Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 225)

நான்காம் ப்ரகரணம்

[1] எண்ணிலாக் குணங்கள் பால துன்பவேறவன் மாயாப் பல்யோகு செய்தியென்னும் ஆச்சர்ய சக்தியோகத்தாலே [2] தெளிவுற்றவர்க்கு ஏற்றரும் வைகுந்தத்தையருளும் ப்ராபகத்வம் புற்பாவெறும்பு பகைவனுக்கும் ஆக்கவல்ல ஸர்வ சக்தி, பாதமகலகில்லாத தம்மை [3] அகற்றுமவற்றின் நடுவேயிருத்தக் கண்டு நலிவான் சுமாடு தந்தாய் ஓவென்று ஸாதநபலமான ஆக்ரோசத்தோடே பழியிட்டுக் [4] கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியைக் கோயில் திருவாசலிலே முறை கெட்ட கேள்வியாக்கித் [5] தேற்றவொண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப் பண்ணின பலாதாரம் மற்றுங் கற்பாரிழவிலே சுவறிப் [6] பழைய தனிமைக் கூப்பீடு தலையெடுத்து, சூழவும் பகைமுகஞ்செய்ய, எடுப்புஞ்சாய்ப்புமான க்லேசம் நடக்க, உபாயாதிகாரதோஷமொழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க, [7] ஐச்சமாக இருத்தி உறக்கொண்ட ஸ்வபர ப்ரயோஜனத்தை அருளிச்செய்ய, என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பெதிர் எதுவும்மென்கிற உபகார ஸ்ம்ருதியோடே [8] தன் சரிதை கேள்வியாகாமல் இன்பம் பயக்கவிருந்த நிலத்தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக காநகோஷ்டியையும் தேவபிரானறிய மறந்தவர், [9] சரமோபாய பரரானார்க்கு நீணகரமது, துணித்தான சரணன்றி மற்றொன்றிலம் உள்ளித் தொழுமினென்று ப்ராப்யஸாதநாவதியை ப்ரீதியாலே ப்ரகாசிப்பிக்கிறார் ஏழாம் பத்தில்.

ஏழாம் பத்தால், உபாயக்ருத்யத்துக்கபேக்ஷிதமான விசித்ர சக்தி யோகத்தாலே யதாஜ்ஞாநம் பிறந்தவர்களுக்குக் கொடுக்கக் கடவதான பரமபதத்தைத் தானே யுபாயமாய்க் கொடுக்குமிடத்தில், திர்யக் ஸ்தாவரங்களுக்கும் சத்ருவுக்குமுட்படக் கொடுக்கவல்ல ஸர்வேச்வரன் திருவடிகளை க்ஷணகாலமும் பிரிய க்ஷமரன்றிக்கே ஸாங்கப்ரபதநம் பண்ணின தம்மை விஷயங்களிலே மூட்டி தன்பக்கல் சேராதபடி யகற்றுமவையான இந்த்ரியங்கள் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே வைக்கக் கண்டு விஷண்ணராய் கூப்பிட்டு, தம் தசை தாம் பேசமாட்டாதபடி தளர்ந்து பிறரால் மீட்கவொண்ணாதபடி அபஹ்ருத சித்தராக, அவன் தன் விஜயங்களைக் காட்டி யிவரைத் தரிப்பிக்க, அந்தத் தரிப்பும் ஸம்ஸாரிகளிழவை நினைத்துச் சுவறிப் பழைய வார்த்தியே தலையெடுத்து, அநுபாவ்ய விஷயம் ஸ்ம்ருதி விஷயமாயொருமுகம் செய்து நலிய நோவுபட்டு இப்படியெடுப்பும் சாய்ப்புமாக க்லேசம் செல்லச் செய்தே, “உபாய பூதனான உனக்கு ஜ்ஞாந சக்திகளில் குறைவற்றிருக்க, எனக்கு ஆகிஞ்சந்யாநந்யகதித்வங்களிலும் ஆர்த்தியிலும் குறைவற்றிருக்க, என்னை ஸம்ஸாரத்திலே வைக்கைக்கடியென்”னென்று கேட்க; அவனும், “நமக்கும் நம்முடையார்க்கும் இனிதாகத் திருவாய்மொழி பாடுவிக்க வைத்தோங்காணும்” என்றருளிச் செய்ய; “வ்யாஸாதிகள், முதலாழ்வார்கள் கவிபாடுகைக்குண்டாயிருக்க நம்மைக் கொண்டு கவிபாடுவித்துக் கொள்வதே” என்று அவன் பண்ணின உபகாரத்தை அநுஸந்தித்து அதுக்கு ப்ரத்யுபகாரம் தேடிக் காணாமையாலே, “இனி இதொழியச் செய்யலாவதொன்றில்லை” என்று திருவாறன்விளையிலே பெரியபிராட்டியாருடனே எழுந்தருளியிருக்கிற பேரோலக்கத்திலே திருவாய்மொழி கேட்பித்து அடிமை செய்வதாக மநோரதித்து அங்கே தம் திருவுள்ளம் ப்ரவணமாகையாலே, பரமபதத்திலிருப்பையும் உபேக்ஷிக்கும்படியானவர்; கீழ் தம்முடைய உபாயநிஷ்டை வெளியிடும்படி புகுர நின்றவர்களுக்கு “திருவாறன்விளையே ப்ராப்யம்; அங்கு எழுந்தருளி நிற்கிறவன் உபாயம்” என்று தாமறுதியிட்ட ப்ராப்ய ப்ராபகங்களினுடைய முடிவைத் தம்முகப்பாலே வெளியிடுகிறாரென்கிறார்.

