Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 210)
மூன்றாம் ப்ரகரணம்
த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி யென்றது ஸாரஸங்க்ரஹத்திலே.
சரமப்ரபந்தமான திருவாய்மொழியின் த்வயார்த்த ப்ரதிபாதகத்வம் விஸ்தரேணோபபாதிக்க வேண்டுகையாலும், தத் விஷயமாகத் தம்முடைய திருத்தமையனார் பிள்ளை ஒரு ப்ரபந்தம் முன்பேயிட்டருளுகையாலும், அதிலே தர்சிப்பித்து விடக்கடவோமென்று (த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி யென்றது ஸாரஸங்க்ரஹத்திலே) என்கிறார்.
இறுதியாக உள்ள ப்ரபந்தமான திருவாய்மொழியானது த்வய மந்த்ரத்தின் ஆழ்பொருளை வெளிப்படுத்துகிறது என்பதை விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என்பதாலும், அது விஷயமாகத் தன்னுடைய திருத்தமையனாராகிய ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் ஒரு ப்ரபந்தத்தை முன்பே அருளிச்செய்துள்ளதாலும், “அதனையே இங்கு காண்பித்து நிற்போம்”, என்று திருவுள்ளம் கொண்டு, அதனை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, திருவாய்மொழி பத்துப்பத்தாலும், ச்ரிய:பதித்வம் முதலாக கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக த்வயத்தில் ப்ரதிபாதிதமான பத்தர்த்தத்தையும் ப்ரதிபாதிக்கையாலே, த்வயார்த்தமாய்க் கொண்டு தீர்க்க சரணாகதியாயிருக்கு மென்று சொல்லப்பட்டது, பிள்ளையருளிச் செய்த ஸாரஸங்க்ரஹமாகிற ப்ரபந்தத்திலே யென்கை. அந்த ப்ரபந்தமாவதுதானேதென்னில். “அகில ஜதத்திதாநுசாஸந பரமான வேதத்திலும் வேதோபப்ரும்ஹணார்த்தமாக ப்ரவ்ருத்தங்களான ஸ்ம்ருதீதிஹாஸ புராணாதி ஸமஸ்த சாஸ்த்ரங்களிலும் ப்ரஸித்தமாய், ஸர்வேச்வர ஸர்வஸ்வமாய், நம் ஆசார்யர்களுக்கு ஆபத்தநமாயிருந்துள்ள அர்த்த த்வயத்தை ப்ரதிபாதிக்கையாலே த்வயமென்று திருநாமத்தையுடைத்தாயிருந்துள்ள வாக்யத்வயம், பத்தர்த்தத்தை ப்ரதிபாதிக்கிறது. அதாகிறது – ச்ரிய:பதித்வமும், நாராயணத்வமும், நாராயணனுடைய ஸர்வலோக சரண்யமான சரணாரவிந்தயுகளமும், அதினுடைய ப்ராபகத்வமும், தத் கோசரமாய் சேதநகதமாயிருந்துள்ள ப்ரார்த்தநா கர்ப்ப விஸ்ரம்பமும், லஷ்மீ தத் வல்லபருடைய நிகிலாத்ம கைங்கர்ய ப்ரதாநார்த்தமான நித்யஸம்பந்தமும், கைங்கர்ய ப்ரதி ஸம்பந்தியான ஈச்வரனுடைய நிரதிசய போக்யதையும், ஸர்வஸ்வாமித்வமும், நித்ய கைங்கர்யமும், கைங்கர்ய ப்ரதிபந்தக நிச்சேஷ நிபர்ஹணமுமாகிற அர்த்த விசேஷங்கள்; ஈத்ருசார்த்த விசேஷ ப்ரகாசகமான மந்த்ர விசேஷத்தினுடைய விவரணரூபமாய் பெளருஷேயோபநிஷத்தாயிருந்துள்ள