Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 226)

நான்காம் ப்ரகரணம்

[1] தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு என்னும்படி சக்தியாலே நித்யமாகக் கல்பித்த பத்நீ பரிஜநாதிளையுடைய ஸத்யகாமன் கொண்ட வ்யாவ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் சங்கையும் அச்சமும்தீர, [2] தலைச்சிறப்பத் தந்தவதில் க்ருதஜ்ஞதா பலப்ரத்யுபகாரமாக வேந்தர் தலைவன் கந்யகா தாநம்போலே ஆரத்தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே அடிவிளங்கிப் பணைத்து [3] ஜந்மபாசம்விட்டு ஆத்வாரம் ஆளுமாளாரென்று பரிந்து அநுரூபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தசையாகத் துவரும் ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து, [4] தித்திக்க வுள்‍ளே உறைந்து கண்டுகொண்டிருந்து அமாநுஷ போகமாக்கினவன் [5] மூன்று தத்துக்குப் பிழைத்த அருவினை நோய் மறுவலிடாமல் சிறியேனென்றதின் பெருமையைக் காட்ட [6]தேஹாதிகளில் பரமாய் நின்று நினைக்கில் லக்ஷ்மீ துல்யமாய் அவர்க்கே குடிகளாம் பரதந்த்ர ஸ்வரூபத்தை யநுஸந்தித்தவர் [7] ஸ்வஸாதந ஸாத்யஸ்தர் இருகரையராகாமல் மண்‍ணவரும் வானவரும் நண்‍ணுமத்தையே குறிக்கொண்மின் உள்‍ளத்தென்று ப்ராப்யைக பரராக்குகிறார் எட்டாம்பத்தில்.

எட்டாம் பத்தால் கீழ்ச்சொன்ன ஸர்வசக்தியோகத்தாலே நித்யமாகக் கல்பிதமா போக்யபோகோபகரண போகஸ்தாநங்களையுடையவனாகையாலே ஸத்யகாமனான ஸர்வேச்வரன், கீழ் தமக்குண்டான வாசிகமான வடிமையையும் விஸ்மரித்து தன்னனுபவாலாபத்தாலே கலங்கி, தன்னுடைய குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதிசங்கை பண்ணி ஸம்ஸார தோஷாநுஸந்தாநத்தாலே அஞ்சின விவரை தரிப்பிக்கைக்காக பூர்வோக்தோபகாரத்தை ஸ்மரிப்பிக்க; அத்தாலே க்ருதஜ்ஞராய், அதுக்குப் பலமாக இவர் ஆத்ம ஸமர்ப்பணம் பண்ண அத்தாலே தான் பெறாப்பேறு பெற்றானாய் இவர்க்குண்டான ஆத்ம குணங்களாலே அதிப்ரீதனாய், இவர் திருவுள்ளத்திலேயிருந்து நிரதிசயமாக வநுபவிப்பித்து, இனி அயோக்யரென்றகலாதபடி ஆத்மஸ்வரூப வைலக்ஷண்யத்தை ப்ரகாசிப்பிக்க, அதினுடைய யாதாத்ம்யத்தை யநுஸந்தித்தவர் கீழ் தம்முடைய ப்ராப்யப்ராபகங்களைக் கேட்டு உகந்தவர்கள் ப்ராப்யமொன்றும் ப்ராபகமொன்றுமாய் இருகரையராகாதபடி ப்ராப்யமாகச் சொன்ன விஷயமொன்றிலுமே அவர்களைத் தத்பரராக்குகிறாரென்கிறார்.

– இதுவரை கூறப்பட்ட அனைத்துவிதமான ஆற்றலுடன் கூடிய தன்மையால் எப்போதும் இருப்பதாக உரைக்கப்படுகின்ற இனிமையான பொருள், இன்பத்தை அனுபவிக்கவல்ல இடம் மற்றும் அதற்கான கருவிகள் ஆகியவற்றை உடையவன் என்பதால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப்பெற்ற ஸர்வேச்வரன், ஆழ்வாரைப் பிழைக்க வைக்க எண்ணினான். அதாவது ஆழ்வார் தனக்கு ஏற்பட்டதான சொற்கள் மூலமாகச் செய்யவல்ல கைங்கர்யத்தையும் மறந்து, பகவத் அனுபவம் கிட்டவில்லை என்பதால் கலங்கி, பகவத் குணங்கள் மற்றும் அவன் ஸ்வரூபம் ஆகியவை குறித்து சந்தேகம் கொண்டு, இந்த ஸம்ஸார வாழ்வை எண்ணி அஞ்சினார். இப்படிப்பட்ட நிலையில் உள்ள இவரைக் காப்பாற்ற அவன் எண்ணினான். ஆகவே, தான் முன்பு ஆழ்வாருக்குச் செய்த உபகாரத்தை அவருக்கு ஞாபகப்படுத்தினான். அதன் விளைவாக ஆழ்வாரும் செய்ந்நன்றி அறிந்தவராக, அதன் பலனாகத் தனது ஆத்மாவை அவனிடம் சமர்ப்பணம் செய்தார். அதனைக் கண்ட ஸர்வேச்வரன், அதுவரை தான் பெறாத ஒரு பேற்றைப் பெற்றவன் போன்று நின்று, ஆழ்வாருடைய ஆத்ம குணங்கள் கண்டு மகிழ்ந்து, ஆழ்வாருடைய நெஞ்சத்தில் நின்று, மிகவும் உயர்ந்த அனுபவத்தை அவர் அடையும்படிச் செய்து, இனி ஆழ்வார் “தான் தாழ்ந்தவன்” என்று எண்ணிக் கொண்டு ஸர்வேச்வரனாகிய தன்னை விட்டு அகலாதபடி, ஆத்மஸ்வரூபத்தின் மேன்மையை அவருக்கு உணர்த்தினான். ஆத்மஸ்வரூபத்தின் உண்மையை உள்ளதுஉள்ளபடி அறிந்த ஆழ்வார், தான் இதுவரை உபதேசித்த பேறு மற்றும் அதனை அடைவதற்கான மார்க்கம் ஆகியவை குறித்துக் கேட்டு மகிழ்ந்தவர்கள், “பலன் ஒன்று, அதனைப் பெறும் வழி வேறு ஒன்று” என்று இரண்டு கரைகளாக அலையாதபடி, அடையவேண்டிய இலக்காக உரைத்த விஷயத்தில் மட்டுமே அவர்களை எட்டாம் பத்து மூலமாக நிலைநிறுத்துகிறார்.

