Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 220)
நான்காம் ப்ரகரணம்
[1] சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவனென்கிற சிதசித் த்ரய த்ரிவித காரணமானவன் அறியாதனவறிவிக்க, உள்ளம் தேறித் தூமனம் மருளிலென்னும் ஜ்ஞாந பலமான வெளிக்கொண்ட மோக்ஷம் தேடி வாட, [2] உலராமலாவி சேர்ந்து சிக்கெனப் புகுந்து ஸம்பந்திகளும் சேர்தல் மாறினரென்ன வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மாவீட்டை உபயாநுகுணமாக்கினவர், [3] ஆச்ரயணியனுக்கு பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற ஸகல பல ப்ரதத்வ காரணத்வ சேஷசாயித்வ ச்ரிய:பதித்வ ஸௌலப்யாதிகளைத் திண்ணனணைவதென்று வெளியிட்டு, [4] கள்வா தீர்த்தனென்று வசன ப்ரத்யக்ஷங்களுங் காட்டி, [5] புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந்துக்காநந்த ரஸம் முன்னாக விதிக்கிற அந்தர்கத குணோபாஸநத்தை [6] மதித்துப் பெருக்கி மூழ்கியழுந்திக் கீழ்மை வலஞ் சூதுஞ் செய்து இளமை கெடாமல் செய்யும் க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தநாஞ்ஜலி ப்ரதக்ஷிணகதி சிந்தநாத்யங்க யுக்தமாக்குகிறார் இரண்டாம் பத்தில்.
இரண்டாம்பத்தால் ஸர்வகாரணபூதனான ஸர்வேச்வரன் கீழில்பத்திலே தமக்கு அஜ்ஞாதஜ்ஞாபநம் பண்ண அவனாலே தத்தஜ்ஞாநரானவிவர் அந்த ஜ்ஞாநத்துக்கு பலமான மோக்ஷத்தை அப்போதே பெறவேணுமென் றாசைப்பட்டுப் பெறாமையாலே அவஸந்நராக, இவருடைய அவஸாதமெல்லாம் தீரும்படி அவன் வந்து ஸம்ச்லேஷித்து, அந்த ஸம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதியையுடையனாய், அந்த ப்ரீதி இவரொருவரளவில் பர்யவஸியாதே இவரோடு பரம்பரயா ஸம்பந்தமுடையாரளவும் வெள்ளமிட்டு அந்த ப்ரீதியாலே பரமபுருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தை இவர்க்கு அவன் கொடுக்கத் தேட, அந்த மோக்ஷத்தை அவனுடைய சேஷித்வத்துக்கும் தம்முடைய சேஷத்வத்துக்கும் அநுகுணமாம்படி நிஷ்கர்ஷித்தவர், ஆச்ரயணீயனான வவனுக்குக் கீழுக்தமான பரத்வத்தை நிலைபெறுத்துவனவான லக்ஷணங்களை வெளியிட்டு, ததநுகுணமான வசந ப்ரத்யக்ஷங்களையும் தர்சிப்பித்து, ஆச்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக த்யாஜ்யமான ஸம்ஸாரத்தினுடைய துக்கமும் ப்ராப்யமான மோக்ஷத்தினுடைய ஆநந்தமும் ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வக மோக்ஷ ப்ராப்திக்குறுப்பான ஸாதகத்தினுடைய ரஸமும் முன்னாக விதிக்கிற ஸகுண ப்ரஹ்மோபாஸநத்தை நிஷித்தாநுஷ்டாநங்களினுடைய த்யாக பூர்வகமாக க்ஷேத்ர வாஸாத்யங்கங்களோடே கூட்டுகிறா ரென்கிறார்.
– இரண்டாம் பத்தில் செய்வது என்ன? அனைத்து வஸ்துக்களுக்கும் காரணமாக உள்ள ஸர்வேச்வரன், முதல் பத்தின் மூலம், தான் அறியாத பலவற்றையும் தனக்கு உணர்த்தப் பெற்ற நம்மாழ்வார், இவ்விதம் அவன் மூலமாக ஞானம் பெற்று, அத்தகைய ஞானத்தின் பலனாகிய மோக்ஷத்தை உடனேயே அடையவேண்டும் என்று ஆசை கொண்டார். ஆனால் அந்த நிலையை அடைய இயலாமல் துக்கம் அடைந்தார். அவருடைய அந்தத் துக்கம் அனைத்தும் தீரும்விதமாக அவன் வந்து இவருடன் கலந்து நின்றான். இந்தச் சேர்க்கையால் அவன் மகிழ்ந்தான். அத்தகைய மகிழ்ச்சியானது இவர் ஒருவருடைய அளவில் மட்டும் நிற்காமல், இவருடன் ஸம்பந்தம் கொண்டுள்ள அனைவரிடத்திலும் சூழ்ந்து நின்றது. அந்த மகிழ்ச்சி காரணமாக மிகவும் உயர்ந்த புருஷார்த்தத்தின் லக்ஷணமாக உள்ள மோக்ஷத்தை இவருக்கு அளிக்க அவன் முன்வந்தான். அத்தகைய மோக்ஷத்தை அவனுடைய எஜமானனாக உள்ள தன்மை மற்றும் தான் அடிமையாக உள்ள தன்மை ஆகியவற்றுக்குத் தகுதியாக உள்ளவிதத்தில் உறுதியாக்கினார். இதனைத் தொடர்ந்து, அனைவராலும் அண்டுவதற்கு ஏற்றபடியாக உள்ள அவனுக்கு, முதற்பத்தில் கூறப்பட்ட பரத்வத்த்தை நிலைநாட்டுவதாக உள்ள அடையாளங்களை வெளிப்படுத்தினார். அந்த நிலைக்கு ஏற்றபடியாக உள்ள வசனங்களையும் காட்சிகளையும் காண்பித்தார். அவனை அண்ட முயல்பவர்களுக்கு மேலும் ஆசை ஏற்படும்விதமாக, கைவிடத்தக்கதான இந்த ஸம்ஸாரத்தின் துக்கம், அடையத்தக்கதான உள்ள மோக்ஷத்தின் ஆனந்தம் மற்றும் ஸம்ஸாரத்தை விலக்குவதற்கு முன்பாக மோக்ஷத்தை அடைவதற்கு உறுப்பாக உள்ள உபாயத்தின் சுவை ஆகியவற்றை முன்னிறுத்தியபடி, அனைத்து குணங்களுடன் கூடிய ப்ரஹ்ம உபாஸனையை விதித்து, அதற்கு உதவுவதாக உள்ள தீயவற்றை விலக்குதல் மறும் திவ்யதேசங்களில் வசித்தல் முதலியவற்றைச் செய்யவேண்டும் என்கிறார்.
