Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 204)

மூன்றாம் ப்ரகரணம்

தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவரடி பணிந்தவர்க்குமே இவையுள்ளது.

மற்றுமிப்படி யுபதேசிப்பார் பலருமுண்டோ வென்னுமாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (தாய்க்கும்) இத்யாதி.

– “இவ்விதம் உபதேசித்தவர்கள் வேறு யாரேனும் உண்டோ”, என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, தன்பக்கலிலே விபரீதபுத்தியைப் பண்ணி நிற்கிற பாபிஷ்டனான ராவணனைக் குறித்து, “மித்ரமெளபயிகம் கர்த்தும்”, “விதிதஸ்ஸஹி தர்மஜ்ஞ:” இத்யாதிகளாலே ஹிதோபதேசம் பண்ணின “நித்யைவைஷா ஜகந்மாதா” என்கிற ஸர்வலோக ஜநநியான பிராட்டிக்கும். திருநாமம் சொன்னதுவே ஹேதுவாகச் சீறித் தன்னை அதிக்ரூரமான தண்டங்களைப் பண்ணும்படி பகவதத்யந்த விமுகனாய் பாபிஷ்டாக்ரகண்யனான ஹிரண்யனைக் குறித்து, “ஸர்வபூதாத்மகே தாத ஐகந்நாதே ஜகந்மயே”, “உர்வ்யாமஸ்தி” இத்யாதிகளாலே ஹிதத்தை யுபதேசித்தும், விமுகரான அஸுரபுத்ரர்களைக் குறித்து, “அபார ஸம்ஸார விவர்த்தநேஷு மாயாத தோஷம் ப்ரஸபம் ப்ரவீமி, ஸர்வத்ர தைத்யாஸ் ஸமதாமுபேத ஸமத்வமாராதந மச்யுதஸ்ய” இத்யாதிகளாலே ஹிதத்தை யுபதேசித்தும் செய்த “மீளவவன் மகனை” என்கிற ஹிரண்ய புத்ரனான ப்ரஹ்லாதனுக்கும். – “யாவந்ந லங்காம் ஸமபித்ரவந்தி வலீமுகா: பர்வத கூடமாத்ரா:, தம்ஷ்ட்ராயுதாச்சைவ நகாயுதாச்ச ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ”, “யாவந் நக்ருஹ்ணந்தி சிராம்ஸி பாணா ராமேரிதா ராக்ஷஸ புங்கவாநாம், வஜ்ரோபமா வாயு ஸமாந வேகா ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ” என்றிப்படி தனக்கு ஹிதம் சொன்னது பொறாமல், “த்வாம் து திக் குலபாம் ஸகம்” என்று திக்கரித்த க்ரூரனான ராவணனைக் குறித்து, “ஸுலபா: புருஷா ராஜந் ஸததம் ப்ரியவாதிந:, அப்ரியஸ்யது பத்யஸ்ய வக்தா ச்ரோதா ச துர்லப:, பத்தம் காலஸ்ய பாசேந ஸர்வபூதாபஹாரிணா, நநச்யந்த முபேக்ஷேயம் ப்ரதீப்தம் சரணம் யதா” என்று தொடங்கி ஹிதோபதேசம் பண்ணின “அவன் தம்பிக்கே” என்கிற ராவணுநுஜனான ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கும். பகவத்விமுகராய் அந்யபரராய்த் திரிகிற ஸம்ஸாரிகளை விட மாட்டாமல், “வீடுமின் முற்றவும்” தொடங்கிப் பலவிடங்களிலும் பலபடியாலும் உபதேசித்த விவ்வாழ்வார் தமக்கும், ஓராண்வழியாகப் பூர்வர்களுபதேசித்துப் போந்த நியமத்தைக் குலைத்துப் பலரையு முபதேசிக்கும்படி பண்ணியும், பலகால் நடந்து துவண்டு கேட்ட பரமார்த்தத்தை ஓலக்கமாக வைத்து உபதேசித்தும், “வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜந்ம ஸந்ததி:, தஸ்யாமந்யதமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ” என்று ருசி விச்வாஸ ஹீனரையும் நிர்ப்பந்தித்து சரமோபாயஸ்த்தராக்கியும், இப்படி அதிகாரம் பாராமல் அவர்கள் துர்க்கதியைப் பார்த்து உபதேசித்தருளும் ஸ்வபாவராய், “பாமன்னு மாறனடி பணிந்துய்ந்தவன்” என்று நிரூபகமாயிருக்கும் எம்பெருமானார்க்குமே இவ் வாகாரங்க ளுள்ளதென்கை. (இவை) என்று கீழ்ச்சொன்ன ஸம்பந்த ஜ்ஞாநம், அநர்த்தா ஸஹத்வம், அநவதிக க்ருபை ஆகிற மூன்றையும் பராமர்சிக்கிறது.

