Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 211)

மூன்றாம் ப்ரகரணம்

ஆகவிப்படி த்வயார்த்த ப்ரதிபாதகதயா தீர்க்க சரணாகதியாயிருக்கிற திருவாய்மொழிக்கு மற்றுமாசார்யர்களருளிச் செய்யும் அர்த்தயோஜனைகளை யருளிச் செய்கிறார் (மூன்றில் சுருக்கிய) என்று தொடங்கி.

– அதாவது, மந்த்ரச்லோகங்களில் ஸங்க்ரஹேணோக்தங்களான அர்த்த விசேஷங்களை த்வயத்திலே விவரிக்குமாப்போலே, பூர்வ ப்ரபந்த த்ரயத்திலும் ஸங்க்ரஹேண சொல்லப்பட்ட அர்த்தபஞ்சகத்தையும், ச்ருதிச் சாயையாலே அந்வயரூபேண ஸ்வாநுபவ முகத்தாலே பரத்வத்தில் பரத்வத்தை ப்ரதிபாதித்த “உயர்வறவுயர் நலமும்”, இதிஹாஸ புராண ப்ரக்ரியையாலே அந்வய வயதிரேகங்க ளிரண்டாலும் பரோபதேச முகத்தாலே அவதாரத்திலே பரத்வத்தை ப்ரதிபாதித்த “திண்ணன் வீடும்”, மோக்ஷ ப்ரதத்வ கதநத்தாலே பரத்வத்தை ப்ரதிபாதித்த “அணைவதரவணையும்”, அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை ப்ரதிபாதித்த “ஒன்றுந் தேவுமா”கிற நாலு திருவாய்மொழியாலும் பர ஸ்வரூபம். – பகவச்சேஷத்வத்திலும், தத்காஷ்டையான பாகவத சேஷத்வமே ஆத்மாவுக்கு உத்தேச்யமென்று ப்ரதிபாதித்த பயிலுஞ் சுடரொளியும், சேஷத்வ பஹிர்ப்பூதங்களான ஆத்மாத்மீயங்கள் த்யாஜ்யமென்கிற வயதிரேகத்தாலே சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபமென்று ப்ரதிபாதித்த ஏராளுமிறையோனும், பகவானுக்கு இவ்வாத்ம வஸ்து ப்ரகாரதயா சேஷமாய் ப்ரக்ருதே: பரமாய் ஜ்ஞாநாநந்த லக்ஷணமாயிருக்குமென்னுமத்தை ப்ரதிபாதித்த கண்கள் சிவந்தும், அந்ய சேஷத்வ ப்ரஸங்கமும் அஸஹ்யமாம்படியான அதின் அநந்யார்ஹத்வத்தை ப்ரதிபாதித்த கருமாணிக்க மலையுமாகிற நாலு திருவாய்மொழியாலும் ஸ்வஸ்வரூபமும்; பகவத் வ்யதிரித்த விஷயங்களைப் பற்றுகைக் குடலான அஹங்கார மமகாரங்கள் த்யாஜ்யமென்ற வீடுமின் முற்றவும், அஸேவ்ய ஸேவை த்யாஜ்யமென்ற சொன்னால் விரோதமும், ஐச்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யமென்ற ஒரு நாயகமும், சரீர ஸம்பந்த நிபந்தநமாக வரும் பரிக்ரஹங்கள் த்யாஜ்யமென்ற கொண்ட பெண்டிருமாகிற நாலு திருவாய்மொழியாலும் விரோதி ஸ்வரூபமும். – “நோற்ற நோன்பிலேன்” என்று ஆகிஞ்சந்ய பூர்வகமாக “ஆறெனக் சரணாகத் தந்தொழிந்தாய்” என்ற நோற்ற நோன்பும், “களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்” என்று அநந்ய கதித்வ பூர்வகமாக “கழல்களவையே சரணாகக் கொண்ட” என்ற ஆராவமுதும், “வைகலும் வினையேன் மெலிய” என்று பக்தி பாரவச்யம் முன்னாக “நம்பெருமானடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்” என்ற மானேய் நோக்கும், “எனதாவியை நின்று நின்றுருக்கி யுண்கின்ற” என்று தரித்து நின்று அவன் குணங்களை அநுஸந்திக்க மாட்டாத சைதில்யம் செல்லா நிற்க, “நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறு