Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 222)

நான்காம் ப்ரகரணம்

(1) ஈசனையீச னீசன் பாலென்ன ஏர்கொள்வானத்தும் ஆயேயென்கிற வ்யாப்தி நிறம் பெறத் தனிக்கோல் செலுத்தும் ஸர்வ நியந்தா, ஒழிவில் காலத்துக்குச் சேரப் பூர்வபோகங்களை யோதுமாலெய்தின சபலத்துக்குச் சேர ஸமகாலமாக்கிப் [2] போதால் வணங்காமை தீர்த்த ப்ரணயித்வத்திலே காதல் மையல் ஏறிய பித்தாய், [3] தேசதூரத்துக்குக் கூவியுங் கொள்ளாயென்றது தீரக் கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட, வீவிலின்பம் கூட்டினையென்று முக்தபோக மாநஸ ப்ராப்தி பலமான தேவதாந்தர ஆத்மாத்மீய லோக யாத்ரைச்வர்யாக்ஷரங்களில் வைராக்யம், உன்னித்து உயிருடம்பினால் கொடுவுலகம் வேட்கையெல்லாமொழிந்தே னென்னவுடையரானவர், [4] ஒரு நாயகமென்று ராஜ்ய ஸ்வர்க்காத்மாநுபவ அல்பாஸ்திரத்வ ஸாவதிகத்வாதிகளையும், [5] ஆடு கள்ளிறைச்சி கருஞ்செஞ்சோறாகிற நிந்த்யங்களாலே இளந்தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும், [6] பேச நின்ற தேவதாஜ்ஞாநா சக்தி ஸாபேக்ஷத்வாதிகளையும் [7] இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோநிஷ்டதையையும் சொல்லி, ஓடிக்கண்டீர் (8) கண்டும் தெளியகில்லீர் அறிந்தோடுமின் ஆட்செய்வதே உறுவதாவதென்று விரக்தி பூர்வகமாக ஆச்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம்பத்தில்.

நாலாம்பத்தால் கீழ்ச் சொன்ன வ்யாப்தி, ஆகாச வ்யாப்தி போலன்றிக்கே நிறம் பெறும்படி, “அந்த: ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜநாநாம்”, “ய ஆத்மாநமந்தரோ யமயதி”, “சாஸ்தா விஷ்ணுரசேஷஸ்ய ஜகத:”, “சாஸ்தா சராசரஸ்யைக:” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே, ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களின் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வாதீநமாம்படி நியமித்துக்கொண்டு போருகையாலே ஸர்வநியந்தாவாயிருக்கிறவன்*, “ஒழிவில் கால”த்தில் கைங்கர்யாபிநிவேசம் போலே, தேச கால விப்ரக்ருஷ்டமான அபதாநங்களை தத் தத் தேச கால விசிஷ்டமாக அநுபவிக்க வேணுமென்று அதிசாபலம் பண்ணின விவர்க்கு, காலோபாதியைக் கழித்து ஸமகாலமாக்கி அநுபவிப்பித்து, இவருடைய இழவைத் தீர்த்து, இவருடைய கரணத்ரய வ்யாபாரத்தையும் போக்யமாகக் கொள்ள,

கடந்த பத்தில், அதாவது மூன்றாம் பத்தில் கூறப்பட்டதான, எங்கும் வ்யாபித்து நிற்கும் குணமானது, ஆகாசம் போன்று அல்லாமல் நிறம் பெறும் விதத்தை, அந்த: ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜநாநாம் - ஆத்மாக்கள் அனைத்திலும் புகுந்து நியமனம் செய்து - என்றும், ய ஆத்மாநமந்தரோ யமயதி - ஆத்மவிற்குள் புகுந்து நியமிக்கிறான் - என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-17-20) – விஷ்ணுரசேஷஸ்ய ஜகத: - அனைத்து ஜகத்தையும் நியமிப்பவன் விஷ்ணுவே - என்றும், சாஸ்தா சராசரஸ்யைக: - அசையும் மற்றும் அசையாப் பொருள்கள் அனைத்தையும் நியமிப்பவன் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, தன்னைக் காட்டிலும் வேறுபட்ட அனைத்து வஸ்துக்களுடைய “அவை கர்மம் செய்தல், செய்யாமல் இருத்தல்” போன்றவை தனக்கு அடிபணிந்து நடக்கும்படியாக அவற்றை நியமித்துக் கொண்டு இருப்பதால், அனைத்தையும் நியமிப்பவனாக உள்ள ஸர்வேச்வரன், திருவாய்மொழி - ஒழிவில் காலம் - என்பதில் கூறப்பட்ட கைங்கர்ய ஆசை போன்று, வேறு இடம் காலம் ஆகியவற்றில் முடிந்து போன அவதாரங்களுடைய செயல்களை அந்தந்த இடம் மற்றும் காலத்தைப் போன்றே அனுபவிக்கவேண்டும் என்று மிகுந்த ஆசை கொண்ட நம்மாழ்வாருக்கு, காலத்தால் ஏற்படும் வேறுபாட்டை நீக்கிக் கொடுத்து, சமகாலமாக மாற்றி, அவரை அனுபவிக்கும்படிச் செய்து, அவருடைய இழப்பை நீக்கி, அவர் தம்முடைய மனம் வாக்கு மற்றும் சரீரத்தால் செய்யும் அனைத்தையும் இனியதாகவே கொண்டான்.

