவது கீதோபநிஷதாசார்யன் தன்னுடைய பரமக்ருபையாலே, “நெறியெல்லா மெடுத்துரைத்த” என்கிறபடியே சேதநருடைய ருச்யநுகுணமான உபாயங்களெல்லாவற்றையும் உபதேசித்தாப்போலே, இவரும், ப்ராப்தியணித்தானவாறே ஸம்ஸாரிகள் ஒருவருமிழக்க வொண்ணாதென்கிற க்ருபையாலே யெல்லாமெடுத்துரைத்து அவ்வவருடைய அதிகாராநுகுணமாக உபாயங்களை யெல்லாமுபதேசித்தருளுகிறார் ஒன்பதாம்பத்திலென்கை.
– (எண்டிசையும்) – திருவாய்மொழி (9-1-1) – எண்டிசையும் கீழும் மேலும் முற்றவுமுண்டபிரான் - என்றும், (அகல் ஞானம்) - திருவாய்மொழி (9-3-2) – அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே அஃதுண்டுமிழ்ந்தானளந்தான் - என்றும், (எங்கும் அளிக்கின்ற) – திருவாய்மொழி (9-9-2) - அகலிடம் படைத்திடந்துண்டுமிழ்ந்தளந் தெங்கு மளிக்கின்ற வாயன் - என்றும், (ஆலின் மேல் என்னும்படி) – திருவாய்மொழி (9-10-1) – ஆலின் மேலாலமர்ந்தான் – என்றும் கூறுவதற்கு எற்ப, ப்ரளயமானது அனைத்து லோகங்களையும் அழிந்துவிடாமல், முன்பே அவற்றை எடுத்துத் தனது திருவயிற்றில் வைத்துப் பாதுகாத்து, ப்ரளயம் முடிந்தவுடன் அழிந்த அனைத்தையும் மீண்டும் படைத்தும்; ஹிரண்யாக்ஷனால் அடியில் தள்ளப்பட்டு அண்டபித்தியின் அடியில் சென்று சேர்ந்த பூமியை அங்கிருந்து மீட்டு எடுத்தும்; மஹாபலி அனைத்தையும் தனது வலிமையால் ஆக்கிரமத்து ஆண்டபடி இருந்த நிலையில் அங்கு நடந்து சென்று மீட்டு எடுத்தும்; இவ்விதம் ப்ரளயம் போன்ற ஆபத்துக்கள் அனைத்திலிருந்தும் உதவி செய்து காப்பாற்றியவன் என்று கூறப்பட்டதான, ஸத்யகாமத்வம் மூலம் ஏற்பட்டதான “எதனையும் விரும்பாமல் இருத்தல் “ என்பது வெளிப்படும்படியாக நம்மிடமிருந்து எந்த ப்ரதிபலனையும் எதிர்பாராமல், தனது பேறாகவே தான் சிரமப்படும் விதத்தில் உதவிகள் செய்து. (நித்ய) – புருஷஸூக்தம் - பாதோஸ்ய விச்வாபூதாநி, த்ரிபாதாஸ்யாம்ருதம் திவி - பரமபுருஷனுக்கு இவை அனைத்தும் கால்பதம் மட்டுமே, பரமபதமானது முக்கால் பாதம் – என்று கூறுவதற்கு ஏற்ப “அம்ருதம்” என்ற சொல்லால் கூறும்படியாக அழிவற்ற இன்பமான பரமபதத்தை ஒப்பு நோக்கும்போது, இந்தப் பூமியானது மிகவும் சிறிது என்பதால், “பாதம்” என்ற சொல்லால் கூறப்பட்டதும், தனது விளையாட்டிற்கு ஏற்றபடி உள்ளதும் ஆகிய விளையாட்டுக் கருவி போன்றுள்ள இந்த உலகத்தினுடைய லயித்தல் போன்ற அனைத்தையும் நீக்குகின்ற “ஆபத்து காலத்தில் துணை நிற்பவனாகிய ஸர்வேச்வரன்”. – (ஆருயிரென்னப்படுத்தின ஆத்ம தர்சந பல) – திருவாய்மொழி (8-7-1) – இருத்தும் வியந்த - என்ற திருவாய்மொழியில் தன்னுடன் ஆழ்வார் கலந்த சேர்க்கையை நினைவுபடுத்தியபோது, அதிலேயே ஈடுபட்டபடி நின்று உரைத்தார். அப்போது அவன் முறை மாறி நின்று கலந்த அவனது சீலகுணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக, திருவாய்மொழி (9-6-9) - ஆருயிர் பட்டதெனதுயிர் பட்டது - என்றுள்ள பாசுரத்தில், “எனது ஆத்மா பட்ட பாடுகளை, அவனை எப்போதும் அனுபவித்தபடி உள்ள நித்யஸூரிகள் பட்டனரோ” என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் தன் மீது விழுந்து அனுபவித்த தனது ஆத்மாவின் தன்மையை கடந்த பத்தில் உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தியபோது அதனை உணர்ந்ததற்கான பலன் என்பது ஆத்மாவிற்கு ஏற்றதான பேற்றை அனுபவித்தல் என்ற காரணத்தால், (அநுபவ பரம்பரையை) - திருவாய்மொழி (9-2-1) - சோதி வாய் திறந்துன் தாமரைக் கண்களால் நோக்காய் - என்றும், திருவாய்மொழி (4-2-2) - பாத பங்கயமே தலைக்கணியாய் – என்றும், திருவாய்மொழி (9-2-3) – உன் தாமரை மங்கையும் நீயுமிடங்கொள் மூவுலகுந் தொழ விருந்தருளாய் – என்றும், திருவாய்மொழி (9-2-4) - கனிவாய் சிவப்ப நீ காணவாராய் – என்றும், திருவாய்மொழி (9-2-5) - நின்பன்னிலா முத்தம் தவழ்கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் - என்றும் உள்ள பல பாசுரங்களில் கூறுவதற்கு ஏற்ப, “திருப்பவளத்தைத் திறந்து ஒரு செல்லாவது கூறவேண்டும், திருக்கண்கள் திறந்து என்னைக் குளிர நோக்கி அருளவேண்டும், உனது திருவடிகளை எனது தலை மீது வைத்தருள வேண்டும், நீயும் உனது துணைவியாரும் உள்ள இருப்பை எனக்குக் காண்பித்தருள வேண்டும், உனக்கு வேண்டியவர்களைக் காணும்போது உனது திருமுகத்தில் ஏற்படுகின்ற புன்முறுவலை நான் காணவேண்டும்” என்பதாக உள்ள பலவிதமான அனுபவங்களை அடைய ஆசை கொண்டு, “அவை அனைத்தும் அந்தந்த காலங்களில் நடக்கும்” என்று பொறுமையுடன் இருப்பதற்கு இயலாத காரணத்தால். (கூவுதல் வருதல் என்று முடுகவிட்டு) – திருவாய்மொழி (9-2-10) - கூவுதல் வருதல் செய்யாய் – என்று எல்லையற்ற இனிமையைக் கொண்ட உனது திருவடிகளில் நானும் வந்து கைங்கர்யம் செய்ய வேண்டும்படியாக என்னை அங்கே அழைக்கவேண்டும் அல்லது நீ இங்கே வருதல் வேண்டும் என்று உரைத்து. (ஏகம் எண்ணி) – திருவாய்மொழி (9-3-7) - மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனமேகமெண்ணும் இராப் பகலின்றியே - என்று அவன் எப்போதும் வசிக்கின்ற பரமபதத்தைக் காணும்போது அனைத்து காலங்களிலும் ஒரே தன்மையாக எண்ணியபடி. (காணக்கருதி) திருவாய்மொழி (9-4-1) – காணக்கருதும் என் கண்ணே – என்று பெரியபிராட்டியாருடனும், திவ்யமான ஆயுதங்களுடனும், திவ்யமான திருமேனியுடனும் கூடியுள்ள அவனைக் காணவேண்டும் என்று விருப்பம் கொண்டு. (எழ நண்ணி) - திருவாய்மொழி (9-5-10) – எழ நண்ணி நாமும் நம்வான நாடனோடு ஒன்றினோம் - என்று ஸர்வேச்வரனை ஞாபகப்படுத்துகின்ற பொருள்களைக் காணும்போது