Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 202)
மூன்றாம் ப்ரகரணம்
இருத்து மெண்டானாய்ப் பொய் கலவாது அன்பு செய்து பற்றிலனாய் க்ஷுத் த்ருட் பீடித நிர்த்தநரைப் போலே கண்டு கொண்டுண்டு பருகிப் பரிஜநாதிகளோடே தன்னைத் தந்து என்செய்வ னென்றே யிருந்து அகில பரத்தையும் ஸமர்ப்பிக்க அது சுமந்து அல்லு நன்பகலும் போகு என்றாலும் அகல்வானு மல்லனாய் போகே லென்றால் உகப்பையுந் தவிர்ந்து விதி வகையே நடத்துமவனே உபதேச ஸத்பாத்ரம்.
ஆக ஜீவேச்வரர்களுக்குப் பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுகைக்கு ஹேதுக்களை தர்சிப்பித்தாராய் நின்றார் கீழ், இப்படி இவருபதேசிப்பரானாலும் சிஷ்ய லக்ஷண யோக்யதை யில்லாத வீச்வரன் உபதேசத்துக்கு முக்யபாத்ரமன்றே என்னுமாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறர் மேல் (இருத்துமெண்டானாய்) என்று தொடங்கி.
– இப்படியாக ஸம்ஸாரிகள் மற்றும் ஈச்வரன் ஆகியோருக்கு பலமுறை நன்மை தீமைகளை உரைத்த காரணத்தை அருளிச்செய்தார். இவ்விதம் இவர் உபதேசித்தாலும், சிஷ்யனுக்கான லக்ஷணத்தில் ஸர்வேச்வரன் பொருந்தமாட்டான் என்னும்போது, உபதேசத்திற்கு அவன் முக்கியமான பாத்திரம் அல்ல அல்லவோ என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஸச்சிஷ்யனுனவன் ஆசார்யனை ததபிமத ஸ்தலத்திலே வைத்து தச்சந்தாநுவர்த்தியாய் தத்விக்ரஹத்திலே புரையற்ற விருப்பமுடையனாய், ஸகல ஸ்நேஹத்தையுமவன் பக்கலிலே பண்ணி ததிதரங்களிலே ஸங்கமற்று, மிடியனும் பசியனும் விடாயனும் தனமும் சோறும் தண்ணீரும் பெற்றாப்போலே அத்யபி நிவேசத்தோடே யவனை யனுபவித்து, “சரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத்” என்கிறபடியே தன்னாத்மாத்மீயங்களை ஆசார்யனுக்கு ஸமர்ப்பித்து எல்லாம் செய்தாலும், “க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாத் ந தத்துல்யம் கதஞ்சந” என்கிறபடியே ஆசார்யன் பண்ணின மஹோபகாரத்துக்கு ஸத்ருசமல்லாமையாலே குறைவாளனுய், ஆசார்யன் தன்னுடைய தேஹயாத்ரா பரமெல்லாம் தன் மேலே பொகட்டிருக்கத் தான் அதடங்கலும் சுமந்து, திவாராத்ர விபாகமற அவனைப் பிரியாதே அவன் நிக்ரஹித்து “போ” என்றாலும் போகாதானாய், அவனுக்கநிஷ்டமானால் தனக்கு