(தாய்க்கும்) - சீதையாகிய தன்னிடம் தகாத புத்தியைக் கொண்டு நிற்கின்ற பாபியாகிய இராவணனிடம், ஸுந்தரகாண்டம் (21-19) - மித்ரமெளபயிகம் கர்த்தும் – இராமன், நீ நட்பு கொள்வதற்கு ஏற்றவன் ஆவான் - என்றும், ஸுந்தரகாண்டம் (21-20) - விதிதஸ்ஸஹி தர்மஜ்ஞ: - இராமன் அனைத்து தர்மங்களையும் நன்கு அறிந்தவன் - என்றும் பலவிதங்களிலும் அனைத்துவிதமான நன்மைகளையும் உபதேசித்த, ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-8-17) - நித்யைவைஷா ஜகந்மாதா - அனைத்து உயிர்களுக்கும் தாயாக உள்ளவள் - என்பதற்கு ஏற்ப அனைத்து லோகங்களுக்கும் தாயாக உள்ள பெரியபிராட்டிக்கும் [கடந்த சூர்ணையில் கூறப்பட்ட ஸம்பந்த ஜ்ஞாநம், அநர்த்தா ஸஹத்வம், அநவதிக க்ருபை ஆகியவை உள்ளன]. (மகனுக்கும்) - பகவானுடைய திருநாமத்தை உரைத்ததையே காரணமாகக் கொண்டு, அவன் மீது கோபத்துடன் சீறியபடி, பலவிதமான கொடிய அபராதங்களைச் செய்தபடி, பகவானை அடியுடன் வெறுப்பவனாகவும், பாபம் செய்பவர்களில் முதலிடத்தில் உள்ளவனும் ஆகிய ஹிரண்யனிடம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-9-37) - ஸர்வபூதாத்மகே தாத ஐகந்நாதே ஜகந்மயே – அனைத்து உயிர்களின் ஆத்மாவாக உள்ளவனும், அனைத்திற்கும் தந்தையும், இந்த ஜகத்தின் நாதனும், இந்த ஜகத்தாகவே உள்ளவனும் - என்றும், உர்வ்யாமஸ்தி - எங்கும் உள்ளான் - என்றும் பலவிதங்களில் நன்மையை உபதேசித்தும். பகவானிடம் சற்றும் விருப்பம் இல்லாத அஸுர புத்திரர்களிடம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-7-89) - அபார ஸம்ஸார விவர்த்தநேஷு மாயாத தோஷம் ப்ரஸபம் ப்ரவீமி, ஸர்வத்ர தைத்யாஸ் ஸமதாமுபேத ஸமத்வம் ஆராதநம் அச்யுதஸ்ய - அஸுரர்களே! எந்தவிதமான ஆழமும் இல்லாத இந்த உலக வாழ்வில் உள்ள சுழற்சியான தேவர்கள் முதலான பிறவிகளைக் கண்டு மகிழாதீர்கள். ஒரே போன்று இருப்பதையே அடையுங்கள். இத்தகைய தன்மையே அச்சுதனுக்கு மகிழ்வை ஏற்படுத்தும் - என்பதான பலவிதமான நன்மைகளை உபதேசித்தபடி இருந்தவனாகிய பெரியாழ்வார் திருமொழி (1-6-2) – மீள அவன் மகனை - என்று கூறப்பட்ட ஹிரண்யனுடைய புத்திரனாகிய ப்ரஹ்லாதனுக்கும் [கடந்த சூர்ணையில் கூறப்பட்ட ஸம்பந்த ஜ்ஞாநம், அநர்த்தா ஸஹத்வம், அநவதிக க்ருபை ஆகியவை உள்ளன]. (தம்பிக்கும்) - யுத்ததகாண்டம் (14-3) - யாவந்ந லங்காம் ஸமபித்ரவந்தி வலீமுகா: பர்வத கூடமாத்ரா:, தம்ஷ்ட்ராயுதாச்சைவ நகாயுதாச்ச ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ - மலைச்சிகரம் போன்று உள்ளவையும், தங்களுடைய பற்களையே ஆயுதங்களாகக் கொண்டவைகளும் ஆகிய வானர சேனைகள் இலங்கையை வந்து அடைவதற்கு முன்பாக சீதாப்பிராட்டியை இராமனிடம் அளிக்கவேண்டும - என்றும், யுத்தகாண்டம் (14-4) - யாவந் நக்ருஹ்ணந்தி சிராம்ஸி பாணா ராமேரிதா ராக்ஷஸ புங்கவாநாம், வஜ்ரோபமா வாயு ஸமாந வேகா ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ - இராமனால் தொடுக்கப்பட்டவையும், வஜ்ராயுதம் போன்றவையும், காற்று போன்று வேகம் கொண்டவையும் ஆகிய