Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 205)
மூன்றாம் ப்ரகரணம்
க்யாதி லாப பூஜாபேக்ஷையற மலர் நாடி யாட்செய்ய, உய்யக்கொண்டு ஆரைக்கொண்டு வாளும் வில்லுங் கொண்டென்கிற இழவுகள் தீரப்பெற்றது.
இப்படி விமுகரான ஸம்ஸாரிகளைக் குறித்து இவ்வாழ்வாருபதேசித்தவிது ஸபலமாய்த்தோ வென்னுமாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார் (க்யாதிலாப) இத்யாதி. – அதாவது, “நீசனேன் நிறைவொன்றுமிலேன்” என்று தண்மைக் கெல்லையாகத் தம்மை நினைத்திருக்கையாலும், “கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ் செல்வம் நெருப்பாக” என்று ஐச்வர்யத்தை அக்நி ஸமமாகக் காண்கையாலும், “தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்” என்று பாகவத சேஷத்வத்தி னெல்லையிலே நிற்கிறவர்களுக்குத் தம்மை சேஷமாக நினைத்தும், “ஓதவல்ல பிராக்கள் நம்மையாளுடையார்கள் பண்டே” என்று இப்ப்ரபந்தத்தில் அந்வயித்தவர்களைத் தமக்கு சேஷிகளாக நினைத்து மிருக்கையாலும், க்யாதியிலும் லாபத்திலும் பூஜையிலும் அபேக்ஷையற்று, “நறிய நன்மலர் நாடி” என்கிறபடியே சேஷத்வ பரிமள யுக்தமாய் ச்லாக்யமான ஆத்ம புஷ்பங்களைத் தேடி “ஆட்செய்தாழிப்பிரானைச் சேர்ந்தவன்” என்று கைங்கர்ய ரூபமாக உபதேசிக்கையாலே ஜகத்தாகத் திருந்துகையாலும்,
– “இவ்விதம் பகவானிடம் ஈடுபாடு இல்லாத ஸம்ஸாரிகளை குறித்து நம்மாழ்வார் உபதேசித்த இவை பயன் அடைந்ததோ?”, என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார். (க்யாதி அபேக்ஷை அற) – திருவாய்மொழி (3-3-4) - நீசனேன் நிறைவொன்றுமிலேன் - என்று தழ்வுகளுக்கு எல்லையாகத் தன்னை எண்ணியபடி உள்ளதால், புகழில் எந்தவிதமான விருப்பமும் இல்லாமல். (லாப அபேக்ஷை அற) – திருவாய்மொழி (4-9-4) - கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ் செல்வம் நெருப்பாக – என்று ஐச்வர்யங்களை அக்னிக்கு நிகராகக் காண்பதால், லாபத்தில் எந்தவிதமான விருப்பமும் இல்லாமல். (பூஜா அபேக்ஷை அற) - திருவாய்மொழி (8-9-11) - தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் - என்று பாகவதர்களுக்குத் தொண்டு செய்தல் என்னும் எல்லையில் உள்ளவர்களுக்குத் தன்னை அடிமையாகக் கொண்டிருப்பதாலும், திருவாய்மொழி (9-1-11) - ஓதவல்ல பிராக்கள் நம்மையாளுடையார்கள் பண்டே - என்று இந்தத் திருவாய்மொழியில் ஈடுபட்டு நிற்பவர்களைத் தனது எஜமானர்களாகக் கொண்டிருப்பதாலும், பூஜையில் எந்தவிதமான விருப்பமும் இல்லாமல். (மலர் நாடி ஆள் செய்ய) – திருவாய்மொழி (5-5-11) - நறிய நன்மலர் நாடி – என்று அடிமைத்தனம் என்னும் பரிமளம் நிறைந்த சிறந்த ஆத்ம மலர்களைத் தேடியபடி, திருவாய்மொழி (4-10-11) - ஆட்செய்தாழிப்பிரானைச் சேர்ந்தவன் – என்று ஆட்செய்தல் என்பதான உபதேசங்களைச் செய்வதன் மூலம் இந்த உலகம் முழுவதும் திருந்துவதால்.
