Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 209)
மூன்றாம் ப்ரகரணம்
அளிப்பானடியே னடைக்கலம் சூடிய பொய்யாதானுமழுந்தாரென்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும், தாமரையுந்திப் பெருமாமாயன் ஆளாகவே வாழியவென்று ப்ராப்ய பலங்களையும், நெறிகாட்டி மனத்துக் கொண்டு கண்ணனாலடித்துக் கண்டிலமால் யாதாகிலென்று உபாயத்தையுஞ் சொன்னவை மந்த்ர ச்லோகங்களோடே சேரும்.
அதில் எந்த ப்ரபந்தத்துக்கு எந்த ரஹஸ்யத்தோடே சேர்த்தி என்னுமாகாங்க்ஷையிலே அத்தை வகையிட்டருளிச்செய்கிறார் (அளிப்பான்) என்று தொடங்கி.
அந்த ப்ரபந்தங்களில், எவற்றில் எந்த ரஹஸ்யம் கூறப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “உயிரளிப்பான்” என்று ப்ரணவத்தில் ப்ரதமாக்ஷரத்தில் தாத்வர்த்தமான பகவத்ரக்ஷகத்வத்தையும், “அடியேன்” என்று தத்ரக்ஷய பூதமாய் சதுர்த்தி உகாரங்களில் சொல்லுகிறபடியே ததநந்யார்ஹ சேஷமாய் ப்ரக்ருதே: பரமாய் ஜ்ஞாநாநந்த லக்ஷணமாக த்ருதீயாக்ஷரத்தில் சொல்லப்படுகிற ஆத்மஸ்வரூபத்தையும், ப்ரதமாக்ஷரத்தில் சதுர்த்தி ஸம்ப்ரதாநத்திலேயாய், “ப்ரஹ்மணேத்வா மஹஸ ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத” என்கிறபடியே ப்ரணவத்துக்கு ஆத்மஸமர்ப்பணமும் அர்த்தமாகையாலே, விரோதி பயத்தாலே கலங்கின தசையிலே “அடியேனடியாவி யடைக்கலம்” என்று அந்த ஆத்மஸமர்ப்பணத்தையும், – “திருமால் திருப்பேர் வல்லாரடிக்கண்ணி சூடிய மாறன்” என்று ப்ரணவோக்தமான பகவதநந்யார்ஹ சேஷத்வம் ததீய சேஷத்வ பர்யந்தமாயிருக்குமென்று நமஸ்ஸிலார்த்தமாகச் சொல்லப்படுகிற ததீய சேஷத்வத்தையும், “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும்” என்றும், “யாதானு மோராக்கையில் புக்கங்காப்புண்டு மாப்பவிழ்ந்தும்” என்றும் ஷஷ்ட்யந்தமான மகாரத்தால் சொல்லப்பட்ட அஹங்கார மமகாரங்களாகிற அநாத்மந்யாத்ம புத்த்யாதி ரூபாவித்யையையும், தத்கார்யமான அக்ருத்யகரணாதிகளையும், தத்கார்யமாய் வரும் தேவ மநுஷ்யாதி ரூபமான ப்ரக்ருதி ஸம்பந்தத்தையும், “வன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தழுந்தார்” என்று தந்நிஷேத வாசியான நஞ்ஞாலே சொல்லப்பட்ட அவித்யை முதலாக ஸம்ஸார கர்தம மீறாகவுள்ள விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகையாலே, ஸர்வரக்ஷகனான ஸர்வேச்வரனுக்கு அநந்யார்ஹசேஷமாய் ஜ்ஞாநாநந்த லக்ஷணமாக ததீய சேஷத்வ பர்யந்தமா யிருக்கும் ஆத்மஸ்வரூபத்தையும் ஸம்ஸார ஹேது பூதாவித்யாதிகளான விரோதிகளுடைய நிவ்ருத்தியையும் ப்ரதிபாதிக்கிற திருவிருத்தம், ப்ரதம மத்யம பதங்களிரண்டோடும் சேர்ந்திருக்கையாலும்; – “தாமரையுந்தித் தனிப் பெருநாயக” என்று தொடங்கி, “எம்பெருமாமாயன்” என்று தலைக்கட்டுகையாலே, “நாராயண” பதத்தில் சொல்லப்படுகிற உபய விபூதி யுக்தமான ப்ராப்ய வஸ்துவையும், “தனிமாத்தெய்வத்தடியவர்க்கினி நாமாளாகவே யிசையுங்கொல்” என்றும், “ஊழிதோறூழியோவாது வாழியவென்றுயாந்தொழ விசையுங் கொல்” என்றும், அந்தப் பதத்தில் சதுர்த்த்யர்த்தமான பலஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே, ப்ராப்ய பலன்களிரண்டையும் ப்ரதிபாதிக்கிற திருவாசிரியம், ப்ரக்ருதி பரத்யயாம்சங்களாலே ததுபய ப்ரதிபாதகமான த்ருதீய பதத்தோடே சேர்ந்திருக்கையாலும், இரண்டு ப்ரபந்தமும் திருமந்த்ரத்தோடே சேரும். – “நெறிகாட்டி நீக்குதியோ” என்று உபாயாந்தரங்களைக் காட்டி என்னை யகற்றப் பார்க்கிறாயோவென்கையாலே, “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய” என்கிற உபாயாந்தரங்களினுடைய பரித்யாஜ்யதையையும்; “வெங்கோட்டேறேழுடனே கொன்றானையே மனத்துக் கொண்டு” என்று “மாமேகம் சரணம் வ்ரஜ” என்கிற மாநஸாத்யவஸாய ரூபமான உபாயஸ்வீகாரத்தையும்; “சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோரினத்தலைவன் கண்ணனால் யான்” என்றும், “எம்மிறையார் தந்தவருளென்னும் தண்டாலடித்து வல்வினையைக் கானும் மலையும் புகக்கடிவான்” என்று “அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்று உபாய பூதன் பண்ணும் ஸர்வபாப விமோசநத்தையும்; “வானோமறி கடலோ” என்று தொடங்கி, “வன்துயரை - மருங்கு – கண்டிலமால்” என்று விரோதிகளானவை போனவிடம் தெரியாதபடி தன்னடையே விட்டுப் போய்த்து என்கையாலே, “நானும் வேண்டா, நீயும் வேண்டா, அவை தன்னடையே விட்டுப்போம்” என்கிற ணிஜர்த்தத்தையும்; “அடர் பொன்முடியானை” என்று தொடங்கி, “யாதாகில் யாதே இனி” என்று “இனி கர்மமிருந்தென்? நசித்தென்? ஏதானால் நமக்கென் வரும்” என்று “மாசுச:” என்கிற பதத்தாலே பலிதமான நிர்ப்பரத்வாநுஸந்தாநத்தையும் சொல்லுகையாலே, உபாய ப்ரதிபாதகமாயிருக்கிற திருவந்தாதி, சரமச்லோகத்தோடே சேருமென்கை. (உபாயத்தையும் சொன்னவை) என்றது சொன்ன ப்ரபந்தங்களென்றபடி.
(அளிப்பான்) – திருவிருத்தம் (1) – உயிர் அளிப்பான் – என்பதன் காரணமாக, ப்ரணவத்தில் உள்ள முதல் எழுத்தான “அ” என்பதுடைய தாதுவானது, “ரக்ஷணம்” என்ற பொருளைத் தருவதால், பகவானுடைய காப்பாற்றும் தன்மையைக் கூறியதாகப் பொருள். (அடியேன்) - திருவிருத்தம்(1) – அடியேன் - என்பதன் மூலம், பகவானால் காப்பாற்றப்படும் பொருளாகவும், திருமந்த்ரத்தில் நான்காம் வேற்றுமையாக உள்ள “ஆய” என்பதாலும், ப்ரணவத்தின் இரண்டாம் எழுத்தான “உ” என்பதால் கூறப்படுவதாலும், அவனை அன்றி வேறு யாருக்கும் அடிமையல்ல என்னும் பொருளாகவும், சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டதும், ஞானம் மற்றும் ஆனந்தம் போன்றவற்றை லக்ஷணமாகக் கொண்டதும், ப்ரணவத்தின் மூன்றாம் எழுத்தான “ம” என்பதால் கூறப்படும் பொருளாகவும் உள்ள ஆத்ம ஸ்வரூபத்தை உரைக்கிறார். (அடைக்கலம்) - ப்ரணவத்தில் உள்ள “அ” என்பதன் மீது ஏற்றிக் கழிக்கப்பட்ட நான்காம் வேற்றுமை என்பது, “அளித்தல்” என்ற பொருளில் வந்ததாக உள்ளது; மேலும் தைத்திரீயத்தில் - ப்ரஹ்மணேத்வா மஹஸ ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத - ப்ரஹ்மத்தை அடைய “ஓம்” என்பதன் மூலம் தனது ஆத்மாவை அளிப்பானாக - என்று கூறப்படுகிறது; ஆகவே ப்ரணவத்திற்கு “ஆத்ம சமர்ப்பணம்” என்பதும் பொருளாக உள்ளதால், விரோதி பயம் காரணமாக ஏற்பட்ட கலக்கமான நிலையில், திருவிருத்தம் (85) – அடியேன் அடியாவி அடைக்கலம் - என்று அந்த ஆத்ம சமர்ப்பணத்தைக் கூறினார். (கூடிய) - ப்ரணவத்தில் கூறப்பட்டதான “பகவானுக்கு மட்டுமே அடிமை” என்ற நிலையானது அவனுடைய அடியார்கள் முடிய செல்வதாகும் என்பது, “நம” என்பதன் பொருள் ஆகும்; இதன் காரணமாக, அவனுடைய அடியார்கள் முடிய தான் அடிமை என்பதை திருவிருத்தம் (100) - திருமால் திருப்பேர் வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் – என்றார். (பொய் யாதானும்) – திருவிருத்தம் (1) - பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் – என்றும், திருவிருத்தம் (95) - யாதானும் ஓராக்கையில் புக்கு அங்காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும் – என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், “நம:” என்பதில் ஆறாம் வேற்றுமையை இறுதியில் கொண்டதாகிய “ம” என்பதால் கூறப்பட்ட அஹங்காரம் மற்றும் மமகாரம் என்பதாகிய “சரீரத்திலேயே ஆத்மா என்ற எண்ணத்தை வைத்தல்” முதலான அறியாமை, அதன் விளைவாக ஏற்படுவதான “செய்யக் கூடாதவற்றைச் செய்தல்” போன்றவை, இதன் விளைவாக ஏற்படுவதான தேவ மனிதச் சரீரங்கள், இவற்றால் ஏற்படும் ப்ரக்ருதி ஸம்பந்தத்தைக் கூறினார். (அழுந்தார்) - திருவிருத்தம் (100) – வன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தழுந்தார் - என்ற பாசுரத்தால், அவை அனைத்தையும் தள்ளுதல் என்பதை வெளிப்படுத்துகின்ற “ந” என்பதால் கூறப்பட்ட, “அவித்யை தொடங்கி இந்த ஸம்ஸார வாழ்வு முடிய உள்ள அனைத்து விரோதிகளும் விலகுதல்” என்பதை உரைத்தார். (என்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளை) – இப்படியாக, காப்பாற்றுபவனாகிய ஸர்வேச்வரனுக்கு மட்டுமே அடிமையாகவும், ஞானம் மற்றும் ஆனந்தம் போன்ற லக்ஷணங்களைக் கொண்டதாகவும், அவனுடைய அடியார்களுக்கு அடிமை என்பதாகவும் உள்ள ஆத்ம ஸ்வரூபம் குறித்தும், ஸம்ஸாரம் என்பதற்குக் காரணமாக உள்ளதான அவித்யை போன்ற விரோதிகள் விலகுவது குறித்தும் கூறுவதாக உள்ள திருவிருத்தம் என்ற ப்ரபந்தமானது, திருமந்த்ரத்தின் “ஓம்” மற்றும் “நம:” ஆகிய இரண்டு பதங்களுடைய பொருளைக் கொண்டதாக உள்ளது. (தாமரை உந்திப் பெருமாமாயன்) – திருவாசிரியம் (1) – தாமரை உந்தித் தனிப் பெருநாயக - என்று தொடங்கி, திருவாசிரியம் (7) - எம்பெருமாமாயன் – என்று முடிப்பதால், திருமந்த்ரத்தில் உள்ள “நாராயண” என்பதால் கூறப்படுவதான நித்யவிபூதி மற்றும் லீலாவிபூதி ஆகிய இரண்டையும் கொண்டதும், நம்மால் அடையப்படவேண்டியதும் ஆகிய உயர்ந்த வஸ்துவை உரைத்தார். (ஆளாகவே வாழிய என்று) – திருவாசிரியம் (3) – தனிமாத்தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையுங்கொல் - என்றும், திருவாசிரியம் (4) – ஊழிதோறு