Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 198)

மூன்றாம் ப்ரகரணம்

ஸாநந ஸாத்யஸ்த மத்யஸ்தரைவிட்டு அவற்றிற்கலங்கும் ஜீவேச்வரர்க்கு வீடுமின் நினைமின் பிடித்தேன் விடுவேனோ வைத்தெழ ஊது வாடிநிற்கக் கன்மமன்று ஆன்பின் கைகழியேல் உழிதராய் என் சொற்கொளென்று இவர் பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர்.

ஆனால் அஜ்ஞர்க்கு உபதேசிக்குமாபோலே இவர்களெல்லார்க்கும் பலகாலு முபதேசிப்பரோவென்ன வருளிச்செய்கிறார் மேல் (ஸாதந ஸாத்யஸ்த்த மத்யஸ்த்தரை) என்றுதொடங்கி.

– ஆனால் அறிவில்லாதவர்களுக்கு உபதேசிப்பது போன்று ஸர்வேச்வரன் உட்பட கடந்த சூர்ணையில் கூறப்பட்ட மூவருக்கும், பலமுறை உபதேசிப்பாரோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, ஸாதந ஸாத்யங்கள் கைப்பட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டுவது அல்பமாகையாலே ஸாதகஸ்தராகவும் ஸாத்யஸ்தராகவும் நடுவுசொன்ன ஜ்ஞாநிகளும் ஜ்ஞாநவிசேஷ யுக்தருமாகிற அவர்களிருவரையும் விட்டு, கர்மபரவசராய் ஸாதந ஸாத்யங்களின்னதென்றறியாதே கலங்கி நிற்கிற ஸம்ஸாரி சேதநர்க்கு, “வீடுமின் முற்றவும்” என்று தொடங்கி, “சுனை நன்மலரிட்டு நினைமின் நெடியானே” என்னுமளவும் த்யாஜ்யோ பாதேயங்களைப் பல படியாலு முபதேசிக்கையாலும்; ப்ரேம பரவசனய் ஸாதந ஸாத்யங்கள் இன்னதென்றறியாதே கலங்கு மீச்வரனுக்கு “அயோக்யதாநுஸந்தாநத்தாலே இவர் நம்மை விடில் செய்வதென்” என்றதிசங்கை பண்ணி அலமருகிறவளவிலே, “உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே”, “உன்னை நானடைந்தேன் விடுவேனோ” என்று, “மாசுச:” என்பது, “தோகை மாமயிலார்கள் செவியோசை வைத்தெழ ஆகள் போக விட்டுக் குழலூது” என்று ஸாதந ஸாத்யங்களை யறிவிப்பது. “மழறு தேன்மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேல்”, “கன்ம மன்றெங்கள் கையில் பாவை பறிப்பது”, “ஆன்பின் போகேல்”, “என்கை கழியேல்” என்று அக்ருத்யங்களைச் செய்யாதே கொள்ளென்பது, “நீயுகக்கு நல்லவரொடு முழிதராய்”, “அவத்தங்கள் விளையுமென் சொற்கொள்” என்று க்ருத்யங்களானவற்றைச் செய்யென்பதாய், இப்படி பலவிடங்களிலு முபதேசிக்கையாலும், ப்ரதம சரமோக்தரான அஜ்ஞ ஸர்வஜ்ஞர்களுக்குப் பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவரென்றபடி. – “ஸாதந ஸாத்யங்களில் கலங்கு மீச்வரனுக்கு” என்று உபக்ரமித்து, “பிடித்தேன் விடுவேனோ வாடி நிற்க” இத்யாதிகளை யெல்லா மருளிச் செய்வானென் னென்னில், ஸாதந ஸாத்யஸ்தரைச் சொன்னதுக்கு ப்ரதி கோடியாக அவற்றில் கலக்கம் ஜீவேச்வரர்களிருவர்க்கும் ஓரோ வழிகளாலுண்டென்று