Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 223)

நான்காம் ப்ரகரணம்

[1] ஆவாவென்று தானே தன்னடியார்க்குச் செய்யும் தொல்லருளென்று பரத்வாதிகளையுடையவன் எவ்விடத்தானென்னும் பாவியர்க்கும் இருகரையுமழிக்கும் க்ருபா ப்ரவாஹமுடையவன் பொய்கூத்து வஞ்சக்களவு தவிர முற்றவுந்தானாய் உன்னை விட்டென்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம், [2] பேரமர் பின்னின்று கழியமிக்கு யானேயென்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர, [3] விஷ வ்ருக்ஷ பலங்கள் கைகூடினவர் அடிமை புக்காரையும் ஆட்செய்வாரையுங் காண லோக த்வீபாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு, ப்ரஹ்லாத விபீஷணர் சொற்கேளாத அரக்கரசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து, [4] தேச கால தோஷம் போக எங்குமிடங் கொண்டவர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள், நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை, [5] மேவிப் பரம்புமவரோடொக்கத் தொழில் யுக தோஷமில்லையாமென்று விஷ்ணுபக்தி பரராக்கிக் கண்ணுக்கினியன காட்டலாம்படியானார். கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி ஸித்தாஞ்ஜனத்தை யிடுகிறார் அஞ்சாம்பத்தில்.

அஞ்சாம்பத்தால், கீழ்ச் சொன்ன பரத்வாதிகளால் வந்த தன்னுடைய உத்கர்ஷத்தையும், தந்தாமுடைய நிகர்ஷத்தையு மநுஸந்தித்து அகல்வாரளவிலும் மேல் விழுந்து விஷயீகரிக்கும்படி பரமகாருணிகனான ஸர்வேச்வரன், கீழிவர்க்குப் பிறப்பித்த விரக்திக்கு பலமான ஸ்வவிஷய பக்தியை பரம்பரயா அபிவ்ருத்தமாக்கி அந்த பக்தியையும் பாகவத ஸமாகமத்தையுமுடையரானவிவர் தாம் திருத்தத் திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்களையும், திருத்தின தம்மையும் காண்கைக்கு வந்த நித்யஸூரிகளையும் ச்வேத த்வீப வாஸிகளான ஸித்தரையுங் கண்டு மங்களாசாஸநம் பண்ணி, திருந்தாத அஸுர ராக்ஷஸ ப்ரக்ருதிகளையும் பகவத் பாகவத வைபவத்தை யுபதேசித்துத் திருத்தி பாகவத ஸமாஐ தர்சநமினிதாம்படியான ஜ்ஞாநம் பிறந்தார்க்கு ப்ராப்ய த்வரைக்கடியான பக்தியையு முபதேசித்துத் தலைகட்டுகிறாரென்கிறார்.

இதுவரை கூறப்பட்டவற்றில் உரைத்த பரத்வம் போன்ற பலவற்றாலும் வெளிப்படுத்தப்பட்ட ஸர்வேச்வரனாகிய தன்னுடைய உயர்வு மற்றும் தங்களுடைய தாழ்வு ஆகியவற்றை எண்ணியவர்களாக, ஸர்வேச்வரனாகிய தன்னை விட்டு அகன்று செல்ல முயல்பவர்கள் மீது விழுந்து அவர்களை ஏற்றுக்கொள்ளும் ஸர்வேச்வரன், கடந்த பத்தில் நம்மாழ்வாருக்கு ஏற்பட்ட விரக்தியின் பலனாக தன்னைக் குறித்த பக்தியானது அவருக்கு மேன்மேலும் வளரும்படிச் செய்தான். அப்படிப்பட்ட பக்தியையும், பாகவதர்களுடைய கூட்டத்தையும் கொண்டவராகிய நம்மாழ்வார், தான் திருத்தியதன் விளைவாகத் திருந்திய ஸ்ரீவைஷ்ணவர்களையும், இவ்சிதமாகத் திருத்திய தன்னையும் காணபதற்காக வந்த நித்யஸூரிகளையும், ச்வேத த்வீபத்தில் வசிப்பவர்களாகிய ஸித்தர்களையும் கண்டு, அவர்களுக்கு மங்களாசாஸநம் செய்தார். இவ்விதம் திருத்தியபோதும் திருந்தாத அஸுரர்கள் மற்றும் ராக்ஷஸர்கள் ஆகியவர்களை உபதேசித்துத் திருத்தி, பாகவதர்களுடன் சேந்ந்து இருந்தல் என்பதை இனிமையாகக் காணும்படியாக உள்ள ஞானம் பிறந்தவர்களுக்கு, “பெறுகின்ற பேற்றை விரைவாக அடையவேண்டும்” என்ற பதற்றத்திற்குக் காரணமாக உள்ள பக்தியையும் உபதேசித்து ஐந்நாம் பத்தை நிறைவு செய்கிறார்.

