Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 224)

நான்காம் ப்ரகரணம்

[1] என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மினென்று கருணையாலே “ஸர்வலோக பூதேப்ய:” என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல் வெட்டாக்குகிற சரண்யன் [2] அஜ்ஞாநாசக்தி யாதாத்ம்ய ஜ்ஞாநங்களளவா லன்றிக்கே அங்குற்றேன் என்னான்புணரா யென்னும்படி மெய்யமர் பக்திபூம பலமாகவும் அநந்ய கதித்வமுடைய தமக்குப் [3] பாதமே சரணாக்க அவையே சேமங்கொண்டு ஏகசிந்தையராய் திர்யக்குக்களையிட்டு ஸ்வாபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம் உபாயத்தாலேயழிய, [4] உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே ஸப்ரகாரமாக ஸக்ருத் கரணீயமென்று புராண பெளராணிகர் த்யாஜ்யாம்சமாக்கின [5] சிதசித் ப்ராப்ய ப்ராபகாபாஸங்களைக் கைவலிந்து கைகழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாதகன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷமாக்கியும், புறத்திட்டுக் காட்டியென்று, ப்ரஸங்கிக்கில் முடியும்படிவிட்டு, [6] தந்தை தாய் உண்ணுஞ்சோறு மாநிதி பூவையாவையு மொன்றேயாக்கி, [7] தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ வென்னுமார்த்தியோடே [8] திரிவிக்கிரமனாகக் குறள் கோலப்பிரானாய் அடியை மூன்றையிரந்த வன் கள்வன் கண்முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தடவந்த தடந்தாமரைகளை [9] இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும்படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு அகலகில்லேனென்று பூர்வவாக்யமநுஸந்தித்தவர், [10] பிணக்கறத் தொடங்கி வேதப்புனிதவிறுதி சொன்ன ஸாத்யோபாய ச்ரவண ஸசோக ஸஜாதீயர்க்கு, [11] தந்தனன் மற்றோர் களைகணிலம் புகுந்தேனென்று ஸ்வஸித்தோபாய நிஷ்டையை உக்த்யநுஷ்டாநங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில்.

ஆறாம்பத்தால், தன்னுடைய பரம க்ருபையாலே ஸர்வரும் வந்து ஆச்ரயிக்கும்படியிருக்கிற ஸர்வ சரண்யனான ஸர்வேச்வரன் பக்தி பாரவச்யத்தாலே அநந்யகதிகளான தமக்குத் தன் திருவடிகளையே நிரபேக்ஷோபாயமாகக் காட்டிக் கொடுக்க, அவ்வுபாயத்திலே விச்சேதமில்லாதபடி நடக்கிற வ்யவஸாயத்தையுடையராய் தம்முடைய வ்யவஸாயத்தை கடக முகத்தாலே யிவனுக்கறிவித்து வரவு தாழ்க்கையாலே தமக்கு விளைந்த ப்ரணயரோஷத்தை யவன் பரிஹரிக்க அவன் ஸாமர்த்யத்தை யநுஸந்தித்து குணாநுபவத்துக்குப் பண்ணின ப்ரபத்தியும் பலித்தவாறே ப்ராப்திக்கு ப்ரபத்தி பண்ணுவதாகக் கோலி, ஸித்தோபாயவரணம் இதர பரித்யாக பூர்வகமாகையாலே பௌராணிக வசந ப்ரக்ரியையாலே உபாய விரோதிகளான த்யாஜ்யாம்சங்களை ஸவாஸநமாக தத் ப்ரஸங்கமும் அஸஹ்யமாம்படி விட்டு, விட்டவையெல்லாம் தமக்குப் பற்றுகிற விஷயமேயாக நினைத்து பரமார்த்தியோடே தமக்குபாயமாக நினைத்திருக்கும் திருவுலகளந்தருளின் ஸர்வஸுலபமான திருவடிகளை நித்யஸூரிகளும் வந்து அனுபவிக்கும்படி நிற்கிற திருமலையிலே கண்டு கொண்டு, பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே சரணம் புக்கவர் “பத்துடையடியவ”ரிலே தொடங்கி, அஞ்சாம் பத்தளவாக உபதேசித்த பக்த்யுபாயத்தின் துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தாநத்தாலே சோகம் ஜநிக்கும்படியான பாகம் பிறந்தவர்களுக்கு, தம்முடைய ப்ரபத்தி நிஷ்டையை ப்ரகாசிப்பிக்கிறாரென்கிறார்.

– ஆறாம் பத்தால் கூறுவது என்ன? ஸர்வேச்வரன் தன்னுடைய உயர்ந்த கருணை காரணமாக அனைவரும் வந்து தன்னைச் சரணம் என்று புகுந்து நிற்கலாம்படி உள்ளான். பக்தியின் பரவசம் காரணமாக வேறு எந்த ஒரு புகலிடமும் இல்லாத நம்மாழ்வாருக்கு, தனது திருவடிகளை, வேறு எதனையும் எதிர்பாராத உபாயமாகக் காட்டிக் கொடுத்தான். அப்படிப்பட்ட உபாயத்திலிருந்து தனக்கு எந்தவிதமான மாறுபாடும் ஏற்படாமல் நம்மாழ்வார் இருந்தார். தனது அத்தகைய நிலையை தூது மூலம் அவனுக்கு அறிவித்தார். ஆனால் அவன் வராமல் காலம் தாழ்ந்தினான். இதன் காரணமாக ப்ரணய தோஷம் கொண்டராக நின்ற ஆழ்வாருடைய ப்ரணய தோஷத்தை, அவன் விலக்கினான். இவ்விதம் விலக்கிய அவனுடைய சாமர்த்தியத்தை எண்ணியபடி, ஐந்தாம் பத்தில் அவனுடைய திருக்கல்யாண குணங்களை எப்போதும்அனுபவித்தபடி இருத்தல் வேண்டும் என்று செய்த ப்ரபத்தியானது பலித்தது. அதனைத் தொடர்ந்து அவனை அடைதல் என்ற பேற்றுக்கு ப்ரபத்தி செய்யவேண்டும் என்று தீர்மானித்தார். இவ்விதம் பேற்றுக்கான ப்ரபத்தியைச் செய்யவேண்டும் என்றால், அதற்கு முன்பாக மற்ற விஷயங்கள் குறித்த ஈடுபாடுகள் அனைத்தையும் துறக்கவேண்டும் என்பதால், புராணங்களை நன்றாக அறிந்தவர்களுடைய சொற்களின்படி, ப்ரபத்திக்கு விரோதிகளாக உள்ளவையும் துறப்பதற்கு ஏற்றவையும் ஆகிய அனைத்தையும் அவற்றின் வாசனைகளுடன் துறந்தார். துறந்தவை அனைத்தும் தமக்குப் பற்றுகின்ற விஷயமேயாக எண்ணி மிகுந்த துக்கத்துடன், தனக்கு ஏற்ற உபாயமாக எண்ணியுள்ளதும், அனைத்து லோகங்களையும் அளந்ததும், எளிதில் அடையலாம்படி உள்ளதும் ஆகிய அவன் திருவடிகளை, நித்யஸூரிகளும் வந்து நின்று அனுபவிக்கலாம்படியாக உள்ள திருவேங்கடத் திருமலையில் கண்டார். உடனே, த்வய மந்திரத்தின் முதல் வாக்கியம் கொண்டு சரணம் புகுந்தார். இவ்விதம் சரணம் புகுந்தவர், திருவாய்மொழி (3-1) – பத்துடை அடியவர் - என்பதில் தொடங்கி, ஐந்தாம் பத்து முடிய உள்ள அனைத்திலும் உபதேசித்த பக்தி உபாயத்தின் “செய்வதற்கு மிகவும் கடினமானது” என்ற நிலை ஏற்பட்டவர்களுக்கு, தனது ப்ரபத்தி நிஷ்டையை ஆறாம் பத்து மூலம் வெளிப்படுத்துகிறார்.