உபாயம் என்ற செயலுக்கு அவசியமாகத் தேவைப்படுவதான வியக்கவைக்கும் சக்தி கொண்டதால், உண்மையான ஞானத்தைப் பெற்றவர்களுக்கு அளிக்கக்கூடியதான பரமபதத்தை, ஸர்வேச்வரன் தானே உபாயமாக நின்று அளிக்கிறான். இதனை அவன் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும், பகைவர்களுக்கும் கூட அளிக்கிறான். இப்படிப்பட்ட அவன், தனது திருவடிகளை நொடிப்பொழுது நேரம் கூடப் பிரிய இயலாதபடி ப்ரபத்தி செய்த நம்மாழ்வாராகிய தன்னை, இந்த உலகவிஷயங்களில் ஈடுபடுத்தி அவனிடம் சேர இயலாதபடி விலக்குகின்ற இந்த்ரிய விஷயங்கள் நிறைந்த இந்த ஸம்ஸாரத்தில் வைத்தபடி உள்ளதைக் கண்டு துக்கம் கொண்டார். அவனை அழைத்து தன்னுடைய நிலையை உரைக்க இயலாமல் தளர்ந்தார். மற்றவர்களாலும் இவரை மீட்க இயலாதபடி, ஸர்வேச்வரனிடம் மட்டுமே தனது சிந்தனையை வைத்தவராக இருந்தார். இவ்விதம் உள்ள இவரை ஸர்வேச்வரன் தனது வெற்றி நிறைந்த செயல்களைக் காண்பித்துத் தரிக்கும்படி செய்தான். ஆனால் அத்தகைய தரித்தல் என்பதும், ஸம்ஸாரிகள் அவனை இழந்து நிற்பதை எண்ணித் தளர்ந்ததால், மீண்டும் பழைய துன்பமே மேலோங்கியது. இது தவிர அவனுடைய திருமேனியின் ஒவ்வொரு அவயமும் இவருடைய நினைவுகளுக்கு இலக்காகி நின்று மேலும் இவரை நலியும்படிச் செய்தன. அதனால் இவர் மேலும் துன்பம் அடைந்தார். இவ்விதமாகத் துன்பமானது வெளியேறியும் உட்புகுந்தும் இருந்தபடி உள்ளபோது நம்மாழ்வார் அவனிடம், “அனைத்து உபாயமாக உள்ள உனக்கு ஞானம் மற்றும் சக்தி போன்ற எதிலும் எந்தக் குறைகளும் இல்லை. இது போன்றே எனக்கும் முதல் இல்லாமை, வேறு கதி இல்லாமை மற்றும் துக்கங்கள் ஆகியவற்றில் எந்தக் குறைகளும் இல்லை. இவ்விதம் உள்ளபோது என்னை இந்த ஸம்ஸாரத்தில் வைப்பதற்கு என்ன காரணம் உள்ளது?”, என்றார். இதற்கு ஸர்வேச்வரன், “நமக்கும், நம்முடைய அடியார்களுக்கும் இனிமையாக உள்ளதான திருவாய்மொழியை நீவிர் பாடும்படிச் செய்வதற்காகவே ஸம்ஸாரத்தில் வைத்தோம்”, என்றான். இதனைக் கேட்ட நம்மாழ்வார், “வ்யாஸர் உள்ளிட்ட மஹரிஷிகள் மற்றும் முதலாழ்வார்கள் போன்றவர்கள் இவனைக் குறித்துப் பாட உள்ளபோது, இவன் நம்மைக் கவிபாட வைத்துள்ளானே!”, என்று அவன் தனக்குச் செய்த உபகாரத்தை எண்ணி மகிழ்ந்தார். அதற்கு என்ன கைம்மாறு செய்வது என்று தேடி, எதுவும் கிட்டாத காரணத்தால், “இனி இதனைத் தவிரச் செய்வதற்கு வேறு ஏதும் இல்லை” என்று தீர்மானித்து, திருவாறன்வினையில் பெரியபிராட்டியாருடன் எழுந்தருளியுள்ள பெரிய அவையில், திருவாய்மொழியைக் கேட்கும்விதமாகத் தனக்குக் கைங்கர்யம் கிட்டியதாக எண்ணினார். அங்கு தன்னுடைய திருவுள்ளம் மிகுந்த ஈடுபாட்டுடன் நிற்பதைக் கண்ட நம்மாழ்வார், பரமபதத்தையும் ஒதுக்கினார். தன்னுடைய ப்ரபத்தி குறித்து வெளியிடவேண்டும் என்று தன்னை அண்டி வந்தவர்களுக்கு, “திருவாறன்விளையே அடையவேண்டிய இலக்காகும். அங்கு எழுந்தருளியுள்ளவனே உபாயம் ஆவான்”, என்று தான் தீர்மானித்த வைத்த உபாயம் மற்றும் பேறு ஆகியவை குறித்த தனது முடிவைத் தன்னுடைய மகிழ்ச்சி முலம் ஏழாம் பத்தில் வெளியிடுகிறார் என்று கூறுகிறார்.

– [1] (எண்ணிலாக் குணங்கள் பாலதுன்ப வேறவன் மாயாப்பல்யோகு செய்தியென்னு மாச்சர்யசக்தி யோகத்தாலே) “எண்ணிலாப் பெருமாயனே” என்று எண்ணிறந்த ஆச்சர்யமான குணங்களையுடையவனேயென்றும், “குணங்கள் கொண்ட மூர்த்தியோர் மூவராய்ப் படைத்தளித்துக் கெடுக்கும்” என்று ஸத்வாதி குணாநுகுணமான மூர்த்திகளைக் கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணுமவ னென்றும், “பால துன்பங்க ளின்பங்கள் படைத்தாய்” என்று இடமறிந்து ஸுகதுக்கங்களைக் கல்பித்தவனேயென்றும், “ஊழிதோறூழியுருவும் பேருஞ் செய்கையும் வேறவன் வையங்காக்கும்” என்று கல்பந்தோறும் ரூப நாம சேஷ்டிதங்களை வேறாகவுடையனாய்க் கொண்டு ஐகத்தை ரஷிக்குமென்றும், “மாயா வாமனனே” என்று ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடையவனேயென்றும், “உள்ளப் பல்யோகு செய்தி” என்று திருவுள்ளத்திலே பல ரக்ஷணோபாய சிந்தைகளையும் பண்ணி நிற்றியென்றும் இப்படி பஹுவிதாகச் சொல்லப்பட்ட உபாயக்ருத்யத்துக்கு அபேக்ஷிதமான ஆச்சர்ய சக்தி யோகத்தாலே. [2] (தெளிவுற்றவர்க்கு ஏற்றரும் வைகுந்தத்தையருளும் ப்ராபகத்வம், புற்பா வெறும்பு பகைவனுக்குமாக்கவல்ல ஸர்வசக்தி) “தெளிவுற்றுவீவின்றி நின்றவர்க்கின்பக் கதி செய்யும்”, “ஏற்றரும் வைகுந்தத்தை யருளும்” என்று ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் தானே யென்றத்யவஸித்து, பின்னை நாட்டார்கள் செயல்கள் கண்டாதல் யுக்த்யாபாஸம் கொண்டாதல் பிற்காலியாதே நின்று அவர்களுக்கு நிரதிசயாநந்த யுக்தமாய் ஒருவராலும் ஸ்வயத்தத்தால் ப்ராபிக்க வொண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தைத் தன்னருளாலே கொடுக்கிற தன்னுபாயத்வத்தை “புற்பாமுதலாப் புல்லெறும்பாதி