[1] (சோராத மூவா வேர்முதலா யுலகம் படைத்தவனென்கிற சிதசித் த்ரய த்ரிவித காரணமானவன்) “சோராத வெப்பொருட்குமாதியாஞ்சோதி”, “மூவாத்தனி முதலாய்”, “எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய்”, “பொருளென்றிவ் வுலகம் படைத்தவன்” என்று லீலா விபூதியில் ஸங்கல்ப விசிஷ்ட வேஷத்தாலே நிமித்தமாயும், ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்ட வேஷத்தாலே உபாதாநமாயும், ஜ்ஞாந சக்த்யாதி குண விசிஷ்ட வேஷத்தாலே ஸஹகாரியாயும் நித்யவிபூதியில் இச்சா விசிஷ்ட வேஷத்தாலே நிமித்தமாயும்; அப்ராக்ருதா சிஜ்ஜீவ விசிஷ்ட வேஷத்தாலே உபாதாநமாயும், விநியோகோபயோகி ஜ்ஞாநாதி விசிஷ்ட வேஷத்தாலே ஸஹகாரியாயும்; இப்படி பத்த முக்த நித்ய ரூபமான சித் த்ரயத்துக்கும் ப்ராக்ருதாப்ராக்ருத காலரூபமான அசித் த்ரயத்துக்கும் த்ரிவித காரணமும் தானேயான ஸர்வேச்வரன். (அறியாதனவறிவிக்க வுள்ளம் தேறி) “அறியாதன அறிவித்த” என்று இவர்க்கு அஜ்ஞாதமான தத்வஹித புருஷார்த்தங்களை விசத தமமாக வறிவிக்க, “அடியை யடைந் துள்ளந்தேறி” என்று அத்தாலே இவருமவனைக் கிட்டி நெஞ்சில் தெளிவையுடையராய். (தூமனம் மருளிலென்னும் ஜ்ஞாந பலமான ஒளிக் கொண்ட மோக்ஷம் தேடிவாட) “தூமனத்தனனாய்”, “மருளில் வண்குருகூர் வண்சடகோபன்” என்று மோக்ஷைகஹேதுதயா பரிசுத்தமான அந்தகரணத்தை யுடையராய், அவனுடைய கல்யாண குண விஷயமான அஜ்ஞாந கந்தமில்லாதபடி கீழில் பத்தில் பிறந்த தம்முடைய ஜ்ஞாநத்துக்கு பலம் மோக்ஷமாகையாலே “களிப்பும் கவர்வுமற்றுப் பிறப்புப்பிணி மூப்பிறப்பற்று ஒளிக்கொண்ட சோதிமயமாய், அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ” என்று ப்ராக்ருத விஷய லாபாலாபங்களால் வரும் கர்வ க்லேசங்களும் ஷட்பாவ விகாரங்களும் போய், சுத்தஸத்வமாகையாலே நிரவதிக தேஜோரூபமான விக்ரஹத்தை யுடையோமாய், நித்யஸூரிகள் திரளிலே கூடப் பெறுவதெப்போதோவென்று, அந்த மோக்ஷத்தைப் பெறுகையில் ஆசையாலே தேடி, அப்போதே கிடையாமையாலே, “வாடி வாடும்” என்று ஆச்ரயத்தை யிழந்த தளிர்போலே வாட. (உலராமலாவி சேர்ந்து) “உள்ளுளாவியுலர்ந்துலர்ந்து” என்கிற தாபமாறும்படி “அந்தாமத்தன்பு செய்து என்னாவிசேரம்மானுக்கு” என்கிறபடியே பரமபதத்தில் பண்ணும் வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே செய்து, கமர் பிளந்த தரையிலே நீர் பாய்ச்சுவாரைப் போலே இவரோடே நிரவதிக ஸம்ச்லேஷத்தைப் பண்ணி, (சிக்கெனப் புகுந்து) “சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகளொக்கவே விழுங்கி சிக்கென புகுந்தான்” என்று அத்யல்பமாயிருப்பதொரு பதார்த்தமும் தன் பக்கல் நின்றும் பிரிகதிர்ப்பட்டு நோவுபடாதபடி தன் ஸங்கல்ப ஸஹஸ்ரைகதேசத்திலே ஸர்வலோகங்களையு மொருக்காலே வைத்து இனிப்பேராதபடி புகுந்து. (ஸம்பந்திகளும் சேர்தல் மாறினரென்ன வாழ்வித்து) “எமர்கீழ் மேலெழு பிறப்பும் விடியா வெந்நரகத் தென்றும் சேர்தல் மாறினர்” என்று இவருடைய ஸம்பந்த ஸம்பந்திகளையும் ஸம்ஸாராந் முக்தராம்படி பண்ணி, அத்தாலே “எமரேழெழு பிறப்பும் கேசவன் தமர் மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா” என்று என்னோடு பரம்பரயா ஸம்பந்தமுடையாரும் என்னோட்டை ஸம்பந்தமே ஹேதுவாக பகவததீயரானார்கள், நிர்ஹேதுக பகவத் க்ருபையாகிற பெரும் சதிரைப் பெற்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தானது ஊற்று மாறாமல் பெருகுகிறபடியே! என்று இவர் தாமே ஆச்சர்யப்படும்படி இவரை வாழ்வித்து. (உபகரிக்கிற நீந்தும் கெடலிலெம்மாவீட்டை உபயாநுகுணமாக்கினவர்) இப்படி தம்முடைய ஸம்பந்தி பரம்பரையளவும் வெள்ளமிடுகிற தன் ப்ரீதியாலே தமக்கவனுபரிக்கத் தேடுகிற “நீந்துந்துயரில்லா வீடு”, “கெடலில் வீடு”, “எம்மாவீடு” என்று துக்ககந்தரஹிதமாய் அநர்த்த கந்தமில்லாததாய், எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷத்தை எனக்கென்று, தரில் அந்த மோக்ஷம் அஹங்கார கர்ப்பமாகையாலே ஐச்வர்யாதிகளோபாதி ஸ்வரூப விருத்தமாகையாலே அதினுடைய ப்ரஸங்கமும் எனக்கஸஹ்யமான