Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 221)
நான்காம் ப்ரகரணம்
[1] முழுதுமாய் எங்கணுமொழிவற அருவாகி நின்று தோய்விலனாம் ஸர்வ வ்யாபகன் தீர்ந்தவடியார்களைத் தாளிணைக்கீழ்க் கொள்ளும் தன் படிக்கும், (2) நீ தந்த மாமாயப் புணர்வினைப் பிறப்பழுந்தி அலமருகின்றேன் வேரறவரிந்து எந்நாளெங்கு வந்து தலைப்பெய்வனென்று கழித்துப் புகும் தங்காதலுக்கும் ஸத்ருசமாகக் கண்டு கொள்ளென்னும், [3] ஊனமில் மோக்ஷ பலமான முடிச்சோதியிலநுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று அவச்சேதமற்றவடிமை செய்யவேண்டும்படி ஸர்வாத்மபாவத்தைப் புகழ்ந்து, [4] சொல்லிப் பாடியேத்திப் பிதற்றி யெழுந்தும் பறந்தும் துள்ளிக் குதித்துத் தடுகுட்டக் கும்பிடு நட்டமிட்டுச் சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதீயுகளத் தம்மடியாரென்ன உடன்கூடும் ஸாத்யம் வளர, [5] பைகொள் பாம்பு போலே இந்த்ரிய வ்ருத்தி நியமமறப் பாடவந்த கவியன்றிக்கே படைத்தான் ச்லோக க்ருத்தாய், [6] குறைமுட்டுப் பரிவிடர் துயர் துன்பமல்லல் துக்கம் தளர்வு கேடுகளின்றி அம்ருதாநந்த மக்நரானவர், செய்யதாமரைக் கண்ணன் அமரர் குலமுதலென்று அஞ்சாதபடி எளிவருமிணைவனா மென்றவை பரத்வமாம்படி, [7] அவனாகும் ஸௌலப்ய காஷ்டையைக் காட்டி, வழியைத் தருமவன் நிற்க இழியக் கருதுவதென்னாவது, வேண்டிற்றெல்லாம் தரும், தன்னாகவே கொள்ளும், கவி சொல்லவம்மினென்று, [8] முக்தைச்வர்யத்தை முன்னிட்டு ச்வவ்ருத்தியை மாற்றி ஸ்வவ்ருத்தியிலே மூட்டுகிறார் மூன்றாம் பத்தில்.
மூன்றாம் பத்தால், “தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிசத்” என்கிறபடியே கார்யபூத சேதநாசேதநங்களையடைய வ்யாபித்து தத்கத தோஷைரஸம்ஸ்ப்ருஷ்டனா யிருக்கையாலே ஸர்வ வ்யாபகனான ஸர்வேச்வரன், கீழில் பத்தில் இவருபயாநுகுணமாக நிஷ்கர்ஷித்த மோக்ஷத்துக்கு பலமான ஸ்வவிக்ரஹாநுபவத்தை இவரைப் பண்ணுவிக்க; இவருமநுபவித்துத் தரித்து அவ்வநுபவ ஜநித ப்ரீதி ப்ரகாஷத்தாலே ஸர்வவித கைங்கர்யங்களும் செய்யவேண்டும்படியான அபிநிவேசத்தையுடையராய் தம்மபிநிவேசா நுகுணமாக அவன் காட்டிக் கொடுத்த அவனுடைய ஸர்வாத்ம பாவத்தைப் பேசி அத்தால் வந்த ப்ரீதியின் உகளிப்பையுடையராய், அந்த ப்ரீதி அவனளவிலே பர்யவஸியாதே பாகவத சேஷத்வத்தி லெல்லையளவும் சென்று அந்த பாகவதர்களுக்கு நிரூபகமான பகவத் வைலக்ஷண்யாநுஸந்தாநத்தாலே ஒன்றின் வ்ருத்தியை ஒன்றாசைப்படும்படி சேதந ஸமாதியையடைந்த கரணக்ராமமும் தாமும் தனித்தனி யநுபவிக்கவேண்டும் பெருவிடாயையுடையராய், இதர ஸ்தோத்ரத்துக்கு அநர்ஹகரணராய் அவ்வளவு மன்றிக்கே பகவத் ஸ்தோத்திரத்துக்கு அர்ஹகரணருமாய், பகவதநுபவத்துக்குத் தமக்கொரு ப்ரதிஹதி தொடக்கமானவையுமற்று நிரதிசயாநந்த யுக்தரானவர்,
– தைத்திரீயத்தில் – தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிசத் - அவை அனைத்தையும் ஸ்ருஷ்டித்து அவற்றுள் புகுந்தான் - என்று கூறுவதற்கு ஏற்ப, கார்யங்களாக உள்ள அனைத்து சேதநங்கள் மற்றும் அசேதநங்கள் ஆகியவற்றை வ்யாபித்து நின்று, அவற்றுடைய தோஷங்கள் ஏதும் தன்னைத் தீண்டாதவனாக உள்ளதால், அனைத்திலும் பரவி நிற்கும் ஸர்வேச்வரன், கடந்த பத்தில், “அவனும் நம்மாழ்வாராகிய தானும்” என்று இருவருடைய ஸ்வரூபத்திற்கு ஏற்புடைய விதத்தில் நம்மாழ்வார் அறுதியிட்ட மோக்ஷத்தின் பலனாகிய தன்னுடைய திவ்யமங்கள திருமேனியை அவர் அனுபவிக்கும்படிச் செய்தான்; அதனை இவரும் அனுபவித்தார்; அதன் மூலம் உயிர் தாங்கும் நிலையில் நின்றார். அத்தகைய அனுபவத்தின் விளைவாக இவருக்கு ஏற்பட்ட அளவு கடந்த ப்ரீதி காரணமாக, அவனுக்கு அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்யவேண்டும் என்று மிகுந்த ஆசை கொண்டார். அத்தகைய ஆர்வத்திற்கு ஏற்புடைய விதத்தில் ஸர்வேச்வரன் தனக்குக் காட்டிக் கொடுத்த, “அனைவருக்கும் ஆத்மாவாக ஸர்வேச்வரனாகிய தானே உள்ள நிலை” என்பதைக் குறித்து உரைத்தார். அதன் வினைவாக ஏற்பட்ட ப்ரீதியால் மிகுந்த உகளிப்பு அடைந்தார். அத்தகைய ப்ரீதியானது ஸர்வேச்வரன் அளவில் மட்டுமே நின்றுவிடாமல், பாகவதர்களுக்கு அடிமை செய்தல் என்ற எல்லைவரை நீண்டது. அத்தகைய பாகவதர்கள் “இன்ன தன்மை கொண்டவர்கள்” என்பதை நிரூபிப்பதாகிய “எப்போதும் பகவானை எண்ணியபடி இருத்தல்” என்பதன் மூலம் வெளிப்படுவதான, பகவானின் வேறுபட்ட சிறப்பைக் கூறுதல் என்ற காரணத்தால், தன்னுடைய ஒரு இந்த்ரியம் செய்யும் செயலை மற்றொரு இந்த்ரியம் செய்வதற்கு ஆசை கொள்ளும்படியாக, சேதநர்களின் தன்மையை அடைந்த தனது இந்த்ரியங்ளும் தானும் தனித்தனியாக அவனை அனுபவிக்கவேண்டும் என்று ஆசை கொண்டார். ஸர்வேச்வரன் அல்லாது வேறு யாரையும் துதிக்கும் தகுதி அற்றபடி உள்ள இந்த்ரியங்களைக் கொண்டவராகவும், அது மட்டும் அல்லாமல் ஸர்வேச்வரனை மட்டுமே துதிப்பதற்காக தகுதி கொண்ட இந்திரியங்களைக் கொண்டவராகவும் இருந்தார்.