திருவாய்மொழியில் பத்துப்பத்தாலும் இப்பத்தர்த்தத்தையும் நம் பூர்வாசார்யர்கள் அடைவே சேர்த்தநுஸந்தித்துப் போருவர்கள். அதில் முதல் பத்தால், “மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்” என்றும், “மலராள் மைந்தன்” என்றும், “திருமகளார் தனிக்கேள்வன்” என்றும், “திருவின் மணாளன்” என்றும், “பூமகளார் தனிக்கேள்வன்” என்றும், “மைந்தனை மலராள் மணவாளனை” என்றும் ச்ரிய:பதித்வம் ப்ரதிபாதிதமாய்த்து. இரண்டாம் பத்தால், “எம்பெருமான் நாரணற்கு” என்றும், “எம்பிரானெம்மான் நாராயணனாலே” என்றும், “நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன்” என்றும் நாராயணத்வம் ப்ரதிபாதிதமாய்த்து. மூன்றாம் பத்தால் “நாண்மலராமடித் தாமரை” என்றும், “அங்கதிரடியன்” என்றும், “அவன் பாத பங்கயம்” என்றும், “அன்று தேர் கடவிய பெருமான் கனைகழல்” என்றும், “மூவுலகும் தொழுதேத்தும் சீரடியான்” என்றும் நாராயணனுடைய ஸர்வலோக சரண்யமான சரணாரவிந்த யுகளம் ப்ரதிபாதிதமாய்த்து. நாலாம் பத்தால், “இலங்கை நகர் அம்பெரியுய்த்தவர்” என்றும், “வல்வினை தீர்க்கும் கண்ணனை” என்றும், “தொல்வினை தீர” என்றும், “வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே” என்றும், “மேவி நின்று தொழுவார் வினை போக” என்றும், “பிறந்தும் செற்றும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்” என்றும், “நோயே மூப்பிறப் பிறப்புப் பிணியே யென்றிவை யொழிய” என்றும், “வேட்கையெல்லாம் விடுத்து - கூட்டரிய திருவடிக்கண் கூட்டினை” என்றும், “அஃதேயுய்யப் புகுமாறு” என்றும், “உய்வுபாயம் மற்றின்மை தேறி” என்றும் அநிஷ்ட நிவ்ருத்தீஷ்ட ப்ராப்திகரத்வ லக்ஷணமான ப்ராபகத்வம் ப்ரதிபாதிதமாய்த்து. – அஞ்சாம்பத்தால் “தமியேனுக்கருளாய்” என்றும், “ஆரெனக்கு நின்பாதமே சரணாக” என்றும், “உன்னாலல்லால்” என்றும், “கழல்களவையே சரணாகக் கொண்ட” என்றும், “நம்பெருமானடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்” என்றும், “நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறுமேக சிந்தையனாய்” என்றும் தத் கோசரமாய் சேதநகதமாயிருந்துள்ள ப்ரார்த்தநா கர்ப்ப விஸ்ரம்பம் ப்ரதிபாதிதமாய்த்து. – ஆறாம் பத்தால் “திருமாமகளிருந்தாம் மலிந்திருந்து” என்றும், “அடிமை செய்வார் திருமாலுக்கே” என்றும், “ஒசிந்த ஒண்மலராள் கொழுநன்” என்றும், “என் திருமார்வற்கு” என்றும், “கோலத் திருமாமகளோடுன்னை” என்றும் கைங்கர்ய ப்ரதாநார்த்தமான லக்ஷ்மீ தத் வல்லபர்களுடைய நித்ய