Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 192)

மூன்றாம் ப்ரகரணம்

அங்கு நம்பி, சரணென்று தொடங்கி முடிவில் அப்ரியமென்றது; இங்கு பரமே யென்றிழிந்து பொலிகவென் றுகந்தது.

– உபக்ரமோபஸம்ஹார ப்ரக்ரியையால் வந்த வைபவம் சொல்லுகிறது (அங்கு) இத்யாதியால்.

தொடக்கம் மற்றும் நிறைவுப் பகுதிகளில் காணப்படும் விஷயங்கள் மூலமாகவும் திருவாய்மொழிக்கு உள்ள ஏற்றத்தை அடுத்து அருளிச்செய்கிறார்.

– அதாவது அந்த ப்ரபந்தத்தி லுபதேசம் தொடங்குகிறபோது, “நாந்தகமேந்திய நம்பி சரணென்று தாழ்ந்த தனஞ்சயற்காகி” என்கிறபடியே, “சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம்” என்ற வர்ஜுனனுடைய அநுவர்த்தநம் கண்டு ப்ரிதீயோடே உபக்ரமித்து, “நூநம் அச்ரத்தாநோஸி துர்மேதாச்சாஸி பாண்டவ, அபுத்த்யா யந்த ஜாநீஷே தந்மே ஸுமஹத ப்ரியம்” என்று அவன் பக்க லநவதாநம் காண்கையாலே அப்ரீதியோடே தலைக்கட்டிற்று. இப் ப்ரபந்தத்தில் விமுகரைக் குறித்து க்ருபையாலே உபதேசிக்கையாலே உபதேசோபக்ரமத்திலே “ஏபாவம் பரமே” என்று அப்ரீதியோடே யுபக்ரமித்து அவ்வுபதேசங் கேட்டு ஜகத்தாகத் திருந்துகையாலே இப்படி திருந்தினவர்களைக் கண்டு “பொலிக பொலிக” என்ரு மங்களாசாஸநம் பண்ணி, உகந்து பணிசெய் தென்னும்படி ப்ரீதியோடே தலைக்கட்டிற்றென்கை. இத்தால் அர்ஜுனன் யுத்தே ப்ரவ்ருத்தனான மாத்ரமொழிய ஸித்த தர்ம பர்யந்த முபதேசத்தின் பலம் ஸித்திக்கப் பேராமையாலே உபதேசம் ஸப்ரயோஜநமாய்த்தில்லை யங்கு; அது ஸப்ரயோஜநமாய்த்தது மிங்கே என்றதாய்த்து.

– (அங்கு) – ஸ்ரீமத்பகவத்கீதையில். (நம்பி சரண் என்று தொடங்கி) – பெரியாழ்வார் திருமொழி (1-9-4) - நாந்தகமேந்திய நம்பி சரணென்று தாழ்ந்த தனஞ்சயற்காகி - என்பதற்கு ஏற்ப, கீதை (2-7) - சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம் – நான் உன்னைச் சரணம் புகுந்த சிஷ்யன் - என்பதான அர்ஜுனனுடைய வேண்டுதலைக் கண்டு மிகவும் மகிழ்ந்து உபதேசம் தொடங்கி. (முடிவில் அப்ரியம் என்றது) – நூநம் அச்ரத்தாநோஸி துர்மேதாச்சாஸி பாண்டவ, அபுத்த்யா யந்த ஜாநீஷே தந்மே ஸுமஹத ப்ரியம் – அர்ஜுனா! நீ ச்ரத்தை அற்றவனாக உள்ளாய், தீயபுத்தியைக் கொண்டவனாக உள்ளாய், எதனால் நீ உனது அறிவின்மையை அறியாமல் உள்ளாயோ அதனைக் கண்டு எனக்கு மகிழ்ச்சி இல்லை - என்பதற்கு ஏற்ப அவனிடம் கூறுவதால் வெறுப்புடன் முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. (இங்கு) – இந்தத் திருவாய்மொழியில். (பரமே என்று இழிந்து) - விருப்பமற்றவர்களாக உள்ளவர்களை நோக்கி மிகுந்த கருணையுடன் உபதேசிப்பதன் காரணமாக, அந்த உபதேசத்தின் தொடக்கத்தில், திருவாய்மொழி (2-2-2) - ஏபாவம் பரமே – என்று மகிழ்வின்றி தொடங்கி, (பொலிக என்று உகந்தது) - அந்த உபதேசங்களைக் கேட்டு உலகம் திருந்துவதன் காரணமாக இப்படியாகத் திருத்தியவர்களை நோக்கி, திருவாய்மொழி (5-2-1) – பொலிக பொலிக - என்று உரைத்து, திருவாய்மொழி (10-8-10) – உகந்து பணிசெய்து – என்று மகிழ்வுடன் முடிக்கப்பட்டது. ஆகவே அர்ஜுனன் யுத்தம் செய்யத் தொடங்கினான் என்பது மட்டுமே நிகழ்ந்தது அல்லாமல் அவன் ஸித்தோபாயம் என்ற பயனைப் பெறவில்லை என்பதால் அந்த கீதோபதேசம் பயனடையவில்லை; ஆனால் திருவாய்மொழியானது பயன் பெற்றது.