Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 207)

மூன்றாம் ப்ரகரணம்

மெய்ந்நின்று மங்கவொட்டுக்கு நடுவு அநுபவகர்ப்போபதேசம்.

இனி இப்படி பரோபதேசபரரானபோது பகவதநுபவம் விச்சிந்நமாகாதோ வென்கிற சங்கையிலே அருளிச்செய்கிறார் (மெய்ந்நின்று) இத்யாதி.

– இப்படியாக நம்மாழ்வார் மற்றவர்களுக்கு உபதேசம் செய்தபடி உள்ளதன் காரணமாக, பகவத் அனுபவம் தடையாகாதோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, “மெய்ந்நின்று கேட்டருளாயடியேன் செய்யும் விண்ணப்பம்” என்றது முதல், “மங்கவொட்டுன் மாமாயை” என்கிறதளவாக நடுவுள்ள நாலு ப்ரபந்தமும், அநுபவமுள்ளே செல்லா நிற்கச் செய்தேயுண்டான பரோபதேசமென்கை. இவர் தமக்கு அநுபவ கர்ப்பமான வுபதேசமும் உபதேச கர்ப்பமான அநுபவமுமாய்ச் செல்லுமென்றிறே நம் முதலிகளருளிச் செய்வது. ஆகையால் இவர்க்கநுபவ விச்சேத மொருக்காலு மில்லையிறே. ஆக இப்படியிவருடைய பரோபதேச விஷயங்களும் உபதேச ஹேதுக்களும் உபதேச ஸாபல்யமும், உபதேசந்தான் அநுபவத்தை விட்டிராதென்னு மிடமும் சொல்லிற்றாய்த்து.

– (மெய்ந்நின்று மங்க ஒட்டுக்கு நடுவு) – திருவிருத்தம் (1) – மெய்ந்நின்று கேட்டருளாயடியேன் செய்யும் விண்ணப்பம் - என்பது தொடங்கி, திருவாய்மொழி (10-7-10) - மங்கவொட்டுன் மாமாயை – என்பது முடிய உள்ள பாசுரங்கள் நடுவில் அமைந்துள்ள நான்கு ப்ரபந்தங்களும். (அநுபவ கர்ப்ப உபதேசம்) - பகவத் அனுபவம் என்பது மனத்தில் நிலைத்து நின்றபடியே உள்ளபோது ஏற்பட்டதான “மற்றவர்களுக்கான உபதேசம்” என்று பொருள். நம்மாழ்வாருக்கு அனுபவம் மனதில் உள்ளபோதே உபதேசம் செய்தபடி இருத்தலும், உபதேசம் செய்தபடி உள்ளபோதே அனுபவம் ஏற்படுதலும் உண்டு என்று நம்முடைய பூர்வர்கள் கூறியுள்ளனர். ஆகவே இவருடைய பகவத் அனுபவத்திற்கு எந்தவிதமான தடையும் ஏற்படுவதில்லை. இவ்விதமாக நம்மாழ்வார் மற்றவர்களுக்கு உபதேசம் செய்கின்ற விஷயங்களும், அந்த உபதேசம் செய்வதற்கான காரணங்களும், அந்த உபதேசங்கள் பயன் அடைந்ததும், அத்தகைய உபதேசங்கள் பகவத் அனுபவத்தை விட்டு அகலாது என்பதும் விரிவாக உரைக்கப்பட்டது.