[1] (தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடென்னும்படி சக்தியாலே நித்யமாகக் கல்பித்த பத்நீ பரிஜநாதிகளையுடைய ஸத்யகாமன்) “தேவிமாராவார் திருமகள் பூமியேவ மற்றமரராட் செய்வார் மேவியவுலகம் மூன்றவை யாட்சி”, “பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்”, “நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன்”, “நல்லகோட்பாட் டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த” என்று லக்ஷ்மீ ப்ரப்ருதி திவ்யமஹிஷிகளுக்கு வல்லபனாய் நித்யஸூரிகள் ஏவிற்றுச் செய்ய அவர்கள் சேஷவ்ருத்திக்கும் ஜ்ஞாநாதிகளுக்கும் தானே விஷயமாய், தன்னோடே பொருந்தி பூர்ணமாய்க் கட்டளைப்பட்டிருக்கிற லோகத்ரயத்துக்கும் நிர்வாஹனா யிருக்குமென்னும்படி, கீழ்ச்சொன்ன தன் சக்தி தன்னாலே நித்யமாகக் கல்பிக்கப்பட்ட பத்நீ பரிஜந ஸ்தாந போக்யபோகோபகரணங்களை யுடையனாகையாலேஸத்யகாமனா யிருக்கிறவன். (கொண்ட வாக்வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் சங்கையுமச்சமும் தீர) “உம்மைக் கொண்டு கவிபாடுவித்துக் கொள்ள வைத்தோம்” என்று, தான் இவரைக் கொண்டு வாசிகமான வடிமையையும் விஸ்மரிக்கும்படியாக்கின, “காணுமாறருளா யென்றென்றே கலங்கி” என்று தன்னைக் கண்டால் கண்டனுபவிக்கப் பெறாமையால் வந்த கலக்கமும், அவ்வளவன்றியே “உமருகந்துகந்த” என்று தொடங்கி “அறிவொன்றும் சங்கிப்பன்” என்று தன்னுடைய ஆச்ரித பாரதந்த்ர்யமாகிய குணத்திலும்; “இறந்ததும் நீயே” என்று தொடங்கி “அறிவொன்றும் சங்கிப்பன்” என்று தன்னுடைய ஸர்வப்ரகாரித்வமாகிற ஸ்வரூபத்திலும் பண்ணின சங்கையும், “நன்றுமஞ்சுவன் நரகம் நானடைதல்” என்று ஸம்ஸார தோஷாநுஸந்தாநத்தால் வந்த அச்சமும் நிவ்ருத்தமாம்படியாக. [2] (தலைச்சிறப்பத் தந்தவதில் க்ருதஜ்ஞதா பல ப்ரத்யுபகாரமாக) “தாள்களை யெனக்கே தலைத்தலைச் சிறப்பத் தந்த” என்னும்படி “மலரடிப்போதுகளென் னெஞ்சத் தெப்பொழுது மிருத்தி வணங்கப் பலரடியார் முன்பருளிய” என்று பராசராதிகள் முதலாழ்வார்க ளுண்டாயிருக்கத் தம்மைக் கொண்டு வாசிகமான அடிமையைக் கொண்ட பூர்வோபகாரத்தை ஸ்மரிப்பிக்க, அப்படி மிகச் சிறக்கும்படி யுபகரித்ததில் தமக்குண்டான க்ருதஜ்ஞதைக்கு பலம் ஸத்ருச ப்ரத்யுபகாரம் பண்‍ணுகையாகையாலே அதுக்கு ப்ரத்யுபகாரமாக. (வேந்தர் தலைவன் கந்யகா தாநம்போலே ஆரத்தழுவி யறவிலை செய்த ஆத்மலாபத்தாலே) “உதவிக் கைம்மாறென்னுயிரென்ன வுற்றெண்ணில் அதுவுமற்றாங்கவன் தன்னது” என்று கீழ் ப்ரத்யுபகாரமாக ஆத்மாவை ஸமர்ப்பிக்கத் தேடி அதின் பகவதீயத்வாநுஸந்தாநத்தாலே நிவ்ருத்தரானமையுமறியாதபடி உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தாலே கலங்கி, “வேந்தர் தலைவன் சனகராசன்” என்கிறபடியே க்ஷத்ரியாக்ரேஸரனாய் ஜ்ஞாநாதிகனான ஜநகராஜன் மாஹேச்வரமான தநுர்ப்பங்கம் பண்ணின பெருமாளாண்பிள்ளைத்தனத்தைக் கண்ட ஹர்ஷத்தாலே கலங்கி, “விஷ்ணோச் சரீரநபாயிநீ” என்கிறபடியே ததப்ருதக் ஸித்தையாய் “ராகவத்வே பவத் ஸீதா” என்று ததவதாராநுகூலமாக அவதரித்த பிராட்டியை, “இயம் ஸீதா மம ஸுதா ஸஹதர்மசரீ தவ, ப்ரதீச்ச சைநாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா” என்று ஸமர்ப்பித்தாப்போலே, “பேருதவிக் கைம்மாறாத் தோள்களையாரத் தழுவி யென்னுயிரை யறவிலை செய்தனன்” என்று அமூர்த்தமா யிருக்கச் செய்தே உபகார ஸ்ம்ருதியாலே வந்த ஹர்ஷத்தாலே தாளும் தோளுமாய்ப் பணைத்துத் தோற்ற பாவநாப்ரகர்ஷத்தாலே யணைத்துக்கொண்டு அத்யாதரத்தோடே அநந்யார்ஹமாக ஸமர்ப்பித்த ஆத்ம வஸ்துவைப் பெறுகையாலே. (அதீவ விளங்கிப் பணைத்து) “அதீவ ராமச் சுசுபே” என்றும், “அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா” என்றும் அவளைப் பெற்று விளங்கினாப்போலே, “சோதி” என்றிவர் பேசும்படி இவர் தம்மதல்லாத தொன்றைத் தம்மதாக