Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 196)

மூன்றாம் ப்ரகரணம்

அறியாதார்க்கு உய்யப்புகுமாறும் இக்கரையேறினார்க்கு இன்ப வெள்ளமும் நிலையறியாதார்க்கு ஆழங்காலும் கரையேற்றுமவனுக்கு நாலாறு மறிவிக்கவேணும்.

எல்லார்க்கும் இவரிப்படி அஜ்ஞாதஜ்ஞாபநம் பண்ணவேணுமோ என்னு மபேக்ஷையிலே, கீழ்ச்சொன்ன நாலு விஷயத்துக்கு மிவரறிவிக்க வேண்டுமர்த்த விசேஷங்களை தர்சிப்பிக்கிறார் (அறியாதார்க்கு) என்று தொடங்கி.

– ஆனால் இவ்விதமாக இவர் அனைவருடைய அறியாமையையும் நீக்கவேண்டுமோ என்ற கேள்விக்கு விடையாக, இதுவரை கூறப்பட்ட நான்கு பேருக்கும் உணர்த்தவேண்டிய ஆழ்பெருமாள் இன்னவை என்பதை அருளிச்செய்கிறார்.

– அதாவது, “செங்கணெடியானைச் சிந்தித்தறியாதார் என்று மறியாதார்” என்று முதலிலே பகவத் ஜ்ஞாநமில்லாத ஸம்ஸாரிகளுக்கு, “அஃதே யுய்யப் புகுமாறு” என்று “திருநாரணன்தாள்” என்கிறவதுவே உஜ்ஜீவிக்கைக்கு உபாயமென்று ஸம்ஸார நிஸ்தரணோபாயமும், “அக்கரையென்னு மனத்தக்கடலுளழுந்தியுன் பேரருளாலிக் கரையேறி யிளைத்திருந்தேனை” என்று ஸம்ஸார ஸாகரத்திலழுந்துகிறவர்களுக்கு பகவதேகோபாயத்வ ஜ்ஞாநம் பிறந்தால் இங்கேயிருக்கச் செய்தே “அக்கரை இக்கரை” என்னும்படி ஸம்ஸாரம் தூரமாய் பரமபதமாஸந்நமாம்படி யிருக்கையாலே பகவதேகோபாயத்வத்திலே வ்யவஸிதராய் ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தரா யிருக்கிறவர்களுக்கு வ்யவஸாயம் குலைந்து த்வரிக்கும்படி “முகில்வண்ண வானத்திமையவர் சூழவிருப்பர் பேரின்ப வெள்ளத்தே” என்று ப்ராப்ய வைலக்ஷண்யமும்; ஆற்றிலேயிழிந்து போகா நிற்கச் செய்தே நிலைக்குமிடமும் நிலையாத விடமுமறியாதாரைப்போலே, ப்ராப்ய பரராயநுபவியா நிற்கச்செய்தே அதில் நிலை கொள்ளலாமிடமும் ஆழங்கால்படுத்துமிடமும் அறியாதவர்களுக்கு, “செஞ்சொற்கவி காளுயிர் காத்தாட் செய்மின்” என்று சீலகுணமாகிற ஆழங்காலும், “ஸம்ஸார ஸாகரம் கோரமநந்த க்லேச பாஜநம், த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண:” என்கிறபடியே ஸம்ஸார ஸமுத்ரத்தைக் கடத்தி அக்கரைப்படுத்துமவனுக்கு “பொங்கைம்புலன்” இத்யாதியாலே சதுர் விம்சதி தத்வமு மறிவிக்க வேணுமென்கை. ஆக அறிவு கேடரை உபாயத்திலே மூட்டுவர்; உபாயத்திலே யூன்றுவாரை ப்ராப்ய பரராக்குவர்; ப்ராப்யத்திலே அவகாஹிக்குமவர்களுக்கு ஆழங்காலறிவிப்பர்; ப்ராப்தியை யுண்டாக்குமவனுக்கு த்யாஜ்யத்தை யறிவிப்பரென்றதாய்த்து.

