Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 214)

மூன்றாம் ப்ரகரணம்

சாதுசனம் நண்ணா மயர்வற மாசறுக்கும் தெருள் கொள்ளப் பத்தராவர் அடிமையறவுரிய நோய்களறுக்கும் உடைந்து ஏற்றரும் வானின் தாளின் கீழடிக்கீழ் இன்பக் கதி பயக்கும் ஊடு புக்கு மூவுலகுமுருகா நிற்பரென்னும் ஸாம்யத்தாலே வாச்யன் பத்தினாய தோற்றம் போலே தோற்றங்களாயிரத்தின் பத்துப்பத்தான விதின் ஆவிர்ப்பாவம்.

இனிமேல் இப்ப்ரபந்தம் பத்துப்பத்தாக அவதரித்ததின் ப்ரயோஜநத்தை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச்செய்கிறார் (சாதுசனம்) என்று தொடங்கி.

– அடுத்த இந்தத் திருவாய்மொழியானது பத்துப்பத்தாக அவதரித்ததன் பயனை உதாரணங்களுடன் அருளிச்செய்கிறார்.

– அதாவது, “சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு”, “பரித்ராணாய” இத்யாதிப்படியே ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாசார்த்தமாக அவன் அவதரித்தாப்போலே, இதுவும், “நண்ணாவசுரர் நவிவெய்த நல்லவமரர் பொலிவெய்த” என்று பகவத் ப்ரதிபக்ஷ பூதரான ஆஸுரப்ரக்ருதிகள் மண்ணுண்ணவும், பகவத் பக்திபரரான தேவப்ரக்ருதிகள் வாழவுமவதரித்த தென்றும். – “மயர்வற மதிநல மருளினன்” என்று அவன் அஜ்ஞானத்தைப் போக்கி ஜ்ஞாந பக்திகளைக் கொடுக்குமாபோலே, இதுவும், “ஒலி புகழாயிரத்திப் பத்து உள்ளத்தை மாசறுக்கும்” என்று மனஸ்ஸுக்கு மாசான அஜ்ஞாநத்தைப் போக்கி, “தெருள் கொள்ளச் சொன்ன வோராயிரம்” என்றும், “தூயவாயிரத்திப் பத்தால் பத்தராவர்” என்றுஞ் சொல்லுகிறபடியே ஜ்ஞாந பக்திகளைக் கொடுக்குமென்றும்; – “அடிமையறக் கொண்டாய்” என்று தனக்கு அநந்யார்ஹ சேஷமாக அவனங்கீகரிக்குமாபோலே, இதுவும், “உரிய தொண்டராக்கு முலகமுண்டாற்கே” என்று ததநந்யார்ஹ சேஷமாக்குமென்றும்; “நோய்களறுக்கும் மருந்தே” என்கிறபடியே அவன் ஸம்ஸார வ்யாதி பேஷஜமாமாப்போலே, இதுவும், “உடைந்து நோய்களை யோடுவிக்கும்” என்று ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களையும் உருமாய்ந்து போம்படி பண்ணுமென்றும்; – “ஏற்றரும் வைகுந்தத்தையருளும் நமக்கு” என்று ஸ்வயத்நத்தால் ப்ராபிக்கவரிதான பரமபதத்தை அவன் கொடுக்குமாபோலே, இதுவும், “வானின் மீதேற்றியருள் செய்து” என்று பரமபத ப்ராப்தியைப் பண்ணுவிக்குமென்றும்; “தன் தாளின்கீழ்ச் சேர்த்து” என்கிறபடியே அவன் பாதோபதாநம் போலே திருவடிகளின் கீழே சேர்த்துக் கொள்ளுமாபோலே, இதுவும், “அருளி யடிக்கீழிருத்தும்” என்று அவன் திருவடிகளின் கீழே சேர்த்து வைக்குமென்றும், – “இன்பக்கதி செய்யும்” என்கிறபடியே அவன் தன்னோ டந்வயித்தார்க்குத் தன்னுடைய அநுபவமாகிற நிரதிசயாநந்த யுக்தமான ப்ராப்யத்தைக் கொடுக்குமாபோலே, இதுவும், “எங்ஙனே சொல்லிலுமின்பம் பயக்கும்” என்று ஸ்வாந்வித சேதநர்க்கு பகவதநுபவாநந்தத்தை யுண்டாக்குமென்றும்; “ஊடு புக்கென தாவியை யுருக்கி யுண்டிடுகின்ற நின்றன்னை” என்கிறபடியே அவன் தன்னை அநுபவிக்கவிழிந்தாரை த்ரவ த்ரவ்யமாம்படி யுருக்குமாபோலே, இதுவும், “ஒன்பதோ டொன்றுக்கு மூவுலகுமுருகும்” என்றும், “ஊற்றின்கண் நுண் மணல் போலுருகா நிற்பர் நீராய்” என்றும் சொல்லுகிறபடியே தன்னை யநுபவிக்கவிழிந்தாரை த்ரவ தரவ்யமாக்கு மென்றும்; இப்படி அவனோடு ஸாம்யமுடைத்தாகையாலே வாச்யனான ஸர்வேச்வரனுடைய “பத்தினாய தோற்றம்” என்கிற பத்தவதாரம் போலே, “தோற்றங்களாயிரம்” என்கிற விதினுடைய பத்துப் பத்தான ஆவிர்ப்பாவமென்கை. இத்தால் வாச்யனான ஈச்வரனோடு பலபடியாலும் ஸாம்யத்தையுடைத்தாகையாலே, அவன்தான் லோக ரக்ஷணார்த்தமாகப் பத்தவதாரமா யவதரித்தாப்போலே இதுவும் லோகரக்ஷணார்த்தமாக பத்துப்பத்தாக அவதரித்த தென்றதாய்த்து.