– “புண்டரீகாக்ஷனாய் ஸூரிஸேவ்யனானவனை, நம்மாலாச்ரயிக்கப் போமோ” என்று ஸம்ஸாரிகள் அஞ்சிக்கை வாங்காமல் மேல் விழுந்தாச்ரயிக்கும்படி கீழிரண்டு பத்தாலுமுபதேசித்த அவதார ஸௌலப்யம் பரத்வ ஸ்தாநீயமாம்படி அர்ச்சாவதார ஸெளலப்யத்தை யுபதேசித்து, அர்ச்சிராதி கதியாலே பரமபதத்தை ப்ராபிப்பிக்குமவனை யொழிய இதர ஸ்தோத்ரத்திலே தாழவிழிகை நிஷ்ப்ரயோஜநம்; ஆன பின்பு நீங்கள், ஸகலபல ப்ரதனுமாய் ஸாம்யாபத்தி ப்ரதனுமான அவன் விஷயத்திலே வாசிகமானவடிமையைச் செய்யுங்கோளென்று நிஹீந வ்ருத்தியான இதர ஸேவையை நிவர்த்திப்பித்து, தம்முடைய வ்ருத்தியான வாசிக கைங்கர்யத்திலே மூட்டுகிறாரென்கிறார். [1] (முழுது மாயெங்கணுமொழிவற அருவாகி நின்று தோய்விலனாம் ஸர்வவ்யாபகன்) “முழுதுமாய் முழுதியன்றாய்”, “ஏழ்ச்சிக் கோடின்றி யெங்கணும் நிறைந்த வெந்தாய்”, “எஞ்ஞான்றுமெங்கு மொழிவற நிறைந்து நின்ற”, “அளவுடை யைம்புலன்க ளறியா வகையா லருவாகி நிற்கும்”, “ யாவையும் யாவரும் தானா யவரவர் சமயந்தோறும் தோய்விலன்” என்று தேசகால வஸ்துக்களால் பரிச்சேதிக்க வொண்ணாதபடி கார்ய பூத ஸகல சேதநா சேதங்களையும் வ்யாபித்து, “அநச்நந்நந்யோ அபி சாகசீதி” என்கிறபடியே தத்கத தோஷை ரஸம் ஸ்ப்ருஷ்டனாயிருக்கையாலே வ்யாபகனான ஸர்வேச்வரன். (தீர்ந்த வடியார்களைத் தாளிணைக் கீழ்க் கொள்ளும் தன் படிக்கும்) “தீர்ந்த வடியவர் தம்மை” என்று ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் தானேயாக அத்யவஸித்த ஆச்ரிதரை “சன்மசன்மாந்தரங்காத் தடியார்களைக் கொண்டு போய்த் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க்கொள்ளுமப்பன்” என்று ஜந்ம பரம்பரைகளில் புகாதபடி ரக்ஷித்து ஆரப்த சரீராவஸாநத்திலே அர்ச்சிராதிமார்க்கத்தாலே தேசவிசேஷத்திலே கொண்டு போய், ஸ்வஸ்வரூப ப்ராப்தியைப் பண்ணிக் கொடுத்து பாதோபதாநத்தோபாதியாகத் தன் திருவடிகளின் கீழேயிட்டுக்கொள்ளும் சேஷியான தன்னுடைய ஒளதார்யத்துக்கும். [2] (நீ தந்த மாமாயப் புணர்வினைப் பிறப்பழுந்தி யலமருகின்றேன் வேரறவரிந்து எந்நாளெங்கு வந்து தலைப்பெய்வனென்று கழித்துப் புகும் தம் காதலுக்கும்) “அந்நாள் நீ தந்த வாக்கையின் வழியுழல்வேன்”, “பல்மாமாயப் பல்பிறவியில் படிகின்ற யான்”, “பொல்லாவாக்கையின் புணர்வினை”, “வினையியல் பிறப்பழுந்தி”, “கொடுவினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம் வழி திகைத்தலமருகின்றேன்” என்று ஸ்ருஷ்டி காலத்திலே உன்னைப் பெறுகைக்கு உடலாக நீ தந்த சரீரத்தைக் கொண்டு உன்னைப் பெறப்பாராதே, நான் அதின் வழியே போய் அநர்த்தத்தைச் சூழ்த்துக் கொண்டு, குணத்ரய பேதத்தாலே பலவகைப்பட்டு துரத்யயையான ப்ரக்ருதி கார்யமான தேவாதி தேஹங்களிலே அவகாஹித்து, ஹேயமான சரீரத்துக்கடியாய் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிற கர்மமடியாக மீண்டும் பாபத்திலே கொண்டுபோய் மூட்டக்கடவதான ஜந்ம பரம்பரைகளிலே யழுந்தி; என்னாலடியறுக்கவும், அடிகாணவு மொண்ணாதே, புகுரவழி தெரியுமதொழியப் புறப்பட வழி தெரியாத பாபமாகிற மிடைந்த தூற்றிலே யகப்பட்டு நின்று உன்னை ப்ராபிக்கைக்கீடான வழிகாணாதே கூப்பிட்டலமாவா நின்றேன். “வினைகளை வேரறப் பாய்ந்து”, “தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து” என்று அநாதியாய் அபரிச்சேத்யமாய் ஸ்வயத்ந நிவர்த்தியமல்லாதபடி அதிப்ரபலமான பாபங்களினுடைய அநுபந்தங்களை மறுகிளை வாராமல் வேரற்றுப் போம்படி ஊசிவேரோடே யறுத்துப் போகட்டு, “எந்நாள் யானுன்னை யினி வந்து கூடுவன்”, “எங்கு வந்தணுகிற்பன்”, “எங்கினித் தலைப் பெய்வன்” என்று நானுன்னைக் கிட்டுவதொரு நாளறுதியிட்டுத் தரவேணும், நானுன்னை யெங்கே வந்து கிட்டக்கடவேன், இனி கிட்டுகை யென்றொரு பொருளுண்டோவென்று சரீர ஸம்பந்தத்துக்கு நொந்து; அதிலுண்டான அருசியோடே “காயங்கழித்தவன் தாளிணைக்கீழ்ப் புகுங்காதல்” என்று பகவத்குணாநுபவத்தோடே காலக்ஷேபத்தைப் பண்ணி சரீரத்தை விட்டு அவன் திருவடிகளின் கீழே புகவேணுமென்னும்படியான சேஷ பூதரான தம்முடைய ஆசைக்கும். (ஸத்ருசமாகக் கண்டு கொள்ளென்னும்) இப்படியான இருவர்படிக்கும் தகுதியாக “வானவர் நாட்டையும் நீ கண்டு கொள்” என்றீச்வரன் காட்டிக் கொடுக்கிற. [3] (ஊனமில் மோக்ஷபலமான முடிச்சோதியில நுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று) “ஊனமில் மோக்க மென்கோ” என்று ப்ரகாரமான ஆத்மாநுபவமாத்ரத்தி லன்றிக்கே ப்ரகாரியளவும் செல்லவநுபவிக்கையாலே குறைவில்லாததாய், ஸ்வரூபாநு