Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 203)

மூன்றாம் ப்ரகரணம்

ஆனால் இங்ஙனன்றிக்கே அஜ்ஞரான ஸம்ஸாரிகளுக்கு உபதேசிக்கிறவளவில் ஸம்ஸார விரக்தராய் ஆத்மகுணோபேதராய் ஸம்யகுபஸந்நரானவர்களுக்கு உபதேசிக்கு மர்த்தத்தை, பகவத்விமுகராய் ப்ரயோஜநாந்தரபரராய் அநுவர்த்தந ஹீநரானவர்களுக்கு வலியப் பிடித்து உபதேசிப்பா னென்னென்னு மாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார் மேல் (நண்ணாதார்) என்று தொடங்கி.

– அதாவது, “நண்ணாதார் முறுவலிப்ப”விலும், “மெய்யில் வாழ்க்கை”யிலும், “ஊனேறு செல்வத்”திலும், “ஆசைவாய்ச் சென்ற சிந்தை”யிலும் சொல்லுகிறபடியே பகவத் விமுக லோக யாத்ரையிலும், மாம்ஸாஸ்ருகாதி மல ரூப தேஹத்திலும், கர்மோபாதிகங்களான தேஹாநு பந்திகளிலுமுண்டான தோஷதர்சநத்தாலே, “பரீசஷ்ய லோகாந்” இத்யாதிப்படியே பிறந்த நிர்வேதத்தோடே, – “ஆஸ்திகோ தர்மசீலச்ச சீலவாந் வைஷ்ணவச்சுசி:, கம்பீரச் சதுரோ தீரச் சிஷ்ய இத்யபிதீயதே” என்றும், “அமாநித்வ மதம்பித்வ மஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ஆசார்யோபாஸநம் செளசம் ஸ்தைர்யமாத்ம விநிக்ரஹ:” இத்யாதியாலும் சொல்லப்படுகிற ஆஸ்திக்யாதிகளும் அமாநித்வாதிகளுமாகிற சிஷ்ய லக்ஷணமான ஆத்ம குணங்களாலதிகராய்; “ப்ரணிபத்யாபி வாத்யச” என்றும், “தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா” என்றும் சொல்லுகிறபடியே பக்நாபிமாநராய்க் கொண்டு ப்ரணிபாத அபிவாதந பரிப்ரச்ந ஸேவையாகிற விவற்றிலே தத்பரராய் சிரகாலம் அநுவர்த்தித்தவர்களுக்கு, “உளங்கொள் ஞானத்து வைம்மின்” என்றும், “பேசுமளவன்றிது வம்மின் நமர்! பிறர் கேட்பதன் முன்” என்றும் இப்படி அஷட்கர்ணமாக உபதேசிக்க வேண்டும் அர்த்த விசேஷத்தை, – “வம்மின் புலவீர்" என்று வலியவழைத்து, “சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினே” என்று நான் சொல்லுகிறவிது உங்களுக்கு விரோதமாய்த் தோற்றியிருந்ததாகிலும் சொல்லுவன். இத்தைக் கேளுங்கள் என்று அபேக்ஷித்து, “ஈனச்சொல்லாயினுமாக” என்கையாலே “ஆகிலுமாக” என்று பொகடு பொருளாகவும், “மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத் தெவ்வுயிர்க்கும்” என்றும், “திண்ண நாமறியச் சொன்னோம்” என்றும் ஸர்வர்க்கும் ப்ரஸித்தமாம் படியாகவும், இப்படி அடைவுகேடாக, “இதம் தே நாதபஸ்காய” இத்யாதியால் சொன்ன அநதிகாரிகளுக்கு உபதேசிக்கிறது, – “ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமான்” என்று நித்ய விபூதியிலுள்ளாரோபாதி லீலாவிபூதியிலுள்ளார்க்கும் அவனோடு ஸம்பந்தமொத்திருக்க, இவர்கள் அவனையிழந்து கிடக்கவொண்ணாதென்கிற ஸம்பந்த ஜ்ஞாநமும், “கண்டாற்றே னுலகியற்கை” என்று இவர்கள் ஸம்ஸாரத்தில் படுகிற அநர்த்தங்கண்டு பொறுக்கமாட்டாத ஸ்வபாவமும், தாவந்மாத்ரமன்றிக்கே “அருள் கண்டீரிவ் வுலகினில் மிக்கது” என்று, “க்ஷிபாமி நக்ஷமாமி” என்று ஈச்வரன் கைவிட்டவர்களையும் திருத்தியல்லது நிற்கமாட்டாத கரைபுரண்ட காருண்யமுமிறே என்கை. பந்தபுத்தியும் அநர்த்தா ஸஹத்வமும் இவர் தம்முடைய உக்தி ஸித்தமாகையாலும் க்ருபாதிக்யம் சிஷ்யோக்தி ஸித்தமாகையாலுமாய்த்து இப்படி ப்ரஸித்தி தோற்றவருளிச்செய்தது.

