Acharya Hridayam - நான்காம் ப்ரகரணம் (சூர்ணை 219)
நான்காம் ப்ரகரணம்
பரபரனாய் நின்ற வளவேழ்வைப்பா மவையுளும்பர் வானவரதிபதி, மயர்வற மன்னி மனம் வைக்கத் திருத்தி; மறக்குமென்று நல்கிவிடாதே மன்ன, அயர்ப்பில னறுத்தேன் என் சொல்லி மறப்பனோவென்னும்படி தத்வஜ்ஞரானவர்; சுடரடி யெம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானுமென்கிற ஸஹ்ருதயாநுபவம் ஸம்ஸாரிகளுக்குமாம்படி; வீடுமினென்று த்யாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக வுபதேசித்து; எளிதாக அவதரித்துப் பிழைகளை ஸஹித்துப் புரையறக் கலந்து அல்ப ஸந்துஷ்டனாய் அம்ருதமே ஒளஷதமாக்கி; நீர்புரையத் தன்னை நியமித்து போகத்தை ஸாத்மிப்பித்து பக்தி கணநைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு; எளிமையும் இனிமையுமுண்டு, தொழுதால் அரும்பயனாய தரும், உத்யோகத்தே வினைகளும் மாளும், அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற வுணர்வு கொண்டு நலஞ்செய்வதென்று தாம் மயர்வற மதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார் முதற்பத்தில்.
இதில் முதல் பத்தாலே ஸர்வஸ்மாத் பரனான ஸர்வேச்வரன், தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே அஜ்ஞானத்தைப் போக்கி பக்திரூபாபந்ந ஜ்ஞாநத்தைக் கொடுத்து, இன்னமிவர் நம்மை விஸ்மரிக்கக்கூடுமென்று தம்பக்கல் அவன் தனக்குண்டான ஸ்நேஹத்தாலே விடாதே தம்முடைய ஹ்ருதயத்திலே நிரந்தரவாஸம் பண்ண, அத்தாலே ஸம்சய விபர்யய விஸ்ம்ருதி ரஹிதமான தத்வ ஜ்ஞாநத்தை யுடையரான ஆழ்வார் அவனுடைய குணங்களைத் தம்முடைய திருவுள்ளத்தோடே அநுபவித்து, அவ்விஷயம் தனியநுபவிக்க வொண்ணாமையாலே ஸம்ஸாரிகளையும் பார்த்து த்யாஜ்யமான ஸம்ஸாரத்தின் தோஷத்தையும், தத் த்யாக ப்ரகாரத்தையும், உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும், தத் பஜந ப்ரகாரத்தையும், பஜநாலம்பகமான மந்த்ரத்தையு முபதேசித்து, பஜநீயனானவவனுடைய ஸௌலப்யம், அபராத ஸஹத்வம், சீலவத்தை, ஸ்வாராததை, ஆச்ரயண ரஸ்யதை , ஆர்ஜவம், ஸாத்ம்ய போகப்ரதத்வம், பரபக்தி பரிகணனைகளுக்கொக்க முகங்காட்டும் ஸாம்யமாகிற குணங்களை தர்சிப்பியா நின்று கொண்டு, அவ்வழியாலே பஜநத்தினுடைய ஸுகரத்வ ரஸ்யதைகளையும், பஜிக்கவே ஸர்வபலங்களும் ஸித்திக்குமென்னுமத்தையும், பஜநோப க்ரமத்திலே பஜந விரோதிகளடைய நசிக்குமென்னுமத்தையும் அறிவித்து, ஆனபின்பு ஸ்ரீகீதையில் அவனருளிச் செய்த பக்திமார்க்கத்திலே நின்று தேவதாந்தரங்கள் பக்கல் பரத்வசங்கா நிவ்ருத்தி பூர்வகமாக அவன் விஷயமான ஜ்ஞானத்தைக் கொண்டு அவன் பக்கலிலே அநந்யப்ரயோஜந பக்தியைப் பண்ணுங்கோளென்று தமக்கு அவன் மயர்வற மதிநல மருளினாப்போலே தாமும் இவர்களுக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக ஜ்ஞாநபக்திகளை உபதேசத்தாலே உண்டாக்கி பஜநத்திலே மூட்டுகிறாரென்கிறார்.
– திருவாய்மொழி முதல் பத்தில் நம்மாழ்வார் அருளிச்செய்தது என்ன என்பதை உரைக்கிறார். அனைத்திற்கும் ஆத்மாவாகவும், அனைத்தைக் காட்டிலும் உயர்ந்தவனாகவும் உள்ள ஸர்வேச்வரன், எந்தவிதமான காரணமும் இன்றி பெருகுகின்ற தனது க்ருபை காரணமாக, நம்மாழ்வாருடைய அஜ்ஞானத்தைப் போக்கி, பக்தி ரூபமாக உள்ள ஞானத்தை அளித்து, “இதனையும் மீறி இவர் நம்மை மறந்துவிடக்கூடும்” என்று எண்ணியபடி, அவ்விதம் இவர் மறக்காமலிருக்கும்விதமாக, அவர் மீது கொண்ட ப்ரேமை காரணமாக, நம்மாழ்வாருடைய இதயத்திலேயே எப்போதும் வசித்தபடி இருந்தான். இதன் காரணமாக நம்மாழ்வார், எந்தவிதமான ஐயமும், தவறாக உணர்த்தலும், மறதியும் இல்லாத உண்மையான ஞானத்தை அடைந்தவராக, அவனுடைய திருக்கல்யாண குணங்களைத் தனது திருவுள்ளத்துடன் அனுபவித்தார். இப்படியாக அனுபவித்த நம்மாழ்வார், இப்படிப்பட்ட உயர்ந்த விஷயத்தை தான் மட்டுமே தனியாக நின்று அனுபவிப்பதைப் பொறுக்க இயலாமல், இந்த உலகில் உள்ள ஸம்ஸாரிகள் அனைவரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு அவனை அனுபவிக்க முனைந்தார். ஆகவே அவர் ஸம்ஸாரிகளை நோக்கி, கைவிடத் தக்கதாக உள்ள ஸம்ஸாரத்தின் தோஷங்களையும், அதனைக் கைவிடுவதற்கான