ரூபமாகக் கீழில் பத்தில் அறுதியிட்ட பரமபுருஷார்த்த லக்ஷண மோக்ஷத்துக்கு பலம் பகவதநுபவ கைங்கர்யங்களாகையாலே, “முடிச்சோதி” என்கிற திருவாய்மொழியிலே அவன் வடிவழகையும் ஆபரணச் சேர்த்தியையுமநுபவித்து, அவை பரிச்சேதித்த நுபவிக்க வொண்ணாமையாலே இது கரண ஸங்கோச நிபந்தருமென்று நினைத்து இவர் படுகிற க்லேசத்தை விஷய வைலக்ஷண்ய நிபந்தநமென்றறிவித்து ஈச்வரன் நிவ்ருத்தமாக்க, அவ்வநுபவத்தாலே “பெற்றது நீடுயிரே” என்று நித்ய வஸ்து ஸத்தை பெற்று. (அவச்சேதமற்ற வடிமை செய்ய வேண்டும்படி) ஸத்தாகார்யமும் பலிக்க வேண்டுகையாலே “ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம்” என்று தேசகாலாவஸ்தா ப்ரகாரங்களையிட்டு அவச்சேதியாதபடி ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்த்தைகளிலும் ஸர்வவித கைங்கர்யங்களும் செய்ய வேண்டும்படியான அபிநிவேசத்தாலே. (ஸர்வாத்ம பாவத்தைப் புகழ்ந்து) தம்முடைய பாரிப்புக்கீடாகத் தம்மையடிமை கொள்ளும்படி கோலி, அவன் காட்டிக் கொடுத்த ஸர்வாத்ம பாவத்தை “புகழுநல்லொருவனிலே”, பூதங்கள் பெளதிகங்கள் உஜ்ஜ்வலமான மாணிக்யாதிகள் ரஸவத் பதார்த்தங்கள், காநாதி சப்தராசிகள், மோக்ஷாதி புருஷார்த்தங்கள் ஜகத்ப்ரதாநரான ப்ரஹ்மருத்ராதிகள், இவற்றுக்கடைய காரணமான ப்ரக்ருதி புருஷர்கள், இவற்றையடைய விபூதியாகவுடையனாய், இவற்றிலே அந்தராத்மதயா வ்யாபித்து தத்கத தோஷைரஸம்ஸ்ப்ருஷ்டனா யிருக்கிறபடியைப் பேசி அவ்வநுபவத்தாலே ப்ரீதராய். [4] (சொல்லிப்பாடி யேத்திப் பிதற்றி யெழுந்தும் பறந்தும் துள்ளிக் குனித்துத் தடுகுட்டக் கும்பிடு நட்டமிட்டுச் சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதிகள்) “எம்மானைச் சொல்லிப்பாடி”, “பண்கள் தலைக்கொள்ளப்பாடி”, “முனிவின்றியேத்தி”, “பேர் பல சொல்லிப் பிதற்றி”, “எழுந்தும் பறந்தும் துள்ளாதார்”, “ஏத்திக் குனிப்பார்”, “தடுகுட்டமாய்”, “கும்பிடு நட்டமிட்டாடி”, “உலோகர் சிரிக்க நின்றாடி”, “நெஞ்சங் குழைந்து நையாதே” என்று வாசிக காயிக மாநஸ வ்யாபாரங்களாலே களிக்கும்படி அந்த ப்ரீதி தலைமண்டையிட்டுச் செல்ல, (தம்மடி யாரென்ன உடன் கூடும் ஸாத்யம் வளர) இப்படியுண்டான ப்ரீதி அவனளவில் பர்யவஸியாதே, “தம்மடியாரடியார் தமக்கடியா ரடியார் தம்மடியாரடி யோங்களே” என்று ததீய சேஷத்வத்தி னெல்லையிலே நிற்கிறவர்கள் நமக்குத்தேச்ய ரென்னும்படி, “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலொ” என்று கீழ்ப்பத்தில் ப்ரார்த்தித்த ஸாத்யம் அவர்களோடே கூடி அவனை யனுபவிக்குமளவன்றிக்கே அவனடியாருடைய சேஷத்வத்தி னெல்லையளவும் செல்ல வளர. – [5] (பைகொள் பாம்புபோலே இந்த்ரிய வ்ருத்தி நியமமற) “பைகொள் பாம்பேறியுறை பரனே” என்று அவனுடைய ஸர்வாதிகத்வ ப்ரகாசகமான படுக்கையாயிருக்கும் திருவநந்தாழ்வான், “சக்ஷச்ச்ரவா” என்கிறபடியே ஒரு கரணத்தாலே கரணாந்தர வ்ருத்தியையும் கொள்ளுமாபோலே, “நெஞ்சமே நீணகராகவிருந்த வென் தஞ்சனே”, “வாசகமே யேத்தவருள் செய்யும் வானவர்தம் நாயகனே”, “கைகளாலாரத் தொழுது தொழுதுன்னை”, “கண்களால் காணவருங்கொல்” இத்யாதிகளாலே வாக் பாணி சக்ஷுச் ச்ரோத்ரங்களான இந்திரியங்கள் மநோ வாக் பாணி சக்ஷுர் வ்ருத்திகளை யாசைப்படும்படி யாகையாலே இந்த்ரிய வ்ருத்தி நியமமின்றிக்கே அவனை யநுபவிக்க வேண்டும்படியான பெருவிடாயையுடையராய். (பாடவந்த கவியன்றிக்கே படைத்தான் ச்லோக க்ருத்தாய்) “வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேனல்லேன்” என்று இதர ஸ்தோத்ரத்துக்கு அநர்ஹகரணராய், “ஒன்றியொன்றியுலகம் படைத்தான் கவியாயினேற்கு” என்று ஜகத் ஸ்ருஷ்டி முகத்தாலே தம்முடைய உஜ்ஜீவநத்துக்கு க்ருஷி பண்ணின ஸர்வேச்வரன் விஷயத்திலே, “அஹம் ச்லோக க்ருத் அஹம் ச்லோக க்ருத்” என்கிற உபநிஷத்தின்படியே கவிபாடுமவருமாய். [6] (குறை முட்டுப்பாவிடர்துயர் துன்பமல்லல் துக்கந்தளர்வு காடுகளின்றி அம்ருதாநந்த மக்நரானவர்) தேச விசேஷத்திலே போய் அநுபவிக்கப் பெற்றிலேனென்கிற குறைவில்லை, இவ்வநுபவத்துக்கு எனக்கொரு ப்ரதிஹதியில்லை, அவன் விஷயத்திலேயான பின்பு ஏகதேசமும் என் மநஸ்ஸில் துக்கமில்லை, வகுத்த சேஷியென்று பற்றுகையாலே எனக்கொரு துக்கமுமில்லை, ருசி முன்னாக தேசவிசேஷ ப்ராப்தி பண்ணுகிறவெனக்கு வைதிக புத்ரர்களைப்போலே மீளில் செய்வதென்னென்கிற துக்கமில்லை, இங்கே அவன் குணங்களை நெருங்க புஜித்தவெனக்கு பூர்ணாநுபவம் பண்ணலாம் தேசத்தில் போகப்பெற்றிலே னென்கிற துக்கமில்லை, இது அவன் லீலா விபூதியென்றறிந்தவெனக்கு இனி லீலாவிபூத்யந்வயமாகிற துக்கமில்லை, ஸ்வஸங்கல்பத்தாலே ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணவல்ல ஆச்சர்ய சக்தி யுக்தனானவனைப் பற்றின