Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 218)
மூன்றாம் ப்ரகரணம்
பரத்வ காரணத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வ காருணிகத்வ சரண்யத்வ சக்தத்வ ஸத்யகாமத்வ ஆபத்ஸகத்வ ஆர்த்திஹரத்வ விசிஷ்டன் மயர்வையறுக்க, தத்வ வேதந மறப்பற்று ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து, மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து, புருஷார்த்த பலாந்யருசியொழிந்து, விரக்தி பலராகம் கழியமிக்கு, ப்ரேமபலோபாயத்தே புகுந்து, ஸாதந பலோபகாரக் கைம்மாறின்றி க்ருதஜ்ஞதா பல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து, ஆத்மதர்சந பலப்ராப்தி மரணாவதியாகப் பெற்று, காலாஸத்தி பல கதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப் பிறரறியப் பத்துத்தோறும் வெளியிடுகிறார்.
இப்படி பத்துத்தோறுமுள்ள வர்த்தங்களைப் பரோபதேசத்துக் குறுப்பாக ஒருங்கவிட்டு விஸ்தரேண மேல் யோஜிப்பதாகத் திருவுள்ளம் பற்றி, பரத்வாதி குண விசிஷ்டனான ஸர்வேச்வரன், தமக்குப் பிறப்பித்த தசா விசேஷங்களைப் பத்துத்தோறும் வெளியிடுகிறாரென்று ஸங்க்ரஹேண வாக்யார்த்த மருளிச்செய்கிறார் (பரத்வ) இத்யாதி சூர்ணையாலே. – அதாவது ஸர்வஸ்மாத் பரனாய், அந்த பரத்வம் ப்ரகாசகமாம்படி ஸர்வகாரண பூதனாய், லோகத்தில் கார்யகாரணங்கள் போலன்றிக்கே உபாதானக் காரணமும் தானேயாகையாலே கார்ய பூத ஸமஸ்த வஸ்துக்களுக்கும் வ்யாபகனாய், அந்த வ்யாப்திதான் ஆகாச வ்யாப்தி போலன்றிக்கே அந்தராத்மதயாவாகையாலே ஸர்வநியந்தாவாய், அந்த பரத்வாதிகளைக் கண்டு வெருவ வேண்டாதபடி பரமகாருணிகனாய், இப்படி க்ருபாவானாகையாலே ஸர்வசரண்யனாய், சரண்ய க்ருத்யமான அநிஷ்ட நிவ்ருத்தீஷ்ட ப்ராப்தி கரணத்துக் கீடாம்படி ஸர்வசக்தி யுக்தனாய், அந்த சக்தியாலே நித்யமாகக் கல்பித்த பத்நீ பரிஜநாதிகளையுடையனாகையாலே ஸத்ய காமனாய், அந்த போகங்களில் அந்யபரனாயிருந்துவிடாதே ப்ரளயாத் யாபத்துக்களிலே யுதவி லீலாவிபூதியை ரக்ஷிக்கையாலே ஆபத்ஸகனாய், இப்படி ஆபத்ஸகனாகையாலே ஸம்ஸாரதா பார்த்தரான ஆச்ரிதர்க்கு ஆர்த்திஹரனாய், இப்படி பத்துப் பத்தாலும் ப்ரதிபாதிதமான பத்து குணத்தோடும் கூடியிருக்கிற ஸர்வேச்வரன், “மயர்வற மதிநலமருளினன்” என்கிறபடியே பக்திரூபாபந்ந ஜ்ஞாந ப்ரதாந் முகேந அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப் போக்க. அத்தாலே தத் விஷய ஜ்ஞாநமாகிற தத்வ வேதநத்தில், “மறப்பனோவினி யானென்மணியை” என்கிறபடியே விஸ்ம்ருதியற்று, அந்த ஜ்ஞாந பலமான மோக்ஷத்தை “நின் செம்மாபாதபற்புத் தலை சேர்த்து” என்று ஸ்வரூபாநுரூபமாக நிஷ்கர்ஷித்து, அந்த மோக்ஷத்துக்கு பலமான கைங்கர்யரூப வ்ருத்தியை “வழுவிலாவடிமை செய்யவேண்டு நாம்” என்று அர்த்தித்து, அந்த புருஷார்த்தத்துக்கு பலம் அந்யருசி நிவ்ருத்தியாகையாலே தத்பலமாக “ஐங்கருவி கண்டவின்பம் - சிற்றின்பம் – ஒழிந்தேன்” என்று அந்ய