[1] (ஆவாவென்று தானே தன்னடியார்க்குச் செய்யும் தொல்லருளென்று பரத்வாதிகளை யுடையவனெவ்விடத்தானென்னும் பாவியர்க்கு மிருகரையும் அழிக்கும் க்ருபா ப்ரவாஹமுடையவன்) “ஆவாவென்றருள் செய்து” என்று ஐயோ ஐயோ என்று என் பக்கலிலே க்ருபையைப் பண்ணியென்றும், “தானே யின்னருள் செய்து” என்று நான் அர்த்தியாதிருக்கத் தானே தன் பேறாக க்ருபை பண்ணியென்றும், “கலியுகமொன்று மின்றிக்கே தன்னடியார்க்கருள் செய்யும்” என்று தன்பக்கலிலே ந்யஸ்த பரரானவர்களுக்கு கலிதோஷங்களொன்றும் வாராதபடியாக க்ருபை பண்ணுமென்றும், “பெருமானது தொல்லருளே” என்று ஸர்வேச்வரனுடைய ஸ்வாபாவிக க்ருபையென்றுஞ் சொல்லுகிறபடியே, “அம்மானாழிப்பிரானவனெவ்விடத்தான் யானார் எம்மாபாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்” என்று “கையும் திருவாழியுமானவழகை நித்யஸூரிகளுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டு அங்குள்ளாருடனே பரிமாறியிருக்கிற ஸர்வேச்வரனானவன் எவ்வளவிலே! நித்ய ஸம்ஸாரிகளுக்கு மிவ்வருக்கான நான் எவ்வளவிலே!” என்று கீழ்ச் சொன்ன தன்னுடைய பரத்வ காரணத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வாதிகளால் வந்த உத்கர்ஷத்தையும் தங்களுடைய நிகர்ஷத்தையும் அநுஸந்தித்து அகலும்படி யெத்தனையேனும் மஹாபாபிகளளவிலும், கர்மாநுகுண நிர்வாஹத்துக்குடலான தன் நிரங்குச ஸ்வாதந்தர்யமாகிற கரையும், தன்னநுக்ரஹம் தங்கள் பக்கல் வாராதபடி அபராதங்களையே பண்ணுமிவர்கள் ஔபாதிக ஸ்வாதந்தர்யமாகிற கரையும் அழியப் பெருகா நிற்குமான க்ருபா ப்ரவாஹத்தையுடைய ஸர்வேச்வரன், (பொய் கூத்து வஞ்சக்களவு தவிர) “பொய்யே கைம்மை சொல்லி”, “என்றென்றே சில கூத்துச் சொல்ல”, “உன்னையும் வஞ்சிக்கும் கள்ளமனந் தவிர்ந்தே” என்று மெய்கலவாத பெரும்பொய்யைச் சொல்லி, ப்ரேம பரவசரைப் போலே பாவித்து, ஹ்ருதயம் ப்ராக்ருத விஷய ப்ரவணமாயிருக்க, அநந்ய ப்ரயோஜநரைப்போலே உன் ஒளதார்யத்தையும் வடிவழகையும் ஸஹ்ருதயமாகச் சொல்லுகிறாரென்று தோன்றும்படி பலகாலுஞ் சொல்லா நின்று கொண்டு, ஸர்வஜ்ஞனானவுன்னையும் பகட்டும் க்ருத்ரிம யுக்தமான மனஸ்ஸைத் தவிர்ந்தென்று அவற்றை இவர் தவிரும்படி. (முற்றவும் தானாய் உன்னை விட்டென்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்) “என்னை முற்றவும் தானானான்” என்று இவர்க்கு ஸர்வவித போக்யமும் தானாய், “இனியுன்னை விட்டென் கொள்வனே” என்று நான் விட்டவன்றும் விடமாட்டாத வுன்னை யொழிய துராராதமாய், வருந்தியாராதித்தாலும் கிடைப்பதொன்றில்லாத விஷயங்களைப் பற்றவோவென்று இவர் தாமே பேசும்படி பண்ணின “கண்ட சதிர் கண்டொழிந்தேன்” என்கிறபடியே அவன் போக்யதையாலே அந்ய விஷயங்களையடைய வுபேக்ஷிக்கும்படி கீழில் பத்தில் பிறந்த விரக்திக்கு பலமான “பரமாத்மநி யோ ரக்த:” என்கிற பரமாத்ம விஷயத்தில் ராகமானது. [2] (பேரமர் பின்னின்று கழியமிக்கு யானே யென்னவாய்ந்தாற்றகில்லாது நீராய் மெலியவூடு புக்கு வளர) “பேரமர் காதல்” என்று அபரிச்சேத்யமாய்ப் பொருந்தி, “பின்னின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடும்” என்று பிடரிபிடித்து நின்று நெஞ்சை முடிக்கும்படியாய், “கழியமிக்கதோர் காதல்” என்று பார்ச்வஸ்த்தர்க்குப் பேசும்படி மிகவும் கைகழிந்து, “கடல் ஞாலம் செய்தேனும் யானே” என்று தொடங்கி, “வாய்ந்த வழுதி