(என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மினென்று கருணையாலே “ஸர்வலோக பூதேப்ய:” என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல் வெட்டாக்குகிற சரண்யன்) “ஏறு சேவகனார்க் கென்னையுமுள்ளென்மின்களே” என்று ஆர்த்த ரக்ஷணத்திலே தீக்ஷித்திருக்கிறவனுக்கு ரஷ்ய வர்க்கத்திலே நானுமொருத்தியுள்ளென்று சொல்லுங்கோளென்றும், “திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான் வரங்கொள் பாதமல்லாலில்லை யாவர்க்கும் வன் சரணே” என்று திருவிண்ணகரிலே நின்றருளினவன் திருவடிகளல்லது ஸர்வர்க்கும் வலிய புகலில்லையென்றும், “வன்சரண் சுரர்க்காய்” என்று தேவர்களுக்கு வலிய ரக்ஷகனாயென்றும், “அடிக்கீழமர்ந்து புகுந்தடியீர் வாழ்மி னென்றென்றருள் கொடுக்கும்” என்று நமக்கு சேஷபூதராயுள்ளாரெல்லாரும் நம்மடிகளின் கீழே அநந்யப்ரயோஜநராய்ப் புகுந்து உஜ்ஜீவியுங்கோளென்றென்று தன்னருளைப் பண்ணாநிற்குமென்றுஞ் சொல்லுகிறபடியே, தன்னுடைய க்ருபையாலே “ஸர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷண முபஸ்திதம்” என்று வந்து சரணாகதனான ஸ்ரீவிபீஷணாழ்வான் ஸர்வலோக சரண்யனென்ற உக்தி ஸமுத்ர கோஷம் போலே நிரர்த்தமாகாதபடியாகவும், “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே அபயம் ஸர்வபூதேப்ய: ததாம்யேதத் வ்ரதம் மம” என்று சரணாகத ரக்ஷணத்திலே தீக்ஷிதனாய் சரண்யனான தான் சொன்ன உக்தி கண்டாது பரியாகாதபடியாகவும் “வானவர் கோனொடும் நமன்றெழுந் திருவேங்கடம்” என்றும், “எழுவார் விடைகொள்வாரீன் துழாயானை வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார் வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடம்” என்றும், “போதறிந்து வானரங்கள்”, “கண்டு வணங்கும் களிறு” என்றும் நித்யஸூரிகள், நித்யஸம்ஸாரிகள், ப்ரயோஜநாந்தரபரர், அநந்யப்ரயோஜநர், மநுஷ்யர், திர்யக்குகள் என்கிற வாசியற ஆச்ரயிக்கலாம்படி ஸர்வ ஸமாச்ரயணீயனாய் நிற்கையாலே தன்னுடைய உபாயத்வம் சிலாலிகிதமாம்படி திருமலையிலே யெழுந்தருளி நிற்கிற அநாலோசித விசேஷ அசேஷலோக சரண்யனான ஸர்வேச்வரன். [2] (அஜ்ஞாநாசக்தி யாதாத்ம்ய ஜ்ஞாநங்களளவாலன்றிக்கே அங்குற்றேனென்னான் புணராயென்னும்படி மெய்யமர் பக்திபூம பலமாகவும் அநந்யகதித்வமுடைய தமக்கு) “அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதிதயா ஸ்வபக்தேர் பூம்நாவா ஜகதி கதிமந்யாமவிதுஷாம் கதிர்கம் யச்சாஸெள ஹரிரிதி ஜிதந்தாஹ்வயமநோ: ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸகலு பகவாந் செளநகமுநி:” என்கிறபடியே உபாயாந்தரங்களை யறியவு மநுஷ்டிக்கவும் மீடான ஜ்ஞாந சக்திகளில்லாமையாலேயாதல் பகவதேக பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ததேகோபாயத்வ மொழிய தத் வ்யதிரிக்தோபாயாந்வயமாகாதென்று, “உன்னாலல்லால் யாவராலு மொன்றும் குறைவேண்டேன்” என்னும்படியான ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தாலே யாதல், அநந்யகதிகளாமள வன்றிக்கே, “அங்குற்றேனல்லேனிங்குற்றேனல்லே னுன்னைக் காணுமவாவில் வீழ்ந்து நானெங்குற்றேனுமல்லேன்”, “என்னான் செய்கேன்”, “பூவார்கழல்களரு வினையேன் பொருந்துமாறு புணராய்” என்று ஸாதநமநுஷ்டித்து முக்தப்ராயனாயிருக்கிறே னல்லேன், ஸாதநாநுஷ்டாநம் பண்ணுமவர்களிலே ஒருவனா யிருக்கிறே னல்லேன்; மேலும் ஸாதநாநுஷ்டாநம் பண்ணவொண்ணாதபடி உன் ஸெளந்தர்யாதிகளிலே ஈடுபட்டு உன்னைக் காண வேணுமென்னுமாசையாலே பலஹீநனாய்த் தளர்ந்து இனியுபாயாநுஷ்டாந க்ஷமனல்லேன்; உன் திருவடிகளைப் பெறுகைக்கு என்னால் செய்யலாவதில்லை, எனக்கும் செயலுக்குமென்ன சேர்த்தியுண்டு, முன்பு பரிக்லுப்தமான உபாயங்களொன்றுமென் பக்கலில்லை; நிரதிசய போக்யமான உன் திருவடிகளை நான் கிட்டும் வழி கல்பிக்க வேணுமென்று சொல்லும்படி. “மெய்யமர் காதல்” என்று அவன் ஸ்வரூபத்தை அநுஸந்தித்தால் குண ஜ்ஞாநத்தாலேயாதல் தரிக்கவொண்ணாதபடியாய் திருமேனியிலே அணைய வேண்டும்படியான காதலென் பக்த்யதிசயம். அதினுடைய பலமாகவும், உபாயாந்தரத்துக்காளன்றிக்கே “களைகண் மற்றிலேன்” என்னும்படி அநந்யகதித்வமுடையரான தமக்கு. ஸமாஸத்தில் பக்தி பூம பலமென்ன வேணும், பூமாபலமென்கிறவிது பாடஸ்கலநத்தாலே வந்ததாமித்தனை. [3] (பாதமே சரணாக்க அவையே சேமங்கொண்டேக சிந்தையராய்) “ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்னும்படி தன் திருவடிகளை ஸஹாயாந்தர நிரபேக்ஷ ஸாதநமாகக் காட்டிக்கொடுக்க; “கழல்களவையே சரணாகக் கொண்ட” என்றும், “அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்” என்றும், “நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறுமேக சிந்தையனாய்” என்றும் சொல்லுகிறபடியே விரோதி நிரஸந சீலனானவவன் திருவடிகளையே நிரபேக்ஷோபாயமாகக் கொண்டு ஏகரூபமான வ்யவஸாயத்தையுடையராய், (திர்யக்குக்களையிட்டு ஸ்வாபிப்ராயத்தை நிவேதித்து) “வைகல் பூங்கழிவாய் வந்து மேயுங்குருகினங்காள் கனிவாய்ப் பெருமானைக் கண்டு வினையாட்டியேன் காதன்மை கைகள் கூப்பிச் சொல்லீர்” என்று தொடங்கி, “ஏறு சேவகனார்க் கென்னையு முளளென்மின்கள்” என்னுமதளவாக பெற்றன்றித் தரியாத அதிமாத்ர ப்ராவண்யமுண்டா யிருக்கவும், ஸ்வரக்ஷணே ஸ்வாந்வயத்தை ஸஹியாத ஸ்வரூப பாரதந்தர்யத்தாலே ததேக ரக்ஷ்யத்வ வ்யவஸாய ரஹிதராயிருக்கிற தம்முடைய கருத்தை, “உபாப்யாமேவ பக்ஷாப்யாம்” என்கிறபடியே ஜ்ஞாநாநுஷ்டாந ரூப பக்ஷ த்வய யோகத்தாலே ப்ராப்யமான பகவத் விஷயத்தை சீக்கிரமாக ப்ராபிக்கைக்கீடான யோக்யதை யுடையரான கடகரையிட்டறிவித்து. (விளம்ப ரோஷமுபாயத்தாலே யழிய) இப்படி யறிவித்த வளவிலும் அவன் வரவு தாழ்க்கையாலுண்டான ப்ரணய ரோஷத்தாலே, வந்து மேல் விழுந்தவளவிலும், “போகுநம்பி”, “கழகமேறேல் நம்பி” என்று பேஷித்து அவன் முகம் பாராமலிருப்போமென்று சிற்றிலிழைப்பது சிறு சோறடுவதாக, அது தன்னுடைய போக விரோதியாகையாலே “அழித்தாயுன் திருவடியால்” என்கிறபடியே அவனந்த அநாதராந்யபரதைகளை தனக்கும் சரமோபாயமான திருவடிகளாலே யுபலக்ஷிதமான விக்ரஹத்தினுடைய வைலக்ஷண்யத்தாலே குலைக்க அவனோடே பொருந்தி. [4] (உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே) “பிறந்தவாற்”றிலே அவதாராநுபவம் பெறாத விழவாலே பதற, தத் குண சேஷ்டிதங்களை அநுஸந்தித்தாகிலும் தரிப்போமென்றிழிந்தவளவில், “நிறந்தனூடு புக்கெனதாவியை நின்று நின்றுருக்கி யுண்கின்ற”, “பையவே நிலையும் வந்தென் நெஞ்சையுருக்குங்கள்”, “உள்ளமுள் குடைந்தென்னுயிரை யுருக்கி யுண்ணும்”, “ஊடுபுக்கென தாவியை யுருக்கி யுண்டிடுகின்ற” என்னும்படி அவை மிகவும் சைதில்ய ஹேதுவாகையாலே தரித்து நின்றனுபவிக்க வல்லேனாம்படி பண்ணியருள வேணுமென்று அவனை உபாயமாக வரித்ததும், “குரவையாய்ச்சி”யரிலே, “என்ன குறைவெனக்கு” என்று தொடங்கி, “நண்ணி நான் வணங்கப் பெற்றேனெனக்கார் பிறர் நாயகர்” என்று ப்ரீதி பூர்வகமாக அவதார குண சேஷ்டிதங்களை ஸர்வகாலமும் முறையிலே கிட்டியனுபவிக்கப் பெற்றவெனக்கு ஆர்தான் நியாமகரென்று கர்விக்கும்படி பலித்தவாறே. (ஸப்காரமாக ஸக்ருத்கரணீயமென்று) இதரோபாய த்யாக பூர்வகத்வமாகிற ப்ரகாரத்தோடே ஸித்தோபாயவரணம் “ஸக்ருதேவ” என்கிறபடியே ப்ராப்திக்காகவுமொருக்கால் பண்ண வேணுமென்று பார்த்து. (புராண பெளராணிகர் த்யாஜ்யாம்சமாக்கின சிதசித் ப்ராப்ய ப்ராபகாபாஸங்களை) “பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் குரூந், ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ச க்ருஹாணி ச, ஸர்வதர்மாம்ச்ச ஸந்த்யஜ்ய ஸர்வகாமாம்ச்ச ஸாக்ஷராந், லோக விக்ராந்த சரணௌ சரணம் தே வ்ரஜம் விபோ” என்கிற வசநம், “ஆக்நேயமஷ்டமஞ்சைவ பவிஷ்யந்நவமம் ஸ்ம்ருதம்” என்கிறபடியே அஷ்டாதச புராணத்திலும் வைத்துக்கொண்டு ஒன்பதாம் புராணமாகச் சொல்லப்பட்ட பவிஷ்யத் புராண ஸித்தமாகையாலும், புராண வித்தமராகையாலே பௌராணிகரான பாஷ்யகாரர் கத்யத்திலே இவ்வசந ப்ரக்ரியையாலே த்யாஜ்யங்களினுடைய த்யாகபூர்வமான சரணவரணத்தைப் பண்ணுகையாலும் “புராண பௌராணிகர் த்யாஜ்யாம்சமாக்கின” என்கிறது. இங்ஙனன்றிக்கே, இவ்வர்த்தம் புராண ஸித்தமாகையாலும், அதுதான் புராதந புருஷாநுஷ்டாந ரூபமாகச் சொல்லப்படுகையாலும் இவையிரண்டையும் பற்ற “புராண பெளராணிகர் த்யாஜ்யாம்சமாக்கின” என்றருளிச் செய்தாராகவுமாம். ஆக இப்படி புராணமும் பௌராணிகரும், “பிதரம் மாதரம்” என்று தொடங்கி, “ஸாக்ஷராந்” என்னுமதளவாக, “ஸந்த்யஜ்ய” என்கிறவிதுக்கு கர்மீபவிக்கையாலே வக்ஷ்யமாண ஸித்தோபாயவரணத்துக்கு அங்கமாக த்யஜிக்கப்படு மம்சமாக்கின சித் வஸ்துக்களும் அசித் வஸ்துக்களுமாயுள்ள ப்ராப்யாபாஸங்களையும், ப்ராபகாபாஸங்களையும், இதில் “ஸர்வதர்மாம்ச்ச”வுக்குக் கீழ் உபாயாந்தர ஸஹகாரியுமாய் ஸ்வயம் ப்ரயோஜநமாகையாலே உபேயமுமாய் இரண்டுக்கும் பொதுவாயிருந்துள்ளவற்றைச் சொல்லுகிறது. எங்ஙனேயென்னில், “மாத்ருதேவோ பவ பித்ருதேவோ பவ” என்று கொண்டு ஈச்வரனோபாதி மாதாபித்ரநுவர்த்தநத்தையும் உபாஸநாங்கமாக சாஸ்த்ரம் விதிக்கையாலே, மாதாபிதாக்கள் உபாயாந்தர ஸஹசாரிகளுமாய், அவ்வளவன்றியே இவர்களுடைய வியோகமஸஹ்யமா யிருக்கையாலே ஸ்வயம் ப்ரயோஜநமாயுமிருப்பர்கள். ஸ்த்ரீயும் ஸஹதர்மசாரிணியா யிருக்கையாலே உபாயாந்தர ஸஹகாரியுமாய் அபிமதையுமாகையாலே, உபேய பூதையுமாயிருக்கும். புத்ரனும் “புந்நாம்நோ நரகாத் த்ராயத இதி புத்ரா” என்கிறபடியே நரக தர்சநத்துக்கடியான பாப விமோசந ஹேதுவாகிற முகத்தாலே உபாயாந்தர ஸஹகாரியுமாய், தன்னுடைய வியோகம் அஸஹ்யமாம்படி யிருக்கையாலே உபேயமுமாயிருக்கும்; பந்துக்கள், இவனை குடிப்பழியாக வர்த்தியாதபடி நியமித்து நல்வழியே நடத்துவர்களாகையாலே உபாயாந்தர ஸஹகாரிகளுமாய், பெருங்குடிப் பாட்டத்தே பிறந்தோமென்கிற செருக்காலே உபேய பூதருமாயிருப்பர்கள்; தோழனும் இவனுக்கு ஹிதைஷியாய் ஹிதத்தையே ப்ரவர்த்திப்பிக்கையாலே உபாயாந்தர ஸஹகாரியுமாய், அபிமதனுமாயிருக்கையாலே உபேயமுமாயிருக்கும்; குருக்களாகிறார் உபாயாந்தரங்களை உபதேசித்துப் போருகையாலே உபாயாந்தர ஸஹகாரிகளுமாய், உபகாரகராகையாலே உபேய பூதருமாயிருப்பர்கள்; ரத்தங்கள், உபாயாந்தரங்களுக்கும் இதிகர்த்தவ்யதயா ஸஹகாரகமுமாய், மேற்சொல்லுகிறவற்றை யழிய மாறி ஸ்வீகரிக்கப்படுமவை யாகையாலே உபேயமுமாயிருக்கும்; தந தாந்யங்களும், க்ஷேத்ரங்களும் அப்படியே; க்ருஹங்கள், வாஸ ஸ்தாநமாகிற முகத்தாலே உபாயாந்தர ஸஹகாரகமுமாய், மாடமாளிகையாக வெடுக்கும்படியான அபிமதத்வத்தாலே உபேயமுமாயிருக்கும். – மேல் “ஸர்வதர்மாம்ச்ச” இத்யாதியாலே ஸாக்ஷாதுபாயாந்தரங்களையும், உபேயாந்தரங்களையும் சொல்லுகிறது. அதில், “ஸர்வதர்மாம்ச்ச” என்று கர்மயோகாத் யுபாயங்களைச் சொல்லுகிறது; “ஸர்வகாமாம்ச்ச” என்று ஐஹிக பாரலௌகிகைச்வர்ய விசேஷங்களைச் சொல்லுகிறது; “ஸாக்ஷராந்” என்று அக்ஷர சப்தவாச்யமான கைவல்யத்தையும் அவ்வோபாதி த்யாஜ்யமென்கிறது. ஆகவிப்படி உபாயத்வேகவும் உபேயத்வேகவும் வ்யவஸ்திதங்களன்றிக்கே, கீழ்ச் சொன்னபடியே உபாயந்தர ஸஹகாரித்வத்தாலும் அபிமதத்வாதிகளாலுமுண்டான ப்ராப்ய ப்ராபக பாவங்களையுடைய மாதாபித்ராதிகளும், ரத்ந தந தாந்யாதிகளுமானவற்றை சிதசித் ப்ராப்ய ப்ராபகாபாஸங்களென்கிறது. அதவா “ஸர்வதர்மாம்ச்ச” இத்யாதிகள் தானும் பரமப்ராப்ய ப்ராபகங்களைப் பற்ற ஆபாஸங்களாகையாலே, அவை தன்னையும் கூட்டிக் கொண்டு சொல்லவுமாம். “கைவலிந்து” இத்யாதிக்கநுகுணமாக ஒதுக்குகிறதிறேயுள்ளது. மேற்சொல்லுகிற வரணத்துக்கங்கமான த்யாகம் உபாயவிரோதிகளான ஸர்வத்தையும் விஷயமாகவுடைத்தாகையாலே “கைவலிந்து” இத்யாதிகளால் சொன்னவை த்யாஜ்யமான ஸர்வத்துக்கு முபலக்ஷணமிறே; அப்படியானாலிறே ஸப்ரகாரமாக ஸக்ருத்கரணீயமென்றதுக்குச் சேருவது. [5] ஆக, இப்படியிருந்துள்ள (சிதசித் ப்ராப்ய ப்ராபகாபாஸங்களைக் கைவலிந்து கைகழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாதகன்றும்) “நம்மைக் கைவலிந்து”, “இழந்தது சங்கே”, “இதெல்லாம் கிடக்கவினிப்போய்”, “எம்மையொன்றும் நினைத்திலளே”, “இன்றெனக்குதவாதகன்ற” என்று சிதசித் வர்க்கமான விவற்றைக் கைவிட்டு, உறங்குவான் கைப்பண்டம் போலே பகவத் ப்ரேம பாரவச்யத்தாலே தன்னடையே தன்கையில் நின்றும் நெகிழ்ந்து போகக்கண்டும், “ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய” என்கிறபடியே இவற்றை யொன்றாக நினையாமல் உபேஷித்தகன்று போயும். (ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷமாக்கியும்) இதில் ததீயருக்கு போக்யமாக ஸமர்ப்பிக்கத் தக்கவற்றை, “பொன்னுலகாளீரோ புவனி முழுதாளீரோ”, “நெய்யமரின் னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ”, “ஓடிவந்தென் குழல் மேலொளி மாமலரூதீரோ” என்று தமக்கு உபாதேயமான பரமபதத்தோடொக்க கடகர்க்குப் பரிசிலாக ஸமர்ப்பித்தும். (புறத்திட்டுக் காட்டி யென்று ப்ரஸங்கிக்கில் முடியும்படி விட்டு) “என்னைப் புறந்திட் டின்னம் கெடுப்பாயோ” என்று உனக்கசலாம்படி விஷயங்களிலே யென்னைத் தள்ளி இன்னங் கெடுக்கப் பார்க்கிறாயோவென்றும், “பல நீ காட்டிப் படுப்பாயோ” என்று நாட்டார் காணாவிடில் பிழையோமென்கிற விஷயங்கள் தமக்குக் காணில் முடிவனென்னும்படி அத்யந்தாஸஹ்யமா யிருக்கையாலே விஷயங்களைக் காட்டி என்னையும் முடிக்கப் பார்க்கிறாயோவென்றும் சொல்லுகையாலே, அவற்றின் ப்ரஸங்கத்திலே யேங்கி மூச்சடங்கும்படி பீதராய் அவற்றை விட்டு. [6] (தந்தைதாயுண்ணுஞ் சோறுமாநிதி பூவையாவையுமொன்றேயாக்கி) “த்வமேவ மாதா ச பிதா த்வமேவ, த்வமேவ பந்துச்ச குருஸ்த்வமேவ, த்வமேவ வித்யா, த்ரவிணம் த்வமேவ, த்வமேவ ஸர்வம் மம தேவதேவ” என்கிறபடியே, “தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த” என்று அயர்வறுமமரர்களதிபதியே மாதாபித்ராதி ஸர்வவித பந்துவென்றும், “உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” என்று தாரக போஷக போக்யங்களெல்லாம் ஸர்வஸுபலபனான க்ருஷ்ணனே என்றும், “வைத்தமாநிதியாம் மதுசூதனையே” என்று ஆபத்ரக்ஷகமாகச் சேமித்து வைத்த அக்ஷயமான நிதியுமவனேயென்றும், “பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள் யாவையும் திருமால் திருநாமங்களே கூவியெழும்” என்று லீலோபகரணங்களால் பிறக்கும் ரஸமெல்லாம் ச்ரிய:பதியினுடைய திருநாமங்களைச் சொல்லவே யுண்டாகா நிற்குமென்றும், இப்படி கீழ்விட்டவையெல்லாம் பற்றுகிற விஷயமொன்றுமேயாக நினைத்து. [7] (தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோவென்னு மார்த்தியோடே) “கோலத்திருமாமகளோடுன்னைக் கூடாதே சாலப்பல நாளடியே னின்னம் தளர்வேனோ”, “தீயோடுடன் சேர் மெழுகா யுலகில் திரிவேனோ”, “கூவிக்கொள்ளுங்காலமின்னம் குறுகாதோ”, “புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ” என்று ஜகத்துக்கு ஸர்வப்ரகார ரக்ஷகனாய், “ச்ரியா ஸார்த்தம்” என்கிறபடியே