Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 200)

மூன்றாம் ப்ரகரணம்

உயிர்மாய்தல் ஆழு மென்னுருயிரென்னும் பரதுக்கம் ஸஹியாமை யிரண்டிலு முண்டு.

இப்படி ஜ்ஞாந ப்ரேமங்களிரண்டும் காரணமாகச் சொல்லுவானென். பரதுக்கா ஸஹிஷ்ணுத்வமன்றோ பரோபதேசத்துக்கு ப்ரதாந காரணமென்ன வருளிச்செய்கிறார் (உயிர்மாய்தல்) இத்யாதியால்.

– மற்றவர்களுடைய துக்கம் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாமல் இருத்தலே அவர்களுக்கு உபதேசம் செய்யக் காரணமாக உள்ளபோது, ஞானம் மற்றும் ப்ரேமம் ஆகியவற்றை ஏன் காரணமாக உரைக்கவேண்டும் என்பதற்கு விடை அளிக்கிறார்.

– அதாவது, “கொண்டாட்டும் குலம் புனைவும்” என்று தொடங்கி, “உயிர் மாய்தல் கண்டாற்றேன்” என்று ஸம்ஸாரிகள் பாரிக்கிற பாரிப்பும் முடிந்து போகிறபடியும் கண்டு ஆற்றமாட்டுகிறிலே னென்கையாலே பரருடைய துக்கம் ஸஹியாமையும், “அசுரர்கள் தலைப்பெய்யில் யவங்கொலாங்கென்றாழு மென்னாருயிர்” என்று அசுரர்களுன்னை வந்து கிட்டினால் அங்கு என்னாய் விளையுமோவென்று என்னாத்மாவானது தரைப்படா நின்றதென்கையாலே பரனான வீச்வரனுடைய துக்கம் ஸஹியாமையும், இருவர்க்கு முபதேசிக்கைக்கு ஹேதுவாகச் சொன்ன ஜ்ஞாந ப்ரேமங்க ளிரண்டிலு மென்கை. இத்தால் ஜ்ஞாந ப்ரேமங்களிரண்டும் பரதுக்கா ஸஹிஷ்ணுத்வத்தை யொழிந்திரா தென்றதாய்த்து.

– (உயிர்மாய்தல் என்னும் பரதுக்கம் ஸஹியாமை) - திருவாய்மொழி (4-9-3) – கொண்டாட்டும் குலம் புனைவும் – என்பதில், “ஸம்ஸாரத்தில் உள்ளவர்களுடைய பாரிப்பு முடிந்து போவதைக் கண்டு தாங்க இயலாமல் உள்ளேன்”, என்று கூறுவதன் மூலம், மற்றவர்கள் துன்பம் கண்டு பொறுக்க இயலாமல் உள்ள நிலை. (ஆழும் என் ஆர் உயிர் என்னும் பரதுக்கம் ஸஹியாமை) - திருவாய்மொழி (10-3-8) – அசுரர்கள் தலைப்பெய்யில் யவங்கொல் ஆங்கு என்றாழும் என்னாருயிர் – என்பதில், “அசுரர்கள் உன்னை வந்து அடைந்தால் அங்கு என்ன நடக்குமோ என்று எனது ஆத்மா தரையில் நிற்க இயலாமல் தவித்தபடி இருந்தது”, என்று கூறுவதன் மூலம், ஸர்வேச்வ்ரனுடைய துன்பத்தைக் கண்டு பொறுக்க இயலாமல் உள்ள நிலையும். (இரண்டிலும் உண்டு) - ஸம்ஸாரத்தில் உள்ளவர்கள், ஸர்வேச்வரன் ஆகிய இரண்டு பேருக்கும் உபதேசம் செய்வதற்கான காரணமாகக் கூறப்பட்ட ஞானம் மற்றும் ப்ரேமை இரண்டிலுமே உள்ளது. ஆகவே ஞானம் மற்றும் ப்ரேமை ஆகிய இரண்டுமே, மற்றவர்கள் துன்பம் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாமை என்பதை விட்டு நீங்கி இருப்பது அல்ல என்றாகிறது.