வளநாடன்” என்று அவனுடைய ஜகத்காரணத்வாதி அத்புத கர்மங்களை நானே செய்தேனென்று அநுகார முகத்தாலே விஷயத்தைக் கிட்டிப் பேசும்படியாய், “உன்னை விட்டொன்று மாற்றகிற்கின்றிலேன்” என்று அவனையொழிய ஒரு க்ஷணமும் தரித்திருக்க மாட்டாதபடியாய், “ஆராவமுதே யடியேனுடலம் நின்பாலன்பாயே நீராய்” என்று விஷய போக்யதாதிசயத்தால் வந்த ப்ராவண்யத்தாலே ஜ்ஞாநாச்ரயமான ஆத்மாவாதல் ஜ்ஞாந ப்ரஸரண த்வாரமான மனஸ்ஸாதலன்றிக்கே ஆத்மாவுக்கு ஆயதநமான சரீரமும் சிதிலமாம்படியாய், “வைகலும் வினையேன் மெலிய” என்று அந்த சைதில்யந்தான் காதாசித்கமன்றிக்கே ஸர்வகாலமும் மெலியும்படியாய், “நிறந்தனூடு புக்கெனதாவியை நின்று நின்றுருக்கி யுண்கின்ற” என்று பகவத்குணங்கள் மர்மத்திலே புகுந்து ஆத்மாவை யிடைவிடாமல் த்ரவ த்ரவ்யமாக்கும்படி அபிவ்ருத்தமாக. [3] (விஷவ்ருக்ஷ பலங்கள் கைகூடினவர்) இப்படி பகவத்ப்ரேமம் வருகையாலும் பாகவதர்களோடே கூடப்பெறுகையாலும், “ஸம்ஸார விஷ வ்ருக்ஷஸ்ய த்வே பலே ஹ்யம்ருதோபமே, கதாசித் கேசவே பக்திஸ் தத் பக்தைர்வா ஸமாகமா” என்று ஸம்ஸாரமாகிற விஷ வ்ருக்ஷத்தில், அம்ருதோபம் பலங்களாகச் சொல்லப்பட்ட பகவத் பக்தியும் பாகவத ஸமாகமமுமாகிற பலத்வயமும் கைபுகுந்தவிவர். (அடிமைபுக்காரையும் ஆட் செய்வாரையுங் காண லோகத்வீபாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு) “ஒன்றுந்தேவி”லே “மற்றெத் தெய்வம் நாடுதிர்”, “பாடியாடிப் பரவிச் சென்மின்கள்”, “தெய்வம் மற்றில்லை”, “நாயகனவனே”, “ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே”, “அறிந்தோடுமின்”, “ஆதிமூர்த்திக்கடிமை புகுவதுவே”, “மற்றைத் தெய்வம் விளம்புதிர்”, “உளங்கொள் ஞானத்து வைம்மின்”, “ஆட்செய்வதே உறுவதாவது” என்று தேவதாந்தராவரத்வ பூர்வகமாக பகவத் பரத்வத்தையும், பகவதாச்ரயண ப்ரகாரத்தையும் பகவத் கைங்கர்யமே புருஷார்த்தமென்னுமத்தையும் தெளிய வுபதேசிக்கக் கேட்டுத் திருந்தி யடிமை புக்க ஸ்ரீவைஷ்ணவர்களையும், “ஆட்செய்தாழிப்பிரானைச் சேர்ந்தவன்” என்று இப்படி திருத்துகையாலே அடிமை செய்தாரான தம்மையும் காண்கைக்கு, “வைகுந்தன் பூதங்களேயாய்”, “தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்”, “தேவர்கள் தாமும் புகுந்து” என்னும்படி லோகாந்தரமான ஸ்ரீவைகுண்டத்திலுள்ளாரையும் த்வீபாந்தரமான ச்வேத த்வீபத்திலுள்ளராயும், “நேமிப்பிரான் தமர் போந்தார்” என்கிறபடியே வந்த நித்யஸூரிகளும் முக்தப்ராயருமான தேவர்களுடைய திரள்களை, “கண்டோம் கண்டோம்” என்று கண்ணுக்கினியதா யிருக்கையாலே கண்டோமென்று பலகாலும் சொல்லும்படி கண்டு, “பொலிக பொலிக” என்று அத்திரள் அபிவ்ருத்தமாயிடுகவென்று மங்களாசாஸநம் பண்ணி, (ப்ரஹ்லாத விபீஷணர் சொல் கேளாத அரக்கரசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து) “த்வய்யஸ்தி மய்யஸ்திச” என்று ப்ரஹ்லாதனுபதேசிக்கக் கேட்டும் திருந்தாத வஸுரனான ஹிரண்யனையும், “ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ” என்று ஸ்ரீவிபீஷணாழ்வா னுபதேசிக்கக் கேட்டும் திருந்தாத ராக்ஷஸனான ராவணனைப் போலேயும், கீழ் தாமுபதேசித்ததில் திருந்தாமல் கிடந்த ராக்ஷஸ ப்ரக்ருதிகளும் ஆஸுர ப்ரக்ருதிகளுமாயுள்ளாரை “அரக்கரசுரர் பிறந்தீருள்ளீரேல்” என்று தேடிப்பிடித்து. [4] (தேசகாலதோஷம் போக