– ஆனால் கடந்த சூர்ணையில் கூறப்பட்டது போன்று அல்லாமல், ஏதும் அறியாதவர்களாகிய ஸம்ஸாரிகளுக்கு உபதேசிக்கும்போது, ஸம்ஸார வாழ்வில் விரக்தி அடைந்தவர்களாகவும், ஆத்மகுணங்கள் நிறைந்தவராகவும், அருகில் அண்டி வந்து மிகவும் ஈடுபாட்டுடன் விரும்புபவர்களாகவும் உள்ளவர்களுக்கு உபதேசிக்கத் தகுந்த ஆழ்பொருள்களை, பகவானிடம் எந்தவிதமான ஈடுபாடும் இன்றி உள்ளவர்களும், மற்ற பலன்களை எதிர்ப்பார்த்தபடி உள்ளவர்களும், விருப்பத்துடன் அருகில் வராமல் உள்ளவர்களும் ஆகியவர்களுக்கு வலிய வந்து ஏன் உபதேசம் செய்யவேண்டும் என்பதற்கு விடை அருளிச்செய்கிறார். (நண்ணாதார் மெய்யிலூன் ஆசை நிர்வேதத்தோடே) திருவாய்மொழி (4-9-1) – நண்ணாதார் முறுவலிப்ப – என்பதிலும், பெருமாள்திருமொழி (3-1) – மெய்யில் வாழ்க்கை – என்பதிலும், பெருமாள்திருமொழி (4-1) – ஊனேறு செல்வத்து - என்பதிலும், பெரியாழ்வார் திருமொழி (4-5-1) – ஆசைவாய்ச் சென்ற சிந்தை – என்பதிலும் கூறுவதற்கு ஏற்ப, பகவானிடம் சிறிதும் ஈடுபாடு இல்லாதபடியான வாழ்விலும், மாமிசம் இரத்தம் போன்றவற்றால் ஆகிய சரீரத்திலும், கர்மங்கள் காரணமாக வந்து சேர்ந்த சரீரத்துடன் தொடர்பு கொண்ட பொருள்களிலும் உள்ள பலவிதமான தோஷங்களை உணர்த்த காரணத்தால், முண்டக உபநிஷத் - பரீசஷ்ய லோகாந் - பலன்களை ஆராய்ந்த அந்தணன் ஒருவன் - என்பதற்கு ஏற்றபடி உண்டாகும் வெறுப்புடன். (ஆஸ்திக்ய அமாநித்வாதிகள் விஞ்சின) - ஆஸ்திகோ தர்மசீலச்ச சீலவாந் வைஷ்ணவச்சுசி:, கம்பீரச் சதுரோ தீரச் சிஷ்ய இத்யபிதீயதே – சாஸ்த்ரங்களில் நம்பிக்கை உள்ளவனும், தர்மங்களைக் கைக்கொண்டவனும், ஒழுக்கம் நிறைந்தவனும், விஷ்ணுவிடம் பக்தி கொண்டவனும், தூய்மையானவனும் ஆகிய ஒருவன் சிஷ்யன் எனப்படுகிறான் - என்றும், கீதை (13-7) - அமாநித்வ மதம்பித்வ மஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ஆசார்யோபாஸநம் செளசம் ஸ்தைர்யமாத்ம விநிக்ரஹ: - தற்பெருமை இன்மை, தன்னிடம் இல்லாத நற்குணங்களை இருப்பதாகக் காண்பித்துக் கொள்ளாமை, எந்த உயிரையும் துன்புறுத்தாமை, பொறுமையுடன் இருந்தல், மனம் சொல் செயல் போன்றவற்றில் ஒரே போன்று இருத்தல், ஆசார்யனைப் பணிதல், உள்ளும்புறமும் தூய்மையாக இருத்தல், மன உறுதியுடன் இருத்தல், சரீரத்தைக் கட்டுப்படுத்துதல் - என்றும் கூறுவதற்கு ஏற்ப ஆஸ்திக்யம் மற்றும் அமாநித்வம் போன்றதான சிஷ்யனுடைய லக்ஷணங்களாக உள்ள ஆத்மகுணங்களில் உயர்ந்தவர்களாக. (ப்ரணிபாதாபிவாதந பரிப்ரச்ந ஸேவாபரர்க்கு) - ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-1-1) - ப்ரணிபத்யாபி வாத்யச - கைகள் குவித்து வணங்கியும், அபிவாதநம் செய்தும் - என்றும், கீதை (4-34) - தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா - அவர்களை சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்குவதாலும், பணிவிடைகள் செய்வதாலும் – என்றும் கூறுவதற்கு ஏற்ப எந்தவிதமான கர்வமும் அற்றவர்களாக இருந்தபடி விழுந்து வணங்குதல், அபிவாதநம் செய்தல், கூறுதல், கேட்டல், பணிவிடை செய்தல் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டு