பின்பு எனக்கு மோக்ஷம் தரப்பார்த்ததாகில் “நின் செம்மாபாதபற்புத் தலை சேர்த்தொல்லை அம்மா அடியேன் வேண்டுவதீதே” என்று சேஷியான உன்னுடைய, அகவாய் சிவந்து புறவாய் ச்யாமமாய் பரம பூஜ்யமாய் பரமபோக்யமான திருவடிகளை சேஷபூதனான என் தலையிலே கொக்குவாயும் படுகண்ணியும் போலே சடக்கெனச் சேர்க்கவேணும். சேஷியான உன்பக்கல் சேஷபூதனான நான் அபேக்ஷித்துப் பெறுவதிதுவே யென்றும், “தனக்கேயாக வெனைக் கொள்ளுமீதே” என்றும் உபய ஸ்வரூபத்துக்கும் அநுகுணமாக நிஷ்கர்ஷித்தவர், (ஆச்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற) ஆச்ரயணீயனானவனுக்கு, முதற்பத்தில் சொல்லப்பட்ட ஸர்வஸ்மாத் பரத்வத்தை நிலை பெறுத்துவனவான. (ஸகல பலப்ரதத்வ காரணத்வ சேஷசாயித்வ ச்ரிய:பதித்வ ஸௌலப்யாதிகளைத் திண்ணனணைவதென்று வெளியிட்டு) “வீடு முதல் முழுதுமாய்” என்று ஸகல பல ப்ரதத்வம், “தேவுமெல்லாப் பொருளும் கருத்தில் வருத்தித்த மாயப்பிரான்”, “ஆக்கினான் தெய்வவுலகுகள்” என்று ஸர்வகாரணத்வம், “ஆழியம் பள்ளியாரே” என்று லக்ஷணையாலே சேஷசாயித்வம், “பூமகள் தன்னை வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து” என்று ச்ரிய:பதித்வம்; “கண்ணன்கண்”, “கோபால கோளரியேறு” என்று அவதார ஸௌலப்யம், ஆதிசப்தத்தாலே “தகுங்கோலத் தாமரைக்கண்ணன்” என்று புண்டரீகாக்ஷத்வம், “ஏழுலகுங் கொள்ளும்”, “வள்ளல் வல்வயிற்றுப் பெருமான்” என்று அகடிதகடநா ஸாமர்த்த்யம் என்கிறவிவற்றை, “திண்ணன் வீட்”டிலும், – “அணைவதரவணை மேல்” என்று சேஷசாயித்வம், “பூம்பாவையாகம் புணர்வது” என்று ச்ரிய:பதித்வம், “இருவரவர் முதலும்தானே” என்று காரணத்வம், “இணைவனா மெப்பொருட்கும்” என்று அவதார ப்ரயுக்த ஸௌலப்யம், “வீடு முதலாம்” என்று ஸகல பல ப்ரதத்வம், ஆதி சப்தத்தாலே “பிறவிக்கடல் நீந்துவார்க்கு புணைவன்” என்று மோக்ஷோபாயத்வம், “ஆனையிடர் கடிந்த” என்கிற ஆபத்ஸகத்வம், “மூவுலகும் காவலோன்" என்கிற ஸர்வ ரக்ஷகத்வம் என்கிறவிவற்றை “அணைவதரவணையி”லும் ப்ரகாசிப்பித்து. அன்றிக்கே, “வீடு முதல் முழுதுமாய்” என்று மோக்ஷ ப்ரப்ருத்ய சேஷ புருஷார்த்த ப்ரதனாயென்கையாலே ஸகல பல ப்ரதத்வத்தையும், “மிகுந்தேவு மெப்பொருளும் படைக்க”, “கருத்தில் தேவுமெல்லாப் பொருளும் வருத்தித்த”, “தன்னுந்தியுள்ளே வாய்த்த திசைமுகனிந்திரன் வானவராக்கினான்” என்று காரணத்வத்தையும் “திண்ணன் வீட்”டிலும்; “அணைவதரவணை மேல்” என்றும், “பூம்பாவையாகம் புணர்வது” என்றும், “இணைவனாமெப்பொருட்கும்” என்றும் அடைவே சேஷசாயித்வ ச்ரிய:பதித்வ ஸௌலப்யங்களையும், ஆதி சப்தத்தாலே “வீடு முதலாம்” என்று மோக்ஷ ப்ரதத்வத்தையும், “நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர் பல முந்து சீரில் படிமின்” என்று முமுக்ஷுபாஸ்யத்வத்தையும் “அணைவதரவணையி”லும் வெளியிட் டென்னவுமாம். இந்த யோஜனை, இதன் பட்டோலையான க்ரந்தத்தில் இவரருளிச் செய்ததுக்குச் சேருவது. முற்பட்ட யோஜனையில், “ஆழியம் பள்ளியாரே” என்று சேஷசாயித்வம் லக்ஷணையாலே கொள்ளவேண்டுகையும், “வீடு முதலாம்” என்று மோக்ஷத்துக்கு ஹேதுவாமென்கிறத்தை ப்ரகரண விருத்தமாம்படி மோக்ஷாதி புருஷார்த்த ப்ரதத்வமாகச் சொல்லுகையும், ஸகல பலப்ரதத்வம் என்று தொடங்கி இவரெண்ணின வடைவுக்குச் சேர இரண்டு திருவாய்மொழியிலும் சொல்லப் போகாமையுமாகிற அஸ்வாரஸ்யங்களுமுண்டு. (கள்வா தீர்த்தனென்று வசந ப்ரத்யக்ஷங்களுங் காட்டி) “கள்வா” என்கிற பாட்டிலே, “அவதரித்து உன்னுடைய பரத்வம் தெரியாதபடி நின்றாயேயாகிலும் எங்களுக்குக் காரணபூதனான சேஷி நீயே”, என்று தேவதாந்தரங்களில் தலைவரான ப்ரஹ்ம ருத்ராதிகளே தங்களுக்குக் காட்சி கொடுக்கைக்குப் பெரியதிருவடியை மேல் கொண்டு புறப்பட்டால் அவனுடைய திருவடிகளிலே விழுந்து கூப்பிடா நிற்பர்களென்று அவனே ஸர்வஸ்மாத் பரனென்னுமிவ்வர்த்தத்துக்கு தேவதாந்தரங்கள் வசனத்தையும், “தீர்த்தனுலகளந்த” என்கிற பாட்டிலே ஓரஸ்த்ர லாபத்துக்காக புஷ்பாதிகளுங்கொண்டு ருத்ரஸமாராதநம் பண்ணப்புகுகிற அர்ஜுநனைப் பார்த்து, “அந்த புஷ்பங்களை நம் காலிலே பொகடு” என்று க்ருஷ்ணனருளிச் செய்ய, அவனும் தீர்த்த பூதனானவனுடைய திருவுலகளந்தருளின திருவடிகளிலே அப்பூவைப் பணிமாற, “பார்த்தோ விஜேதா