வெங்குமிடங் கொண்டவர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்) “கொன்றுயிருண்ணும் விசாதி பகை பசி தீயனவெல்லாம் நின்றிவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர்போந்தார்”, “திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து” என்கிறபடியே சரீரத்தை முடித்து ப்ராணாபஹாரம் பண்ணக் கடவதான வ்யாதி, அப்படி செய்யும் பகை பசி முதலான தேசதோஷமும், “பவிஷ்யத்யதரோத்தரம்” என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள் வேறுபடும்படியான கலி ப்ரயுக்தமான காலதோஷமும், தங்கள் ஸஞ்சாரத்தாலே போம்படி, “இரியப் புகுந்திசை பாடியெங்கு மிடங்கொண்டன” என்கிறபடியே பகவதநுபவ ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே பெரியவாரவாரத்தோடே புகுந்து ப்ரதிகூலர்க்கிடமில்லாதபடி ஸர்வப்ரதேசத்திலும் பரம்பினவர்களை, “மேவித் தொழுதுய்மினீர்கள்” என்று நீங்கள் அநந்யப்ரயோஜாராய்க் கொண்டு ஆச்ரயித்துஜ்ஜீவியுங்கோள்; அவ்வளவு போகமாட்டாதே தேவதாந்தர ப்ராவண்யத்தாலே பகவத் வைபவமளிகைக்கீடான அளவிலிகளாகில், (நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை) “நிறுத்தி நும்முள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள்” என்று அவை தனக்கு ஸ்வத: உத்கர்ஷமில்லாமையாலே வசநாபாஸங்களாலும் யுக்த்யாபாஸங்களாலும் நீங்கள் சேமம் சாத்தி நிறுத்திப் புறம்பே சிலரறியில் அபஹஸிப்பர்களென்று உங்கள் நெஞ்சுக்குள்ளே நீங்களறிந்ததாக வுபாஸிக்கும் தேவதைகளை, “நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வநாயகன்தானே” என்று ராஜாவானவன் ஊர்தோறும் கூறு செய்வார்களை நிறுத்துமாபோலே உங்களுக்காச்ரயணீயராக நிறுத்தின ஸர்வேச்வரனை. [5] (மேவிப்பரம்புமவரோடொக்கத் தொழில் யுகதோஷமில்லையா மென்று) “நக்கபிரானோ டயனுமிந்திரனும் முதலாகத் தொக்க வமரர் குழாங்கள் கண்ணன் திருமூர்த்தியை மேவி மிக்கவுலகுகள் தோறும் எங்கும் பரந்தன ஒக்கத்தொழகிற்றிராகில் கலியுகமொன்றுமில்லை” என்று ருத்ரனோடே ப்ரஹ்மாவுமிந்திரனும் முதலாகத் திரண்ட தேவதா ஸமூஹங்கள் க்ருஷ்ணனுடைய அஸாதாரண விக்ரஹத்தை சுபாச்ரயமாகப் பற்றி விஸ்த்ருதமான லோகங்களெங்குமொக்கப் பரந்து விபூதி விஸ்தாரத்தை யுடையரானார்கள். அவர்களைப் போலே நீங்களும் அவனையாச்ரயிக்கப் பெறில் விபரீத ப்ரவர்த்தகமான கலியுக தோஷமுங்களுக்குத் தட்டாதென்றுபதேசித்து. (விஷ்ணு பக்தி பரராக்கி) “விஷ்ணு பக்திபரோ தேவ:” என்கிறபடியே “அரக்கரசுரர்” என்னுமது போய் தேவ சப்த வாச்யராம்படி பகவத்பக்தி பரராகத் திருத்தி. (கண்ணுக்கினியன காட்டலாம்படியானார் கண்ணிலே நோக்கிக் காணும் பக்திஸித்தாஞ்ஜநத்தை யிடுகிறார் அஞ்சாம்பத்தில்) அதாவது திருந்தாதாரைத் திருத்தினவளவன்றிக்கே முன்பே திருந்தி “கண்ணுக்கினியன் கண்டோம் தொண்டீரெல்லீரும் வாரீர்” என்னும்படி பாகவத ஸமாஜ தர்சநமினிதாம்படி அவ்விஷயத்தில் சாபலமுடையராய் உபாயாத்யவஸாய தசையிலே நின்று ப்ராப்ய தசையிலே நிற்கிற தம்மைப் பொடியும்படியானவர்களுடைய உபாயாத்யவஸாயஜ்ஞானத்தின் மேலே, “என்னெஞ்சினால் நோக்கிக் காணீரென்னை முனியாதே”, “மநஸி விலஸ தாக்ஷ்ணா பக்திஸித்தாஞ்ஜநேந” என்கிறபடியே ஸித்தாஞ்ஜநம் போலே கூடார்த்தத்தை ப்ரகாசிப்பிப்பதாய் ப்ராப்ய வைலக்ஷண்யத்தை விஷயீகரித்ததான பக்தியை உபதேசமுகேந உண்டாக்குகிறார் அஞ்சாம் பத்திலென்கை.