மேகசிந்தையனாய்” என்ற பிறந்தவாறுமாகிற நாலு திருவாய்மொழியாலும் உபாய ஸ்வரூபமும். – “தனக்கேயாக” என்று கைங்கர்யத்தில் ஸ்வார்த்ததா நிவ்ருத்தியை யபேக்ஷித்த எம்மா வீடும், ஸர்வகாலாவிசிஷ்டமான ஸகல சேஷ வ்ருத்திகளையும் பண்ண வேணுமென்று பாரித்த ஒழிவில் காலமும், அதுதான் பாகவத் கைங்கர்ய பர்யந்தமாக வேணுமென்று மநோரதித்த நெடுமாற்கடிமையும், அது தன்னில் பர ஸம்ருத்த்யேக ப்ரயோஜநத்வத்தைச் சொன்ன வேய்மரு தோளிணையுமாகிற நாலு திருவாய்மொழியாலும் பல ஸ்வரூபமுமாகக் கொண்டு. இருபது திருவாய்மொழியிலே விசதமாக ப்ரதிபாதித்து, மற்றை யெண்பது திருவாய்மொழியாலும் அது தன்னையே விஸ்தரிக்கையாலே, அர்த்த பஞ்சகத்தையும் இப் ப்ரபந்தத்துக்கு ப்ரமேயமென்றும்; “மயர்வற மதிநல மருளினன்” என்று தொடங்கி, “அவாவற்று வீடு பெற்ற” என்று தலைக்கட்டுகையாலே, அவ்வைந்திலும் வைத்துக் கொண்டு ப்ரதாநமான உபாயோபேயங்களிரண்டையு மிதுக்கு ப்ரமேயமென்றும்; “தொழுதெழென் மனனே”, “விருப்பே பெற்றமுதமுண்டு களித்தேன்”, “மேலைத் தொண்டு களித்து அந்தி தொழுஞ் சொல்லுப் பெற்றேன்” என்று சொல்லப்படுகிற “பத்தாஞ்ஜலிபுடத்வ ஹ்ருஷ்டத்வ நம இத்யேவ” வாதித்வங்களாகிற முக்த லக்ஷணத்தாலும், “விபத்யவா” என்கிறவர்களைப் போலே, “சொற்பணிசெயாயிரம்” என்று சொல்லப்படுகிற வாசிக வ்ருத்தியாலும், அவ்விரண்டிலும் வைத்துக் கொண்டு, உபேயமொன்றையுமே இதுக்கு ப்ரமேயமென்றும் சொல்லு மென்கை. (இருபதிலே விசதமாக்கி யெண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும் இதுக்கு ப்ரமேயமென்னும்) என்றவிது, “இப்ப்ரபந்தங்களில் ஸூக்திகள், ப்ராப்யனான வெம்பெருமானுடைய ஸ்வரூப ப்ரதிபாதந பரமாயிருக்கும் சில; ப்ராப்தாவான ப்ரத்யகாத்ம ஸ்வரூப விஷயமாயிருக்கும் சில; ப்ராப்த்யுபாயத்தைச் சொல்லும் சில; பலத்தைச் சொல்லும் சில; ப்ராப்தி விரோதியைச் சொல்லும் சில; அவவிஷ்டமானவை இவற்றுக்கு உபபாதகங்களாயிருக்கும்”, என்று ஈட்டில் யோஜித்த க்ரமம். உபாயோ பேயங்களிரண்டையுமிதுக்கு ப்ரமேயமென்னு மென்றவிது, இவையிரண்டுமே ப்ரதாந ப்ரமேயம்; இவ்வுபாயோபேயங்களுக்கு அதிகாரி இன்னானென்கைக்காக ப்ரத்யகாத்ம ஸ்வரூபமும், உபாய பூதனும் உபேய விஷயமும் இன்னாரென்கைக்காக பர ஸ்வரூபமும், உபேய ப்ரதிபந்தகமாய் உபாய நிவர்த்யமாயிருக்குமது இன்னதென்கைக்காக விரோதி ஸ்வரூபமும் சொல்லுகிற வித்தனையென்று நினைத்து. – உபேயமொன்று மிதுக்கு ப்ரமேயமென்னுமென்றவிது “இவற்றி லுத்தேச்யம் பலம். ததர்த்தமாக மற்றுள்ள நாலர்த்தமும் சொல்லுகிறது'' என்று ஈட்டில் சொன்னபடியே கைங்கர்யமே ப்ரதாநம். மற்றை நாலுஞ்சொன்னது கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியையும் ததாச்ரயத்தையும் தத்விரோதியையும் அவ்விரோதி நிவர்த்தகத்தையும் அறிவிக்கைக்காக வாகையாலே தச்சேஷமாகச் சொன்ன வித்தனையென்று நினைத்து.