துக்கம் அடைத்து, “முடிந்து போகவேண்டும்” என்ற சிந்தனையில் நின்று, (நினைதொறும் உருகி) - திருவாய்மொழி (9-6-1) - திருக்காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறு நெஞ்சம் உருகுமால் - என்று அவனை முன்பு அனுபவித்த காலங்களில் அவன் செய்த சீலம் முதலானவற்றை எண்ணும்போது, அத்தகைய அனுபவத்தை அடைந்ததாகிய நெஞ்சம் சிதிலம் அடைய கரைந்து. (அலற்றி) - திருவாய்மொழி (9-7-2) - தமரோடங் குறைவார்க்குத் தக்கிலமே கேளீரே - என்று தூது அனுப்பும் முகத்தால், திருவாய்மொழி (9-7-11) – கிளிமொழியாள் அலற்றிய சொல் - என்று ஆற்றாமை காரணமாக முறை தடுமாறி அழைத்து. (சுவையில் மனம் இன்றி) - திருவாய்மொழி (9-8-3) - கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன் - என்று இரண்டுவிதமாகச் சிந்திக்கும் நெஞ்சம் அல்லாமல் ஒரே சிந்தனை கொண்டவராக. (பதினாலாண்டு பொறுத்தவர் ஒரு தினத்தில் படுமது) – இராமனைப் பிரித்து பதினான்கு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்த ஸ்ரீபரதழ்வான், இராமாயணம் யுத்தகாண்டம் (127-1) - பூர்ணே சதுர்த்தச வர்ஷே – பதினான்கு ஆண்டுகள் நிறைவடைந்தபோது - என்று எல்லை கடந்து விட்ட ஒரே நாளில் அடைந்த துக்கமும். (பத்துமாஸம் பொறுத்தவர் ஒரு மாஸத்தில் படுமது) - இராமனின் வருகைக்காக இலங்கையில் பத்துமாதம் பொறுமையுடன் காத்திருந்த சீதை, ஸுந்தரகாண்டம் (40-10) – மாஸாத் ஊர்த்வம் ந ஜீவிஷ்யே - ஒரு மாதத்திற்கு மேல் நான் பிழைத்திருக்கமாட்டேன் - என்று அனுமனிடம் கூறிய பின்னர் அந்த ஒரு மாதத்தில் அனுபவித்த துக்கமும். (ஒரு பகல் பொறுத்தவர்கள் ஒரு ஸந்த்யையில் படுமது) – க்ருஷ்ணன் பசுக்களை மேய்ப்பதற்காகச் சென்றுபோது ஒருநாள் முழுவதும் அவன் வருகைக்காகப் பொறுமையுடன் காத்திருந்த கோபிகைகள், அவன் பசுக்களின் பின்னே வரும்போது, அவன் அந்தக் கூட்டத்தின் முன்பு காணாமல் உள்ளதல் அந்த ஒரு ஸந்த்யாகாலத்தில் அடைந்த துக்கமும். (க்ஷணத்திலேயாக இரங்குகிற த்வரைக்கு ஈடாக) – இந்தத் துக்கங்கள் அனைத்தும் ஒரு நொடிப்பொழுதே ஆகும் என்று கூறலாம்படியாக, திருவாய்மொழி (9-9-11) – அவனை விட்டகல்வதற்கே யிரங்கி - என்று ஈடுபடுகிற தவிப்பிற்குத் தகுதியாக. (இனி பத்தில் ஒன்று தசம தசையில் பேறு என்று) – நயந ப்ரீதி: ப்ரதமம் சிந்தாபோகஸ் ததோநு ஸங்கல்ப:, நித்ராச்சேதஸ் தநுதா விஷய விரக்திஸ் த்ரபாநாச:, உந்மாதோ மூர்ச்சா ம்ருதி ரித்யேதா: ஸ்மரதசா தசைவ ஸ்யு: - பார்த்த காரணத்தால் முதலில் எற்படும் ப்ரீதி, தொடர்ந்து சிந்தனை, தொடர்ந்து அதே சிந்தனை, உறக்கம் இன்மை, இளைத்துப் போதல், மற்ற பொருள்களில் வெறுப்பு, வெட்கம் இன்மை, பித்துப் பிடித்த நிலை, மயக்கம் மற்றும் இறப்பு ஆகியவை மன்மதனுடைய