Acharya Hridayam - மூன்றாம் ப்ரகரணம் (சூர்ணை 191)
மூன்றாம் ப்ரகரணம்
அது ஐவரை வெல்வித்துப் பதிற்றைந் திரட்டிபடச் சொன்னது. இது நாடாகத் தோற்றோமென்று ஐயைந்து முடிப்பான் சொன்னது.
– ப்ரபந்தோதய ஹேது வைலக்ஷண்யத்தால் வந்த ஆதிக்யம் சொல்லுகிறது மேல் (அது ஐவரை வெல்வித்து) இத்யாதியால்.
அடுத்து, திருவாய்மொழி வெளிப்பட்ட காரணத்தின் மூலமாகவும் இதற்கு உள்ள ஏற்றத்தை அருளிச்செய்கிறார்.
– அதாவது அந்த ப்ரபந்தம் “அன்றைவரை வெல்வித்த” என்கிறபடியே “த்ரௌபத்யா ஸஹிதாஸ் ஸர்வே நமச்சக்ருர் ஜநார்தநம்” என்று ராஜ்யகாங்க்ஷிகளாய் சரணம் புக்கு நிற்கிற பாண்டவர்களைவரையும், “ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண” என்றவர்ஜுநனை, “கரிஷ்யே வசநம் தவ” என்னப் பண்ணி யுத்தத்திலே மூட்டி விஜயிகளாக்கி, “பதிற்றைந் திரட்டிப் படைவேந்தர்பட” என்கிறபடியே அவர்களுக்கு ப்ரதிபக்ஷபூதரான துர்யோதநாதிகள் நூற்றுவரையும் முடிக்கைகாகச் சொன்னது; இந்த ப்ரபந்தம், “தோற்றோம் மடநெஞ்ச மெம்பெருமான் நாரணற்கு” என்று வகுத்த சேஷிபக்கலிலே எல்லாரும் அபஹ்ருத சித்தராய்ப் போம்படியாக, “முடிப்பான் சொன்னவாயிரம்” என்கிறபடியே அதுக்கு விரோதியாயிருந்துள்ள “பொங்கைம்புலனும்” இத்யாதியால் சொன்ன சதுர்விம்சதி தத்வாத்மகமான அசித்திலும், ஜ்ஞாநாநந்த லக்ஷணமாக் கொண்டு ஸ்வபோக்யதையாலே தன்பக்கலிலே கால்தாழப் பண்ணுமாத்மாவிலு முண்டான ஸங்கத்தை முடிப்பதாகச் சொன்னதென்கை. இத்தால் மோக்ஷ சாஸ்த்ரமேயாகிலும் உதிக்கிறபோது அந்யார்த்தமாக உதித்த குறையுண்டு அதுக்கு; மோக்ஷார்த்தமாகவே உதித்த வேற்றமுண் டிதுக்கு என்றதாய்த்து.
(அது) - ஸ்ரீமத்பகவத்கீதையானது. (ஐவரை வெல்வித்து) – திருவாய்மொழி (4-6-1) - அன்றைவரை வெல்வித்த - என்பதற்கு ஏற்ப, மஹாபாரதம் ஆரண்யபர்வம் – த்ரௌபத்யா ஸஹிதாஸ் ஸர்வே நமச்சக்ருர் ஜநார்தநம் - பாண்டவர்கள் திரௌபதியுடன் சேர்ந்து நின்று ஜநார்தநனை வணங்கினார்கள் - என்று கூறுவதன் மூலம் இராஜ்யத்தின் மீது விருப்பம் கொண்டிருந்த காரணத்தால் தன்னைச் சரணம் புகுந்த பாண்டவர்கள் ஐந்து பேரையும், கீதை (1-32) - ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண - க்ருஷ்ணா! நான் இந்த வெற்றியை விரும்பவில்லை - என்று கூறிய அர்ஜுனனை, கீதை (18-72) – கரிஷ்யே வசநம் தவ – உனது சொற்படியே செய்கிறேன் - என்று கூறும்படியாகச் செய்து, அவனை யுத்தத்தில் ஈடுபட வைத்து அவர்களை வெற்றி அடையும்படிச் செய்து, பெரியதிருமொழி (2-4-4) - பதிற்றைந் திரட்டிப் படைவேந்தர்பட – என்பதற்கு ஏற்ப அவர்களுடைய விரோதிகளாகிய துரியோதனன் உள்ளிட்ட நூறு பேரையும் முடிப்பதற்காக அருளிச்செய்யப்பட்டதாகும். (இது) - இந்தத் திருவாய்மொழியானது. (நாடாகத் தோற்றோம் என்று) – திருவாய்மொழி (2-17) - தோற்றோம் மடநெஞ்ச மெம்பெருமான் நாரணற்கு - என்பதற்கு ஏற்ப, இயல்பாகவே எஜமானனாக உள்ள அவனால் அபகரிக்கப்பட்ட சிந்தனை கொண்டவர்களாக அனைவரும் அவனிடம் செல்லும்படியாக. (ஐயைந்து முடிப்பான் சொன்னது) – திருவாய்மொழி (8-7-11) – முடிப்பான் சொன்ன ஆயிரம் – என்று கூறுவதற்கு ஏற்ப அவ்விதம் அவனிடம் செல்வதற்கு விரோதியாக உள்ளதான, திருவாய்மொழி (10-7-10) - பொங்கைம்புலனும் - என்ற பாசுரத்தில் கூறப்பட்டபடி இருபத்து நான்கு தத்துவங்களுடன் கூடிய சரீரத்தின் மீதும், ஞானம் மற்றும் ஆனந்தம் ஆகியவற்றைத் தனது ஸ்வரூபமாகக் கொண்டுள்ளதால் தனது இனிமை காரணமாகத் தன்னிடத்தியே ஈடுபடுத்தச் செய்யும் ஆத்மா மீதும் உள்ள பற்றினை விலக்குவதற்காக அருளிச்செய்யப்பட்டதாகும்; ஆகவே ஸ்ரீமத்பகவத்கீதையானது மோக்ஷத்திற்கான சாஸ்த்ரம் என்றபோதிலும், அது வெளிப்பட்டபோது வேறு ஒரு காரணமாக வெளிப்பட்டது என்ற தோஷம் அதற்கு உண்டு; ஆனால் மோக்ஷத்திற்காக மட்டுமே வெளிப்பட்ட ஏற்றமானது திருவாய்மொழிக்கு மட்டுமே உண்டு.