Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 195)
மூன்றாம் ப்ரகரணம்
வேதவேத்ய வைதிகோபதேசம் ஆவித்யரளவிலே; அஜ்ஞர் ஜ்ஞாநிகள் ஜ்ஞாந விசேஷ யுக்தர் ஸர்வஜ்ஞனென்னாமல் இவர் திருத்துவர்.
இப்படி ஈச்வரோபதேசத்தி லிவருபதேசத்துக்கு ஏற்றம் சொன்ன ப்ரஸங்கத்திலே ப்ரமேய பூதனானவவனோடே ப்ரமாண ப்ரமாதாக்களையும் கூட்டி “அவர்களெல்லாருபதேசமும் ஸங்குசித விஷயம், இவருபதேசம் ஸர்வ விஷயம்” என்று இவ்வழியாலே உபதேஷ்டாவான ஆழ்வார்க்கு ஓர் ஆதிக்யமருளிச் செய்கிறார் மேல் (வேதவேத்ய வைதிகோபதேசம்) என்று தொடங்கி.
– ஸர்வேச்வரனுடைய உபதேசங்களைக் காட்டிலும் நம்மாழ்வாருடைய உபதேசங்களுக்குள்ள ஏற்றத்தைக் கூறுகின்ற இந்த நேரத்தில், தகுந்த ப்ரமாணங்களாகிய வேதங்களால் மட்டுமே அறியத்தக்கவனாகிய ஸர்வேச்வரனுடைய ப்ரமாணங்கள் மற்றும் அவற்றை அறிந்தவர்கள் ஆகிய அனைவரையும் ஒன்றாகத் திரட்டி, “அவர்களுடைய உபதேசங்கள் அனைத்தும் ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்புடையது; ஆனால் நம்மாழ்வாருடைய உபதேசங்கள் அனைவருக்குமே ஆகும்” என்று இவ்விதத்திலும், உபதேசம் செய்பவராகிய நம்மாழ்வாருக்கு உள்ள மற்றொரு பெருமையை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஹிதாதுசாஸநபரமான வேதத்தினுடையவும், “வேதவேத்யே பரே பும்ஸி” என்று வேதைகஸமதிகம்யனான ஈச்வரனுடையவும், “யேச வேதவிதோ விப்ராயேசாத்யாத்மவிதோ ஜநா:” என்கிறபடியே வேதத்தில் பூர்வோத்தர பாகார்த்தஜ்ஞராய் வைதிகரென்று நிரூபகமாயிருக்கும் மஹர்ஷிகளுடையவு முபதேசம், “ஆவித்ய: ப்ராக்ருத: ப்ரோக்த:” என்கிறபடியே தத்வஹித புருஷார்த்த ஜ்ஞாநாபாவ ரூபா வித்யா யுக்தரான ஸம்ஸாரிகள் மாத்ரத்திலே; தத்வஹிதாதிகளில் அஜ்ஞரான ஸம்ஸாரிகளோடு பகவதுபாயத்வ நிஷ்டராயிருக்கும் ஜ்ஞாநிகளானவர்களோடு, தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை ஸாக்ஷாத்கரித்து உபேயபரராய் ததநுபவமே யாத்ரையா யிருக்கும் ஜ்ஞாநவிசேஷயுக்தரோடு, “நைவ கிஞ்சித் பரோக்ஷம் தே”, “யோ வேத்தி யுகபத் ஸர்வம்” என்கிறபடியே ஸர்வஜ்ஞனான வீச்வரனோடு வாசியற ஸர்வர்க்கும் வேண்டுமம்சங்களை யுபதேசித்து இவர் திருத்துவரென்கை.
– (வேத உபதேசம்) - அனைவருக்கும் ஏற்ற நன்மைகளை மட்டுமே உபதேசிக்கின்ற வேதங்களுடைய உபதேசமும். (வேத்ய உபதேசம்) - ஸ்கந்த புராணம் வேதவேத்யே பரே பும்ஸி - வேதங்களால் மட்டுமே அறியப்படும் பரமபுருஷன் - என்பதற்கு ஏற்ப வேதங்களால் அறியப்படுகின்ற ஸர்வேச்வரனுடைய உபதேசமும். (வைதிக உபதேசம்) - யேச வேதவிதோ விப்ராயேசாத்யாத்மவிதோ ஜநா: - எந்த அந்தணர்கள் வேதங்களின் பூர்வபாகத்தை அறிந்தவர்களோ, யார் உத்தரபாகத்தை அறிந்தவர்களோ – என்று கூறுவதற்கு ஏற்ப வேதத்தில் உள்ள பூர்வபாகம் மற்றும் உத்தரபாகம் ஆகியவற்றின் ஆழ்பொருளை நன்றாக அறிந்தவர்களும், வைதிகர் என்று கூறப்படுபவர்களும் ஆகிய மஹரிஷிகளுடைய உபதேசமும். (ஆவித்யர் அளவிலே) - ஆவித்ய: ப்ராக்ருத: ப்ரோக்த: - ஆவித்யன் எனப்படுகிறான் - என்பதற்கு ஏற்ப உண்மை மற்றும் நன்மை என்னும் புருஷார்த்தங்கள் குறித்த ஞானம் இல்லாத காரணத்தால் ஸர்வேச்வரனுடைய இயல்பு இன்னது என்று அறியாதபடி உள்ள ஸம்ஸாரிகளுக்கு மட்டும் பொருந்துவதாக உள்ளன. (இவர்) - நம்மாழ்வார். (அஜ்ஞர்) - உண்மையான ஒரு புருஷார்த்தம் குறித்து அறியாத ஸம்ஸாரிகள். (ஜ்ஞாநிகள்) – ஸர்வேச்வரனே உபாயம் என்றுள்ள ஞானிகள். (ஜ்ஞாந விசேஷ யுக்தர்) - ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபம், ரூபம், குணங்கள், விபூதிகள் போன்ற அனைத்தையும் நேரடியாகவே அனுபவித்து, பேற்றில் மட்டுமே நாட்டம் கொண்டு, ஸர்வேச்வரனுடைய அனுபவம் என்பதையே தங்கள் வாழ்க்கை என்று நிலைநிற்பவர்கள். (ஸர்வஜ்ஞன்) - ந ஏவ கிஞ்சித் பரோக்ஷம் தே - உன்னால் காணப்படாமல் எந்த ஒன்றும் இல்லை – என்றும், யோ வேத்தி யுகபத் ஸர்வம் - யார் ஒருவன் ஒரு நேரத்திலேயே அனைத்தையும் அறிகிறானோ - என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்தையும் அறிந்த ஸர்வேச்வரன். (என்னாமல்) - இவ்விதம் உள்ள மற்றவர்கள் போன்று அல்லாமல், (இவர் திருத்துவர்) – அனைவருக்கும் ஏற்கும்படியான விஷயங்களை உபதேசித்து இவர் திருத்துவார்.