ஊழியோவாது வாழியவென்று யாந்தொழ விசையுங் கொல் – என்றும் உள்ள பாசுரங்களால், “நாராயண” என்று சொல்லின் நான்காம் வேற்றுமைப்பொருளாக உள்ள கைங்கர்யம் என்ற பலனை உரைத்தார். ஆகவே திருவாசிரியமானது, அடையப்படவேண்டிய பொருளான நாராயணன் மற்றும் அவனுக்குச் செய்யவேண்டியதான கைங்கர்யம் ஆகிய இரண்டையும் கூறுகிறது. இப்படியாக இந்தத் திருவாசிரியம் என்பது திருமந்திரத்தின் மூன்றாவது சொல்லாகிய “நாராயண” என்பதுடன் ஸம்பந்தம் கொண்டதாக இருக்கிறது. எனவே திருவிருத்தமும், திருவாசிரியமும் திருமந்த்ரத்தை வெளிப்படுத்துவதாக (அல்லது அதன் பொருளாக) உள்ளன. (நெறி காட்டி) – பெரியதிருவந்தாதி (6) - நெறிகாட்டி நீக்குதியோ – என்பதன் மூலம், “மற்ற உபாயங்களைக் காண்பித்து என்னை உன்னிடமிருந்து அகற்ற முயல்கிறாயோ” என்று கூறுவதால், கீதை (18-66) - ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய - அனைத்தையும் விட்டு – என்பதற்கு ஏற்ப, மற்ற அனைத்து உபாயங்களையும் விலக்குதல் என்பதைக் கூறினார். (மனத்துக் கொண்டு) - பெரியதிருவந்தாதி (48) – வெங்கோட்டேறு ஏழுடனே கொன்றானையே மனத்துக் கொண்டு – என்பதன் மூலம், கீதை (18-66) – மாம் ஏகம் சரணம் வ்ரஜ – என்னையே சரணமாகப் பற்றுவாயாக - என்பதான “மனத்தால் பற்றுதல்” என்னும் சரணம் புகுதலை உரைத்தார். (கண்ணனால் அடித்து) - பெரியதிருவந்தாதி (25) - சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத்தலைவன் கண்ணனால் யான் - என்றும், பெரியதிருவந்தாதி (26) – எம் இறையார் தந்தவருளென்னும் தண்டாலடித்து வல்வினையைக் கானும் மலையும் புகக்கடிவான் - என்றும் உள்ள பாசுரங்கள் மூலம், கீதை (18-66) - அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி - நான் உன்னை அனைத்து பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன் - என்று கூறுவதற்கு ஏற்ப, பகவான் அனைத்துவிதமான பாபங்களிலிருந்து நம்மை விடுவிப்பதைக் கூறுகிறார். (கண்டிலமால்) - பெரியதிருவந்தாதி (54) - வானோமறி கடலோ – என்று தொடங்கி, பெரியதிருவந்தாதி (54) - வன்துயரை மருங்கு கண்டிலமால் - என்று கூறுவதால், “நானும் அவற்றை நீக்கவேண்டாம், நீயும் நீக்கவேண்டாம், அவை தானாகவே போய்விடும்” என்பதான பொருளைக் கூறினார். (யாதாகில் என்று) – பெரியதிருவந்தாதி (70) - அடர் பொன்முடியானை - என்று தொடங்கி, பெரியதிருவந்தாதி (70) - யாதாகில் யாதே இனி – என்று முடிப்பதன் மூலம், “இனி கர்மங்கள் இருந்தால் என்ன? அவை அழிந்தால் என்ன? அவை எப்படிப் போனால் நமக்கு என்ன நேரும்?”, என்று கூறுவதால், கீதை (18-66) – மாசுச: - வருந்தாதே – என்பதால் வெளிப்படுகின்ற “பாரம் நீங்கி இருத்தல்” என்பதைக் கூறினார். ஆகவே, உபாயத்தை வெளிப்படுத்துவதாக உள்ள பெரியதிருவந்தாதியானது, சரமச்லோகத்தின் பொருளை உணர்த்துகிறது. (உபாயத்தையும் சொன்னவை) - இப்படியாக இவற்றை வெளிப்படுத்திய ப்ரபந்தங்கள் என்று கருத்து.