பெரியபிராட்டியாரோடே யெழுந்தருளியிருக்கிற உன்னைக் கிட்டப் பெறாதே, ஸம்ஸாரத்திலேயிருந்து இன்னமெத்தனை காலம் இப்படி அவஸந்நனாகக் கடவேன், த்ரிவிக்ரமாவதார முகத்தாலே நீயே வந்து எல்லார் தலையிலும் திருவடிகள் வைத்த உன்னைக் காணவாசைப்பட்டுக் கிடையாமையாலே அக்நிஸகாசத்தில் மெழுகுபோலே ஜீவிக்கவும் பெறாதே முடியவும் பெறாதே ஸம்ஸாரத்திலே இப்படி திரியக்கடவேனோ! ஸர்வஸுபலபமாய் நிரதிசய போக்யமான திருவடிகளிலே என்னை யருளப்பாடிடுங் காலமின்னமணித்தாகாதோ! விரோதிகளின் கையிலகப்படாதே ஜகத்துக்கு வேர்ப்பற்றான உன்னை நோக்கித் தந்தவனே! மாநஸாநுபவ மாத்ரமன்றிக்கே உன் திருவடிகளை ப்ரத்யக்ஷமாகக் கிட்டுவதென்றோ வென்கிற வார்த்தியோடே. – [8] (திருவிக்கிரமனாகக் குறள் கோலப் பிரானாய் அடியை மூன்றையிரந்தவன் கள்வன் கண்முகப்பே யகல்கொள் திசை வையம் விண்ணும் தடவந்த தடந்தாமரைகளை) “லோக விக்ராந்த சரணௌ சரணம் தேவ்ரஜம் விபோ” என்று வஸிஷ்ட சண்டாள விபாகமற வரையாதே திருவடிகளை வைக்கையாலே ஸௌசீல்யமும் உறங்குகிற ப்ரஜையின் முதுகைக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே விமுகரானார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே வாத்ஸல்யமும், அவதரித்து முன்னே நின்று கார்யம் செய்கையாலே ஸௌலப்யமும், “தே” என்கையாலே தன் பேறாகச் செய்கைக்குறுப்பான ஸ்வாமித்வமும், “விபோ” என்கையாலே ஜ்ஞாந சக்த்யாதி குணபூர்த்தியும் சொல்லுகையாலே, த்ரிவிக்ரமாப தாநத்திலே ஆச்ரயணோபயோகியாயும் கார்யோபயோகியாயுமுள்ள குணங்களெல்லாம் ப்ரகாசிக்கையாலே, “தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன்”, “மாண்குறள் கோலப்பிரான்”, “அடியை மூன்றையிரந்தவாறும்”, “மின்கொள் சேர் புரிநூல் குறளாயகல் ஞாலங்கொண்ட வன்கள்வன்” என்று ஸர்வேச்வரனாய் ஆச்ரித வத்ஸலனான தான், த்ரிவிக்ரமாபதாநம் பண்ணுகைக்காக பெருவிலையனானவழகைச் சிறாங்கித்தநுபவிக்கலாம்படி வாமந வேஷத்தைப் பரிக்ரஹித்துக் கொண்டு மஹாபலி யஜ்ஞவாடத்திலே சென்று, “மூன்றடி” என்றிரந்து, தான் சொன்னபடியே அவன் செய்யும்படி விநீதமாய் ஆகர்ஷகமான வடிவைக் காட்டி வசீகரித்து நின்ற மஹா வஞ்சகன், “காண்மின்களுலகீரென்று கண்முகப்பே நிமிர்ந்த” என்று நோக்குவித்யை காட்டுவாரைப்போலே இதோராச்சர்யம் பாருங்கோளென்று லெளகிகரெல்லாருடையவும் கண்ணெதிரே, “அகல் கொள் வையமளந்த மாயன்”, “திசை ஞாலந்தாவியளந்ததும்”, “வையமளந்த மணாளன்”, “மண்ணும் விண்ணுங்கொண்ட மாயவம்மான்”, “ஓரடியாலெல்லாவுலகும் தடவந்த”, “தாவி வையங் கொண்ட தடந்தாமரைகள்” என்று விஸ்த்ருதமாய் திக்குக்களோடே கூடின பூமியையும் உபரிதந லோகங்களையும், தென்றலுலாவினாப்போலே ஸுககரமாம்படி யெங்குமொக்கப் பரப்பியளந்து கொண்ட ஸர்வ ஸுலபமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை. – [9] (இணைத்தாமரைகள் காண விமையோரும் வரும்படி சென்று சேர்ந்தவுலகத் திலதத்தே கண்டு) “எந்நாளே நாம் மண்ணளந்தவிணைத் தாமரைகள் காண்பதற்கென்று” இத்யாதிப்படியே திருவுலகளந்தருளின, ஸர்வஸுலபமாய் நிரதிசய போக்யமாய் சேர்த்தியழகையுமுடைத்தான திருவடிகளை நாம் காண்பதெப்போதோ வென்று நித்யஸூரிகளுமநுபவிக்க வாசைப்பட்டு வரும்படி, “அன்று ஞாலமளந்தபிரான் பரன் சென்று சேர் திருவேங்கடமாமலை” என்று திருவுலகளந்தருளின் செயலாலே ப்ரகாசிக்கிற ஸர்வஸ்மாத் பரத்வத்தையுடையவன், அந்த சிரமம் தீர, விடாயர் மடுவிலே சேருமாப்போலே உகந்து நிற்கிற “திலதமுலகுக்காய் நின்ற திருவேங்கடம்” என்று லோகத்துக்கு முக்கியாபரணமான திருமலையிலே கண்டு. (அகலகில்லேனென்று பூர்வவாக்ய மநுஸந்தித்தவர்) “அகலகில்லே னிறையுமென்றலர்மேல் மங்கையுறை மார்பா” என்று புருஷகார பூதையான பெரியபிராட்டியாரை முன்னிட்டு, “நிகரில் புகழாய்” என்று தொடங்கி “திருவேங்கடத்தானே” என்னுமதளவாக வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஸௌசீல்யம் ஸௌலப்யமாகிற குணங்களை அடைவே அநுஸந்தித்துக் கொண்டு “புகலொன்றில்லா” என்றும், “அடியேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யாநந்யகதித்வ புரஸ்ஸரமாக “உன்னடிக்கீழ்” என்று “சரணௌ” என்கிற திருவடிகளையும், “அமர்ந்து புகுந்தேன்” என்று “சரணம் ப்ரபத்யே” என்கிற அர்த்தத்தையும் அநுஸந்தித் தருளுகையாலே, பூர்வவாக்ய ப்ரக்ரியையாலே பூர்ணப்ரபதநம் பண்ணினவர். [10] (பிணக்கறத் தொடங்கி வேதப்புனிதவிறுதி சொன்ன ஸாத்யோபாய ச்ரவண ஸசோக ஸஜாதீயர்க்கு) “பத்துடையடியவரி”லே, “பிணக்கற வறுவகைச் சமயமும்” என்கிற பாட்டிலே, “வணக்குடைத் தவநெறி வழி நின்று” என்றுபக்ரமித்து, “வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு ஞானவிதி பிழையாமே அச்சுதன் தன்னை மேவித் தொழுதுய்ம்மினீர்கள்” என்கிறதளவாக கீழுபதேசித்த ஸாத்ய ஸாதந பக்தி ச்ரவணத்தாலே அதினுடைய துச்சகத்வ ஸ்வரூப விரோதித்வங்களை நினைத்துப் பிறந்த சோகத்தோடே கூடி, அத்தாலே “எய்தக் கூவுதலாவதேயெனக்கு”, “என்னான் செய்கேன்” என்றிருக்கும் தம்மோடு ஸஜாதீயராம்படியான அதிகாரம் பிறந்தவர்களுக்கு. [11] (தந்தனன் மற்றோர் களைகணிலம் புகுந்தேனென்று ஸ்வஸித்தோபாய நிஷ்டையை உக்த்யநுஷ்டாநங்களாலே காட்டுகிறார் ஆறாம்பத்தில்) அதாவது, “தந்தனன் தனதாள் நிழல்”, “திருவிண்ணகர் மன்னுபிரான் கழல்களன்றி மற்றோர் களைகணிலங் காண்மின்களே” என்கிற தம்முடைய உக்தியாலும், “அடிக்கீழமர்ந்து புகுந்தேன்” என்கிற தம்முடைய அநுஷ்டாநத்தாலும் தமக்கிந்த ஸித்தோபாயத்திலுண்டான நிஷ்டையை ப்ரகாசிப்பித்தார் ஆறாம் பத்திலென்கை.

– (என்னையும்) - திருவாய்மொழி (6-1-10) - ஏறு சேவகனார்க் கென்னையுமுள்ளென்மின்களே - என்பதில் துன்பத்தில் உள்ளவர்களைக் காப்பாற்றுதல் என்ற உறுதியில் உள்ளவனிடம் “காப்பாற்றப்பட வேண்டிய பொருள்களில் நானும் உள்ளேன் என்று உரைப்பீர்களாக” என்றும், (யாவர்க்கும்) - திருவாய்மொழி (6-3-7) - திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான் வரங்கொள் பாதமல்லாலில்லை யாவர்க்கும் வன் சரணே - என்பதில் திருவிண்ணகர் க்ஷேத்ரத்தில் நின்ற அவன் திருவடிகள் அல்லாமல் அனைவருக்கும் ஏற்றதொரு உறுதியான புகலிடம் வேறு இல்லை என்றும், (சுரர்க்கு ஆய்) - திருவாய்மொழி (6-3-8) – வன்சரண் சுரர்க்காய் – என்பதில் தேவர்களுக்கு உறுதியான ரக்ஷகன் என்றும், திருவாய்மொழி (6-10-11) – அடிக்கீழமர்ந்து புகுந்தடியீர் வாழ்மி னென்றென்றருள் கொடுக்கும் - என்பதில் “நமக்கு அடியார்களாக உள்ள அனைவரும் நம்முடைய திருவடிகளின் கீழே வேறு எந்தப் பயனையும் எதிர்பாராமல் புகுந்து நின்று வாழீர்களாக” என்று தனது க்ருபையைச் செய்தபடி உள்ளான் என்றும் கூறுவதற்கு ஏற்ப. (கருணையாலே) - தன்னுடைய க்ருபையாலே. (ஸர்வலோக என்றது கடல் ஓசை ஆகாமல்) - இராமாயணம் யுத்தகாண்டம் (17-14) - ஸர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷண முபஸ்திதம் – அனைத்து லோகங்களும் சரணம் புகத்தக்கவனும் மஹாத்மாவும் ஆகிய இராமன் முன்பாக வந்து நிற்கும் விபீஷணனாகிய என்னைக் குறித்து விரைந்து சென்று உரைப்பீர்களாக - என்பதற்கு ஏற்ப, சரணம் புகுந்தவனாகிய விபீஷணன் இராமனைக் குறித்து உரைத்த சொற்களாகிய “ஸர்வ லோக சரண்யன் - அனைத்து லோகங்களும் சரணம் புகத்தக்கவன்” என்பவை கடலின் ஓசை போன்று பயனற்றப் போகாமல், (பூதேப்ய: என்றது கழுத்துக்கு மேலே ஆகாமல்) – இராமாயணம் யுத்தகாண்டம் (18-33) - ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே அபயம் ஸர்வபூதேப்ய: ததாம்யேதத் வ்ரதம் மம - ஒருமுறை ப்ரபத்தி செய்தவனுக்கும், “நான் உனக்காகவே உள்ளேன்” என்று யாசித்து நிற்பவனுக்கும் அனைத்து உயிர்களிடமிருந்தும் பயம் இன்மையை நான் ஏற்படுத்துகிறேன்; இது எனது விரதம் ஆகும் - என்று கூறுவதற்கு ஏற்ப தன்னைச் சரணம் புகுந்தவர்களைக் காப்பாற்றுதல் என்பதில் விரதம் பூண்டவனாக, இவ்விதம் அனைவருக்கும் புகலிடமாக உள்ள தனது சொற்கள் தனது கழுத்துக்கு மேல் சென்று கடனாக மாறாதபடி, (உபாயத்தை கல்வெட்டு ஆக்குகிற சரண்யன்) திருவாய்மொழி (3-3-7) - வானவர் கோனொடும் நமன்றெழுந் திருவேங்கடம் – என்றும், முதல் திருவந்தாதி (26) - “எழுவார் விடைகொள்வாரீன் துழாயானை வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார் வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடம் - என்றும், இரண்டாம் திருவந்தாதி (72) - போதறிந்து வானரங்கள் - என்றும், மூன்றாம் திருவந்தாதி (70) – கண்டு வணங்கும் களிறு – என்றும் கூறுவதற்கு ஏற்ப நித்யஸூரிகள், நித்ய ஸம்ஸாரிகள், மற்ற பயன்கள் எதனையும் விரும்பாமல் உள்ளவர்கள், வேறு பயனை விரும்புபவர்கள், மனிதர்கள், விலங்குகள் என்பது போன்ற வேறுபாடு ஏதும் ஆராயாமல், அனைவரும் வந்து அண்டும்படியாக, அனைவர்க்கும் புகலிடமாக நிற்பதால், தன்னுடைய “உபாயமாக உள்ள தன்மை” என்பது கல்லில் செதுக்கி வைக்கலாம்படியாகத் திருமலையில் எழுந்தருளி நிற்பவனாகிய, சிந்திக்கவும் இயலாதபடியான சிறப்புகள் பலவற்றையும் கொண்டவனும், அனைத்து லோகங்களும் சரணம் புகத்தக்கவனும் ஆகிய ஸர்வேச்வரன். (அஜ்ஞாந அசக்தி யாதாத்ம்ய ஜ்ஞாநங்கள் அளவால் அன்றிக்கே) - அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதிதயா ஸ்வபக்தேர் பூம்நாவா ஜகதி கதிமந்யாமவிதுஷாம் கதிர்கம் யச்சாஸெள ஹரிரிதி ஜிதந்தாஹ்வயமநோ: ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸகலு பகவாந் செளநகமுநி: - அஜ்ஞானத்தாலோ, அளவிட இயலாதவன் என்ற ஞானத்தாலோ, பக்தியின் மேன்மையாலோ, இந்த உலகில் ஸர்வேச்வரனைத் தவிர வேறு எந்த ஒரு உபாயமும் இல்லை என்று அறிபவர்களுக்கு [அல்லது வேறு உபாயம் உள்ளது என்று அறியாதவர்களுக்கு] அவனே உபாயமாகவும் உபேயமாகவும் ஆகிறான் என்று சௌநக மஹரிஷி ஜிதந்தை என்ற மந்த்ரத்தின் பொருளை விரிவாக உரைத்தார் - என்பதற்கு ஏற்ப மற்ற உபாயங்களை அறியத்தக்கதான ஞானம் இல்லை என்பதால், அவற்றை இயற்றுவதற்கான ஆற்றல் இல்லை என்பதால், பகவானுக்கு மட்டுமே வசப்பட்டிருக்கும் ஆத்மாவிற்கு அவன் மட்டுமே உபாயமாக இருத்தல் அல்லாமல் அவனைக் காட்டிலும் வேறாக உள்ள எந்த ஒரு வஸ்துவும் உபாயம் என்று எண்ணுதல் கூடாது என்பதைத் திருவாய்மொழி (5-8-3) – உன்னாலல்லால் யாவராலு மொன்றும் குறைவேண்டேன் - என்று உரைக்கும்படியாக ஸ்வரூபத்தைக் குறித்து உள்ளது உள்ளபடி அறிதல் மற்றும் வேறு கதி இல்லாதவர் என்பது மட்டும் அல்லாமல். (அங்குற்றேன் என்னான்புணரா யென்னும்படி) – திருவாய்மொழி (5-7-2) - அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனும் அல்லேன் - என்பதற்கு ஏற்ப ஒரு உபாயத்தைக் கைக்கொண்டு முக்தனாகவில்லை, உபாயங்களைக் கைக்கொள்பவர்களில் ஒருவனாக இல்லை, எந்தவிதமான உபாயத்தையும் கைக்கொள்ள இயலாமல் உனது திருமேனியின் அழகு போன்றவற்றில் ஈடுபட்டு நின்று உன்னைக் காணவேண்டும் என்ற மிகுந்த ஆசை காரணமாக பலம் இழந்து தளர்ந்து வேறு எந்த உபாயத்தையும் கைக்கொள்ளும் ஆற்றல் கொண்டவனும் இல்லை என்றும், திருவாய்மொழி (5-8-3) – என் நான் செய்கேன் – என்பதற்கு ஏற்ப உன்னுடைய திருவடிகளைப் பெறுவதற்கு என்னால் செய்ய முடிந்தது ஏதும் இல்லை, எனக்கும் அது போன்ற செயல்களுக்கும் என்ன ஸம்பந்தம் உள்ளது, முன்பு பலரால் உண்டாக்கப்பட உபாயங்கள் ஏதும் என்னிடம் இல்லை என்றும், திருவாய்மொழி (6-10-4) – பூவார்கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய் - என்பதற்கு ஏற்ப எல்லையற்ற இனிமை நிறைந்தவனாகிய உனது திருவடிகளை நான் அடையும் வழியை நீயே எனக்குக் கற்பிக்கவேண்டும் என்றும் கூறுவதற்கு ஏற்ப, (மெய்யமர் பக்தி பூம பலமாகவும்) – திருவாய்மொழி (6-8-2) – மெய்யமர் காதல் - என்பதற்கு ஏற்ப அவனுடைய ஸ்வரூபத்தை எண்ணியோ, குணங்களை எண்ணியோ மட்டுமே தரிக்க இயலாமல், அவனுடைய திருமேனியில் அணையவேண்டும் என்னும்படியான ப்ரேமையானது கடந்த பத்தில் தமக்குப் பிறந்த மிகுந்த பக்தியின் பயனாகவும், வேறு எந்த உபாயங்களிலும் ஈடுபடாமல். (அநந்யகதித்வமுடைய தமக்கு) – திருவாய்மொழி (5-8-8) - களைகண் மற்றிலேன் - என்பதற்கு ஏற்ப வேறு கதி இல்லாமல் உள்ள தனக்கு. – (பாதமே சரண் ஆக்க) - திருவாய்மொழி (5-7-10) – ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் – என்பதற்கு ஏற்ப அவன் தன்னுடைய திருவடிகளை, மற்ற எந்தவிதமான உபாயங்களையும் எதிர்பார்க்காத ஸாதனமாகக் காட்டிக் கொடுத்தான். (அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய்) – திருவாய்மொழி (5-8-11) - கழல்களவையே சரணாகக் கொண்ட – என்றும், திருவாய்மொழி (5-9-11) - அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் – என்றும், திருவாய்மொழி (5-10-11) - நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறுமேக சிந்தையனாய் - என்றும் கூறுவதற்கு ஏற்ப அடியார்களுடைய விரோதிகளை அழிக்கின்ற தன்மை கொண்டவனாகிய திருவடிகளை மட்டுமே, வேறு எந்தவிதமான உதவியும் தேவையற்றதாக உள்ள உபாயமாகக் கொண்டு, அதிலிருந்து மாறுபட்டு நிற்காத திருவுள்ளம் கொண்டவராக. (திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து) - திருவாய்மொழி (6-1-1) - வைகல் பூங்கழிவாய் வந்து மேயுங்குருகினங்காள் கனிவாய்ப் பெருமானைக் கண்டு வினையாட்டியேன் காதன்மை கைகள் கூப்பிச் சொல்லீர் - என்று தொடங்கி, திருவாய்மொழி (6-1-10) - ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்கள் – என்பது முடிய உள்ள பாசுரங்களில், அவனை அடையாமல் தரிக்க இயலாதபடியான மிகுந்த ப்ரேமை ஏற்பட்டபோதிலும், தன்னைத்தானே காப்பாற்றுக் கொள்வதில் தான் ஈடுபடுவதைப் பொறுக்க இயலாதபடி உள்ளதான, “தனது ஆத்மஸ்வரூபத்திற்கு ஏற்றவனுக்கு மட்டுமே வசப்பட்டிருத்தல்” என்பதன் விளவாக, அவனால் மட்டுமே தான் காப்பாற்றப்படவேண்டும் என்று ஆழ்ந்த உறுதி கொண்ட தனது திருவுள்ளக் கருத்தை, உபாப்யாமேவ பக்ஷாப்யாம் – பறவையானது இரண்டு சிறகுகள் கொண்டு பறப்பது போன்று கர்மம் மற்றும் ஞானத்தினால் அவன் அடையப்படுகிறான் - என்பதற்கு ஏற்ப, ஞானம் மற்றும் கர்மம ஆகியவையாக உள்ள சிறகுகள் கொண்டு, அடையவேண்டிய இலக்காக உள்ள பகவானை, வெகு விரைவாக அடைவதற்குத் தகுந்த தகுதியைக் கொண்டவர்கள் மூலமாக அறிவித்து. (விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய) - இவ்விதம் அவர்கள் மூலமாகத் தனது நிலையை அறிவித்தபோதிலும் அவனுடைய வருகை என்பது தாமதமானதால் ஏற்பட்ட ப்ரணய ரோஷம் காரணமாக அவன் வந்தபோதிலும் திருவாய்மொழி (6-2-2) – போகு நம்பி - என்றும், திருவாய்மொழி (6-2-6) – கழகம் ஏறேல் நம்பி - என்றும் அவனைத் தள்ளி, “அவன் முகத்தை நாம் பார்க்காமல் இருப்போமாக” என்று தீர்மானித்து, சிற்றில் இழைத்தல் மற்றும் சிறு சோறு அடுதல் என்பது போன்ற