வழிகளையும், அடையப்பட வேண்டியதான பகவத் விஷயத்தைக் கைகொள்ளத்தக்க வழிமுறைகளையும், அவனை ஆராதிப்பதற்கு ஏற்றபடி உள்ள மந்த்ரத்தையும் உபதேசித்தார். தொடர்ந்து ஆராதிக்கத்தக்கபடி உள்ள அவனுடைய எளிமைத்தன்மை, குற்றங்களைப் பொறுக்கும் தன்மை, தாழ்ந்தவர்களுடனும் கலந்து பழகும் தன்மை, எளிதாக ஆராதிக்கப்படுபவனாக உள்ள தன்மை, அவனை அண்டுதலில் உள்ள எளிமை, அனைத்துவிதங்களிலும் ஒரே போன்று உள்ள தன்மை, தனது இன்பத்தைப் படிப்படியாக முற்றிலுமாக அளிக்கும் தன்மை, மிகவும் உயர்ந்த பக்தி மற்றும் பலனை எதிர்பார்த்தபடி இருத்தல் ஆகிய இரண்டிற்கும் ஒரே போன்று முகம் காட்டும் தன்மை என்பதான பலவிதமான திருக்கல்யாண குணங்களைத் தனது பாசுரங்களில் அருளிச்செய்தார். மேலும் இப்படியாக உள்ள ஆராதனையின் எளிமை மற்றும் இனிமை ஆகியவற்றையும், அவனை வணங்கும்போது அனைத்து பலன்களும் தாங்களாகவே கைகூடும் என்பதையும், இவ்விதம் வணங்கியபடி உள்ளபோது அவனை அடைவதற்குத் தடையாக உள்ள அனைத்தும் தானாகவே விலகும் என்பதையும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, “ஸ்ரீமத்பகவத்கீதையில் அவன் உணர்த்திய பக்தி பார்க்கத்தில் நிலையாக நின்று, மற்ற தேவதைகள் பரம்பொருளாகும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, அவனைக் குறித்த ஞானத்தை மட்டுமே கொண்டவர்களாக, அவனைக் குறித்த பக்தியை எந்த ஒரு பயனும் கருதாமல் செய்வீர்களாக”, என்று உபதேசித்தார். அதாவது, அவன் தனக்கு மயர்வற மதிநலம் அருளியது போன்று, இவரும் ஸம்ஸாரிகளுக்கு, அவர்களுடைய அக இருளை நீக்கி, ஞானம் மற்றும் பக்தி முதலானவற்றை, தக்க உபதேசம் மூலம் ஏற்படுத்துகிறார் என்று கருத்து.
(பரபரனாய் நின்ற வளவேழ்வைப்பாம் அவையுளும்பர் வானவரதிபதி) “வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்”, “ஆய் நின்ற பரன்”, “வளவேழுலகின் முதலாய வானோரிறை”, “வைப்பாம் மருந்தாம் நலத்தா லுயர்ந்துயர்ந்தப்பாலவன்”, “அவையுள் தனிமுதல்”, “உம்பர் வானவராதியஞ் சோதி”, “அயர்வறு மமரர்களதிபதி” என்று ஸகல ஜகத் ஸர்க்காதி கர்த்ருத்வத்தாலும், உபயவிபூதி யோகத்தாலும், உபயவிபூதி நாதத்வத்தாலும், ப்ராப்ய ப்ராபகத்வத்தாலும், அபரிச்சேத்யாநந்த யுக்ததையாலும், ஸர்வ சரீரதயா ஸர்வ சப்த வாச்யத்வத்தாலும், நித்யஸூரி நிர்வாஹகத்வத்தாலும், நித்யாஸங்குசித ஜ்ஞாநரானவர்கள் நித்யானுபவம் பண்ணா நின்றாலும் பரிச்சேதிக்கவொண்ணாத பெருமையையுடையனாகையாலும் ஸர்வஸ்மாத் பரனானவன். (மயர்வறமன்னி மனம் வைக்க திருத்தி) “மயர்வற மதிநல மருளினன்”, “மயர்வற வென்மனத்தே மன்னினான்” என்று ஸ்வகேவல க்ருபையாலே ஜ்ஞாநாநுதய அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாந ரூபமான அஜ்ஞாநத்தை இவர்க்கு வாஸனையோடே போக்கி, பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக் கொடுத்து, இவர் திருவுள்ளத்திலே புகுந்து, “சார்ந்த விரு வல்வினைகளும் சரித்து மாயப்பற்றறுத்துத் தீர்ந்து தன் பால்மனம் வைக்கத் திருத்தி” என்கிறபடியே பிரிக்கவொண்ணாதபடி இவரோடு பொருந்திக் கிடக்கிற ப்ரபலமான புண்ய பாப ரூப கர்மங்களையும் பாஹ்ய விஷய ருசி வாஸனைகளையும் போக்கி, அயோக்யதாநுஸந்தாநத்தாலே அகன்றவளவிலும், தன் சீலத்தைக் காட்டி யிவரை மீட்டு அல்லேனென்று அகலாதே தனக்கே தீர்ந்து தன்பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி, தரிசு கிடந்த நிலத்தைச் செய்காலாகத் திருத்துவாரைப் போலே திருத்தி. (மறக்குமென்று நல்கிவிடாதே மன்ன) “மறக்குமென்று செந்தாமரைக்கண் ணொடு”, “நல்கி யென்னைவிடான்”, “மறப்பற வென்னுள்ளே மன்னினான்” என்கிறபடியே இவர் இன்னமும் நம்மை விஸ்மரிக்கக்கூடுமென்று நிரதிசய ஸ்நேஹத்தைப் பண்ணி இவரைவிடாதே அழகிய திருக்கண்களாலே குளிர நோக்கிக் கொண்டு ஒருநாளும் மறக்கவொண்ணாதபடி இவர் திருவுள்ளத்திலே ஸ்தாவர ப்ரதிஷ்டை யாயிருக்க, (அயர்ப்பில் னறுத்தேன் என் சொல்லி மறப்பனோ வென்னும்படி தத்வஜ்ஞரானவர்) “பெருநிலம் கடந்த நல்லடிப்போது அயர்ப்பிலன்”, “தூயவமுதைப் பருகிப் பருகியென் மாயப்பிறவி