இவ்விதம் த்வய மந்த்ரத்தின் பொருளை உரைப்பதும், தீர்க்க சரணாகதியாக உள்ளதும் ஆகிய திருவாய்மொழிக்கு, மற்ற ஆசார்யர்கள் அருளிச்செய்த சிறப்பான ஆழ்பொருள்களை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார். – (மூன்றில் சுருக்கிய ஜந்தையும்) - திருமந்த்ரம் மற்றும் சரம ச்லோகம் ஆகியவற்றில் சுருக்கமாக உரைக்கப்பட்ட ஆழ்பொருள் கருத்துக்களை, த்வயம் விவரிக்கிறது; இது போன்றே முதல் மூன்று ப்ரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம் மற்றும் பெரியதிருவந்தாதி ஆகியவற்றில் சுருக்கமாக உரைக்கப்பட்டதான அர்த்தபஞ்சகத்தை. (உயர்திண் அணை ஒன்று) - ச்ருதி சாயையாக உள்ளதால், தனது நேரடியான அனுபவம் காரணமாக பரத்வத்தில் உள்ள பரத்வத்தை வெளிப்படுத்துகின்ற திருவாய்மொழி (1-1-1) – உயர்வற உயர்நலம் - என்ற திருவாய்மொழியும்; இதிகாசம் மற்றும் புராணங்களில் கூறப்பட்ட பலவற்றுடன் ஒத்துப் போவதாலும், எதிர்மறையாக உரைப்பதாலும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும்விதமாக அவதாரத்தில் உள்ள பரத்வத்தை வெளிப்படுத்துகின்ற திருவாய்மொழி (2-2-1) - திண்ணன் வீடு – என்ற திருவாய்மொழியும்; மோக்ஷத்தை அளிக்கின்ற தன்மையைத் தெளிவாக வெளிப்படுத்துவதால் பரத்வத்தை உரைக்கின்ற திருவாய்மொழி (2-8-1) - அணைவது அரவணை – என்ற திருவாய்மொழியும்; அர்ச்சாவதாரத்தில் பரத்வத்தை உரைப்பதான திருவாய்மொழி (4-10-1) - ஒன்றும் தேவும் - என்ற திருவாய்மொழியும் ஆகிய நான்கின் மூலம், அர்த்தபஞ்சகத்தின் முதல் கருத்தான “பர ஸ்வரூபம்” என்பது கூறப்பட்டது. (பயில் ஏறு கண் கரு) - ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ளதைக் காட்டிலும், அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருத்தலே ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஏற்புடையது என்பதை வெளிப்படுத்துகின்ற திருவாய்மொழி (3-7-1) - பயிலும் சுடரொளி - என்ற திருவாய்மொழி; இப்படிப்பட்ட அடிமைத்தனத்தை ஏற்காத ஆத்மா, அந்த ஆத்மாவுடன் ஸம்பந்தம் கொண்டுள்ளவை ஆகிய அனைத்தும் கைவிடத்தக்கவையே ஆகும் என்று எதிர்மறையாக உரைப்பதன் மூலம், ஆத்மாவிற்கு அடிமைத்தனமே ஏற்புடையது என்பதை வெளிப்படுத்துவதான திருவாய்மொழி (4-8-1) - ஏறாளும் இறையோனும் – என்ற திருவாய்மொழி; பகவானுக்கு அந்த ஆத்மா சரீரமாக உள்ளதால், அவனுக்கு அடிமையாகவும், சரீரத்தைக் காட்டிலும் வேறாக உள்ளதால் ஞானம் மற்றும் ஆனந்தமாகவும் உள்ளதையே லக்ஷணமாகக் கொண்டது என்பதை வெளிப்படுத்துகின்ற திருவாய்மொழி (8-8-1) - கண்கள் சிவந்து - என்ற திருவாய்மொழி; மற்றொரு பொருளுக்கு இந்த