தர்சிப்பிக்கைக்காகச் சொன்னவித்தனை யொழிய, மேல் சொல்லுகிற ஹிதாஹிதங்களெல்லாம் அவ்விரண்டு விஷயமாயே யிருக்கவேணு மென்கிற நிர்ப்பந்தமில்லாமையால் விரோதமில்லை. ஜீவ விஷயமான உபதேசந்தன்னிலும் அர்த்தபஞ்சகமும் உபதேசிக்கையால் அவை யிரண்டுமே யென்கிற நிர்ப்பந்தமில்லையிறே. அங்ஙனன்றிக்கே, ஜீவ விஷயமான உபதேசத்திலும் “வீடுமின் முற்றம்” பக்தி ரூபஸாத நோபதேச பரமாகையாலும், “கண்ணன் கழலிணை” பக்திமான்கள் பரிமாற்றமிருக்கும்படி யுபதேசித்ததாகையாலும், நடுவுள்ள வுபதேசத்தை யாராய்ந்தாலும் பக்தி ப்ரபத்தி ரூபஸாதநோபதேசமும் பகவதநுபவ கைங்கர்ய ரூப ஸாத்யோபதேசமும் ப்ரசுரமாய், ப்ராப்யமான பரஸ்வரூபத்தையும், ப்ராப்தாவான ப்ரத்யகாத்ம ஸ்வரூபத்தையும், ப்ராப்தி விரோதியையு முபதேசித்தவை, இந்த ஸாதந ஸாத்யங்களிலே ஊன்ற வைக்கைக்குடலாகையாலே ஏதச்சேஷமாய் அறுகையாலும், ஸாதந ஸாத்யங்களில் கலக்கம் தீர்க்கையே உபதேசத்துக்கு ப்ரதாநமென்றொருங்கவிட்டு, ஈச்வர விஷயமான உபதேசமும் ஸாதந ஸாத்யங்களில் கலக்கம் தீர்க்கையைப் பற்றவென்றே கொள்ளவேணுமாகில், “பிடித்தேன்”, “விடுவேனோ” என்கிறவிரண்டும் தனக்கு ஸாத்யபூதரான விவரோடே வந்து ஸம்ச்லேஷித்துப் பெறாப்பேறு பெற்றானயிரா நிற்கச்செய்தே, “இவர் அயோக்யதாநுஸந்தாநம் பண்ணி அகலில் செய்வதென்” என்றதிசங்கை பண்ணி யலமாக்கிறத்தை நிவர்த்திப்பிக்கைக்காகச் சொன்னவை யாகையாலே ஸாத்யவிஷயமான கலக்கத்தைத் தெளிவிக்கைக்காகச் சொன்னவை யாகலாம். ஸாத்யத்தில் கலக்கமாவது ஸாத்யமின்னதென் றறியாமல் கலங்குகை யானாலும், ஸாத்ய வஸ்து விஷயமான கலக்கமென்கிற மாத்ரத்தைக் கொண்டு இதுக்கிப்படி யோஜித்தால் வரும் விரோதமில்லை. (வைத்தெழவூது) என்கிறவிது தனக்கபிமதமான விஷயங்களைப் பிரிந்து கண்ணாஞ்சுழலையிட்டு அதஸ்மிம்ஸ் தத்புத்தி பண்ணித் தங்கள் குழலைக் கொண்டாடினானாகக் கருதி, “நாங்கள் அவர்கள் அல்லோம் காண். அவர்கள் பக்கலிலே போ” என்கிற நினைவாலே, “தோகைமாமயிலார்கள் செவியோசை வைத்தெழ” என்று ஸாத்யத்தையும், “ஆகள் போகவிட்டுக் குழலூது” என்று ஸாதநத்தையும் அவனுக் கறிவிக்கிற தாகையாலே, உபயத்திலும் கலங்கினவனுக்குச் சொல்லுகிறதென்னுமிடம் ஸம்ப்ரதிபந்நம். (வாடி நிற்க) என்கிறவிது “மழறுதேன் மொழியார்கள்” என்று தொடங்கி, உனக்கபிமதைகளானவர்கள் உன்னைப் பிரிந்து உறாவிக் கிடக்க உனக்கு உபேக்ஷா விஷயமான வெங்கள் பூவைக்கிளிகளோடே கலந்து பேச்சுக்கொள்ளாதே கொள்ளென்கிற தாகையாலே, ஸாத்யத்தில் கலக்கம் கண்டு சொன்னதாமிறே. (கன்மமன்று) என்கிறவிது, தங்களோடே இட்டீடு கொண்டு தங்களபிஸந்தியைக் குலைத்துத் தங்களை வசீகரிக்கைக்கு ஸாதநமாக