ப்ரமித்துக் கொடுத்தாப்போலே, அவனும் தன்னதல்லாத் தொன்றைப் பெற்றாப்போலே ப்ரமித்து அத்யுஜ்ஜ்வலனாய் “தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க்கண்க ளாயிரத்தாய் தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய்” என்னும்படி சதசாகமாகப் பணைத்து. [3] (ஜந்மபாசம் விட்டு ஆத்வாரமாளுமாளாரென்று பரிந்து அநுரூபனோடே யமர்ந்து பிரிவில் க்ருபண தசையாகத் துவரும் ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து) ஸ்ரீஜநகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்தபின்பு அவரளவில் ப்ரேமத்தாலே ஜந்மபூமியான ஸ்ரீமிதிலையை நினையாதாப்போலே, இவரும், “பாதமடைவதன் பாசத்தாலே மற்ற வன்பாசங்கள் முற்றவிட்டு” என்று திருவடிகளைக் கிட்டுகையில் ஸங்கத்தாலே புறம்புண்டான வலிய ஸங்கங்களை நிச்சேஷமாகவிட்டு; “ஆத்வாரமநுவவ்ராஜ மங்களாந்யபிதத்யுஷீ” என்று அவள் பெருமாளுடையவழகைக் கண்டு மங்களாசாஸநம் பண்ணினாப்போலே, இவரும், “ஆளுமாளாராழியுஞ் சங்கும் சுமப்பார்தாம்” என்று தமக்குப் பரிகைக்கு ஓராளுமாளுகிறிலர், மலைசுமந்தாற்போலே திருவாழியையும் ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் தரிப்பார் தாமாயிரா நின்றது என்று அவன் ஸௌகுமார்யத்தைக் கண்டு பரிந்து; அவள் பெருமாளுடைய சௌர்யாதிகளை நினைத்து பயம் கெட்டு, “துல்யசீல” இத்யாதிப்படியே தனக்கநுரூபரான இவரோடே பொருந்தி யநுபவித்தாப்போலே, இவரும், “வார்கடாவருவி” என்று தொடங்கி அவன் சௌர்யாதிகளை அநுஸந்தித்து நிர்ப்பயராய், “அமர்ந்த மாயோனை முக்கணம்மானை நான்முகனை யமர்ந்தேனே” என்று அவனோடே பொருந்தியநுபவித்து, விச்லேஷ தசையில் அவள், “ஹிமஹதநலிநீவ நஷ்டசோபா வ்யஸந பரம்பரயாதி பீட்யமாநா, ஸஹசரரஹிதேவ சக்ரவாகீ ஜநகஸுதா க்ருபணாம் தசாம் ப்ரபந்‍நா” என்று நிர்க்க்ருணரு மிரங்க வேண்டும்படியான தசையை ப்ராப்தையானாப்போலே, இவரும், “காணவாரா யென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” என்று அவனைக் காண வாசைப்பட்டு திக்குக்கள்தோறும் பார்ப்பது கூப்பிடுவதாகையாலே கண்ணும் வாயும் நீர்ப்பசையறும்படி யாகையால், ஜநககுலஸுந்தரியின் குணங்களெல்லாம் இவர்பக்கலிலே காண்கையாலே “குணாத் ரூபகுணாச்சாபி ப்ரீதிர்ப்பூயோப்ப்ய வர்த்தத” என்று குணதர்சநத்தாலே அவள்பக்கல் ப்ரீதி வர்த்தித்தாப்போலே, இவரளவில் ப்ரீதி வர்த்தித்து. [4] (தித்திக்க வுள்ளேயுறைந்து) “தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:” என்று எப்போதும் அவள் நெஞ்சுக்கினிதாம்படி யிருந்தாப்போலே, “உள்ளுந்தோறும் தித்திப்பான்”, “ஒருக்கடுத்துள்ளேயுறையும் பிரான் கண்டீர்” என்று அநுஸந்திக்குந்தோறும் நிரதிசய போக்யனாய்க் கொண்டு இவர் திருவுள்ளத்திலே நித்யவாஸம் பண்ணி. (கண்டு கொண்டிருந்து அமாநுஷ போகமாக்கினவன்) “இருந்தான் கண்டுகொண்டு” என்று தரித்திரன் தந லாபமுண்டானால் பார்த்துக் கொண்டிருக்குமாபோலே இவரைப் பெற்ற ப்ரீதியாலே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்து; “ஸமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே, புஞ்ஜாநா அமாநுஷாந் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ” என்று விச்லேஷதசையிலும் வ்ருத்த கீர்த்தநம் பண்ணி தரிக்கலாம்படி அவளை, மாநுஷமன்றிக்கே திவ்யமாயிருந்துள்ள போகங்களை புஜிப்பித்தாப்போலே, இவரையும், “தரும் தானருள் தானினி யானறியேன்”, “செவ்வாய் முறுவலோடென துள்ளத்திருந்த அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே” என்று வித்தராய்ப் பேசும்படி அப்ராக்ருத போகங்களை புஜிப்பித்தவன். [5] (மூன்று தத்துக்குப் பிழைத்த அருவினைநோய் மறுவலிடாமல் சிறியேனென்றதின் பெருமையைக் காட்ட) “மருள்தானீதோ”, “பின்னையார்க்கவன் தன்னைக் கொடுக்கும்”, “அருள்தானினி யானறியேன்” என்கிற உகப்புச் செல்லா