Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 217)

மூன்றாம் ப்ரகரணம்

பகவத் பக்த பரங்கள் ஆச்ரயண விதி சேஷங்கள்.

இவற்றில் பகவத் பக்த பரங்களாய் வருமவற்றுக்குத் தாத்பர்ய மேதென்னு மாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (பகவத் பக்த பரங்கள்) இத்யாதி.

திருவாய்மொழியில் பகவானுடைய பக்தர்களாக உள்ளவர்கள் குறித்துள்ள பாசுரங்களின் கருத்து என்ன என்பதற்கு விடை அருளிசெய்கிறார்.

– அதாவது, “பயிலுஞ் சுடரொளி” முதலான பாகவத பரங்களான திருவாய்மொழிகள், “ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத” என்கிற விதிக்கு ப்ரயாஜாதி விதிகள் சேஷமாய். அவற்றினுடைய அநுஷ்டாநத்தோடே அது பல பர்யந்தமாய்த் தலைக்கட்டுமாபோலே, “திருநாரணன்தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ”, “ நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் பலமுந்து சீரில் படிமினோவாதே” என்று விதிக்கிற பகவதாச்ரயணம் பாகவதாச்ரயணத்தோ டொழியத் தலைக்கட்டாமையாலே, பகவதாச்ரயண விதிக்கு சேஷங்களென்கை. அதவா, பரோபதேசபரமானவிதில், பகவத் குணங்களையும் ஜீவகுணங்களையும் ப்ரதிபாதிக்கிறவற்றுக்கு விநியோகமேதென்ன வருளிச்செய்கிறார் “பகவத் பக்த பரங்கள்” இத்யாதி. அதாவது, பகவத் பரங்களாயும், தத் பக்தரான ஜீவபரங்களாயும் அவ்வவகுணங்களை ப்ரதிபாதிக்கிறவை, ஆச்ரயண விஷயத்தையும் ஆச்ரயண கர்த்தாவையும் சொல்லுகிறதாகையாலே, ஆச்ரயண விதிக்கு சேஷங்களித்தனை யென்கை.

– (பகவத் பக்த பரங்கள்) – திருவாய்மொழி (3-7-1) - பயிலும் சுடரொளி – என்பது போன்றதான பாகவதர்கள் குறித்து உரைக்கின்ற திருவாய்மொழிகள், ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத - ஸ்வர்கத்தை விரும்பும் ஒருவன் ஜ்யோதிஷ்டோமம் என்ற யஜ்ஞத்தைச் செய்வானாக - என்று கூறப்படும் விதிக்கு, ப்ரயாஜம் முதலான யாகங்கள் குறித்து உரைக்கின்ற விதிகள் அங்கங்களாகவும், அவற்றை இயற்றுவதன் மூலம் பலனை அளிக்கிறது என்பதாகவும் உள்ளது போன்று, (ஆச்ரயண விதி சேஷங்கள்) – திருவாய்மொழி (4-1-1) - திருநாரணன்தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ – என்றும், திருவாய்மொழி (2-8-4) - நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் பலமுந்து சீரில் படிமினோவாதே - என்றும் விதிக்கப்படுவதற்கு ஏற்ப, பகவானை அண்டுதல் என்பது, பாகவதர்களைச் சென்றடைதல் என்பதான விதிக்கு உட்படாதவரை நிறைவேறாது என்பதால், பகவானை அண்டுவதற்கு அங்கங்களாக உள்ளன. அல்லது, மற்றவர்களுக்கு ஏற்ற உபதேசங்களைச் செய்வதாகிய இந்தத் திருவாய்மொழியில், பகவத் குணங்கள் மற்றும் ஜீவாத்மாவின் குணங்கள் குறித்து உரைக்கின்ற திருவாய்மொழிகள், அடையப்படும் பொருளாகிய ஸர்வேச்வரன் மற்றும் அடையும் பொருள்களாகிய ஜீவாத்மா குறித்து உரைப்பதால், “அடையவேண்டும்” என்பதான விதிமுறைக்கு அங்கங்களாக உள்ளன என்று கருத்து.