செயல்களைச் செய்தபடி இருந்தார். அப்போது இவருடைய இந்தச் செயல்கள் தனது இன்பதிற்கு விரோதமாக உள்ளதை அறிந்த ஸர்வேச்வரன், திருவாய்மொழி (6-2-9) – அழித்தாய் உன் திருவடியால் - என்பதற்கு ஏற்ப, அவருடைய அத்தகைய “ஈடுபாடு இன்றி இருத்தல், மற்ற விஷயங்களில் ஈடுபடுதல்” போன்ற செயல்கலை, தனக்கும் இறுதியான உபாயமாக உள்ள திருவடிகள் மூலம், பல உப லக்ஷணங்களால் கொள்ளப்படும் தனது திருமேனியின் அழகு மூலம் அழித்தான். அப்போது இவர் மீண்டும் அவனுடன் பொருந்தி. (உருகாமல் வரித்ததும்) – திருவாய்மொழி (5-10-1) – பிறந்தவாறும் - என்பதில் அவனுடைய திரு அவதார காலத்தில் தான் இல்லாத காரணத்தால் அவற்றை அனுபவிக இயலவில்லையே என்று பதறினார். பின்னர் அந்த அவதாரங்களில் அவனுடைய குணங்களையும் லீலைகளையும் நம்முடைய சிந்தனையில் எண்ணியாவது நாம் தரிப்போம் என்று தீர்மானித்து அவற்றில் ஈடுபட்டார். ஆனால் அத்தகைய செயல் என்பது திருவாய்மொழி (5-10-1) – நிறந்தனூடு புக்கெனதாவியை நின்று நின்றுருக்கி யுண்கின்ற – என்றும், திருவாய்மொழி (5-10-3) - பையவே நிலையும் வந்தென் நெஞ்சையுருக்குங்கள் - என்றும், திருவாய்மொழி (5-10-4) - உள்ளமுள் குடைந்தென்னுயிரை யுருக்கி யுண்ணும் - என்றும், திருவாய்மொழி (5-10-10) - ஊடுபுக்கென தாவியை யுருக்கி யுண்டிடுகின்ற - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஒருவரை நிலைகுலையச் செய்பவை என்பதால், “நான் தரித்து நின்று அவதாரங்களுடைய குணங்கள் மற்றும் லீலைகள் ஆகியவற்றை அனுபவிக்கும்படிச் செய்யவேண்டும்”, என்றும் அவனையே அதற்கான உபாயமாக அழைத்தார். (நண்ணி வணங்கப் பலித்தவாறே) - திருவாய்மொழி (6-4) – குரவை ஆய்ச்சியர் - என்பதில் உள்ள திருவாய்மொழி (6-4-1) - என்ன குறைவெனக்கு - என்று தொடங்கி, திருவாய்மொழி (6-4-10) - நண்ணி நான் வணங்கப் பெற்றேனெனக்கார் பிறர் நாயகர் – என்பது முடிய, ப்ரீதீயை முன்னிறுத்தி, “அவனுடைய அவதாரங்களில் வெளிப்பட்ட குணங்கள் மற்றும் லீலைகளை அனைத்து காலங்களிலும் சரியான விதத்தில் அடைந்து அனுபவித்தபடி உள்ள நிலையை அடைந்தேன். இவ்விதம் உள்ள எனக்கு வேறு எஜமானன் யார் உள்ளார்கள்?”, என்று கர்வத்துடன் பேசுவது நிகழ்ந்தவுடன். (ஸ்ப்ரகாரமாக ஸக்ருத்கரணீயம் என்று) - மற்ற அனைத்து உபாயங்களையும் கைவிடுதல் என்பதை முதலில் செய்து, தகுந்த முறையுடன் ஸித்தோபாயமாக உள்ள அவனைச் சரணம் அடைதல் என்பது இராமாயணம் – ஸக்ருத் ஏவ - ஒரு முறை மட்டுமே - என்பதற்கு ஏற்ப அவனை அடைவதற்காகவும் ஒருமுறை செய்யவேண்டும் என்று பார்த்து, (புராண பௌராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின) - பவிஷ்ய புராணம் - பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் குரூந், ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ச க்ருஹாணி ச, ஸர்வதர்மாம்ச்ச ஸந்த்யஜ்ய ஸர்வகாமாம்ச்ச ஸாக்ஷராந், லோக விக்ராந்த சரணௌ சரணம் தே வ்ரஜம் விபோ - தந்தை, தாய், மனைவி, புத்திரர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆசார்யர்கள், இரத்தினங்கள், செல்வங்கள், தானியங்கள், வயல்கள், வீடுகள், அனைத்து தர்மங்கள், அனைத்து விருப்பங்கள் போன்ற அனைத்தையும் முழுவதுமாகக் கைவிட்டு, அனைத்து லோகங்களையும் அளந்த திருவடிகளைச் சரணம் புகுந்தேன் – என்ற வாக்கியமானது, ஆக்நேயமஷ்டமஞ்சைவ பவிஷ்யந்நவமம் ஸ்ம்ருதம் - அக்னிபுராணம் எட்டாவது புராணம், பவிஷ்ய புராணம் ஒன்பதாவது என எண்ணப்படவேண்டும் - என்று கூறுவதற்கு ஏற்ப, பதினெட்டு புராணங்களில் ஒன்பதாவது புராணமாகக் கூறப்பட்ட பவிஷ்ய புராணத்தில் உள்ளது என்பதாலும், புராணங்களை நன்றாக அறிந்தவர் என்பதால் எம்பெருமானார் தனது சரணாகதி கத்யத்தில் இந்தப் புராண வாக்கியத்தின் மூலமாகவே, கைவிடவேண்டியவற்றைத் துறத்தல் என்பதை முன்னிறுத்தி ப்ரபத்தி செய்தார் என்பதாலும், இங்கு சூர்ணையில் “புராண பௌராணிகர் த்யாஜ்ய அம்சம்” என்றார். அல்லது இவ்விதம் பொருள் கூறாமல், “இத்தகைய கருத்தானது புராணத்தில் கூறப்பட்டதாலும், இதுவே முன்பிருந்த ஆசார்யர்களுடைய செயல்பாடு என்று கூறப்படுவதாலும் இவ்விதம் சூர்ணையில் அருளிச்செய்தார்”, என்றும் பொருள் உரைக்கலாம். (சித் அசித் ப்ராப்ய ப்ராபக ஆபாஸங்களை) - ஆக, இவ்விதம் புராணமும், புராணங்களை நன்கு அறிந்தவரும், “பிதரம் மாதரம் – தந்தை தாய்” என்று தொடங்கி, “ஸாக்ஷாராந் – அனைத்தும் உட்பட” என்பது முடிய, “ஸந்த்யஜ்ய - முற்றிலுமாக விட்டு” என்பதற்குரியதான செய்யப்படவேண்டியவை என்பதால், மேலே கூறப்பட்டதான ப்ரபத்தியைக் கைக்கொள்வதற்கான அங்கமாக விடத்தக்கதாகக் கூறப்பட்ட சித் மற்றும் அசித் வஸ்துக்களாக உள்ளதான போலியான பேறுகளையும், போலியான உபாயங்களையும், மேலே கூறப்பட்ட புராண வாக்கியத்தில் உள்ள “ஸர்வதர்மாம்ச்ச” என்பதற்குப் பின்னர் உள்ளவை அனைத்தும் மற்ற உபாயங்களுக்குத் துணையாகவும், தானே பயனாக உள்ளதால் பேறாகவும் இருந்து, இந்த இரண்டிற்கும் பொதுவாக உள்ளதைக் கூறுகின்றன. எப்படி? மாத்ருதேவோ பவ பித்ருதேவோ பவ – தாயைத் தெய்வமாகக் கொள்வாயாக, தந்தையைத் தெய்வமாகக் கொள்வாயாக - என்று கொண்டு, ஸர்வேச்வரனுக்குச் செய்யபடும் கைங்கர்யங்களைக் போன்றே தாய்தந்தையர்க்குச் செய்யும் தொண்டுகளையும் உபாஸனையின் அங்கமாகவே சாஸ்த்ரம் விதிக்கிறது; ஆகவே தாய்தந்தையர்கள் மற்ற உபாயங்களுக்குத் துணையாக உள்ளதுடன் மட்டும் அல்லாமல், அவர்களைப் பிரிதல் என்பது பொறுக்க முடியாமல் உள்ளதால், தாங்களே பயனாகவும் இருப்பார்கள். மனைவியானவள் இல்லறவாழ்க்கைத் துணையாக உள்ளதால், மற்ற உபாயங்களுக்குத் துணையாகவும், விருப்பமானவளாகவும் உள்ளதால், உபேயமாகவும் உள்ளாள். புத்திரன், “புந்நாம்நோ நரகாத் த்ராயத இதி புத்ரா – புத் என்ற நரகத்திலிருந்து காப்பாற்றுவதால் புத்திரன் எனப்படுகிறான்” என்று கூறுவதற்கு ஏற்ப நரகத்தை அடைவதற்குக் காரணமாக உள்ள பாபங்கள் நீங்குவதற்குக் காரணமாக உள்ளதால், மற்ற உபாயங்களுக்குத் துணையாகவும், தனது பிரிவு பொறுக்க இயலாதபடி உள்ளதால் உபேயமாகவும் உள்ளான். பந்துக்களாக உள்ளவர்கள், ஒருவன் தனது குலத்திற்குப் பழி ஏற்படாதவிதத்தில் அவனை நல்வழிப்படுத்தி வழி நடத்துவதால் மற்ற உபாயங்களுக்குத் துணையாகவும், “மிகவும் உயர்ந்த குலத்தில் பிறந்தோம்” என்ற செருக்கு காரணமாக உபேயமாகவும் உள்ளனர். நண்பன் ஒருவன், ஒரு மனிதனுக்கு ஏற்ற நன்மையைச் செய்பவனாகவும், அந்த மனிதனை நன்மையான செயல்களை மட்டுமே செய்யத் துண்டுபவனாகவும் உள்ளதால், மற்ற உபாயங்கள் குறித்து உபதேசிப்பதால் மற்ற உபாயங்களுக்குத் துணையாகவும், உதவிகளைச் செய்வதால் உபேயமாகவும் உள்ளான். இரத்தினங்கள், மற்ற உபாயங்களைச் செய்வதற்கும் அவற்றை இயற்றத் துணையாகவும் உள்ளதாலும், இதுவரை கூறப்பட்டவை அழிந்தாலும் கொள்ளப்படலாம் என்பதால் உபேயமாகவும் உள்ளன. தனம், தானியங்கள் மற்றும் வயல்களும் இது போன்றே ஆகும். வீடுகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக உள்ளதால் மற்ற உபாயங்களுக்குத் துணையாகவும், மாடமாளிகைகள் இருப்பதற்கான ஆசைக்கு ஏற்றதாக உள்ளதால் உபேயமாகவும் உள்ளன. மேலே கூறப்பட்ட “ஸர்வதர்மாம்ச்ச” போன்றவை மூலம் நேரடியாகவே மற்ற உபாயங்களாக உள்ளவற்றையும், மற்ற இலக்குகளாக உள்ளவற்றையும் கூறுகிறது. அவற்றில் உள்ள “ஸர்வதர்மாம்ச்ச” என்றது