Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 213)
மூன்றாம் ப்ரகரணம்
அடிதொழுதெழென்றவிதிலே வஸ்து நிர்த்தேச நமஸ்கார ஆசீஸ்ஸுக்களுமுண்டு.
– அவிக்ந பரிஸமாப்தி ப்ரசயகமநார்த்தமாக ப்ரபந்தாரம்பத்திலே ஆசரிக்கப்படும் ஆசீர் நமஸ்க்ரியா வஸ்து நிர்தேசங்களாகிற மங்களாசாரங்கள் இதிலுமுண்டோ வென்னு மாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார் (அடி தொழுது) இத்யாதி.
தொடங்கப்பட்ட ஒரு நூலானது எந்தவிதமான தடையும் இன்றி முழுவதுமாக நிறைவு பெறுவதற்காகவும், விரிவு பெறுவதற்காகவும் அந்த நூலின் தொடக்கத்தில் கூறப்படுகின்ற மங்கல ச்லோகம், நமஸ்காரம், கூறப்படும் பொருள் உரைத்தல் போன்ற மங்களகரமான பலவும் இந்த ப்ரபந்தத்திலும் உள்ளதோ என்னும் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “துயரறு சுடரடி” என்கையாலே வஸ்து நிர்தேசமும், “தொழுது” என்கையாலே நமஸ்காரமும், “எழு” என்கையாலே ஆசீஸ்ஸுமுண்டென்றபடி. இப்படி நாமொரு ப்ரபந்தம் பண்ணவேணுமென்று கருதியிருந்து இவர் செய்ததன்றிக்கே, நிரம்பினவேரி நெளிக்குமாபோலே நிமிகிற வாய்கரை மிடைந்து புறப்பட்ட சொற்கள் இவர் பாசுரத்தாலே லோகத்தைத் திருத்தக் கோலுகிற ஸர்வேச்வரன் நினைவாலே ஸர்வ லக்ஷணோ பேதமாய்த் தலைக்கட்டின ப்ரபந்தமாகையாலே, இம்மங்களாசாரங்களும் கோல்விழுக்காட்டாலே பலித்தன வித்தனை யாகையாலேயாய்த்து, “அடிதொழுதெழு என்றவிதிலே இவையும் பண்ணப்பட்டன" என்னாதே உண்டென்று விட்டது.
– (எழு என்ற இதிலே வஸ்து நிர்த்தேம்) – “துயர் அறு” என்பதன் மூலம் இந்த நூலில் கூறப்படும் பொருள் உரைத்தல், (தொழுது என்ற இதிலே நமஸ்காரம்) - “தொழுது” என்பதன் மூலம் நமஸ்காரமும், (எழு என்ற இதிலே ஆசிஸ்) “எழு” என்பது மூலம் வாழ்த்தும், (உண்டு) - இதில் உள்ளது. “இப்படிப்பட்ட ஒரு ப்ரபந்தத்தை நாம் உண்டாக்கவேண்டும்” என்ற எண்ணம் கொண்டு நம்மாழ்வார் இந்த ப்ரபந்தத்தை ஏற்படுத்தவில்லை. எனவே நிரம்பிய ஏரி ஒன்று நிலை தடுமாறுவது போன்று, தவித்தபடி உள்ள இவருடைய வாய் என்றுள்ள கரையானது உடைந்து, சொற்கள் வெளிப்பட்டன; அந்தச் சொற்களே, “இவருடைய திருப்பாசுரங்கள் மூலம் இந்த உலகத்தைத் திருத்தவேண்டும்” என்று திருவுள்ளம் கொண்ட ஸர்வேச்வரனுடைய எண்ணத்தால், அனைத்துவிதமான இலக்கணங்களும் நன்கு பொருந்திய ப்ரபந்தமாக நின்றன. இதன் விளைவாக வாழ்த்து, நமஸ்காரம் மற்றும் கூறப்பட்ட பொருளை உரைத்தல் ஆகிய மங்களங்கள் அனைத்தும் வெளிப்பட்டன என்றாகிறது. இதன் காரணமாகவே, “அடி தொழுது எழு என்ற இதிலே இவையும் சொல்லப்பட்டன”, என்று கூறாமல், “உண்டு” என்று சூர்ணையில் கூறினார்.