மதுஸூதநஸ்ய பாதாரவிந்தார்ப்பித சித்ர புஷ்பம், ததர்ச கங்காதர மெளலிமத்யே பபூவ வீர: க்ருத நிச்சிதார்த்த:” என்கிறபடியே தான் திருவடிகளில் சாத்தின புஷ்பங்களோடு ஸஜாதீயமானவற்றை யன்றிக்கே அவை தன்னையே பாடே பக்கேயன்றிக்கே ருத்ரன் தலைமேலே ஆப்த வாக்யத்தாலன்றிக்கே தானே ப்ரத்யக்ஷித்து, “ஸது பார்த்தோ மஹாமநா:” என்கிறபடியே பேரளவுடையனானவவன் நிர்ணயித்த பரத்வம் மந்தமதிகளாலே இன்றாராயும்படி யிருந்ததோவென்று ப்ரத்யக்ஷத்தையுங் காட்டி (புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதத்துக்காநந்தரஸம் முன்னாக விதிக்கிற அந்தர்கத குணோபாஸநத்தை) “புலனைந்து” என்கிற பாட்டிலே ஆச்ரயணத்திலிழிகிறவர்களுக்கு த்யாஜ்யத்திலே ஜிஹாஸையும், ப்ராப்யத்தில் ப்ராவண்யமும், ஸாதநத்தில் ருசியும் விளையும்படி, “புலனைந்து மேயும் பொறியைந்து நீங்கி” என்று பரிச்சிந்ந வஸ்துக்ராஹகமான இந்த்ரிய வச்யராகை தவிர்ந்தென்கையாலே, அல்பாஸ்திரத்வாதி தோஷ துஷ்டமான சப்தாதி போகங்களை அநுபவித்திருக்கும் ஸம்ஸாரத்தினுடைய துக்கமும்; “நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்” என்று நன்மைக்கு முடிவில்லாத திருநாட்டிலே புகுவீரென்கையாலே மோக்ஷத்தினுடைய ஆநந்தமும், “பலமுந்து சீரில் படிமின்” என்று “ஸுஸுகம் கர்த்தும்” என்கிறபடியே ஸ்மர்த்தவ்ய விஷய ஸாரஸ்யத்தாலே பல தசையிற்போலே ஸாதந தசையிலும் இனிதாயிருக்கையாலே, பலம் முற்பட்டிருக்கிற கல்யாணகுணங்களில் ப்ரவணராகுங்கோ ளென்கையாலே ஸாதகத்தினுடைய ரஸம் முன்னாக ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வமான மோக்ஷ ப்ராப்தி வேண்டியிருப்பார் அஸுர வர்க்கத்தைத் தடுமாறி முடிந்து போம்படி செற்றவனாகையாலே ப்ரபல ப்ரதிபந்தகங்களை அநாயாஸேந போக்கவல்லவனுடைய குணங்களிலே ப்ரவணராகுங்கோளென்று விதிக்கிற “தஸ்மிந் யதந்தஸ் ததுபாஸிதவ்யம்” என்று ப்ரஹ்ம ஸ்வரூபாந்தர்கதமான அபஹதபாப்மத்வாதி குணோபாஸநத்தை. (மதித்துப் பெருக்கி மூழ்கியழுந்திக் கீழ்மை வலம் சூதுஞ் செய்து இளமை கெடாமல்) “சதிரிள மடவார் தாழ்ச்சியை மதித்து திறமுடை வலத்தால் தீவினை பெருக்கி”, “வல்வினை மூழ்கி”, “நரகழுந்தி”, “கீழ்மை செய்து”, “வலங்கழித்து”, “சூதென்று களவும் சூதும் செய்து”, “கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்” என்று உபாஸந விரோதியான இதர விஷய ப்ராவண்யத்தைப் பண்ணி, அத்தாலே பாபங்களைக் கூடு பூரித்து, அவற்றிலே மறுநனைய மூழ்கித் தரைப்பட்டு தண்மையைச் செய்து பலத்தைப் பாழ் போக்கி பச்யதோஹரனாய் க்ருத்ரிமனாய் பால்யத்தைப் பாழே போக்காதே. (செய்யும் க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தநாஞ்ஜலி ப்ரதக்ஷிண கதிசிந்தநாத்யங்க யுக்தமாக்குகிறா ரிரண்டாம் பத்தில்) அதாவது, “பால்ய ஏவ சரேத் தர்மம்” என்றும், “தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதே ச்ரேயஸே ஸதா” என்றுஞ் சொல்லுகிறபடியே, பால்யத்திலே கர்த்தவ்யமான “மாலிருஞ்சோலை சார்வது சதிரே”, “போதவிழ் மலையே புகுவது பொருளே” என்கிற க்ஷேத்ர வாஸம், “பதியது வேத்தி” என்கிற ஸங்கீர்த்தநம் “தொழக் கருதுவதே” என்கிற அஞ்ஜலி, “வலஞ் செய்து நாளும் மருவுதல் வழக்கே” என்கிற ப்ரதக்ஷிணம், “நெறிபடவதுவே நினைவது நலமே” என்கிற கதி சிந்தனையாகிற இவை முதலான உபாஸநாங்கத்தோடே சேர்க்கிறார் இரண்டாம் பத்திலென்கை.
(சோராத மூவா வேர்முதலா யுலகம் படைத்தவனென்கிற) - திருவாய்மொழி (2-1-11) - சோராத வெப்பொருட்குமாதியாஞ்சோதி - என்றும், (2-8-5) - மூவாத்தனி முதலாய் – என்றும், (2-8-10) - எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் - என்றும், (2-10-11) - பொருளென்றிவ் வுலகம் படைத்தவன் - என்றும் உள்ள பாசுரங்களில் கூறப்படுவதான. (சித் அசித் த்ரய த்ரிவித காரணமானவன்) - இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் தனது ஸங்கல்பம் கொண்டு மட்டுமே ஸ்ருஷ்டிப்பதால் நிமித்தகாரணமாகவும், ஸூக்ஷ்மமான சித் மற்றும் அசித் ஆகியவற்றுடன் கூடியதால் உபாதான காரணமாகவும், விநியோகம் கொள்வதற்குத் தகுதியாக உள்ள ஞானம், சக்தி போன்றவற்றுடன் கூடியுள்ளதால் ஸஹகாரி காரணமாவும்; இப்படியாக பத்தர், முத்தர் மற்றும் நித்யர் என்பதான