Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 212)

மூன்றாம் ப்ரகரணம்

ரஹஸ்யத்துக்கு ஓரெழுத்தும் அதுக்கு ஓருருவும் போலேயானவற்றிலே, இமையோரதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்தருளினன் விண்ணப்பம் தொழுதெழென்று பஞ்சகத்தோடே, அவித்யாதி ஸ்வரூப ஸ்வபாவ ஆத்மேச்வர பந்த ரக்ஷணக்ரம குண விக்ரஹ விபூதி யோக ததீயாபிமாந உபதேச விஷய அந்யாபதேச ஹேத்வாதிகளும் ஸங்க்ருஹீதம்.

இனி ப்ரதம சரம ப்ரபந்தங்களினுடைய ஸங்க்ரஹங்களான முதல் பாட்டுக்களில் ப்ரதிபாத்யார்த்தங்களை ஸ்பஷ்டமாகவருளிச் செய்கிறார் (ரஹஸ்யத்துக்கு) என்று தொடங்கி.

அடுத்து முதல் ப்ரபந்தம் (திருவிருத்தம்) மற்றும் இறுதி ப்ரபந்தம் (திருவாய்மொழி) ஆகியவற்றின் சுருக்கமாகவே, அவற்றின் முதல் பாசுரங்கள் உள்ளன என்பதால், அந்தப் பாசுரக்களின் மூலம் கூறப்படுவதை விளக்கமாக அருளிச்செய்கிறார்.

– அதாவது, “ஓரெழுத்தோருரு” என்னும்படி திருமந்த்ரமாகிற ரஹஸ்யத்துக்கு ஸங்க்ரஹமாய் “ஓமித்யேகாக்ஷரம்” என்று ஏகாக்ஷரமாயிருக்கிற ப்ரணவமும், “தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய” என்கிறபடியே அந்த ப்ரணவந்தனக்கு ஸங்க்ரஹமாயிருக்கிற அகாரமும் போலே, திருவிருத்தம் திருவாய்மொழியாகிற ப்ரபந்தங்களுக்கு ஸங்க்ரஹங்களான முதல் பாட்டுக்களிலே, “இமையோர் தலைவா” என்றும், “அயர்வறுமமரர்க ளதிபதி” என்றும் ஸூரிஸேவ்யமாய் ஸர்வாதிகமாயிருக்கும் பரஸ்வரூபத்தையும்; “அடியேன்” என்றும், “என் மனனே” என்றும் சேஷபூதமாய் பரிசுத்தாந்த:கரணமாயிருக்கும் ஸ்வஸ்வரூபத்தையும்; “பொய் நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும்” என்றும், “மயர்வு” என்றும் அவித்யாதிகளான விரோதி ஸ்வரூபத்தையும்; “உயிரளிப்பானெந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்றும், “மதிநலமருளினன்” என்றும் லோக ரக்ஷணார்த்தமாக அநேகாவதாரங்களைப் பண்ணின ஸர்வேச்வரனுடைய க்ருபையே உபாயமென்று உபாய ஸ்வரூபத்தையும்; “செய்யும் விண்ணப்பம்” என்றும், “தொழுதெழு” என்றும் சேஷ விஷயத்தில் கரண