வெனக்கொரு துக்கமில்லை, அகடிதகடநா ஸமர்த்தனானவனைப் பற்றின வெனக்கொரு தளர்த்தியில்லை, விமுக தசையில் வ்யாப்தியாலும் அபிமுக தசையில் அவதாரத்தாலும் ரக்ஷிக்குமவனைப்பற்றின வெனக்கொரு கேடில்லை யென்றிப்படி, “சன்மம் பலபல”வில் பத்துப்பாட்டாலும் அடைவே தாமே பேசும்படி நிரஸ்த ஸமஸ்த க்லேசராய், அம்ருதரான முக்தர் பகவதநு பவத்தாலே ஆநந்திக்குமாப்போலே அவ்வாநந்த ஸாகர மக்நரானவர். (செய்ய தாமரைக்கண்ணன் அமரர்குல முதலென் றஞ்சாதபடி) “செய்ய தாமரைக்கண்ணனாய்” என்று தொடங்கி “எஞ்சலிலமரர்குல முதல் மூவர் தமுள்ளுமாதியை யஞ்சி நீருலகத்துள்ளீர்கள்” என்று புண்டரீகாக்ஷத்வாதி பரத்வ சிஹ்நங்களை யுடையனானவன் ஜ்ஞாந ஸங்கோச ரஹிதரான நித்யஸூரிகள் திரளுக்கு நிர்வாஹகனன்றோ. ஸம்ஸாரிகளான நம்மாலவனை ஆச்ரயிக்கப்போமோ வென்றஞ்சாதபடி. (எளிவருமிணைவனா மென்றவை பரத்வமாம்படி) “எளிவரு மியல்வினன்”, “இணைவனா மெப்பொருட்கும்” என்று “பத்துடையடியவரிலும்”, “அணைவதரவணையிலும்” வெளியிட்ட வவதார ஸௌலப்யம் பரத்வஸ்தாநீயமாம்படி. – [7] (அவனாகும் ஸௌலப்ய காஷ்ட்டையைக் காட்டி) “நெஞ்சினால் நினைப்பான் யவனவனாகும் நீள் கடல் வண்ணனே” என்று மநஸ்ஸாலே யாதொன்றைத் திருமேனியாகக் கோலினிகோள், அபரிச்சேத்ய மஹிமனான ஸர்வேச்வரன் அத்தையே தனக்கு அஸாதாரண விக்ரஹமாக விரும்புமென்று “யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்யஹம்”, “அர்ச்ச்யஸ் ஸர்வஸஹிஷ்ணுர் அர்ச்சகபராதிகாகிலாத்ம ஸ்திதி” என்கிற அர்ச்சாவதாரமாகிற ஸௌலப்ய காஷ்டையைக் காட்டி, (வழியைத் தருமவன் நிற்க இழியக் கருதுவதென்னாவது) “ஒழிவொன்றில்லாத” என்று தொடங்கி, “இழியக் கருதியோர் மானிடம் பாடலென்னாவதே” என்று யாவதாத்மபாவி பகவதநுபவந்தான் ஒரு சிறாங்கை என்னும்படியான அர்ச்சிராதிமார்க்கத்தையும் தருகிறவன் தன்னையொரு சொல் சொல்லுவாராரோவென் றவஸர ப்ரதீக்ஷனாய் நிற்க, அவனை விட்டுப் புறம்பே கவிபாடுகைக்கு விஷயம் தேடிப்போய் ஒரு சொல்லுக்குப் பாத்தம் போராத க்ஷுத்ர மநுஷ்யரைக் கவி பாடி முன்பு நின்ற நிலையிலுங்காட்டில் தாழவிழிய நினைக்கிறவித்தால் என்ன பிரயோஜநமுண்டு? அத்தால் ஸ்வரூபம் பெற்றிலிகோள், அபிமதம் பெற்றிலிகோள். (வேண்டிற்றெல்லாம் தரும்) “ஸகல பல ப்ரதோஹி விஷ்ணு” என்கிறபடியே ஸர்வாபேக்ஷிதங்களையும் தரும். (தன்னாகவே கொள்ளும்) “பரமம் ஸாம்யமுபைதி” என்கிறபடி தன்னோடு ஸாம்யாபத்தியைக் கொடுக்கும். (கவிசொல்லவம்மினென்று) இதுக்கு நீங்கள் செய்யவேண்டுவ தொன்றுமில்லை; இதர ஸ்தோத்ரம் பண்ணி உங்கள் கரணங்களைப் பாழே போக்காதே, வாய் படைத்த ப்ரயோஜநம் பெறும்படி இவ்விஷயத்திலே கவி சொல்ல வாருங்கோளென்று. – [8] (முக்தைச்வர்யத்தை முன்னிட்டு) “வழியைத் தரும் நங்கள் வானவரீசனை நிற்க” என்றும், “தன்னாகவே கொண்டு” என்றுஞ் சொல்லுகையாலே, இவ்விஷயத்தைக் கவி பாடினால் ஸித்திப்பது பகவதநுபவ பரமஸாம்யா பத்த்யாதிக ளென்று முக்தைச்வர்யமான பேற்றை முன்னிட்டு. (ச்வவ்ருத்தியை மாற்றி ஸ்வவ்ருத்தியிலே மூட்டுகிறார் மூன்றாம் பத்தில்) அதாவது, இப்படி தம்முடைய உபதேசத்தாலே “ஸேவா ச்வவ்ருத்திராக்க்யாதா” என்று நிஹீந்தரதையாலே ச்வவ்ருத்தியாகச் சொல்லப்பட்ட அப்ராப்த விஷய ஸேவையை மாற்றி, “ச்சாயாவா ஸத்வமநு கச்சேத்”, “ஸா கிமர்த்தம் ந ஸேவ்யதே” என்று இவ்விஷயத்தை ஸேவிப்பானென்றும், எத்தைப் பற்ற இவ்விஷயம் ஸேவிக்கப்படாதொழிகிற தென்றும் விதிக்கும்படி ப்ராப்தமான இவ்விஷயத்திலே “புகழுநல்லொருவ”னிற்படியே தம்முடைய வாசிக வ்ருத்தியிலே மூட்டுகிறார் மூன்றாம் பத்திலே யென்கை.
அடுத்து மூன்றாம் பத்தில், “தாமரைமலர் போன்று அழகான திருக்கண்கள் கொண்டவனும், நித்யஸூரிகளால் எப்போதும் வணங்கப்படுபவனும் ஆகிய அவனை நம்மால் அண்ட இயலுமா?” என்று இந்த ஸம்ஸாரிகள் அச்சம் கொண்டு பின்வாங்காமல், அவனை வணக்கவேண்டும் என்று தீர்மானித்தார். ஆகவே முதல் இரண்டு பத்துக்களில் உபதேசித்த அவதாரத்தின் ஸௌலப்யம் என்பது மிகவும் உயர்ந்த நிலையிலேயே உள்ளது என்பதை உணர்த்தும்விதமாக அவதாரத்தின் எளிமையை உபதேசித்தார். மேலும், “அர்ச்சிராதி மார்க்கமாக பரமபதத்தை அடையும்படிச் செய்யும் பகவானை அல்லாமல் மற்ற விஷயக்களின் ஈடுபட்டு அவர்களைத் தொழுதபடி இருத்தல் என்பது பயனற்றது. ஆகவே அனைத்து பயன்களையும் அளிப்பவனும், தன்னைப் போன்றே ஸ்வரூபம் பெறுவதற்கு அருள் செய்பவனும் ஆகிய அவன் விஷயத்தில் சொற்கள் கொண்டு கைங்கர்யம் செய்வீர்களாக”, என்று மற்றவர்கள் குறித்துச் செய்யப்படுவதான தாழ்ந்த செயல்களை விலக்கி, தனது செய்கையான சொற்கள் மூலமான கைங்கர்யம் என்பதில் அவர்களை ஈடுபடுத்துகிறார். (முழுவதுமாய்) – திருவாய்மொழி (3-1-8) - முழுதுமாய் முழுதியன்றாய் – என்றும், (எங்கணும்) - திருவாய்மொழி (3-2-4) - ஏழ்ச்சிக் கோடின்றி யெங்கணும் நிறைந்த வெந்தாய் - என்றும், (ஒழிவற) - திருவாய்மொழி (3-2-7) - எஞ்ஞான்றுமெங்கு மொழிவற நிறைந்து நின்ற - என்றும், (அருவாகி நின்று) - திருவாய்மொழி (3-10-10) - அளவுடை யைம்புலன்க ளறியா வகையா லருவாகி நிற்கும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப இடம், காலம், பொருள் ஆகிய மூன்றாலும் அளவுபடுத்தி அறிய இயலாதபடி ஸ்ருஷ்டிக்கப்பட்ட அனைத்து சேதநம் மற்றும் அசேதநம் ஆகியவற்றில் வ்யாபித்து நின்று. (நோய்விலனாம் ஸர்வ வ்யாபகன்) - திருவாய்மொழி (3-4-10) - யாவையும் யாவரும் தானா யவரவர் சமயந்தோறும் தோய்விலன் – என்றும், கட உபநிஷத் - அநச்நந்நந்யோ அபி சாகசீதி – இவற்றைக் காட்டிலும் வேறுபட்ட அவன் ப்ரகாசித்தபடி - என்றும் கூறுவதற்கு ஏற்ப அவை அனைத்தின் தோஷங்களும் தன்னை தீண்டாதவிதத்தில் எங்கும் வ்யாபித்து நிற்கும் ஸர்வேச்வரன். (தீர்ந்த வடியார்களைத் தாளிணைக் கீழ்க் கொள்ளும் தன் படிக்கும்) - திருவாய்மொழி (3-5-11) - தீர்ந்த வடியவர் தம்மை - என்பதற்கு ஏற்ப, அடைகின்ற பேறு மற்றும் அந்தப் பேறறை அடையும்படிச் செய்யும் உபாயம் ஆகிய இரண்டும் ஸர்வேச்வரனே ஆவான் என்று உறுதியாக எண்ணியபடி உள்ள தனது அடியார்களை, திருவாய்மொழி (3-7-7) - சன்மசன்மாந்தரங்காத் தடியார்களைக் கொண்டு போய்த் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க்கொள்ளுமப்பன் – என்பதற்கு ஏற்ப தொடர்ந்து வருகின்ற பிறைகளில் செல்லாதபடிக் காப்பாற்றி, இப்போது எடுத்துள்ள இந்தச் சரீரத்தின் முடிவில் அர்ச்சிராதி மார்க்கமாகப் பரமபதத்திற்குக் கொண்டு சென்று, தனது ஸ்வருபத்தை அடைகின்ற நிலையை அளித்து, தனது திருவடிகளுக்கு அணை போன்றுள்ளதாக அவர்களை தனது திருவடிகளின் கீழ் சேர்த்துக் கொண்டு நிற்கும் எஜமனனாகிய இத்தகைய வள்ளல் தன்மைக்கும். (நீ தந்த) - திருவாய்மொழி (3-2-1) - அந்நாள் நீ தந்த வாக்கையின் வழியுழல்வேன் – என்று கூறுவதற்கு ஏற்ப ஸ்ருஷ்டியின்போது உன்னை வந்தடைவதற்கு ஏற்றபடியாக நீ எனக்கு அளித்த சரீரத்தைக் கொண்டு உன்னைப் பெறுவதற்கு முயலாமல், நான் அந்தச் சரீரம் மூலமாக எனக்குப் பல தீமைகளை வரவழைத்துக் கொண்டு. (மா மாய) – திருவாய்மொழி (3-2-2) - பல்மாமாயப் பல்பிறவியில் படிகின்ற யான் - என்பதற்கு ஏற்ப மூன்று குணங்களுடைய வேறுபாடு காரணமாகப் பலவகையாக உள்ளதும், தாண்ட இயலாதபடி உள்ளதும் ஆகிய ப்ரக்ருதியின் செயல்களாக உள்ள தேவர்கள் முதலான சரீரங்களில் புகுந்து. (புணர்வினை) - திருவாய்மொழி (3-2-3) - பொல்லாவாக்கையின் புணர்வினை - என்பதற்கு ஏற்ப இத்தகைய தாழ்ந்த சரீரத்திற்குக் காரணமாக உள்ளதும், ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததும், திருவாய்மொழி (3-2-7) - வினையியல் பிறப்பழுந்தி - என்பதற்கு ஏற்ப உள்ளதான கர்மங்களின் விளைவாக மீண்டும் பாபங்களில் சென்று சேர்ப்பதாக ஆழமாக அழுந்தி, (அலமருகின்றேன்) - திருவாய்மொழி (3-2-9) - கொடுவினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம் வழி திகைத்தலமருகின்றேன் - எனபதற்கு ஏற்ப என்னால் வேரை அறுக்க இயலாமலும், அதன் வேர் எது என்று காண இயலாமலும், இத்தகைய நிலையில் உள்ளே வருவதற்கான வழியை மட்டுமே அறிந்து, இதிலிருந்து வெளியேற வழி அறியாமல் உள்ளதான பாபங்கள் நிறைந்த குழியில் அகப்பட்டுக் கொண்டு நின்று, உன்னை வந்தடைவதற்கு ஏற்ற வழியை அறியாமல், உன்னை அழைத்தபடி திகைத்து நின்றேன். (வேர் அற அரிந்து) – திருவாய்மொழி (3-2-1) - வினைகளை வேரறப் பாய்ந்து – என்றும், திருவாய்மொழி (3-2-2) - தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து - என்றும் கூறுவதற்கு ஏற்ப, எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ளதும், அளவிட்டு அறிய இயலாததும், நம்முடைய முயற்சியால் விலக்க இயலாததும், அனைவரும் அறிந்ததும் ஆகிய பாபங்களுடைய சங்கிலியை, அவை மீண்டும் துளிர்க்காமல் அறுத்து. (எந்நாள் எங்கு வந்து தலைப்பெய்வன் என்று) - திருவாய்மொழி (3-2-1) - எந்நாள் யானுன்னை யினி வந்து கூடுவன் – என்றும், திருவாய்மொழி (3-2-5) - எங்கு வந்தணுகிற்பன் - என்றும், திருவாய்மொழி (3-2-9) - எங்கினித் தலைப் பெய்வன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, நான் உன்னை எந்த நாளில் வந்து அடைவேன் என்று அந்த நாளைக் குறித்து உறுதியாக உரைக்கவேண்டும்; நான் உன்னை எங்கே வந்து அடைவேன், இனி நான் சென்று அடைவதற்கு ஏற்ப ஒரு இடம் உள்ளதோ என்று பலவிதமான சரீரத்தின் ஸம்பந்தத்தை எண்ணி மனம் நொந்து, அதில் ஏற்பட்ட