பலகாலம் தன்னைச் சார்ந்தவர்களுக்கு, (உளங்கொள் பேசுமளவன்றென்னும் அர்த்தத்தை) - திருவாய்மொழி (4-10-9) - உளங்கொள் ஞானத்து வைம்மின் – என்றும், பெரியதிருமொழி (2-4-9) - பேசுமளவன்றிது வம்மின் நமர்! பிறர் கேட்பதன் முன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ளதான ஆறு காதுகள் இல்லாத ஒருவருக்கு மட்டுமே உபதேசம் செய்யவேண்டியதான ஆழ்பொருள்களை. (வம்மின்) - திருவாய்மொழி (3-9-6) - வம்மின் புலவீர் – என்பதற்கு ஏற்ப வலிய அழைத்து. (விரோதம்) - திருவாய்மொழி (3-9-1) - சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினே - என்பதற்கு ஏற்ப, “நான் உங்களுக்கு உரைக்கும் இவை அனைத்தும் விரோதமாகத் தோன்றினாலும், நான் உரைப்பேன். கேளுங்கள்”, என்று விருப்பத்துடன். (ஈனச்சொல்) - திருவிருத்தம் (99) - ஈனச்சொல்லாயினுமாக - என்பதால் “ஆகிலும் ஆக” என்று பொகடு பொருளாகவும். (எவ்வுயிர்க்கும் அறிய என்று) - திருவாய்மொழி (9-1-7) - மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத் தெவ்வுயிர்க்கும் – என்றும், திருவாய்மொழி (10-2-5) – திண்ண நாமறியச் சொன்னோம் – என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைவருக்கும் சென்று சேரும்விதமாகவும், (அடைவுகெட) – இவ்விதமாக முறை தவறி. (அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது) - கீதை (18-67) – இதம் தே நாதபஸ்காய - இதனைத் தகுதி அற்றவர்களுக்கு உரைத்தல்கூடாது – என்று கூறுவதற்கு ஏற்ப அதிகாரிகள் அல்லாதவர்களுக்கு உபதேசம் செய்வதன் காரணம் என்னவென்றால். – (ஞாலத்தார் பந்தபுத்தியும்) – திருவாய்மொழி (4-5-8) - ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமான் - என்பதற்கு ஏற்ப பரமபதத்தில் உள்ளவர்கள் போன்று இந்த உலகில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு அவனுடன் உள்ள ஸம்பந்தம் என்பது ஒத்துள்ளது என்றாலும், இவர்கள் அவனை இழந்து நிற்கக்கூடாது என்பதான ஸம்பந்த ஞானமும். (அநர்த்தம் கண்டு ஆற்றாமையும்) – திருவாய்மொழி (4-9-3) - கண்டாற்றே னுலகியற்கை – என்பதற்கு ஏற்ப இவர்கள் இந்த ஸம்ஸாரத்தில் இருந்தபடியே அடைகின்ற கேட்டினைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாத தன்மையும். (மிக்க க்ருபையுமிறே) - அது மட்டும் அல்லாமல், கண்ணிநுண்சிறுத்தாம்பு (8) - அருள் கண்டீரிவ் வுலகினில் மிக்கது – என்பதற்கு ஏற்ப கீதையில் – க்ஷிபாமி ந க்ஷமாமி - தள்ளுகிறேன், பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்று ஸர்வேச்வரனால் கைவிடப்பட்டவர்களையும் திருத்தினால் அல்லாமல் ஓயாத உயர்ந்த கருணையும் ஆகும். பந்தபுத்தி மற்றும் ஸம்ஸாரிகள் அடையும் கேட்டைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாமை ஆகிய இரண்டையும் திருவாய்மொழி மூலம் கூறுவதாலும், மிகுந்த கருணை என்பதை நம்மாழ்வாருடைய சிஷ்யராகிய மதுரகவியாழ்வார் சொற்கள் மூலம் கூறுவதாலும், இவர் இவ்விதம் அனைவருக்கும் சென்று சேரும்விதத்தில் உரைத்தது விளங்குகிறது.