நிற்கச்செய்தே, “சிறியேனுடைச் சிந்தையுள் நின்றொழிந்தார்” என்று தம் சிறுமையை அநுஸந்தித்தவாறே (1) வளவேழுலகிலே “களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வாவென்பன் அருவினையேன்”, “வணங்கினாலுன் பெருமை மாசூணாதோ”, “அடியேன் காண்பானலற்றுவனிதனில் மிக்கோரயர்வுண்டே” என்றும்; (2) பொருமாநீள் படையிலே “சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்” என்றும்; (3) அந்தாமத்தன்பிலே “அல்லாவியுள் கலந்த”, “என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை” என்றும் இப்படி மூன்றிடத்திலே வந்து பரிஹ்ருதமானதாகையாலே மூன்று தத்துக்கு இவர் பிழைத்த அயோக்யதாநுஸந்தான வ்யாதி மறுவலிட்டு இன்னம் இவர் அகலில் செய்வதென் னென்றஞ்சி, இனியிவர்தாம் அகலுகிறது வந்தேறியான அசித் ஸம்பந்தத்தையிட்டு “இது நமக்கு அநர்ஹம்” என்றிறே, இதினுடைய யதாவஸ்தித வேஷத்தைக் கண்டால் அகலவொண்ணாதே என்று பார்த்து அது மறுவலிடாதபடியாக, “நமக்கு கௌஸ்துபம் போலவும், ஸ்ரீஸ்தநம் போலவும் தேஜஸ்கரமாய் போக்யமுமாயிருக்கும் அப்ருதக் ஸித்த விசேஷணமாய்க் காணுமும்முடைய ஆத்ம ஸ்வரூபமிருப்ப”தென்று சிறிதாக இவர் அநுஸந்தித்த ஆத்ம வஸ்துவின் வைலக்ஷண்யத்தை, “யானுந்தானா யொழிந்தான்”, “தேனும் பாலும் கன்னலுமமுதுமாகித் தித்தித்து” என்று தனக்கு அப்ருதக் ஸித்த ப்ரகாரமாகவும் நிரதிசய போக்யமாகவும் அநுஸந்திக்கும்படி காட்டிக் கொடுக்க. [6] (தேஹாதிகளில் பரமாய், நின்று நினைக்கில் லக்ஷ்மீ துல்யமாய் அவர்க்கே குடிகளாம் பரதந்த்ரஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர்) “சென்று சென்று பரம்பரமாய்” என்கிறபடியே தேஹேந்த்ரியங்களில் வ்யாவ்ருத்தமாய் ஜ்ஞாநாநந்த மயமாய், “நினையும் நீர்மையதன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்”, “அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்”, “அன்றி மற்றோருபாயமென்” என்று யதாநிரூபணம் பண்ணில் பிராட்டியோபாதி அநந்யார்ஹமாய், அவ்வளவுமன்றிக்கே, “மாகாயம் பூக்கொள்மேனி நான்குதோள் பொன்னாழிக்கை யென்னம்மான் நீக்கமில்லா வடியார்தம்மடியா ரடியாரடியா ரெங்கோக்களவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே ஊழிதோறூழி வாய்க்கதமியேற்கு” என்று விலக்ஷண விக்ரஹ யுக்தனான ஸர்வேச்வரனை விச்லேஷிக்க க்ஷமரல்லாத பாகவதர்களுடைய சேஷத்வத்தி னெல்லையிலே நிற்கிறவர்கள் எனக்கு சேஷிகள், இருகரையரன்றிக்கே அவர்களுக்கே ஸபரிகரமாக அநந்யார்ஹனாய்ச் செல்லும் நல்ல கோட்பாடு கால தத்வமுள்ளதனையும் எனக்கு ஸித்திக்கவேண்டும், என்று இப்படி ததீய சேஷத்வ காஷ்டையளவும் செல்ல நிற்கும்படி பரதந்த்ரமான ஸ்வரூபத்தையநுஸந்தித்தவர். [7] (ஸ்வஸாதநஸாத்யஸ்தர் இருகரையராகாமல் மண்ணவரும் வானவரும் நண்ணுமத்தையே குறிக்கொள்மினுள்ளத்தென்று ப்ராப்யைகபரராக்குகிறார் எட்டாம்பத்தில்) அதாவது தம்முடைய ஸாதநஸாத்யங்களே தங்களுக்கு மென்றிருக்கிறவர்கள், தத் விஷயம் ப்ராபகமும் ததீயவிஷயம் ப்ராப்யமுமாய் இருகரையராகாதபடி “திருக்கடித்தானத்தை ஏத்த நில்லா குறிக்கொள்மினிடரே”, “கோவிந்தன் மண் விண் முழுதுமளந்த வொண்டாமரை மண்ணவர் தாம் தொழ வானவர் தாம்வந்து நண்ணு திருக்கடித்தான நகரே இடர்கெடவுள்ளத்துக் கொள்மின்” என்று திருக்கடித்தானத்தை ஸ்தோத்ரம் பண்ணினவளவிலே துக்கங்களெல்லாம் நிலைகுலைந்துபோம், இத்தைக் குறிக்கொள்ளுங்கோள், ஸர்வேச்வரனுடைய ஸர்வ ஸுலபமான திருவடிகளை உபயவிபூதியிலுள்ளாரும் வந்தனுபவிக்கும்படியான திருக்கடித்தான நகரை உங்கள் ஸமஸ்த துக்கங்களும் போம்படி நெஞ்சிலே கொண்டநுஸந்தியுங்கோளென்று கீழில் பத்தில் ப்ராப்யமாக உபதேசித்த அர்ச்சாவதார பூமியே துக்கநிவர்த்தகமென்கையாலே, ப்ராப்யமான விஷயமே ப்ராபகமென்று தர்சிப்பித்து ப்ராப்யவிஷயமொன்றிலுமே தத் பரராக்குகிறார் எட்டாம் பத்திலென்கை.