ஸம்பந்தம் ப்ரதிபாதிதமாய்த்து. – ஏழாம் பத்தால் “கன்னலேயமுதே” என்றும், “கொடியேன் பருகின்னமுதே” என்றும், “அலைகடல் கடைந்தவாரமுதே” என்றும், “திருமாலின் சீர் இறப்பெதிர்காலம் பருகிலுமார்வனோ” என்றும், “இவ்வேழுலகை யின்பம் பயக்க” என்றும் கைங்கர்ய ப்ரதி ஸம்பந்தியான வீச்வரனுடைய நிரதிசய போக்யதை ப்ரதிபாதிதமாய்த்து. – எட்டாம் பத்தால் “அடியனேன் பெரியவம்மானே” என்றும், “விண்ணவர்கோன் தங்கள் கோனை” என்றும், “அமர்ந்த நாதனை” என்றும், “மூவுலகாளி” என்றுமம், “நேர்பட்டநிறை மூவுலகுக்கும் நாயகன்” என்றும் ஸர்வஸ்வாமித்வம் ப்ரதிபாதிதமாய்த்து. – ஒன்பதாம் பத்தால் “பண்டைநாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின்கோயில் சீய்த்து” என்றும், “நின் தீர்த்த வடிமைக் குற்றேவல்” என்றும், “தொடர்ந்து குற்றேவல் செய்து” என்றும், “கொடுவினையேனும் பிடிக்க” என்றும், “உறுவதிதுவென் றுனக்காட்பட்டு” என்றும், “ஆட்கொள்வானொத்து” என்றும், “நானும் மீளாவடிமைப் பணி செய்யப் புகுந்தேன்” என்றும் நித்ய கைங்கர்யம் ப்ரதிபாதிதமாய்த்து. பத்தாம் பத்தால் “துயர் கெடும் கடிது” என்றும், “கெடுமிடராய” என்றும், “எழுமையுமேதம் சாரா” என்றும், “தீரும் நோய் வினைகளெல்லாம்” என்றும், “இப்பிறப்பறுக்கும்” என்றும், “உன்றன் திருவுள்ளமிடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்கவின்புறுதும் எம் பெண்மையாற்றோம்” என்றும், “பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்” என்றும், “பிறவித்துயர் கடிந்தோம்” என்றும், “விண்டேயொழிந்த வினையாயினவெல்லாம்” என்றும், “அமரா வினைகளே” என்றும், “கடுநரகம் புகலொழித்த” என்றும், “பிறவி கொடுத்தேன்” என்றும், “தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்” என்றும், “அந்திதொழுஞ் சொல்லு” என்றும், “அவாவற்று வீடு பெற்ற” என்றும் கைங்கர்ய ப்ரதிபந்தக நிச்சேஷ நிபர்ஹணம் ப்ரதிபாதிதமாய்த்து. இப்படி ச்ரிய:பதித்வ ப்ரமுகங்களாய் கைங்கர்ய ப்ரதிபந்தக நிச்சேஷ நிபர்ஹண பர்யந்தங்களாயிருந்துள்ள உபாதேயார்த்தங்களை ப்ரதிபாதிக்கக் கடவதாயிருந்துள்ள வாக்யத்வயமும் திருவாய்மொழியும் பகவச்சரணார்த்திகளாய் அநந்யோபாயராயிருக்கு மதிகாரிகளுக்கு, காலக்ஷேப ஹேதுவாகவும், போக ஹேதுவாகவும், ஈச்வர ப்ரீதி ஹேதுவாகவும், யாவச்சரீரபாதமநுஸந்தேயம்” என்றருளிச் செய்த இப்ரபந்தமென்கை. இப்படி திருவாய்மொழியினுடைய த்வயார்த்த ப்ரதிபாதகத்வத்தை விசதமாக ஆசார்யர்களருளிச் செய்து வைக்கையாலே, ஸ்வப்ரபந்தத்தில் வக்தவ்யாம்சத்தை தத் ப்ரபந் தத்திலே தர்சிப்பித்தாராய்த்து.
