Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 206)
மூன்றாம் ப்ரகரணம்
ப்ரஹ்மநிஷ்டரும் ஸம்வத்ஸர வாஸிகளுமாகில், ஏபாவம் பயனன்றாகிலுஞ் சேராது.
இப்படியுபதேசம் பலித்ததாகில், “பரீக்ஷ்ய லோகாந்” இத்யாதிப்படியே கர்ம பலமான ஸாம்ஸாரிக போகங்களின் அல்பாஸ்திரத்வாதி தோஷத்தையும் நித்யனான பரமாத்மாவானவன் கர்மஸாத்யனல்லாமையையும் அநுஸந்திக்கையாலுண்டான நிர்வேதத்தோடே சமதமோபேதனாய் உபஹார பாணியாய்க் கொண்டு ச்ரோத்ரியனாய் ப்ரஹ்ம நிஷ்டனான ஆசார்யனை உபஸத்தி பண்ண, அவனும் “நாஸம்வத்ஸர வாஸிநே ப்ரப்ரூயாத்” என்கிறபடியே ஒரு ஸம்வத்ஸரம் பரீக்ஷித்துப் பின்னை யுபதேசிக்கக் கடவனாகச் சொல்லுகிற சாஸ்த்ர மர்யாதையிலே, ஸம்ஸாரிகளநுவர்த்திக்க இவர் உபதேசித்தாரானாலோ வென்கிற சங்கையிலே யருளிச்செய்கிறார் (ப்ரஹ்மநிஷ்டரும்) இத்யாதி.
– இவ்விதம் நம்மாழ்வாருடைய உபதேசம் பயன் அடைந்தது என்றுபோதிலும், பரீக்ஷ்ய போகாந் - என்பது போன்றவைகளுக்கு ஏற்ப, கர்மங்கள்டுஐய பலன்களாக விளைவதான ஸம்ஸார இன்பங்களின் நிலையற்ற தன்மை என்னும் தோஷத்தையும், நித்யனாக உள்ள பரமாத்மா கர்மங்களால் அடைய இயலாதவன் என்பதையும் ஒரு சிலர் சிந்தித்தபடியே உள்ளனர். இதன் விளைவாக மிகுந்த வெறுப்புடன், ஐந்து புலன்களை அடக்குதல் மற்றும் மனத்தினை அடக்குதல் போன்ற ஆத்மகுணங்களைக் கொண்டவர்களாக, தகுந்த உபசாரப் பொருள்களுடன் கூடியவர்களாக, ப்ரஹ்மத்தை அறிந்து அதிலேயே நிலைநிற்கும் ஒரு ஆசார்யனை அண்டுகிறார்கள். அந்த ஆசார்யனும், “நாஸம்வத்ஸர வாஸிநே ப்ரப்ரூயாத் - ஒரு வருடம் குருகுலவாசம் செய்யாதவனுக்கு உபதேசம் செய்யக்கூடாது – என்ற விதிக்கு ஏற்ப ஒரு வருடம் அவர்களை நன்றாகச் சோதித்து பின்னர் உபதேசிப்பானாக” என்ற சாஸ்த்ர விதிகளின்படி செய்கிறான். இது போன்ற விதிகளின் அடிப்படையில் இந்த உலகில் உள்ளவர்கள் இவரிடம் வந்து கேட்க, இதனைப் போன்றே இவரும் உபதேசித்தார் என்று கூறலாம் அல்லவோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, உபதேஷ்டாவான விவர் ஸக்ரமமாக உபஸத்தி பண்ணினவனுக்கொழிய உபதேசியோ மென்றிருக்கும் ப்ரஹ்மநிஷ்டராகில், அப்படி வந்து உபஸத்தி பண்ணினவர்களுக்கு ப்ரீதியோடே உபதேசிக்கை யொழிய அதிகாரிகளுக் குபதேசிக்கப் புக்கு, “ஏபாவம் பரமே” என்று “ஓ பாவம்! எனக்கிது பரமாவதே” என்று உபதேசோபக்ரமத்திலே வெறுத்துச் சொன்ன உக்தி சேராது; இவர் பக்கலுபதேசம் கேட்டவர்கள் ஸம்வத்ஸர வாஸிகளாகில், உபஹார பாணிகளாய் நாம் அநுவர்த்தித்தன்றோ பெற்றோ மென்றிருக்கை யொழிய, இவர்க்கு ப்ரதம சிஷ்யரானவர் “பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்” என்று ப்ரயோஜந சூந்யராகிலும், அவிதேயராகிலும் தம்முடைய செயலாலே எல்லாம் நன்றாம்படி திருத்திக்கொள்வா ரிவரென்று க்ருதஜ்ஞதையாலே உகந்து சொன்ன உக்தியும் சேராதென்கை. இப்படி ஆசார்யோக்தியும் சிஷ்யோக்தியுமாகையாலே முன் சொன்ன ஹேதுக்களாலே விமுகரைக் குறித்துபதேசிக்க உபதேசசுத்தியாலே ஸர்வரும் திருந்தி இவருடைய இழவுகளெல்லாம் தீர்ந்ததென்றே கொள்ளவேணுமென்ற தாய்த்து.