மூன்று சித் வஸ்துக்களுக்கும்; ப்ராக்ருதம், அப்ராக்ருதம் மற்றும் காலம் என்பதான மூன்று அசித் வஸ்துக்களுக்கும் மூன்றுவிதமான காரணமாக உள்ள ஸர்வேச்வரன். (அறியாதனவறிவிக்க வுள்ளம் தேறி) – திருவாய்மொழி (2-3-2) - அறியாதன அறிவித்த - என்பதற்கு ஏற்ப நம்மாழ்வார் அறியாதவையாக இருந்த உண்மையாகவும் நன்மையாகவும் உள்ள புருஷார்த்தங்களை மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் இவருக்கு உணர்த்தினான். (உள்ளம் தேறி) - இதன் விளைவாக, திருவாய்மொழி (2-6-8) – அடியை யடைந் துள்ளந்தேறி – என்பதற்கு ஏற்ப இவரும் இவனை அண்டி நின்று உள்ளத்தில் தெளிவு கண்டவராக. (தூமனம் மருளில்) – திருவாய்மொழி (2-7-8) - தூமனத்தனனாய் – என்றும், (2-10-11) - மருளில் வண்குருகூர் வண்சடகோபன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப மோக்ஷம் என்ற ஒன்றுக்கு மட்டுமே காரணமாக உள்ள தன்மையின் விளைவால், தூய்மை பெற்ற மனம் கொண்டவராக, அவனுடைய கல்யாணகுணங்களின் விஷயத்தில் எந்தவிதமான அறியாமையும் அற்றவராக. (ஜ்ஞாந பலமான ஒளிக் கொண்ட மோக்ஷம் தேடிவாட) - முதல் பத்தில் தனக்கு ஏற்பட்ட ஞானத்தின் பலன் என்பது மோக்ஷம் என்பதால், திருவாய்மொழி (2-4-1) - களிப்பும் கவர்வுமற்றுப் பிறப்புப்பிணி மூப்பிறப்பற்று ஒளிக்கொண்ட சோதிமயமாய், அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ - என்பதற்கு ஏற்ப இந்த உலக விஷயங்களை அடைதல் மற்றும் அடைய இயலாமை ஆகிய காரணமாக ஏற்படும் கர்வம் மற்றும் துக்கம் என்பதான ஆறுவிதமான மாற்றங்களும் விலகி, சுத்தஸ்த்வம் என்பதால் எல்லையற்ற தேஜஸ் ரூபமாகவே உள்ள திருமேனியை அடைந்து, நித்யஸூரிகளுடைய கூட்டத்தில் ஒன்றாகக் கலந்து நிற்பது எந்த நாளிலோ என்று ஏங்கி, அப்படிப்பட்ட மோக்ஷத்தைப் பெறும் ஆசை காரணமாகத் தேடி, அது உடனே கிட்டாத காரணத்தால், “வாடிவாடும்”என்பதற்கு ஏற்ப ஆதாரம் இழந்த கொடி வாடுவது போன்று வாடினார். (உலராமல் ஆவிசேர்ந்து) – திருவாய்மொழி (2-4-7) – உள்ளுள் ஆவி உலர்ந்து உலர்ந்து - என்பதற்கு ஏற்ப தாபம் ஆறும்விதமாக, திருவாய்மொழி (2-5-1) - அந்தாமத்தன்பு செய்து என்னாவிசேரம்மானுக்கு - என்று கூறுவதற்கு ஏற்ப பரமபதத்தில் இவன் காண்பிக்கும் மயக்கத்தை நம்மாழ்வாரிடமும் காண்பித்தான். வெப்பம் காரணமாக வெடித்த பூமீயில் நீரைப் பாய்ச்சுவது போன்று நம்மாழ்வாருடன் எல்லையற்ற சேர்கையைச் செய்தான். (சிக்கெனப் புகுந்து) – திருவாய்மொழி (2-6-2) - சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகளொக்கவே விழுங்கி சிக்கென புகுந்தான் - என்பதற்கு ஏற்ப மிகவும் சிறிய பொருள் கூட தன்னைவிட்டு அகன்று சென்று துன்பம் அடையாதபடி, தனது ஸங்கல்பத்தின் ஆயிரத்தில் ஒரு பங்கு மூலமே லோகங்கள் அனைத்தையும் ஒரே நிலையில் வைத்து, இனி இவர் அகலாதபடி இவருள் புகுந்தான். (ஸம்பந்திகளும் சேர்தல் மாறினரென்ன வாழ்வித்து) – திருவாய்மொழி (2-6-7) - எமர்கீழ் மேலெழு பிறப்பும் விடியா வெந்நரகத் தென்றும் சேர்தல் மாறினர் - என்பதற்கு ஏற்ப நம்மாழ்வாருடன் ஸம்பந்தம் கொண்டுள்ள அனைவரையும் இந்த ஸம்ஸாரத்திலிருந்து எழுப்பி, அவர்களையும் முக்தராக்கினான். இந்த காரணமாக, “திருவாய்மொழி (2-7-1) - எமரேழெழு பிறப்பும் கேசவன் தமர் மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா - என்பதற்கு ஏற்ப என்னுடன் பரம்பரையாகத் தொடர்பு கொண்டுள்ள அனைவரும், என்னுடன் கொண்ட அந்த ஸம்பந்தம் காரணமாக அவனுக்கு அடிமை என்றானார்கள். எந்தவிதமான காரணமும் இன்றி வெளிப்படுகின்ற பகவத் க்ருபை என்னும் பெரும் சதிரைப் பெற்ற ஸ்ரீவைஷ்ணவன் என்ற செல்வமானது, ஊற்று மாறாமல் இவ்விதம் பெருகியபடி உள்ளதே” என்று நம்மாழ்வாரே வியந்து போகும்படியாகச் செய்தான். (உபகரிக்கிற) - இவ்விதம் தன்னுடைய ஸம்பந்தம் கொண்டுள்ள பரம்பரை முடிய உள்ளவர்கள் அனைவரையும் சூழ்ந்து நிற்கிற அவனுடைய ப்ரீதியால் தனக்கு அவன் அளிக்கத் தேடுவதாகிய, (நீந்தும்) - திருவாய்மொழி (2-8-2) - நீந்துந்துயரில்லா வீடு - என்பதற்கு ஏற்ப துக்கம் என்பது சிறிதும் இல்லாததாக. (கெடலில்) - திருவாய்மொழி (2-9-11) – கெடலில் வீடு - என்பதற்கு ஏற்ப அழிவற்றதாக. (எம்மா