Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 199)
மூன்றாம் ப்ரகரணம்
கதிர்ஞானமூர்த்திக்கு உணர்த்துவது ப்ரேமத்தாலே; தம மூடுவார்க்கு வேட்கையெழுவிப்பது ஞானத்தாலே.
இப்படி யிவர்களிருவர்க்கும் பலகாலுமுபதேசிக்கைக்கு ஹேதுவென் னென்னு மாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார் (கதிர்ஞான மூர்த்திக்கு) என்று தொடங்கி.
– இவ்விதம் இவர் பலமுறை இந்த இருவருக்கும் (ஜீவாத்மா, ஈச்வரன்) உபதேசம் செய்வது ஏன் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது “பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதி யாததோர் கணக்கில் கீர்த்தி வெள்ளக்கதிர் ஞானமூர்த்தியினாய்” என்று ஸம்ஹ்ருதி ஸமயத்தில் ஸகல சேதநாசேதகங்களையு மொக்கக்கலசி ஸ்ருஷ்டி ஸமயத்தில் ஒருவர் கர்மமொருவர் பக்கல் கலசாதபடி பிரித்தவிடத்திலும் தன் ஸ்வரூபத்துக் கொரு பேதமின்றிக்கே அத்விதீயமாய் அபரிச்சேத்யமான கீர்த்தி ஸமுத்ரத்தை யுடைத்தா யிருக்கிற ப்ரபாரூபமான ஜ்ஞானத்தை வடிவாகவுடைய னாகையாலே ஸர்வஜ்ஞனா யிருக்கிறவனுக்கு “உனக்கொன் றுணர்த்துவன்” என்று உபதேசிக்கிறது, தத் விஷய ப்ரேமத்தாலே. “கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாகக் கொள்ளென்று தம மூடும்” என்று ஐச்வர்யம் விநாச ஹேதுவாகக் காணாநிற்கச் செய்தே பின்னையுமத்தை ஸ்வீகரிக்கும்படி தமோபி பூதராகா நிற்கும் ஸம்ஸாரிகளுக்கு, “நின்கண் வேட்கையெழுவிப்பன்” என்று தம்முபதேசத்தாலே பகவத் பக்தியை ஜநிப்பிக்கிறது. தத் ஸம்பந்தமடியாக அவர்களை விடமாட்டாதே திருத்தித் தம்மோபாதி பகவதநுபவ பரராக்க வேணுமென்கிற ஜஞாநத்தாலே யென்கை.
– (கதிர்ஞான மூர்த்திக்கு) - திருவாய்மொழி (6-2-8) - பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதி யாததோர் கணக்கில் கீர்த்தி வெள்ளக்கதிர் ஞானமூர்த்தியினாய் - என்று கூறுவதற்கு ஏற்ப, ஸம்ஹாரம் செய்யும் ப்ரளய காலத்தில் அனைத்து சேதந அசேதநங்களையும் ஒன்றாகக் கலந்து, ஸ்ருஷ்டி காலத்தில் ஒருவருடைய கர்மம் மற்றொருவருடன் கலந்து விடாதபடி பிரித்தபோதிலும், தனது ஸ்வரூபத்திற்கு எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல், இரண்டாவது என்று ஏதும் இல்லாதபடி, அளவிட இயலாத கீர்த்தியைக் கடல் போன்று கொண்ட தேஜோரூபமான ஞானத்தையே வடிவமாகக் கொண்டுள்ளவன் என்பதால், அனைத்து அறிந்தவனாக உள்ள ஸர்வேச்வரனுக்கு. (உணர்த்துவது) - திருவாய்மொழி (6-2-5) – உனக்கு ஒன்று உணர்த்துவன் – என்று கூறுவற்கு ஏற்ப உபதேசிப்பதன் காரணம், (ப்ரேமத்தாலே) - அவனிடம் கொண்டுள்ள ப்ரேமையால் ஆகும். (தம மூடுவார்க்கு) – திருவாய்மொழி (4-9-4) – கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாகக் கொள்ளென்று தம மூடும் - என்பதற்கு ஏற்ப ஐச்வர்யம் அழிவதற்குக் காரணமாக உள்ளது என்பதைக் காணும்போதும் அதனையே தொடர்ந்து ஏற்கும் படியாகச் செய்யும் அறிவின்மையால் மூடப்பட்டு நிற்கின்ற ஸம்ஸாரிகளுக்கு. (வேட்கை எழுவிப்பது) - திருவிருத்தம் (46) - நின்கண் வேட்கையெழுவிப்பன் - என்பதற்கு ஏற்ப தனது உபதேசம் மூலமாக ஸர்வேச்வரன் குறித்த பக்தியை ஏற்படுத்துவதன் காரணம், (ஞானத்தாலே) - அவனுடன் உள்ள ஸம்பந்தம் காரணமாக அவர்களைக் கைவிட இயலாமல் திருத்தி, தம்மைப் போன்றே பகவத் அனுபவம் பெறுபவர்களாகச் செய்யவேண்டும் என்கிற ஞானத்தால் ஆகும்.