த்ரயத்தாலும் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தமென்று பல ஸ்வரூபத்தையுமாகக் கொண்டு ஸங்க்ரஹித்துச் சொன்ன அர்த்தபஞ்சகத்தோடே, – “பொய்நின்ற ஞானமும்” இத்யாதியாலே அவித்யாதிகளைச் சொல்லுகிறவளவில், உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அஸத்ய சப்த வாச்யமான அசேதந விஷயத்தி லாத்ம ஜ்ஞாநமும், அந்த தேஹாத்மாபிமாந மடியான ஸாம்ஸாரிக துஷ்கர்ம ப்ரவ்ருத்தியும், அக்கர்மடியாக வரக்கடவதான மாம்ஸாஸ்ருகாதி மல ரூப தேஹ ஸம்பந்தமு மென்றவற்றினுடைய ஸ்வரூபங்களும். விப்ரதிபத்தி ஹேதுத்வம், ஸம்ஸார ஹேதுத்வம், ஸ்வரூப திரோதாயகத்வம், உத்தரோத்தரங்களில் பூர்வ பூர்வகாரணத்வம், “இனியாமுறாமை” என்கையாலே அவற்றின் அநாதித்வம், ஸோபாதிகத்வம், “மயர்வற மதிநலமருளினன்” என்கையாலே அவற்றின் ஜ்ஞாந நிவர்த்த்யத்வம் முதலான ஸ்வபாவங்களும், – “இமையோர் தலைவா … அடியேன்”, “அதிபதி … அடிதொழுது” என்கையாலே ஆத்மாவுக்கும் ஈச்வரனுக்குமுண்டான சேஷ சேஷி பாவ ஸம்பந்தமும்; “உயிரளிப்பானெந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்றும், “மயர்வற மதிநலமருளினன்” என்றும் அநேகாவதாரங்களைப் பண்ணி ரக்ஷிக்கும்படியையும்; ஸம்ஸார ஹேதுவான அஜ்ஞாநத்தைப் போக்கி உஜ்ஜீவந ஹேதுவான ஜ்ஞாந பக்திகளைத் தன் க்ருபையாலே தந்தபடியையும் சொல்லுகையாலே ஈச்வரனுடைய ரக்ஷண க்ரமமும், – “உயர்வறவுயர் நலம் … துயரறு சுடரடி”, “இமையோர்”, “அயர்வறுமமரர்கள்” என்று குணவிக்ரஹ விபூதிகளும், அந்த ஸூரிகளை முன்னிடுகையாலே ததீயாபிமானமும், “நின்று கேட்டருளாய்”, “தொழுதெழென் மனனே” என்று நெஞ்சுபோலே பவ்யனான வீச்வரனும் அப்படி பவ்யரானாரு முபதேச விஷயமென்னுமதும், – “நலமருளினன்” என்று பக்தியைத் தந்தானென்கையாலே அந்யாபதேசத்துக்கு ஹேதுவான பக்தியும் முதலான அர்த்தங்களும் ஸங்க்ரஹேண சொல்லப்பட்டனவென்கை. (அந்யாபதேச ஹேத்வாதிகளும்) என்றவிடத்தில் ஆதி சப்தத்தாலே மற்றும் வேதாந்த ஸங்க்ரஹ தாத்பர்யங்களான அர்த்தங்கள் பலவுமிவற்றிலே ஸங்க்ருஹீதங்க ளென்னுமிடம் காட்டப்பட்டது.