வீட்டை) - திருவாய்மொழி (2-9-1) – எம்மா வீடு - என்பதற்கு ஏற்ப அனைத்துவிதங்களிலும் மேன்மையாக உள்ள மோக்ஷத்தை. (உபய அநுகுணம் ஆக்கினவர்) - எனக்கென்று அளிக்க முற்பட்டால், அவ்விதம் அளிக்கப்படுகின்ற மோக்ஷமானது அஹங்காரத்தை உள்ளடக்கியது என்பதால், செல்வம் முதலானவற்றைப் போன்றே ஆத்ம ஸ்வரூபத்திற்கு விரோதம் ஆகிறது; ஆகவே அதனைக் குறித்த பேச்சு கூட எனக்குப் பொறுக்க இயலாதபடி உள்ளது. இவ்விதம் உள்ளபோது எனக்கு மோக்ஷம் அளிக்க முனைந்தால், திருவாய்மொழி (2-9-1) - நின் செம்மாபாதபற்புத் தலை சேர்த்தொல்லை அம்மா அடியேன் வேண்டுவதீதே - என்பதற்கு ஏற்ப எஜமானனாகிய உன்னுடைய உட்புறம் சிவந்தும் வெளிப்புறம் கருமையாகவும் உள்ளதும், உயர்ந்ததாகவும் பூஜிக்கப்பட வேண்டியதும், உயர்ந்த இனிமையானதும் ஆகிய உனது திருவடிகளை, உனது அடிமையாக உள்ள எனது தலை மீது, கொக்கின் வாய் மற்றும் அதற்கு ஏற்ற மீன் போன்று சட்டென்று சேர்க்கவேண்டும். எஜமானனாகிய உன்னிடம், அடிமையாக உள்ள நான், வேண்டி நின்று பெறுவது இதுவே ஆகும் என்றும், திருவாய்மொழி (2-9-4) - தனக்கேயாக வெனைக் கொள்ளுமீதே – என்பதன் மூலமும் இவருடைய தன்மைகளுக்கும் ஏற்றபடி உறுதியாக உரைத்தார். இவ்விதம் உரைத்த நம்மாழ்வார் … (ஆச்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற) - அனைவராலும் அண்டி நின்று வணங்கத்தக்கவனாக உள்ள ஸர்வேச்வரனுக்கு, முதற்பத்தில் கூறப்பட்டதான “அனைத்திலும் உயர்ந்தவன்” என்று உயர்ந்த நிலையை நிலை நாட்டுவதாகிய, (ஸகல பல ப்ரதத்வம்) – திருவாய்மொழி (2-2-1) - வீடு முதல் முழுதுமாய் – என்பதன் மூலம் அனைத்துவிதமான பலன்களையும் அளிப்பவனாக இருத்தல். (காரணத்வம்) – திருவாய்மொழி (2-2-8) - தேவுமெல்லாப் பொருளும் கருத்தில் வருத்தித்த மாயப்பிரான் – என்றும், திருவாய்மொழி (2-2-9) - ஆக்கினான் தெய்வவுலகுகள் – என்றும் உள்ள பாசுரங்கள் மூலம் அனைத்திற்கும் காரணமாக இருத்தல். (சேஷசாயித்வம்) – திருவாய்மொழி (2-2-6) – ஆழியம் பள்ளியாரே – என்ற லக்ஷணை மூலம் ஆதிசேஷன் மீது சயனித்துள்ளவனாக இருத்தல். (ச்ரிய:பதித்வம்) – திருவாய்மொழி (2-2-3) - பூமகள் தன்னை வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து – என்பதன் மூலம் பெரியபிராட்டியின் நாதனாக இருத்தல். (ஸௌலப்யம்) – திருவாய்மொழி (2-2-1) - கண்ணன்கண் - என்றும், திருவாய்மொழி (2-2-2) - கோபால கோளரியேறு - என்றும் கூறுவதன் மூலம் அவதாரங்களில் எளிமையுடன் இருத்தல், “ஸௌலப்யாதி” என்பதில் உள்ள “ஆதி” சப்தம் மூலம் திருவாய்மொழி (2-3-5) - தகுங்கோலத் தாமரைக்கண்ணன் - என்பதான தாமரை போன்ற திருக்கண்கள் கொண்ட நிலை மற்றும் திருவாய்மொழி (2-2-7) – ஏழுலகுங்க் கொள்ளும் – என்றும், திருவாய்மொழி (2-2-7) – வள்ளல் வல்வயிற்றுப் பெருமான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப வேறு யாராலும் செய்ய இயலாதவற்றைச் செய்யும் தன்மை ஆகியவற்றுடன் கூடி இருத்தல் முதலானவை கூறப்பட்டது. இப்படியாக உள்ள பலவும், திருவாய்மொழி (2-2) - திண்ணன் வீடு - என்ற திருவாய்மொழியில் கூறப்பட்டது. அல்லது வேறு விதமாகவும் கூறலாம். திருவாய்மொழி (2-8-1) - அணைவதரவணை மேல் - என்பதால் ஆதிசேஷன் மீது சயனித்துள்ள தன்மை. திருவாய்மொழி (2-8-1) – பூம்பாவையாகம் புணர்வது - என்பதன் மூலம் பெரியபிராட்டியாரின் நாதனாக இருத்தல். திருவாய்மொழி (2-8-1) – இருவரவர் முதலும்தானே - என்பதன் மூலம் அனைத்திற்கும் காரணமாக இருத்தல். திருவாய்மொழி (2-8-1) - இணைவனா மெப்பொருட்கும் – என்பதன் மூலம் அவதாரங்களில் ஸௌலப்யத்துடன் இருத்தல், திருவாய்மொழி (2-8-1) – வீடு முதலாம் – என்பதன் மூலம் அனைத்து பலன்களையும் அளிக்கவல்ல தன்மையுடன் இருத்தல். “ஸௌலப்யாதி” என்பதில் உள்ள “ஆதி” என்ற பதம் மூலம் திருவாய்மொழி (2-8-1) – பிறவிக்கடல் நீந்துவார்க்கு புணைவன் - என்பதான மோக்ஷத்திற்கு உபாயமாக இருத்தல், திருவாய்மொழி (2-8-2) – ஆனையிடர் கடிந்த - என்பதன் மூலம் ஆபத்து காலங்களில் துணையாக இருத்தல், திருவாய்மொழி (2-8-5) - மூவுலகும் காவலோன் - என்பதன் மூலம் அனைத்தையும் காப்பாற்றும் தன்மையுடன் இருத்தல் போன்றவை கூறப்பட்டது. இப்படியாக உள்ள