கர்மயோகம் போன்ற உபாயங்களைக் கூறுகிறது. “ஸர்வகாமாம்ச்ச – அனைத்து விரும்பப்படும் பொருள்கள்” என்பதன் மூலம் இந்த உலகிலும், அந்த உலகிலும் உள்ள செல்வங்கள் கூறப்பட்டன. “ஸாக்ஷராந் - கைவல்யம் ஆகியவையும் சேர்த்து” என்பது, அக்ஷரம் என்ற சொல்லால் கூறப்படுகின்ற கைவல்யத்தையும் அவற்றைப் போன்றே கைவிடத்தக்க ஒன்றாகவே கூறுகிறது. இவ்விதமாக, உபாயமாக உள்ள தன்மை மற்றும் உபேயமாக உள்ள தன்மை குறித்து ஒரு நிலை என்பது அல்லாமல், மேலே கூறப்பட்டபடி மற்ற உபாயங்களுக்குத் துணையாக உள்ள தன்மை மற்றும் உபேயமாகும் தன்மைகளுடன் கூடிய தாய்தந்தை, இரத்தினம், தனம், தான்யம் போன்ற அனைத்தையும் சித் மற்றும் அசித் பொருள்களாக உள்ளவையும் போலியாக உள்ளவையும் ஆகிய அடையவைக்கும் மற்றும் அடையப்படும் பொருள்களாகக் கூறப்பட்டன. அல்லது “ஸர்வதர்மாம்ச்ச” போன்றவைகள், ஸர்வேச்வரன் என்னும் உயர்ந்த உபாயம் மற்றும் உபேயத்தை நோக்கும்போது, போலிகளாக உள்ளதால், அவற்றையும் சேர்த்தே கூறுகின்றன எனலாம். “கைவலிந்து” முதலானவைகள் போன்ற இவையும் தள்ளப்பட வேண்டியவை என்றே ஆகின்றன. மேலே கூறப்படுகின்ற ப்ரபத்திக்கு அங்கமாக உள்ள துறத்தல் என்பது உபாயத்திற்கு விரோதமாக உள்ள அனைத்தையும் விஷயமாகக் கொண்டுள்ளதால் “கைவலிந்து” போன்றவைகளால் கூறப்பட்டவை, துறக்கப்பட வேண்டிய அனைத்திற்கும் உபலக்ஷணம் ஆகும். இவ்விதம் கொண்டால் மட்டுமே, “தகுந்த முறையுடன் ஒரு முறை இயற்றப்பட்ட வேண்டியதே ப்ரபத்தி” என்பது பொருந்தும். – ஆக, இவ்விதமாக உள்ள (சிதசித் ப்ராப்ய ப்ராபகாபாஸங்களை) - சித் வஸ்துக்களில் உபாயம் மற்றும் உபேயம் என்றும், அசித் வஸ்துக்களில் உபாயம் மற்றும் உபேயம் என்றும் உள்ளது போன்று காணப்படும் போலியான அனைத்தையும் (கைவலிந்து கைகழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாது அகன்றும்) - திருவாய்மொழி (6-5-7) - நம்மைக் கைவலிந்து – என்றும், திருவாய்மொழி (6-6-1) - இழந்தது சன்கே – என்றும், திருவாய்மொழி (6-7-9) - இதெல்லாம் கிடக்கவினிப்போய் - என்றும், திருவாய்மொழி (6-7-9) - எம்மையொன்றும் நினைத்திலளே - என்றும், திருவாய்மொழி (6-7-6) – இன்று எனக்கு உதவாது அகன்று - என்றும் கூறுவதன் மூலம், சித் மற்றும் அசித் பொருள்களுடைய கூட்டமான இவை அனைத்தையும் துறந்து, உறங்குபவன் கைகளில் உள்ள பொருள் தானாகவே விழுவது போன்று ஸர்வேச்வரனிடம் கொண்ட ப்ரேமையில் வசப்பட்டதன் விளைவாக, தாங்களாகவே தனது கைகளிலிருந்து விலக்கிச் செல்வதைக் கண்டபோதிலும், சரணாகதிகத்யம் – ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய - அனைதுது இன்பங்களையும் முற்றிலுமாகத் துறந்து - என்பதற்கு ஏற்ப அவற்றைப் பொருட்படுத்தாமல் உதாஸீனம் செய்து அகன்று சென்றும். (ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷமாக்கியும்) - மேலே கூறப்பட்ட பொருள்களில், ஸர்வேச்வரனுடைய அடியார்களுக்கு இன்பம் அளிக்கவல்லவை என்று சமர்ப்பிக்கத் தகுந்தவற்றை, திருவாய்மொழி (6-8-1) – பொன்னுலகாளீரோ புவனி முழுதாளீரோ - என்றும், திருவாய்மொழி (6-8-2) – நெய் அமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ - என்றும், திருவாய்மொழி (6-8-3) – ஓடிவந்து என் குழல் மேல் ஒளி மாமலர் ஊதீரோ – என்றும் கூறுவதன் மூலம், தனக்குப் பேறாக உள்ளதான பரமபதம் போன்று, அவனிடம் கொண்டு சேர்ப்பவர்களுக்குப் பரிசாக அளித்தும். (புறத்திட்டுக் காட்டி யென்று ப்ரஸங்கிக்கில் முடியும்படி விட்டு) – திருவாய்மொழி (6-9-8) - என்னைப் புறந்திட்டு இன்னம் கெடுப்பாயோ - என்பதற்கு ஏற்ப “உன்னைத் தவிர உள்ள மற்ற தாழ்ந்த விஷயங்களில் என்னைத் தள்ளி விட்டு மேலும் என்னைக் கெடுக்கப் பார்க்கிறாயோ” என்றும், திருவாய்மொழி (6-9-9) - பல நீ காட்டிப் படுப்பாயோ - என்பதற்கு ஏற்ப அற்பமான மனிதர்கள், “காண இயலவில்லை என்றால் முடிந்து விடுவோம்”, என்று எண்ணும்படியாக உள்ள விஷயங்களைத் தனக்குக் காண்பித்தால் “நான் முடிந்துவிடுவேன்” என்னும்படி பொறுக்க இயலாதவராக உள்ளதால், “மற்ற விஷயங்களைக் காண்பித்து என்னையும் முடிக்க எண்ணுகிறாயோ” என்றும் கூறுவதால், அவற்றைக் குறித்து யாரேனும் பேசினால் கூட ஏங்கி, மூச்சு அடங்கும்படியாக, அச்சம் கொண்டவராக அவற்றைத் தவிர்த்து. (தந்தைதாய் உண்ணுஞ்சோறு மாநிதி பூவையாவையும் ஒன்றேயாக்கி) - கத்யத்ரயத்தில் – த்வமேவ மாதா ச பிதா த்வமேவ, த்வமேவ பந்துச்ச குருஸ்த்வமேவ, த்வமேவ வித்யா, த்ரவிணம் த்வமேவ, த்வமேவ ஸர்வம் மம தேவதேவ – தேவர்களின் தலைவனே! நீயே எனக்குத் தாய், நீயே எனக்குத் தந்தை, நீயே எனக்கு உறவினன், நீயே எனக்கு ஆசார்யன், நீயே என் கல்வி, நீயே என் செல்வம், நீயே எனக்கு எல்லாம் ஆகிறாய் - என்று கூறுவதற்கு ஏற்ப, திருவாய்மொழி (6-5-11) - தேவபிரானையே தந்தை தாய் என்றடைந்த - என்ற பாசுரத்தில் உள்ளது போன்று அயர்வறும் அமரர்கள் அதிபதியாகிய ஸர்வேச்வரனே, தாய் தந்தை போன்ற அனைத்துவிதமான உறவினன் என்றும்; திருவாய்மொழி (6-7-1) - உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன் - என்று உயிர்வாழத் தேவையான அனைத்தும், இன்பங்கள் அனைத்தும் அனைத்துவிதங்களிலும் எளிதாக அடையத்தக்கவனாகிய க்ருஷ்ணனே ஆவான் என்றும்; திருவாய்மொழி (6-7-11) – வைத்தமாநிதியாம் மதுசூதனையே - என்று ஆபத்து காலத்தில் காப்பாற்றுவதற்காகச் சேமித்து வைக்கப்பட்ட அழிவற்ற செல்வமும் அவனே என்றும்; திருவாய்மொழி (6-7-3) - பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள் யாவையும் திருமால் திருநாமங்களே கூவியெழும் - என்று விளையாட்டுப் பொருள்கள் மூலம் ஏற்படும் சுவை போன்ற அனைத்தும் மஹாலக்ஷ்மியின் நாயகனுடைய திருநாமங்களை உரைப்பதற்காகவே ஏற்பட்டு நிற்கின்றன என்றும்; இப்படியாக மேலே துறக்கப்பட்ட அனைத்தும், தான் பற்றி நிற்கின்ற பகவத் விஷயமே ஆகும் என்று எண்ணியபடி. (தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே) - திருவாய்மொழி (6-9-3) – கோலத்திருமாமகளோடுன்னைக் கூடாதே சாலப்பல நாளடியே னின்னம் தளர்வேனோ - என்பதன் மூலம் இந்த ஜகத்திற்கு அனைத்துவிதங்களிலும் ரக்ஷகனாக, ச்ரியா ஸார்த்தம் – ஸ்ரீவைகுண்டத்தில் பெரியபிராட்டியுடன் சேர்ந்துள்ள – என்பதற்கு ஏற்ப பெரியபிராட்டியுடன் எழுத்தருளியுள்ள உன்னை வந்தடையாமல் ஸம்ஸாரத்தில் உழன்றபடி மேலும் எத்தனை காலம் இவ்விதம் துன்பப்படுவேன் என்றும்; திருவாய்மொழி (6-9-6) – தீயோடுடன் சேர் மெழுகா யுலகில் திரிவேனோ – என்பதன் மூலம் த்ரிவிக்ரம அவதாரத்தின் மூலமாக நீயே வலிய வந்து அனைவருடைய தலைகளிலும் உனது திருவடிகளை வைத்த உன்னைக் காணவேண்டும் என்று ஆசை கொண்டு நீ கிட்டாமையால், நெருப்பின் சேர்க்கையை அடைந்த மெழுகு போன்று வாழவும் இயலாமல் முடியவும் இயலாமல் இந்த ஸம்ஸாரத்தில் இவ்விதமாகத் திரிந்தபடியே இருப்பேனோ என்றும்; திருவாய்மொழி (6-9-9) - கூவிக்கொள்ளுங்காலமின்னம் குறுகாதோ - என்பதன் மூலம், அடைவதற்கு மிகவும் எளியதாக, அனைத்துவிதமான எல்லையற்ற இனிமை கொண்டதாக உள்ள திருவடிகளில் என்னைச் சேர்த்துக் கொள்ளும் காலம் நெருங்கி வராதோ என்றும்; திருவாய்மொழி (6-10-5) - புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ – என்பதன் மூலம் விரோதிகளுடைய கைகளில் அகப்படாமல் இந்த ஜகத்திற்கு ஆணிவேர் போன்ற உன்னை