Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 193)
மூன்றாம் ப்ரகரணம்
அதில் ஸித்த தர்ம விதியே, இதில் வித்யநுஷ்டாநங்கள்.
– ப்ரதிபாத்யார்த்த கௌரவத்தால் வந்த வைபவம் சொல்லுகிறது (அதில் ஸித்த தர்ம) இத்யாதியால்.
– திருவாய்மொழியில் கூறப்பட்ட ஆழ்பொருளின் கௌரவம் காரணமாகவும் இதற்கு ஸ்ரீமத்பகவத்கீதையைக் காட்டிலும் ஏற்றம் உண்டு என்கிறார்.
அதாவது அந்த ஸ்ரீகீதையில் “மாமேகம் சரணம் வ்ரஜ” என்ற ஸித்ததர்ம விதிமாத்ரமே யுள்ளது; இந்த ப்ரபந்தத்தில், “திருநாராணன்தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ” என்று விதியும், “அடிக்கீழமர்ந்து புகுந்தேன்” என்று அநுஷ்டாநமும் இரண்டும் காணலாமென்கை. இத்தால் விதிமாத்ர ப்ரதிபாதகமானவதில், வித்யநுஷ்டாநங்க ளிரண்டையும் ப்ரதிபாதிக்கு மிதுக்கு ஏற்றமுண்டென்றதாய்த்து.
– (அதில்) - ஸ்ரீமத்பகவத்கீதையில். (ஸித்ததர்ம விதி) கீதை (18-66) – மாமேகம் சரணம் வ்ரஜ - என்னை மட்டுமே சரணம் என்று புகுவாயாக – என்று “ஸர்வேச்வரனையே பற்றவேண்டும்” என்பதான விதித்தல் மட்டும் உள்ளது. (இதில்) - திருவாய்மொழியில். (விதி அநுஷ்டானங்கள்) – திருவாய்மொழி (4-1-1) - திருநாராணன்தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ – என்று விதித்தலும், திருவாய்மொழி (6-10-10) – அடிக்கீழ் அமர்ந்து புகுந்து - என்று செயல்புரிதலும் ஆகிய இரண்டையும் காணலாம். ஆக இதன் மூலம், விதிப்பது என்பதை மட்டுமே கூறுகின்ற ஸ்ரீமத்பகவத்கீதையைக் காட்டிலும், விதித்தல் மற்றும் செயல் புரிதல் ஆகிய இரண்டையும் கூறும் திருவாய்மொழிக்கு ஏற்றம் உண்டு என்று கருத்து.