பலவும், திருவாய்மொழி (2-8) – அணைவது அரவணை - என்ற திருவாய்மொழியில் கூறப்பட்டது. அல்லது வேறுவிதமாகவும் கூறலாம். திருவாய்மொழி (2-2-1) - வீடு முதல் முழுதுமாய் - என்பதன் மூலம் மோக்ஷத்தைத் தவிர்த்து உள்ளதான மற்ற புருஷார்த்தங்களையும் அளிப்பவன் என்பதால், அனைத்து பலன்களையும் அளிப்பவனாக உள்ள தன்மையுடன் இருத்தல், திருவாய்மொழி (2-2-5) - மிகுந்தேவு மெப்பொருளும் படைக்க - என்றும், திருவாய்மொழி (2-2-8) - கருத்தில் தேவுமெல்லாப் பொருளும் வருத்தித்த – என்றும், திருவாய்மொழி (2-2-9) - தன்னுந்தியுள்ளே வாய்த்த திசைமுகனிந்திரன் வானவராக்கினான் - என்றும் உள்ள பாசுரஙள் மூலம் அனைத்திற்கும் காரணமாக இருத்தல் ஆகிய இரண்டையும், திருவாய்மொழி (2-2) - திண்ணன் வீடு – என்பதில் கூறினார். திருவாய்மொழி (2-8-1) – அணைவது அரவணை மேல் - என்றும், திருவாய்மொழி (2-8-1) - பூம்பாவையாகம் புணர்வது - என்றும், திருவாய்மொழி (2-8-1) – இணைவனாமெப்பொருட்கும் – என்றும் கூறுவதன் மூலம் முறையே ஆதிசேஷன் மீது சயனித்துள்ள நிலை, மஹாலக்ஷ்மியின் நாதனாக உள்ள தன்மை மற்றும் ஸௌலப்யம் ஆகியவற்றைக் கூறினார். “ஆதி” என்பதன் மூலம் திருவாய்மொழி (2-8-1) – வீடு முதலாம் – என்பதன் மூலம் மோக்ஷத்தை அளிப்பவனாக இருத்தல், திருவாய்மொழி (2-8-4) - நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர் பல முந்து சீரில் படிமின் – என்பதன் மூலம் முமுக்ஷுக்களுக்கு உபாயமாக இருத்தல் ஆகியவற்றைத் திருவாய்மொழி (2-8) - அணைவது அரவணை - என்ற திருவாய்மொழியில் கூறினார் எனலாம். இந்தக் கருத்தை இதன் பட்டோலையாக உள்ள நூலில் இவரே அருளிச்செய்தது காணலாம். முதலாவதாக அருளிச்செய்த கருத்தில் உள்ளதான திருவாய்மொழி (2-2-6) – ஆழியம் பள்ளியாரே - என்பதற்கு “ஆதிசேஷன் மீது சயனித்துள்ளவன்” என்னும் பொருளை லக்ஷணையாகக் கொள்ளலாம் என்றும், திருவாய்மொழி (2-8-1) - வீடு முதலாம் – என்பதன் மூலம் மோக்ஷத்திற்குக் காரணாமாக உள்ளவன் என்பதை இந்த இடத்திற்கு முரணாகாதபடி மோக்ஷம் முதலான புருஷார்த்தங்களை அளிப்பவன் என்று பொருள் கொள்ளலாம் என்றும், அனைத்து பலன்களையும் அளிப்பவன் என்பது தொடக்கமாக இவர் எண்ணிய கருத்திற்குச் சேரும்விதமாக “திண்ணன் வீடு” மற்றும் “அணைவது அரவணை” ஆகிய இரண்டு திருவாய்மொழிகளிலும் உரைக்காமல் விடுதல் போன்ற நயம் இன்மைகள் உள்ளன. – (கள்வா என்று வசநம் காட்டி) - திருவாய்மொழி (2-2-10) – கள்வா - என்ற பாசுரத்தில், “திருஅவதாரம் செய்து உன்னுடைய உயர்ந்த தன்மை வெளிப்படாதபடி நீ நின்றாய் என்றாலும் எங்களுக்குக் காரணமாக உள்ளவன் நீயே”, என்று தேவர்களுடைய தலைவர்களாக உள்ள நான்முகன், இந்த்ரன் முதலானவர்கள், தங்களுக்குக் காட்சி அளிப்பதற்காகக் கருடன் மீது ஏறி புறப்பட்டு வந்தால், அவனுடைய திருவடிகளில் விழுந்து உரைப்பார்கள் என்று கூறினார். இதன் மூலம் அனைத்தைக் காட்டிலும் அவனே உயர்ந்தவன் என்று உணர்த்துவதற்கு, தேவர்களுடைய சொற்களைக் காண்பித்தார். (தீர்த்தன் என்று ப்ரத்யக்ஷம் காட்டி) – திருவாய்மொழி (2-8-6) - தீர்த்தன் உலகளந்த – என்ற பாசுரத்தில், ஒரு அஸ்த்ரத்தைப் பெறுவதற்காக மலர்கள் முதலானவை கொண்டு சிவனை ஆராதிக்க முயன்ற அர்ஜுனனிடம், “அந்த மலர்களை எனது திருவடிகளில் சேர்ப்பாயாக” என்று க்ருஷ்ணன் அருளிச்செய்ய, அர்ஜுனனும் மிகவும் தூய்மையான க்ருஷ்ணனுடைய அனைத்து லோகங்களையும் அளந்த திருவடிகளில் அந்த மலர்களைச் சமர்ப்பணம் செய்ய, பார்த்தோ விஜேதா மதுஸூதநஸ்ய பாதாரவிந்தார்ப்பித சித்ர புஷ்பம், ததர்ச கங்காதர மெளலிமத்யே பபூவ வீர: க்ருத நிச்சிதார்த்த: - வெற்றியுடன் கூடிய அர்ஜுனன், தான் க்ருஷ்ணனுடைய திருவடிகளில் இட்ட மலர்களை சிவனின் முடியில் கண்டான். தான் க்ருஷ்ணனுடைய திருவடிகளில் சமர்ப்பித்த மலர்கள் அல்லாமல் அதனைப் போன்று வேறு மலர்கள் எதும் இன்றி, அவற்றையே ஒன்றுவிடாமல் சிவனுடைய தலை மீது, மற்றவர்கள் கூறக் கேட்காமல், தானே நேரடியாகப் பார்த்து, கீதா பாஷ்யத்தில் ஸது பார்த்தோ மஹாமநா: - உயர்ந்த மனம் கொண்ட அந்த அர்ஜுனன் – என்பதற்கு ஏற்ப உயர்ந்த ஞானம் கொண்டவனாகிய அர்ஜுனன் உறுதிபட நிர்ணயம் செய்த க்ருஷ்ணனுடைய உயர்ந்த தன்மை