(ரஹஸ்யத்துக்கு ஓர் எழுத்துப்போலே) – பெரியதிருமொழி (6-1-5) – ஓரெழுத்தோருரு - என்பதற்கு ஏற்ப திருமந்த்ரமாக உள்ள இரகசியத்தின் சுருக்கமாகவும், ஓமித்யேகாக்ஷரம் - ஓம் என்பது ஒரு அக்ஷரம் – என்பதற்கு ஏற்பவும் உள்ளதான ஒரு எழுத்து கொண்ட ப்ரணவம் போன்றும். (அதுக்கு ஓர் உருவும் போலே) - தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய – அதன் ஆதாரமாக உள்ளதான- என்பதற்கு ஏற்ப ப்ரணவத்தில் கூறப்பட்டதற்கு சுருக்கமாக உள்ள “அ” என்று எழுத்து போன்றும். (அவற்றிலே) – திருவிருத்தத்திற்குச் சுருக்கமான அதன் முதல் பாசுரத்திலும், திருவாய்மொழியின் சுருக்கமான அதன் முதல் பாசுரத்திலும். – (இமையோர் அதிபதி) திருவிருத்தத்தில் (1) – இமையோர் தலைவா - என்றும், திருவாய்மொழியில் (1-1-1) – அயர்வறும் அமரர்கள் அதிபதி - என்றும் நித்யஸூரிகளால் வணங்கப்படுவதும், அனைத்தைக் காட்டிலும் மிகவும் உயர்ந்ததாக உள்ளதும் ஆகிய பரஸ்வரூபத்தையும். (அடியேன் மனனே) - திருவிருத்தத்தில் (1) – அடியேன் - என்றும், திருவாய்மொழியில் (1-1-1) – என் மனனே - என்றும் உள்ளதன் மூலம், அத்தகைய பரஸ்வரூபத்திற்கு அடிமையாகவும், பரிசுத்தமான அந்தகரணத்தைக் கொண்டதாகவும் உள்ள ஆத்ம ஸ்வரூபத்தையும். (பொய் மயர்வு) - திருவிருத்தத்தில்(1) - நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும் – என்றும், திருவாய்மொழியில் (1-1-1) - மயர்வு – என்றும் உள்ளதன் மூலம், அறியாமை போன்றதான விரோதி ஸ்வரூபத்தையும். (பிறந்து அருளினன்) - திருவிருத்தத்தில் (1) – உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் - என்றும், திருவாய்மொழியில் (1-1-1) – மதிநலம் அருளினன் - என்றும் உள்ளதன் மூலம், இந்த லோகத்தைக் காப்பாற்றுவதற்காகப் பல அவதாரங்கள் செய்தருளிய ஸர்வேச்வரனுடைய க்ருபை என்பதே உபாயமாகும் என்று உபாய ஸ்வரூபத்தையும். (விண்ணப்பம் தொழுது எழு) – திருவிருத்தத்தில் (1) – செய்யும் விண்ணப்பம் – என்றும், திருவாய்மொழியில் (1-1-1) – தொழுது எழு – என்றும் உள்ளதன் மூலம், எஜமானனாக உள்ள அவன் விஷயத்தில் மூன்று கரணங்களாலும் செய்யப்படும் கைங்கர்யமே உயர்ந்த புருஷார்த்தம் என்று பலனின் ஸ்வரூபத்தையும். (என்ற பஞ்சகத்தோடே) – இப்படியாகச் சுருக்கமாக உரைக்கப்பட்ட அர்த்தபஞ்சகத்துடன் சேர்த்து. – (அவித்யாதி ஸ்வரூபம் ஸ்வபாவம்) திருவிருத்தத்தில் (1) - பொய் நின்ற ஞானமும் – என்பது போன்றவை மூலம் அவித்யை முதலானவை கூறப்படும்போது, உற்பத்தி மற்றும் அழிவு ஆகிய இரண்டையும் கொண்டது என்பதால் “அஸத்யம்” என்று கூறலாம்படி உள்ளதான அசேதனமாகிய சரீரத்தையே ஆத்மா என்று தவறாக எண்ணும் ஞானமும், இவ்விதம் சரீரத்தையே ஆத்மா என்று எண்ணுவதால் ஏற்படுகின்ற ஸம்ஸாரத்தில் விளைவதான தீயவற்றைச் செய்தலும், அத்தகைய தீய கர்மங்கள் காரணமாக