(த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி என்றது) - திருவாய்மொழியில் உள்ள பத்து பத்துக்களால், த்வய மந்த்ரத்தில் வெளிப்படுவதாகிய மஹாலக்ஷ்மியின் நாதனாக இருத்தல் தொடங்கி, தன்னைத் தனது அடியார்கள் வந்து அடைவதற்கு அவர்களுக்குத் தடையாக உள்ள விரோதிகளை நீக்குதல் முடிய உள்ள பத்துக் கருத்துக்களை வெளிப்படுத்துவதால், திருவாய்மொழியை த்வய மந்திரத்தின் பொருளாகவே கொண்டு, தீர்க்க சரணாகதியாக இருக்கும் என்று, (ஸாரஹங்க்ரஹத்திலே) - ஸாரஸங்க்ரஹம் என்ற ப்ரபந்தத்தில் ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் அருளிச்செய்தார். அந்த ப்ரபந்தம் எது? (அடுத்து வருகின்ற பல வரிகளில் ஸாரஸங்ரஹத்தில் கூறப்பட்டவற்றுக்கான வ்யாக்யானத்தைச் செய்கிறார்) அனைத்து லோகங்களுக்கும் ஏற்றதான தன்மைகளை மட்டுமே உரைக்கின்ற வேதங்கள் மற்றும் அந்த வேதங்களில் கூறப்பட்டவற்றை விரிவாக உரைப்பவையாக உள்ள ஸ்ம்ருதி, இதிஹாஸம் மற்றும் புராணங்கள் என்பதான அனைத்துவிதமான சாஸ்த்ரங்களிலும் வெளிப்படுவதாக உள்ளதும், ஸர்வேச்வரனுக்கு அனைத்துவிதமான உடைமையாக உள்ளதும், நம்முடைய ஆசார்யர்களுக்கு ஆபத்தனமாக உள்ள இரண்டு அர்த்தத்தை உரைப்பதால் “த்வயம்” என்ற பெயர் கொண்டதும் - இப்படியாக உள்ள இரண்டு வரிகள் கொண்ட மந்த்ரமானது, பத்து அர்த்தங்களைக் கொண்டதாக உள்ளது. அவையாவன – (1) மஹாலக்ஷ்மியின் நாதனாக இருத்தல், (2) நாராயணத் தன்மை கொண்டிருத்தல், (3) அனைத்து லோகங்களும் சரணம் என்று புகத்தக்க இடமாக உள்ள நாராயணனுடைய இரண்டு திருவடித்தாமரைகள், (4) அத்தகைய திருவடிகளே உபாயமாக இருத்தல், (5) அந்தத் திருவடிகள் இரண்டையும் பற்றி நிற்கின்ற ஆத்மாவின் ப்ரார்த்தனையை உள்ளடக்கிய துணிவு, (6) அனைத்து ஆத்மாக்களுக்கும் ஏற்றதான கைங்கர்யத்தை அளிக்கும்விதமாக மஹாலக்ஷ்மி மற்றும் அவளுடைய நாதன் ஆகிய இருவருக்கும், ஆத்மாக்களுக்கும் இடையே உள்ள நித்யமான ஸம்பந்தம், (7) கைங்கர்யத்தை ஏற்பவனாகிய ஸர்வேச்வரனுடைய எல்லையற்ற இனிமை, (8) அனைத்திற்கும் எஜமானனாக இருத்தல், (9) நித்யமான கைங்கர்யம் மற்றும் (10) கைங்கர்யத்திற்குத் தடையாக உள்ள அனைத்தையும் நீக்குதல் என்பவை ஆகும். இப்படியாக ஆழ்பொருள் குறித்து தெளிவாக விளக்குகின்றதும், மந்த்ரங்களில் சிறப்பாக உள்ளதும் ஆகிய த்வய மந்த்ரத்தின் விவரண வடிவமாகவும், ஒருவரால் செய்யப்பட்ட உபநிஷத் என்பதாக உள்ளதும் ஆகிய திருவாய்மொழியில், பத்து பத்துக்கள் மூலம், இந்தப் பத்து சிறப்பான அர்த்தங்கள் கூறப்பட்டுள்ளன என்று நம்முடைய பூர்வாசார்யர்கள் சேர்த்து அனுபவித்தபடி இருப்பார்கள். அவையாவன: – முதல் பத்தில், திருவாய்மொழி (1-3-1) - மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகள் – என்றும், (1-5-9) - மலராள் மைந்தன் – என்றும், (1-6-9) - திருமகளார் தனிக்கேள்வன் - என்றும், (1-9-1) - திருவின் மணாளன் - என்றும், (1-9-3) - பூமகளார் தனிக்கேள்வன் - என்றும், (1-10-4) - மைந்தனை மலராள் மணவாளனை - என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், மஹாலக்ஷ்மியின் நாதனாக உள்ள தன்மை