உகப்பானவற்றையும் விட்டு ஆசார்யன் விதித்தபடியே நடத்துமவனாகையாலே. – “இருத்தும் வியந்தென்னைத் தன் பொன்னடிக்கீழ்” என்று இவர்க் கபிமதமான விடத்தே இவரை யிருத்தி, “என்னெண்டானான்” என்று இவர் நினைவிலே யொழுகுவானாய், “பொய் கலவாதென் மெய் கலந்தான்” என்று இவர் திருமேனியில் பண்ணின விருப்பத்திலே புரையின்றிக்கே, “அந்தாமத்தன்பு செய்து” என்று பரமபதத்தில் பண்ணும் வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ணி, “பற்றிலனீசனும்” என்று இவர் பக்கல் ஸங்கத்தாலே யங்குள்ளார் பக்கல் ஸங்கத்தையும் விட்டு, “இருந்தான் கண்டு கொண்டு” என்றும், “என்னை முற்றவும் தானுண்டான்” என்றும், “தானென்னை முற்றப் பருகினான்” என்றும் சொல்லுகிறபடியே நிர்த்தநன் நிதி கண்டாற்போலவும், பசித்தவன் சோறு கண்டாற்போலவும், தாஹித்தவன் தண்ணீர் கண்டாற்போலவும், அத்யந்தாபிநிவேசத்தோடே யிவரை யநுபவித்து, – “பரிஜந பரிபர்ஹா பூஷணாந்யாயுதாநி ப்ரவர குணகணாச்ச ஜ்ஞாந சக்த்யாதயஸ் தே, பரமபதமதாண்டாக்யாத்ம தேஹஸ் ததாத்மா வரத ஸகலமேதத் ஸம்ச்ரிதார்த்தம் சகர்த்த” என்றும், “எனக்கே தன்னைத் தந்த கற்பகம்” என்றும் சொல்லுகிறபடியே தன் விபூதியையும் தன்னையு மிவர்க்குக் கொடுத்து, “உன்னடியார்க்கென் செய்வனென்றே யிருத்தி” என்கிறபடியே இவர்க்கெல்லாம் செய்தாலும் தானிழவாளனாய், ஆத்மாத்மீயாகில பரத்தையும் நமச் சப்தமுகேந விவர் ஸமர்ப்பிக்க; “வேங்கடத்துறைவார்க்கு நமவென்னலாம் கடமையது சுமந்தார்கட்கு” என்னும்படி “பூயிஷ்ட்டாம்” என்கிறபடியே நம உக்தி தனக்குக் கனத்துத் தோற்றுகையாலே அவ்வழியாலே அகில பரத்தையும் சுமந்து, “அல்லு நன் பகலுமிடை வீடின்றி நல்கி யென்னை விடான்” என்று இவர் பக்கல் பண்ணின ஸ்நேஹத்தாலே திவாராத்ர விபாகமற இவரைவிடமாட்டாதே, “போகு நம்ப” என்று சீறிப் போகச் சொன்னாலும், “அகல்வானு மல்லனினி” என்கிறபடியே அகலாதானாய், “ஆன் பின் போகேல்” என்று இவர் நிவர்த்திப்பித்தால் “திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி” என்கிறபடியே தனக்கு உகப்பானத்தையும் தவிர்ந்து, “அருள்தருவா னமைகின்றானது நமது விதிவகையே” என்று இவர் விதித்தபடியே நடத்துகிற ஸர்வேச்வரனே உபதேசத்துக்கு ஸத்பாத்ரமென்கை.
