Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 216)
மூன்றாம் ப்ரகரணம்
பாட்டுக்கு க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேசப்பத்து.
இனி பத்துக்கள் தோறும் உபதேசபரமான ஓரொரு திருவாய்மொழி ப்ரதாநமாய், அவ்வோ பத்துக்களுக்கு அவ்வோ திருவாய்மொழியிலே நோக்காயிருக்கும்படியை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச்செய்கிறார் (பாட்டுக்கு க்ரியையும்) இத்யாதி.
அடுத்து ஒவ்வொரு பத்துக்களிலும் உபதேசிக்கும்விதமாக உள்ள ஒவ்வொரு பாசுரம் முக்கியமானதாகவும், அந்தந்த பத்துக்களில் கூறப்பட்ட விஷயமே அந்த ஒரு பாசுரத்தின் நோக்கமாகவும் இருக்கும் என்பதை உதாரணத்துடன் கூறுகிறார்.
– அதாவது, பாட்டானால் க்ரியையோடே தலைக்கட்ட வேண்டுமாகையாலே பாட்டுக்கள்தோறும் க்ரியாபதம் ப்ரதாநமாயிருக்குமாப் போலவும், ஓரொரு திருவாய்மொழிக்கு பரத்வம், பஜநீயதை, ஸௌலப்யம், அபராத ஸஹத்வம் என்றாப்போலே தனித்தனியே கருத்துக்களாகையாலே பத்துப்பாட்டுக்குக் கருத்தான நிதாநம் சொல்லும் பாட்டு ப்ரதானமாயிருக்குமாப் போலவும், நூறு பாட்டுக்கு பரோபதேசபரமான பத்துப் பாட்டு ப்ரதாநமாயிருக்குமென்கை. இத்தால் பாட்டுக்களுக்கு க்ரியையிலும், பத்துப் பாட்டுக்கு நிதாநம் சொல்லும் பாட்டிலும் தாத்பர்யமாயிருக்குமோபாதி, நூறு பாட்டுக்கும் பரோபதேசமான பத்துப்பாட்டிலே தாத்பர்யமாயிருக்கு மென்றதாய்த்து. “பிணங்கி யமரர் பிதற்றும்” என்கிறபடியே பேரளவுடையரான நித்யஸூரிகள் ஸ்வஸ்வாநுபூத குண தாரதம்யங்களைச் சொல்லி, ஸரஸ விவாத கோலாஹலம் பண்ணும்படியிருக்கிற அவனுடைய பரத்வ ஸௌலப்ய ப்ரயுக்தமான குண விசேஷங்களைத் தனித்துத் தம்மால் புஜித்துத் தலைக்கட்ட வொண்ணாமையாலே, “அடியார்கள் குழாங்களையுடன் கூடுவதென்று கொலோ” என்று கூட்டரான ரஸஜ்ஞரைத் தேடினவளவில் கிடையாதபடி தூரஸ்த்தராக, ஸந்நிஹிதரான ஸம்ஸாரிகளுடைய அநாத்மகுணம் பாராதே, பகவத் குணங்களிலே மூட்டித் திருத்திக் கூட்டிக் கொள்கை தேட்டமாய் உபதேசத்திலே ஒருப்படுகையாலே அதிலே நோக்காக வேணுமிறே.
(பாட்டுக்கு க்ரியை போலே) - ஒரு பாசுரம் என்றால் ஒரு குறிப்பிட்ட பயனிலையுடன் முடியவேண்டும் என்பதால், ஒவ்வொரு பாசுரத்திலும் பயனிலையை உணர்த்தும் சொல்லானது முக்கியமானதாக உள்ளவிதமாகவும். (பத்துக்குக் கருத்து போலே) - ஒவ்வொரு திருவாய்மொழியிலும் அவனுடைய உயர்ந்த தன்மை, அனைவராலும் போற்றப்படும் தன்மை, எளியவனாகவும் உள்ள தன்மை, குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை என்பது போன்ற தனித்தனிக் கருத்துக்கள் பொதிந்துள்ளது என்பதால், அந்தந்த திருவாய்மொழியில் உள்ள பத்துப் பாசுரங்களுக்கு உள்ள மையக் கருத்தை உரைக்கும் பாசுரம் முக்கியமாக இருக்கும் விதமாகவும். (நூற்றுக்கு உபதேசப் பத்து) - நூறு திருப்பாசுரங்களில் உள்ளவற்றை மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் விதத்தில் உள்ளதான பத்துப் பாசுரங்கள் மிகவும் முக்கியமாக இருக்கும் என்று கருத்து. ஆகவே இதன் மூலம், பாசுரங்களுக்குப் பயனிலையும், பத்துப் பாசுரங்களுக்கு மையக்கருத்தும் உரைக்கின்ற பாசுரத்திலும் கருத்தாக உள்ளது போன்று, நூறு பாசுரங்களில் உள்ளவற்றை மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் பத்துப்பாசுரங்களில் கருத்தாக இருக்கும் என்று கருத்து. திருவாய்மொழி (1-6-4) – பிணங்கி அமரர் பிதற்றும் - என்பதற்கு ஏற்ப, எண்ணற்றவர்களாகிய நித்யஸூரிகள், தாங்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்கின்ற குணங்களுடைய ஏற்றத்தாழ்வுகளை உரைத்து, “இதுவே சிறந்தது, இதுவே சிறந்தது” என்று விவாதம் செய்யலாம்படி உள்ளதான அவனுடைய அனைத்திலும் உயர்ந்த தன்மை மற்றும் எளிமை போன்றவற்றுடன் கூடியுள்ளதான குண விஷயங்களை, தனித்து நின்ற தன்னால் அனுபவித்து முடிக்க இயலாமல் உள்ளதால், திருவாய்மொழி (2-3-10) – அடியார்கள் குழாங்களையுடன் கூடுவதென்று கொலோ - என்பதற்கு ஏற்ப, தன்னுடைய கூட்டத்தைத் சேர்ந்தவர்களாகிய தன்னைப் போன்று உள்ளவர்களைத் தேடியபடி இருந்தார். ஆனால் அப்படிப்பட்டவர்களைத் தேடியபோது அவர்கள் கிடைக்காமல் தூரத்தில் இருந்தவர்கள் என்பதால், தனக்கு அருகில் உள்ளவர்களாகிய இந்த உலக மக்களின் தாழ்மையை ஆராயாமல், அவர்களைப் பகவத் குணங்களில் ஈடுபடுத்தி திருத்துவதற்காக உபதேசத்தில் நிற்பதால், உபதேசப்பத்து என்பது முக்கியமானதாகிறது.