ஆத்மா அடிமை என்று கூறுவதும் கூடத் தவறு என்பதையும், இந்த ஆத்மா அவனுக்கு மட்டுமே அடிமை என்பதையும் வெளிப்படுத்துகின்ற திருவாய்மொழி (8-9-1) - கருமாணிக்க மலை போல் – என்ற திருவாய்மொழி என்பதான நான்கு திருவாய்மொழிகளும், அர்த்தபஞ்சகத்தில் உள்ள ஆத்மாவின் ஸ்வரூபம் இன்னது என்பது குறித்துக் கூறுகின்றன. (வீடு சொன்னால் ஒரு கொண்ட) - ஸர்வேச்வரனைத் தவிர உள்ள மற்ற பொருள்களைப் பற்றியிருப்பதற்குக் காரணமாக உள்ள அஹங்காரம் மற்றும் மமகாரம் போன்றவை கைவிடப்பட வேண்டியவை என்பதைக் கூறிய திருவாய்மொழி (1-2-1) - வீடுமின் முற்றவும் - என்ற திருவாய்மொழி; அடிமைத்தனம் செய்யத்தகாதவர்களுக்கு அடிமைத்தன்மை செய்தல் என்பது கைவிடப்பட வேண்டியதாகும் என்று கூறிய திருவாய்மொழி (3-9-1) - சொன்னால் விரோதம் - என்ற திருவாய்மொழி; ஐச்வர்யமும் கைவல்யமும் துறக்கப்பட வேண்டியவை என்பதைக் கூறுகின்ற திருவாய்மொழி (4-1-1) – ஒரு நாயகமாய் – என்ற திருவாய்மொழி; சரீரத் தொடர்பு காரணமாக ஏற்படுகின்ற உறவுகள் அனைத்துமே கைவிடவேண்டியவை என்று கூறுகின்ற திருவாய்மொழி (9-1-1) – கொண்ட பெண்டீர் - என்ற திருவாய்மொழி என்பதான நான்கு த்ருவாய்மொழிகளும் அர்த்தபஞ்சகத்தில் உள்ளதான விரோதி ஸ்வரூபத்தைக் குறித்துக் கூறுகின்றன. – (நோற்ற நாலும்) – திருவாய்மொழி (5-7-1) - நோற்ற நோன்பிலேன் – என்பதன் மூலம் “என்னிடம் எந்தவிதமான கைம்முதல் இல்லை (ஆகிஞ்சந்யம்)” என்பது தொடக்கமாக, ஆறெனக் சரணாகத் தந்தொழிந்தாய் – என்று கூறிய, (5-7) – நோற்ற நோன்பிலேன் - என்ற திருவாய்மொழி; (5-8-8) - களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன் - என்று வேறு எந்த கதியும் இல்லாமை என்பதை முன்னிறுத்தி, (5-8-11) - கழல்களவையே சரணாகக் கொண்ட - என்று கூறிய, (5-8) - ஆராவமுதே – என்று திருவாய்மொழி; (5-9-1) - வைகலும் வினையேன் மெலிய – என்று பக்தியில் வசப்பட்டு நின்ற நிலையை முன்னிறுத்தி, (5-9-11) – நம்பெருமானடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் – என்று கூறிய, (5-9) – மானேய் நோக்கும் - என்ற திருவாய்மொழி; (5-10-1) - எனதாவியை நின்று நின்றுருக்கி யுண்கின்ற - என்று தரித்து நின்று அவனுடைய குணங்களை எண்ணியபடி இருக்க இயலாமல் நிலைகுலைந்து சென்றதை உரைத்து, (5-10-11) – நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறு மேகசிந்தையனாய் - என்று கூறிய (5-10-1) – பிறந்தவாறும் - என்ற திருவாய்மொழி ஆகிய நான்கு திருவாய்மொழிகளும், அர்த்தபஞ்சகத்தில் உள்ள உபாய ஸ்வரூபத்தைக் குறித்துக் கூறுகின்றன. (எம்மா ஒழிவில் நெடு வேய்) திருவாய்மொழி (2-9-1) – தனக்கேயாக - என்று கைங்கர்யம் செய்யும்போது என் பொருட்டுச் செய்வதாகிய இன்பம் ஏதும் இருத்தல் கூடாது என்று அதன் விலக்கத்தை விரும்பிய (2-9-1) – எம்மா வீடு - என்ற திருவாய்மொழி; (3-3-1) – ஒழிவில் காலம் எல்லாம் - என்று அனைத்து காலங்களிலும் அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்யவேண்டும் என்று விண்ணப்பித்த (3-3-1) – ஒழிவில் காலம் எல்லாம் - என்ற திருவாய்மொழியும்; அத்தகைய கைங்கர்யம் என்பது, பாகவதர்கள் முடிய நீண்டிருக்க வேண்டும் என்று விண்ணப்பித்த (8-10-1) – நெடுமாற்கு - என்ற திருவாய்மொழி; அப்படிப்பட்ட பாகவத கைங்கர்யத்திலும் பகவானுடைய சிந்தனை என்பதே பேறாக இருத்தல் வேண்டும் என்பதைக் கூறிய (10-3-1) – வேய்மரு தோளிணை - என்று திருவாய்மொழி ஆகிய நான்கு திருவாய்மொழிகளும் அர்த்தபஞ்சகத்தில் உள்ள பலனின் ஸ்வரூபம் குறித்து உரைத்தன. – (இருபதிலே விசதமாக்கி) - இப்படியாக உள்ள இருபது திருவாய்மொழிகளில் அர்த்தபஞ்சகத்தை விரிவாக அருளிச்செய்து, (எண்பதிலே பரப்புகையாலே) - மீதம் உள்ள எண்பது திருவாய்மொழிகள் மூலம், அந்த அர்த்தபஞ்சகத்தைக் குறித்தே மேலும் விரிவாக உரைப்பதால், (ஐந்தையும் இதுக்கு ப்ரமேயம் என்னும்) - அந்த அர்த்தபஞ்சகம் என்பது இந்தத் திருவாய்மொழியில் கூறப்பட்டவை என்று உரைப்பார்கள். (அருளினன் வீடு பெற்ற என்கையாலே ஐந்திலும் இரண்டை இதுக்கு ப்ரமேயம் என்னும்) – மயர்வற மதிநல மருளினன் - என்று தொடங்கி, அவாவற்று வீடு பெற்ற - என்று முடிப்பதன் காரணமாக, அர்த்தபஞ்சகத்தில் மிகவும் முக்கியமான உபாயம் மற்றும் உபேயம் ஆகிய இரண்டும் திருவாய்மொழியில் கூறப்பட்டவை என்று உரைப்பார்கள். (தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் என்கிற முக்த லக்ஷணத்தால்) – திருவாய்மொழி (1-1-1) - தொழுதெழென் மனனே - என்றும்; (10-8-6) – விருப்பே பெற்றமுதமுண்டு களித்தேன் – என்றும், (10-8-7) - மேலைத் தொண்டு களித்து அந்தி தொழுஞ் சொல்லுப் பெற்றேன் - என்றும் கூறப்படுவதான, பத்தாஞ்ஜலிபுடத்வ ஹ்ருஷ்டத்வ நம இத்யேவ – எப்போதும் கைகளைக் குவித்து, மகிழ்வுடன் “நம:” என்று உச்சரித்தபடி இருத்தல் - என்பதற்கு ஏற்ப உள்ள முக்தர்களுடைய லக்ஷணம்; (பணி செய் என்கிற விருத்தியால்) - விபந்யவ: - துதிப்பதையே பண்பாகக் கொண்டவர்கள் – என்றுள்ள நித்யஸூரிகள் போன்று, (1-10-11) - சொற்பணிசெயாயிரம் - என்று கூறும் திருவாய்மொழியை உரைப்பதான சொல்லால் செய்யப்படும் கைங்கர்யம்; (இரண்டில் ஒன்று இதுக்கு ப்ரேமேயம் என்னும்) - இந்த இரண்டின் மூலமும், அர்த்தபஞ்சகத்தில் உள்ள உபேயம் குறித்து உரைப்பதே