(ஆஆ என்று) – திருவாய்மொழி (5-1-9) - ஆ ஆ என்றருள் செய்து - என்பதற்கு ஏற்ப “ஐயோ ஐயோ” என்று பதறியபடி என்னிடம் க்ருபை செய்து என்றும், (தானே) - திருவாய்மொழி (5-1-10) – தானே இன்னருள் செய்து - என்பதற்கு ஏற்ப நான் விண்ணப்பம் செய்யாமல் இருந்தபோதிலும் தானே தனது பேறு என்று எண்ணி எனக்கு க்ருபை செய்து என்றும், (தன் அடியார்க்குச் செய்யும்) – திருவாய்மொழி (5-2-11) - கலியுகம் ஒன்றுமின்றிக்கே தன்னடியார்க்கருள் செய்யும் - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனாகிய தன்னிடம் தங்களுடைய பாரங்கள் அனைத்தையும் வைத்தவர்களுக்கு கலியின் தோஷங்கள் ஏதும் வராதபடியாக க்ருபை செய்த என்றும், (தொல் அருள் என்று) - திருவாய்மொழி (5-9-9) - பெருமானது தொல்லருளே – என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுடைய இயல்பாகவே அமைந்த க்ருபை என்றும் பலவிதமாகக் கூறுவதற்கு ஏற்ப, (பரத்வாதிகளை யுடையவனெவ்விடத்தானென்னும் பாவியர்க்கும்) - திருவாய்மொழி (5-1-7) - அம்மானாழிப்பிரானவனெவ்விடத்தான் யானார் எம்மாபாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் - என்பதற்கு ஏற்ப, “திருக்கரமும் திருச்சக்கரமும் என்றுள்ள அழகை நித்யஸூரிகளுக்குக் காட்சி அளித்தபடி அங்குள்ள அனைவருடன் சேர்ந்து நிற்கின்ற ஸர்வேச்வரன் எத்தகையவன்! நித்யமான ஸம்ஸாரிகளுக்கு அருகில் எப்போதும் உள்ள நான் எத்தகையவன்!” என்பதாக இதுவரை உள்ள பத்துக்களில் கூறப்பட்ட ஸர்வேச்வரனாகிய தன்னுடைய பரத்வம், அனைத்திற்கும் காரணமாக உள்ள தன்மை, அனைத்திலும் வ்யாபித்துள்ள தன்மை, அனைத்தையும் நியமித்தபடி உள்ள தன்மை போன்ற பலவற்றால் தனக்கு உள்ள உயர்வினையும், ஸம்ஸாரிகளாகிய தங்களுடைய தாழ்வையும் எண்ணியபடி அகல்பவர்களாக எத்தனை மஹாபாபிகளாக உள்ளபோதிலும். (இருகரையும் அழிக்கும் க்ருபா ப்ரவாஹ முடையவன்) - ஸம்ஸாரிகளுடைய கர்மங்களுக்கு ஏற்றபடியாக அவர்களை நடத்துவதாக உள்ளதான தடையற்ற தனது சுதந்திரம் என்ற கரையும், ஸர்வேச்வரனுடைய க்ருபையானது தங்களை அண்டாதபடி அபராதங்களை மட்டும் செய்பவர்களுடைய செருக்கு என்பதற்குக் காரணமாக உள்ள “சுதந்திரமாக எண்ணுதல்” என்ற கரையும் அழியும்படியாகப் பெருகி வருகின்ற க்ருபை என்ற வெள்ளத்தைக் கொண்ட ஸர்வேச்வரன். (பொய் கூத்து வஞ்சக்களவு தவிர) - திருவாய்மொழி (5-1-1) – பொய்யே கைம்மை சொல்லி - என்றும், திருவாய்மொழி (5-1-2) - என்றென்றே சில கூத்துச் சொல்ல – என்றும், திருவாய்மொழி (5-1-3) - உன்னையும் வஞ்சிக்கும் கள்ளமனந் தவிர்ந்தே – என்றும் கூறுவதற்கு ஏற்ப உண்மை என்பது சிறிதும் இல்லாதபடி பெரும் பொய்யை மட்டுமே உரைத்து, ப்ரேமை காரணமாகப் பரவசம் அடைந்தவர்கள் போன்று பாவித்து, உள்ளமானது எப்போதும் இந்த உலகியல் பொருள்களில் மட்டுமே ஈடுபாட்டுடன் இருக்க, உன்னை அல்லாமல் வேறு எந்தப் பயனையும் எண்ணாமல் உள்ளவர்கள் போன்று, உன்னுடைய ஔதார்யத்தையும், வடிவழகையும் ஆழ்ந்த உள்ளன்புடன் உரைக்கிறார்கள் என்பது வெளிப்படும்படியாகப் பலமுறை உரைத்தபடி நின்று, அனைத்தும் அறிந்தவனாகிய உன்னையும் பகட்டும் கள்ள மனத்தினைத் தவிர்ந்து என்று அவற்றை இவர் தவிரும்படியாக. (முற்றவும் தானாய்) – திருவாய்மொழி (5-1-10) – என்னை முற்றவும் தானானான் - என்று கூறுவதற்கு ஏற்ப நம்மாழ்வாராகிய இவருக்கு அனைத்துவிதமான இன்பம் அளிக்கின்ற பொருள்களும் தானே என்று, (உன்னை விட்டு என்னைப் பண்ணின) - திருவாய்மொழி (5-1-3) – இனியுன்னை விட்டென் கொள்வனே - என்பதற்கு ஏற்ப நான் விட்டாலும் கூட என்னை விடாமல் இருந்த