(தேவிமார்) - திருவாய்மொழி ( 8-1-1) – தேவிமார் ஆவார் திருமகள் பூமியேவ மற்றமரர் ஆட்செய்வார் மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி - என்றும், (பணியா) - திருவாய்மொழி (8-3-6) - பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம் – என்றும், (நேர்பட்ட) - திருவாய்மொழி (8-9-11) - நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் – என்றும், (நல்ல கோட்பாடு) - திருவாய்மொழி (8-10-11) – நல்லகோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த – என்றும் கூறுவதற்கு ஏற்ப மஹாலக்ஷ்மி முதலான பிராட்டிமார்களுக்கு நாயகனாய், தனது ஆணைக்கு ஏற்ப நடக்கின்ற நித்யஸூரிகளுடைய கைங்கர்யங்கள் மற்றும் ஞானம் ஆகியவற்றுக்கு விஷயமாய், தனது தன்னுடன் எப்போதும் பொருந்தியபடி உள்ளதும், முழுவதுமாகத் தனது ஆணைக்கு உட்பட்டபடி உள்ளதும் ஆகிய மூன்று லோகங்களுக்கும் நிர்வாஹகனாய் உள்ளவன் என்னும்படியாக. (சக்தியாலே) - எப்போதும் உள்ளனவாகக் கூறப்பட்ட. (பத்நீ பரிஜநாதிகளை உடைய) - பத்னிகள், நித்யஸூரிகள், பரமபதம், இனிமையான பொருள்கள், இனிமையான கருவிகள் போன்றவற்றை உடையவன் என்பதால். (ஸத்யகாமன்) - ஸத்யகாமனாக உள்ள ஸர்வேச்வரன். (கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும்) - “உம்மைக் கொண்டு என்னைக் கவிபாடுவதற்காகவே உம்மை இங்கு யாம் வைத்தோம்”, என்று ஆழ்வாரைக் கொண்டு சொற்கள் மூலமாகச் செய்யவல்ல கைங்கர்யத்தை அவர் செய்வதற்காக அவரை இங்கு நிறுத்தினான்; ஆனால் அதனையும் அவர் மறந்து போகும்படிச் செய்த. (கலக்கமும்) – திருவாய்மொழி (8-1-2) - காணுமாறருளா யென்றென்றே கலங்கி - என்பதற்கு ஏற்ப தன்னைக் கண்டு அனுபவிக்க இயலாத காரணத்தால் ஏற்பட்ட கலக்கமும். அது மட்டும் அல்லாமல், (சங்கையும்) – திருவாய்மொழி (8-1-4) – உமர் உகந்த - என்று தொடங்கி, திருவாய்மொழி (8-1-4) - அறிவு ஒன்றும் சங்கிப்பன் – என்பது முடிய உள்ள பாசுரம் மூலம் “அடியார்களுக்கு மட்டுமே வசப்பட்டு நிற்பவன்” என்ற தன்னுடைய குணத்திலும், திருவாய்மொழி (8-1-7) – இறந்ததும் நீயே – என்று தொடங்கி, திருவாய்மொழி (8-1-7) – அறிவு ஒன்றும் சங்கிப்பன் - என்று முடியும் பாசுரம் மூலம், “அனைத்தையும் தனது சரீரமாகக் கொண்டவன்” என்ற தன்னுடைய ஸ்வரூபத்திலும் ஏற்பட்ட சந்தேகமும். (அச்சமும்) - திருவாய்மொழி ( 8-1-9) - நன்றுமஞ்சுவன் நரகம் நானடைதல் - என்பதற்கு ஏற்ப இந்த ஸம்ஸாரத்தை எண்ணும்போது ஏற்பட்ட அச்சமும். (தீர) – விலகும்படியாக. (தலைச்சிறப்பத் தந்தவதில் க்ருதஜ்ஞதா பல ப்ரத்யுபகாரமாக) – திருவாய்மொழி (7-10-5) – மலரடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப் பலரடியார் முன்பருளிய - என்று கூறுவதற்கு ஏற்ப அவனைப் புகழ்வதற்கு பராசரர் போன்றவர்களும், முதலாழ்வார்களும் உள்ளபோதிலும் தன்னைக் கொண்டு “சொற்கள் மூலமாகச் செய்வதான கைங்கர்யத்தைச் செய்யும்படிச் செய்தான்” என்று ஸர்வேச்வரனாகிய தான் ஆழ்வாருக்குச் செய்த உபகாரத்தை அவர் எண்ணிப் பார்க்கும்படியாகச் செய்தான். அப்போது ஆழ்வார், திருவாய்மொழி (8-1-10) - தாள்களை யெனக்கே தலைத்தலைச் சிறப்பத் தந்த - என்பதற்கு ஏற்ப அதனை எண்ணிப் பார்த்தார். அவ்விதம் மிகவும் போற்றும்படியாக அவன் செய்த உபகாரத்திற்குத் தான் செய்யவேண்டிய “செய்ந்நன்றி அறிதல்” என்பது, அத்தகைய உபகாரத்திற்கு ஏற்கும் விதத்தில் உள்ள கைம்மாறு ஆகும் என்பதால், அந்த உபகாரத்திற்கு ப்ரதி உபகாரமாக. (வேந்தர் தலைவன் கன்யகா தானம் போலே) - பெரியாழ்வார் திருமொழி (4-1-2) –வேந்தர் - என்பதற்கு ஏற்ப க்ஷத்ரியர்களின் தலைவனாகவும், ஞானிகளில் சிறந்தவனாகவும் உள்ள ஜனகராஜன் சிவனுடைய வில்லை உடைத்த இராமனுடைய ஆண்மைத்தன்மையைக் கண்ட மகிழ்ச்சியில் கலங்கி, ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-8-17) - விஷ்ணோச் சரீரநபாயிநீ - மஹாவிஷ்ணுவை விட்டு எப்போதும் பிரியாதவள் - என்பதற்கு ஏற்ப அவனை விட்டு அகலாதவளாகவும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-9-144) - ராகவத்வே பவத் ஸீதா - இராமனாக அவன் அவதரித்தபோது இவள் சீதையாக அவதரித்தாள் - என்பதற்கு ஏற்ப அத்தகைய இராமாவதாரத்திற்கு ஏற்றபடியாக அவதரித்தவளும் ஆகிய பெரியபிராட்டியை, இராமாயணம் பாலகாண்டம் (73-26) - இயம் ஸீதா மம ஸுதா ஸஹதர்மசரீ தவ, ப்ரதீச்ச சைநாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா - எனது புத்ரியாக உள்ள இந்தச் சீதை உம்முடன் சேர்ந்து இருந்து அனைத்து