யொன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்”, “நாட்டையளித்துய்யச் செய்து” என்றும், “சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடிதாட்பாலடைந்த” என்றும் ஜ்ஞாநலேசமில்லாத திர்யக் ஸ்தாவரங்களுக்கும், ப்ராதிகூல்யத்தில் முதிர நின்ற சத்ருவுக்குமாம்படி பண்ணவல்ல ஸர்வசக்தியானவன். (பாதமகலகில்லாத தம்மை) “அடியேனுனபாதமகலகில்லேனிறையும்” என்று தன் திருவடிகளை க்ஷண காலமும் அகல சக்தரன்றியே “அடிக்கீழமர்ந்து புகுந்தேன்” என்று சரணம் புகுந்த தம்மை. [3] (அகற்றுமவற்றின் நடுவேயிருத்தக்கண்டு) “அகற்ற நீ வைத்த மாயவல்லைம் புலன்களாமவை” என்று தன் திருவடிகளைக் கிட்டாதபடி யகற்றவற்றான இந்திரியங்களின் நடுவே இவ்வுடம்பிலே யிருக்கும்படி வைக்கக்கண்டு. (நலிவான் சுமடுதந்தாய் ஓவென்று ஸாதந பலமான ஆக்ரோசத்தோடே பழியிட்டு) “நலிவானின்ன மெண்ணுகின்றாய்”, “அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்”, “விண்ணுளார் பெருமானேயோ”, “முன்பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ” என்று விளம்ப ஹேதுவில்லாத உபாயத்தைப் பரிக்ரஹித்தால் அது பலப்ரதமாந்தனையுங் கிடந்து கூப்பிடுமித்தனை யாகையாலே கீழ் தாம் பரிக்ரஹித்த உபாயத்தின் பலமாய் வந்ததாய், “கலங்காப் பெருநகரம்” கலங்கி அவனுக்கங்குக் குடியிருப்பரிதாய் வந்து விழவேண்டும்படியான ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பால் வந்த பெரிய ஆக்ரோசத்தோடே கூடிக் கொண்டு தம் தலையால் வந்தத்தையும் அவன்தலையிலே யேறிடும்படியான ப்ராப்தியை யுணர்ந்தவராகையாலே இந்த்ரியங்களையிட்டு நலிவிக்கிறாய் நீ என்று அவன் மேலே பழியிட்டு. [4] (கங்குலும் பகலுமடைவற்ற வார்த்தியைக் கோயில்திருவாசலிலே முறை கெட்ட கேள்வியாக்கி) இப்படி கூப்பிடத்தானும் க்ஷமரன்றிக்கே அவஸந்நராய்க்கொண்டு ஒரு பிராட்டி தசையையடைந்து, “கங்குலும் பகலும் கண்துயிலறியாள்”, “இட்டகாலிட்ட கைகளாயிருக்கும்”, “சிந்திக்கும் திசைக்கும்” இத்யாதிப்படியே திவாராத்ர விபாகமற, அழுவது தொழுவது மோஹிப்பது ப்ரலாபிப்பது அடைவுகெடப் பேசுவது நெடுமூச்செறிவது அதுதானும் மாட்டாதொழிவது ஸ்தப்தையாயிருப்பது இப்படி ஆர்த்தி விஞ்சிச் செல்லுகையாலே, “ஆசா சிந்தா ஸ்ம்ருதி: கீர்த்திர் விலாபோந்மாத விப்ரமா: மோஹோ வ்யாதிர் ம்ருதிச்சேதி விகாரா: காமஜா தச:” என்றாப்போலே அவஸ்த்தைகளுக்கு அடைவு பிடிக்கவொண்ணாதபடி நடக்கிற வார்த்தியை, பெரியபெருமாள் கண்வளர்ந்தருளுகிற கோயில் திருவாசலிலே பெண்பிள்ளையைப் பொகட்டுத் திருத்தாயார் கூச்சுமுறை தவிர்ந்து தானே இவள் தசையை அவர்க்குச் சொல்லி “திருவரங்கத்தாய் இவள் திறத்தென் செய்கின்றாய்”, “என் செய்திட்டாய்”, “என் சிந்தித்தாய்”, “என் செய்கேனென் திருமகட்கு” என்று அவர் தம்மையே கேட்கும்படி அத்யாவஸாதம் பிறந்து. “அடைவற்ற அரதியை” என்று பாடமானபோது, “கங்குலும் பகலும்” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே திவாராத்ர விபாகமற அழுவது தொழுவது இத்யாதிகளாலே ஆசாசிந்தாதிகளிற்போலே அவஸ்தைகளுக்கோரடைவு பிடிக்கவொண்ணாதபடி நடக்கிற அரதியையென்று யோஜிக்கவுமாம். [5] (தேற்றவொண்ணாதபடி தோற்று) “அன்னையர்காளென்னைத் தேற்ற வேண்டா”, “கண்ணபிரானுக்கென் பெண்மை தோற்றேன்” என்று பார்ச்வஸ்தராலும் தேற்றித் தரிப்பிக்கவொண்ணாதபடி அபஹ்ருத சித்தராய்க் கொண்டு பாரதந்த்ர்யத்தையு மிழந்து, (ஒன்றி நிற்கப் பண்ணின பலாதாநம் மற்றும் கற்பாரிழவிலே சுவறி) இப்படி விரஹவ்யதையாலே மிகவும் தளர்ந்திருக்கிற இவரைத் தரிப்பிக்கைகாகத் தன் விஜய பரம்பரையைக் காட்டிக் கொடுக்கக்கண்டு ப்ரீதராய், “குன்றமெடுத்த பிரானடியாரோடு மொன்றி நின்ற சடகோபன்” என்று தன் விஜயத்திலே தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களோடே பொருந்தி நிற்கும்படி பண்ணின பலாதாநமானது, “கற்பாரி ராமபிரானை யல்லால் மற்றுங் கற்பரோ” என்று அவதார ப்ரயுக்த ஸௌலப்யத்தை யுடையனாய் ப்ரியபரனுமாய் ஹிதபரனுமாய், தானங்கீகரிக்க நினைத்தாரை நிர்ஹேதுகமாக மோக்ஷபர்யந்தமாக நடத்துமவனுமாயிருக்கிற விவனையொழிய மற்றுமொரு விஷயத்தைக் கற்பரோ! இப்படி ஸுலபமான இவ்விஷயத்தை ஸம்ஸாரிகளிழப்பதே என்று அவர்களிழவை யநுஸந்தித்து அதிலே சுவறி. [6] (பழைய தனிமைக் கூப்பீடு தலையெடுத்து) “பாமருமூவுலகும் படைத்த பற்பநாபாவோ” என்று தொடங்கி, “தனியேன் தனியாளா” என்று ஒரு துணையின்றிக்கே யிருந்து அவனுடைய ஜகத்காரணத்வாதிகளைச் சொல்லிக் கூப்பிடும்படி முன்புத்தை “உண்ணிலாவியில்” கூப்பீடே மீளவும் தலையெடுத்து. (சூழவும் பகை முகஞ்செய்ய) “சூழவும் தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றும்”, “இணைக்கூற்றங்கொலோ வறியேன்”, “கண்ணன் கோளிழை வாண்முகமாய்க் கொடியேனுயிர் கொள்கின்றதே” என்று முன்பநுபவித்தவனுடைய முகாவயவ சோபையானது விசத ஸ்ம்ருதி விஷயமாய் பார்த்தவிடமெங்கும் தோன்றி நின்று