உன்னைத் தவிர்த்து வருந்தி ஆராடதிக்கத் தக்கதாக; அதாவது வருந்தி ஆராதித்தாலும் அதன் மூலம் கிட்டவல்ல பயன் ஏதும் இல்லாத மற்ற விஷயங்களைப் பற்றவேண்டுமோ என்று இவர் தாமே உரைக்கும் விதமாகச் செய்த. (விரக்தி பலம்) - திருவாய்மொழி (4-9-10) - கண்ட சதிர் கண்டொழிந்தேன் - என்பதற்கு ஏற்ப அவனுடைய இனிமை காரணமாக மற்ற விஷயங்கள் அனைத்தையும் தவிர்க்கும்படியாகக் கடந்த பத்தில் ஏற்பட்ட விரக்தியின் பலனாக. (பரமாத்ம ராகம்) – பரமாத்மநி யோ ரக்த: - யார் ஒருவன் பரமாத்மாவிடம் மிகுந்த பக்தி கொண்டவனாக - என்பதாக உள்ள பரமாத்மா விஷயத்தில் ஏற்பட்ட விருப்பம் என்பது. (பேரமர்) - திருவாய்மொழி (5-3-3) – பேரமர் காதல் - என்பதற்கு ஏற்ப அளவிட இயலாதபடியாகப் பொருந்தி. (பின்னின்று) - திருவாய்மொழி (5-4-6) - பின்னின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடும் - என்பதற்கு ஏற்ப பிடரியைப் பிடித்து நின்று உள்ளத்தை முடிக்கும்விதமாக. (கழியமிக்கு) - திருவாய்மொழி (5-5-10) – கழியமிக்கதோர் காதல் – என்பதற்கு ஏற்ப அருகில் உள்ள அனைவரும் பேசும்படியாக மிகவும் கை கழிந்து. (யானே என்னவாய்ந்து) - திருவாய்மொழி (5-6-1) - கடல் ஞாலம் செய்தேனும் யானே - என்று தொடங்கி, திருவாய்மொழி (5-6-1) - வாய்ந்த வழுதி வளநாடன் - என்று முடிவதாக உள்ள பாசுரங்களில் அவனுடையதாக உள்ள ஜகத்காரணம் போன்ற வியக்கவைக்கும் செயல்களை நானே செய்தேன் என்று உரைக்கும்படியாக. (ஆற்றகில்லாது) - திருவாய்மொழி (5-7) – ஆராவமுதே யடியேனுடலம் நின்பாலன்பாயே நீராய் - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுடைய் இனிமையின் மிகுதியால் விளைந்த ப்ரேமையால் ஞானத்திற்கு ஆதாரமாக உள்ள ஆத்மாவும், ஞானம் வெளிப்படும் வழியாக உள்ள மனமும் அழியும்படியாக. (மெலிய) – திருவாய்மொழி (5-9) – வைகலும் வினையேன் மெலிய - என்பதற்கு ஏற்ப சரீரத்தில் அத்தகைய நிலை குலைதல் என்பது ஒரு காலகட்டத்தில் மட்டுமே என்பதாக இன்றி அனைத்து காலங்களிலும். (ஊடு புக்கு வளர) - திருவாய்மொழி (5-10) - நிறந்தனூடு புக்கெனதாவியை நின்று நின்றுருக்கி யுண்கின்ற - என்பதற்கு ஏற்ப பகவானுடைய குணங்கள் அனைத்தும் உட்புகுந்து ஆத்மாவை இடைவிடாமல் நீர்ப்பண்டம் போன்று உருக்கும்விதத்தில் வளர. (விஷவ்ருக்ஷ பலங்கள் கைகூடினவர்) - இவ்விதம் பகவத் ப்ரேமை வளர்ந்தபடி உள்ளதாலும், பாகவதர்களுடன் சேர்ந்தபடி உள்ள நிலை கிட்டப் பெறுவதாலும், ஸம்ஸார விஷ வ்ருக்ஷஸ்ய த்வே பலே ஹ்யம்ருதோபமே, கதாசித் கேசவே பக்திஸ் தத் பக்தைர்வா ஸமாகமா - ஸம்ஸாரம் என்று விஷமரத்தில் அமிர்தத்தைப் போன்று இரு கனிகள் உள்ளன; அவையாவன கேசவனிடம் பக்தி மற்றும் அவனுடைய அடியார்களுடன் சேர்ந்திருத்தல் என்பதாகும் - என்பதற்கு ஏற்ப ஸம்ஸாரமாகிற மரத்தில் அமிர்தம் போன்ற பலன்களாகக் கூறப்பட்ட பகவத் பக்தியும் பாகவத சேர்த்தியும் என்பதான இரண்டு கனிகள் கைகூடப்பெற்ற இவர். (அடிமை புக்காரையும்) – திருவாய்மொழி (4-10) ஒன்றும் தேவும் - என்ற திருவாய்மொழியில், திருவாய்மொழி (4-10-1) – மற்றெத் தெய்வம் நாடுதிர் – எ்றும், திருவாய்மொழி (4-10-2) – பாடியாடிப் பரவிச் சென்மின்கள் - என்றும், திருவாய்மொழி (4-10-3) – தெய்வம் மற்றில்லை - என்றும் திருவாய்மொழி (4-10-4) - நாயகன் அவனே – என்றும், திருவாய்மொழி (4-10-5) – ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே - என்றும், திருவாய்மொழி (4-10-6) - அறிந்து ஓடுமின் – என்றும், திருவாய்மொழி (4-10-7) – ஆதிமூர்த்திக்கடிமை புகுவதுவே – என்றும், திருவாய்மொழி (4-10-8) - மற்றைத் தெய்வம் விளம்புதிர் – என்றும், திருவாய்மொழி (4-10-9) – உளங்கொள் ஞானத்து வைம்மின் - என்றும், திருவாய்மொழி (4-10-10) - ஆட்செய்வதே உறுவதாவது - என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், மற்ற தெய்வங்கள் உயர்ந்தவர்கள் அல்லர் என்பதன் மூலமாகப் பகவானுடைய உயர்த்தியையும், பகவானை அண்டுவதற்கான வழியையும், பகவானுக்குச் செய்யப்படும் கைங்கர்யமே புருஷார்த்தம் என்பதையும் மிகவும் தெளிவாக நம்மாழ்வார் உபதேசித்தார். இதனைக் கேட்டுத் திருந்தி பகவானுக்கு அடிமையான ஸ்ரீவைஷ்ணவர்களையும், (ஆட்செய்வாரையும்) - திருவாய்மொழி (4-10-11) – ஆட்செய்தாழிப்பிரானைச் சேர்ந்தவன் - என்பதற்கு ஏற்ப இவ்விதம் திருத்துவதன் மூலம் அவனுக்கு அடிமையாகிய தன்னையும். (காண) - காண்பதற்காக. (லோக த்வீபாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குழாங்களை) - திருவாய்மொழி (5-2-5) – வைகுந்தன் பூதங்களேயாய் – என்றும், திருவாய்மொழி (5-2-4) – தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய் - என்றும், திருவாய்மொழி (5-2-3) - தேவர்கள் தாமும் புகுந்து – என்றும் கூறுவதற்கு ஏற்ப அந்த லோகமான ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளவர்களாகவும், மற்ற த்வீபங்களான ச்வேதத்வீபத்தில் உள்ளவர்களாகவும், திருவாய்மொழி (5-2-6) – நேமிப்பிரான் தமர் போந்தார் - என்பதற்கு ஏற்ப வந்தவர்களான நித்யஸூரிகளையும், முக்தர்கள் போன்றவர்களான தேவர்களையும், திருவாய்மொழி (5-2-2) – கண்டோம் கண்டோம் – என்று கூறுவதற்கு ஏற்ப, கண்களுக்கு இனிமையாக உள்ளதால் “கண்டோம்” என்று பலமுறை உரைக்கும் விதத்தில் கண்டு, திருவாய்மொழி (5-2-1) - பொலிக பொலிக - என்று அந்தக் கூட்டமானது மேன்மேலும் வளரவேண்டும் என்று உரைத்து. (ப்ரஹ்லாத விபீஷணர் சொல் கேளாத அரக்கரசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து) - த்வய்யஸ்தி மய்யஸ்திச - உன்னிடமும் என்னிடமும் உள்ளான் - என்று ப்ரஹ்லாதன் உபதேசித்தபோதிலும் அதனைக் கேட்டுத் திருந்தாத அஸுரனாகிய ஹிரண்யனையும், ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ - இராமனிடம் சீதையைச் சேர்ப்பாயாக – என்று விபீஷணன் உபதேசம் செய்ததைக் கேட்டும் திருந்தாத ராக்ஷஸனாகிய இராவணனையும் போன்று, நம்மாழ்வாராகிய தான் இதுவரை செய்த உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுத் திருத்தாத ராக்ஷஸர் மற்றும் அஸுரர் போன்ற பலரையும் திருவாய்மொழி ( 5-2-5) - அரக்கரசுரர் பிறந்தீருள்ளீரேல் - என்று தேடிப் பிடித்து. – (தேச தோஷம் போக) – திருவாய்மொழி (5-2-6) – கொன்றுயிருண்ணும் விசாதி பகை பசி தீயனவெல்லாம் நின்றிவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர்போந்தார் - என்பதற்கு ஏற்ப சரீரத்தை முடித்து உயிரை எடுக்கவல்ல நோய், அவ்விதம் செய்வதான பகை பசி முதலான இடத்தின் குற்றங்கள் ஆகிய அனைத்தும் தங்களுடைய ஸஞ்சாரம் மூலம் விலகும்படியும். (கால தோஷம் போக) - திருவாய்மொழி (5-2-3) - திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து - என்பதற்கு ஏற்ப பொருள்களின் இயல்புகள் வேறுபடும்படியாக கலிபுருஷனால் ஏற்படுகின்ற காலத்தின் தோஷங்கள் அனைத்தும் தங்களுடைய ஸஞ்சாரம் மூலம் விலகும்படியும். (எங்கும் இடம் கொண்டவர்களை) – திருவாய்மொழி (5-2-3) - இரியப் புகுந்திசை பாடியெங்கு மிடங்கொண்டன - என்பதற்கு ஏற்ப பகவானை அனுபவிப்பதன் காரணமாக ஏற்படுகின்ற மிகுந்த மகிழ்வின் விளைவாக பெரிய ஆரவாரத்துடன் புகுந்து