பத்து நிலைகள் ஆகும்- என்றும், ப்ரதமஸ் த்வபிலாஷ: ஸ்யாத் த்விதீயம் சிந்தநம் பவேத், அநுஸ்ம்ருதிஸ் த்ருதீயந்து சதுர்த்தம் குணகீர்த்தனம் உத்யோக: பஞ்சம: ப்ரோக்த: ப்ரலாப: ஷஷ்ட உச்யதே உந்மாதஸ் ஸப்தமோ ஜ்ஞேய: அஷ்டமோ வ்யாதிருச்யதே நவமே ஜடாதசைவ தசமம் மரணம் ததா - தொடக்கத்தில் ஆசை ஏற்படும், இரண்டாவதாக நினைவுகள் நீடிக்கும், மூன்றாவதாக அதே எண்ணங்கள் தொடரும், நான்காவதாக அவளுடைய குணங்கள் குறித்துப் பிதற்றுதல், ஐந்தாவதாக முயற்சி ஏற்படும், ஆறாவது பிதற்றுதல், ஏழாவது மனநிலை தடுமாற்றம் ஏற்படும், எட்டாவது மனநோய் ஏற்படும், ஒன்பதவது எந்தச் செயலும் அற்றிருத்தல் ஏற்படும், பத்தாவது இறத்தல் - என்றும் கூறுவதற்கு ஏற்ப காமத்தின் பிடியில் அகப்பட்டவர்களுக்கு பத்தாவது நிலையில் மரணம் ஏற்படுகிறது. ஸர்வேச்வரனாகிய நம்மிடம் ப்ரபத்தியைக் கொண்ட உமக்கு நம்மை வந்தடையாவிடில் முடிந்து போகும்படியாக உள்ள பரமபக்தி நிலை என்பது பத்தாம்பத்தில் பிறக்கும்படியாக உள்ளது; ஆகையால் இதுவரை கூறப்பட்டதாகிய காலதாமதம் என்பது இல்லை; இனி உமக்கு பத்து நிலைகளில் ஒன்றாகிய இறுதி நிலையாகிய மரணநிலை ஏற்படவுள்ள பேறு என்று. (நாள் கடலாகத் தம்பிக்கு இட்டது போல் ஆகாமல்) – திருவாய்மொழி (1-6-7) - நாட்கடலைக் கழிமினே – என்பதற்கு ஏற்ப பிரிவுத் துன்பம் காரணமாக ஒருநாள் என்பது ஒரு கடல் போன்று கடக்க இயலாதபடி, யுத்தகாண்டம் (127-1) - பூர்ணே சதுர்த்தசே வர்ஷே - பதினான்கு ஆண்டுகள் முழுவதுமாகக் கழிந்த பின்னர் - என்று தம்பியாக பரதாழ்வானுக்கு நீண்டநாள் குறித்துக் கொடுத்தது போன்று அல்லாமல், நாச்சியார் திருமொழி (6-2) – நாளை வதுவை மணம் என்று நாளிட்டு - என்று கூறுவதற்கு ஏற்ப, “இன்று என்றால் வெள்ளத்தால் ஏற்படும் கேடு, சில நாட்கள் என்றால் வறட்சியால் ஏற்படும் கேடு” என்று எண்ணி, “நாளை” என நாய்ச்சியாருக்கு நாள் அளித்தது போன்று, திருவாய்மொழி (9-10-5) – மரணம் ஆனால் – என்று கூறுவதற்கு ஏற்ப இந்தச்ச் சசீரத்தின் முடிவில் பேறாக அவன் தானாகவே முன்வந்து நாள் குறித்துக் கொடுத்ததன் காரணமாக மகிழ்வு கொண்டவர். (இம்மடவுலகர்) - சரம உபாயம் மற்றும் சரம உபேயம் முடிய தான் அருளிச்செய்த நன்மை பயக்கும் விஷயங்களைக் கேட்டுத் திருத்தியவர்கள் தவிர மற்றவர்களையும் கைவிட இயாலாதபடி உள்ள தனது உயர்ந்த கருணையால், திருவாய்மொழி (9-2-7) – இம்மடவுலகர் - என்று இந்த ஸம்ஸாரத்தில் அறிவிழந்து நிற்பவர்களுக்கு. (கண்டதோடுபட்ட அபாந்தவ ப்ரதிஸம்பந்தியைக் காட்டி) - திருவாய்மொழி (9-1-1) – கொண்ட பெண்டிர் – என்று தொடங்கி, கண்களால் காணப்படும்விதமாக அருகில் உள்ளபோது அன்பு நிறைந்தவர்களாக நின்று, காணாதபோது எந்தவிதமான அன்பும் இன்றி உள்ள