புருஷார்த்தங்களில் ருசியைத் தவிர்ந்து, அந்த இதர விஷய விரக்திக்கு பலமான பகவத் விஷயராகம் “கழிய மிக்கதோர் காதல்” என்னும்படி அதிசயித்து. அந்த நிரதிசய ப்ரேம பலமான விளம்பாக்ஷமத்வத்தால் வந்த த்வரையாலே, “அலர்மேல்மங்கை யுறைமார்பா உன்னடிக்கீழமர்ந்து புகுந்தேன்” என்று உபாயவரணம் பண்ணி, அந்த ஸாதந பலமான உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரமாக “உதவிக் கைம்மாறென்னுயிர்” என்று ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணத் தேடி, அவ்வாத்ம வஸ்து, ததீயமென்றறிகையாலே “அதுவுமற்றாங்கவன்றன்னது எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” என்று ப்ரத்யுபகாரம் காணாமல் தடுமாறி, அந்த க்ருதஜ்ஞதைக்கு பலமான ப்ரத்யுபகாரமாக “தோள்களையாரத் தழுவி யென்னுயிரை அறவிலை செய்தனன்” என்று ப்ரீதியாலே கலங்கி ஸமர்ப்பித்த ஆத்மவஸ்துவை, “நின்ற வொன்றை யுணர்ந்தேன்” என்று தேஹாதிகளில் விலக்ஷணமாய் அவனுக்கு ப்ரகாரதயா சேஷமாய்க் கொண்டு அநந்யார்ஹமாயிருக்கு மென்றறிந்து, ஆத்ம தர்சந பலமான பகவத் ப்ராப்தியை “மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” என்கிறபடியே சரீராவஸாநத்திலே பண்ணித் தருகிறோமென்று அவன் நாளிட்டுக் கொடுக்கப் பெற்று, இப்படி ப்ராப்தி காலமணித்தானதுக்கு பலம் அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்தேறப் போவதாகையாலே, அவ்வர்ச்சிராதி கதிக்கு “காளமேகத்தையன்றி மற்றொன்றிலங்கதி” என்றும், “ஆத்தன் தாமரையடியன்றி மற்றிலமரணே” என்றும் பரமாப்தனானவன் தன்னையே துணையாகக் கூட்டின தம்முடைய பேற்றைப் பிறரறிந்து வாழும்படி முதல் பத்தே தொடங்கிப் பத்துப்பத்தாலும் ப்ரகாசிப்பித்தருளுகிறா ரென்றபடி. இத்தால் பரத்வாதி குண விசிஷ்டனான வீச்வரன் தமக்குப் பண்ணிக் கொடுத்த பேறுகளைப் பலருமறிந்து வாழவேணுமென்று பத்துப் பத்தாலும் ப்ரகாசிப்பிக்கிறாரென்று பத்து நிகமநத்துக்கு வாக்யார்த்தம் சொல்லப்பட்டதாய்த்து.
இப்படியாக ஒவ்வொரு பத்திலும் காணப்படுகின்ற ஆழ்பொருளை மற்றவர்களுக்குச் செய்யப்படும் உபதேசமாகக் கொண்டு உரைத்து, இதனை மேலும் விரிவாக எடுத்துரைக்க திருவுள்ளம் கொண்டு, பரத்வம் முதலான குணங்களுடன் கூடியுள்ள ஸர்வேச்வரன், தனக்கு ஏற்படுத்திய நிலை வேறுபாடுகளை, ஒவ்வொரு பத்திலும் வெளியிடுகிறார் என்று சுருக்கமாக உரைக்கிறார். (பரத்வம்) - அனைத்து ஆத்மாக்களிலும் உயர்ந்தவன். (காரணத்வம்) - தனது மேன்மைத்தன்மை வெளிப்படும்விதத்தில் அனைத்திற்கும் காரணமாக இருத்தல். (வ்யாபகத்வம்) – இந்த லோகத்தில் உள்ள “உண்டான பொருள், உண்டாக்கும் பொருள்” என்பவை போன்று அல்லாமல், அனைத்திற்கும் மூலகாரணப் பொருளாக தானே உள்ளதால், உண்டான பொருள்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கும் தன்மை. (நியந்த்ருத்வம்) - இவ்விதம் நிறைந்திருத்தல் என்பது ஆகாசம் போன்று அல்லாமல், அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ள