அந்த ப்ரணயித்வத்திலே தோற்று விரஹதசையில் ஸத்ருச பதார்த்தங்களையும் ஸம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகக் கருதும்படி பித்தேறி, தேச விசேஷத்தில நுபவத்தை யாசைப்பட்டுக் கூப்பிட, அவ்விழவு தீரும்படி, “வைகுண்டேது பரே லோகே” இத்யாதிப்படியே தேச விசேஷத்திலே பெரியபிராட்டியாரும் தானுமே போக்தாக்களாயிருக்கிற விருப்பைக் கிட்டியநுபவித்தாப் போலே ப்ரத்யக்ஷமாம்படி யநுபவிப்பிக்க வநுபவித்து, இப்படி முக்த போகத்யை மாநஸமாக ப்ராபித்து, அதுக்கு பலமான தேவதாந்தராதிகளில் வைராக்யத்தையுடையரான விவர் ஐச்வர்ய கைவல்யங்களின் அல்பாஸ்திரத்வ ஸாவதிகத்வாதி தோஷங்களையும், நிந்த்ய பதார்த்தங்களாலே க்ஷுத்ர தேவதா பஜநம் பண்ணுமதின் நிஹீநதையையும், ப்ரசம்ஸாபர வாக்யங்களாலே சொல்லப்பட்டு பகவத் விபூதிபூதராயிருக்கச் செய்தே, அவனோடே விகல்பிக்கலாம்படி அவன் கொடுத்த ஐச்வர்யத்தையுடையராயிருக்கிற ப்ரஹ்ம ருத்ரர்களுடைய அஜ்ஞாநாதிகளையும், பாஹ்ய குத்ருஷ்டி மதங்களின் தமோநிஷ்டதையையும் வெளியிட்டு, தேவதாந்தரங்களை யாச்ரயித்து தத் பலமும் கைகண்டிகோள் ஜகந்நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலே, ஸர்வேச்வரனே ரக்ஷகன், அல்லாதாரடைய தத் ரக்ஷ்ய பூதரென்னுமர்த்தத்தை சாஸ்த்ர முகத்தாலே கண்டு வைத்தும் தேறமாட்டி கிறிலிகோள், இப்படி நீங்கள் தேறாமைக்கடி அவனிட்ட வழக்கான ப்ரக்ருதி ஸம்பந்தம், தத் விமோசநோபாயமும் அவன் திருவடிகளிலாச்ரயண மென்றறிந்து ததாச்ரயணத்தைப் பண்ணி இத்தைத் தப்பப்பாருங்கோள்; அவன் திருவடிகளிலே கைங்கர்யமே உங்களுக்குச் சீரிய புருஷார்த்தமென்று ப்ரயோஜநாந்தர தேவதாந்தர விரக்தி முன்னாக பரதேவதையும் பரமப்ரயோஜநமும் அவனே, அவன் விஷயத்தில் கைங்கர்யமுமே யென்றுபதேசித்து, பகவதாச்ரயணத்தை ருசிப்பிக்கிறா ரென்கிறார். [1] (ஈசனை யீசனீசன் பாலென்ன ஏர்கொள் வானத்துமாயே என்கிற வ்யாப்தி நிறம் பெறத் தனிக்கோல் செலுத்தும் ஸர்வநியந்தா) “மறுகலிலீசனை”, “ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த”, “ஈசன் பாலோரவம் பறைதல்” என்று நியந்த்ரு வாசக சப்தத்தாலே சொல்லும்படி “ஏர்கொளேழுலகமும் துன்னிமுற்றுமாகி நின்ற சோதிஞான மூர்த்தியாய்”, “வானத்தும் வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்தானத்து மெண்டிசையும் தவிராது நின்றான்”, “ஆயே யிவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே” என்கிற கீழில் பத்தில் ஸர்வ விஷயமாகச் சொன்ன வ்யாப்தி ஆகாச வ்யாப்தி போலாகாமே நிறம் பெறும்படியாக “வீற்றிருந்தேழுலகும் தனிக்கோல் செல்ல” என்கிறபடியே உபயவிபூதியும் தன் நியமநத்திலேயாம்படி தன்னாஜ்ஞை நடத்துகிற ஸர்வ நியந்தாவான ஸர்வேச்வரன். (ஒழிவில் காலத்துக்குச் சேர பூர்வ போகங்களை யோதுமாலெய்தின சாபலத்துக்குச் சேர ஸமகாலமாக்கி) “ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி” என்றடிமை செய்யப் பாரிக்கிறவளவில் ஸர்வதேச ஸர்வாவஸ்தைகளோபாதி ஸர்வகாலத்திலும் வேணுமென்று கீழ்க்கழிந்த காலத்தி லடிமையையு மாசைப்பட்டதுக்குச் சேரும்படி, “பாலனாயேழுலகுண்டு” என்று தொடங்கி தேச கால விப்ரக்ருஷ்டங்களான அவனுடைய அபதாநங்களை தத் தத் தேசகால விசிஷ்டமாக வநுபவிக்கையில் அபிநிவேசத்தாலே “ஆதியங்காலத்தகலிடங் கீண்டவர் பாதங்கள் மேலணி பைம்பொற்றுழாயென்றே ஓதுமா லெய்தினள்” என்று பூர்வகாலீந போகங்களையே வாய்புலற்றும்படி ப்ராந்தியையடைந்த சாபலத்துக்கு அநுரூபமாக காலத்தினுடைய பேதவ்யவஹாரத்துக்குடலான உபாதியைக் கழித்து ஒரு போகியாக்குகையாலே ஸமகாலமாக்கி யநுபவிப்பித்து. – [2] (போதால் வணங்காமை தீர்த்த ப்ரணயித்வத்திலே காதல் மையலேறிய பித்தாய்) “பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயா மேனிக்குப் பூசுஞ் சாந்தென்னெஞ்சமே” என்று தொடங்கி, “ஏகமூர்த்திக்கே, பூத்தண்மாலை கொண்டுன்னைப் போதால் வணங்கேனேலும் நின் பூத்தண்மாலை நெடுமுடிக்குப் புனையுங் கண்ணியெனதுயிரே” என்று விரோதி நிரஸநம் பண்ணுகிற அவ்வவ காலங்களிலே யுதவி, புஷ்பாத்யுபகரணங்களைக் கொண்டு சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேனாகிலும், விலக்ஷண விக்ரஹ் யுக்தனாய் ஸர்வேச்வரனா யிருக்கிறவன், என்னுடைய கரண த்ரய வ்யாபாராதிகளையே தனக்கு போக்ய வஸ்துக்க ளெல்லாமுமாகக் கொள்வதே என்றிவர் தாமே யீடுபடும்படி பண்ணி அவ்வோ காலங்களில் தனக்குதவி அடிமை செய்யப் பெறாதவிழவை, அவன் தீர்த்த ப்ரணயித்வ குணத்திலே “காதல் மையலேறினேன்” என்கிறபடியே ப்ரேமம் மேலிட்டு அறிவு கலங்கினவாறே வெள்ளக் கேடாகவொண்ணாதென்று அவன் அல்பம் பேரநிற்க, அவனோடு ஸத்ருச பதார்த்தங்களையும் ஸம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகவே கருதிப் பேசும்படியாக “பேய்ச்சி முலை சுவைத்தார்க்கென் பெண்கொடி யேறிய பித்தே” என்னும்படி பித்தேறி. [3] (தேசதூரத்துக்குக் கூவியுங் கொள்ளாயென்றது தீரக் கண்ட சதிரையுமொரு நிலமாகக் காட்ட) தேச விசேஷத்திலநுபவத்தை யாசைப்பட்டு, தேசதூரத்தைப் பற்ற “கோலமேனி காண வாராய் கூவியுங் கொள்ளாயே” என்று உன் வடிவழகை நீ வந்து அநுபவிப்பித்தருளுதல், என்னை யங்கே யருளப்பாடிடுதல் செய்கிறிலை யென்று கூப்பிட்ட விழவுந்தீர, “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் கண்டு” என்று நித்யவிபூதியிலே பெரியபிராட்டியாரும் நீயுமே போக்தாக்களாய் அவ்விபூதியிலுள்ளாரடைய போகோபகரண கோடியாம்படி கண்டு வைத்த நேர்பாட்டை நான் கண்டேனென்னும்படி, கீழ் காலோபாதியைக் கழித்து ஸமகாலமாக்கினாப்போலே, அவ்விபூதியி லநுபவத்தையும் இங்கேயிருந்தே அநுபவிக்கலாம்படியொரு போகியாக ப்ரகாசிப்பிக்க. (வீவிலின்பம் கூட்டினை யென்று முக்த போக மாநஸ ப்ராப்தி பலமான) “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன் மேவியே”, “கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே” என்று அவனைக் கிட்டி நிரதிசயாநந்தியாகப் பெற்றேன், யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக் கொள்ள வரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய். நான் அநுபவிக்கப் பெற்றே னென்றாவது மாநஸாநுபவமாகையாலே, இப்படி முக்தருடைய போகமான அவ்வநுபவத்தில் மாநஸமாக உண்டான ப்ராப்திக்குப் பலமான, (தேவதாந்தராத்மாத்மீய லோகயாத்ரைச்வர்யாக்ஷரங்களில் வைராக்யம் உன்னித்துயிருடம்பினால் கொடுவுலகம் வேட்கையெல்லா மொழிந்தேனென்ன வுடையரானவர்) “உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்” என்று தன்னெஞ்சாலே மதித்து வேறொரு தைவத்தைத் தொழுதறியா ளென்னும்படி தேவதாந்தரங்களில் வைராக்யத்தையும், “உயிரினால் குறைவிலமே”, “உடம்பினால் குறைவிலமே” என்னும்படி ஆத்மாத்மீயங்களில் வைராக்யத்தையும், “கொடுவுலகம் காட்டேலே” என்னும்படி லோகயாத்ரையில் வைராக்யத்தையும், “வேட்கையெல்லாம் விடுத்து” என்று ஸமுதாயேநவும், “ஐங்கருவி கண்டவின்ப மொழிந்தேன் சிற்றின்ப மொழிந்தேன்" என்று ப்ருதக்த்வேநவும் சொல்லும்படி ஐச்வர்யத்திலும் அக்ஷர சப்தவாச்யமான ஆத்மாநுபவரூப கைவல்யத்திலும்முண்டான வைராக்யத்தையு முடையரானவர். [4] (ஒரு நாயகமென்று ராஜ்ய ஸ்வர்க்காத்மாநுபவால்பாஸ்திரத்வ ஸாவதிகத்வாதிகளையும்) “ஒருநாயகமாயோட வுலகுடனாண்டவர் பெருநாடு காண விம்மையிலே பிச்சைதாங் கொள்வர்” என்று தொடங்கி, “ராஜ்யம் நாம மஹாவ்யாதிர சிகித்ஸ்யோ விநாசநா: ப்ராதரம் வா ஸ்தம் வாபி த்யஜந்தி கலு பூமிபா” என்கிற ராஜ்யைச்வர்யத்தின் அல்பத்வத்தையும்; “குடிமன்னுமின் சுவர்க்கமெய்தியும் மீள்வர்கள்” என்று “தே தம் புக்த்வா ஸ்வர்க்கலோகம் விசாலம் க்ஷீணே புண்யே மர்த்த்யலோகம் விசந்தி” என்கிற ஸ்வர்க்காநுபவத்தினுடைய அஸ்த்திரத்வத்தையும்; “இறுகலிறப்பு” என்று ஆத்மாநுபவத்தினுடைய ஸாவதிகத்வத்தையும்; ஆதிசப்தத்தாலே துக்கமிச்ரத்வ துஸ்ஸாதத்வ நிஸ்ஸாரத்வங்களைச் சொல்லுகிறது. [5] (ஆடு கள்ளிறைச்சி கருஞ்செஞ்சோறாகிற நிந்த்யங்களாலே இளந்தைவத்துக் கிழைத்தாடும் நிஹீநதையையும்) “த்ரவ்யம் நிந்த்ய ஸுராதி தைவதமதிக்ஷுத்ரஞ்ச பாஹ்யாகமோ த்ருஷ்டிர் தேவலகாச்ச தேசிகஜநா திக் திக் திகேஷாம் க்ரமம்” என்கிறபடியே “அங்கோராடுங்கள்ளும்”, “அங்கோர் கள்ளு மிறைச்சியும்”, “கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும்” என்கிற ஸுரா மாம்ஸாதி நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு “நீரணங்காடுமிளந் தெய்வம்” என்கிற க்ஷுத்ர தேவதைகளுக்கு “களனிழைத்து” என்று அவ்வோ தேவதைகள் ஸந்நிதி பண்ணும் ஸ்தலங்களிலே பலியிட்டு, “நீரணங்காடுதல் கீழ்மை” என்று தைவாவிஷ்டராயாடுமதின் தன்மையையும். [6] (பேசநின்ற தேவதாஜ்ஞாநாசக்தி ஸாபேக்ஷத்வாதிகளையும்) “தத: க்ரோதபரீதேந ஸம்ரக்தநயநேநச, வாமாங்குஷ்ட்ட நகாக்ரேணச்சிந்நம் தஸ்ய சிரோ மயா” என்றும், “யஸ்மாதநபராதஸ்ய சிரச்சிந்நம் த்வயா மம, தஸ்மாச்சாபஸமாயுக்த: கபாலீ த்வம் பவிஷ்யஸி” என்றும், “தத்ர நாராயண: ஸ்ரீமாந் மயா பிக்ஷாம் ப்ரயாசித:”, “விஷ்ணு ப்ரஸாதாத் ஸுச்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா, ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ந லப்தம் தநம் யதா” என்றும் சொல்லுகிறபடியே, ப்ரஹ்மா ருத்ரனாலே தலையறுப்புண்டு சோச்யனாய் ருத்ரனை சபிக்க, ருத்ரன் குரு சிரச்சேதநத்தாலே பாதகியாய் ப்ரஹ்மசாபம் தன்னால் போக்கிக் கொள்ளப் போகாமையாலே ச்ரிய:பதியான