பகவத்பக்தி இல்லாதவர்களுக்கு இடம் இல்லாதபடிச் செய்து, தாங்களே அனைத்து இடங்களிலும் பரவி நிற்பவர்களை (மேவித்தொழுது உஜ்ஜீவியுங்கோள்) - திருவாய்மொழி (5-2-9) - மேவித் தொழுதுய்மினீர்கள் - என்பதற்கு ஏற்ப வேறு எந்தப் பயனையும் எதிர்பாராமல் நீங்கள் அடைந்து பிழைப்பீர்களாக. (நீங்கள் நிறுத்துகிறவர்களை) - இவ்விதம் செய்யாமல் மற்ற தெய்வங்களிடம் நீங்கள் வைத்த ஈடுபாடு காரணமாக பகவானுடைய மேன்மையை அறிவதற்கான தகுதியுள்ள அறிவு அற்றவர்கள் என்றால், திருவாய்மொழி (5-2-7) - நிறுத்தி நும்முள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் - என்பதற்கு ஏற்ப தங்களுக்கு இயல்பாகவே எந்தவிதமான உயர்வும் இல்லாமையால், போலியான சொற்களாலும் போலியான யுக்திகளாலும், நீங்கள் உங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மற்றவர்கள் இது போன்று வழிபடுவதை அறிந்தால் பரிகாசம் செய்வார்கள் என்று எண்ணியபடி, உங்களுடைய உள்ளத்தில் மட்டுமே வைத்தபடி உபாஸிக்கும் தெய்வங்களை, திருவாய்மொழி (5-2-8) - நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வநாயகன்தானே – என்பதற்கு ஏற்ப அரசன் ஒருவன் ஒவ்வொரு ஊரிலும் கூறு செய்பவர்களை நிறுத்துவது போன்று உங்களால் அடையத்தக்கவர்களாக நிறுத்திய ஸர்வேச்வரனை. (மேவிப்பரம்புமவரோடொக்கத் தொழில் யுகதோஷமில்லையா மென்று) - திருவாய்மொழி (5-2-10) - நக்கபிரானோ டயனுமிந்திரனும் முதலாகத் தொக்க வமரர் குழாங்கள் கண்ணன் திருமூர்த்தியை மேவி மிக்கவுலகுகள் தோறும் எங்கும் பரந்தன ஒக்கத்தொழகிற்றிராகில் கலியுகமொன்றுமில்லை - என்பதற்கு ஏற்ப ருத்ரனுடன், நான்முகன் இந்த்ரன் போன்ற பலரும் ஒன்றாகத் திரண்ட தேவர்களுடைய கூட்டங்கள் அனைத்தும் க்ருஷ்ணனுக்கே உரியதான திருமேனியைத் தங்களுக்கு நன்மை அளிக்கவல்ல இடமாகப் பற்றி நின்று, பரந்து விரிந்துள்ள லோகங்கள் அனைத்திலும் இவர்கள் ஒரே போன்று பரந்து, அனைத்து லோகங்களிலும் நிறைந்துள்ளனர். அவர்களைப் போன்றே நீங்களும் அவனை அடைந்தால் தீமைகளை ஏற்படுத்துகின்ற கலியின் தோஷங்கள் உங்களைச் சிறிதும் அண்டாது என்று உபதேசித்து. (விஷ்ணு பக்தி பரராக்கி) – விஷ்ணு பக்திபரோ தேவ: - விஷ்ணுவிடம் பக்தி கொண்டவன் தேவனாகவே ஆகிறான் - என்பதற்கு எற்ப, திருவாய்மொழி (5-2-5) – அரக்கர் அசுரர் - என்னும் நிலை மாறி, தேவன் என்று கூறலாம்படியாக பகவானிடம் பக்தி கொண்டவராகத் திருத்தி. (கண்ணுக்கினியன காட்டலாம்படியானார் கண்ணிலே) - அதாவது திருந்தாதவர்களைத் திருத்தியதுடன் மட்டும் நிற்காமல், முன்பே திருந்தி, திருவாய்மொழி (5-2-2) - கண்ணுக்கினியன் கண்டோம் தொண்டீரெல்லீரும் வாரீர் - என்பதற்கு ஏற்ப பாகவதர்களுடைய கூட்டத்தைக் காணுதல் என்பதே இனிமை என்று உணரும்படியாக பாகவதர்களிடம் மிகுந்த ஆசை கொண்டவர்களாக, உபாயத்தில் துணிவு என்னும்படியாக நின்று, பேற்றை அடையும் நிலையில் உள்ள தன்னையும் கூட பொடியும்படியாக உள்ளவர்களுடைய “உபாயத்தில் துணிவு” என்ற ஞானத்தின் மேலே, (நோக்கிக் காணும் பக்திஸித்தாஞ்ஜநத்தை யிடுகிறார்) - திருவாய்மொழி (5-5-2) – என்னெஞ்சினால் நோக்கிக் காணீரென்னை முனியாதே - என்றும், ஸ்ரீகுணரத்நகோசம் (12) - மநஸி விலஸ தாக்ஷ்ணா பக்திஸித்தாஞ்ஜநேந - பக்தி என்னும் ஸித்தாஞ்ஜனத்தைக் கொண்ட மனதில் விளங்கும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ள ஸித்தாஞ்ஜநம் போண்று, மறைந்துள்ள ஆழ்பொருளை விளக்குவதாக பேற்றின் பெருமையை உள்ளடக்கியதான பக்தியைத் தகுந்த உபதேசம் மூலம் ஜந்தாம் பத்தில் வெளியிட்டார்.