Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 208)

மூன்றாம் ப்ரகரணம்

இவற்றுக்கு மந்த்ர வித்யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி.

இப்படி இவ்வாழ்வாருடைய அநுபவோபதேச ரூபமான ப்ரபந்த சதுஷ்டயமும் ரஹஸ்யத்ரயார்த்த ப்ரதிபாதகமாயிருக்கும்படி ப்ரகாசிப்பிப்பதாக நினைத்து உபக்ரமிக்கிறார் (இவற்றுக்கு) இத்யாதி.

– இப்படியாக நம்மாழ்வாருடைய அனுபவ ரூபமாக உள்ள நான்கு ப்ரபந்தங்களும், மூன்று ரஹஸ்யங்களுடைய (அதாவது திருமந்த்ரம், த்வயம் மற்றும் சரமச்லோகம்) ஆழ்பொருளை உரைப்பதாகவே உள்ளன என்பதை வெளிப்ப்படுத்தத் திருவுள்ளம் கொண்டவராக அருளிச்செய்கிறார்.

– அதாவது, “மெய்ந்நின்று மங்கவொட்டுக்கு நடுவு” என்று கீழ்ப்ரஸ்துதமான இப் ப்ரபந்தங்கள் நாலுக்கும் ஸகல சாஸ்த்ர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தையும் ஸம்சய விபர்யயமற ப்ரதிபாதிக்குமவையாய், “ஸர்வமஷ்டாக்ஷ ராந்தஸ்த்தம்” என்னும்படி ஸகல சாஸ்த்ர ஸங்க்ரஹமான திருமந்த்ரமும், ஸித்தோபாய வரணத்தை ஸாங்கமாக விதிக்கிற சரமச்லோகமும், உபாயோபேய வரண ப்ரார்த்தனைகளை, ஸக்ரமமாக ப்ரகாசிப்பியா நின்று கொண்டு, காலக்ஷேபத்துக்கும் போகத்துக்குமாக ஸாரஜ்ஞராலே ஸதாநுஸந்தாநம் பண்ணப்படும் த்வயமுமாகிற ரஹஸ்ய த்ரயத்தோடே சேர்த்தி யென்கை.

– (இவற்றுக்கு) “மெய்ந்நின்று மங்கவொட்டுக்கு நடுவு” என்று கடந்த சூர்ணையில் கூறப்பட்ட நான்கு ப்ரபந்தங்களுக்கு, (மந்த்ர ரஹஸ்யத்தோடு) - அனைத்து சாச்த்ரங்களிலும் கூறப்பட்டுவதான அர்த்தபஞ்சகத்தை எந்தவிதமான சந்தேகங்களும் ஏற்படாதவகையில் தெளிவாக வெளிப்படுத்தும் தன்மை கொண்டதும், ஸர்வம் அஷ்டாக்ஷர அந்தஸ்த்தம் - அனைத்தும் அஷ்டாக்ஷரத்தில் அடங்கியுள்ளன - என்று கூறுவதற்கு ஏற்ப உள்ளதும் ஆகிய, அனைத்து சாஸ்த்ரங்களின் சுருக்கமாக உள்ள திருமந்த்ரம். (விதி ரஹஸ்யத்தோடே) – ஸர்வேச்வரனையே உபாயமாகக் கொள்ளுதல் என்பதை அங்கமாக விதிக்கின்ற சரமச்லோகம். (அநுஸந்தாந ரஹஸ்யத்தோடே) - ஸர்வேச்வரனை உபாயமாகப் பற்றும் முறை, அடைய உள்ள பேறான கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கும் முறை ஆறியவற்றை தெளிவாக உரைப்பதும், காலத்தைக் கழிப்பதற்காகவும் இனிமையை அளிப்பதற்காகவும் அனைத்தும் அறிந்த நம்முடைய முன்னோர்களால் எப்போதும் உச்சரிக்கப்பட்டபடி உள்ளதும் ஆகிய த்வய மந்த்ரம் என்பதான மூன்று மந்த்ரங்களுடன். (சேர்த்தி) - சேர்க்கை எப்போதும் உள்ளது.