மயர்வறுத்தேன்”, “எம்பிரானையென் சொல்லி மறப்பனோ” என்று குணாகுண நிரூபணம் பண்ணாதே பூமிப் பரப்பையளந்த பரம போக்யமான திருவடிகளை யொருகாலும் விஸ்மரியேன், நிரதிசய போக்யனானவனை நிரந்தரமநுபவித்து ஆச்சர்யமான ஜந்மமடியாக வரும் அஜ்ஞாநத்தைப் போக்கப் பெற்றேன், எனக்கு உபகாரகனானவனை எத்தைச் சொல்லி விஸ்மரிப்ப தென்னும்படி, ஸம்சய விபர்யாய விஸ்ம்ருதி கலசாத தத்வ ஜ்ஞாநத்தை யுடையரானவர். (சுடரடி யெம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானுமென்கிற ஸஹ்ருதயாநுபவம் ஸம்ஸாரிகளுக்குமாம்படி) “சுடரடி தொழுதெழென் மனனே”, “எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே”, “நெஞ்சமே நல்லை நல்லை”, “மலராள் மணவாளனைத் துஞ்சும்போதும் விடாது தொடர் கண்டாய்”, “கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று”, “நீயும் நானுமிந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்” என்று நிரவதிக தேஜோ ரூபமான அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி யுஜ்ஜீவிக்கப்பாரா யென்நெஞ்சே, எனக்கு பவ்யமான நெஞ்சே, நமக்கு உபகாரகனானவனைத் தொழப்பாராய். நெஞ்சே, நீ செய்தபடி மிகவும் நன்று, நான் அயோக்யதாநுஸந்தாநத்தாலே அகலும்போதும் ச்ரிய: பதியானவனை விடாதேகிடாய், நெஞ்சே அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரமிருந்தபடி கண்டாயே; தொழச் சொல்லலாம்படியிருக்கிற நீயும் தொழச் சொல்லுகிற நானும் அயோக்யதாநுஸந்தாநத்தாலே அகலாமலிப்படியே நிற்கப் பெறில், அநாதி காலார்ஜிதமான கர்மம், விஷய ப்ராவண்யம், ப்ரயோஜநாந்தர ச்ரத்தை ஸாதநாந்தர ஸங்கம் முதலான துரிதங்களொன்றையும் சேர விட்டுக்கொடான், நெஞ்சே உனக்கு இப்பரமார்த்தத்தைச் சொன்னேன் என்று இப்படி திருவுள்ளத்தைக் குறித்துபதேசித்து, திருவுள்ளமும் தாமும் கூடியநுபவித்த பகவதநுபவம் தனியே அநுபவிக்க வொண்ணாமையாலும், “ஏகஸ் ஸ்வாது ந புஞ்ஜீத” என்கிறபடியே தனியநுபவிக்க வல்லரல்லாமையாலும், அவனோடுள்ள ஸம்பந்தம் ஸர்வஸாதாரணமாகையாலும் பராநர்த்தம் பொறாத பரமக்ருபையாலும், இவ்வநுபவம் ஸம்ஸாரிகளுக்குமாக வேணுமென்று ஸம்ஸாரிகளைப் பார்த்து, (வீடுமினென்று த்யாஜ்யோபாதய தோஷ குண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பக மந்த்ரமாக உபதேசித்து) வீடுமின் முற்றத்திலே “வீடுமின் முற்றவும்” என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும், “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்” என்று அதினுடைய அல்பாஸ்திரத்வாதி தோஷத்தையும், “நீர் நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து” என்று அதினுடைய பரித்யாக க்ரமத்தையும், “வீடுடையான்” என்று உபாதேயமான பகவத் ஸ்வரூபத்தையும், “எல்லையிலந்நலம்” என்று அவ்வஸ்துவினுடைய குணத்தையும், “வீடு செய்மினே”, “இறை சேர்மின்”, “இறை பற்று”, “திண்கழல் சேர்” என்று அவ்விஷயத்தில் ஆத்மாவை ஸமர்ப்பிக்கும் க்ரமத்தையும், “வண்புகழ் நாரணன்” என்று அந்த ஸமர்ப்பண ரூப பஜநத்துக்கு ஆலம்பகமான திருமந்திரத்தோடே யுபதேசித்து, (எளிதாகவவதரித்து) ஆச்ரயிப்பார் “அதீந்த்ரியன்” என்று இறாயாதபடி “பல பிறப்பாய் எளிவருமியல்வினன்” என்று ராமக்ருஷ்ணாத்யவதார முகத்தாலே அவர்களுக்கு ஸுலபனாய், (பிழைகளை ஸஹித்து) ஆச்ரயண தசையில் ஸுலபனாய் அபராதம் கண்டவாறே கைவிடாதே “என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு” என்னும்படி அபராதஸஹனாய், (புரையறக் கலந்து) அபராதம் கண்டு தான் இகழாதவளவன்றிக்கே, அயோக்யதாநுஸந்தாநத்தாலே தாங்களே அகல்வாரையும் “திசைகளெல்லாம் திருவடியால் தாயோன் – தானோருருவனே” என்று தன் குணத்தைக் காட்டி அணுகப் பண்ணி அவர்களோடே புரையறக் கலக்கும் சீலவானாய், (அல்ப ஸந்துஷ்டனாய்) ஆச்ரிதரோடு ஒரு நீராகக் கலக்குமேயாகிலும் அவனுகக்கும்படி பச்சையிடப் போகாமையாலே ஆச்ரயணமரிது என்னாதபடி இவனிட்டது கொண்டு த்ருப்தனாக வேண்டாத பரிபூர்ணனாகையாலே “புரிவதுவும் புகைபூவே” என்று இவன் பக்கல் பெற்றது கொண்டு ஸந்தோஷிக்கும் ஸ்வாராதனாய். (அம்ருதமே