திருவாய்மொழியாகும் என்றும் சிலர் கூறுவர். (இருபதிலே விசதமாக்கி யெண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும் இதுக்கு ப்ரமேயமென்னும்) - இப்படியாகக் கூறப்பட்டதன் கருத்து என்னவென்றால், “இந்த ப்ரபந்தங்களில் உள்ள சில பாசுரங்கள், அடையவேண்டிய இலக்காக உள்ள எம்பெருமானுடைய ஸ்வரூபத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும்; ஒரு சில பாசுரங்கள், அடைபவனாகிய ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை குறித்தே இருப்பதாகும்; ஒரு சில பாசுரங்கள், எம்பெருமானை அடைய வைக்கின்ற உபாயம் குறித்து உரைப்பதாக இருக்கும்; ஒரு சில பாசுரங்கள் பலன்களையும், ஒரு சில பாசுரங்கள் அடையவேண்டிய இலக்கை அடையவிடாமல் தடுக்கின்ற விரோதிகள் குறித்து உரைப்பதாக இருக்கும்; இவற்றில் மீதம் உள்ளவை, இவை அனைத்தையும் குறித்து மேலும் உதவும் விதத்தில் கூறுவதாக இருக்கும்”, என்பதாக ஈடு வ்யாக்யானத்தில் கூறப்பட்டதையே உரைப்பதாகும். (உபாய உபேயங்கள் இரண்டையும் இதுக்கு ப்ரமேயம் என்னும்) – இப்படியாகக் கூறப்பட்டது என்ன? உபாயம் மற்றும் உபேயம் ஆகிய இரண்டுமே இந்த ப்ரபந்தங்களில் முக்கியமாகவும் முதன்மையாகவும் கூறப்பட்டவை ஆகும்; இத்தகைய உபாயம் மற்றும் உபேயம் ஆகியவற்றின் அதிகாரி இன்னவன் ஆனான் என்று விளக்குவதற்காகவே ஜீவாத்மாவின் ஸ்வரூபம் குறித்து உரைக்கப்படுகிறது; உபாயமாக உள்ளவனும், பலனின் விஷயமாக உள்ளவனும் இன்னவன் ஆவான் என்று கூறுவதற்காகவே பரமாத்மாவின் ஸ்வரூபம் உரைக்கப்படுகிறது; அடையவிடாமல் தடுப்பதும், உபாயத்தின் மூலம் விலக்கப்படுவதும் இதுவே ஆகும் என்று விளக்குவதற்காகவே விரோதி ஸ்வரூபம் கூறப்பட்டது. இந்தக் கருத்துக்களையே இங்கு அருளிச்செய்கிறார் என்று கூற எண்ணியே இவ்விதம் உரைத்தார். (உபேயம் ஒன்றுக்கும் இதுக்கு ப்ரமேயம்) - இதன் மூலம் கூறப்பட்டது என்ன? “இந்த அனைத்திலும் கூற வந்தது பலன் குறித்தே ஆகும். அத்தகைய விஷயத்தை விளக்குவதற்காகவே, மற்றும் நான்கு விஷயங்களும் (அதாவது அர்த்தபஞ்சகத்தில் கூறப்படும் பலன் தவிர்த்துள்ள மற்ற நான்கு விஷயங்கள்) கூறப்பட்டன”, என்று ஈட்டில் கூறுவதற்கு ஏற்ப, கைங்கர்யமே மிகவும் முதன்மையானது. மற்ற நான்கு விஷயங்கள் குறித்து ஏன் கூறப்பட்டது என்றால், “கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்பவன், கைங்கர்யத்தைச் செய்பவன், கைங்கர்யத்திற்குத் தடையாக இருப்பவை, அத்தகைய தடையை நீக்கவல்ல வழி” போன்ற பலவற்றையும் உணர்த்துவதற்காக என்பதால், அந்தப் பலன் என்பதற்கு உறுப்பாக இவை அனைத்தும் கூறப்பட்டது என்ற கருத்து வெளிப்படுத்தப்படுகிறது.