– அனைத்துவிதங்களிலும் சரியான சிஷ்யன் ஒருவன், தனது ஆசார்யனை அவனுக்கு விருப்பமான இடத்தில் வைத்து, ஆசார்யன் விருப்பத்தின்படி நடந்து, ஆசார்யனுடைய திருமேனியில் எந்தவிதமான தளர்வும் இல்லாத விருப்பம் கொண்டவனாக, அனைத்துவிதமான ப்ரியத்தையும் ஆசார்யனிடம் வைத்து, மற்ற எந்த விஷயங்களிலும் தொடர்பு இல்லாமல் இருந்து, வறுமையில் இருந்தவன் செல்வம் அடைந்தது போன்றும் பசியுடன் இருந்தவன் உணவைப் பெற்றது போன்றும் மிகுந்த தாகம் எடுத்தவன் தண்ணீரைப் பெற்றது போன்றும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆசார்யனை அனுபவித்து, சரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத் - தனது சரீரம், பொருள், உயிர் ஆகியவற்றை நல்ல ஆசார்யனுக்கு அளிக்கவேண்டும் - என்பதற்கு ஏற்ப தனது ஆத்மா மற்றும் பொருள்கள் அனைத்தையும் ஆசார்யனுக்கு அளித்து, இவ்விதம் அனைத்தையும் செய்தபோதிலும், க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாத் ந தத்துல்யம் கதஞ்சந – இந்தப் பூமி முழுவதையும் அளித்தாலும் ஆசார்யன் செய்த மிகப் பெரிய உபகாரத்திற்கு எந்தவிதமான இணையும் இல்லாமல் தான் செய்தவை குறைவே ஆகும் என்று எண்ணியவனாய், ஆசார்யன் தனது பொறுப்பு முழுவதையும் தன் மீது வைத்திருக்க அவற்றைச் சுமந்து, இரவுபகல் என்று எப்போதும் ஆசார்யனை விட்டு அகலாமல், ஆசார்யன் கோபம் கொண்டு “போ” என்று கூறினாலும் அகலாமல், ஆசார்யனுக்கு விருப்பம் இல்லையென்றால் தான் விரும்பியதையும் கைவிட்டு, ஆசார்யன் இட்ட கட்டளைப்படி நடப்பவன் ஆவான். இது போன்று ஸர்வேச்வரனும் (இருத்தும்) - திருவாய்மொழி (8-7-1) – இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக்கீழ் – என்பதற்கு ஏற்ப நம்மாழ்வாருக்கு விருப்பமான இடத்தில் அவரை அமர்த்தி. (எந்தானாய்) - திருவாய்மொழி (1-8-7) – என்னெண்டானான் - என்பதற்கு ஏற்ப இவர் நிலைவில் நின்றபடி. (பொய் கலவாது) - திருவாய்மொழி (1-8-5) - பொய் கலவாது என் மெய் கலந்தான் - என்பதற்கு ஏற்ப நம்மாழ்வாருடைய திருமேனி மீது கொண்ட விருப்பம் காரணமாக எந்தவிதமான தளர்வும் இன்றி, (அன்பு செய்து) - திருவாய்மொழி (2-5-1) – அந்தாமத்தன்பு செய்து – என்பதற்கு ஏற்ப பரமபதம் மீது காண்பிக்கும் விருப்பத்தை நம்மாழ்வாரிடம் காண்பித்து. (பற்றிலனாய்) - திருவாய்மொழி (1-2-6) - பற்றிலன் ஈசனும் – என்பதற்கு ஏற்ப நம்மாழ்வாரிடம் கொண்ட அன்பு காரணமாகப் பரமபதத்தில் உள்ளவர்களுடைய சம்பந்தத்தை விட்டு அகன்று. (க்ஷுத் த்ருட் பீடித நிர்த்தநரைப் போலே கண்டு கொண்டுண்டு பருகி) – திருவாய்மொழி (8-7-2) - இருந்தான் கண்டு கொண்டு – என்பதற்கு ஏற்ப வறுமையில் இருந்த ஒருவன் செல்வத்தைக் கண்டது போன்றும், திருவாய்மொழி (9-6-8) – என்னை முற்றவும் தானுண்டான் - என்பதற்கு