ஒளஷதமாக்கி) நேர்த்தியில்லையாகிலும் உள்ளது தேவையாயிருக்குமோ வென்னாதபடி அம்ருதத்தையே ஒளஷதமாக்குமாபோலே, “தூயவமுதைப் பருகிப் பருகி யென் மாயப்பிறவி மயர்வறுத்தேன்” என்று நிரதிசய போக்யனான தன்னுடைய ஆச்ரயணமாகையாலே, மிகவுமினிதா யிருக்கிறவற்றையே ஸம்ஸார வ்யாதி பேஷஜமாக்கி, (நீர்புரையத் தன்னை நியமித்து) இனிதாயிருக்குமாகிலும், அவன் நினைவறிந்து பரிமாறுகை அரிதென்னாதபடி இவர்களைத் தன் நினைவிலே பரிமாறுவித்துக் கொள்ளப் பாராதே, “நீர்புரைவண்ணன்” என்று மேட்டிலே நீரை விரகாலேயேற்றுமாப்போலே இவர்கள் செவ்வைக்கேடும் செவ்வையாம்படி தன்னைச் செவ்வியனாக நியமித்து. (போகத்தை ஸாத்மிப்பித்து) இப்படியானாலும் குளப்படியிலே கடலை மடுத்தாற்போலே அஸாத்ம்யமாகப் பரிமாறுமோவென்னாதபடி, “என்னுடைச் சூழலுளான்” என்று தொடங்கி, “உச்சியுளானே” என்னும்படி ஸாத்மிக்கத் தன்னை யனுபவிப்பித்து. (பக்தி கணனைகளுக்கொக்க வருமவனுடைய ஸேவைக்கு) இப்படி யனுபவிக்கைக்கீடாக முகங்காட்டுமளவில் இவன் பக்கல் ப்ரேமாநுகுணமாகவோ செய்வதென்னாதபடி “கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும்” என்று பரமபக்திக்கும் பரிகணனைக்குமொக்க வந்து முகங்காட்டும் ஸ்வபாவனான வனுடைய பஜநத்துக்கு. (எளிமையுமினிமையுமுண்டு) எளிதாய் இனிமையற்றிருத்தல், இனிதாய் அருமையாயிருத்தலன்றிக்கே, கீழ்ச் சொன்ன குணவிசேஷங்களை யுடையவனுடைய ஆச்ரயணமாகையாலே யெளிதுமாய் இனிதுமாயிருக்கும். – “பத்துடையடியவர்க்கெளியவன்”, “அமுதிலுமாற்றவினியன்” என்கிறவன் தன்னைப் போலேயாய்த்து ததாச்ரயணமும். ஏவம்பூத பஜநத்தால் பல ஸித்தியிருக்கும்படி யென்னென்னில் (தொழுதால் அரும்பயனாய தரும்) “அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித் தழிவின்றியாக்கம் தரும்”, “தருமவரும் பயனாய” என்று அவனை பஜித்தால் ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும் நிச்சேஷமாகப் போக்கி அழிவில்லாத பெறுதற்கரிய ப்ரயோஜநங்களையும் தரும். பஜித்தாலன்றோ தருவது, பஜந விரோதிகளும் குவாலுண்டேயென்னில், (உத்யோகத்தே வினைகளும் மாளும்) “நாளு நின்ற நம் பழமையங் கொடுவினையுடனே மாளும்” என்று நாள்தோறும் நின்று இவ்வாத்மாவை முடிக்கிற அநாதியாய் அதிக்ரூரமான கர்மங்கள் பஜநோபக்ரமத்திலே நசிக்கும். ஆனால் பஜநோபாயமே தென்னில் (அவனுரைத்த மார்க்கத்தே நின்று இரு பசைமல மறவுணர்வு கொண்டு நலஞ் செய்வதென்று) “பிணக்கற” என்று தொடங்கி, “அம்பகவன் வணக்குடைத்தவநெறி வழி நின்று” என்று வைதிக ஸமயத்துக்கும் பாஹ்ய ஷட் ஸமயத்துக்கும் தன்னில் தானுண்டான பிணக்கறும்படி வேதமார்க்கத்தை யதா நிரூபணம் பண்ணியருளிச் செய்த நிரவதிக வாத்ஸல்ய யுக்தனாய், ஜ்ஞாநாதிகுண பரிபூர்ணனான க்ருஷ்ணன் திருத்தேர்த்தட்டிலே அர்ஜுந வ்யாஜேந ஸ்ரீகீதாமுகத்தாலே “பக்த்யா த்வதந்யயா சக்ய:” என்றும், “மந்மநா பவ மத்பக்த: மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத் பராயண:” என்றுமருளிச் செய்த பக்தி மார்க்கத்திலே நின்று, “நும்மிரு பசையறுத்து” என்றும், “மனனகமலமறக்கழுவி” என்றும் தேவதாந்தரங்கள் பக்கல் உங்களுக்குண்டான ஸங்கத்தை யறுத்து “இவனோ அவர்களோ ஆச்ரயணீயர்” என்கிற ஸம்சயத்தையும் மநஸ்ஸினின்றும் ஸவாஸநமாகப் போக்கி, “அவனுடையுணர்வு கொண்டு” என்று தத் விஷய ஜ்ஞாநத்தைக் கொண்டு, “நன்றென நலஞ் செய்வது” என்று அநந்ய ப்ரயோஜந பக்தியைப் பண்ணுங்கோளென்று. (தாம் மயர்வற மதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார் முதற்பத்தில்) அதாவது ஸர்வேச்வரன் தமக்கு மயர்வற மதிநலமருளினாப் போலே ஸம்ஸாரிகளுக்குத் தம்முடைய க்ருபையாலே தத்வஹித புருஷார்த்த விஷயமான அஜ்ஞாநத்தைப் போக்கி ஜ்ஞாந பக்திகளை யுபதேசித்து பகவத் பஜநத்திலே மூட்டுகிறார் முதற்பத்தாலென்கை.