– (அறியாதார்க்கு) – பெரியதிருமொழி (11-7-8) – செங்கண் நெடியானைச் சிந்தித்தறியாதார் என்றும் அறியாதார் – என்பதற்கு ஏற்ப முதலில் ஸர்வேச்வரனைக் குறித்த ஞானம் இல்லாத ஸம்சாரிகளுக்கு, (உய்யப்புகும் ஆறும்) - திருவாய்மொழி (4-1-11) - அஃதே உய்யப் புகுமாறு - என்று, திருவாய்மொழி (4-1-1) - திருநாரணன் தாள் – என்பதான அதுவே கரையேறுவதற்கான உபாயம் என்று ஸம்ஸாரத்திலிருந்து வெளியேறுவதற்கான உபாயத்தை உணர்த்தவேண்டும். (இக்கரை ஏறினார்க்கு) - பெரியாழ்வார் திருமொழி (5-3-7) - அக்கரையென்னு மனத்தக்கடலுள் அழுந்தி உன் பேரருளால் இக்கரையேறி இளைத்திருந்தேனை – என்பதற்கு ஏற்ப ஸம்ஸாரக்கடலுள் மூழ்கியபடி உள்ளவர்களுக்கு, “ஸர்வேச்வரன் ஒருவன் மட்டுமே உபாயம்” என்ற ஞானம் ஏற்பட்டால், இந்த உலகில் அவர்கள் இருந்தாலும், அக்கரையான பரமபதம் இதுவே ஆகும் என்பதற்கு ஏற்ப ஸம்ஸாரம் வெகுதொலைவிலும், பரமபதம் அருகிலும் உள்ளதாகத் தோன்றுகிறது; ஆகையால் பகவான் மட்டுமே உபாயம் என்னும் கருத்தில் ஆழ்ந்த உறுதியுடையவர்களாக, தங்களுடைய முயற்சிகள் அனைத்தையும் துறந்தவர்களாக, அந்த உறுதியானது நிலைகுலைந்து அவர்கள் பதறும்படியாக, (இன்ப வெள்ளமும்) – திருவாய்மொழி (7-2-11) - முகில்வண்ண வானத்திமையவர் சூழவிருப்பர் பேரின்ப வெள்ளத்தே – என்று அடைய உள்ள பேற்றின் ஒப்பில்லாத சிறப்பை உணர்த்தவேண்டும். (நிலை அறியாதார்க்கு) - ஆற்றில் இழிந்தபடிச் செல்லும் ஒருவருக்குத் தான் உள்ள இடமும், நிலையில்லாதபடிச் செல்லும் இடமும் அறியாமல் இருப்பார்; அது போன்று பேற்றினை அடைந்த பின்னர், அதில் ஈடுபட்டு அனுபவித்து நிற்கும்போது, அதில் நிலை கொள்ளவல்ல இடம் மற்றும் ஆழ்ந்து நிற்கவேண்டிய இடம் குறித்து அறியாதவர்களுக்கு, (ஆழங்காலும்) - திருவாய்மொழி (10-7-1) - செஞ்சொற்கவி காளுயிர் காத்தாட் செய்மின் - என்று சீலகுணம் என்பதான ஆழங்காலை உணர்த்த வேண்டும். (கரை ஏறும் அவனுக்கு) - ஸம்ஸார ஸாகரம் கோரமநந்த க்லேச பாஜநம், த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண: - மிகவும் கொடியதும், எல்லையற்ற துன்பத்திற்கு இடமாக உள்ளதும் ஆகிய ஸம்ஸாரத்தைக் கடப்பதற்கு ஞானிகள் உன்னையே சரணம் அடைகிறார்கள் - என்பதற்கு ஏற்ப ஸம்ஸாரக் கடலைத் தாண்டும்படிச் செய்து கரையேற்றும் ஸர்வேச்வரனுக்கு, (நாலாலும்) – திருவாய்மொழி (10-7-10) – பொங்கு ஐம்புலன் - என்பதன் மூலம் இருபத்து நான்கு தத்வங்களின் தன்மையை உணர்த்தவேண்டும். எனவே அறிவற்றவர்களை உபாயத்தில் ஈடுபடுத்துவார், உபாயத்தில் நிலைநிற்பவர்களுக்கு ஆழங்கால் உணர்த்துவார், பேற்றினை அளிக்கும் ஸர்வேச்வரனுக்கு விடத்தக்கவற்றை உணர்த்துவார்.