ஏற்ப பசி நிறைந்த ஒருவன் உணவைக் கண்டது போன்றும், திருவாய்மொழி (9-6-10) – தான் என்னை முற்றப் பருகினான் – என்பதற்கு ஏற்ப தாகம் கொண்டவன் தண்ணீரைக் கண்டது போன்றும், மிகுந்த ஈடுபாட்டுடன் வந்து நம்மாழ்வாரை அனுபவித்து. – (பரிஜநாதிகளோடே தன்னைத் தந்து) - வரதராஜஸ்தவம் (63) - பரிஜந பரிபர்ஹா பூஷணாந்யாயுதாநி ப்ரவர குணகணாச்ச ஜ்ஞாந சக்த்யாதயஸ் தே, பரமபதமதாண்டாக்யாத்ம தேஹஸ் ததாத்மா வரத ஸகலமேதத் ஸம்ச்ரிதார்த்தம் சகர்த்த - வரதா! உனது அனைத்து பரிஜனங்கள், சாமரம் போன்றவை, திரு ஆபரணங்கள் திவ்யமான ஆயுதங்கள், ஞானம் சக்தி போன்ற குணங்கள், ஸ்ரீவைகுண்டம் போன்றவை, உன்னுடைய திருமேனி, உனது அனைத்து பொருள்கள் என்ற பலவும் உனது அடியார்களுக்காகவே உள்ளன - என்றும், திருவாய்மொழி (2-7-11) - எனக்கே தன்னைத் தந்த கற்பகம் – என்று கூறுவதற்கு ஏற்ப தனது விபூதிகளையும் தன்னையும் நம்மாழ்வாருக்கு அளித்து. (என் செய்வன் என்றே இருத்தி) – பெரியதிருவந்தாதி (53) - உன்னடியார்க்கென் செய்வனென்றே யிருத்தி - என்பதற்கு ஏற்ப நம்மாழ்வாருக்கு இவை அனைத்தையும் செய்தபோதிலும் தான் குறைவாகவே செய்ததாக எண்ணியபடி. (அகில பரத்தையும் ஸமர்ப்பிக்க) - ஆத்மாவுடன் சேர்ந்துள்ள அனைத்து பாரங்களையும் “நம” என்று உரைத்து இவர் அவனிடம் சமர்ப்பித்தபோது, திருவாய்மொழி (3-3-6) - வேங்கடத்துறைவார்க்கு நமவென்னலாம் கடமையது சுமந்தார்கட்கு - என்பதற்கு ஏற்ப, யஜுர்வேதத்தில் – பூயிஷ்ட்டாம் – உன் பொருட்டு நம: என்று கூறுகிறோம் – என்று கூறுவதற்கு ஏற்ப கூறப்பட்ட அந்தச் சொல்லானது தனக்குப் பாரமாகத் தோன்றுவதால் அதன் விளைவாக அனைத்து பாரங்களையும் ஏற்றுக்கொண்டு. (அல்லு நன்பகலும் போகு என்றாலும் அகல்வானு மல்லனாய்) - திருவாய்மொழி (1-10-8) - அல்லு நன் பகலுமிடை வீடின்றி நல்கி யென்னை விடான் – என்பதற்கு ஏற்ப நம்மாழ்வாரிடம் கொண்ட ப்ரேமை காரணமாக இரவுபகல் என்ற வேறுபாடு ஆராயாமல் இவரை விடாமல், திருவாய்மொழி (6-2-2) – போகு நம்பீ – என்று நம்மாழ்வார் கோபத்துடன் அகலச் சொன்னால் கூட, திருவாய்மொழி (2-6-7) – அகல்வானும் அல்லன் இனி - என்பதற்கு ஏற்ப அகலாமல் நின்று, (போகேல் என்றால்) - திருவாய்மொழி (10-3-8) – ஆன்பின் போகேல் - என்பதற்கு ஏற்ப நம்மாழ்வார் இவன் செல்வதைத் தடுத்தால், (உகப்பையும் தவிர்ந்து) - திருவாய்மொழி (10-3-10) – திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி - என்பதற்கு ஏற்ப தனது விருப்பமான செயலையும் கைவிட்டு, (விதிவகையே நடந்துமவனே) - திருவாய்மொழி (10-6-1) – அருள்தருவான் அமைகின்றானது நமது விதிவகையே – என்பதற்கு ஏற்ப நம்மாழ்வார் இட்ட கட்டளைப்படி நடக்கும் ஸர்வேச்வரனே, (உபதேச ஸத்பாத்ரம்) - உபதேசம் பெறுவதற்கான சரியான பாத்திரம் ஆவான்.