மனைவி, புத்திரர்கள் போன்று அல்லாமல் ப்ரளயத்தில் ஏற்பட்ட ஆபத்து காலத்தில் உதவிய அவனே உயர்ந்த உறவினன் என்றும். (அரக்ஷக ப்ரதிஸம்பந்தியைக் காட்டி) - திருவாய்மொழி ( 9-1-2) – துணையும் சார்வும் - என்றும், திருவாய்மொழி (9-1-3) – பொருள் கையுண்டாய் - என்றும், திருவாய்மொழி (9-1-4) – அரணமாவர் - என்றும் உள்ள பாசுரங்கள் மூலமாக அவனைத் தவிர உள்ள மற்றவர்கள் நமக்கு உதவி செய்பவர்கள் போன்று பயன் ஏற்படும்போது மட்டும் உறவினர்களாக நின்று, ஆபத்து வந்தபோது திரும்பிக் கூட நோக்காமல் வெறுப்பவர்கள் ஆவர். ஆகவே அவர்கள் காப்பாற்றுபவர்கள் அல்லர். ஆனால் தன்னுடைய காக்கும் தன்மையில் சந்தேகம் கொண்டவர்களையும் கூட அவர்களுடைய சந்தேகத்தை நீக்கி, தன்னை நம்பும்விதமாகச் செய்து காப்பாற்றுபவனாகவும், அவதாரங்கள் காரணமாக மிகவும் எளிதாக அடையப்படுபவனாகவும், காப்பாற்றுவதற்குத் தேவையான அனைத்து குணங்களையும் கொண்டவனாகவும் உள்ள அவன் அல்லாமல் காப்பாற்றுபவர்கள் வேறு யாரும் இல்லை என்றும். (அபோக்ய ப்ரதிஸம்பந்தியைக் காட்டி) - திருவாய்மொழி (9-1-5) - சதிரமென்று தம்மைத்தாமே சம்மதித்து - என்று தொடங்கி, தங்களுக்கு இன்பத்தை அளிப்பவர்களாக எண்ணப்பட்ட பெண்கள், ஆபத்து காலத்தில் விட்டுவிடுவார்கள்; ஒரே போன்று அன்பு கொண்டவன் அவன் மட்டுமே ஆவான்; ஆகவே இந்தப் பெண்கள் இனியவர்கள் அல்லர்; அவனே அளவற்ற இனிமை கொண்டவன் ஆவான் என்றும். (அஸுக ப்ரதிஸம்பந்தியைக் காட்டி) - திருவாய்மொழி (9-1-6) – இல்லை கண்டீர் இன்பம் - என்று தொடங்கி துக்கங்கள் சிலவற்றையும் இன்பம் என்று எண்ணி மயங்குவதை விலக்கி, அவனைத் தவிர இன்பமயமாக இருப்பது வேறு எதுவும் இல்லை என்றும். (அநுபாய ப்ரதிஸம்பந்தியைக் காட்டி) - திருவாய்மொழி (9-1-9) - யாதும் இல்லை மிக்கதனில் – என்று தொடங்கி, அவன் அல்லாமல் வேறு அனைத்தையும் தங்களைக் காப்பாற்றும் பொருளாகப் பற்றி நிற்பவர்கள், தங்களுடைய முன்பு நிலையும் தாழ்ந்து விழுவார்கள்; ஆகவே அவனைத் தவிர வேறு உபாயம் ஏதும் இல்லை என்றும் உரைத்தார். அதாவது இப்படியாக அவனைத் தவிர உள்ளவர்கள் யாரும் உறவினர்களாக இல்லாத தன்மை, காப்பாற்றுபவர்கள் அல்லர் என்னும் தன்மை, இன்பம் அளிப்பவர்கள் அல்லர் என்னும் தன்மை, சுகம் அளிப்பவர்கள் அல்லர் என்ற தன்மை, உபயமாக உள்ளவர்கள் அல்லர் என்ற தன்மை ஆகிய பலவற்றையும் உரைத்தார்; இதற்கு மாறாக உள்ள அவனுடைய உறவினனாதல், காப்பாற்றுபவனாதல், இனியவனாக இருத்தல், ஸுகம் அளிப்பவனாக இருத்தல், உபாயமாக இருத்தல் போன்றவற்றை உணர்த்தினார். (மற்றொன்று) – திருவாய்மொழி (9-1-7) – மற்றொன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்து எவ்வுயிர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் – என்று, “இதற்கு