– “உம்மை யுய்யக்கொண்டு போகுறில்” என்று ஸம்ஸாரிகளுஜ்ஜீவந நிமித்தமாக வுண்டான இழவும், “ஆரைக்கொண் டென்னுசாகோ” என்று தமக்கு உசாத்துணை யில்லாமையால் வந்தவிழவும், “வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை” என்று அவன் ஸௌகுமார்யமறிந்து பரிகைக்கொருவருமில்லை என்கிற விழவும் தீரப் பெற்றதென்கை. எல்லாருமுஜ்ஜீவித்து தமக்கு உசாத்துணையாய் அவனுக்கு மங்களாசாஸநமும் பண்ணுகையாலே மூன்றிழவும் தீருமிறே. “மலர் நாடி” என்கிறவிதுக்கு, “நறிய நன்மலர் நாடி” என்கிறவிது சொல்லும்போது ஸர்வவ்யாக்யாநங்களிலும் “பரிமளத்தையுடைத்தாய் ச்லாக்யமான புஷ்பங்கள் போலே ஆராய்ந்து சொன்னவாயிரம்” என்று ப்ரபந்த விசேஷணமாகச் சொல்லியிருக்கையால், இவர்க்கு நினைவு ஆத்ம புஷபங்களைத் தேடி என்கிறவிதென்று கொள்ளவேணும். அன்றிக்கே “மலர் நாடி” என்கிறவிது, “நாடாத மலர்” என்கிறத்தை நினைத்தருளிச் செய்தாரென்று கொள்ளில் ஒரு விரோதமுமில்லை. “வாடாத மலரடிக்கீழ்வைக்க” என்று கைங்கர்ய ப்ரஸங்க முண்டாகையாலே, “ஆட்செய்ய” என்றத்தோடே சேருமிறே.
– (உய்யக் கொண்டு என்கிற இழவும்) - திருவாய்மொழி (4-10-9) - உம்மை யுய்யக்கொண்டு போகுறில் - என்பதற்கு ஏற்ப ஸம்ஸாரிகள் கரையேறுவதன் காரணமாக ஏற்பட்ட இழப்பு. (ஆரைக்கொண்டு என்கிற இழவும்) – திருவாய்மொழி (7-3-4) - ஆரைக்கொண் டென்னுசாகோ – என்பதற்கு ஏற்ப தனக்குப் பேச்சுத்துணை இல்லாமையால் ஏற்பட்ட இழப்பு. (வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும்) - திருவாய்மொழி (8-3-3) - வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை – என்பதற்கு ஏற்ப பகவானுடைய மென்மையை உணர்ந்து அவனிடம் அன்பு காண்பிப்பதற்கு யாரும் இல்லை என்ற இழப்பு. (தீரப் பெற்றது) - நீங்கியது என்று கருத்து. அதாவது அனைவரும் கரையேற்றப் பெற்று, தன்னுடைய பேச்சுத் துணையாக இருந்து, அவனுக்கு வாழ்த்து கூறியபடி உள்ளதால், இந்த மூன்றுவிதமான இழப்புகளும் இவருக்கு நீங்கின என்று கருத்து. சூர்ணையில் உள்ள “மலர் நாடி” என்பதற்கு திருவாய்மொழி (5-5-11) - நறிய நன்மலர் நாடி - என்ற பாசுர வரியை உரைக்கும்போது, அனைத்து வ்யாக்யானங்களிலும், “பரிமளத்துடன் கூடியதான உயர்ந்த மலர்கள் போன்று ஆராய்ந்து அருளிச்செய்த ஆயிரம்” என்று திருவாய்மொழிக்கு சிறப்பாக உரைத்த காரணத்தால், இவருடைய சிந்தனையானது ஆத்மமலர்களைத் தேடியே உள்ளது என்று கொள்ளவேண்டும். அல்லது “மலர் நாடி” என்ற சொற்றொடருக்கு, திருவாய்மொழி (1-4- 9) - நாடாத மலர் நாடி - என்ற திருவாய்மொழியை எண்ணியபடி உரைத்தார் என்று கூறினாலும் எந்தவிதமான முரண்பாடும் இல்லை; காரணம், திருவாய்மொழி (1-4-9)- வாடாத மலரடிக்கீழ்வைக்க – என்று கைங்கர்யம் குறித்து உரைப்பதால், இது அடுத்து உள்ளதான் “ஆட்செய்ய” என்பதுடன் சேர்வதாகவே உள்ளது.