– (ப்ரஹ்மநிஷ்டர் ஆகில்) - உபதேசம் செய்பவராகிய நம்மாழ்வார், தகுந்த முறையுடன் வந்து கேட்பவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய்தும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்யமாட்டேன் என்றும் இருக்கின்ற ப்ரஹ்மநிஷ்டை ஆசார்யன் போன்றவர் என்றால், (ஏ பாவம் சேராது) - அவ்விதம் தன்னைப் பணிவுடன் வந்து அண்டுகிறவர்களுக்கு மட்டுமே மகிழ்வுடன் உபதேசம் செய்தல் அல்லாமல், தகுதியில்லாதவர்களுக்கு உபதேசம் செய்ய முனையும்போது, திருவாய்மொழி (2-2-2) - ஏ பாவமே – என்பதற்கு ஏற்ப “பாவமே! எனக்கு இது பரம் ஆவதே” என்று உபதேசத்தின் தொடக்கத்தில் இவர் வெறுப்புடன் உரைத்த பாசுரம் பொருந்தாமல் போகும். (ஸம்வத்ஸரவாஸிகள் ஆகில்) – நம்மாழ்வாரிடம் வந்து உபதேசம் பெற்ற அனைவரும் தகுந்த சாஸ்த்ர விதிகளின்படியே ஒரு வருடம் குருகுலவாஸம் செய்தவர்களே ஆவர் என்றால், தகுந்த தக்ஷிணை முதலானவை அளித்து அல்லவோ நாம் இவற்றை பெற்றோம் என்று எண்ணத் தொடங்குவர். இதன் விளைவாக, (பயன் அன்றாகிலும் சேராது) – நம்மாழ்வாருடைய முதன்மையான சிஷ்யராகிய மதுரகவியாழ்வார், “கண்ணிநுண் சிறுத்தாம்பு (10) - பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் – என்று பயனற்றவர்களாக இருந்தாலும், தகுந்த குணங்கள் ஏதும் அற்றவர்களாக இருந்தாலும், தம்முடைய செயல்கள் மூலம் அவை அனைத்தும் சீராகும்படியாக நம்மாழ்வார் அவர்களைத் திருத்து, தனது அடிமையாகக் கொள்வார்”, என்று செய்ந்நன்றி அறிந்து உரைத்த பாசுரம் பொருந்தாமல் போகும். இப்படியாக நம்மாழ்வாருடைய பாசுரமும், மதுரகவியாழ்வாருடைய பாசுரமும் உள்ளதன் காரணமாக, முன்பு கூறப்பட்ட காரணங்களால் (அதாவது சூர்ணை 203ல் கூறப்பட்ட பந்த புத்தி, அநர்த்தம் கண்டு பொறுக்க இயலாமை, மிகுந்த கருணை), பக்தி இல்லாதவர்கள் குறித்து உபதேசிப்பதாகவே உள்ளன என்றும், அத்தகைய உபதேசங்களின் தூய்மை காரணமாக அனைவரும் திருந்தினர் என்றும், இதன் விளைவாக இவருடைய அனைத்து குறைகளும் நீங்கின என்றும் கொள்ளவேண்டும்.