நலிய. (எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க) விஜயங்களைக் காட்டித் தரிப்பித்தபோது தலைசாய்ந்தும் மீளவும் கூப்பிடும்படி தலையெடுத்தும் இப்படி எடுப்பும் சாய்ப்புமாய்ச் செல்லுகிற க்லேசம் நடவா நிற்கச்செய்தே. (உபாயாதிகார தோஷமொழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க) உபாயபூதனான உனக்கு அஜ்ஞாநாசக்திகளாகிற தோஷமின்றிக்கே யிருக்க சரணாகதனான வெனக்கு ஆகிஞ்சந்யாநந்ய கதித்வங்களும் ஆர்த்தியு முண்டாகையாலே அதிகார தோஷமின்றிக்கே யிருக்க, “பாசங்கள் நீக்கி” என்று தொடங்கி, “மாயங்கள் செய்து வைத்தி” என்று அவித்யா கர்ம வாஸநா ருசிகளை ஸவாஸநமாகப் போக்கி உனக்கு அநந்யார்ஹ சேஷமாகக் கொண்ட பின்பு ஜந்ம மரணாத் யாச்சர்யங்களை யுண்டாக்கி என்னை ஸம்ஸாரத்திலே வைத்த ஆச்சர்யத்தை யருளிச்செய்யவேணுமென்று கேட்க. [7] (ஐச்சமாக இருத்தியுறக்கொண்ட ஸ்வப்ரயோஜநத்தை யருளிச்செய்ய) அவன் “நமக்கும் நம்முடையார்க்கும் போதுபோக்காக வும்மைக்கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்கொள்ள வைத்தோங்காணும்” என்று கர்மமடியாகவன்றிக்கே தன்னிச்சையாலேயிருத்தி “உறப் பலவின் கவி” என்கிறபடியே தனக்குத்தகுதியான கவிகளைப் பாடுவித்துக்கொண்ட ஸ்வப்ரயோஜநமும் பரப்ரயோஜநமுமான வித்தை வைத்ததுக்குஹேதுவாக வருளிச்செய்ய. (என் சொல்லி யெந்நாள் பார் விண்ணீரிறப்பெதிரெதுவு மென்கிற உபகார ஸ்ம்ருதியோடே) வ்யாஸ பராசர வால்மீகி ப்ரப்ருதிகள் முதலாழ்வார்களுண்டாயிருக்கத் தம்மைக்கொண்டு கவிபாடுவித்துக்கொண்ட உபகாரத்தை யநுஸந்தித்து “என் சொல்லி நிற்பனோ”, “எந்நாள் சிந்தித்தார்வனோ”, “பார் விண்ணீர் முற்றுங்கலந்து பருகிலுமார்வனோ”, “இறப்பெதிர்காலம் பருகிலுமார்வனோ” என்று அவன் பண்ணின உபகாரத்தை யநுஸந்தித்தால் எங்ஙனே நான் தரையில் கால்பாவுவது; அவ்வுபகாரத்தை காலதத்வமுள்ளதனையுமநுஸந்தித்தாலும் பர்யாப்தனாகிறிலேன், ஸகல ஸ்தலங்களிலுமுண்டான ஸகல சேதநருடையவும் வாகாத்யுபகரணங்களை நானொருவனுமேயுடையேனுமாய் காலத்ரயத்திலும் பேசியநுபவித்தாலும் த்ருப்தனாவேனோ! “உதவிக் கைம்மாறு” என்று தொடங்கி, “எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” என்று இதுக்கு ப்ரத்யுபகாரமாக ஆத்மஸமர்ப்பணத்தைப் பண்ணுவோமென்னில் அதுவும் ததீயமாயிருக்கையாலே உபய விபூதியிலும் செய்யலாவதொன்றில்லை யென்னும்படியான உபகாரஸ்ம்ருதியோடே கூடிக்கொண்டு. [8] (தன் சரிதை கேள்வியாகாமல் இன்பம் பயக்கவிருந்த நிலத்தேவர்குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக காந கோஷ்டியையும் தேவபிரானறிய மறந்தவர்) “செம்பவளத்திரள்வாய் தன் சரிதை கேட்டான்” என்கிறபடியே பிராட்டியையொழிய பெருமாள் தனியிருந்தவிருப்பிலே குசலவர்கள் ஸ்ரீராமாயணம் கேட்பித்தாப்போலன்றிக்கே, “இன்பம் பயக்க வெழில்மலர் மாதருந்தானு மிவ்வேழுலகை யின்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து” என்று ஆநந்தமயனான தனக்கும் ஆநந்தவர்த்தகையான பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே லோகமடங்க வாழும்படி உபய விபூதி நாதத்வத்தால் வந்த வேறுபாடு தோற்றவெழுந்தருளியிருந்த “நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தைமகிழ் திருவாறன்விளை”யில் அந்தபூஸுரரான ஸ்ரீவைஷ்ணவர்கள் திரளிலே ப்ரத்யுபகாரமாகத் திருவாய்மொழி கேட்ப்பித்தடிமை செய்யப்பா(ரி)ர்த்து, திருவாறன்விளையிலே பரத்வவிமுகமாம்படி தம் நெஞ்சு ப்ரவணமாகையாலே “திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின் சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாத் தன்மை தேவபிரானறியும்” என்று பகவதநுபவ ஜநித ஹர்ஷத்துக்குப் போக்குவீடாக “ஹாவு ஹாவு ஹாவு” என்று ஸாமகாநம் பண்ணும் பரமபதத்தில் கோஷ்டியையும், ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனாய் நினைவுக்கு வாய்த்தலையிலே யிருந்து எல்லாருடைய நினைவுமறியும் அயர்வறுமமரர்க ளதிபதியறிய விஸ்மரித்தவர். [9] (சரமோபாய பரரானார்க்கு) கீழ்த்தாமருளிச்செய்யக் கேட்ட ஸித்த ஸாதநத்திலே தத்பரரானவர்களுக்கு. (நீணகரமது துணித்தான் சரணன்றி மற்றொன்றில முள்ளித்தொழுமினென்று ப்ராப்ய ஸாதநாவதியை ப்ரீதியாலே ப்ரகாசிப்பிக்கிறார் ஏழாம்பத்தில்) அதாவது “நீணகரமதுவே மலர்ச்சோலைகள் சூழ் திருவாறன்விளை வாணனையாயிரந்தோள் துணித்தான் சரணன்றி மற்றொன்றிலம்”, “உள்ளித் தொழுமின் தொண்டீர்” என்று நிரதிசய போக்யமான திருவாறன்விளையாகிற மஹாநகரமே ப்ராப்யம்; அங்கெழுந்தருளி நிற்கிற உஷாநிருத்த கடகனானவனே அந்த ப்ராப்யத்துக்கு ப்ராபகம். இவ்வர்த்தத்தில் மாறாட்டமில்லை ஆகையால் இவ்வர்த்தத்தில் ருசியுடையீர் புத்திபண்ணுங்கோள் என்று ப்ராப்யத்தினுடைய அவதி ததீயவிஷயமென்றும் ப்ராபகத்தினுடைய அவதி அர்ச்சாவதார ஸுலபனானவனே யென்று மிவ்வர்த்தத்தை தம்முடைய உகப்பாலே வெளியிட்டருளுகிறார் ஏழாம் பத்திலென்கை.