கூறப்பட்டது. இரண்டாம் பத்தில் உள்ள, (2-1-7) - எம்பெருமான் நாரணற்கு - என்றும், (2-7-1) - எம்பிரானெம்மான் நாராயணனாலே - என்றும், (2-7-2) - நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன் – என்றும் உள்ள (3-3-9) - நாண்மலராமடித் தாமரை - என்றும், (3-4-3) – அங்கதிரடியன் - என்றும், (3-6-4) - அவன் பாத பங்கயம் - என்றும், (3-6-10) - அன்று தேர் கடவிய பெருமான் கனைகழல் - என்றும், (3-8-1) - மூவுலகும் தொழுதேத்தும் சீரடியான் – என்றும் உள்ள பாசுரங்கள் மூலம் அனைத்து லோகங்களும் சரணம் என்று புகுவதற்கு ஏற்ப இடமாக உள்ள நாராயணனின் இரண்டு திருவடிகளும் கூறப்பட்டன. நான்காம் பத்தில் (4-2-8) - இலங்கை நகர் அம்பெரியுய்த்தவர் -என்றும், (4-4-11) - வல்வினை தீர்க்கும் கண்ணனை - என்றும், (4-4-11) - தொல்வினை தீர - என்றும், (4-5-2) - வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே - என்றும், (4-5-4) - மேவி நின்று தொழுவார் வினை போக - என்றும், (4-7-7) - பிறந்தும் செற்றும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் - என்றும், (4-9-7) - நோயே மூப்பிறப் பிறப்புப் பிணியே யென்றிவை யொழிய - என்றும், (4-9-9) - வேட்கையெல்லாம் விடுத்து கூட்டரிய திருவடிக்கண் கூட்டினை - என்றும், (4-1-11) - அஃதேயுய்யப் புகுமாறு - என்றும், (4-3-11) - உய்வுபாயம் மற்றின்மை தேறி – என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், விருப்பம் இல்லாத அனைத்தையும் விலக்கி, விருப்பமானவற்றை அடைதல் என்பதைச் செய்யும் தன்மை கொண்ட உபாயத்தன்மை கூறப்பட்டது. ஐந்தாம் பத்தில் (5-7-2) – தமியேனுக்கருளாய் - என்றும், (5-7-10) - ஆரெனக்கு நின்பாதமே சரணாக - என்றும், (5-8-3) – உன்னாலல்லால் - என்றும், (5-8-11) - கழல்களவையே சரணாகக் கொண்ட - என்றும், (5-9-11) - நம்பெருமானடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் - என்றும், (5-10-11) - நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறுமேக சிந்தையனாய் - என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், உபாயத்தை குறித்து உள்ள சேதநனுடைய ப்ரார்த்தனை என்பதான துணிவு கூறப்பட்டது. – ஆறாம் பத்தில் (6-5-8) - திருமாமகளிருந்தாம் மலிந்திருந்து - என்றும், (6-5-11) - அடிமை செய்வார் திருமாலுக்கே - என்றும், (6-7-8) - ஒசிந்த ஒண்மலராள் கொழுநன் - என்றும், (6-8-10) - என் திருமார்வற்கு - என்றும், (6-9-3) - கோலத் திருமாமகளோடுன்னை – என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், கைங்கர்யத்தை அளிப்பதற்கு ஏற்றதான மஹாலக்ஷ்மி மற்றும் அவளுடைய நாதன் ஆகியவர்களுடைய நித்யமான ஸம்பந்தம் கூறப்பட்டது . ஏழாம் பத்தில் (7-1-2) – கன்னலேயமுதே - என்றும், (7-1-7) - கொடியேன் பருகின்னமுதே - என்றும், (7-2-5) - அலைகடல் கடைந்தவாரமுதே - என்றும், (7-9-9) - திருமாலின் சீர் இறப்பெதிர்காலம் பருகிலுமார்வனோ - என்றும், (7-10-1) - இவ்வேழுலகை யின்பம் பயக்க – என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், கைங்கர்யத்தை ஏற்பவனாகிய ஸர்வேச்வரனுடைய எல்லையற்ற இனிமை