தர்மங்களையும் செய்யவல்லவள் ஆவாள்; இவளை நீவிர் ஏற்கவேண்டும்; உம்முடைய திருக்கரங்களால் இவளுடைய கைகளை நீவிர் பிடிப்பீராக - என்பதற்கு ஏற்ப இராமனிடம் சமர்ப்பணம் செய்தான். அதே போன்று, (ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்மலாபத்தாலே) – திருவாய்மொழி (7-9-10) – உதவிக் கைம்மாறென்னுயிரென்ன வுற்றெண்ணில் அதுவுமற்றாங்கவன் தன்னது - என்று ப்ரதி உபகாரமாகத் தனது ஆத்மாவை அவனுக்கு ஸமர்ப்பணம் செய்வதற்காகத் தேடினார். ஆனால் அப்போது, “இந்த ஆத்மாவும் அவனுடைய உடைமை அல்லவோ”, என்று எண்ணம் ஏற்பட, அதனை அளிக்காமல் இருந்தார். ஆனால், தான் அவ்விதம் அவனுக்குத் தனது ஆத்மாவைச் சமர்ப்பணம் செய்யவில்லை என்பதைக்கூட அவன் அறியாமல், “செய்ந்நன்றி அறிதல்” காரணமாக ஏற்பட்ட மகிழ்ச்சியால் கலங்கி, திருவாய்மொழி (8-1-10) - பேருதவிக் கைம்மாறாத் தோள்களையாரத் தழுவி யென்னுயிரை யறவிலை செய்தனன் - என்பதற்கு ஏற்ப ஆத்மாவானது உருவம் அற்றதாக உள்ளபோதிலும், செய்ந்நன்றி அறிதலின் காரணமாக ஏற்பட்ட மட்டற்ற மகிழ்வால் அவன் செய்தது என்னவென்றால், தாளும் தோளுமாகப் பணைத்து நின்ற பாவனையின் மிகுதியால் அந்த ஆத்மாவை அணைத்துக் கொண்டு, மிகுந்த ஈடுபாட்டுடன் அவனுக்கே என்று அளித்த ஆத்மாவை அவன் பெறுவதன் காரணமாக. (அதீவ விளங்கிப் பணைத்து) – இராமாயணம் - அதீவ ராமச் சுசுபே – இராமன் நேர்த்தியாக விளங்கினான் – என்றும், இராமாயணம் - அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா – சீதை யாருடைய பத்னியாக உள்ளாளோ அவனுடைய பராக்ரமம் யாராலும் அளவிட இயலாதது – என்றும் கூறுவதற்கு ஏற்ப, சீதையை மனைவியாகப் பெற்ற இராமன் விளங்கியது போன்று, திருவாய்மொழி (8-1-10) – சோதி – என்று இவர் உரைக்கும்படியாக, இவர் தன்னுடையது அல்லாத ஆத்மாவை “தன்னுடையது” என்று மயங்கிக் கொடுத்தபோது, ஸர்வேச்வரனும் தன்னுடையது அல்லாத ஒன்றைப் பெற்றது போன்று மயங்கி, மிகுந்த ஒளியுடன் கூடியவனாக நின்று, திருவாய்மொழி (8-1-10) - தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க்கண்க ளாயிரத்தாய் தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய் – என்பதற்கு ஏற்ப பல நூறு கிளைகளாகப் பணைத்து. (ஜந்மபாசம் விட்டு) ஸ்ரீஜனகராஜனின் திருமகளான சீதை இராமனுடைய திருக்கரத்தைப் பற்றிய பின்னர், அவனிடம் கொண்ட அளவற்ற ப்ரேமை காரணமாக தனது பிறந்த இடமான மிதிலையை நினைக்கவில்லை; அது போன்றே நம்மாழ்வாரும், திருவாய்மொழி (8-2-11) - பாதமடைவதன் பாசத்தாலே மற்ற வன்பாசங்கள் முற்றவிட்டு – என்பதற்கு ஏற்ப திருவடிகளைக் கிட்டுவதன் காரணமாக ஏற்பட்ட பக்தியின் விளைவாக மற்ற விஷயங்களில் ஏற்பட்ட வலிமையான சம்பந்தங்களை அடியுடன் கைவிட்டு. (ஆத்வாரம் ஆளுமாளாரென்று பரிந்து) - இராமாயணம் அயோத்யாகாண்டம் (16-21) – ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களாந்யபிதத்யுஷீ - சீதை மங்களங்களை உரைத்தபடி வாசல் படி முடிய இராமனைத் தொடந்தாள் - என்பதற்கு எற்ப இராமனுடைய திருமேனி அழகைக் கண்டு அவனுக்கு மங்களாசாசனம் செய்தாள்; அதே போன்று நம்மாழ்வாரும் திருவாய்மொழி (8-3-3) – ஆளுமாளாராழியுஞ் சங்கும் சுமப்பார்தாம் - என்பதற்கு ஏற்ப, “தன்னிடம் பரிந்து நிற்பதற்கு யாரும் இல்லாதவனாக உள்ளான். மலையைச் சுமப்பது போன்று திருவாழி மற்றும் பாஞ்சஜன்யத்தைத் தானே சுமந்தபடி நிற்கிறானே”, என்று அவனுடைய மென்மையைக் கண்டு பரிந்து. (அநுரூபனோடே அமர்ந்து) - சீதை இராமனுடைய வீரம் போன்ற அனைத்தையும் எண்ணி பயம் அகன்றவளாக, ஸுந்தரகாண்டம் (16-5) – துல்ய சீல - தகுந்த சீலம், வயது, நடத்தை, குலம், இலக்கணங்கள் ஆகியவற்றைக் கொண்டவளாக உள்ள சீதைக்கு இராமன் ஏற்றவன் ஆவான். இராமனுக்கு இந்தச் சீதை ஏற்றவள் ஆவாள் – என்று கூறுவதற்கு ஏற்ப சீதை தனக்கு ஏற்றவனாகிய இராமனுடன கூடி நின்று அனுபவித்தாள்; அதே போன்று நம்மாழ்வாரும் திருவாய்மொழி (8-4-1) – வார்கடாவருவி - என்று தொடங்கி அவனுடைய வீரம் முதலானவற்றை எண்ணியவுடன் தனது பயம் முதலானவை நீங்கப் பெற்றவராக இருந்து. (பிரிவில் க்ருபண தசையாகத் துவரும்) - இராமனை விட்டுப் பிரிந்த நிலையில் சீதை ஸுந்தரகாண்டம் (16-30) – ஹிமஹதநலிநீவ நஷ்டசோபா வ்யஸந பரம்பரயாதி பீட்யமாநா, ஸஹசரரஹிதேவ சக்ரவாகீ ஜநகஸுதா க்ருபணாம் தசாம் ப்ரபந்‍நா - பனியால் பீடிக்கப்பட்ட தாமரைப்பொய்கை போன்ற தனது அழகை இழந்தவளாக, மிகுந்த துயரம் நிறைந்தவளாக, தனது துணையைப் பரிந்த சக்ரவாகப்பறவை போன்று வருந்தத்தக்க நிலையை அடைந்தாள் - என்பதற்கு