ஸர்வேச்வரனை அர்த்திக்க, அவன் அந்த சாபத்தைப் போக்கினானாகையாலே, “பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகனவனே கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்” என்று வேதத்தில் ப்ரசம்ஸாபரமான வாக்யங்களாலும் ராஜஸ தாமஸ புராணங்களாலும் பரத்வேந பேசலாம்படி முட்டுப் பொறுத்து நின்ற ப்ரஹ்ம ருத்ராதிகளாகிற தேவதைகளுடைய அந்யோந்யம் தங்களுக்கு வருகிற க்லேசமறியாமையும், அந்த க்லேசம் தாங்கள் தவிர்த்துக் கொள்ளமாட்டாமையும், அத்தைத் தவிர்த்துக் கொடுக்கைக்கு ஈச்வரன் வேண்டுகையுமாகிற அஜ்ஞாநாசக்தி ஸாபேக்ஷத்வங்களையும், ஆதிசப்தத்தாலே கர்ம வச்யதையையும். (இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டதையையுஞ் சொல்லி) “இலிங்கத்திட்ட”, “விளம்புமாறு சமயமும்” என்கிற பாட்டுக்களில் சொல்லுகிற பாஹ்ய குத்ருஷ்டி மதங்களாவன, “யந் மயம் ச ஜகத் ஸர்வம்” என்று பொதுவிலே ப்ரச்நம் பண்ண, “விஷ்ணோஸ் ஸகா சாதுத்பூதம்” என்று கோல் விழுக்காட்டாலே உத்தரமாகை யன்றிக்கே எருமையை ஆனையாகக் கவிபாடித் தரவேணுமென்பாரைப் போலே, லிங்கமென்றொரு வ்யக்தியை நிர்த்தேசித்து இதுக்கு உத்கர்ஷம் சொல்லித் தரவேணுமென்று கேட்கிறவனும் தமோபிபூதனாய்க் கேட்க, சொல்லுகிறவனும் தமோபிபூதனாய்ச் சொல்ல, இப்படி ப்ரவ்ருத்தமான லைங்க புராணாதிகளான குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளும், சிலவற்றைச் சொல்லா நின்றால் தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லா நிற்குமத்தனை போக்கி ப்ரமாணாநுகூல தர்க்கமல்லாமையாலே கேவலம் உக்தி ஸாரமேயாயிருக்கிற பாஹ்ய ஸமயங்களாறுமென்ற க்ஷபணக பெளத்தாதிகளுடைய ஸ்ம்ருதிகளுமாகையாலே “யா வேதபாஹ்யாஸ் ஸ்ம்ருதயா யாச்ச காச்ச குத்ருஷ்டய: தாஸ்ஸர்வா நிஷ்ப்பலாப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தா: ஸ்ம்ருதா” என்கிறபடியே அவற்றினுடைய தமோ நிஷ்டதையையுஞ் சொல்லி. (ஓடிக் கண்டீர்) “ஓடியோடி” என்று தொடங்கி, “வழியேறிக் கண்டீர்” என்று, “கதாகதம் காமகாமா லபந்தே” என்கிறபடியே ஸ்வர்க்க நரகங்களில் போவது கர்ப்பத்தேற வருவதாய்க் கொண்டு அநேக ஜன்மங்களில் பிறந்து தேவதாந்தரங்களை த்ரிவித கரணங்களாலும் பல பர்யாயம் ததாச்ரயணத்தைச் சொல்லுகிற சாஸ்த்ர மார்க்கத்தாலே ஆச்ரயித்து அவ்வாச்ரயண பலமும் கண்டீர்கள். [8] (கண்டும் தெளியகில்லீர்) இவனுடைய ஜகந்நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களை சாஸ்த்ர த்வாரா ப்ரத்யக்ஷித்தும் இவனே ஆச்ரயணீயனென்று தெளிய மாட்டுகிறிலிகோள். (அறிந்தறிந்தோடுமின்) உங்களை இங்ஙனே வைத்தது ஸதஸத் கர்மகாரிகளான ஜந்துக்கள் அவ்வோ கர்மாநுகுண பலங்களை அநுபவிக்கக் கடவதான சாஸ்த்ர மர்யாதை அழியுமென்று, அதுதான், “மம மாயா துரத்யயா” என்கிற ப்ரக்ருதியையிட்டு அவன் மயக்கி வைத்தபடி காணுங்கோள். ஆன பின்பு அது அவன் மாயையென்றறிந்து “மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே” என்கையாலே மாயாதரணோபாயமும் அவன் திருவடிகளைப் பற்றுகை என்றறிந்து அவனை யாச்ரயித்து இம்மாயையைத் தப்பப் பாருங்கோள். (ஆட் செய்வதே உறுவதாவதென்று) “நீள் குடக்கூத்தனுக்காட் செய்வதே உறுவதாவது” என்கையாலே நிரதிசய போக்யமான சேஷ்டிதத்தை யுடையவனுக்கு அடிமை செய்கையே இவ்வாத்மாவுக்குச் சீரியதும் ஸுசகமுமென் றிப்படி யுபதேசித்து. (விரக்தி பூர்வகமாக ஆச்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில்) அதாவது ப்ரயோஜநாந்தர தேவதாந்தர பாஹ்ய குத்ருஷ்டி மதங்களில் விரக்தி பூர்வகமாக, ஜகத்காரணத்வாதிகளான ப்ரமாணோபபத்திகளாலே பகவத் ஸமாச்ரயணத்தை ஸம்ஸாரிகளுக்கு ருசிப்பிக்கிறாரென்கை.

இவ்விதம் அவற்றை இனிமையானதாக ஏற்றுக்கொண்டு அவனுடைய தடையற்ற காதலில் நம்மாழ்வார் தோற்றார்; ஆகவே காதலனை விட்டு பிரிந்த காதலியின் நிலையை அடைந்தார்; அந்த நிலையில் அவனைப் போன்றே உள்ள பொருள்கள் மற்றும் அவனுடன் தொடர்பு கொண்டுள்ள பொருள்கள் ஆகிய அனைத்தையும் அவனாகவே எண்ணும்படியாகப் பித்தரானார். இதனால் பரமபதத்தில் உள்ள அனுபவத்தையும் விருப்பம் கொண்டு அழைத்தார். அப்போது நம்மாழ்வாருடைய இந்தக் குறை நீங்கும்படியாக வைகுண்டேது பரே லோகே - அனைத்திற்கும் நாதனாக உள்ள விஷ்ணு ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளான் - என்பதற்கு ஏற்ப பரமபதத்தில் பெரியபிராட்டியாரும் தானுமாக அனைவரும் அனுபவிக்கும்படி உள்ள இருப்பை அங்கு வந்து அனுபவித்தது போன்று, காட்சி மூலமாக இவர் இங்கேயே அனுபவிக்கும்படியாகச் செய்தான். அதனை நம்மாழ்வார் அனுபவித்து, இவ்விதம் முக்தர்கள் மட்டுமே அனுபவிக்கவல்ல இன்பத்தை மனதால் அடைந்து, அதன் பலனாக