(பரபரனாய் நின்ற வளவேழ் வைப்பாம் அவையுள் உம்பர் வானவர் அதிபதி) - திருவாய்மொழி (1-1-8) - வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன் - என்றும், (1-1-11) – ஆய் நின்ற பரன் - என்றும், (1-5-1) – வளவேழுலகின் முதலாய வானோரிறை - என்றும், (1-7-2) – வைப்பாம் மருந்தாம் நலத்தால் உயர்ந்து உயர்ந்தப்பாலவன் - என்றும், (1-9-1) - அவையுள் தனிமுதல் - என்றும், (1-10-9) - உம்பர் வானவராதியஞ் சோதி - என்றும், (1-1-1) – அயர்வறும் அமரர்கள் அதிபதி - என்றும் உள்ள பாசுரங்களில் கூறப்படுவது போன்று அனைத்து லோகங்களையும் ஸ்ருஷ்டித்து காப்பாற்றி அழித்தல் என்று செயல்களாலும், நித்யவிபூதி மற்றும் லீலாவிபூதி ஆகிய இரண்டையும் உடையவன் என்பதாலும், அந்த இரண்டு விபூதிகளுக்கும் எஜமானன் என்பதாலும், அடையப்படும் பேறாகவும் அந்தப் பேற்றுக்கான வழியாகவும் உள்ளதாலும், எல்லையற்ற ஆனந்தத்துடன் கூடியுள்ளவன் என்பதாலும், அனைத்து பொருள்களையும் தனது சரீரமாகக் கொண்டுள்ளதால் அனைத்து சொற்கள் மூலம் குறிக்கப்படும் தன்மையுடன் உள்ளதாலும், நித்யஸூரிகளின் எஜமானன் என்பதாலும், எப்போதும் சுருக்கம் அடையாத விரிந்த ஞானம் கொண்ட நித்யஸூரிகள் எப்போதும் அனுபவித்தபடி இருத்தாலும், அவர்களால் கூட இவனுடைய பெருமையை எல்லை காண இயலாதபடி உள்ளதாலும், இப்படியாக அனைத்தைக் காட்டிலும் உயர்ந்து நிற்கும் ஸர்வேச்வரன். (மயர்வற மன்னி) – திருவாய்மொழி (1-1-1) - மயர்வற மதிநலம் அருளினன் - என்றும், (1-7-4) – மயர்வற என் மனத்தே மன்னினான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப தன்னுடைய க்ருபையை மட்டுமே வைத்துக்கொண்டு, “தகுந்த ஞானம் பிறக்காமல் இருத்தல், பொருள்களைக் குறித்து தவறாக அறிதல், ஒன்றை மற்றொன்றாக அறிதல்” போன்ற அஜ்ஞானங்களை நம்மாழ்வாரிடமிருந்து வாஸனையுடன் விலக்கி, பக்தியுடன் பொருந்திய ஞானத்தை அல்லது பக்தி ரூபமாகவே உள்ள ஞானத்தை நம்மாழ்வாருக்கு அளித்து, அவருடைய திருவுள்ளத்தில் தான் எப்போதும் நிலையாக நின்று, (மனம் வைக்க திருத்தி) – திருவாய்மொழி (1-5-10) - சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாயப்பற்று அறுத்துத் தீர்ந்து தன் பால்மனம் வைக்கத் திருத்தி - என்பதற்கு ஏற்ப, பிரிக்க இயலாமல் நம்மாழ்வாருடன் ஒன்றாகப் பிணைந்தபடி உள்ள வலியதான புண்ணிய பாபங்களின் வடிவில் உள்ள கர்மங்களையும், மற்ற உலகவிஷயங்களில் உள்ள ஆசையையும் அவற்றின் வாஸனையுடன் விலக்கி, “நான் மிகவும் தாழ்ந்தவன், தகுதி அற்றவன்” என்று எண்ணியபடி தன்னைவிட்டு விலகிச் செல்ல முயலும் நம்மாழ்வரைத் தனது சீல குணத்தைக் காண்பித்து தன்னிடம் அகப்படுத்தி, “இனி நான் எங்கும் செல்லமாட்டேன், நான் வேறு யாருக்கும் உரியவன் அல்லன்” என்பதற்கு ஏற்ப அவர் தன்னை விட்டு அகலாமல், தனக்காக மட்டுமே வாழ்ந்தபடி, தன்னிடம் மட்டுமே நெஞ்சத்தை வைக்கும்படி, தரிசாகக் கிடந்த நிலத்தை பயிர் விளையும்படிச் செய்பவர்கள் போன்று, இவரைத் திருத்தி. (மறக்கும் என்று நல்கி விடாதே மன்ன) - திருவாய்மொழி (1-10-10) – மறக்கும் என்று செந்தாமரைக்கண்ணொடு – என்றும், (1-10-8) - நல்கி என்னை விடான் - என்றும், (1-10-10) - மறப்பற என்னுள்ளே மன்னினான் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, “இவர் நம்மை மறந்து விடக்கூடும்” என்று எண்ணியவனாக, எல்லையற்ற ஸ்நேஹத்தை அவரிடம் காண்பித்து, அவரை விடாமல், தனது அழகான திருக்கண்களால் அவரைக் குளிர்ந்து நோக்கியபடி, அவர் தன்னை ஒருநாளும் மறக்க இயலாதபடி, அவருடைய திருவுள்ளத்தில் அசையாத மரம் போன்று நிலையாக அவன் இருக்க. (அயர்ப்பிலன்) - திருவாய்மொழி (1-3-10) - பெருநிலம் கடந்த நல்லடிப்போது அயர்ப்பிலன் – என்றும், (1-7-3) – தூயவமுதைப் பருகிப் பருகி என் மாயப்பிறவி மயர்வு அறுத்தேன் – என்றும், (1-10-9) - எம்பிரானையென் சொல்லி மறப்பனோ – என்றும் கூறுவதற்கு ஏற்ப, “நல்லவர்கள் தீயவர்கள் என்றும் ஆராயாமல், இந்த உலகம் முழுவதையும் அளந்த அவனது எல்லையற்ற இனிமையான திருவடிகளை நான் எப்போதும் மறக்கமாட்டேன். எல்லையற்ற இனிமையாக உள்ளவனை எப்போதும் அநுபவித்தபடி இருந்து, வியப்பான பிறவிகள் எடுக்கக் காரணமாக உள்ள அஜ்ஞானத்தை விலக்கப் பெற்றேன். எனக்கு உபகாரங்கள் பல செய்த அவனை நான் எந்தக் காரணம் கூறி மறப்பேன்”, என்பதற்கு ஏற்ப, சந்தேகம் இன்றியும் மறதி இன்றியும் உள்ள