நினைத்துத் தங்களுக்கநிஷ்டமென் றறியாமல் கையில் பாவையைப் பறிக்கிற அவனைக் குறித்து “உனக்கிது கார்யமன்று” என்கிறதாகையாலே ஸாதநத்தில் கலக்கங்கண்டு சொன்னதாகலாம். (ஆன்பின் போகேல் கைகழியேல்) என்றது பசு மேய்க்கப் போனவிடத்தே தனக்கென்ன தீங்குவருகிறதோ என்றும் பிரிவாற்றாமலும் இத்தலைபடுகிற க்லேசமறிந்தால் பிரியாதே இத்தலையோடே கூடியிருக்கை புருஷார்த்தமாயிருக்க, ஜாத்யுசிததர்மமென்கிற மாத்ரத்தைக் கொண்டு பசுமேய்க்கப் போகவொருப்படுகிறவனைக் குறித்து “ஆழுமென்னாருயிரான் பின் போகேல்”, “கலவியும் நலியுமென்கை கழியேல்” என்றவையாகையாலே, ஸாத்யத்தில் கலங்கினவனுக்குச் சொல்லுகிறதாகலாம். (உழிதரு) என்கிறவிது “வசி செயுன் தாமரைக்கண்ணும் வாயும் கைகளும் பீதகவுடையுங் காட்டி” என்று வசீகார ஸாதநத்தையும், “உகக்கு நல்லவரொடு முழிதரு” என்று அபிமத விஷய ஸம்ச்லேஷமாகிற ஸாத்யத்தையும், அவையறியாமல் நிற்கிறவனுக்கறிவித்ததாகவிறே யிருக்கிறது; (என் சொற்கொள்) என்கிறவிது பசு மேய்க்கப் போகவேண்டாவென்று விலக்குகிறது. நமக்கொரு தீங்கு வாராமைக்காக வென்றறியாதே பரிவையான தன் வார்த்தையை யநாதரிக்கிறவனைக் குறித்து “அவத்தங்கள் விளையுமென் சொற்கொள்” என்றதாகையாலே, இதுவும் ஸாத்யத்தில் கலங்கினவனுக்குச் சொன்னதாகக் கொள்ளலாம். ஆனபின்பு, (இவற்றில் கலங்கு மீச்வரனுக்குப் பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர்) என்றதுக்கு அநுகுணமாக இச்சந்தைகளுக் கெல்லாமிப்படி யோஜித்தாலும் குறையில்லை.

(ஸாதந ஸாத்ய மத்யஸ்தரை விட்டு) - ஸாதனமாக உள்ள உபாயத்தைக் கைக்கொண்டவர்களுக்கும், ஸாத்யமான பேறு அடையப்பெற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டியது மிகவும் குறைவே ஆகும். ஆகவே மேலே கூறப்பட்ட நான்கு பேர்களில் உபாயத்தில் நிலைநிற்பவர்களாகவும், பேற்றில் ஊன்றியுள்ளவர்களாகவும், ஞானங்களும் சிறப்பான ஞானத்தை கொண்டபடியும் உள்ள இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு. (அவற்றில் கலங்கும் ஜீவர்கட்கு) - கர்மத்தின் பிடியில் சிக்குண்டு, உபாயம் எது என்றும், பேறு எது என்றும் தெரியாமல் கலங்கி நிற்கும் ஸம்ஸாரிகளுக்கு, (வீடுமின் நினைமின் என்று இவர் பலகாலும் ஹித அஹிதங்கள் சொல்லுவர்) – திருவாய்மொழி (1-2-1) வீடுமின் முற்றவும் – என்று தொடங்கி, திருவாய்மொழி (10-5-10) - சுனை நன்மலரிட்டு நினைமின் நெடியானே - என்பது முடிய, கைவிடத்தக்கவை மற்றும் ஏற்கத்தக்கவை இன்னவை என்று பலவிதமாக உபதேசிப்பார். (அவற்றில் கலங்குமீச்வரனுக்கு) - அடியார்கள் மீது கொண்ட ப்ரேமை காரணமாக உபாயமும் பேறும் இன்னது என்று