உள்ள “மற்ற தேவதைகளிடம் ஈடுபாடு கொள்ளாமை” என்ற நிலையை அடைந்தார். ஐச்வர்யம் மற்றும் ஆத்ம அனுபவம் என்ற கைவல்யம் ஆகியவற்றின் அற்பத்தன்மை, நிலையற்ற தன்மை, எல்லையுடன் கூடிய தன்மை முதலான தோஷங்களையும்; ஆராதிப்பதன் தாழ்வையும்; புகழ்வதற்காகவே கூறப்பட்ட வாக்கியங்கள் முலம் உரைக்கப்பட்டு பகவானுடைய செல்வமாகவே உள்ளபோதிலும் அவனை காட்டிலும் முதன்மையானவர் என்று அவன் அளித்த ஐச்வர்யங்களைக் கொண்டுள்ள நாம்முகன் மற்றும் ருத்ரன் போன்றவர்களுடைய அஜ்ஞானத்தையும் மற்ற மதங்களும், வேதங்களுக்கு விரோதமாகப் பொருள் கூறுகின்ற மதங்களும் தாமஸ குணங்களில் ஊன்றியபடி உள்ளன என்பதையும் வெளிப்படுத்தினார். – “மற்ற தேவதைகளை அண்டி நின்று வணங்கி, அதன் மூலம் நீங்கள் பலன்களைப் பெற்றீர்கள். இந்த ஜகத் முழுவதையும் உட்கொள்பவன் போன்ற லீலைகள் கொண்ட ஸர்வேச்வரனே காப்பவன் ஆவான், மற்ற அனைவருமே அவனால் காப்பாற்றப்படுபவர்கள் என்பதைத் தகுந்த சாஸ்த்ரங்கள் மூலம் கண்டாலும் நீங்கள் உணராமல் உள்ளீர்கள். இவ்விதம் நீங்கள் உணராமல் உள்ளதற்குக் காரணம், அவன் அளித்த இந்தச் சரீர ஸம்பந்தமே ஆகும். இந்த சரீரத்தை விடுவதற்காக உபாயத்தையும், அது அவன் திருவடிகளை அடைதலே ஆகும் என்பதையும் அறிந்துகொண்டு, அதனை அண்டி நின்று, இதிலிருந்து தப்புவதற்கு முயல்வீராக. அவனுடைய திருவடிகளில் செய்யப்படும் கைங்கர்யம் மட்டுமே உங்களுக்கு மிகவும் உயர்ந்த பேறு என்று அறிந்து கொண்டு, மற்ற பயன்கள் மற்றும் மற்ற தேவதைகள் ஆகியவற்றை விரும்பாமை என்பதை முன்னிட்டுக்கொண்டு, மிகவும் உயர்ந்த தெய்வமும் மிகவும் உயர்ந்த பயனும் அவன் மட்டுமே ஆவான், அவன் விஷயத்தில் செய்யப்படும் கைங்கர்யமே உயர்ந்த பேறு”, என்று பலவிதமாக உபதேசம் செய்து, அவனை அண்டி நிற்பதில் உள்ள ருசியை நான்காம் பத்தில் மூட்டுகிறார். – (ஈசனை) – திருவாய்மொழி (4-1-10) – மறுகல் இல் ஈசனை – என்றும், (ஈசன்) - திருவாய்மொழி (4-3-2) – ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த – என்றும், (ஈசன்பால் என்ன) – திருவாய்மொழி (4-10-4) - ஈசன் பாலோரவம் பறைதல் – என்றும் உள்ள பாசுரங்களில் “நியமிப்பவன்” என்று பொருள் அளிக்கின்ற சொல்லால் கூறுவதற்கு ஏற்ப உள்ள. (ஏர் கொள்) - திருவாய்மொழி (4-3-8) – ஏர்கொள் ஏழு உலகமும் துன்னி முற்றுமாகி நின்ற சோதிஞான மூர்த்தியாய் – என்றும், (வானத்தும்) - திருவாய்மொழி (4-5-9) - வானத்தும் வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்தானத்து மெண்டிசையும் தவிராது நின்றான் - என்றும், (ஆயே என்கிற வ்யாப்தி) - திருவாய்மொழி (4-9-7) - ஆயே இவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே – என்றும் கடந்த பத்தில் கூறப்பட்டதான எங்கும் பரந்திருக்கும் நிலையானது. (நிறம்பெற) - ஆகாசத்தில் பரவுதல் போன்று எந்தவிதமான பயனும் இன்றிப் போகாமல், நிறம் பெறும்படியாக. (தனிக்கோல் செலுத்தும் ஸர்வநியந்தா) - திருவாய்மொழி (4-5-1) - வீற்றிருந்தேழுலகும் தனிக்கோல் செல்ல - என்பதற்கு ஏற்ப நித்யவிபூதி மற்றும் லீலாவிபூதி ஆகிய இரண்டும் தனது ஆணைக்குட்பட்டு நடக்கும்விதமாகத் தனது ஆணையைச் செலுத்துபவனும், அனைத்தையும் நியமிப்பவனும் ஆகிய ஸர்வேச்வரன். (ஒழிவில் காலத்துக்குச் சேர) - திருவாய்மொழி (3-3-1) - ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி - என்று அடிமைத்தனம் செய்யவேண்டும் என விருப்பம் கொள்ளும்போது அனைத்து இடங்கள், அனைத்து நிலைகள் ஆகியவற்றில் அடிமைத்தனம் செய்யவேண்டும் என்று விரும்பியது போன்று, அனைத்து காலங்களிலும் செய்யவேண்டும் என்று கடந்து போன காலத்தில் செய்யவேண்டிய அடிமைத் தனத்தையும் விரும்பியதற்கு ஏற்கும்படியாக. (பூர்வபோகங்களை ஓதும் மால் எய்தின சாபலத்துக்குச் சேர) – திருவாய்மொழி (4-2-1) – பாலனாய் ஏழுலகுண்டு – என்று தொடங்கி காலத்தாலும் இடத்தாலும் அனுபவிக்க இயலாமல் போன மிகவும் அரிதான அவனுடைய உயர்ந்த லீலைகளை, அந்தந்த இடம் மற்றும் காலங்களில் சென்று அனுபவிக்கவேண்டும் என்று விரும்பி, அத்தகைய ஆசை காரணமாக, திருவாய்மொழி (4-2-6) – ஆதியங்காலத்தகலிடங் கீண்டவர் பாதங்கள் மேலணி பைம்பொற்றுழாயென்றே ஓதுமா லெய்தினள் - என்று கூறுவதற்கு ஏற்ப, முன்னர் இருந்த காலத்தின் இன்பத்தையே எண்ணி வாய் புலம்பும்படியான மயக்கத்தை அடைந்த விருப்பத்திற்கு ஏற்றபடியாக. (சமகாலம் ஆக்கி) - காலத்தில் உள்ள வேறுபாடுகளுக்குக் காரணமாக உள்ள அனைத்தையும் விலக்கி, இன்பத்தை அனுபவிக்கும்படிச் செய்வதால் ஒரே காலமாக மாற்றி இவரை அனுபவிக்கும்படியாகச் செய்து. – (போதால் வணங்காமை) – திருவாய்மொழி (4-3-1) - பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயா மேனிக்குப் பூசுஞ் சாந்தென்னெஞ்சமே – என்று தொடங்கி, திருவாய்மொழி (4-3-4) - ஏகமூர்த்திக்கே, பூத்தண்மாலை கொண்டுன்னைப் போதால் வணங்கேனேலும் நின் பூத்தண்மாலை நெடுமுடிக்குப் புனையுங் கண்ணியெனதுயிரே - என்று கூறுவதற்கு ஏற்ப, “விரோதிகளை அழிக்கின்ற அந்தந்த காலகட்டங்களில் உதவி, மலர்களை அளித்தல் போன்றதான குளிர்ச்சி அளிக்கவல்ல உபகரணங்கள் கொண்டு அவனுக்கு நான் உதவி செய்யவில்லை; என்றாலும், மேன்மையான திருமேனியுடன் கூடிய ஸர்வேச்வரன் எனது மனம், வாக்கு மற்றும் சரீரம் ஆகிய மூன்றுடைய செயல்களையே தனக்கு இன்பம் அளிக்கவல்ல வஸ்துக்களாகக் கொள்கிறானே” என்று இவர் தானே அவன் விஷயத்தில் ஈடுபடுபடியாகச் செய்து, அந்தந்த காலங்களில் தனக்கு உதவி செய்து, அதன் மூலம் அவருடைய கைங்கர்யம் பெறாமல் இழந்த நிலையை, (தீர்த்த ப்ரணயித்வத்திலே) - அவன் விலக்கிக் கொண்ட ப்ரேமை குணத்தில், (காதல் மையல்) – திருவாய்மொழி (4-3-9) - காதல் மையலேறினேன் – என்பதற்கு ஏற்ப ப்ரேமம் அதிகமாகி அறிவு தடுமாறி நின்றபோது “வெள்ளக்கேடாக மாறக்கூடாது” என்று அவன் எண்ணி, சிறிது விலகி நிற்க. (ஏறிய பித்தாய்) - அவனைப் போன்ற பொருள்களையும், அவனுடன் ஸம்பந்தம் கொண்ட பொருள்களயும் அவனாகவே எண்ணிப் பேசும்விதமாகத் திருவாய்மொழி (4-4-6) - பேய்ச்சி முலை சுவைத்தார்க்கென் பெண்கொடி யேறிய பித்தே - என்பதற்கு ஏற்ப பித்து ஏறி. (தேசதூரத்துக்குக் கூவியுங் கொள்ளாயென்றது தீர) - பரமபத அனுபவத்தில் விருப்பம் கொண்டு அந்த இடத்தின் தூரத்தை எண்ணி, திருவாய்மொழி (4-7-1) – கோலமேனி காண வாராய் கூவியுங் கொள்ளாயே - என்பதற்கு ஏற்ப, நீ இங்கு வந்து உன் திருமேனி அழகை நான் அனுபவிக்கும்படிச் செய்தல் அல்லது நான் அங்கே வரும்படியாக என்னை அழைத்தல் ஆகிய இரண்டையும் நீ செய்யவில்லை என்று இவர் கூப்பிட்ட இழந்த நிலை மாறும்படியாக. (கண்ட சதிரையும் ஒரு நிலம் ஆகக் காட்ட) – திருவாய்மொழி (4-9-10) - ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் கண்டு - என்பதற்கு ஏற்ப பரமபதத்தில் உள்ள இருவரும் இன்பம் அளிப்பவர்களாக உள்ள நிலையை நான் இங்கிருந்தபடியே கண்டேன் என்றபடி, இனியுள்ள காலத்தின் காரணங்களை விலக்கி சமகாலம் என்று மாறியது போன்று, பரமபதத்தின் அனுபவத்தையும் இங்கேயே நின்று அனுபவிக்கலாம்படியாக ஒரு போகியாக வெளிப்பட்ட. (வீவில் இன்பம் என்று) – திருவாய்மொழி (4-5-3) - வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன் மேவியே - என்றும், திருவாய்மொழி (4-9-8) - கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே – என்றும் கூறுவதற்கு ஏற்ப, “அவனை நான் அடைந்து அழிவற்ற ஆனந்தத்தைப் பெற்றேன். அனைவருக்கும் அளிக்காததும், சேர்த்துக்கொள்ள அரியதும் ஆகிய திருவடிகளை நான் அடையும்படியாக என்னை நீ சேர்த்துக் கொண்டாய். நானும் அனுபவிக்கப் பெற்றேன்” என்ற பலவும் மனம் மூலம் ஏற்பட்ட அனுபவம் என்பதால், (முக்த போக மாநஸ ப்ராப்தி பலமான) – இவ்விதம் முக்தர்களுடைய இன்பமாகவே உள்ள அந்த அனுபவத்தில், மனம் மூலம் உண்டான பேற்றுக்குப் பலனாக உள்ள. (தேவதாந்தர வைராக்யம்) – திருவாய்மொழி (4-6-10) - உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் - என்பதற்கு ஏற்ப, “தனது நெஞ்சத்தால் மதித்து வேறு எந்த ஒரு தெய்வத்தையும் தொழுவதை அறியாள்”, என்று கூறுவதற்கு ஏற்ப, மற்ற தெய்வங்களின் விஷயத்தில் வைராக்யத்தையும். (ஆத்ம ஆத்மீய வைராக்யம்) – திருவாய்மொழி (4-8-10) - உயிரினால் குறைவிலமே – என்றும், திருவாய்மொழி (4-8-9) - உடம்பினால் குறைவிலமே – என்றும் கூறுவதற்கு ஏற்ப ஆத்மா மற்றும் ஆத்மாவுடன் ஸம்பந்தம் கொண்ட பொருள்கள் ஆகியவற்றில் வைராக்யத்தையும். (லோகயாத்ரா வைராக்யம்) - திருவாய்மொழி (4-9-7) - கொடுவுலகம் காட்டேலே - என்பதற்கு ஏற்ப இந்த உலக வாழ்க்கையில் வைராக்யத்தையும். (ஐச்வர்ய அக்ஷரங்களில் வைக்ராக்யம்) - திருவாய்மொழி (4-9-9) - வேட்கையெல்லாம் விடுத்து – என்று கூட்டமாகவும், திருவாய்மொழி (4-9-10) - ஐங்கருவி கண்டவின்ப மொழிந்தேன் சிற்றின்ப மொழிந்தேன் - என்று தனித்தனியாகவும் கூறலாம்படியாக செல்வம் மற்றும் அக்ஷரம் என்ற சொல்லால் கூறப்படுவதான ஆத்ம அனுபவ வடிவில் உள்ள கைவல்யம் ஆகியவற்றில் வைராக்யத்தையும் கொண்டவராக உள்ள நம்மாழ்வார். – (ஒரு நாயகம் என்று ராஜ்ய அல்பத்வத்தையும்) - திருவாய்மொழி (4-1-1) - ஒருநாயகமாயோட வுலகுடனாண்டவர் பெருநாடு காண விம்மையிலே பிச்சைதாங் கொள்வர் – என்று தொடங்கி, “ராஜ்யம் நாம மஹாவ்யாதிர சிகித்ஸ்யோ விநாசநா: ப்ராதரம் வா ஸ்தம் வாபி த்யஜந்தி கலு பூமிபா - இராஜ்யம் என்பது வைத்தியம் செய்து தீர்க்க இயலாத ஒரு பெரும்நோயாகும், அழிவை ஏற்படுத்தக்கூடிய அந்த நோய் காரணமாக மன்னர்கள் தங்களுடன் பிறந்தவர்களையும் புத்திரர்களையும் கூட விடுகிறார்கள் – என்பதற்கு ஏற்ப உள்ளதான இராஜ்யம் என்ற ஐச்வர்யத்தின் அற்பமான தன்மையையும். (ஸ்வர்க்க அஸ்திரத்வத்தையும்) - திருவாய்மொழி (4-1-9) - குடிமன்னுமின் சுவர்க்கமெய்தியும் மீள்வர்கள் – என்று, கீதை (9-11) – தே தம் புக்த்வா ஸ்வர்க்கலோகம் விசாலம் க்ஷீணே புண்யே மர்த்த்யலோகம் விசந்தி - பரந்து விரிந்துள்ள ஸ்வர்க்கத்தை அனுபவித்து, புண்ணியங்கள் தீர்ந்த பின்னர் இந்தப் பூமியை அடைகிறான் – என்பதற்கு ஏற்ப உள்ளதான ஸ்வர்க்க அனுபவத்தின் நிலையற்ற தன்மையையும். (ஆத்ம அனுபவ ஸாவதிகத்வத்தையும்) - திருவாய்மொழி (4-1-10) – இறுகல் இறப்பு - என்று ஆத்ம அனுபவத்தின் நிலையுடன் கூடியுள்ள தன்மையையும், (ஆதிகளையும்) “ஆதி” என்பதன் மூலம் துக்கம் கலந்து இருந்தல், மிகுந்த முயற்சி எடுத்துப் பெறுதல், இன்பம் இல்லாமை போன்றவற்றைக் கூறினார். (ஆடு கள்ளிறைச்சி கருஞ்செஞ்சோறாகிற நிந்த்யங்களாலே இளந்தைவத்துக் கிழைத்தாடும் நிஹீநதையையும்) - த்ரவ்யம் நிந்த்ய ஸுராதி தைவதமதிக்ஷுத்ரஞ்ச பாஹ்யாகமோ த்ருஷ்டிர் தேவலகாச்ச தேசிகஜநா திக் திக் திகேஷாம் க்ரமம் – பூஜைக்குப் பயன்படுத்தப்படுபவை அனைத்தும் மிகவும் தாழ்ந்தும் நிந்திக்கப்படுவதும் ஆகிய கள் போன்றவை, தெய்வமானது மிகவும் தாழ்ந்த தெய்வம், சாஸ்த்ரமானது வேதங்களுக்குப் புறம்பாக உள்ளவை, ஆசார்யர்களாக உள்ளவர்கள் பூசாரிகள் என்றுள்ள இப்படிப்பட்ட முறையானது பழிக்கப்பட வேண்டியது - என்று கூறுவதற்கு ஏற்ப, திருவாய்மொழி (4-6-7) – அங்கோர் ஆடும் கள்ளும் – என்றும், திருவாய்மொழி (4-6-3) – அங்கோர் கள்ளும் இறைச்சியும் – என்றும், திருவாய்மொழி (4-6-4) – கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ள கள், மாமிசம் போன்ற நிந்திக்கத்தக்க பொருள்கள் கொண்டு, திருவாய்மொழி (4-6-4) – களனிழைத்து - என்பதற்கு எற்ப அந்தத் தேவதைகள் உள்ள இடங்களில் பலி கொடுத்து. திருவாய்மொழி (4-6-8) - நீரணங்காடுதல் கீழ்மை – என்பதற்கு ஏற்ப தெய்வம் தங்கள் மீது ஏறியவர்களாக இருந்து ஆடும் தாழ்வையும். – (பேசநின்ற தேவதாஜ்ஞாநாசக்தி ஸாபேக்ஷத்வாதிகளையும்) - தத: க்ரோதபரீதேந ஸம்ரக்தநயநேநச, வாமாங்குஷ்ட்ட நகாக்ரேணச்சிந்நம் தஸ்ய சிரோ மயா - தொடர்ந்து சீற்றம் கொண்டவனாகவும் சிவந்துள்ள கண்கள் கொண்டவனும் ஆகிய என்னால், எனது இடது கையின் கட்டைவிரல் நுனி மூலமாக நான்முகனுடைய தலையானது கிள்ளப்பட்டது - என்றும், யஸ்மாதநபராதஸ்ய சிரச்சிந்நம் த்வயா மம, தஸ்மாச்சாபஸமாயுக்த: கபாலீ த்வம் பவிஷ்யஸி - எந்த ஒரு தவறும் செய்யாத எனது தலையானது எந்தக் காரணத்தால் உன்னால் கிள்ளப்பட்டதோ அதே காரணத்தால் நீ சாபம் அமைந்தவனாக, அந்த மண்டை ஓட்டைக் கையில் ஒட்டப் பெற்றவனாக அலைவாயாக - என்றும், தத்ர நாராயண: ஸ்ரீமாந் மயா பிக்ஷாம் ப்ரயாசித: - பெரியபிராட்டியுடன் சேர்ந்து நின்ற ஸ்ரீமந்நாராயணன் என்னால் யாசிக்கப்பட்டான் – என்றும், விஷ்ணு ப்ரஸாதாத் ஸுச்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா, ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ந லப்தம் தநம் யதா - மஹாவிஷ்ணுவின் க்ருபை கரணமாக அந்த மண்டை ஓடானது ஆயிரம் துண்டுகளாக வெடித்து, கனவில் காண்கின்ற செல்வம் போன்று பலவிதமாகப் பறந்தது - என்று கூறுவதற்கு ஏற்ப நான்முகன் ருத்ரனால் தனது தலை அறுக்கப்பட்டு துன்பம் அடைந்த போது, அவன் ருத்ரனைச் சபித்தான்; தனது குருவாகிய நான்முகனுடைய தலையை அறுத்தல் காரணமாக மிகப் பெரிய பாபம் செய்த ருத்ரனால் நான்முகனுடைய சாபத்தைத் தனது சொந்த முயற்சியால் விலக்க இயலவில்லை; ஆகையால் அவன் மஹாலக்ஷ்மியின் நாதனாகிய ஸர்வேச்வரனை வேண்டி நின்றான்; அவன் அந்த சாபத்தைப் போக்கினான். ஆகவே திருவாய்மொழி (4-10-4) – பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகனவனே கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின் – என்று கூறுவதற்கு ஏற்ப வேதத்தில் புனைந்து கூறப்படும் வாக்கியங்களாலும், ராஜஸ தாமஸ புராணங்களாலும் பரம்பொருளாகக் கூறலாம்படி முட்டுப் பொறுத்து நின்ற நான்முகன் மற்றும் ருத்ரன் போன்று தேவர்கள், ஒருவருக்கு ஒருவரால் ஏற்படுகின்ற, துன்பங்களை அறியாமல் உள்ளவராகவும், அப்படிப்பட்ட துன்பத்தைத் தாங்களாகவே விலக்கிக்கொள்ள இயலாதவர்களாகவும், அதனை விலக்கித் தருமாறு ஈச்வரனை வேண்டுபவர்களாகவும் உள்ளதான அறியாமை, ஆற்றல் இன்மை