உண்மையான ஞானத்தைக் கொண்ட நம்மாழ்வார். – (சுடரடி) – திருவாய்மொழி (1-1-1) - சுடரடி தொழுதெழென் மனனே – என்றும், (எம்பிரானை) – திருவாய்மொழி (1-10-3) - எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே – என்றும், (விடாது) – திருவாய்மொழி (1-10-4) - நெஞ்சமே நல்லை நல்லை மலராள் மணவாளனைத் துஞ்சும்போதும் விடாது தொடர் கண்டாய் – என்றும். (கண்டாய்) – திருவாய்மொழி (1-10-5) - கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று - என்றும், (நீயும் நானும்) – திருவாய்மொழி (1-10-6) - நீயும் நானுமிந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, எல்லையற்ற தேஜோரூபமான அவனுடைய திருவடிகளில் எப்போதும் கைங்கர்யத்தைச் செய்தபடி இருந்து கரையேற முயற்சிப்பாயாக. எனக்கு அடங்கியபடி உள்ள எனது நெஞ்சமே! நமக்கு எப்போதும் உபகாரகனாக உள்ள அவனை நீ தொழுவதற்கு முனைந்தபடி இருப்பாயாக. எனது நெஞ்சமே! நீ செய்த செயல்கள் மிகவும் நல்லதே ஆகும். “நான் தாழ்ந்தவன்” என்று எண்ணியபடி அவனை விட்டு நான் அகன்றாலும், நீ அந்த மஹாலக்ஷ்மியின் நாயகனை விடாமல் இருப்பாயாக. எனது நெஞ்சமே! எந்தவிதமான காரணமும் இல்லாமல் அவன் நம்மை ஏற்றுக்கொள்வதை நீ கண்டாய் அல்லவோ? “நீ அவனைத் தொழுதபடி இருப்பாயாக” என்று என்னால் கூறலாம்படியுள்ள உள்ள நீயும், உன்னைத் தொழும்படி உரைக்கின்ற நானும், “தாழ்ந்தவன்” என்ற எண்ணம் மேலோங்கி அவனை விட்டு அகலாமல், இது போன்று அவன் அருகில் நிற்கப்பெற்றோம் என்றால், எல்லையற்ற காலமாக நம்மிடம் சேர்ந்தபடி உள்ள கர்மவினைகள், மற்ற உலக விஷயங்களில் உள்ள ஈடுபாடு, மற்ற பயன்களை அடைவதில் கைக்கொள்ளும் முயற்சிகள், மற்ற உபாயங்களை நாடுதல் போன்ற தோஷங்கள் எதுவும் நம்மிடம் சேராமல் அவன் பார்த்துக்கொள்வான். எனது நெஞ்சமே! உனக்கு நான் இத்தகைய மிகவும் உயர்ந்த ஆழ்பொருளை உரைத்தேன். இப்படியாக நம்மாழ்வார் தனது திருவுள்ளத்தை நோக்கி அதற்கு உபதேசம் செய்தார். தொடர்ந்து தானும், தனது திருவுள்ளமுமாகச் சேர்ந்து நின்று பகவத் அனுபவத்தைப் பெற்றார். இப்படிப்பட்ட பகவத் அனுபவத்தை, தான் தனியே நின்று அனுபவிப்பதைப் பொறுக்க இயலாமல் உள்ளதாலும், ஏகஸ் ஸ்வாது ந புஞ்ஜீத - இனிமையான ஒன்றைத் தனியே அனுபவிக்கலாகாது - என்பதற்கு ஏற்ப தனியே நின்று அனுபவிக்கவல்லவர் அல்லர் என்பதாலும், அவனோடு உள்ள ஸம்பந்தம் என்பது அனைவருக்கும் பொதுவானதே ஆகும் என்பதாலும், மற்றவர்களுடைய கேடு என்பதைப் பொறுத்துக் கொள்ள இயலாத உயர்ந்த கருணை நிறைந்தவர் என்பதாலும், அத்தகைய பகவத் அனுபவமானது இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று எண்ணினார். ஆகவே இந்த உலகில் உள்ள ஸம்ஸாரிகளை நோக்கி … (வீடுமின் என்று த்யாஜ்யம்) - திருவாய்மொழி (1-2) - வீடுமின் முற்றவும் - என்ற திருவாய்மொழியில் உள்ளதான திருவாய்மொழி (1-2-1) – வீடுமின் முற்றவும் – என்பதன் மூலம், கைவிடவேண்டியவற்றின் தன்மைகளையும். (தோஷம்) - திருவாய்மொழி (1-2-2) – மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் - என்று அவற்றினுடைய அற்பமானதும் உறுதியற்றதும் ஆகிய நிலையையும். (பரித்யாகம்) - திருவாய்மொழி (1-2-3) - நீர் நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து - என்று அவற்றைக் கைவிடும் முறையையும். (உபாதேயம்) – திருவாய்மொழி (1-2-1) – வீடுடையான் – என்று பற்றத் தக்கதாக உள்ள பகவானுடைய ஸ்வரூபத்தையும். (குணம்) – திருவாய்மொழி (1-2-4) - எல்லையில் அந்நலம் - என்று அந்த பகவத் வஸ்துவின் குணத்தையும். (ஸமர்ப்பண க்ரமம்) – திருவாய்மொழி (1-2-1) - வீடு செய்மினே, திருவாய்மொழி (1-2-3) - இறை சேர்மின், திருவாய்மொழி (1-2-5) - இறை பற்று, திருவாய்மொழி (1-2-10) - திண்கழல் சேர் - என்றும் உள்ள பாசுரங்கள் மூலம் அப்படிப்பட்ட பகவானிடம் ஆத்மாவை ஒப்படைக்கும் முறையையும். (ஸாலம்பந மந்த்ரமாக) திருவாய்மொழி (1-2-10) - வண் புகழ் நாரணன் – என்று அத்தகைய ஆத்ம சமர்ப்பணம் செய்வதற்கு ஏற்றபடி உள்ளதான நமஸ்காரம் செய்வதற்கு உறுப்பாக உள்ள