– (சாதுசனம்) – திருவாய்மொழி (3-5-5) - சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு - என்றும், கீதை (4-8) - பரித்ராணாய – சாதுக்களைக் காப்பதற்காகவும், பாபங்கள் செய்பவர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்க்கிறேன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, பகவான் அவதரித்தான். இதே போன்று திருவாய்மொழியும், (நண்ணா) - திருவாய்மொழி (10-7-5) - நண்ணாவசுரர் நவிவெய்த நல்லவமரர் பொலிவெய்த - என்பதற்கு ஏற்ப, பகவத் பக்தி இல்லாத அசுரத்தன்மை கொண்டவர்கள் மடிவதற்காகவும், பகவத் பக்தி கொண்ட தெய்வீகமானவர்கள் வாழ்வதற்காகவும் அவதரித்தது. – (மயர்வற) – திருவாய்மொழி (1-1-1) - மயர்வற மதிநல மருளினன் – என்பதற்கு ஏற்ப நம்முடைய அஜ்ஞானத்தை அவன் நீக்கி, ஞானம் மற்றும் பக்தியை அளிக்கிறான்; இது போன்றே இந்தத் திருவாய்மொழியும், (மாசறுக்கும் தெருள் கொள்ள பத்தர் ஆவர்) – திருவாய்மொழி (5-2-11) - ஒலி புகழாயிரத்திப் பத்து உள்ளத்தை மாசறுக்கும் - என்பதற்கு ஏற்ப, மனதிற்குத் தோஷமாக உள்ள அஜ்ஞானத்தை நீக்கி, திருவாய்மொழி (2-10-11) தெருள் கொள்ளச் சொன்ன வோராயிரம் - என்றும், திருவாய்மொழி (6-4-11) - தூயவாயிரத்திப் பத்தால் பத்தராவர் – என்றும் கூறுவதற்கு ஏற்ப ஞானத்தையும் பக்தியையும் அளிக்கிறது. (அடிமையற) – திருவாய்மொழி (4-9-6) - அடிமையறக் கொண்டாய் – என்பதற்கு ஏற்ப அவன் நம்மை மற்றவர்கள் யாருக்கும் அடிமை என்று விடாமல், தனக்கு மட்டுமே அடிமை என்று ஏற்றுக்கொள்கிறான்; இது போன்றே இந்தத் திருவாய்மொழியும், (உரிய) – திருவாய்மொழி (6-9-11) - உரிய தொண்டராக்கு முலகமுண்டாற்கே – என்பதற்கு ஏற்ப, வேறு யாருக்கும் நம்மை அடிமையாக்காமல் அவனுக்கு மட்டுமே நம்மை அடிமையாக்குகிறது. (நோய்கள் அறுக்கும்) - திருவாய்மொழி (9-3-3) - நோய்களறுக்கும் மருந்தே – என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் ஸம்ஸாரம் என்னும் நோய்க்கு மருந்தாக உள்ளான்; இது போன்றே இந்தத் திருவாய்மொழியும், (உடைந்து) - திருவாய்மொழி (1-7-11) - உடைந்து நோய்களை யோடுவிக்கும் – என்பதற்கு ஏற்ப, இந்த ஸம்ஸாரம் மூலம் ஏற்படுகின்ற அனைத்துவிதமான பாபங்களையும் உருத்தெரியாமல் அழிக்கிறது (ஏற்றரும்) - திருவாய்மொழி (7-6-10) - ஏற்றரும் வைகுந்தத்தையருளும் நமக்கு – என்பதற்கு ஏற்ப நாம் நம்முடைய முயற்சியால் அடைய இயலாத பரமபதத்தை அவன் நமக்கு