மேல் கூறுவதற்கு என ஏதும் இல்லை; இதனையே சுருக்கமாக உரைத்தோம். இந்தப் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் இதனைப் பெறுவதற்கு மிகுந்த முயற்சியில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை; சிந்தனை செய்தால் மட்டுமே போதுமானது” என்று கூறுவதால், தனக்கு மேல் வேறு ஏதும் இல்லை என்றுள்ளதாகவும், சுருக்கமாக உபதேசிக்க ஏற்றதாகவும், அனைவருக்கும் எளிதாகவும். (கண்ணன் அல்லால் என்கிற) – திருவாய்மொழி (9-1-10) – கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் - என்பதற்கு ஏற்ப கீதையில் (18-60) – மாம் ஏகம் சரணம் வ்ரஜ – என்னை மட்டுமே சரணம் புகுவாயாக – என க்ருஷ்ணனைத் தவிர வேறு உபாயம் இல்லை என்று கூறுவதால், எப்போதுமே உள்ளதாகவும், மிகவும் உயர்ந்த சேதநனமாகவும், அனைத்து சக்தியாகவும், அபாயம் அற்றதாகவும், ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஏற்றதாகவும், வேறு எந்தத் துணையும் அவசியம் அற்றதாகவும் கூறப்படுவதான. (வைகல் வாழ்தலான ஸித்தோபாயம்) - திருவாய் (9-1-19) - வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் - என்பதற்கு ஏற்ப உள்ளதும், இந்த உயிர் உள்ள காலம் முடிய குணங்களை அனுபவிக்கலாம்படி உள்ளதும் ஆகிய ஸித்தோபாயத்தைக் குறித்து உபதேசம் செய்தும். (அதில் துர்லப புத்திகளுக்கு) - ஸக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த: க்ருதோயம் தாரயேந்நரம், நராணாம் புத்தி தௌர்பல்யாத் உபாயாந்தரமிஷ்யதே – இந்தச் சாஸ்த்ரத்தின் ஆழ்பொருளாக உள்ள ப்ரபத்தியானது ஒருமுறை மட்டுமே கைக்கொள்ளத்தக்கதாகவும், இதனை இயற்றும் ஒருவனை ஸம்ஸாரத்தைக் கடக்க செய்வதாகவும் உள்ளது. ஒருவனுக்குத் தனது சிந்தனையில் உறுதியில்லாத காரணத்தால் இதனைத் தவிர மற்ற உபாயங்களை அவன் விரும்புகிறான் – என்பதற்கு ஏற்ப, ஸித்தோபாயமான ஸர்வேச்வரனிடம் மஹாவிச்வாஸம் ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளதான புண்ணியங்கள் ஏதும் இல்லாததால், மற்ற உபாயங்களை அனைத்தையும் கைவிடுதல் என்பதற்கு முன்பாக ஸர்வேச்வரன் விஷயத்தில் ஈடுபடுவதற்கு மஹாவிச்வாஸம் இல்லாமை என்பதான தாழ்ந்த அறிவைக் கொண்டவர்களுக்கு. (மாலை) – திருவாய்மொழி (9-10-1) - மாலை நண்ணித் தொழுதெழுமினோ காலை மாலை கமலமலரிட்டு நீர் - என்றும், (விண்டு) – திருவாய்மொழி (9-10-3) - விண்டுவாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின் – என்றும், (தேனை) - திருவாய்மொழி (9-10-4) - தேனைவாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின் – என்றும். (அன்பராம் ஸாங்கபக்தி) - திருவாய்மொழி (9-10-5) - – தனது அன்பர்க்கு - என்றும் கூறுவதற்கு