Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 215)
மூன்றாம் ப்ரகரணம்
ஐந்தினோடு ஒன்பதோடு ஒருபத்தென்னுமவைபோலே நூறே சொன்ன பத்து நூறு ஓராயிரமென்றதும் ஸாபிப்ராயம்.
இனி இப்பத்துக்களையும், இவற்றின் ஸமுதாயமான ப்ரபந்தத்தையும் ஆழ்வார் ச்லாகித்துப் பேசின பாசுரங்களில் ஸாபிப்ராயதையை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச் செய்கிறார் (ஐந்தினோடு) என்று தொடங்கி.
அடுத்து இந்த பத்துக்கள் மற்றும் இந்தப் பத்துக்களின் கூட்டமாக உள்ளதான இந்த ப்ரபந்தம் ஆகியவற்றை நம்மாழ்வார் சிறப்பித்து உரைத்த பாசுரங்களில் வெளிப்படுகின்ற அவருடைய திருவுள்ளத்தை, உதாரணத்துடன் அருளிச்செய்கிறார்.
– அதாவது, முன்னிலைந்து பாட்டுக்கொரு கருத்தும், பின்னிலைந்து பாட்டுக்கொரு கருத்துமாகையாலே, “ஐந்தி னோடைந்தும் வல்லார்” என்றும், ஒன்பது பாட்டுக்கொரு கருத்தும் ஒரு பாட்டுக்கொரு கருத்துமாகையாலே “ஒன்பதோ டொன்றுக்கும்” என்றும், பத்துப்பாட்டுக்கும் சேரவொரு கருத்தாகையாலே “பாடலோராயிரத்துள் இவையுமொரு பத்து” என்றுஞ் சொன்னவைபோலே, “நூறே சொன்ன வோராயிரம்” என்று கிழிகிழியாகக் கொடுப்பாரைப் போலே நூறு நூறாகச் சொன்ன ஆயிரமென்றும், “பத்து நூற்றுளிப்பத்து” என்று பத்து நூறென்றும் இப்படிப் பத்துக்களைப் பிரித்துச் சொன்னதும், “தெரியச் சொன்ன வோராயிரம்”, “மிக்கவோராயிரம்”, “அவாவிலந்தாதிகளா லிவையாயிரமும்” என்று ஆயிரத்தையும் சேரச் சொன்னதும், பத்துக்கள் தோறும் வெவ்வேறு கருத்தாயும், ஆயிரத்துக்கும் சேர ஒரு கருத்தாயுமிருக்கும்படியை நினைத்தாகையாலே ஸாபிப்ராயமென்கை.
– (ஜந்தினோடு என்னுமது போலே) ஒவ்வொரு திருவாய்மொழியிலும் உள்ள முதல் ஐந்து பாசுரங்களுக்கு ஒரு கருத்தும், பின்னர் உள்ள ஐந்து பாசுரங்களுக்கு ஒரு கருத்தும் உள்ளதால், திருவாய்மொழி (10-2-11) – ஐந்தினோடு ஐந்தும் வல்லார் - என்பது போன்றும். (ஒன்பதோடு என்னுமது போலே) - ஒன்பது பாசுரங்களுக்கு ஒரு கருத்தும், ஒரு பாசுரத்திற்கு ஒரு கருத்தும் உள்ளதால், திருவாய்மொழி (9-5-11) – ஒன்பதோடு ஒன்றுக்கும் - என்பது போன்று. (ஒரு பத்து என்னுமது போலே) - பத்துப் பாசுரங்களுக்கும் ஒரே கருத்து என்பதால், திருவாய்மொழி (3-4-11) - பாடலோராயிரத்துள் இவையுமொரு பத்து - என்பது போன்றும். (நூறே சொன்ன என்றதும்) - திருவாய்மொழி (9-4-11) - நூறே சொன்ன ஓராயிரம் – என்று கிழிகிழியாக அளிப்பவர்கள் போன்று, நூறு நூறாக உரைக்கப்பட்ட ஆயிரம் என்றும், (பத்து நூறு என்றதும்) – திருவாய்மொழி (6-7-11) - பத்து நூற்றுள் இப்பத்து – என்று பத்து நூறு என்றும் இப்படியாகப் பத்துக்களைப் பிரித்து உரைத்ததும். (ஓராயிரம் என்றதும்) - திருவாய்மொழி (6-9-11) - தெரியச் சொன்ன ஓராயிரம் – என்றும், திருவாய்மொழி (7-6-11) - மிக்க ஓராயிரம் - என்றும், திருவாய்மொழி (10-10-11) – அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் - என்றும் உள்ளது போன்று ஆயிரத்தையும் சேர்த்து ஒன்றாக உரைத்ததும். (ஸாபிப்ராயம்) - ஒவ்வொரு பத்துக்களிலும் வெவ்வேறு கருத்தாகவும், ஆயிரமும் சேர்த்து ஒரு உள்ளது என்று சிந்தித்து உரைத்தார்.