மற்றும் ஈச்வரனை அண்டியிருத்தல் போன்றவற்றையும். “ஆதி” என்ற சொல் மூலம் கர்மங்களுக்கு வசப்பட்டு இருத்தலையும். – (இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டதையையுஞ் சொல்லி) – திருவாய்மொழி (4-10-5) - இலிங்கத்திட்ட – என்றும், திருவாய்மொழி (4-10-9) - விளம்புமாறு சமயமும் - என்றும் உள்ள பாசுரங்களில் கூறப்படுகின்ற வேதங்களுக்குப் புறம்பாகப் பொருள் உரைக்கின்ற மதங்கள் என்பவை, ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-1-5) - யந் மயம் ச ஜகத் ஸர்வம் - பராசரரே! இந்த ஜகத் முழுவதும் எதனால் வ்யாபிக்கப்பட்டுள்ளது – என்று பொதுவாகக் கேள்வி கேட்கப்பட, ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-1-41) – விஷ்ணோஸ் ஸகா சாதுத்பூதம் - இவை அனைத்தும் விஷ்ணுவில் உண்டாகி, அவனிடமே லயிக்கின்றன – என்று விடை தருதல் போன்று அல்லாமல், எருமையை யானை என்று உரைத்துக் கவிபாடித் தரவேண்டும் என்று கேட்பது போன்று, லிங்கம் என்ற ஒரு உருவம் கொண்ட பொருளைக் காண்பித்து இதற்கு உயர்த்தி கூறவேண்டும் என்று கேட்பவனும் தமோ குணத்தால் மூடப்பட்டவனாகக் கேட்க, அதற்குப் பதில் உரைப்பவனும் தமோ குணத்தால் மூடப்பட்டவனாக உரைக்க, இவ்விதம் வெளிப்பட்ட லைங்கபுராணம் என்பது போன்ற முரண்பாடு நிறைந்த ஸ்ம்ருதிகளும்; சிலவற்றை உரைத்தால் தாங்களும் சில தர்க்கங்களை உரைத்தல் என்பதைச் செய்யாமல், ப்ரமாணத்தை பின்பற்றுகிற தர்க்கம் அல்ல என்பதால் சொல்நயம் மட்டுமே நிறைந்து காணப்படும் தாழ்ந்த மதங்களாகிய ஜைனம், பௌத்தம் போன்றவற்றின் ஸ்ம்ருதிகளும் என்பதால், மநுஸ்ம்ருதி (12-95) - யா வேதபாஹ்யாஸ் ஸ்ம்ருதயா யாச்ச காச்ச குத்ருஷ்டய: தாஸ்ஸர்வா நிஷ்ப்பலாப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தா: ஸ்ம்ருதா – வேதங்களுக்குப் புறம்பான ஸ்ம்ருதிகள் எவையோ, தாழ்ந்த பொருள் கூறும் மதங்கள் எவையோ அவை ஏதும் மறுமையில் பலன்கள் அளிப்பவை அல்ல. அவை தமோ குணம் நிறைந்தவை என்றே கூறப்பட்டன - என்று கூறுவதற்கு ஏற்ப அவற்றுடைய தாமஸ நிலையை உரைத்து. (ஓடிக்கண்டீர்) - திருவாய்மொழி (4-10-7) – ஓடி ஓடி - என்று தொடங்கி, திருவாய்மொழி (4-10-7) - வழியேறிக் கண்டீர் – என்று, கீதை (9-21) - கதாகதம் காமகாமா லபந்தே – ஸ்வர்கம் போன்றவற்றுக்குச் செல்வதில் விருப்பம் உள்ளவர்கள் வருவதும் போவதுமாக உள்ளனர் – என்பதற்கு ஏற்ப ஸ்வர்கம் மற்றும் நரகம் ஆகியவற்றில் புகுந்து, கர்ப்பத்தில் புகுவதன் காரணமாக, பலபல பிறவிகளில் பிறந்து, மற்ற தேவதைகளைத் தங்களுடைய மனம் வாக்கு மற்றும் சரீரம் ஆகிய மூன்றாலும் பலமுறை அவர்களை அண்டி நிற்பதற்கான சாஸ்த்ரங்கள் மூலம் அடைந்து, அத்தகைய அண்டுதலால் ஏற்படும் பலன்களைக் கண்டீர்கள் . (கண்டும் தெளியகில்லீர்) - இவனுடைய “இந்த ஜகத் முழுவதையும் உட்கொள்ளுதல்” முதலான அதிசயமான லீலைகளைச் சாஸ்த்ரங்கள் மூலமாக நீங்கள் கண்ட பின்னரும், இவனே அண்டத்தக்கவன் என்று தெளிவடையாமல் உள்ளீர்கள். (அறிந்து அறிந்து ஓடுமின்) - உங்களை இவ்விதமாக வைத்தது எதுவென்றால், நல்வினை மற்றும் தீவினைகள் பலவும் செய்தபடி உள்ள ஜந்துக்கள் அந்தந்த கர்மங்களை பயன்களை அனுபவிக்கக் கடவதாக உள்ள சாஸ்த்ர மரியாதை அழியுமென்று, அது கீதை (7-4) – மம மாயா துரத்யயா - எனது மாயை கடக்க அரியதாகும் - என்பதற்கு ஏற்ப ப்ரக்ருதியைக் கொண்டு அவன் உண்டாகிய மாயை என்று காண்பீர்களாக. இவ்விதம் உள்ளதால், அது அவன் மாயையே ஆகும் என்று அறிந்து கொண்டு, கீதை (9-4) – மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே - என்னையே சரணம் அடைபவர்கள் எனது இந்த மாயையைக் கடக்கிறார்கள் - என்று அவனுடைய திருவடிகளை அண்டுவதே ஆகும் என்று அறிந்து கொண்டு, அவனை அண்டி நின்று, இந்த மாயையிலிருந்து தப்புவதற்கு முயலுங்கள். (ஆள் செய்வதே உறுவது ஆவது என்று) - திருவாய்மொழி (4-10-10) - நீள் குடக்கூத்தனுக்காட் செய்வதே உறுவதாவது – என்று உரைப்பதால் எல்லையற்ற இனிமை அளிக்கின்ற குடக்கூத்து ஆடுதல் போன்றவற்றைச் செய்பவனுக்குக் கைங்கர்யம் செய்தலே இந்த ஆத்மாவிற்கு சீரியதாகவும் எளிதாகச் செய்யத்தக்கதாகவும் உள்ளது என்று உபதேசம் செய்து. (விரக்தி பூர்வகமாக ஆச்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில்) - வேறு பயன்களை விரும்பாமல் இருத்தல் என்பதை முன்னிறுத்தி, மற்ற தேவதைகளையும் வேதங்களுக்கு விரோதமாய் பொருள் உரைக்கும் மதங்களையும் தள்ளி, “அவனே ஜகத் காரணம்” என்பது போன்ற ப்ரமாண வாக்கியங்கள் மூலம் பகவானை அண்டி இருத்தல் என்னும் நிலையை ஸம்ஸாரிகளுக்கு இந்த நான்காம் பத்தில் ஏற்படுத்துகிறார்.