Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 201)
மூன்றாம் ப்ரகரணம்
என்னதுன்னதாவியிலே அறிவாராத்மாவென்று அவன் மதந்தோன்றும்.
இப்படி ப்ரேமமாத்ரத்தாலன்றிக்கே ஈச்வரன் நினைவாலே அவனுக்குத் தாமாத்ம பூதராகையாலும், அவனுக்கொரு தீங்கு வரப்பொறுக்கமாட்டா ரென்னுமத்தை தர்சிப்பிக்கிறார் (என்னது) இத்யாதியால்.
– இவ்விதம் ஸர்வேச்வரன் கொண்ட ப்ரேமை மட்டும் அல்லாமல் அவனிடம் எப்போதும் பொருந்தியுள்ள நினைவு காரணமாகவும், அவனுக்கு நம்மாழ்வாராகிய தாம் ஆத்மாவாக உள்ளதாலும், அவனுக்கு எந்த ஒரு தீமை வருவதையும் பொறுத்துக் கொள்ளமாட்டார் என்பதை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “என்னதுன்னதாவியும்” என்று உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் நானிட்ட வழக்கு என்றவிடத்திலே, “அறிவாருயிரானாய்” என்று அறிவாரை யுயிராக வுடையவ னென்னும்படி, “ஜ்ஞாநீ த்வாத்மைவமே மதம்” என்று ஜ்ஞாநியானவன் எனக்கு தாரகனாகவே யென்னுடைய மதம் என்றருளிச்செய்தபடியே, இவரை யவன் தனக்காத்மாவாக நினைத்திருக்கிற ஆகாரம் தோன்றுமென்றபடி. ஆகையால், அவனுக்கொரு துக்கம் வரப் பொறுக்கமாட்டாரென்று கருத்து.
– (என்னது உன்னது ஆவியிலே) - திருவாய்மொழி (4-3-8) – என்னதுன்னதாவியும் – என்பதில், “உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபமானது எனது விருப்பத்தின்படி உள்ளது”, என்று கூறும்போது, (அறிவார் ஆத்மா என்று) -திருவாய்மொழி (6-9-8) – அறிவார் உயிர் ஆனாய் - என்று அறிவாரைத் தனது உயிராகக் கொண்டவன் என்பதற்கு ஏற்ப, (அவன் மதம் தோன்றும்) - கீதை (7-18) - ஜ்ஞாநீ த்வாத்மைவமே மதம் – ஞானிகள் எனது ஸ்வரூபம் - என்பதற்கு ஏற்ப, “ஞானியாக உள்ளவன் என்னுடைய உயிர் ஆவான் என்பதே எனது கருத்து”, என்று அவன் அருளிச்செய்தபடியே, நம்மாழ்வாரை அவன் தன்னுடைய ஆத்மா என்று எண்ணியுள்ள நிலை தோன்றும். ஆகவே அவனுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் இவர் பொறுக்கமாட்டார்.