வெறுப்புடன். (கழித்துப்புகும் நம் காதலுக்கும்) - திருவாய்மொழி (3-9-8) – காயங்கழித்தவன் தாளிணைக்கீழ்ப் புகுங்காதல் - என்பதற்கு ஏற்ப பகவத் குணங்களை அனுபவித்தபடி காலத்தைக் கழித்து, இந்தச் சரீரத்தை விட்டு நீங்கி, அவனுடைய திருவடிகளின் கீழே புகவேண்டும் என்பதாக உள்ள அடியாரான தனது ஆசைக்கும். (ஸத்ருசமாக) - இப்படியாக இருவருடைய நிலைக்கு ஏற்றவிதத்தில். (கண்டு கொள் என்னும்) – திருவாய்மொழி (3-9-9) – வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் - என்பதற்கு ஏற்ப ஈச்வரன் காண்பித்துத் தருகின்ற. – (ஊனமில் மோக்ஷபலமான) – திருவாய்மொழி (3-4-7) - ஊனமில் மோக்க மென்கோ - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுடைய சரீரமாக உள்ள ஆத்ம அனுபவம் என்பது மட்டும் அல்லாமல், அந்தச் சரீரத்தின் உயிராக நிற்கும் அவன்வரை சென்று அனுபவிப்பதன் விளைவாகச் சிறிதும் குறைவு அற்றதாகவும், ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஏற்றதாக இரண்டாவது பத்தில் உறுதிபட உரைக்கப்பட்டதும், உயர்ந்த புருஷார்த்த லக்ஷணத்தைக் கொண்ட மோக்ஷத்தின் பலனாக உள்ளதும் ஆகிய பகவத் அனுபவம் மற்றும் கைங்கர்யங்கள் என்பவையாக உள்ளதால், (முடிச்சோதி அனுபவத்தாலே) - திருவாய்மொழி (3-1-1) – முடிச்சோதி - என்ற திருவாய்மொழியில் அவனுடைய வடிவழகு மற்றும் ஆபரணங்களுடன் சேர்ந்த அழகு ஆகியவற்றையும் அனுபவித்து. (நித்யவஸ்து நீடு பெற்று) – அவற்றை அளவுப்படுத்தி அனுபவிக்க இயலாமல் உள்ளதால், இத்தகைய நிலையானது தனது இந்த்ரியங்களில் உள்ள குறைவு காரணமாக ஏற்பட்டது என்று எண்ணி இவர் வருத்தப்பட்டு நின்றார். அப்போது ஈச்வரன் ஆழ்வாரிடம், “இத்தகைய நிலையானது நம்முடைய மேம்பட்ட வேறுபாடு காரணமாக உள்ளதாகும்”, என்று உரைத்து அவருடைய வருத்தத்தை விலக்கினான். அந்த அனுபவம் காரணமாக ஆழ்வாரும் திருவாய்மொழி (3-2-10) - பெற்றது நீடுயிரே – என்று நித்யமாக உள்ள ஆத்மாவின் இருப்பை அடைந்தவராக. – (அவச்சேதமற்ற வடிமை செய்ய வேண்டும்படி) - உயிர் தரித்திருப்பதற்கான செயலும் நிறைவேறவேண்டும் என்பதால், திருவாய்மொழி (3-3-1) - ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம் - என்று இன்ன இடம், இன்ன காலம், இன்ன நிலை, இன்ன கைங்கர்யம் என்று ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்காதபடியாக, அனைத்து இடங்களிலும் அனைத்து காலங்களிலும் அனைத்து நிலைகளிலும் அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்யவேண்டும் என்று ஏற்பட்ட ஆசை காரணமாக. (ஸர்வாத்ம பாவத்தைப் புகழ்ந்து) - அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் என்பதான தனது பாரிப்புக்கு ஏற்றபடி தன்னை அடிமையாகக் கொள்ளும்படியாக விண்ணப்பித்து, அவன் காண்பித்துக் கொடுத்ததான “அனைத்து சேதன அசேதனங்களுக்கும் ஆத்மாவாக இருத்தல்” என்ற தன்மையைத் திருவாய்மொழி (3-4) – புகழும் நல் ஒருவனில் - என்பதில் பஞ்சபூதங்கள், மற்ற பொருள்கள், ஒளியுடன் கூடிய மாணிக்கம், இசை போன்று ஓசைகள், மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள், உலகில் முதன்மையானவராக உள்ள நான்முகன் மற்றும் ருத்ரன் போன்றவர்கள், இவை அனைத்திற்கும் காரணமாக உள்ள ப்ரக்ருதி மற்றும் புருஷன் முதலான அனைத்தையும் தனது செல்வமாகக் கொண்டவனாகவும், இவை அனைத்திலும் அவற்றுடைய தோஷங்கள் ஏதும் தன்னை வந்து தீண்டாதபடி உள்ளவனாகவும் இருக்கின்ற நிலையை உரைத்து, அந்த அனுபவத்தால் ப்ரீதி அடைந்தவராக. – (சொல்லி) – திருவாய்மொழி (3-5-1) – எம்மானைச் சொல்லிப்பாடி – என்றும், (பாடி) - திருவாய்மொழி (3-5-2) – பண்கள் தலைக்கொள்ளப்பாடி – என்றும், (ஏத்தி) - திருவாய்மொழி (3-5-6) – முனிவின்றி ஏத்தி – என்றும், (பிதற்றி) - திருவாய்மொழி (3-5-8) - பேர் பல சொல்லிப் பிதற்றி - என்றும், (எழுந்தும் பறந்தும் துள்ளி) - திருவாய்மொழி (3-5-1) - எழுந்தும் பறந்தும் துள்ளாதார் - என்றும், (குனித்து) - திருவாய்மொழி (3-5-6) – ஏத்திக் குனிப்பார் – என்றும், (தடுகுட்டம்) - திருவாய்மொழி (3-5-3) – தடுகுட்டமாய், (கும்பிடு நட்டமிட்டு) - திருவாய்மொழி (3-5-4) – கும்பிடு நட்டமிட்டாடி - என்றும், (சிரிக்க) - திருவாய்மொழி (3-5-3) – உலோகர் சிரிக்க நின்றாடி - என்றும், (குழைந்து நையும் ப்ரீதிகள்) - திருவாய்மொழி (3-5-7) – நெஞ்சங் குழைந்து நையாதே – என்றும் கூறுவதற்கு ஏற்ப வாக்கு, மனம் மற்றும் சரீரம் ஆகியவற்றின் செய்கைகள் மூலம் களித்திருக்கும்படியாக அந்த ப்ரீதியானது வளர்ந்தபடி இருக்க. (தம்மடி யாரென்ன உடன் கூடும் ஸாத்யம் வளர) - இவ்விதம் உண்டான ப்ரீதியானது அவன் வரை சென்று நின்று விடாமல், திருவாய்மொழி (3-7-10) – தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே – என்பதற்கு ஏற்ப, “அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக நிற்பது என்ற எல்லையில் நிற்பவர்களே நம்மால் ஏற்கப்படவேண்டியவர்கள்” என்பது வெளிப்படும்படியாக, திருவாய்மொழி (2-3-10) - அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலொ – என்று இரண்டாம் பத்தில் ப்ரார்த்தனை செய்த பேறானது, அவர்களுடன் சேர்ந்து நின்று அவனை அனுபவித்தல் என்பதுடன் மட்டும் நிற்காமல், அவனுடைய அடியார்களுக்கு அடிமை செய்தல் என்ற எல்லைவரை வளர்ந்தபடி உள்ளபோது. (பைகொள் பாம்புபோலே இந்த்ரிய வ்ருத்தி நியமமற) - திருவாய்மொழி (3-8-4) - பைகொள் பாம்பேறியுறை பரனே - என்று கூறுவதற்கு ஏற்ப அனைத்தைக் காட்டிலும் உயர்ந்தவனாக உள்ளவன் எனபதை வெளிப்படுத்தும்படியான படுக்கையாக உள்ள ஆதிசேஷன், சக்ஷச்ச்ரவா – கண்களையே காதுகளாக – என்பதற்கு ஏற்ப ஒரு இந்த்ரியம் மூலம் மற்றொரு இந்த்ரியத்தின் செயல்ளைச் செய்வது போன்று, திருவாய்மொழி (3-8-2) - நெஞ்சமே நீணகராகவிருந்த வென் தஞ்சனே - என்றும், திருவாய்மொழி (3-8-3) – வாசகமே யேத்தவருள் செய்யும் வானவர்தம் நாயகனே – என்றும், திருவாய்மொழி (3-8-4) - கைகளாலாரத் தொழுது தொழுதுன்னை - என்றும், திருவாய்மொழி (3-8-5) - கண்களால் காணவருங்கொல் - என்றும் உள்ள பாசுரங்கள் மூலம் வாக்கின் செயலை மனமும், கைகளின் செயலை வாக்கும், கண்களின் செயலைக் கைகளும், காதுகளின் செயலைக் கண்களும் செய்ய விரும்புவதால், இந்த்ரியங்களுடைய செயல்பாடுகள் எந்த விதிமுறைகளுக்கும் உட்படாமல் அவனை அடைந்து அனுபவிக்கவேண்டும் என்ற பெருந்தாகம் மட்டுமே கொண்டவராக. (பாடவந்த கவியன்றிக்கே படைத்தான் ச்லோக க்ருத்தாய்) - திருவாய்மொழி (3-9-9) - வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேனல்லேன் - என்று மற்ற எதனைக் குறித்தும் கவிப்பாடுவதற்கான தகுதி அற்ற இந்த்ரியங்களைக் கொண்டவராக, திருவாய்மொழி (3-9-10) - ஒன்றியொன்றியுலகம் படைத்தான் கவியாயினேற்கு - என்பதற்கு ஏற்ப ஜகத்தை ஸ்ருஷ்டித்த செயல் மூலமாக தான் கரையேறுவதற்கான செயல்களைச் செய்த ஸர்வேச்வரன் விஷயத்தில், அஹம் ச்லோக க்ருத் அஹம் ச்லோக க்ருத் - நான் கவி பாடுபவன், நான் கவி பாடுபவன் - என்றுள்ள உபநிஷத் வாக்கியத்தின்படி கவி பாடுபவராக. (குறை முட்டுப்பாவிடர்துயர் துன்பமல்லல் துக்கந்தளர்வு காடுகளின்றி அம்ருதாநந்த மக்நரானவர்) – பரமபதத்தில் சென்று அவனை அனுபவிக்க இயலவில்லை என்ற குறையில்லை, அத்தகைய அனுபவத்திற்கு எனக்கு எந்தத் தடையும் இல்லை, அவனுக்கே என்று ஆன பின்னர் என் மனதில் சிறிதளவும் துக்கம் இல்லை, என்னுடைய இயல்பான எஜமானனைப் பற்றுவதில் எனக்கு எந்த ஒரு துக்கமும் இல்லை, அவன் மீது உள்ள ஆசை மற்றும் கைங்கர்ய ருசி ஆகியவற்றை முன்னிட்டுக் கொண்டு பரமபதத்திற்குச் செல்ல உள்ள எனக்கு வேதங்களை மட்டுமே உரைத்தபடி உள்ளவர்கள் எண்ணுவது போன்று “அங்கிருந்து திரும்ப நேர்ந்தால் என்ன ஆகும்” என்றுள்ள துக்கம் இல்லை, இங்கு உள்ளபோது அவனுடைய திருக்கல்யாண குணங்களை நன்றாக அனுபவித்த எனக்கு அத்தகைய குணங்களைப் பரிபூர்ணமாக அனுபவிக்கலாம் என்பதாக உள்ள பரமபதத்திற்குச் செல்ல இயலாது என்ற துக்கம் இல்லை, இந்த உலகமானது அவனுடைய லீலாவிபூதி என்று அறிந்த எனக்கு இனி இந்த உலகத்துடன் சேர்ந்து இருக்கவேண்டுமே என்ற துக்கம் இல்லை, தன்னுடைய நினைவு மூலம் மட்டுமே ஸ்ருஷ்டி போன்ற அனைத்தையும் செய்யவல்ல ஆச்சர்யமான சக்தி கொண்ட அவனைக் குறித்து எனக்கு எந்தத் துக்கமும் இல்லை, யாராலும் செய்ய இயலாதவற்றையும் செய்து முடிக்கும் திறமை கொண்ட அவனைக் குறித்து எனக்கு எந்தத் தளர்ச்சியும் இல்லை, அவனிடம் அன்பு என்பது இல்லை என்றாலும் எங்கும் பரந்து விரிந்துள்ள தன்மையாலும் பக்தி உள்ளபோது அவதாரம் மூலம் காப்பாற்றும் தன்மையாலும் அவனைப் பிடித்துக் கொண்ட எனக்கு எந்க்த கேடும் இல்லை என்று இவ்விதமாக திருவாய்மொழி (3-10) – சன்மம் பலபல - என்ற திருவாய்மொழியில் உள்ள பத்து பாசுரங்களாலும் முழுவதுமாக உரைத்து அனைத்து துயரங்களும் நீங்கியவராக, எப்போதும் அங்குள்ளவராகிய முக்தர்கள் பகவத் அனுபவம் மூலம் ஆனந்தம் பெறுவது போன்று, அத்தகைய ஆனந்தத்திற்கு நிகரான ஆனந்தக்கடலில் மூழ்கியவர். – (செய்ய தாமரைக்கண்ணன் அமரர்குல முதல் என்று அஞ்சாதபடி) - அஞ்சாதபடி திருவாய்மொழி (3-6-1) - செய்ய தாமரைக்கண்ணனாய் – என்று தொடங்கி, திருவாய்மொழி (3-6-9) – எஞ்சலில் அமரர்குல முதல் மூவர்தம் உள்ளுமாதியை அஞ்சி நீருலகத்துள்ளீர்கள் - என்று கூறுவதற்கு ஏற்ப, தாமரை போன்ற திருக்கண்கள் கொண்டவன் முதலான