ஏற்ப கருணை அற்றவர்கள் கூட இரக்கம் கொள்ளும்படியான நிலையை அடைந்தாள்; அதே போன்று நம்மாழ்வாரும் திருவாய்மொழி (8-5-2) – காணவாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து - என்பதற்கு ஏற்ப அவனைக் காணவேண்டும் என்ற ஆசை கொண்டு அனைத்து திசைகளிலும் பார்ப்பது மற்றும் அழைப்பது போன்றவற்றையும் செய்வதால் கண்ணும் வாயும் நீர்ப்பசை இன்றிப் போவதால். (ஸீதா குணங்களால் ப்ரீதி வர்த்தித்து) – ஜனககுலத்தின் சுந்தரியான சீதையின் குணங்கள் அனைத்தும் இவரிடம் காணப்படுகின்றன என்றாகிறது. ஆகவே பாலகாண்டம் (77-25) - குணாத் ரூபகுணாச்சாபி ப்ரீதிர்ப்பூயோப்ப்ய வர்த்தத - உன்னதமான குணங்கள், திருமேனியின் அழகு, உயர்ந்தகுலப் பண்புகள் போன்றவற்றால் ப்ரேமை மேன்மேலும் வளர்ந்து - என்பதற்கு ஏற்ப சீதையின் உயர்ந்த குணங்களைக் கண்டதால் இராமனுக்கு அவளிடம் ப்ரேமையானது பன்மடங்கு வளர்ந்தது; அதே போன்று நம்மாழ்வாரிடம் அவனுக்கு ப்ரேமை வளர்ந்து. (தித்திக்க உள்ளே உறைந்து) - பாலகாண்டம் (77-25) - தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித: - சீதையின் உள்ளத்தில் இராமன் எப்போதும் உள்ளான் – என்பதற்கு ஏற்ப, எப்போதும் சீதையின் நெஞ்சத்திற்கு இனிமையாக உள்ளதற்குவேண்டி இராமன் அங்கேயே இருந்தான்; அதே போன்று நம்மாழ்வார் திருவாய்மொழி (8-6-3) - உள்ளுந்தோறும் தித்திப்பான் – என்றும், திருவாய்மொழி (8-6-2) – ஒருக்கடுத்துள்ளேயுறையும் பிரான் கண்டீர் - என்றும் கூறுவதற்கு ஏற்ப அவர் இவனை எண்ணும்போதெல்லாம் இவன் எல்லையற்ற இனிமையானவனாக அவருடைய திருவுள்ளத்தில் வசித்தபடி. (கண்டு கொண்டிருந்து) – திருவாய்மொழி (8-7-2) – இருந்தான் கண்டு கொண்டு - என்பதற்கு ஏற்ப வறியவன் ஒருவன் பெரும் புதையலை அடைந்தால், அதனையே பார்த்தபடி உள்ளது போன்று, இவரைப் பெற்ற ப்ரீதியாலே வைத்த கண் மாறாமல் இவரையே பார்த்தபடி. (அமாநுஷ போகம் ஆக்கினவன்) – ஸுந்தரகாண்டம் (33-17) – ஸமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே, புஞ்ஜாநா அமாநுஷாந் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ - நான் அயோத்தியில் இராமனுடைய அரண்மனையில் பன்னிரண்டு ஆண்டுகள், மனிதர்களுக்கு கிட்டாத தேவலோக இன்பதை அனுபவித்தபடி அனைத்து விருப்பங்களும் நிறைவேறப் பெற்றவளாக இருந்தேன் - என்று இராமனைப் பிரிந்திருந்த காலத்தில் முன்பு நடந்தவற்றை உரைத்தபடியே தரித்துக் கொண்டிருந்த சீதையை, மனித இன்பம் மட்டும் அல்லாமல் தேவலோக இன்பங்களையும் அனுபவிக்கும்படி இராமன் செய்தான்; அதே போன்று நம்மாழ்வாரையும் திருவாய்மொழி (8-7-2) - தரும் தானருள் தான் இனியான் அறியேன் - என்றும், திருவாய்மொழி (8-7-7) - செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே – என்றும் மகிழ்ந்து உரைக்கும்படி தேவலோக இன்பங்களை அனுபவிக்கும்படிச் செய்தவன். (மூன்று தத்துக்குப் பிழைத்த) – திருவாய்மொழி (1-5) – வலவேழ் உலகு - என்ற திருவாய்மொழியில், திருவாய்மொழி (1-5-1) - களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வாவென்பன் அருவினையேன் - என்றும், திருவாய்மொழி (1-5-2) – வணங்கினால் உன் பெருமை மாசூணாதோ – என்றும், திருவாய்மொழி (1-5-7) - அடியேன் காண்பான் அலற்றுவன் இதனில் மிக்கோர் அயர்வுண்டே – என்றும்; திருவாய்மொழி (1-10) – பொருமாநீள் படை - என்ற திருவாய்மொழியில், திருவாய்மொழி (1-10-7) – சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் - என்றும்; திருவாய்மொழி (2-5) – அந்தாமத்து அன்பு – என்ற திருவாய்மொழியில், திருவாய்மொழி (2-5-5) - அல்லாவியுள் கலந்த - என்றும், திருவாய்மொழி (2-5-8) - என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை - என்றும் இவ்விதமாக உள்ள மூன்று இடங்களில் இவருக்கு ஏற்பட்டதான மூன்று கண்டங்களையும் ஸர்வேச்வரன் நீக்கினான்; இவ்விதம் நீங்கப் பெற்ற இவருக்கு. (அருவினைநோய் மறுவல் இடாமல்) – திருவாய்மொழி (8-7-3) - மருள்தானீதோ – என்றும், திருவாய்மொழி (8-7-6) – பின்னையார்க்கவன் தன்னைக் கொடுக்கும் - என்றும், திருவாய்மொழி (8-7-3) - அருள்தானினி யானறியேன் - என்றும் கூறுவவதற்கு ஏற்ப, உகப்புக்குச் செல்லா நிற்கச் செய்தபோதிலும்; திருவாய்மொழி (8-7-8) - சிறியேனுடைச் சிந்தையுள் நின்றொழிந்தார் – என்று இவர் தம்முடைய சிறுமையை எண்ணியபடி தன்னை விட்டு மீண்டும் அகன்று சென்றால் என்ன செய்வது என்று அச்சம் கொண்டான். ஆகவே ஸர்வேச்வரன் தனது திருவுள்ளத்தில், “இனி