ஏற்படக்கூடியதான மாமிசம் மலம் போன்றதால் ஆகிய சரீர ஸம்பந்தமும் என்பதாக உள்ள இவற்றுடைய ஸ்வருபங்களும்; இவ்விதம் சரீரமே ஆத்மா என்று எண்ணும் விபரீதமாம ஞானத்திற்குக் காரணமாக இருத்தல், ஸம்ஸாரத்திற்குக் காரணமாக இருத்தல், ஆத்மஸ்வரூபத்தை மறைத்தல், அடுத்தடுத்த வரக்கூடிய தாழ்வுகளுக்கு முன்பு செய்த பலவும் காரணமாக இருத்தல், திருவிருத்தம் (1) – இனி யாம் உறாமை - என்பதால் இவ்விதம் உள்ள பலவும் எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி இருத்தல், அவை ஒரு உபாதியால் ஏற்படுதல், திருவாய்மொழி (1-1-1) – மயர்வற மதிநலம் அருளினன் - என்பதால் சரியான ஞானம் மூலம் இவை அனைத்தும் விலகுவதாக இருத்தல் போன்ற பலவிதமான ஸ்வபாவங்களும். – (ஆத்ம ஈச்வர பந்தம்) – திருவிருத்தம் (1) - இமையோர் தலைவா … அடியேன் – என்றும், திருவாய்மொழி (1-1-1) - அதிபதி … அடிதொழுது – என்றும் கூறுவதன் மூலம், ஆத்மாவிற்கும் ஈச்வரனுக்கும் உல்ளதான “அடிமை - எஜமானன்” என்ற ஸம்பந்தமும். (ரக்ஷா க்ரமம்) – திருவிருத்தம் (1) - உயிரளிப்பானெந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் - என்றும், திருவாய்மொழி (1-1-1) - மயர்வற மதிநலமருளினன் - என்றும் கூறுவதால், பலவிதமான அவதாரங்களை எடுத்து அனைத்தையும் காப்பாற்றும் விதமும், ஸம்ஸாரத்திற்குக் காரணமாக உள்ள அவித்யையை நீக்கி மேலே ஏறுவதற்குக் காரணமாக உள்ள ஞானம் மற்றும் பக்தி போன்றவற்றைத் தனது க்ருபையால் அளித்த விதமும் என்பதான ஈச்வரன் காப்பாற்றும் வழிகளும். (குண விக்ரஹ விபூதி யோகம்) – திருவாய்மொழி (1-1-1) - உயர்வற உயர் நலம் - என்பதால் குணங்களும், திருவாய்மொழி (1-1-1) – துயர் அறு சுடரடி - என்பதால் திருமேனியும்; திருவிருத்தம் (1) - இமையோர் - என்றும், திருவாய்மொழி (1-1-1) -அயர்வறும் – என்றும் கூறுவதன் மூலம் நித்யஸூரிகளைக் கூறுவதால் அடியார்களுடைய விருப்பமும்; (உபதேச விஷயம்) - திருவிருத்தம் (1) - நின்று – என்றும், திருவாய்மொழி (1-1-1) - தொழுது எழு என் மனனே – என்றும் கூறுவதால் மனம் போன்று தனக்குள் நிற்கின்ற ஈச்வரனும், அவ்விதம் அடக்கியுள்ளவர்களும் தம்முடைய இந்த உபதேசத்திற்கு விஷயம் ஆகும் என்ற கருத்தும். (அந்யாபதேச ஹேத்வாதிகளும்) – திருவாய்மொழி (1-1-1) – நலம் அருளினன் - என்று பக்தியை அளித்தருளினான் என்று கூறுவதால், தாயாருடைய கூற்றாகவும், தோழியுடைய கூற்றாகவும், நாயகியின் கூற்றாகவும் எனப் பலவிதமான உபதேசங்கள் வடிவிலுள்ள திருப்பாசுரங்கள் வெளிப்படுத்துவதற்கு காரணமாக உள்ள பக்தி போன்ற பலவும், (ஸங்க்ருஹீதம்) - சுருக்கமாக உரைக்கப்பட்டன. “அந்யாபதேச ஹேத்வாதி” என்பதிலுள்ள “ஆதி” என்பதன் மூலம், வேதாந்தங்களில் சுருக்கமாக உரைக்கப்பட்ட பலவும் இவற்றிலும் சுருக்கமாக உரைக்கப்பட்டன என்பதும் கூறப்பட்டது.