Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 194)

மூன்றாம் ப்ரகரணம்

பகவன் ஞானவிதி பணிவகையென்று இவரங்கீகாரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்.

இனி அந்த ஸ்ரீகீதைதனக்கு உத்கர்ஷமும் இவரங்கீகாரத்தாலே யென்கிறது (பகவன்) இத்யாதியால்.

– அடுத்து, ஸ்ரீமத் பகவத்கீதைக்கு ஏற்பட்ட ஏற்றம் என்பதும் நம்மாழ்வார் அதனை அங்கீகாரம் செய்ததன் மூலமே ஏற்பட்டது என்பதை அருளிச்செய்கிறார்.

– அதாவது, “அம்பகவன் வணக்குடைத் தவநெறிவழி நின்று” என்றும், “ஞான விதி பிழையாமே” என்றும், “பண்டே பரமன் பணித்த பணிவகையே கண்டேன் கமல மலர்ப்பாதம்” என்றும் பரம வைதிகரான இவர் அத்தை ப்ரமாணமாகக் கொள்ளுகையாலே யாய்த்து அந்த ஸ்ரீகீதைக்கு உத்கர்ஷமுண்டாய்த் தென்கை. புத்த முநியாயும் கபில முநியாயும் சொன்ன பெளத்த சாஸ்த்ரமும் ஸாங்க்ய சாஸ்த்ரமும் அவன் தானருளிச் செய்ததாயிருக்கச் செய்தே, வைதிக பரிக்ரஹமில்லாமையிறே அப்ரமாணமாய்த்து. “இதி மோஹந வர்ஷ்மணா த்வயாபி க்ரதிதம் பாஹ்யமதம் த்ருணாய மந்ய” என்று பகவதுக்தமேயாகிலும் வேதவிருத்தமானது வைதிகரங்கீகரியார்களிறே. வேதாவிரோதித்வம் ப்ரகாசிப்பது வைதிக பரிக்ரஹத்தாலேயிறே. ஆகையால் அதுக்கு உத்கர்ஷம் இவரங்கீகாரத்தாலே யென்னக் குறையில்லை, இத்தால் அதுக்குத்கர்ஷம் இவர் பரிக்ரஹம் கொண்டு சொல்லவேணும்; இவர் வாக்கில் பிறந்தவிதுக்கு அதுவும் வேண்டாவென்று இவ்வழியாலும் ஓர் ஆதிக்யம் சொல்லிற்றாய்த்து. ஆக ஸ்ரீகீதையிலு மிதுக்குண்டான ஆதிக்ய ஹேதுக்களெல்லாம் சொல்லிற்றாய்த்து.

(பகவன்) – திருவாய்மொழி (1-3-5) - அம்பகவன் வணக்குடைத் தவநெறிவழி நின்று - என்றும், (ஞானவிதி) - திருவாய்மொழி (5-2-9) - ஞானவிதி பிழையாமே – என்றும், (பணிவகை) - திருவாய்மொழி (10-4-9) - பண்டே பரமன் பணித்த பணிவகையே கண்டேன் கமல மலர்ப்பாதம் – என்றும், (என்று இவர் அங்கீகாரத்தாலே) - கூறுவதற்கு ஏற்ப, பரமவைதிகரான நம்மாழ்வார் ஸ்ரீபகவத்கீதையை ப்ரமாணமாக ஏற்றுக்கொண்டதால் மட்டுமே ஸ்ரீபகவத்கீதைக்கு ஏற்றம் உண்டானது. புத்த முனிவராக நின்று உரைத்த பௌத்த சாஸ்த்ரத்தையும், கபிலமுனியாய் வந்து உரைத்த ஸாங்க்ய சாஸ்த்ரத்தையும் அவன் அருளிச்செய்தபோதிலும், வைதிகர்கள் அவற்றை ஏற்காத காரணத்தால், அவற்றுக்கு ப்ரமாணமாக இருக்கும் தன்மை இல்லை. ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் - இதி மோஹந வர்ஷ்மணா த்வயாபி க்ரதிதம் பாஹ்யமதம் த்ருணாய மந்ய - இப்படியாக மற்றவர்களை மயக்கும்படிச் செய்யும்விதமாக உன்னால் ஏற்படுத்தப்பட்டவையும், வேதங்களுக்குப் புறம்பாக உள்ளவையும் ஆகிய மற்ற மதங்களை நான் புல்லாகவே கருதுகிறேன் - என்பதற்கு ஏற்ப, பகவானால் உண்டாக்கப்பட்டவை என்றாலும், அவை வேதங்களுக்கு முரணானது என்பதால் வைதிகர்கள் ஏற்கமாட்டனர் அல்லவோ? வேதங்களுக்கு முரணான தன்மை இல்லை என்ற நிலையும் வைதிகர்களுடைய அங்கீகாரத்தால் அல்லவோ ஏற்படுகிறது? ஆகவே ஸ்ரீமத்பகவத்கீதைக்கு ஏற்பட்ட ஏற்றம் என்பது, நம்மாழ்வார் அதனை அங்கீகாரம் செய்ததால் மட்டுமே உண்டானது என்று கூறுவதில் குற்றம் இல்லை. இதன் மூலம், ஸ்ரீமத்பகவத்கீதைக்குள்ள ஏற்றமானது நம்மாழ்வார் அதனை ஏற்றதன் அடிப்படையில் கூறவேண்டும்; ஆனால் திருவாய்மொழியானது இருவருடைய திருவாக்கிலிருந்தே வந்ததால் இது போன்று இதற்கு உரைக்கவேண்டாம் என்றவிதத்திலும் திருவாய்மொழிக்கு ஏற்றம் கூறப்பட்டது. எனவே ஸ்ரீமத்பகவத்கீதையைக் காட்டிலும் திருவாய்மொழிக்குள்ள ஏற்றத்திற்கான காரணங்கள் பலவும் கூறப்பட்டன.