Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 197)
மூன்றாம் ப்ரகரணம்
அவன் முனிந்தார்க்குத் தாம்கண்டது, தம்மை முனிவார்க்குத் தம் கண், காணாதது காண்பார்க்குக் கண்மாறுமிடம், ராகாந்தனுக்கு மாயாதோஷம் இவர் காட்டுமவை.
இவர்களுக்கு இவ்வர்த்தங்க ளுபதேசிக்கைக் குறுப்பான ஹேதுக்களோடே இவைதன்னை யின்னமொரு ப்ரகாரேண வ்யக்தமாக வருளிச்செய்கிறார் (அவன் முனிந்தார்க்கு) என்று தொடங்கி.
– இவர்களுக்கு இந்தக் கருத்துக்களை உபதேசிப்பதற்கான அடிப்படியாக உள்ள காரணங்களுடன் சேர்த்து, இவற்றை மேலும் ஒருவிதத்தில் விளக்கமாக அருளிச் செய்கிறார்.
– அதாவது, “க்ஷிபாமி”, “ ந க்ஷமாம” என்கிறவவன் முனிவுக்கு விஷயமாய் அஜ்ஞரான ஸம்ஸாரிகளுக்கு, “ஞானப்பிரானையல்லாலில்லை நான் கண்ட நல்லது” என்று நிமக்நோத்தரண சக்தனாய் ஜ்ஞாநோபகாரகனானவனை யொழிய ஸர்வர்க்கு முஜ்ஜீவ நோபாயமில்லை என்று தாமறுதியிட்ட விலக்ஷணமான வர்த்தமும்; “எங்ஙனேயோ வன்னைமீர்காளென்னை முனிவது நீர்” என்னும்படி உபாயாத்யவஸாய தசையிலே நின்று ஸ்வயத்நபீருக்களாய் ப்ராப்ய வைலக்ஷண்ய மறியாதே இத்தனை அதிப்ராவண்யமாகாதென்று ஹிதம் சொல்லுமவர்களுக்கு, “என்னெஞ்சினால் நோக்கிக் காணீர்” என்று ப்ராப்ய வைலக்ஷண்யாவகாஹியான என்னெஞ்சினால் பார்க்க மாட்டீர்களோவென்று தம்முடைய உட்கண்ணான ப்ராப்ய வைலக்ஷண்ய ஜ்ஞாநமும், “செஞ்சொற்கவிகாளுயிர் காத்தாட் செய்மின்” என்று கவிகளாய் கூர்க்கக் காணுமவர்களாகையாலே புறம்பொருவர் காணாததும் காணவல்லவர்களுக்கு, அவன் சில குணத்திலே கண்வையாதே கொள்ளுங்கோளென்று கண்மாறுமிடமும்; தம்பக்கல் ராகத்தாலே முன்னடி தோற்றாமையாலே த்யாஜ்ய தேஹதோஷம் காணமாட்டாதவனுக்கு, “மங்கவொட்டுன் மாமாய” என்று ப்ரக்ருதி தோஷமுமிவர் தர்சிப்பிக்கு மவையென்கை.
– (அவன் முனிந்தார்க்கு) கீதையில், “க்ஷிபாமி – தள்ளுகிறேன், ந க்ஷமாமி – பொறுத்துக் கொள்ளமாட்டேன்”, என்பது போன்று உரைக்கும் ஸர்வேச்வரன் கோபம் அடைவதற்கு இலக்கான உள்ள இந்த ஸம்ஸாரிகளுக்கு. (தாம் கண்டது) - திருவிருத்தத்தில் (99) – ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லது – என்று தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை மேலே உயர்த்தும் தன்மை கொண்டவனும், ஞானத்தை உபதேசித்தவனும் ஆகிய அவன் அல்லாமல் அனைவருக்கும் கரையேறும் உபாயம் வேறு ஏதும் இல்லை என்று தான் உறுதியாக்கிய மேன்மையான இந்தக் கருத்தை இவர் உணர்த்துவார். (தம்மை முனிவார்க்கு) – திருவாய்மொழி (5-5-2) - எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர் – என்பதற்கு ஏற்ப உபாயநிலையில் ஆழ்ந்த உறுதி உள்ளவர்களாக தங்களுடைய முயற்சி மூலம் பேற்றினை அடைவதில் அச்சம் கொண்டவர்களாக, பேற்றின் சிறப்பை அறியாதவர்களாக, இந்த அளவிற்கு ப்ரேமை கூடாது என்று நன்மை கூறுபவர்களுக்கு, (தம்கண்) – திருவாய்மொழி (5-5-2) - என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் - என்று பேற்றின் சிறப்பில் மூழ்கியபடி உள்ள என் நெஞ்சத்தின் மூலம் நீங்கள் காணமாட்டீர்களா என்று, தனது உட்கண்ணாகிய ஞானத்தைக் காண்பிப்பார். (காணாதது) – திருவாய்மொழி (10-7-1) – செஞ்சொற்கவிகாள் உயிர் காத்தாட் செய்மின் – என்பதற்கு ஏற்ப கவிகளாக இருக்கின்ற காரணத்தால் கூர்க்கக் காணுபவர்களாக உள்ளதால், வெளியில் மற்றவர்களால் காண இயலாதவற்றையும் காண இயன்றவர்களாக உள்ளவர்களுக்கு, (கண்மாறும் இடம்) - அவனுடைய சீல குணத்தில் நீங்கள் உங்களுடைய சிந்தனையை வைத்துக்கொள்ளுங்கள் என்று கண்வைக்கும் இடத்தைக் காண்பிப்பார். (ராகாந்தனுக்கு) - நம்மாழ்வாராகிய தம்மிடம் வைத்த ஆசை காரணமாக வேறு ஏதும் தோன்றாமல், கைவிடத்தக்கதான இந்தச் சரீரத்தில் உள்ள குற்றத்தை ஆராயாமல் உள்ள பகவானுக்கு, (மாயா தோஷம்) – திருவாய்மொழி (10-7-10) - மங்கவொட்டுன் மாமாய - என்று இந்தச் சரீரத்தில் உள்ள தோஷங்களை உணர்த்துவார்.