அளிக்கிறன்; இதே போன்று இந்தத் திருவாய்மொழியும், (வானின்) – திருவாய்மொழி (8-4-11) - வானின் மீதேற்றியருள் செய்து – என்பதற்கு ஏற்ப பரமபதத்தை அடையும்படிச் செய்கிறது. (தாளின் கீழ்) - திருவாய்மொழி (7-5-10) - தன் தாளின்கீழ்ச் சேர்த்து – என்பதற்கு ஏற்ப அவன் தன்னுடைய திருவடிக்கு ஏற்றதொரு அணை போன்று நம்மைத் தனது திருவடிகளின் கீழே சேர்ந்துக் கொள்கிறான். இதே போன்று இந்தத் திருவாய்மொழியும், (அடிக்கீழ்) - திருவாய்மொழி (8-8-11) – அருளி யடிக்கீழிருத்தும் - என்பதற்கு ஏற்ப அவனுடைய திருவடிகளில் சேர்க்கிறது. (இன்பக்கதி) - திருவாய்மொழி (7-5-11) - இன்பக்கதி செய்யும் - என்பதற்கு ஏற்ப, அவன் தன்னை அடைந்தவர்களுக்குத் தன்னுடைய அனுபவமாக உள்ள எல்லையற்ற ஆனந்தத்துடன் சேர்ந்த பேற்றினை அளிக்கிறான். இது போன்றே இந்தத் திருவாய் மொழியும், (இன்பம் பயக்கும்) - திருவாய்மொழி (7-9-11) - எங்ஙனே சொல்லிலுமின்பம் பயக்கும் – என்பதற்கு எற்ப, தன்னைக் கற்கின்றவர்களுக்கு பகவத் அனுபவம் என்ற எல்லையற்ற ஆனந்தத்தை அளிக்கிறது. (ஊடு புக்கு) - திருவாய்மொழி (5-10-10) - ஊடு புக்கென தாவியை யுருக்கி யுண்டிடுகின்ற நின்றன்னை – என்பதற்கு ஏற்ப அவன், தன்னை அனுபவிக்கவேண்டும் என்று ஈடுபட்டபடி உள்ளவர்களை நீர்ப்பண்டம் போன்று மாற்றுகிறான். இது போன்றே இந்தத் திருவாய்மொழியும், (மூவுலகும் உருகா நிற்பர்) - திருவாய்மொழி (9-5-11) – ஒன்பதோ டொன்றுக்கு மூவுலகுமுருகும் - என்றும், திருவாய்மொழி (6-8-11) - ஊற்றின்கண் நுண் மணல் போலுருகா நிற்பர் நீராய் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, தன்னை அனுபவிப்பவர்களை நீர்ப்பண்டமாக உருக்குகிறது. – (என்னும் ஸாம்யத்தாலே) – இப்படியாகக் கூறப்படுகின்ற ஒப்புமைகள் காரணமாக, (வாச்யன் பத்தினாய தோற்றம் போலே) – திருச்சந்தவிருத்தம் (79) - பத்தினாய தோற்றம் – என்பதான அவனுடைய பத்து அவதாரங்கள் போன்று, (தோற்றங்கள் ஆயிரத்தின் பத்துப் பத்தான இதின் ஆவிர்ப்பாவம்) - திருவாய்மொழி (6-8-11) - தோற்றங்கள் – என்பதற்கு ஏற்ப இதன் பத்துப்பத்தாக உள்ள தோற்றம் உள்ளது. ஆகவே இதன் மூலம் கூறப்படுவதான ஸர்வேச்வரனுடன் பலவிதங்களிலும் ஒப்புமை உடையதாக திருவாய்மொழி உள்ளதால், அவன் இந்த லோகத்தைக் காப்பதற்காகப் பத்து அவதாரங்கள் எடுத்தது போன்று, இந்தத் திருவாய்மொழியும் லோகத்தைக் காப்பாற்றுவதற்காக பத்துப் பத்தாக அவதரித்தது என்று கருத்து.