என்பது, தாழ்ந்த அறிவு கொண்டவர்களால் இன்று ஆராயும்படி உள்ளதோ என்பதை உரைக்கும்விதமாக ப்ரத்யக்ஷத்தை காண்பித்தார். (புலன் விதிக்கிற) - திருவாய்மொழி (2-8-4) – புலன் ஐந்து - என்ற பாசுரத்தில் அவனை அண்டி நிற்பவர்களுக்கத் தங்களால் கைவிடத்தக்கதாக உள்ளவற்றின் மீது வெறுப்பும், அடையப்போகும் பேற்றின் மீது ஆழ்ந்த விருப்பமும், உபாயத்தின் மீது ருசியும் ஏற்படும்படியாக, திருவாய்மொழி (2-8-4) - புலனைந்து மேயும் பொறியைந்து நீங்கி – என்று அளவுபடுத்தப்பட்ட பொருள்களைப் பற்றுவதற்கு ஏற்றதாக உள்ள இந்த்ரியங்களுக்கு வசப்பட்டுள்ள நிலையைத் தவிர்ந்து என்கிறார்; ஆகவே அற்பமானவை மற்றும் நிலையற்றவை என்பது போன்ற தோஷங்களால் மூடப்பட்டபடி உள்ளதான ஸம்ஸாரத்தின் துக்கத்தை உரைத்தார். திருவாய்மொழி (2-8-4) - நலம் அந்தம் இல்லதோர் நாடு – என்று கூறுவதன் மூலம், நன்மைக்கு எல்லை என்பதே இல்லாமல் உள்ளதான பரமபதத்தில் புகுவீர் என்பதால், மோக்ஷத்தின் ஆனந்தத்தைக் கூறினார். திருவாய்மொழி (2-8-4) – பலமுந்துசீரில் படிமின் – என்று, கீதை (9-2) – ஸுஸுகம் கர்த்தும் - செய்வதற்குச் சுகமாக இருக்கும் - என்பதற்கு ஏற்ப எண்ணப்படுகின்ற விஷயத்தின் இனிமை காரணமாக, பேற்றின் நிலையைப் போன்றே உபாயநிலையிலும் இனிமையாக உள்ளதால் பலன் முன்பே வெளிப்படுவதாக உள்ள திருக்கல்யாண குணங்களில் ஆசை கொள்வீர்களாக என்று கூறுகிறார்; ஆகவே உபாயத்தை முன்னிறுத்தி அடையவேண்டும் என்று வேண்டியபடி உள்ளவர்கள், அஸுரர்களுடைய கூட்டமானது தடுமாறி முடிந்து போகும்படியாக அழித்தவன் என்பதால் எப்போதும் ஏற்படவுள்ள தடைகள் அனைத்தையும் மிகவும் எளிதாக நீக்கவல்லவனுடைய திருக்கல்யாண குணங்களில் ஈடுபட்டபடி இருப்பீர்களாக என்று விதிக்கப்படுவதான, (அந்தர்குண உபாஸனத்தை) – தைத்திரீயம் - தஸ்மிந் யதந்தஸ் ததுபாஸிதவ்யம் - ப்ரஹ்மத்திடம் உள்ளவையே உபாஸிக்கத்தக்கவை - என்று ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் காணப்படுகின்ற பாபங்கள் அற்ற தன்மை போன்ற குணங்களுடைய உபாஸனத்தை. (மதித்து) – திருவாய்மொழி (2-10-2) - சதிரிள மடவார் தாழ்ச்சியை மதித்து, (பெருக்கி) - திருவாய்மொழி (2-10-2) - திறமுடை வலத்தால் தீவினை பெருக்கி, (மூழ்கி) - திருவாய்மொழி (2-10-9) – வல்வினை மூழ்கி, (அழுந்தி) – திருவாய்மொழி (2-10-7) – நரகு அழுந்தி, (கீழ்மை) – திருவாய்மொழி (2-10-6) – கீழ்மை செய்து, (வலம்) - திருவாய்மொழி (2-10-8) – வலம் கழித்து, (சூதும் செய்து) - திருவாய்மொழி (2-10-10) - சூது என்று களவும் செய்து, (இளமை கெடாமல்) - திருவாய்மொழி (2-10-1) – கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் - என்று உபாஸனைகள் செய்வதற்குத் தடையாக உள்ள மற்ற விஷயங்கள் மீது கொள்ளும் ஈடுபாட்டை அதிகரித்து, அதன் விளைவாக பாபங்கள் பலவற்றையும் மேன்மேலும் வளர்த்துக்கொண்டு, அவற்றில் மறுபடியும் மூழ்கியபடி இருந்து பல தாழ்வுகளையும் செய்து, அடையவேண்டிய பலனைப் பாழாக்கிக் கொண்டு, கள்வனாகவும் வஞ்சகனாகவும் நின்று, இளமைக்காலத்தை வீணடிக்காமல். (செய்யும்) – பால்ய ஏவ சரேத் தர்மம் - இளமையிலேயே தர்மம் செய்தல் வேண்டும் - என்றும், தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதே ச்ரேயஸே ஸதா - ஆகவே விவேகம் உள்ளவன் இளமையிலேயே கீர்த்தியைப் பெற முயல வேண்டும் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, இளமைப் பருவத்திலேயே செய்யத்தக்கதாக உள்ள திருவாய்மொழி (2-10-1) - மாலிருஞ்சோலை சார்வது சதிரே - என்றும், திருவாய்மொழி (2-10-10) - போதவிழ் மலையே புகுவது பொருளே – என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ள திவ்யதேசத்தில் வசித்தல், திருவாய்மொழி (2-10-2) – பதியது வேத்தி - என்பதான ஸங்கீர்த்தனம், திருவாய்மொழி (2-10-9) - தொழக் கருதுவதே – என்பதான வணக்கம் செய்தல், திருவாய்மொழி (2-10-8) – வலஞ் செய்து நாளும் மருவுதல் வழக்கே - என்பதான ப்ரதக்ஷிணம் செய்தல், திருவாய்மொழி (2-10-6) - நெறிபடவதுவே நினைவது நலமே - என்பதான மோக்ஷ மார்க்கத்தை எப்போதும் சிந்தித்தல் ஆகிய இவை உள்ளிட்ட உபாஸன அங்கங்களுடன் இரண்டாம் பதத்தில் இணைக்கிறார்.