அறியாமல் கலங்கும் ஈச்வரனுக்கு, (பிடித்தேன் விடுவேனோ) - “தன்னை மிகவும் தாழ்ந்தவர் என்று எண்ணிக் கொண்டு நம்மாழ்வார் நம்மை விட்டு அகன்றுவிடுவாரோ” என்ற சந்தேகத்தால் ஈச்வரன் தடுமாறி நிற்கும்போது, திருவாய்மொழி (2-6-1) - உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே – என்றும், திருவாய்மொழி (2-6-10) - உன்னை நானடைந்தேன் விடுவேனோ - என்றும் கூறுவதற்கு ஏற்ப அவனிடம், கீதை (18-66) – மாசுச: - வருத்தம் அடையாதே - என்று கூறுதல்; (வைத்து எழ ஊது) - திருவாய்மொழி (6-2-2) - தோகை மாமயிலார்கள் செவியோசை வைத்தெழ ஆகள் போக விட்டுக் குழலூது - என்று உபாயத்தையும், அதன் மூலம் அடையப்படும் பேற்றையும் அறிவித்தல்; (வாடி நிற்க) - திருவாய்மொழி (6-2-5) மழறு தேன்மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேல் - என்றும், (கன்மம் அன்று) - திருவாய்மொழி (6-2-8) - கன்ம மன்றெங்கள் கையில் பாவை பறிப்பது – என்றும், (ஆன்பின் கைகழியேல்) – திருவாய்மொழி (10-3-8) - ஆன்பின் போகேல் – என்றும், திருவாய்மொழி (10-3-8) - என்கை கழியேல் - என்றும் கூறிய பாசுரங்கள் மூலம் செய்யத்தகாதவற்றைச் செய்தல் கூடாது என்று கூறுதல்; (உழிதராய் என் சொற் கொள்) - திருவாய்மொழி (10-3-8) – நீ உகக்கு நல்லவரொடும் உழிதராய் – என்றும், திருவாய்மொழி (10-3-10) - அவத்தங்கள் விளையும் என் சொற்கொள் – என்றும் கூறும் பாசுரங்கள் மூலம் செய்யத்தக்கவையான உள்ள இவற்றைச் செய்வாயாக என்று கூறுதல்; (இவர் பலகாலும் ஹித அஹிதங்கள் சொல்லுவர்) - என்று இப்படியாக ஈச்வரனுக்கு இவர் பலமுறை நல்லது தீயதை உரைப்பார். – “ஸாதந ஸாத்யங்களில் கலங்கு மீச்வரனுக்கு” என்று தொடங்கி, “பிடித்தேன் விடுவேனோ வாடி நிற்க” என்பது முடிய உள்ள பலவற்றை ஏன் அருளிச்செய்தார் என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார். உபாயத்தில் நிலை நிற்பவர்கள் மற்றும் பேற்றில் நிலை நிற்பவர்கள் ஆகியவர்களைக் கூறுவதற்கு எதிர்த்தட்டாக, உபாயத்தில் கலக்கம் மற்றும் பேற்றில் கலக்கம் ஆகியவை ஜீவாத்மாக்களுக்கும் ஈச்வரனுக்கும் ஒரு சில விதங்களில் ஏற்படுகிறது என்று உரைப்பதன் பொருட்டே இவ்விதம் கூறினார்; நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகியவை உபாயம் மற்றும் உபேய விஷயத்தில் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை என்பதால் இவ்விதம் கூறுவதால் முரண்பாடு ஏதும் இல்லை. மேலும் ஜீவாத்மாக்களுக்கு உபதேசம் செய்யும்போது, அத்தகைய உபதேசங்களில் கூட அர்த்தபஞ்சகத்தைக் கூறுவதால், உபாயம் மற்றும் உபேயம் என்ற இரண்டுமே