திருமந்த்ரத்தை. (உபதேசித்து) - உபதேசம் செய்து. (எளிதாக அவதரித்து) - தன்னை வந்தடையும் அடியார்கள், “இவன் நம் கண்களுக்கும் மற்ற இந்த்ரியங்களும் எட்டாதவன்” என்று எண்ணித் தவிக்காதபடி, திருவாய்மொழி (1-3-2) - பல பிறப்பாய் எளிவருமியல்வினன் – என்பதற்கு ஏற்ப இராமன், க்ருஷ்ணன் முதலான திருஅவதாரங்கள் மூலம் அவர்கள் தன்னை வந்து அண்டலாம்படி எளியவனாக. (பிழைகளை ஸஹித்து) - தன்னை அவர்கள் வந்து அண்டும்போது அவர்களுக்கு மிகவும் எளியவனாக, அவர்களுடைய குற்றங்களைக் கண்டு அவர்களைக் கைவிடாமல், திருவாய்மொழி (1-4-7) - என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு - என்பதற்கு ஏற்ப அவர்களுடைய அபராதங்களைப் பொறுப்பவனாக. (புரையறக் கலந்து) - அவர்களுடைய அபராதங்களைக் கண்டு, தான் அவர்களை இகழாமல் உள்ளபோதிலும், அவர்கள் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்று எண்ணியபடி தன்னை விட்டு அகல முயற்சித்தால், திருவாய்மொழி (1-5-3) – திசைகளெல்லாம் திருவடியால் தாயோன் தானோருருவனே – என்பதற்கு ஏற்ப, தனது உயர்ந்த திருக்கல்யாண குணங்களை அவர்களுக்கு வெளிப்படுத்தி, அவர்கள் தன்னை அண்டும்படியாகச் செய்து, தான் அவர்களுடன் ஒன்றாகக் கலந்து நிற்கும் சீலம் கொண்டவனாக. (அல்ப ஸந்துஷ்டனாய்) - “அடியர்களுடன் அவன் ஒரே நீராகக் கலந்து நின்றாலும் அவன் மகிழும்படியான கைம்மாறு செய்ய இயலாத காரணத்தால் அவனை அடைவது அரிது” என்று நாம் எண்ண வேண்டாதபடியாக, நாம் அளிப்பதைக் கொண்டு மட்டுமே மனநிறைவு அடையவேண்டும் என்ற அவசியம் இல்லாதபடி, அனைத்தும் நிறைந்தவன் என்பதால், திருவாய்மொழி (1-6-1) - புரிவதுவும் புகைபூவே - என்பதற்கு ஏற்ப நம் மூலமாக எதனைப் பெற்றாலும் அதனைக் கொண்டு மகிழும்ம்படியாக, ஆராதனைக்கு மிகவும் எளியவனாக. (அம்ருதமே ஔஷதமாக்கி) - கைகளில் உள்ள பொருள் சிறந்ததாக இல்லை என்றாலும் தேவைப்படுவதாக உள்ளது போன்று, அமிர்தத்தையே மருந்தாக அளிப்பர்; இதனைப் போன்று திருவாய்மொழி (1-7-3) - தூயவமுதைப் பருகிப் பருகி யென் மாயப்பிறவி மயர்வறுத்தேன் – என்பதற்கு ஏற்ப எல்லையற்ற இனிமையுடன் கூடியவனாகிய தன்னைப் பற்றுதல் என்பததையே வைத்துக்கொண்டு மிகவும் இனிமையான தன்னையே ஸம்ஸாரம் என்ற நோய்க்கு ஏற்ற மருந்தாக்கியவனாக. (நீர் புரையத் தன்னை நியமித்து) – “இனிமையானவனாக அவன் உள்ளபோதிலும் அவனுடைய குறிப்பறிந்து செயல் புரிதல் என்பது கடினமாகும்”, என்று என்ணவேண்டிய அவசியம் இல்லாதபடியாக, நம்மைத் தன்னுடைய குறிப்பறிந்து செயலாற்றச் செய்யாமல், திருவாய் (1-8-11) - நீர்புரைவண்ணன் – என்பதற்கு ஏற்ப மேடாக உள்ள பகுதியில் நீரைத் தகுந்த வழியால் ஏற்றுவது போன்று, நம்முடைய ஒழுங்கீனத்தையும் நேர்மையாக மாற்றும்படியாகத் தன்னை நேர்மையாளனாக முன்னிறுத்துபவனாக. (போகத்தை ஸாத்மிப்பித்து) – “இவ்விதம் ஆனாலும் குளம்பு மூலம் ஏற்பட்ட சிறு குழியில் பெரிய கடலைப் புகுந்த முற்படுவது போன்று, பொறுக்க இயலாத செயலாக அமையுமோ?”, என்று எண்ணவேண்டிய அவசியமின்றி, திருவாய்மொழி (1-9-1) – என்னுடைச் சூழலுளான் – என்று தொடங்கி, திருவாய்மொழி (1-9-10) - உச்சியுளானே - என்பதற்கு ஏற்ப பொறுத்துக் கொள்ளும்படியாக மெதுவாகத் தனது அனுபவத்தை அளிப்பவனாக. (பக்தி கணனைகளுக்கு ஒக்க வரும் அவனுடைய) - “இவ்விதமாக அனுபவிப்பதற்கு ஏற்றபடியான அவன் தனது திருமுகத்தைக் காண்பிக்கும்போது, நம்மிடம் உள்ள பக்திக்கு ஏற்றபடியோ செய்கிறான்”, என்று எண்ண வேண்டிய அவசியம் இல்லாதபடி, திருவாய்மொழி (1-10-2) – கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் - என்பதற்கு ஏற்ப பரமபக்திக்கும் எண்ணிக்கைக்கும் ஒரே போன்று நின்று தனது திருமுகத்தைக் காண்பிப்பவனாக [இங்கு எண்ணிக்கை என்றால் என்ன? ஒன்று, இரண்டு என்று எண்ணியபடி சென்று, இருபத்து ஆறு என்று எண்ணும்போது, அந்த எண்ணிக்கையால் குறிக்கப்படும் ஈச்வரன் வந்து முகம் காண்பிப்பான் என்று எண்ணுதல்]. (ஸேவைக்கு) - இவ்விதமாக உள்ள அவனை வணங்குவதற்கு, (எளிமையும் இனிமையும் உண்டு) - எளிமையாக இருந்து