பரத்வத்திற்கே உரிய அடையாளங்களைக் கொண்டுள்ள அவன், ஞானத்தில் சுருக்கம் அடையாமல் உள்ள நித்யஸூரிகளுடைய நிர்வாஹகன் அல்லவோ? இவ்விதம் உள்ள அவனை ஸம்ஸாரிகளாகிய நம்மால் அண்ட இயலுமோ என்று அச்சம் கொள்ளாதபடியாக. (எளிவரும் இணைவனாம் என்றவை பரத்வமாம்படி) திருவாய்மொழி (1-3-2) - எளிவரும் இயல்வினன் – என்று திருவாய்மொழி (1-3) – பத்துடை அடியவர் - என்பதிலும், திருவாய்மொழி (2-7-1) – இணைவனாம் எப்பொருட்கும் – என்று திருவாய்மொழி (2-7) – அணைவது அரவணை – என்பதிலும் வெளியிட்ட அவதாரத்தின் எளிமை என்பது, பரத்வத்தையே வெளிப்பருத்துகிறது என்று கருத்து. (அவனாகும் ஸௌலப்ய காஷ்ட்டையைக் காட்டி) - திருவாய்மொழி (3-6-9) – நெஞ்சினால் நினைப்பான் யவனவனாகும் நீள் கடல் வண்ணனே – என்று மனதினால் எதனை அவனுடைய திருமேனியாகக் கொள்கிறீர்களோ, எல்லையற்ற மஹிமை பொருந்தியவனாகிய ஸர்வேச்வரன் அதனையே தனக்குக் கிட்டுவதற்கு அரிய விக்ரஹமாகக் கொள்கிறான் என்று, கீதை (4-11) – யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்யஹம் – எந்த பக்தர்கள் என்னை எவ்விதம் ஆராதிக்கிறார்களோ நானும் அவர்களுக்கு அது போன்று உள்ளேன் - என்றும், ஸ்ரீரங்கராஜஸ்தவம்(74) - அர்ச்ச்யஸ் ஸர்வஸஹிஷ்ணுர் அர்ச்சகபராதிகாகிலாத்ம ஸ்திதி – ஆராதிக்கத் தகுந்தவனாக, அனைத்து அபராதங்களையும் பொறுப்பவனாக, தனது நிலைகள் அனைத்தும் தன்னை உபாஸிப்பவர்களுக்கு அடிபணிந்தபடி - என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ளதான அர்ச்சாவதாரத்தில் காணப்படும் எளிமையின் எல்லையை உணர்த்தி. (வழியைத் தருமவன் நிற்க இழியக் கருதுவதென்னாவது) – திருவாய்மொழி (3-9-3) – ஒழிவு ஒன்றில்லாத - என்று தொடங்கி, திருவாய்மொழி (3-9-3) - இழியக் கருதியோர் மானிடம் பாடலென்னாவதே – என்பதற்கு ஏற்ப உயிர் உள்ளவரையில் பகவத் அனுபவத்துடன் வாழ்வதற்கு ஏற்ற ஒரு இடத்தையும், இத்தகைய அனுபவம் என்பதும் அற்பமானது ஆகும் என்பதாக உள்ள அர்ச்சிராதி மார்க்கத்தையும் அளிக்கும் ஸர்வேச்வரன், தன்னைக் குறித்து ஏதேனும் ஒரு சொல்லாவது உரைப்பார்களோ என்று தகுந்த நேரத்தை எதிர்ப்பார்த்தபடி உள்ளான். இவ்விதம் உள்ள அவனை விடுத்து, வேறு ஒரு விஷயம் ஏதேனும் நாம் கவி பாடத்தக்கபடி உள்ளதா என்று தேடிச்சென்று, ஒரு சொல்லுக்குக் கூடத் தகுதியற்றபடி உள்ள தாழ்ந்த மனிதர்களை குறித்துக் கவிபாடி, முன்பு உள்ள நிலையைக் காட்டிலும் தாழ்ந்து போக எண்ணுவதால் என்ன பயன் உள்ளது? அதனால் உங்கள் ஸ்வரூபம் அடையப்பெறுவீர்களோ? நீங்கள் விரும்பும் பயன்கள் அனைத்தையும் பெறுவீர்களோ? (வேண்டிற்றெல்லாம் தரும்) – ஸ்ரீவிஷ்ணுதர்மம் (4-3-47) – ஸகல பல ப்ரதோஹி விஷ்ணு – அனைத்து பலன்களையும் அளிப்பவன் விஷ்ணுவே – என்பதற்கு ஏற்ப உங்களுடைய அனைத்துவிதமான விருப்பங்களையும் அளிப்பான். (தன்னாகவே கொள்ளும்) - முண்டக உபநிஷத் – பரமம் ஸாம்யம் உபைதி - தனக்கு நிகரான நிலையை அளிக்கிறான் – என்பதும் காணலாம். (கவி சொல்ல வம்மின் என்று) - இதற்காக நீங்கள் ஏதும் செய்யவேண்டாம். மற்ற விஷயங்களைக் குறித்துத் துதித்து நின்று உங்களுடைய இந்த்ரியங்களை வீணாக்காமல், வாய் கொண்ட பயன் இதுவே ஆகும் என்று இந்த விஷயத்தில் கவிபாட வாருங்கள் என்று. (முக்த ஐச்வர்யத்தை முன்னிட்டு) – திருவாய்மொழி – வழியைத் தரும் நங்கள் வானவரீசனை நிற்க - என்றும், திருவாய்மொழி – தன்னாகவே கொண்டு – என்றும் கூறுவதால், இந்த பகவத் விஷயத்தைக் குறித்துக் கவிபாடினால் கிட்டுவது என்னவென்றால், பகவத் அனுபவம் மற்றும் அவனைப் போன்ற நிலையை அடைதல் முதலானவையே ஆகும் என்று முக்த ஐச்வர்யமாக உள்ள பேற்றை முன்னிட்டுக் கொண்டு. (ச்வவ்ருத்தியை மாற்றி ஸ்வவ்ருத்தியிலே மூட்டுகிறார் மூன்றாம் பத்தில்) -இவ்விதமாகத் தன்னுடைய உபதேசம் மூலமாக, “மநுஸ்ம்ருதி – ஸேவா ச்வவ்ருத்திராக்க்யாதா - மற்றவர்களுக்குத் தொண்டு செய்தல் இழிவானதே ஆகும்” என்று தாழ்ந்ததாகக் கூறப்பட்டதால் தகுதி ஏதும் இல்லாத விஷயத்தில் தொண்டு புரிதல் என்பதை மாற்றி, ச்சாயாவா ஸத்வமநு கச்சேத் - நிழல் போன்று அவனைத் தொடர வேண்டும் - என்றும், ஸா கிமர்த்தம் ந ஸேவ்யதே - வாஸுதேவன் என்று மரநிழலை ஏன் இன்னமும் அடையவில்லை - என்றும் கூறுவதற்கு ஏற்ப, பகவத் விஷயத்தையே ஸேவிக்க வேண்டும் என்றும், எந்தக் காரணத்தால் பகவத் விஷயத்தை ஸேவிக்காமல் இருக்கிறார்கள் என்றும் விதிக்கும்படியாக, அடையப்படவேண்டிய இயல்பான இந்த விஷயத்தில் திருவாய்மொழி – புகழும் நல் ஒருவன் – என்று கூறுவதற்கு ஏற்ப, தான் செய்வதான வாக்கு கொண்டு செய்யும் கைங்கர்யத்தில் மூன்றாம் பத்து மூலம் ஈடுபடுத்துகிறார் என்று கருத்து.