எற்ப பக்தி நிறைந்தவர்களாக நின்று அனைத்து காலங்களிலும் மலர்கள் போன்ற பலவற்றாலும் அவனை ஆராதித்து, அவனிடம் பக்தி நிறைந்தவர்களாக இருக்கக்கடவீர்கள் என்று அங்கங்களுடன் கூடிய பக்தியைக் குறித்து உபதேசம் செய்தும். (அதில் அசக்தர்க்குத் தாளடையும் ப்ரபத்தி) - அத்தகைய பக்தியைக் கைக்கொள்வதில் உள்ள அரிய தன்மை, அதுவும் காலம் தாழ்த்தியே பலன் அளிக்கும் என்ற அச்சம் ஆகியவை காரணமாக அதனைக் கைக்கொள்ளச் சக்தி அற்றவர்களுக்கு, திருவாய்மொழி (9-10-5) - சரணமாகும் தனதாளடைந்தார்க் கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் - என்பதற்கு ஏற்ப “அனைத்தையும் கைவிடுதல் என்பதன் மூலம் பெறுவது” என்பதால், கைக்கொள்வதற்கு மிகவும் எளியதாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாகவும், சரீரத்தின் முடிவில் பலனை அளிப்பதும் ஆகிய ப்ரபத்தியைக் குறித்து வெளிப்படுத்தியும். (அதில் அசக்தர்க்கு உச்சாரணமாத்ரம்) – “உபாயம் சிறியதாகவும், பலன் மிகவும் பெரியதாகவும், தடைகள் பல உள்ளதாகவும் இருப்பதால் எவ்விதம் கைக்கூடும்?” என்பதான மூன்றுவிதமான சந்தேகங்கள் காரணமாக இத்தகைய ப்ரபத்தியை நம்புவதற்குத் தேவையான சக்தி அற்றவர்களுக்கு, திருவாய்மொழி (9-10-10) – திருக்கண்ணபுரம் சொல்ல நாளுந்துயர் பாடு சாராவே - என்று அந்த திவ்யதேசத்தின் பெயரை மட்டும் கொள்கொம்பாகப் பிடித்துக்கொண்டு, அவன் திருத்தி ஏற்றுக் கொள்ளும்படியான சொல்லை மட்டுமே உபதேசம் செய்து. (ஸர்வ உபாய சூந்யர்க்கு இப்பத்தும் பாடியிடும் தெண்டன் என்று) - அத்தகைய சொல்லை உரைப்பதற்கு தாங்களாகவே ஒரு பாசுரம் அமைத்துச் சொல்ல ஆற்றல் இன்றி, இதுவரை கூறப்பட்ட எந்தவிதமான உபாயங்களிலும் தகுதி இன்றி உள்ளவர்களுக்கு, திருவாய்மொழி (9-10-11) - இப்பத்தும் பாடியாடிப் பணிமினவன் தாள்களையே - என்று இந்தத் திருவாய்மொழியை அவன் மீது உள்ள அன்பினால் தூண்டப்பட்டவர்களாக நின்று பாடி, அவனுடைய திருவடிகளில் விழுவீர்களாக என்று உபதேசம் செய்தும். (கீதாசார்யனைப்போலே அதிகாராநுகுணம் நெறியெல்லா முரைக்கிறா ரொன்பதாம்பத்தில்) - ஸ்ரீமத்பகவத் கீதையில் ஆசார்யனாகிய க்ருஷ்ணன் தனது அளவு கடந்த கருணை காரணமக, திருவாய்மொழி (4-8-6) – நெறியெல்லாம் எடுத்து உரைத்த – என்பதற்கு ஏற்ப இந்த உலகில் உள்ளவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றபடியான அனைத்து உபாயங்களையும் உபதேசித்தான். அதே போன்று நம்மாழ்வாரரும், “பேறு மிகவும் அருகில் உள்ளபோது இதனை இவர்கள் இழந்துவிடக் கூடாது” என்று தனது உயர்ந்த கருணை காரணமாக அனைத்தையும் எடுத்து உரைத்து, அவரவர்களுடைய தகுதிக்கு ஏற்றபடி அனைத்து உபாயங்களையும் ஒன்பதாம் பத்தில் அருளிச்செய்கிறார்.