எடுக்கப்பட்டது என்று கூற அவசியம் இல்லை. இவ்விதம் அல்லாமல் இதற்கு வேறுவிதமாகவும் பொருள் கூறலாம். ஜீவாத்மாக்கள் குறித்த விஷயமாக உள்ள உபதேசங்களிலும், திருவாய்மொழி (1-2) - வீடுமின் முற்றவும் – என்ற திருவாய்மொழியானது பக்தியில் நிலைத்து நிற்பவர்களுடைய செயல்கள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை உபதேசிப்பதாக உள்ளதாலும், இந்த இரண்டு திருவாய்மொழிகளின் நடுவில் மற்றவற்றை ஆராய்ந்து பார்த்தால், பக்தி மற்றும் ப்ரபக்தி ரூபமாக உள்ள உபாய உபதேசங்களும், பகவத் அனுபவம் என்ற கைங்கர்ய வடிவில் உள்ள பலனின் உபதேசங்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன; மேலும் இவை அடையவேண்டிய இலக்காக உள்ள பரமாத்மாவின் ஸ்வரூபம், அடைபவனாக உள்ள ஜீவாத்மாவின் ஸ்வரூபம், பலனை அடைவதற்கு உள்ள தடைகளின் ஸ்வரூபம் ஆகியவற்றையும் கூறுகிறார். இப்படியாக உள்ளதால், இந்த திருவாய்மொழிகள் உபாயம் மற்றும் பேறு ஆகியவற்றில் நிலையாக நிற்க வைப்பதற்கான காரணமாக உள்ளதால், இவை அங்கங்கள் போன்று காணப்படுகின்றன. எனவே உபாயம் மற்றும் பேறு ஆகியவற்றில் உள்ள கலக்கங்களை நீக்குவதே உபதேசத்தின் முக்கியமான பயன் என்று கொண்டு, ஸர்வேச்வ்ரன் விஷயமான உபதேசமும் உபாயம் மற்றும் பேறு ஆகியவற்றில் உள்ள கலக்கத்தைத் தீர்க்கவே ஆகும் என்பதாக உள்ளது என்று கொள்ளவேண்டும் என்றால் – “பிடித்தேன்”, “விடுவேனோ” என்கிற இந்த இரண்டும் தனக்குப் பேறாக உள்ள நம்மாழ்வாரோடு வந்து கலந்து நின்று பெற இயலாத பேற்றினை அடையப் பெற்றதாக ஸர்வேச்வரன் நிற்கும்போது, “இவர் தம்மைத் தகுதியானவர் அல்லர், மிகவும் தாழ்ந்தவர் என்று எண்ணியபடி நம்மை விட்டு அகல முயற்சித்தால் என்ன செய்வது?”, என்று சந்தேகம் கொண்டு தடுமாறுகிறான்; ஆகவே அவனுடைய இந்தக் கலத்தை நீக்குவதற்காக உரைக்கப்பட்டது என்பதால், பேறு குறித்த கலக்கத்தை நீக்கும்விதமாக கூறப்பட்டது - எனலாம். பேறு குறித்த கலக்கம் என்றால், பேறு இன்னது என்று அறியாமல் கலங்குதல் என்பதே பொருள் என்றாலும், பேற்றைக் குறித்த கலக்கம் என்பதை இவ்விதம் பொருள் கொண்டால் முரண்பாடு ஏதும் இல்லை. (வைத்தெழ ஊது) - தனக்கு விருப்பமானவர்களைப் பிரிந்து, கலக்கம் அடைந்து மயங்கி, ஒன்றை மற்றொன்றாக எண்ணி, தங்களுடைய குழலை அவன் கொண்டாடினான் என்று எண்ணியவர்களாக, “நாங்கள் நீ நினைப்பவர்கள் அல்லர். நீ அவர்களிடமே செய்வாயாக”, என்று உரைக்கவேண்டும் என எண்ணியபடி, திருவாய்மொழி (6-2-2) - தோகை மாமயிலார்கள் செவியோசை வைத்தெழ - என்பதன் மூலம் பலனையும், திருவாய்மொழி (6-2-2) - ஆகள் போக விட்டுக் குழலூது – என்பதன் மூலம் அதனை அடையும் வழியையும் அவனுக்கு உணர்த்துகிறார். ஆகவே இவை உபாயத்திலும் உபேயத்திலும் கலங்குபவனுக்குக் கூறப்பட்டது என்று கருத்து. – (வாடி நிற்க) திருவாய்மொழி (6-2-5) மழறு தேன்மொழியார்கள் – என்று தொடங்கி, “உனக்கு விருப்பமானவர்கள் உன்னைப் பிரிந்து துக்கத்தில் உள்ளபோது உனது வெறுப்புக்கு இடமாக உள்ள எங்களுடைய பூவைக்கிளிகளுடன் நீ கலந்து பேசவேண்டாம்”, என்று உரைப்பதால் பேற்றில் கலக்கம் கண்டு உரைக்கப்பட்டதாயிற்று. (கன்மம் அன்று) - தங்களுடன் விவாதம் செய்து, தங்களுடைய மன உறுதியைக் குலைத்து, தங்களை வசப்படுத்துவதற்கான வழியாக எண்ணி, தங்களுக்கு விருப்பம் இல்லாதது என்று அறியாமல், தங்கள் கைகளில் உள்ள பாவையை அவன் பறிக்கும்போது அவனிடம், “உனக்கு இது ஏற்ற செயல் அல்ல”, என்று கூறுவதால் உபாயத்தில் கலக்கம் கண்டு உரைத்தார் என்றானது. (ஆன்பின் போகேல் கைகழியேல்) – என்பதான இவை பசுக்கள் மேய்க்கச் சென்ற இடத்தில் தனக்கு என்ன தீமை ஏற்படும் என்று அறியாமலும், தனது பிரிவாற்றாமை காரணமாக இவர்களுக்கு ஏற்படும் துன்பம் இன்னது என்று அறிந்தால் பிரியாமல் சேர்ந்து இருத்தல் புருஷார்த்தம் என்று கொள்ளாமல் தனது குலத்திற்கே உரிய தர்மம் என்பதை எண்ணியபடியும் பசுக்களை மேய்க்கக் சென்றான். இவ்விதம் உள்ளவனைக் கண்டு திருவாய்மொழி (10-3-8) - ஆழுமென்னாருயிரான் பின் போகேல் – என்றும், திருவாய்மொழி (10-3-8) - கலவியும் நலியுமென்கை கழியேல் - என்றும் கூறுவதால் பேற்றில் கலங்கியவனுக்குக் கூறப்பட்டது என்றாகிறது. (உழிதரு) - என்பதான இது திருவாய்மொழி (10-3-8) - வசி செயுன் தாமரைக்கண்ணும் வாயும் கைகளும் பீதகவுடையுங் காட்டி - என்று கூறுவதற்கு ஏற்ப வசீகரிக்கும் கருவிகளையும், திருவாய்மொழி (10-3-8) - உகக்கு நல்லவரொடு முழிதரு - என்று கூறுவதற்கு ஏற்ப தன்னால் விரும்பப்பட்டவர்களுடன் கலத்தல் என்ற பயனையும் அறியாமல் உள்ளவனுக்கு, அவற்றை உரைப்பதாக உள்ளது. (என்சொற்கொள்) – என்பதான இது, “பசு மேய்க்கச் செல்லவேண்டாம்” என்று அவர்கள் தடுப்பது, நமக்கு ஒரு துன்பம் வரக்கூடாது என்பதற்காகவே ஆகும் என்பதை அறியாமல், அன்பு கொண்டவளாகிய தனது சொற்களைத் தள்ளுபவனைக் குறித்து, திருவாய்மொழி (10-3-10) – அவத்தங்கள் விளையும் என் சொற்கொள் - என்று கூறியதால், இதுவும் பேற்றில் கலங்குகிறவனுக்கு உரைத்ததாயிற்று. இப்படியாக உள்ளபோது, (இவற்றில் கலங்கு மீச்வரனுக்குப் பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர்) என்பதற்கு ஏற்ப இந்தப் பாசுரங்களுக்கு இவ்விதம் பொருள் கூறினால் தோஷம் இல்லை.