– (எண்ணிலா) - திருவாய்மொழி (7-1-1) - எண்ணிலாப் பெருமாயனே – என்று “எண்ணற்றதும் வியக்கவைப்பதும் ஆகிய திருக்கல்யாணகுணங்கள் கொண்டவனே” என்றும், (குணங்கள்) – திருவாய்மொழி (7-1-11) – குணங்கள் கொண்ட மூர்த்தியோர் மூவராய்ப் படைத்தளித்துக் கெடுக்கும் – என்று “ஸத்வம் முதலான குணங்களுக்கு ஏற்றபடி உள்ள மூர்த்திகளைக் கொண்டு ஸ்ருஷ்டி முதலானவற்றைச் செய்பவன்” என்றும், (பால துன்பம்) - திருவாய்மொழி - (7-2-7) - பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் – என்று “தகுந்த இடம் அறிந்து இன்ப துன்பங்களை ஏற்படுத்தி வைத்தவனே” என்றும், (வேறவன்) – திருவாய்மொழி (7-3-11) – ஊழிதோறூழியுருவும் பேருஞ் செய்கையும் வேறவன் வையங்காக்கும் – என்று “ஒவ்வொரு கல்பத்திலும் திருமேனி, திருநாமம் மற்றும் செயல்கள் ஆகியவற்றை வெவ்வேறாகக் கொண்டவனாய் இருந்து இந்த ஜகத்தைக் காப்பவன்” என்றும், (மாயா) - திருவாய்மொழி (7-8-7) – மாய வாமனனே – என்று “வியக்கவைக்கும் செயல்கள் பொருந்தியவனே” என்றும், (பல்யோகு செய்தி) - திருவாய்மொழி (7-8-4) - உள்ளப் பல்யோகு செய்தி – என்று “தனது திருவுள்ளத்தில் பலவிதமான காப்பாற்றும் உபாயங்கள் குறித்து எப்போதும் சிந்தித்தபடி இருப்பவன்” என்றும், (என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே) - இவ்விதம் பலவிதமாக உரைக்கப்பட்ட உபாயங்களைச் செய்ய வேண்டியதற்கான வியக்கத்தக்க சக்தி கொண்டுள்ளதால். (தெளிவுற்றவர்க்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் ப்ராபகத்வம்) - திருவாய்மொழி (7-5-11) - தெளிவுற்றுவீவின்றி நின்றவர்க்கின்பக் கதி செய்யும் – என்றும், திருவாய்மொழி (7-6-10) - ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப “உபாயம் மற்றும் பேறு ஆகிய இரண்டும் அவனே ஆவான்” என்று எப்போதும் தன்னைக் குறித்து எண்ணியபடி உள்ளவர்களுடைய செயல்களைக் கண்டோ அல்லது மற்ற தாழ்ந்த யுக்திகளைக் கண்டோ அவன் பின்வாங்காமல், அவர்கள் விஷயத்தில் உறுதியுடன் நின்று அவர்களுக்கு, “இதனைக் காட்டிலும் உயர்ந்த ஆனந்தம் எதும் இல்லை என்பதாக உள்ளதும், யாராலும் தங்களுடைய முயற்சியால் அடைய இயலாததும்” ஆகிய ஸ்ரீவைகுண்டத்தைத் தனது க்ருபை காரணமாக அளிப்பதான தனது உபாயம் என்ற தன்மையை. (புற்பா எறும்பு பகைவனுக்கு ஆக்கவல்ல ஸர்வசக்தி) - திருவாய்மொழி (7-5-1) - புற்பாமுதலாப் புல்லெறும்பாதி யொன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன் - என்றும், திருவாய்மொழி (7-5-2) - நாட்டையளித்துய்யச் செய்து – என்றும், திருவாய்மொழி (7-5-3) - சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடிதாட்பாலடைந்த – என்றும் கூறுவதற்கு ஏற்ப ஞானம் என்பது சிறிதளவும் இல்லாத விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும், விரோதத்தில் எப்போது நிற்கின்ற பகைவர்களுக்கும் கூடக் கிட்டும்படியாகச் செய்யவல்ல அனைத்து சக்திகளையும் கொண்டவன். (பாதம் அகலகில்லாத தம்மை) – திருவாய்மொழி (6-10-9) – அடியே உனபாதம் அகலகில்லேன் இறையும் - என்று ஸர்வேச்வரனாகிய தனது திருவடிகளை விட்டு ஒரு நொடிப்பொழுது கூட அகல்கின்ற சக்தி இல்லாதவராக, திருவாய்மொழி (6-10-10) - அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் – என்று சரணம் புகுந்த நம்மாழ்வாராகிய தன்னை. – திருவாய்மொழி (5-7-8) - அகற்ற நீ வைத்த மாயவல் ஐம்புலன்களாம் அவை - என்று ஸர்வேச்வரனாகிய தன்னுடைய திருவடிகளை அடையவிடாமல் அகற்றுக் கூடியதான இந்த்ரியங்களின் பிடியில் இந்தச் சரீரத்தை இருக்கும்படியாக அவன் வைக்க. (கண்டு) - இந்த நிலையைப் பார்த்து. (நலிவான்) – திருவாய்மொழி (7-1-1) – நலிவான் இன்ன மெண்ணுகின்றாய் - என்றும், (சுமடு தந்தாய்) - திருவாய்மொழி (7-1-10) – அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய் – என்றும், (ஓவென்று) – திருவாய்மொழி (7-1-5) - விண்ணுளார் பெருமானேயோ - என்றும், திருவாய்மொழி (7-1-10) - முன்பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ – என்றும் கூறுவதற்கு ஏற்ப, (ஸாதன பலமான ஆக்ரோசத்தோடே பழியிட்டு) – “தாமதம் ஆவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லாத