நோக்கித் தந்தவனே என்று கூறுவதற்கு எற்ப, மனதில் ஏற்படும் அனுபவம் மட்டும் அல்லாமல் உனது திருவடிகளை நேரடியாகக் கண்டு அடைவது எந்த நாளிலோ என்னும் மிகுந்த துக்கத்துடன். – (திருவிக்ரமனாக) - லோக விக்ராந்த சரணௌ சரணம் தேவ்ரஜம் விபோ - அனைத்து லோகங்களையும் அளந்த உனது திருவடிகளைச் சரணம் புகுந்தேன் - என்பதற்கு ஏற்ப, உயர்ந்தவன் மற்றும் சண்டாளன் என்னும் வேறுபாடுகள் ஏதும் ஆராயாமல் அனைவரது தலைகளிலும் திருவடிகளை வைத்ததால் சௌசீல்யமும், உறங்கும் குழந்தையின் முதுகைக் கட்டி அணைத்தபடி உள்ள தாய் போன்று தன்னிடம் பக்தி இல்லாதவர்கள் தலைகளிலும் திருவடிகளை வைத்ததால் வாத்ஸல்யமும், அவதாரம் எடுத்து முன்னே நின்று செயல்கள் செய்ததால் ஸௌலப்யமும், “தே” என்பதால் தனது பேறு என்று எண்ணிச் செயல்கள் செய்வதற்குக் காரணமாக உள்ள ஸ்வாமித்வமும், “விபோ” என்பதால் ஞானம் மற்றும் சக்திகளின் பரிபூர்ணத்வ நிலையையும் கூறுவதால், த்ரிவிக்ரமன் தனது செயல்களில் ஈடுபட்டு நிற்பதற்குக் காரணமாகவும், அந்தச் செயல்களைச் செய்வதற்குத் துணையாகவும் உள்ள கல்யாணகுணங்கள் அனைத்தும் வெளிப்படுவதால் திருவாய்மொழி (5-7-11) - தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன் – என்றும். (குறள் கோலப்பிரானாய்) - திருவாய்மொழி (5-9-6) - மாண்குறள் கோலப்பிரான் - என்றும். (அடியை மூன்றை இரந்த) - திருவாய்மொழி (5-10-9) - அடியை மூன்றையிரந்தவாறும் – என்றும். (வன் கள்வன்) – திருவாய்மொழி (6-1-11) – மின்கொள் சேர் புரிநூல் குறளாயகல் ஞாலங்கொண்ட வன்கள்வன் – என்றும் கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரனாகவும், அடியார்களிடம் மிகுந்த வாத்ஸல்யம் கொண்டவனாகவும் உள்ள தான், த்ரிவிக்ரமனாக நின்று செய்கின்ற செயலைச் செய்வதற்காக, நீண்டு நெடியவனாக நின்ற தன்னுடைய அழகைச் சிறியதாக அனுபவிக்கலாம்படி ஒரு வாமன வேஷத்தை கைக்கொண்டு, மஹாபையின் யாகசாலைக்குச் சென்று, “மூன்றடி” என்று யாசித்து, தான் எண்ணியபடியே மஹாபலி செய்யும்படியாக, மிகவும் எளிமையாகவும் வசீகரிக்கும்படியாகவும் உள்ள தனது வடிவத்தைக் காண்பித்து அவனை வசீகரித்து நின்ற மஹாவஞ்சகன். (கண்முகப்பே) – திருவாய்மொழி (6-3-11) – காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த – என்பதற்கு ஏற்ப இந்த்ரஜால வித்யை காண்பித்து மயக்குபவன் போன்று, “இதோ! ஓர் ஆச்சர்யம் காண்பீராக” என்று உலகில் உள்ள அனைவருடைய கண்களுக்கு முன்பாகவும். (அகல்கொள்) - திருவாய்மொழி (6-4-6) - அகல் கொள் வையமளந்த மாயன் – என்றும். (திசை) - திருவாய்மொழி (6-533) – திசை ஞாலம் தாவியளந்ததும் - என்றும். (வையம்) - திருவாய்மொழி (6-6-1) – வையம் அளந்த பிரான் - என்றும். (விண்ணும்) - திருவாய்மொழி (6-9-2) – மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மான் – என்றும். (தடவந்த) - திருவாய்மொழி (6-9-6) – ஓரடியாலெல்லாவுலகும் தடவந்த - என்றும். (தடந்தாமரை) - திருவாய்மொழி (6-9-9) – தாவி வையங் கொண்ட தடந்தாமரைகள் - என்றும் கூறுவதற்கு ஏற்ப விரிவைக் கொண்டதாகவும், அனைத்து திசைகளுடன் கூடிய பூமியையும் மேல் லோகங்களையும், தென்றல் வீசுவது போன்று இனிமையாக உள்ளதாக எங்கும் ஒரே போன்று பரப்பி அளந்து எடுத்துக் கொண்ட மிகவும் எளியதான எல்லையற்ற இனிமை உள்ள திருவடிகளை. – (இணைத்தாமரைகள் காண இமையோரும் வரும்படி) - திருவாய்மொழி (6-10-6) - “எந்நாளே நாம் மண்ணளந்தவிணைத் தாமரைகள் காண்பதற்கென்று - என்பது போன்று, “திருவுலகங்கள் அனைத்தும் அளந்தருளியதும், மிகவும் எளியதாகவும், எல்லையற்ற இனிமை கொண்டதாகவும், ஒன்றுக்கொன்று பொருந்தியதாகவும் உள்ள திருவடிகளை நாம் காண்பது எப்போதோ?” என்று நித்யஸூரிகளும், அனுபவிக்க ஆசை கொண்டு வரும்படியாக உள்ள திருவடிகளை. (சென்று சேர்ந்த) - திருவாய்மொழி (3-3-8) – அன்று ஞாலமளந்தபிரான் பரன் சென்று சேர் திருவேங்கடமாமலை – என்பதற்கு ஏற்ப அனைத்து லோகங்களையும் அளந்தருளிய செயல் மூலமாக வெளிப்படுவதான “அனைத்திற்கும் ஆத்மாவாக, அனைத்தைக் காட்டிலும் உயர்ந்த தயையைக் கொண்டவன்” என்னும்படி உள்ள அவன், தனது அத்தகைய உலகளந்த சிரமம் தீரும்விதமாக, அதிக தாகம் கொண்டவர்கள் மடுவை நோக்கி ஓடுவது போன்று, மகிழ்ந்து நிற்கின்ற. (உலகம் திலதத்தே கண்டு) – திருவாய்மொழி (6-10-1) - திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடம் – என்பதற்கு ஏற்ப உலகத்தின் முக்கியமான ஆபரணமாக உள்ள திருவேங்கடத்திருமலையில் கண்டு. (அகலகில்லேன் என்று பூர்வ வாக்கியம் அநுஸந்தித்தவர்) – திருவாய்மொழி (6-10-10) – அகலகில்லே னிறையுமென்றலர்மேல் மங்கையுறை மார்பா - என்று சிபாரிசு செய்யும் நிலையில் உள்ளவளாகிய பெரியபிராட்டியாரை முன்னே நிறுத்திக் கொண்டு, திருவாய்மொழி (6-10-10) – நிகரில் புகழாய் – என்று தொடங்கி, திருவாய்மொழி (6-10-10) - திருவேங்கடத்தானே – என்று முடிப்பது முடிய உள்ள வரிகளில் வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஸௌசீல்யம், ஸௌலப்யம் போன்ற குணங்களை முழுவதுமாக எண்ணியபடி, திருவாய்மொழி (6-10-10) – புகல் ஒன்றில்லா - என்பதன் மூலம் தனது கைம்முதல் ஏதும் இல்லாத நிலையையும், திருவாய்மொழி (6-10-10) - அடியேன் - என்று கூறுவதன் மூலம் வேறு கதியின்றி உள்ள நிலையையும் உரைத்து, “சரணௌ” என்றுள்ள பொருள் வெளிப்படும்படியாக உள்ள திருவடிகளை, திருவாய்மொழி (6-10-10) - உன்னடிக் கீழ் - என்று கூறி, “சரணம் ப்ரபத்யே” என்பதைத் திருவாய்மொழி (6-10-10) - அமர்ந்து புகுந்தேன் – என்று உரைத்தார். இப்படியாக இந்தக் கருத்துக்களை எண்ணியபடி இந்தப் பாசுரத்தை உரைத்ததால், இதன் மூலம் த்வயத்தின் முதல் வாக்கியத்தில் கூறப்பட்ட பரிபூர்ணமான ப்ரபத்தியைக் கைக்கொண்டவர். – ( பிணக்கறத் தொடங்கி) - திருவாய்மொழி (1-3) – பத்துடை அடியவர் - என்பதில் உள்ளதான திருவாய்மொழி (1-3-5) – பிணக்கற அறுவகைச் சமயமும் - என்னும் பாசுரத்தில், திருவாய்மொழி (1-3-5) – வணக்குடைத் தவநெறி வழி நின்று – என்று தொடங்கி, (வேதப் புனித இறுதி சொன்ன) - திருவாய்மொழி (5-2-9) – வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு ஞானவிதி பிழையாமே அச்சுதன் தன்னை மேவித் தொழுதுய்ம்மினீர்கள் - என்பது முடிய உபதேசித்த. (ஸாத்ய உபாய ச்ரவண ஸசோக ஸஜாதீயர்க்கு) - ஸாத்ய ஸாதன பக்தி குறித்துக் கேட்டதன் காரணமாக, அந்தப் பக்தியைக் கைக்கொள்வதில் உள்ள கடினத்தையும், அது ஸ்வரூபத்திற்கு விரோதமாக உள்ள தன்மையும் எண்ணிப் பார்ப்பதால் ஏற்பட்ட சோகத்துடன் நின்று, அதன் விளைவாகத் திருவாய்மொழி (5-7-5) - எய்தக் கூவுதலாவதேயெனக்கு – என்றும், திருவாய்மொழி (5-8-3) – என் நான் செய்கேன் – என்றும் உள்ள, தமக்கு ஒற்றுமையான அதிகாரம் ஏற்பட்டவர்களுக்கு. (தந்தனன்) – திருவாய்மொழி (6-3-9) - தந்தனன் தனதாள் நிழல் – என்றும், திருவாய்மொழி (6-3-10) - திருவிண்ணகர் மன்னுபிரான் கழல்களன்றி மற்றோர் களைகணிலங் காண்மின்களே - என்றும் உள்ள தம்முடைய சொற்கள் மூலமாகவும்; திருவாய்மொழி (6-10-10) – அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் - என்றும் உள்ள தனது செயலாலும், தனக்கு இந்த ஸித்தோபாயமாக உள்ள ஸர்வேச்வரன் விஷயத்தில் உண்டான நிஷ்டையை, ஆறாம் பத்து மூலமாக வெளிப்படுத்துகிறார்.