நிலை என்பதால், அனைத்தையும் நியமித்தபடி இருக்கும் தன்மை. (காருணிகத்வம்) - இப்படியாக உள்ள, “மேலானவனாக இருத்தல்” முதலான தன்மைகள் காரணமாகக் கர்வம் கொள்ளாமல், மிகுந்த கருணையுடன் உள்ள தன்மை. (சரண்யத்வம்) - இவ்விதம் கருணையுடன் கூடியவன் என்பதால், அனைத்தாலும் அடைக்கலம் என்று அடையத்தகவனாக உள்ள தன்மை. (சக்தித்வம்) - அனைத்திற்கும் அடைக்கலம் அளித்து, அவற்றுக்கு விருப்பமானவற்றை கொடுத்து, விருப்பம் அல்லாதவற்றை விலக்குவதற்குத் தேவைப்படுகின்ற எல்லையற்ற சக்தி கொண்ட தன்மை. (ஸத்யகாமத்வம்) - அப்படிப்பட்ட சக்தியின் மூலமாக “எப்போதும் இருப்பவர்கள்” என்றுள்ள பிராட்டிமார்கள், நித்யஸூரிகள் போன்றவர்களைக் கொண்டவனாக இருப்பதால், தனது விருப்பங்கள் நிறைவேறப்பெற்ற தன்மை. (ஆபத்ஸகத்வம்) - எப்போதும் இத்தகைய இனிமையில் மூழ்கியபடி இருந்து விடாமல், ப்ரளயம் முதலான ஆபத்து காலங்களில் தகுந்த உதவிகள் செய்து இந்தப் பூமியைக் காப்பதால், ஆபத்து காலத்தில் உதவும் தன்மை. (ஆர்த்தி ஹரத்வம்) - இப்படியாக ஆபத்தான துன்பத்தில் சிக்கித் தவிக்கும் தனது அடியவர்களுக்கு இந்த துன்பத்தைப் போக்கும் தன்மை. (விசிஷ்டன்) – இவ்விதமாகப் பத்து பத்துக்களாலும் கூறப்படுகின்ற பத்து குணங்களுடன் கூடிய ஸர்வேச்வரன், (மயர்வை அறுக்க) – திருவாய்மொழி (1-1-1) - மயர்வற மதிநலம் அருளினன் – என்பதற்கு ஏற்ப, பக்தி ரூபத்தை அடைந்த ஞானத்தை அளிப்பதன் மூலமாக அஜ்ஞானத்தை அதன் வாசனையுடன் நீக்க. – (தத்வ வேதந மறப்பு அற்று) - இந்தக் காரணத்தால் அவனைக் குறித்த ஞானம் என்னும் உண்மையான ஞானத்தைக் குறித்து, திருவாய்மொழி (1-10-10) – மறப்பனோ இனி யான் என் மணியை – என்பதற்கு ஏற்ப மறதி என்பது இன்றி. (ஜ்ஞப்தி பலமுக்தி தலைசேர நிஷ்கர்ஷித்து) - அத்தகைய ஞானத்தைப் பலனாகக் கொண்டுள்ள மோக்ஷத்தை, திருவாய்மொழி (2-9-1) – நின் செம்மாபாதபற்புத் தலை சேர்த்து – என்பதற்கு ஏற்ப ஸ்வரூபத்திற்கு ஏற்றதாக உறுதியாக உரைத்து. (மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து) - அத்தகைய மோக்ஷத்தின் பலனாக உள்ள கைங்கர்யத்தை திருவாய்மொழி (3-3-1) – வழுவிலா அடிமை செய்யவேண்டு நாம் - என்பதற்கு ஏற்ப விரும்பி நின்று. (புருஷார்த்த பல அந்ய ருசி ஒழித்து) - அத்தகைய கைங்கர்யம் என்ற புருஷார்த்தத்தின் பலன் என்பது, மற்ற விஷயங்களில் உள்ள ருசியானது நீங்குதல் என்பதால், கைங்கர்யத்தின் பலனாக, திருவாய்மொழி (4-9-10) - ஐங்கருவி கண்டவின்பம் சிற்றின்பம் ஒழிந்தேன் - என்பதற்கு ஏற்ப மற்ற புருஷார்த்தங்களில் உள்ள ஆசையை விலக்கி. (விரக்தி பல ராகம் கழியமிக்கு) - இவ்விதம் மற்ற விஷயங்களில் உள்ள ருசி கழிவதன் மூலம் கிட்டும் பலனாக உள்ள பகவானிடம் கொள்ளும் பக்தியானது, திருவாய்மொழி (5-5-10) - கழிய மிக்கதோர் காதல் - என்பதற்கு ஏற்ப மிகுதியாகி. – (ப்ரேம பல உபாயத்தே புகுந்து) - அத்தகைய