உபாயத்தைப் பற்றினால், அது பலன் அளிக்கும் காலம் முடிய அழைத்தபடி இருக்க வேண்டும் அல்லாமல் செய்யவேண்டியது வேறு ஏதும் இலை என்பதால், தான் கைக்கொண்ட உபாயத்தின் பலனாக விளைந்ததாக உள்ளதும்” மற்றும் “கலங்காப் பெருநகரம் என்பதான பரமபதமும் கலங்கி, அவனுக்கு அங்கு அதற்கு மேலும் தங்க இயலாதபடி செய்து, இங்கு ஓடி வந்து தன் மீது விழவேண்டும்படியாக, இந்த ஸம்ஸாரம் என்பதில் உள்ளதால் ஏற்பட்ட அடிக்கொதிப்பால் விளைந்த பெரிய கூக்குரலுடன் கூடியபடி உள்ள தனது தலையால் ஏற்பட்டதும்” ஆகிய நிலையை அவன் மீது ஏறிடும்படியான ஸம்பந்தத்தை உணர்ந்தவர் என்பதால், “இந்த்ரியங்கள் மூலம் நீ என்னைத் துன்புறுத்துகிறாய்”, என்று அவன் மீது பழி சுமர்த்தி. (கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை) - இவ்விதம் கூக்குரல் இட்டு அழைப்பதற்குச் சக்தியின்றி துன்பம் அடைந்தவராக நின்று, ஒரு பிராட்டியின் நிலையை அடைந்து, திருவாய்மொழி (7-2-1) - கங்குலும் பகலும் கண்துயிலறியாள் - என்றும், திருவாய்மொழி (7-2-4) - இட்டகாலிட்ட கைகளாயிருக்கும் – என்றும், திருவாய்மொழி (7-2-5) – சிந்திக்கும் திசைக்கும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப பகல் மற்றும் இரவு என்ற வேறுபாடு அறியாமல், “அழுதல், தொழுதல், மயக்கம் அடைதல், புலம்புதல், முறையின்றிப் பேசுதல், பெருமூச்சுவிடுதல், அதனையும் செய்ய இயலாமல் இருத்தல், செயலற்றுக் கிடத்தல்” போன்ற அனைத்தையும் துன்பத்தின் மிகுதி காரணமாக அடைவதால். அதாவது, ஆசா சிந்தா ஸ்ம்ருதி: கீர்த்திர் விலாபோந்மாத விப்ரமா: மோஹோ வ்யாதிர் ம்ருதிச்சேதி விகாரா: காமஜா தச: - ஆசை, சிந்தை, நினைவு, பேச்சு, அழுகை, பித்துப்பிடித்தல், மயக்கம், தடுமாற்றம், நோய், இறப்பு என்று கூறப்படும் பத்து மாற்றங்களும் காமத்தால் ஏற்படுபவை ஆகும் - என்பதற்கு ஏற்ப இவன் அடைகின்ற நிலை மாறுபாடுகளுக்கு எந்தவிதமான எல்லையும் காண இயலாதபடி உள்ள துன்பமான நிலையை அல்லது துன்பத்தை. (கோயில் திருவாசலிலே முறை கெட்ட கேள்வியாக்கி) - பெரியபெருமாளாகிய ஸ்ரீரங்கநாதன் திருக்கண் வளர்ந்தருளுகிற திருவரங்கம் பெரியகோயிலின் திருவாசலில் தனது பெண்ணைக் கொண்டு வந்து கிடத்தி, அவளுடைய திருத்தாயார் தன்னுடைய கூச்சங்கள் அனைத்தையும் விலக்கி தானே தனது பெண்ணின் நிலையை அரங்கனுக்கு உரைத்து, திருவாய்மொழி (7-2-1) - திருவரங்கத்தாய் இவள் திறத்தென் செய்கின்றாய் - என்றும், திருவாய்மொழி (7-2-3) - என் செய்திட்டாய் - என்றும், திருவாய்மொழி (7-2-4) - என் சிந்தித்தாய் – என்றும், திருவாய்மொழி (7-2-8) – என் செய்கேன் என் திருமகட்கு – என்றும் அரங்கனையே கேட்கும்படியான மிகவும் பெரிய துன்பத்தை அடைந்து. இங்குள்ள “அடைவற்ற ஆர்த்தியை” என்பதை “அடைவற்ற அரதியை” என்று கொண்டால், திருவாய்மொழி (7-2-1) – கங்குலும் பகலும் - என்பது போன்ற பாசுரங்களில் கூறப்பட்டபடி, பகல் மற்றும் இரவு என்ற வேறுபாடு அறியாமல், அழுதல் மற்றும் தொழுதல் போன்றவற்றால், “ஆசை, சிந்தை” என்ற ப்ரமாணத்தால் கூறப்பட்டது போன்று, இவள் அடையும் நிலைகளுடைய மாறுபாடுகளுக்கு ஒரு எல்லை காண இயலாதபடி நடக்கின்ற துன்பத்தை என்று கூறலாம். (நேற்ற ஒண்ணாதபடி தோற்று) – திருவாய்மொழி (7-3-9) - அன்னையர்காளென்னைத் தேற்ற வேண்டா - என்றும், திருவாய்மொழி (7-3-5) – கண்ணபிரானுக்கென் பெண்மை தோற்றேன் – என்றும் கூறுவதற்கு ஏற்ப அருகில் உள்ளவர்களாலும் தேற்றிப் பிழைக்க வைக்க இயலாதபடி அவன் விஷயத்தில் தனது உள்ளத்தைப் பறி கொடுத்தவராக உள்ளதால் அவன் பக்கம் வசப்பட்டு நிற்பதையும் மறந்து. (ஒன்றி நிற்கப் பண்ணீன பலாதாநம்) - இவ்விதம் பிரிவாற்றாமை காரணமாக மிகவும் தளர்ந்து நிற்கும் நம்மாழ்வாரைக் காப்பாற்ற, தனது வெற்றி மிகுந்த செயல்களைக் காண்பித்தான். அதனைக் கண்டு மகிழ்ந்தவராக, திருவாய்மொழி (7-4-11) – குன்றமெடுத்த பிரானடியாரோடு மொன்றி நின்ற சடகோபன் - என்று தனது வெற்றிச் செயல்கள் கண்டு அவற்றில் தங்களை இழந்து நிற்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுடன் பொருந்தியவராகத் தன்னை அவன் வைத்த வலிமையானது, (மற்றும் கற்பார் இழவிலே