கூறப்பட்டது. எட்டாம் பத்தில் (8-1-3) - அடியனேன் பெரியவம்மானே - என்றும், (8-2-2) - விண்ணவர்கோன் தங்கள் கோனை - என்றும், (8-4-10) - அமர்ந்த நாதனை - என்றும், (8-9-5) – மூவுலகாளி - என்றும், (8-9-11) - நேர்பட்டநிறை மூவுலகுக்கும் நாயகன் - என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், அனைத்திற்கும் எஜமானனாக உள்ள தன்மை கூறப்பட்டது. ஒன்பதாம் பத்தில் (9-2-1) - பண்டைநாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின்கோயில் சீய்த்து - என்றும், (9-2-2) - நின் தீர்த்த வடிமைக் குற்றேவல் - என்றும், (9-2-3) - தொடர்ந்து குற்றேவல் செய்து - என்றும், (9-2-10) - கொடுவினையேனும் பிடிக்க - என்றும், (9-4-4) - உறுவதிதுவென் றுனக்காட்பட்டு -என்றும், (9-6-7) – ஆட்கொள்வானொத்து - என்றும், (9-8-4) - நானும் மீளாவடிமைப் பணி செய்யப் புகுந்தேன் – என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், நித்யமான கைங்கர்யம் கூறப்பட்டது. பத்தாம் பத்தில் (10-1-8) - துயர் கெடும் கடிது - என்றும், (10-2-1) – கெடுமிடராய - என்றும், (10-2-2) - எழுமையுமேதம் சாரா - என்றும், (10-2-3) - தீரும் நோய் வினைகளெல்லாம் - என்றும், (10-2-5) – இப்பிறப்பறுக்கும் - என்றும், (10-3-9) - உன்றன் திருவுள்ளமிடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்கவின்புறுதும் எம் பெண்மையாற்றோம் - என்றும், (10-4-7) - பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும் - என்றும், (10-4-3) - பிறவித்துயர் கடிந்தோம் - என்றும், (10-4-9) - விண்டேயொழிந்த வினையாயினவெல்லாம் - என்றும், (10-5-9) - அமரா வினைகளே - என்றும், (10-6-11) - கடுநரகம் புகலொழித்த - என்றும், (10-8-3) - பிறவி கொடுத்தேன் - என்றும், (10-8-5) - தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் - என்றும், (10-8-7) - அந்திதொழுஞ் சொல்லு - என்றும், (10-10-11) - அவாவற்று வீடு பெற்ற - என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், கைங்கர்யத்திற்குத் தடையாக உள்ள அனைத்தும் அடியுடன் நீங்குதல் குறித்து உரைக்கப்பட்டது. இப்படியாக மஹாலக்ஷ்மியின் நாதனாக இருத்தல் என்பது தொடங்கி, கைங்கர்யத்திற்குத் தடையாக உள்ள அனைத்தும் அடியுடன் அழிந்த நிலை முடிய உள்ளதான, ஏற்கத்தக்க பல அர்த்தங்களை உரைப்பதாக உள்ள இரண்டு வாக்கியங்களான த்வயமந்த்ரமும் திருவாய்மொழியும், பகவானுடைய திருவடிகளை மட்டுமே விரும்புபவர்களாகவும், மற்ற உபாயங்கள் எதனையும் நாடாதவர்களாகவும் உள்ள அதிகாரிகளுக்கு பொழுதைக் கழிப்பதற்காகவும், இன்பத்திற்குக் காரணமாகவும், ஈச்வரனுடைய மகிழ்வைப் பெற்றுத்தரவல்லதாகவும், இந்த சரீரம் உள்ளவரை எண்ணியபடி உள்ளதாகவும் இருப்பவை ஆகும் என்று ஸாரஸங்க்ரஹத்திலே அருளிச்செய்தார். இவ்விதம் திருவாய்மொழியானது த்வயமந்த்ரத்தின் ஆழ்பொருளை உரைக்கிறது என்று தெளிவாக நம்முடைய பூர்வர்கள் அருளிச்செய்தனர். ஆகவே இங்கு தமது இந்த ப்ரபந்தத்தில் கூறவேண்டிய விஷயத்தை, ஸ்வாமி பிள்ளை லோகாசார்யாருடைய ப்ரபந்தத்தில் உள்ளவை மூலமாகவே காண்பித்தார் என்று கருத்து.