அம்புகள், அசுரர்களுடைய தலைகளை அறுப்பதற்கு முன்பாக சீதையை இராமனிடம் அளிக்கவேண்டும் - என்றும் தனக்கு உரைக்கப்பட்ட நன்மைகளைப் பொறுத்துக் கொள்ள இயலாமல், யுத்தகாண்டம் (16-51) – த்வாம் து திக் குலபாம் ஸகம் – அசுரர்களுடைய குலத்திற்குத் தீமையைச் செய்யும் உன்னை, பழித்தே கூறவேண்டும் - என்று தள்ளிய இராவணனிடம், யுத்தகாண்டம் (16-20) - ஸுலபா: புருஷா ராஜந் ஸததம் ப்ரியவாதிந:, அப்ரியஸ்யது பத்யஸ்ய வக்தா ச்ரோதா ச துர்லப: - எப்போதும் மகிழ்வை அளிக்கும் சொற்கள் கூறுபவர்கள் கிடைப்பார்கள். ஆனால் மகிழ்வை ஏற்படுத்தாத நன்மையைக் கூறுபவனும் கேட்பவனும் கிட்டமாட்டார்கள் – என்றும், யுத்த (16-21) - பத்தம் காலஸ்ய பாசேந ஸர்வபூதாபஹாரிணா, நநச்யந்த முபேக்ஷேயம் ப்ரதீப்தம் சரணம் யதா - எந்தவிதமான கருணையும் இன்றி அனைத்து உயிர்களையும் கவர்கின்ற யமனின் பாசக்கயிற்றால் கட்டுப்பட்டவனும், அழியக் கூடியவனும் ஆகிய உன்னை, எரியும் வீட்டைப் போன்று நான் வெறுக்கமாட்டேன் -என்றும் கூறிய, திருவாய்மொழி (7-6-9) – அவன் தம்பிக்கே - என்பவனாகிய இராவணனுடைய தம்பியாகிய விபீஷணனுக்கும் [கடந்த சூர்ணையில் கூறப்பட்ட ஸம்பந்த ஜ்ஞாநம், அநர்த்தா ஸஹத்வம், அநவதிக க்ருபை ஆகியவை உள்ளன]. (இவர்க்கும்) - பகவானிடம் பக்தி அற்றவர்களாகவும், உலக விஷயங்களில் மட்டுமே நோக்கம் கொண்டவர்களாகவும் உள்ள இந்த ஸம்ஸாரிகளை விட இயலாமல், திருவாய்மொழி (1-2-1) - வீடுமின் முற்றவும் – என்று தொடங்கிப் பல இடங்களிலும் பலவிதங்களிலும் உபதேசித்த நம்மாழ்வாராகிய இவருக்கும் [கடந்த சூர்ணையில் கூறப்பட்ட ஸம்பந்த ஜ்ஞாநம், அநர்த்தா ஸஹத்வம், அநவதிக க்ருபை ஆகியவை உள்ளன]. (இவர் அடிபணிந்தவர்க்குமே) - ஓராண்வழியாக பூர்வாசார்யர்கள் உபதேசித்து வந்த முறையை விலக்கி, பலரையும் உபதேசிக்கும்படியாகச் செய்தும், பலமுறை நடந்து சென்று கேட்டறிந்த உயர்ந்த உண்மையை சபையின் நடுவே வைப்பது போன்று அனைவருக்கும் உபதேசித்தும், சாண்டில்ய ஸ்ம்ருதி – வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜந்ம ஸந்ததி:, தஸ்யாமந்யதமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ – உனக்குத் தொடர்ந்து வருகின்ற பல பிறவிகளும் பயனற்றப் போயின. அவற்றில் இந்த பிறவியில் பகவானைச் சரணம் அடைவாயாக - என்று ஆசை இல்லாதவர்களையும் நம்பிக்கை அற்றவர்களையும் வற்புறுத்தி சரணாகதியில் ஈடுபடுத்தியும், இப்படியாக அவர்களுடைய தகுதிகளை ஆராயாமல் அவர்களுடைய தாழ்ந்த நிலையை மட்டுமே ஆராய்ந்து உபதேசம் செய்தருள்கின்ற தன்மை கொண்டபடியும், இராமாநுச நூற்றந்தாதி (1) – பாமன்னு மாறன் அடி - என்று கூறப்படுகின்றவரும் ஆகிய எம்பெருமானாருக்கும் [கடந்த சூர்ணையில் கூறப்பட்ட ஸம்பந்த ஜ்ஞாநம், அநர்த்தா ஸஹத்வம், அநவதிக க்ருபை ஆகியவை உள்ளன]. (இவை உள்ளது) - இந்தத் தன்மைகள் உள்ளன. “இவை” என்ற சொல்லானது, கடந்த சூர்ணையில் கூறப்பட்டதான “ஸம்பந்த ஞானம், மற்றவர்கள் தாழ்வு கண்டு பொறுத்துக் கொள்ளாமை, மிகுந்த கருணை” ஆகியவற்றைக் குறிக்கிறது.