சுவறி) - திருவாய்மொழி (7-5-1) – கற்பார் இராமபிரானை யல்லால் மற்றுங் கற்பரோ – என்பதற்கு ஏற்ப திருஅவதாரத்தால் உண்டான எளிமையைக் கொண்டவனாக, ஸர்வேச்வரனாகிய தான் அங்கீகரிக்க எண்ணியவர்களை எந்த ஒரு காரணத்தையும் எதிர்பாராமல் ஸ்ரீவைகுண்டம் முடிய தானாகவே வழி நடத்துபவனாக உள்ள அவனை அல்லாமல் வேறு ஏதேனும் ஒரு வஸ்துவைக் குறித்துக் கற்பார்களோ! இவ்விதம் மிகவும் சுலபமக உள்ள இவனை இந்த ஸம்ஸாரத்தில் உள்ளவர்கள் இழந்து நிற்கிறார்களே என்று இவர்களுடைய இழப்பை எண்ணுவதால் அதிலேயே நிலைதடுமாறி. (பழைய தனிமைக் கூப்பீடு தலையெடுத்து) - திருவாய்மொழி (7-6-1) – பாமருமூவுலகும் படைத்த பற்பநாபாவோ - என்று தொடங்கி, திருவாய்மொழி (7-6-1) - தனியேன் தனியாளா - என்பது முடிய உள்ள வரிகளில், தான் எந்தவிதமான துணையும் இல்லாமல், அவனுடைய “இந்த ஜகத்தின் காரணமாக இருத்தல்” முதலான பல தன்மைகளை உரைத்து அழைக்கும்படி, முன்பு திருவாய்மொழி (7-1-1) – உண்ணிலாவிய – என்பதில் அழைத்த அழைப்பு என்பதே மீண்டும் தலைதூக்கி. (சூழவும் பகைமுகம் செய்ய) – திருவாய்மொழி (7-7-1) - சூழவும் தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றும் - என்றும், திருவாய்மொழி (7-7-1) – இணைக்கூற்றங்கொலோ வறியேன் – என்றும் திருவாய்மொழி (7-7-8) - கண்ணன் கோளிழை வாண்முகமாய்க் கொடியேனுயிர் கொள்கின்றதே – என்றும் கூறுவதற்கு ஏற்ப முன்பு அனுபவித்தவனுடைய திருமுகத்தின் ஒளியானது தெளிவாக உள்ள நினைவிற்கு விஷயமாக நின்று, பார்க்கின்ற இடங்கள் அனைத்திலும் தென்பட்டு நின்று துன்புறுத்த. (எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க) - தனது வெற்றிச் செயல்களைக் காண்பித்து இதுவரைக் காத்தபோது தலைசாய்ந்தும், மீண்டும் அழைக்கும்படியான நிலை ஏற்பட்டும் என இப்படியாக மேலே எழுவதும் விழுவதும் என்று உள்ள துன்பமானது உள்ளபோது. (உபாய அதிகார தோஷம் ஒழிய) – உபாயமாக உள்ள உனக்கு அஜ்ஞானம், சக்தி இன்மை முதலான தோஷங்கள் இல்லாமல் உள்ளபோதிலும்; உன்னைச் சரணம் புகுகின்ற எனக்குக் கைம்மாறு இல்லாமை, வேறு கதி இல்லாமை மற்றும் ஸம்ஸார துன்பம் ஆகியவை உள்ளதால் தகுதி இன்மை என்ற தோஷம் இல்லாமல் நான் உள்ளபோதிலும். (மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க) - திருவாய்மொழி (7-8-5) - பாசங்கள் நீக்கி - என்று தொடங்கி, திருவாய்மொழி (7-8-5) - மாயங்கள் செய்து வைத்தி - என்று கூறுவதற்கு ஏற்ப அவித்யை, கர்மங்கள், வாசனை மற்றும் ருசிகள் ஆகியவற்றை அடியுடன் விலக்கி, உனக்கு மட்டுமே என்னை அடிமையாகக் கொண்ட பின்னர், பிறப்பு மற்றும் இறப்பு முதலான வியப்புகளை ஏற்படுத்தி, என்னை எந்த ஸம்ஸாரத்தில் தொடந்து நிறுத்தி வைப்பதற்கான காரணம் என்ன என்று அருளிச் செய்யவேண்டும் என வியந்து கேட்க. (ஐச்சகமாக இருத்தி) - ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் பொழுது போகவேண்டும் என்ற காரணத்திற்காகவே உம்மைக் கொண்டு இந்தத் திருவாய்மொழியைப் பாடும்படியாகச் செய்தோம். அதன் காரணமாகவே உம்மை இந்த ஸம்ஸாரத்தில் நிறுத்தினோம்”, என்று கூறினான்; அதாவது கர்மம் காரணமாக நிறுத்தாமல், தனது இச்சை காரணமாக நிறுத்தி. (உறக்கொண்ட) – திருவாய்மொழி (7-9-9) – உறப் பலவின் கவி - என்பதற்கு ஏற்ப தனக்குத் தகுதியான உள்ள கவிகளைப் பாடும்படிச் செய்த. (ஸ்வ பர ப்ரயோஜநத்தை அருளிச்செய்ய) - தனது பயனும், மற்றவர்களுக்குப் பயனும் என்பதான திருவாய்மொழியை இந்த உலகில் வைத்ததற்கு காரணமாக அருளிச்செய்ய. (என் சொல்லி எந்நாள் பார் வீண்ணீர் இருப்பு எதிர்) - வேதவ்யாஸர், பராசரர், வால்மீகி போன்ற பல மஹரிஷிகள் உள்ளபோதிலும், முதலாழ்வார்கள் உள்ளபோதிலும், தன்னைக் கொண்ட கவி பாடும்படியாகச் செய்த உபகாரத்தை எண்ணியபடி, திருவாய்மொழி (7-9-2) - என் சொல்லி நிற்பனோ, திருவாய்மொழி (7-9-7) - எந்நாள் சிந்தித்தார்வனோ, திருவாய்மொழி (7-9-8) - பார் விண்ணீர் முற்றுங்கலந்து பருகிலுமார்வனோ, திருவாய்மொழி (7-9-9) – இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ - என்றும் உள்ள பாசுரங்களில், “அவன் செய்த உபகாரங்களை எண்ணினால் நான் எனது கால்களைத் தரையில் எப்படி