இவர் நம்மை விட்டு அகலுதல் என்பது இவருக்கு வந்து சேர்ந்ததான சரீர ஸம்பந்தத்தை எண்ணி, இத்தகைய சரீர ஸம்பந்தம் ஏற்புடையது அல்ல என்று தீர்மானிப்பதால் அல்லவோ நடைபெறும்? ஆனால், இவர் ஆத்மாவின் உண்மையை அறிந்தால் நம்மை விட்டு அகலமாட்டார் அல்லவோ?”, என்று தீர்மானித்தான். ஆகவே “நான் சிறியவன்” என்ற அந்தச் சிந்தை அவருக்கு மீண்டும் ஏற்படாதபடி, (சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட) - “நமக்குக் கௌஸ்துபம் போன்று ஒளியை வீசுவதாகவும், மஹாலக்ஷ்மியின் ஸ்தனங்கள் போன்று மிகவும் இனியதாகவும், பிரிக்க இயலாத விசேஷணம் போன்று உம்முடைய ஆத்மாவின் ஸ்வரூபம் உள்ளது” என்று மிகவும் சிறியதாக இவர் எண்ணிய ஆத்மாவின் மேன்மையை, திருவாய்மொழி (8-8-4) – யானுந்தானா யொழிந்தான் – என்றும், திருவாய்மொழி (4-3-10) – என்றும் கூறுவதற்கு ஏற்ப, தன்னை விட்டுப் பிரிக்க இயலாத வஸ்துவாகவும், எல்லையற்ற எனிமையாகவும் உள்ளதாக இவர் எண்ணும்படிக் காண்பித்துக் கொடுத்தான். (தேஹாதிகளில் பரமாய்) - திருவாய்மொழி (8-8-5) – சென்று சென்று பரம்பரமாய் - என்பதற்கு ஏற்ப சரீரம், இந்த்ரியங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாகவும், ஞானம் மற்றும் ஆனந்தமயமாக உள்ளதாகவும். (நின்று) - திருவாய்மொழி (8-9-5) - நினையும் நீர்மை அதன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால் – என்றும், திருவாய்மொழி (8-9-1) - அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் – என்றும், திருவாய்மொழி (8-9-10) – அன்றி மற்றோருபாயமென் - என்றும் கூறுவதற்கு ஏற்ப உண்மையை உள்ளதுஉள்ளபடி நிரூபித்துப் பார்த்தால் பெரியபிராட்டியைப் போன்றே அவளுக்கு மட்டுமே உரியதாகவும். (அவர்க்கே குடிகளாம் பரதந்த்ரஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர்) – அது மட்டும் அல்லாமல், திருவாய்மொழி (8-10-10) - மாகாயம் பூக்கொள்மேனி நான்குதோள் பொன்னாழிக்கை யென்னம்மான் நீக்கமில்லா வடியார்தம்மடியா ரடியாரடியா ரெங்கோக்களவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே ஊழிதோறூழி வாய்க்கதமியேற்கு - என்பதற்கு ஏற்ப மேன்மையான திருமேனி கொண்டவனாகிய ஸர்வேச்வரனைப் பிரிந்திருக்க இயலாதபடி உள்ளவர்களான பாகவதர்களுடைய அடிமைத்தனத்தின் எல்லையில் நிற்பவர்களே எனது எஜமானர்கள்; பகவத் விஷயம் மற்றும் பாகவத விஷயம் என்ற இரண்டையும் பற்றி நிற்பவர்கள் அல்லாமல், “எனது எஜமானர்கள்” என்று மேலே கூறப்பட்டவர்களுக்கு மட்டுமே அடிமையாக நிற்கும் விதத்தில் உள்ள நல்ல நிலைமையானது, காலம் என்ற தத்வம் உள்ளவரையில் எனக்குக் கிடைக்கவேண்டும் என்று இவ்விதமாக அவனுடைய அடியார்களுக்கு அடிமை என்பதான எல்லை முடியச் சென்று நிற்கும்படியக அவர்கள் வசப்பட்டுள்ள தனது ஆத்மஸ்வரூபத்தை எண்ணியபடி உரைத்தவர். (ஸ்வஸாதந ஸாத்யஸ்தர்) - அதாவது ஆழ்வாருக்கு உபாயம் மற்றும் உபேயம் எவையாக உள்ளனவோ அவற்றையே தங்களுக்கும் ஏற்ற உபாயமாகக் கொண்டுள்ளவர்கள். (இருகரையர் ஆகாமல்) – பகவத் விஷயத்தை உபாயமாகவும், அவனுடைய அடியார்கள் விஷயத்தை உபேயமாகவும் கொண்டு “இரு கரையர்கள்” என்று ஆகாதபடி, (மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே குறிக்கொள்மின் உள்ளத்து என்று) - திருவாய்மொழி (8-6-6) - திருக்கடித்தானத்தை ஏத்த நில்லா குறிக்கொள்மினிடரே - என்றும், திருவாய்மொழி (8-6-7) – கோவிந்தன் மண் விண் முழுதுமளந்த வொண்டாமரை மண்ணவர் தாம் தொழ வானவர் தாம்வந்து நண்ணு திருக்கடித்தான நகரே இடர்கெடவுள்ளத்துக் கொள்மின் – என்றும் கூறுவதற்கு ஏற்ப திருக்கடித்தானத்தைத் துதித்த உடனேயே அனைத்து துக்கங்களும் நிலைதடுமாறிப் போகும்; இதனை மனதில் நிறுத்துங்கள்; ஸர்வேச்வரனுடையதும், அனைவருக்கும் எளிதானதும் ஆகிய இரண்டு திருவடிகளை, மண்ணுலகம் மற்றும் விண்ணுலகம் ஆகிய இரண்டிலும் உள்ள அனைவரும் வந்து அனுபவிக்கும்படியாக உள்ள திருக்கடித்தானத்தில் கண்டு கொண்டு, அனைத்து துக்கங்களும் நீங்கும்விதமாக உங்கள் உள்ளத்தில் எப்போதும் நினைத்து நிற்பீர்களாக என்று. (ப்ராப்ய ஏக பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில்) - ஏழாம் பத்தில் அடையப்படவேண்டிய பேறாக உபதேசித்த அர்ச்சாவதார பூமி என்பதே அனைத்துவிதமான துக்கங்களையும் போக்குவதாகும் என்பதால், அடையவேண்டியதான அந்தப் பொருளே அடைய வைக்கின்ற வழியாகவும் உள்ளது என்று உரைத்து, உபேய விஷயத்தில் மட்டுமே ஈடுபடும்படியாக எட்டாம் பத்தில் அருளிச்செய்கிறார் என்று கருத்து.