இனிமை இல்லாமல் இருத்தல், இனிமையாக இருந்தாலும் அண்டுவதற்கு அரிதாக இருந்தல் என்பது போன்று அல்லாமல், இதுவரை கூறப்பட்ட அனைத்து குண சிறப்புக்களையும் உடையவனை அண்டி நிற்கும் செயல் என்பதால், அவன் அத்தகைய வணக்கத்திற்கு எளியவனாகவும் இனிமையானவனாகவும் இருப்பான். திருவாய்மொழி (1-2-1) – பத்துடை அடியவர்க்கெளியவன் – என்றும், (1-6-6) – அமுதிலுமாற்றவினியன் - என்றும் கூறப்படுகின்ற அவனைப் போலே அவனை வணங்குதலும் உள்ளது. இவ்விதமாக உள்ள வணக்கத்தால் என்ன பயன் உள்ளது? (தொழுதால் அரும்பயனாய தரும்) – திருவாய்மொழி (1-6-8) – அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித் தழிவின்றியாக்கம் தரும் - என்றும், (1-6-9) - தருமவரும் பயனாய – என்றும் கூறுவதற்கு ஏற்ப அவனை வணங்கினால் அவனை அடைவதற்கான தடைகள் அனைத்தையும் நீக்கி, அழிவற்றதும் பெறுவதற்கு அரியதாக உள்ளதும் ஆகிய பயன்களையும் அளிக்கும். வணங்கினால் மட்டுமே இவை அனைத்தும் கிடைக்கும்; சரி, ஆனால் வணங்குவதற்குப் பல தடைகள் ஏற்படும் அல்லவோ என்பதற்கு விடை அளிக்கிறார். (உத்யோகத்தே வினைகளும் மாளும்) – திருவாய்மொழி (1-3-8) – நாளு நின்ற நம் பழமையங் கொடுவினையுடனே மாளும் – என்பதற்கு ஏற்ப இந்த ஆத்மாவை அன்றாடம் அழிக்கவல்லதான, எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ள தீவினைகள் அனைத்தும் வணங்குவதற்குத் தொடக்கிய உடனேயே அழியும். சரி, வணங்கத் தொடங்குவதற்கான உபாயம் என்ன என்பதற்கு விடை அளிக்கிறார். (அவன் உரைத்த மார்க்கத்தில் நின்று) - திருவாய்மொழி (1-3-8) – திருவாய்மொழி (1-3-5) – பிணக்கற - என்று தொடங்கி, (1-3-5) – அம்பகவன் வணக்குடைத்தவநெறி வழி நின்று - என்பதற்கு ஏற்ப வேதங்களின் வழி நிற்கும் மதங்களுக்கும், வேதங்களுக்குப் புறம்பாக உள்ள ஆறு மதங்களுக்கும் இடையே உள்ள பிணக்கு தீரும்விதமாக, வேதமார்க்கத்தை உள்ளது உள்ளபடியே நிரூபணம் செய்யும்விதமாக எல்லையற்ற வாத்ஸல்யம் கொண்டவனும், ஞானம் போன்ற குணங்களைப் பரிபூர்ணமாகக் கொண்டவனும் ஆகிய க்ருஷ்ணன் திருத்தேரில் வீற்றிருந்து அர்ஜுனனை ஒரு காரணமாக அமைத்துக் கொண்டு அருளிச்செய்த ஸ்ரீமத்பகவத் கீதை மூலமாக கீதை (11- 54) – பக்த்யா த்வதந்யயா சக்ய: – என்னிடம் உள்ள பக்தி மூலம் மட்டுமே அல்லாமல் வேறு எதனாலும் நான் உணரப்பட இயலாதவன் - என்றும், கீதை (9-34) – மந்மநா பவ மத்பக்த: மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத் பராயண: - என்னிடம் மனம் நிலை பெற்றவனாக, எனது பக்தனாக, என்னை வணங்குபவனாக நின்று என்னை வணங்குவாயக; இப்படியாக மனம் மற்றும் இந்த்ரியங்களுடன் கூடிய சரீரத்தை என்னிடம் ஈடுபடுத்தி, என்னை மட்டுமே அடையத்தக்க புகலிடமாகக் கொண்டு, என்னையே அடைவாயாக - என்றும் அருளிச்செய்த் பக்தி மார்க்கத்தில் நிலை நின்று. – (இரு பசை மலம் அற) – திருவாய்மொழி (1-3-7) - நும்மிரு பசையறுத்து – என்றும், (1-3-8) – மனனகமலமறக்கழுவி – என்றும் கூறுவதற்கு ஏற்ப மற்ற தெய்வங்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட ஸம்பந்தத்தை விலக்கிக் கொண்டு, “பற்றத்தகுந்தவர்கள் அவனா அல்லது இவர்களா” என்ற ஐயத்தை மனதிலிருந்து அதன் வாசனையுடன் விலக்கி. (உறணர்வு கொண்டு) – திருவாய்மொழி (1-3-5) - அவனுடையுணர்வு கொண்டு – என்பதற்கு ஏற்ப அவன் விஷயமான ஞானத்தை அடைந்து. (நலம் செய்வது என்று) – திருவாய்மொழி (1-3-7) - நன்றென நலஞ் செய்வது - என்று கூறுவதற்கு ஏற்ப வேறு எந்தப் பயனையும் எதிர்பாராமல் பக்தியுடன் இருப்பீர்களாக என்று, (தாம் மயர்வற மதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார் முதற்பத்தில்) - அதாவது ஸர்வேச்வரன் தனக்கு மயர்வற மதிநலம் அருளிச்செய்தது போன்று, ஸம்ஸாரிகளுக்குத் தனது கருணை மூலம், உண்மையானதும் நன்மை அளிக்கவல்லதும் ஆகிய புருஷார்த்தம் குறித்த விஷயத்தில் ஏற்பட்ட அறியாமையை நீக்கி, ஞானம் மற்றும் பக்தி ஆகியவற்றை உபதேசம் செய்து, பகவானை வணங்குதல் என்பதில் ஈடுபடுத்துகிறார்; இதனை முதல் பத்தால் செய்கிறார் என்று கருத்து,