வைப்பேன், அந்த உபகாரத்தை எண்ணினால் காலதத்வம் உள்ளது முடியவும் நிறைவு பெறாமல் உள்ளேன். அனைத்து இடங்களிலும் உள்ள அனைத்து மனிதர்களுடைய வாக்கு முதலான உறுப்புக்களை நான் ஒருவன் மட்டுமே பெற்றவன் என்றாகி, மூன்று காலங்களிலும் பேசி அனுபவித்தாலும் கூட மனநிறைவு அடைவேனோ?” என்கிறார். (ஏதும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே) - திருவாய்மொழி (7-9-10) – உதவிக் கைம்மாறு – என்று தொடங்கி, திருவாய்மொழி (7-9-10) - எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே - என்பது முடிய உள்ள வரிகளில் கூறுவதற்கு ஏற்ப, இதற்குக் கைம்மாறாக நம்முடைய ஆத்மாவை அவனுக்குச் சமர்ப்பணம் செய்துவிடுவோம் என்றால், அதுவும் அவனுடைய உடைமையாக உள்ளது; ஆகவே நித்யவிபூதி மற்றும் லீலாவிபூதி ஆகிய இரண்டிலும் செய்யத்தக்க கைம்மாறு ஏதும் இல்லை என்று தீர்மானித்து, “செய்ந்நன்றி அறிதல்” என்பதை மனதில் நிலைநிறுத்தி. (தன் சரிதை கேள்வி ஆகாமல்) - பெருமாள் திருமொழி (10-8) - செம்பவளத்திரள்வாய் தன் சரிதை கேட்டான் - என்பதற்கு ஏற்ப சீதை இன்றி இராமன் தனித்து நின்ற காலத்தில் குசலவர்கள் அவனை இராமாயணம் கேட்கும்படிச் செய்தது போன்று அல்லாமல், (இன்பம் பயக்க இருந்த) - திருவாய்மொழி (7-10-1) - இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து - என்று ஆனந்தமயனாக பெரியபிராட்டியும் தானுமாக உள்ள சேர்த்தி நிலையில், அனைத்து லோகங்களும் வாழும்படியாக, “இரண்டு விபூதிகளுக்கும் நாதன்” என்று வேறுபாடு வெளிப்படும்படியாக எழுந்தருளியிருந்த. (நிலத்தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக) - திருவாய்மொழி (7-10-10) - நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தைமகிழ் திருவாறன்விளை - என்பதற்கு ஏற்ப உள்ள திருவாறன்விளையில் இந்தப் பூமியின் தேவர்களாகிய ஸ்ரீவைஷ்ணவர்கள் கூட்டத்தில், அவனுக்குக் கைம்மாறாகத் திருவாய்மொழியைக் கேட்கும்படிச் செய்து, இவ்விதமாக அடிமை செய்ய முனைந்து. (காந கோஷ்டியையும் தேவபிரான் அறிய மறந்தவர்) - பரமபதத்தில் அவன் உள்ள தன்மையில் சிந்தை செய்யாதபடியாக திருவாறன்விளையில் மட்டுமே தனது நெஞ்சம் ஈடுபட்டதால், திருவாய்மொழி (7-10-10) – திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின் சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாத் தன்மை தேவபிரானறியும் - என்பதற்கு ஏற்ப பகவத் அனுபவத்தால் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு வெளிப்படும்படியாக, “ஹாவு ஹாவு ஹாவு” என்று ஸாமகானம் செய்தபடி உள்ள பரமபதத்தில் உள்ள கூட்டத்தைக் கூட, இயல்பாகவே அனைத்தும் அறிந்தவனும் நினைவுகள் தோன்றும் இடத்தில் நின்றபடி இருந்து அனைவருடைய நினைவுளையும் அறிபவனும் ஆகிய அயர்வறும் அமரர்கள் அதிபதி அறியும்போதே மறந்தவர். (சரமோபாய பரரானார்க்கு) - இதுவரை தான் அருளிச்செய்ததான ப்ரபத்தி குறித்துக் கேட்டு, அதில் ஈடுபட்டு நிற்பவர்களுக்கு, (நீணகரமது துணித்தான் சரணன்றி மற்றொன்றில) – திருவாய்மொழி (7-9-7) – நீணகரமதுவே மலர்ச்சோலைகள் சூழ் திருவாறன்விளை வாணனையாயிரந்தோள் துணித்தான் சரணன்றி மற்றொன்றிலம் - என்றும், (உள்ளித் தொழிமின் என்று) - திருவாய்மொழி (7-9-6) – உள்ளித் தொழுமின் தொண்டீர் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, எல்லையற்ற இனிமை பொருந்தியதான திருவாறன்விளை என்னும் உயர்ந்த இடமே அடையத்தக்க பேறாகும்; அங்கு எழுந்தருளியுள்ளவனும், உக்ஷை மற்றும் அநிருத்தனைச் சேர்த்து வைத்தவனும் ஆகிய க்ருஷ்ணனே அந்தப் பேற்றை அடைவதற்கு வழியாவான். இந்தக் கருத்தில் எந்தவிதமான மாறுபாடும் இல்லை. ஆகவே இந்தக் கருத்தில் ருசியைக் கொண்டவர்கள், உங்கள் புத்தியில் இதனை நிறுத்துங்கள் என்று. (ப்ராப்ய ஸாதநாவதியை ப்ரீதியாலே ப்ரகாசிப்பிக்கிறார் ஏழாம்பத்தில்) - பேற்றினுடைய எல்லை நிலம் என்பது அவனுடைய ஸம்பந்தம் கொண்ட விஷயம் என்றும், உபாயத்தின் எல்லை நிலம் என்பது அர்ச்சாவதாரமாக எளிதில் அடையலாம்படி நிற்கும் அவனே என்றும் உள்ள இந்தக் கருத்துக்களை, தன்னுடைய அளவற்ற மகிழ்வு காரணமாக ஏழாம் பத்தில் வெளியிட்டார்.