எல்லையற்ற பக்தியின் பலனாக அவனை அடையும் காலதாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத காரணத்தால் வந்த பதற்றத்தின் விளைவாக திருவாய்மொழி (6-10-10) - அலர்மேல்மங்கை யுறைமார்பா உன்னடிக்கீழமர்ந்து புகுந்தேன் – என்று உபாயத்தைப் பற்றி நின்று. (ஸாதந பல உபகாரக் கைம்மாறு) – அந்த உபாயத்தின் பலனாக, உபகாரத்திற்கு ப்ரதி உபகாரமாக, திருவாய்மொழி (7-9-10) – உதவிக் கைம்மாறு என்னுயிர் - என்பதற்கு ஏற்ப ஆத்மாவை அவனிடம் சமர்ப்பணம் செய்வதற்காக முனைந்து தேடி, அப்போது அத்தகைய ஆத்மவஸ்துவும் அவனுக்கே உடைமையானது என்று அறிவதால், திருவாய்மொழி (7-9-10) – அதுவுமற்றாங்கு அவன்றன்னது எதுவும் ஒன்றுமில்லை செய்வதிங்குமங்கே - என்பதற்கு ஏற்ப ப்ரதி உபகாரம் செய்வதற்கான எதனையும் காண இயலாமல் தடுமாறியபடி. (க்ருத்ஜ்ஞதா பல ப்ரதி க்ருதமானத்தை உணர்ந்து) - அத்தகைய செய்ந்நன்றி அறிதல் என்பதற்குப் பலனாக உள்ள ப்ரதி உபகாரமாக திருவாய்மொழி (8-1-10) - தோள்களையாரத் தழுவி யென்னுயிரை அறவிலை செய்தனன் - என்பதற்கு ஏற்ப ப்ரீதியால் கலக்கம் அடைந்து சமர்ப்பணம் செய்த ஆத்மவஸ்துவை, திருவாய்மொழி ( 8-8-4) - நின்ற வொன்றை யுணர்ந்தேன் – என்பதற்கு ஏற்ப சரீரம் போன்றவற்றைக் காட்டிலும் வேறுபட்டது என்றும், அந்த ஆத்மா அவனுக்குச் சரீரமாக உள்ளதால் அவனுடைய அங்கமாக இருப்பதன் விளைவாக, வேறு யாருக்கும் அல்லாமல் அவனுக்கு மட்டுமே உரியதாக உள்ளது என்றும் அறிந்து. (ஆத்ம தர்சந பல ப்ராப்தி மரண அவதியாகப் பெற்று) – இவ்விதம் ஆத்மாவைக் குறித்து அறிந்து கொண்டதன் பலனாக உள்ள “பகவானை அடைதல்” என்பதை, திருவாய்மொழி (9-10-5) - மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் – என்பதற்கு ஏற்ப “சரீரம் முடியும்போது நாம் அளிப்போம்” என்று அவனால் தகுந்த நாள் குறித்துக் கொடுக்கப் பெற்று. (கால ஆஸத்தி பல கதிக்குத் துணை கூட்டின தன் பேற்றை) - இப்படியாக அவனை அடைவதற்கான காலம் நெருக்கி வருவதற்குப் பலனாக உள்ள அர்ச்சிராதி மார்க்கம் மூலம் பரமபதம் செல்வதால், அத்தகைய அர்ச்சிராதி மார்க்கத்திற்கு, திருவாய்மொழி (10-1-1) - காளமேகத்தையன்றி மற்றொன்றிலங்கதி – என்றும், திருவாய்மொழி (10-1-6) – ஆத்தன் தாமரையடியன்றி மற்றிலமரணே – என்றும் கூறுவதற்கு ஏற்ப, மிகுந்த நம்பிக்கையான ஒருவனையே துணையாகக் கொண்டு நின்று தனது பேற்றினை, (பிறர் அறியப் பத்துதோறும் வெளியிடுகிறார்) - மற்றவர்கள் அறிந்து கொண்டு, அதனைப் பின்பற்றி வாழ்வதற்காக, முதல் பத்து தொடங்கி, பத்து பத்துக்களாலும் விரிவாக அருளிச்செய்தார். இதன் மூலம், பரத்வம் போன்ற குணங்களுடன் கூடியுள்ள ஈச்வரன், தமக்குச் செய்தருளிய பேறுகள் அனைத்தையும், அனைவரும் அறிந்து கொண்டு, அதே போன்று அவர்களும் வாழவேண்டும் என்று பத்துப் பத்துக்களாலும் வெளிப்படுத்துகிறார் என்று பத்துப்பத்துக்களில் உள்ளவற்றுக்கு விளக்கம் கூறப்பட்டது.